இந்த வாரம் கலா(இ)ரசிகன்
- Get link
- X
- Other Apps
இந்த வாரம் கலா(இ)ரசிகன்
நான் ஏன் மரபுக் கவிதைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்துவதில்லை என்கிற கேள்விக்கு பதிலாக அமைந்தன, "சென்ற வாரம்' புதுக்கவிதைக்குப் பதிலாக மரபுக் கவிதையான நேரிசை வெண்பாவை வெளியிட்டதற்கான கடிதங்கள். இருவிகற்ப நேரிசை வெண்பாவான அந்தக் கவிதையின் மூன்றாம் அடியில் தளைதட்டிவிட்டது என்கிற குற்றச்சாட்டுக் கடிதங்கள்தான் அவை.
""இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை மட்டும்தான் வெண்பாவில் அமைய வேண்டும். வேற்றுத்தளை விரவின் அது பிழையான வெண்பா. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வெண்பாவின் மூன்றாம் அடியில் இரண்டாம் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் இடையே "ஆசிரியத்தளை' வருகிறதே'' என்றும்,
""மூன்றாம் அடியில் இரண்டாம் சீர் "தேடும்' என்பது, அதற்கு அடுத்த சீர் "அந்தியரின்' என்பது. எனவே, மாச்சீர் முன் நேரிசையாயிற்று. வெண்பாவில் மாச்சீர் முன் நிரையசை இருக்க வேண்டும்'' என்றும், நிறையக் கடிதங்கள். மரபுக் கவிதைகளை வெளியிடும்போது ஒரு முறைக்கு இருமுறை பார்த்து வெளியிட்டிருக்க வேண்டும்தான். தவறு என்னுடையது, மன்னிக்கவும்.
-----------------------------------------------------
மார்கழி மாதம் நிறைவடைந்துவிட்டது. கூடவே சென்னை இசைவிழா
நிகழ்ச்சிகளும். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழிசைக்காகக் குரல்
கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த இசை
விழாவில் தமிழிசைக்கு வளம் சேர்க்கும் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துச்
சென்றிருக்கிறார் பல இசைவாணர்களை உருவாக்கும் தலைசிறந்த சங்கீத விற்பன்னர்
"பத்மபூஷண்' பி.எஸ்.நாராயணஸ்வாமி."அருட்பா அமுதம்' என்கிற புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் தேர்ந்தெடுத்த 31 பாடல்களை எடுத்துக்கொண்டு, அவற்றை இசைக் கச்சேரிகளில் ராகம், நிரவல், ஸ்வரம் ஆகியவற்றுடன் பாடும் வகையில் மெட்டமைத்திருக்கிறார். இதற்காக பல தமிழ் அறிஞர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று அதைப் புத்தக வடிவமாக்கி இருக்கிறார்.
வேடிக்கை என்னவென்றால், கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் பணியில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததுதான். தான் பாடும் கச்சேரிகளில் இந்தப் பாடல்களைப் பாடுவதுடன் தனது சீடர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் தவறாமல் தங்கள் கச்சேரிகளில், அவர் மெட்டமைத்திருக்கும் திருவருட்பாக்களைப் பாட ஊக்குவிக்கிறார் பி.எஸ். நாராயணஸ்வாமி.
பி.எஸ். நாராயணஸ்வாமி ஒன்றும் சாதாரணமானவர் அல்லர். செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரின் நேரடி சீடர். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இசையைத் தவமாகக் கருதி வளர்த்து வருபவர்.
தனது ஏழாவது வயதில் நாகஸ்வர வித்வான் திருப்பாம்பரம் சோமசுந்தரம் பிள்ளையிடம் இசை பயிலத் தொடங்கிய பி.எஸ். நாராயணஸ்வாமி, முடிகொண்டான் வெங்கட்ராமய்யர், செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் போன்றோரிடம் குருகுலவாசம் செய்து இசை கற்றார். இப்போது சென்னையில் மிகச் சிறந்த இசை ஆசிரியர் யார் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சட்டெனக் குறிப்பிடும் பெயர் "பி.எஸ்.என். சார்' என்பதாகத்தான் இருக்கும்.
உண்ணிக்கிருஷ்ணன், குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா, அபிஷேக் ரகுராம், பரத் சுந்தர், காயத்ரி வெங்கட்ராகவன் என்று இன்றைய முன்வரிசை இசைவாணர்கள் அனைவரும், பி.எஸ். நாராயணஸ்வாமியின் சீடர்கள்தான் எனும்போது, அவரது முயற்சி எந்த அளவுக்குத் தமிழிசை வளர்ச்சிக்கு உரம் சேர்க்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
ஏதோ மெட்டமைத்து, ஸ்வரக் குறிப்புகளுடன் புத்தகம் போட்டதுடன் நின்றுவிடவில்லை அவர். தனது சீடர்களைக் கொண்டு பாடச் சொல்லி, அந்தப் புத்தகத்துடன் ஒரு குறுந்தகடையும் இணைத்திருக்கிறார். வெளியூரில் இருக்கும் இசை மாணாக்கர்கள் அந்தக் குறுந்தகடைக் கேட்டேகூட, அவர் தொகுத்தளித்திருக்கும் 31 திருவருட்பாக்களைப் பாடப் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும்.
சென்னையில் வெளியிட்டதுடன் நின்றுவிடாமல், தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலும் இந்தப் புத்தகத்திற்காக அறிமுக விழாக்கள் நடத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். திருவருட்பா இசைப்பவர்களும் சரி, சங்கீதம் பாடுபவர்களும் சரி பயன்பெறுவார்கள்.
இவ்வளவு அற்புதமான புத்தகத்தை மிகவும் சிரமப்பட்டு வெளியிட்டிருக்கிறார்களே, அதில் இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும், என்ன விலை என்று போட்டிருக்க வேண்டாமா? இந்த அருமையான பொக்கிஷம் புத்தகமாக்கப்பட்டு வெளியிட்டதுடன் நின்றுவிட்டால் எப்படி? தொடர்புக்கு என்று 9444970017 என்கிற எண்ணையும், psndisciplesfoundation@gmail.com என்கிற இணையதள முகவரியையும் மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன் அப்படி?
-----------------------------------------------------
இந்த வாரம் புத்தக விமர்சனத்திற்கு வந்து குவிந்திருந்த புத்தகங்களில்,
நான் என்னை அறியாமல் ஈர்க்கப்பட்டு எடுத்த புத்தகம், கவிஞர் கோ.வேணுகோபாலன்
தொகுத்து வழங்கி இருக்கும் "சுவடிகள் வழங்கிய கவிதைகள்'. தலைப்பே
சொல்கிறது, தமிழ் இலக்கியத்தில் அவரைக் கவர்ந்த வார்த்தைகளை எடுத்துத்
தொகுத்திருக்கிறார் என்பதை.புத்தகத்திற்குள் நான் நுழைவதற்கு முன்னால், கவிஞர் எழுதியிருக்கும் "நாடு போற்றும் நம்மொழி' என்று தமிழின் புகழ் பாடும் ஒரு பாடலையும், "சுவடிகளுக்கு ஓலைகளைத் தந்த பனைமரங்கள்' என்கிற பாடலையும் படித்து, அவற்றில் சொக்கிப் போய்விட்டேன். அடேயப்பா, என்னவொரு கவிதாவிலாசம்... எத்தகைய சொல்லாடல் வித்தகம்... "நாடு போற்றும் நம்மொழி' பாடலைப் பள்ளியில் பாடமாக சேர்க்கும் அதிகாரம் எனக்கு இருந்திருந்தால் சேர்ந்திருப்பேன்.
தமிழ் என்கிற ஆழ்கடலில் முக்குளித்து 76 அற்புதமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதனைத் தான் ரசித்தது போதாதென்று நாமும் ரசிப்பதற்குத் தொகுத்தளித்திருக்கிறார் கவிஞர் கோ. வேணுகோபாலன்.
இந்தப் புத்தகத்தைப் படித்து ரசிப்பதற்குப் பெரும் புலமை தேவையில்லை. தமிழ் தெரிந்திருக்க வேண்டும். புலமையை ரசிக்கும் தன்மை வேண்டும், அவ்வளவே. சாமானியர்களுக்கும் இலக்கிய ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், சங்க இலக்கியங்களையும், பழந்தமிழ்க் காவியங்களையும், இன்றைய தலைமுறையை ரசிக்கவைக்க வேண்டுமானால் அதற்கு சிறந்த வழி கவிஞர் வேணுகோபாலனின் "சுவடிகள் வழங்கிய கவிதைகள்' புத்தகத்தை அவர்களைப் படிக்கச் செய்வதுதான்.
இந்தப் புத்தகத்தைப் பழம் பாடல்களின் தொகுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். தவறு. தமிழ் கடந்து வந்த பாதையின் சுவடு என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்!
-----------------------------------------------------
சுசீ. நடராஜன் எழுதிய "பதுக்கிய பரவசம்' என்கிற கவிதைத் தொகுப்பு,
புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது. அதில் "கடன்காரன்' என்றொரு கவிதை
எனக்குப் பிடித்திருந்தது. பதிவு செய்கிறேன்.கவிஞர் சுசீ. நடராஜனுக்கும் பதிப்பகத்தாருக்கும் ஒரு வேண்டுகோள். நிறைய எழுத்துப் பிழைகள். கவிதையில் எழுத்துப் பிழைகள் வரும்போது கருத்து பிழைத்து விடுகிறது...!
ஆயிரமாயிரம் கடன்பட்டு அனுப்பி வைத்த மகள், வீடு திரும்பினாள்-அந்தக் "கடன்காரனோடு' ஒத்துவராது என்ற புது மனத்தோடு!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment