Monday, August 23, 2010

Tuesday, August 17, 2010

மொழிப் பயிற்சி: தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்! 2


ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...அச்சுறுத்த வேண்டா:""தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா. தமிழில்,""எழுத்தெனப் படுவஅகரமுதல் னகர இறுவாய்முப்பஃது என்ப...''என்றார் தொல்காப்பியர். ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள. கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை. அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே (நண்ப்ங்ய்ற்) உச்சரிக்க வேண்டும் (டள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ஹ்-சைக்காலஜி). சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், (டன்ற்-புட்; ஆன்ற்-பட்) இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை. என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.÷தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஓஹ-கந்தசாமி, எஹ-கணேசன்; ஸ்ரீட்ஹ-சதுப்புநிலம், ள்ஹ-சட்டம்; பட்ஹ-தம்பி, ஈட்ன்-துரை; ல்ஹ-பம்பரம், பட்டம், கம்பன் (க்ஷஹ). இத்தகைய ஒலி வேறுபாடுகள் வடசொற்கலப்பினால் வந்தவை.தமிழ் இயற்கை மொழி:மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை-எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி-இயற்கைமொழி தமிழேயாகும். எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து ""என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?''  என்போமன்றோ?  வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "அ'. சற்று அதிகம் திறந்தால்  "ஆ' தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே-இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.ஒலிப்பு-உச்சரிப்பு:இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும். நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை. தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம். தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள். தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள். "தமிழ்மொழி என் தாய்மொழி' என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.÷""என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர். நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்'சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும். இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?நுண்ணொலி வேறுபாடுகள்:தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அதனால், "சார் இங்கே என்ன "ல'னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர். பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள். மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல'கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள'கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ'கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும். இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.எடுத்துக்காட்டுகள்:தால் - நாக்கு, தாள்-எழுதும்தாள், பாதம் (அடி);தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);வால் - தூய்மை (வெண்மை)-வாலறிவன், வாலெயிறு;வாள் - வெட்டும் கருவி,வாழ் - வாழ்வாயாகஇப்படிப்பல காட்டலாம்.(தமிழ் வளரும்)
கருத்துக்கள்

பாவம் சீதாராமென். தமிழ் வழங்கிய பகுதிகள் தமிழில் பிற மொழிச் சொற்களைக்கலந்தமையால்தான் இன்றைக்குத்தமிழின எதிர்ப்பு நிலமாக மாறியுள்ளன. இனியும் தமிழ் நிலம் குறையாமல் இருக்க தமிழ் மொழி சீராகச் சிறப்பாக வாழ வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கவிக்கோ ஞானச் செல்வன் அவர்களையும் தினமணி ஆசிரியர் அவர்களையும் பாராட்ட மனம் இல்லாவிட்டால் அமைதியாக இத் தொடரைப் படித்துப் பார்த்து இறுதியில் உங்கள் கருத்தை ஆராய்ந்து முடிவெடுங்கள். அதே நேரம் தமிழ் நாட்டில் தமிழ்தான் தலைமை பெற வேண்டும் என்பது உங்களின் உண்மையான கருத்தாக இருந்தால் அக்கருத்தைப் பிறரிடம் பரப்புங்கள். போலித் தமிழன்பர்களின் முகத்திரையைக் கிழியுங்கள். தமிழ் ஆர்வலர்களின் அறிவுப்பசியைப் போக்கும் தமிழ் உணவைக் குறை கூறாதீர்கள். நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/17/2010 1:40:00 PM
very useful
By sivagami
8/12/2010 12:21:00 PM
MR.PLEASE STOP YOUR DRY DIALOGUES ON TAMIL. AFTER 50 THOUSAND YEARS TAMIL IS STILL ALIVE WITH ITS RICHNESS. THE DRAVIDIAN LABEL LEADERS ARE MAKING POLITICS. LET FIRST ALL THE PARTIES IN TAMILNADU SAY.... ELECTION TICKETS WILL BE GIVEN ONLY TO THOSE WHOSE WARDS READ, WRITE AND GET EDUCATED IN TAMIL MEDIUM.. DO NOT TRY TO FOOL THE TAMILIANS FUTURE. THIS IS NOT AN INDEPENDENT COUNTRY. THE ENTIRE WORLD COMMUNITY IS DEPENDING UPON EACH OTHER. DO SOME USEFUL WORK INSTEAD OF CRYING LIKE THIS. TAMIL LIVES..VERY MUCH LIVES...YOU PEOPLE NEED NOT PROTECT IT....TAMIL WILL BE RICH....DON'T WORRY.
By V Sitaramen
8/11/2010 7:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இந்த வாரம் கலாரசிகள்


சில நாள்களுக்கு முன்பு வடலூர் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. ஞானசபையில் சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்துவிட்டு வெளியே வந்ததும், மனது பஞ்சுபோல லேசாகிவிட்ட உணர்வு. அண்ட சராசரங்கள் அனைத்துமே அருட்பெருஞ் ஜோதியின் தனிப்பெருங் கருணையினால் இயங்கும் உண்மையை உள்ளம் உணர நேர்ந்தது.அதுவரை சென்றுவிட்டு தவத்திரு ஊரன் அடிகளாரை தரிசிக்காவிட்டால், அது தமிழுக்கும் சமயத்துக்கும் செய்யும் அபசாரம். வள்ளலாரைத் தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு துறவை வரித்துக்கொண்ட தமிழ்த் தொண்டர் ஊரன் அடிகளார்.சன்மார்க்க தேசிகன் என்றால் யாருக்கும் தெரியாது. அதுதான் அவருடைய தீட்சா நாமம். பூர்வாசிரமத்தில் திருச்சியில் நகரமைப்பு ஆய்வாளராக இருந்தவர், வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு அவரையே ஞானகுருவாக ஏற்று, தாமே துறவு பூண்டவர். கடந்த 40 ஆண்டுகளாக வள்ளலார் புகழ் பரப்புவதே தனது பிறவிப்பயன் என்று இயங்கும் இவரது இயக்கத்துக்கு வலுவும் ஊக்கமும் அளிப்பது அருட்செல்வர் நா.மகாலிங்கம்.ஊரன் அடிகளின் இருப்பிடம் நிறைய புத்தகங்கள். அடேங்கப்பா என்று வாய்விட்டு அலறாத குறையாக நான் அதிசயத்தில் சமைந்தேன். அரை நூற்றாண்டு காலச் சரித்திரத்தின் சுவடுகளை இவரது இருப்பிடத்தில் காணமுடிந்தது. திருவருட்பாவுக்கும், திருமந்திரத்துக்கும் இதுவரை வெளிவந்திருக்கும் அத்தனை பதிப்புகளையும் பத்திரப்படுத்தி வருகிறார்.76 வயதில் ஊரன் அடிகளை சற்று சோர்வடையச் செய்திருப்பது தகுந்த உதவியாளர் இல்லாமல் இருப்பதுதான். ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் அவரது நிழலாக அவரைத் தொடர்ந்த ராஜேந்திரனின் திடீர் மரணத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான உதவியாளர் யாரும் அமையவில்லை. 15 வயதில் அடிகளாரின் இரட்டை மாட்டு வண்டியை ஓட்டும் பையனாக வந்து சேர்ந்த ராஜேந்திரன், அவரது உதவியாளராக மாறிவிட்டிருந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனான ராஜேந்திரனுக்கு திடீரென்று மாரடைப்பு வந்தது விதியின் சதியல்லாமல் வேறென்ன?ஊரன் அடிகளின் எழுத்துப் பணி நம்மை வியக்கவைக்கிறது. இவரது "சைவ ஆதீனங்கள்' மற்றும் "வீர சைவ ஆதீனங்கள்' ஆகிய இரண்டு படைப்புகளும் தகவல் பெட்டகம். ஆவணப்பதிவு.அடிகளாருடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போவதே தெரியவில்லை. வடலூருக்குப் போய் ஊரன் அடிகளாருடன் ஒன்றிரண்டு நாள்கள் தங்கியிருக்க ஆசைதான். காலம் கைகூட வேண்டுமே...*******தென்னிந்தியாவைப் பொறுத்தவரை "மகாராஜா' என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது மைசூர் மகாராஜா மட்டுமே. அடுத்தாற்போல ஒரு சிலருக்கு, திருவிதாங்கூர் மகாராஜாவைப் பற்றித் தெரிந்திருக்கலாம். வடநாட்டில் உள்ளதுபோல பெரிய சமஸ்தானங்களோ, ராஜாக்களோ தென்னகத்தில் இல்லாமல் போனதற்குக் காரணம், முகலாயப் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து நிறுவப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியும்தான்.ராஜாக்களைப் பற்றிய பிரமிப்பு மட்டும் நமக்கு இன்னமும் தொடர்கிறது. திரைப்படங்களில் கூட ராஜா ராணி கதைகள் என்றால், அதற்கு இப்போதும் வரவேற்பு காணப்படுகிறது. "மைசூர் மகாராஜா' என்கிற தொடர், குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்தபோதே எப்போது அடுத்த இதழ் வெளிவரும் என்று காத்திருந்து அந்தத் தொடரைப் படித்த பலரில் நானும் ஒருவன்.தொடராகப் படிக்கும் விஷயங்கள் புத்தகமாக வெளிவரும்போது அதே அளவு சுவாரஸ்யம் இருப்பதில்லை. காரணம், ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவதுதானோ என்னவோ?மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டு சரித்திரத்தை ஒரு நாவலைப் படிக்கும் சுவாரஸ்யத்துடன் படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்த அரச குடும்பத்தின் செயல்பாடுகள் மட்டுமல்ல, அதை சுவைபட எழுதியிருக்கும் முகிலும்தான் காரணம்.ஹைதர் அலியும் திப்புசுல்தானும் இல்லாமல் போனால் மைசூர் ராஜவம்சத்துக்கு இத்தனை பெயரும் புகழும் கிடைத்திருக்குமா?  யோசிக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.*******பள்ளத்தூர் பழ.பழனியப்பன் பற்றி முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். பரோடா வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கம்பராமாயணத்துக்கு மூலமும் உரையும் எழுத முற்பட்டிருக்கும் செய்தியைக் குறிப்பிட்டு வியந்ததாக நினைவு. சுந்தரகாண்டத்துடன் நிறுத்திவிட்டிருந்த பழ.பழனியப்பன் இப்போது யுத்த காண்டத்துக்கும் உரை எழுதிப் பதிப்பித்துவிட்டார்.""ஒரு பாடலின் கருத்தையோ நிகழ்ச்சியையோ விளக்குமிடத்து, அதனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் காப்பியத்தில் முன்னரோ, பின்னரோ இருந்தால், அவற்றை இணைத்துக் காட்டும் போக்கு இவ்வுரையாசிரியரின் உரைப்போக்கு என்று சொல்லலாம்''.பழ.பழனியப்பனின் கம்பராமாயண உரையைப் பற்றி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கம்பன் இருக்கைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் தெரிவித்திருக்கும் மேற்கூறிய கருத்தை எழுத்துப் பிசகாமல் நானும் வழிமொழிகிறேன்.*******நான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேன் நல்ல பல கவிஞர்கள் சென்னை மாநகரத் தெருக்களில், "ஜோல்னா' பையோடு காணப்படுவதில்லை என்று. அவர்கள் கிராமத்துச் சிற்றோடை அருகில் அல்லது மஞ்சணத்தி மரநிழலில் அமர்ந்தபடி தங்கள் கற்பனைக்கு எழுத்து வடிவம் தந்தபடி வெளியில் தெரியாமல் உலவுகிறார்கள் என்று.அவர்கள் தாங்கள் கவிஞர்கள் ஆகிவிட்டோம் என்பதால் எழுதவில்லை. எழுதவேண்டுமே என்பதற்காகவும் எழுதவில்லை. தன்னுணர்வுக் கவிஞர்களான அவர்களது கவிதையில் இருக்கும் ஈரம் அலாதியானது. வலிந்து சம்ஸ்கிருத, ஆங்கில வார்த்தைகளை அள்ளிவீசி, தங்களது மேதாவிலாசத்தை வெளிப்படுத்த முனையாததுதான் அவர்களது சிறப்பு.விமர்சனத்துக்கு வந்த புத்தகக் குவியலில் "மிச்சமிருக்கும் ஈரம்' என்கிற கவிதைத் தொகுப்பு கண்ணில் பட்டது. எதார்த்தமான மொழி ஆளுமையுடன் கூடிய அந்தக் கவிதைத் தொகுப்பைப் படைத்திருப்பவர் கவிஞர் நெய்வேலி பாரதிக்குமார். நெய்வேலியில் கரி மட்டுமா புதைந்து கிடக்கிறது, கவிதையும்தான் என்பதை நிரூபிக்கும் "மிச்சமிருக்கும் ஈரம்' என்கிற தலைப்பிலான கவிதை வரிகள்.கடற்கரை, ஒரு முழக்கயிறுஇரயில் எதிர்படும் தண்டவாளம்பார்க்கும் போதெல்லாம்யாரோ அழைப்பதுபோல் தோன்றுகிறது...எல்லாக் கவலைகளும் மேலேறி அழுத்தஏதோ நினைவில் நடக்கையில்சிறுகல் தடுக்கி, கால் இடற...மரத்தடி நிழலுக்காக ஒதுங்கி நின்றயாரோ ஒரு கூடைக்காரப் பாட்டி"ஐயோ!... பாத்து நடப்பா' என்றுபதறும் அந்த ஒரு கணம்...ஒரு அங்குலம் அளவு பிடிப்பில்என்னைத் தடுத்தாள்கிறது...எங்கோ பெய்த மழையின் ஒரு துளிநாவின் நுனியை நனைப்பதுஎன் தாகத்தைத் தணிக்கபோதுமாயிருக்கிறதுஅவ்வப்போதுகவிதைகளைத் துளிர்க்கச்செய்கிறதுஎன்னுள்மிச்சமிருக்கும் ஈரம்...
இளவேனிற் காலத்து இனிய காட்சி


தமிழ் மக்கள் ஓர் ஆண்டு காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்துக்கொண்டனர். அவைகளில் இளவேனிற் காலம் மட்டுமே வசந்தகாலம். தலைவனைப் பிரிந்து தவிக்கின்ற தலைவிக்குக் கசந்தகாலம். வாழ்வில் இன்பம் தருகின்ற இளவேனிற் காலத்தை, கலித்தொகை மிக அழகாக விவரிக்கிறது.வைகை ஆற்றின் இரு கரைகளிலும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆண்கள் மனம் விரைவில் கரைந்து விடுவதுபோல பேசும் மடப்பத்தை, ஆண் மானின் பிணையான பெண் மானின் மிரண்ட பார்வையுடைய பெண்கள் முத்துப்பல் விரிவதுபோல எங்கும் அரும்பி பூத்துக்குலுங்குகின்ற முல்லை மலர்கள். களவியில் திளைத்துக் கலைந்த மகளிரின் கூந்தல்போல ஈரமான வைகை மணலிலே பூந்தாதுக்களும் தளிர்களும் விழுந்துகிடந்தன. இப்படி இனிய காலமான இளவேனில் என்னை வந்து வாட்டுகிறதே, என்பதை ""ஈதலிற் குறை காட்டாது'' என்று தொடங்கும் கலித்தொகைப் பாடல் (27) விளக்குகிறது.சுனைகளிலே பூத்திருக்கும் பூக்களைத் தேடிச்சென்று பறிக்க வேண்டுமா? இதோ, அழகான மணமுள்ள மலர்களை நாங்களே தருகிறோம் என்று கூறுவதுபோல வைகை ஆற்றின் இருகரைகளிலும் மரக்கிளைகள் தாழ்ந்து மலர்க்கொத்துகளுடன் காணப்படுகின்றன. ஆற்றின் நடுவிலே காணும் செந்நிறமான மணல் மேடுகள், கன்னியர் தலையிலே தலைக்கோலம் சூடி வருவதுபோன்று காட்சியளிக்கின்றன. திருமகளின் மார்பிலே தொங்கும் முத்தாரம்போல ஆற்றுநீர் சிவந்த மணலை ஊடறுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த இளவேனிற்பொழுதும் வந்தது.""பாடல்சால் சிறப்பின் சினையளவும், சுனையளவும்நாடினர் கொயல் வேண்டா, நயந்துதாம் கொடுப்ப போல''(கலி-28)வைகையில் பொங்கிப் பெருகிவரும் புதுப்புனல், கால்வாய் வழிச்சென்று கண்மாய்களையும், குளங்களையும் நிறைத்து நாடெங்கும் அழகும், பொலிவும் பெற்றன. மழை நீரால் அடித்து வரப்பட்ட நுண்மணல்கள் குளங்களின் வெளிப்பரப்பில் படிந்து காணப்பட்டன. இப்படி இளவேனிற் காலத்தில் வைகை ஆற்றில் நீர் நிறைந்து ஓட, இருமருங்கும் மணம் பரப்பிய மலர்கள் நிறைந்த மரங்களையும், செடி கொடிகளையும் கொண்டு மதுரை மணம் பரப்பியது அன்று
நன்னெறிதுறைமங்கலம் சிவப்பிரகாசர் அருளியது பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்காழ் ஒன்று உயர்திண் கதவு வலியுடைத்தோதாழ் ஒன்று இலதாயின் தான். (பாடல்-32)அழகிய நெற்றியையுடைய பெண்ணே! வைரம் பாய்ந்த மிகவும் வலிமை மிகுந்த கதவானாலும், ஒரு தாழ்ப்பாள் இல்லாவிட்டால் அதற்கு வலிமை கிடையாது. அதுபோல, பெருமை வாய்ந்த நூல்களின் பயன்களை உணரக்கூடிய அறிவு இல்லாதவர் செய்யும் அறங்கள் பயனற்றவையாகும்
இந்த வாரம் கலாரசிகன்


முன்பே ஒரு முறை, "காலச்சுவடு' வெளியிட்டிருந்த எல்லீஸின் புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தேன். 1796-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் இளம் அதிகாரியாக சென்னை வந்து சேர்ந்த ஆங்கிலேயர்தான் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே, திராவிட மொழிகளின் தனித்தன்மை பற்றி அறிவித்தவர் இவர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பாட்லியான் நூலகத்தில், இவர் எழுதிய அச்சேறாத கட்டுரை ஒன்றில் தமிழுக்கும் ஹீபுரூ மொழிக்கும் உள்ள ஒற்றுமையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எல்லீஸ். மனித வாழ்வு பற்றிய நூல்கள் தமிழில் உள்ள அளவு வேறு ஆசிய மொழிகள் எதிலுமே கிடையாது என்பது எல்லீஸின் கருத்து.பிரான்ஸிஸ் எல்லீஸ் திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களிலிருந்து தேர்தெடுத்த சில குறள்களை கவிதை நடையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சில குறள்களை விளக்க, ஏனைய தமிழ் இலக்கியப் படைப்புகளிலிருந்து மேற்கோள்களை தந்திருப்பது மட்டுமல்ல, அந்த மேற்கோள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.எல்லீஸின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதியை அப்படியே புத்தக வடிவில் தொகுத்து அளித்திருக்கிறார் பேராசிரியர் பி. மருதநாயகம். தொல்காப்பியம் தொடங்கி, பல காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என்று அனைத்துப் பழந்தமிழ் இலக்கியங்களையும் ஓலைச்சுவடிகளிலிருந்து படித்துத் தேர்ந்தவர் எல்லீஸ் என்பதை அவரது "திருக்குறள் விளக்கம்' தெளிவுபடுத்துகிறது.இளம் வயதிலேயே எதிர்பாராத முறையில் 1819-இல் எல்லீஸ் ராமநாதபுரத்தில் மரணமடையாமல் இருந்திருந்தால், தமிழுக்கு இன்னும் பல நல்ல ஆய்வுகளை அளித்திருக்கக் கூடும்.
*******
எல்லீஸின் திருக்குறள் பற்றி எழுதியவுடன் எனது மனம் திருச்சிக்குத் தாவியது.கடந்த மாதம் புதுக்கோட்டை கம்பன் விழாவுக்குப் போவதற்காக திருச்சியில் தங்க நேர்ந்தது. சிலப்பதிகாரத்தில் ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டது. நிருபர்கள் ஜெயப்பிரகாஷ், வைத்திலிங்கம் இருவரிடமும் யாரிடமாவது சிலப்பதிகாரம் இருந்தால் வாங்கி வர வேண்டினேன். அவர்கள் சிலப்பதிகாரத்தை மட்டும் கொண்டுவரவில்லை. திருக்குறளையும் சேர்த்தே அழைத்து வந்துவிட்டனர்.எனக்காகச் சிலப்பதிகாரப் புத்தகத்துடன் வந்திருந்தார் திருச்சியைச் சேர்ந்த "திருக்குறள்' முருகானந்தம். திருக்குறளைப் பரப்பி வருவதால் "திருக்குறள்' முருகானந்தம் என்றழைக்கப்படுகிறார் எனும்போது அவரது குறள் தொண்டு எத்தகையது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக "திருக்குறள் அஞ்சல்வழிக் கல்விநிலையம்' ஒன்றை நிறுவி இளையதலைமுறையினர் திருக்குறளைப் படிக்க ஊக்குவிக்கும் தமிழ்ப்பணி இவருடையது. காந்திய சிந்தனையை அஞ்சல்வழிப் பாடமாகக் கற்றுத் தருவது பற்றிக் கேள்விப்பட்ட முருகானந்தமும் நண்பர்களும் திருக்குறளையும் ஏன் அஞ்சல்வழியில் பயிற்றுவித்து, ஒரு தேர்வு நடத்தி "திருக்குறள் இளம் புலமையர்' என்கிற சான்றிதழையும் வழங்கக் கூடாது என்ற முயற்சியில் இறங்கினார்கள்.இந்த முயற்சிக்குக் குன்றக்குடி ஆதீனத்தின் ஆசியும் கிடைத்தபோது அவர்களது உற்சாகம் கரை புரண்டது. சில புரவலர்கள் இதற்கான பாடத்திட்டத்தை அச்சடித்துத் தர முன்வந்தனர்.மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மணப்பாறை என்று தங்களது தொடர்புகளைப் பயன்படுத்தி, திருக்குறள் அஞ்சல்வழிக் கல்வி மையம் பணியை விரிவுபடுத்திக் கொண்டது. தஞ்சைப் பகுதிக்கான தேர்வை திருவையாறு மன்னர் கல்லூரியிலும், திருச்சிக்கான தேர்வை கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியிலும் நடத்துகிறார்கள். "எங்களது அஞ்சல்வழிக் கல்விக்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இலவசமாகப் புத்தகங்கள் தருகிறோம்' என்று கூறும் முருகானந்தம், தேர்வின்போது ஒரு சிறிய கட்டணம் மட்டும் வசூலிப்பதாகக் கூறினார். "இலவசமாகச் சான்றிதழ் கிடைக்கிறது என்று சொன்னால் அதற்கு மரியாதையே இல்லாமல் இருக்கிறது என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் கட்டணம். சான்றிதழ்கள் குன்றக்குடி ஆதீனகர்த்தரின் கையொப்பத்துடன் வழங்கப்படுகிறது' என்று மேலும் விளக்கினார் அவர்.தமிழகம் முழுவதும் திருக்குறள் அஞ்சல்வழிக் கல்வி மையம் ஓர் ஆலமரம் போலக் கிளை விட்டுப் படர வேண்டும் என்பது "திருக்குறள்' முருகானந்தத்தின் அவா. வேறு மாவட்டங்களில் யாராவது தொடங்க விரும்பினால் இலவசமாகப் பாடத்திட்டத்தை அனுப்பித் தரவும் வழிகாட்டி உதவவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் அவர். 'திருக்குறள்' முருகானந்தத்தின் தொடர்புக்கான எண் 9994904454."திருக்குறள்' முருகானந்தத்தின் தமிழ்ப் பணியைப் பாராட்ட எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரிந்தது. அது, திருக்குறள் அஞ்சல்வழிக் கல்வி மையம் பற்றி எழுதுவது. இப்போது, "திருக்குறள்' முருகானந்தத்தின் ஆசை என்னையும் தொற்றிக் கொண்டு விட்டது. ஆலமரம் போல உலகமெல்லாம் கிளைவிட்டுப் படரவேண்டும் திருக்குறள் அஞ்சல்வழி கல்வி மையம்...ஆமாம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை ஏனைய திருவள்ளுவர் கழகங்கள் போன்றவை இந்த முயற்சிக்கு உறுதுணையாகச் செயல்படக் கூடாதோ..?
*******
பாரதி மோகன் என்றொரு கவிஞர். இவரது "என் காதல் கதைகளும் நீயும்' என்கிற கவிதைத் தொகுப்பை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. தூத்துக்குடி வானொலி நிலையத்தின் ஒலிபரப்புப் பொறுப்பாளர் எம். ராதாகிருஷ்ணன் என்பவர் "எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் சில நிமிடங்களில் கவிதை சமைக்கும் இவரின் ஆற்றல் பாராட்டுக்குரியது' என்று பின் அட்டையில் கவிஞர் பாரதி மோகனுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருப்பதைப் படித்த பின்னும் அந்தக் கவிதைகளைப் படிக்காமல் இருக்க முடியுமா? படித்தேன். படித்ததில் பிடித்த கவிதை இதோ: இயற்கையே எய்தினால்? நதி எங்கள் வாழ்வென்று நாகரிகம் வளர்த்த கரையில் நான் என்ன சொல்ல விதியென்றானது நதியின் நிலையே ஓடையாய் ஒரு ஓரத்தில் அடடா நாளைய மனிதனுக்கு மிச்சம் என்ன இருக்கும்  இயற்கையே இயற்கை எய்தினால்!
தமிழைப் பிழையின்றி பேசுவோம், எழுதுவோம்!


செம்மொழித் தமிழ் என்பதன் அனைத்து விளக்கங்களும் செந்தமிழ் என்னும் சொல்லுள் அடக்கம். "தன்னேரிலாத தமிழ்' என்னும் நம் தாய்மொழி, இந்நாளில் செந்தமிழாக இல்லாமல் சிதைந்த தமிழாக மாறிவருகிறது. நம் மக்கள் பேச்சு வழக்குகளிலும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், திரைப்படம் முதலிய ஊடகங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் தமிழ் சிதைக்கப்பட்டு வருகிறது.தமிழ்மொழி தமிழாசிரியர்களுக்கு மட்டுமோ, தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமோ சொந்தமன்று; தமிழர் அனைவர்க்கும் உரிமையுடைய அரிய கருவூலம் அது. தமிழில் பேசுவதைத் தாழ்வாகக் கருதும் பெருமக்கள் (?) இன்றும் இருக்கிறார்கள். தமிழ்தானே எப்படிப் பேசினால் என்ன? எழுதினால் என்ன? என்று ஏளனப் பார்வையுடன் அக்கறையற்று இருப்போரும் உள்ளனர். நல்ல தமிழை - பிழையற்ற தமிழைப் பேசவும் எழுதவும் வழிகாட்டக் கூடிய அறிஞர்களும் அருகிவிட்டனர்."தமிழ் படிக்க வேண்டும் - தமிழின்பம் பருக வேண்டும்' என்ற ஆர்வத்தைப் பிள்ளையர்க்கு வளர்க்கக்கூடிய கல்விமுறையும் ஆசிரியர்களும் குறைந்து வருதல் பார்க்கிறோம். ஆசிரியர்தம் தமிழறிவே ஐயத்திற்கிடமாகிப் போயிற்று. இந்நிலையில் என்ன செய்யலாம்? நாளை வரப்போகும் தமிழ்ச் சமுதாய மக்கள் தமிழையே மறந்தவர்களாய் - அறியாதவர்களாய் ஆகிவிடக் கூடாதே என்னும் அக்கறையில் தமிழைப் பிழையின்றி பேசவும் எழுதவும் எடுத்துக்காட்டுகளுடன் வழிகாட்ட "கவிக்கோ' ஞானச்செல்வன் வாரம்தோறும் "தினமணி கதிரில்' தொடர் குறிப்புகளைத் தர இருக்கிறார். அடுத்தவாரம் முதல் "தினமணி கதிரில்' கவிக்கோ ஞானச்செல்வன் எழுதும் "தமிழைப் பிழையின்றி - பேசுவோம், எழுதுவோம்' தொடர் தொடங்குகிறது.-ஆசிரியர்.
கருத்துக்கள்

நல்ல முயற்சி! பாராட்டுகள். தினமணியும் பிழையற்ற தமிழில் செய்திகளைத் தருவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். சான்றாக இச்செய்தியின் தலைப்பிலேயே பிழையின்றிப் பேசுவோம் என ஒற்றெழுத்து வந்திருக்க வேண்டும். ஆனால், விடுபட்டுள்ளது. தினமணி ஆசிரியர் குவினருக்கும் செய்தியாளர்களுக்கும் பயிற்சி அளித்து நல்ல தமிழைப் பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உலகத் தமிழர்களின் உவகைக்குரிய இதழாக மாறட்டும்! ஆசிரியருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/17/2010 1:16:00 PM
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: தொல்காப்பியர் காலம் - சர்ச்சை முடிவுக்கு வருவது எப்போது?


தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும் கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது.இப் பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு,  சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்புகொண்டது.இன்றைய அகழாய்வுகளும், கல்வெட்டு ஆய்வுகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் நூல்கள் கிறித்தவ ஊழிக்கு முற்பட்டனவே என நிறுவுமாறு சான்றுகள் மிகப்பல கிடைத்து வருகின்றன. இதனால், இம் முடிவில் தொடர் ஆய்விலேயே இருந்த பேரறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன், தினமலர் கிருஷ்ணமூர்த்தி, ஆர். நாகசாமி போன்றவர்களும் தமிழ் மொழியியல் மரபுவழி அறிஞர்களும் இன்று கிறித்தவ ஊழிக்கு முற்பட்ட காலம் என்பதை ஏற்கின்றனர்.இந்நிலையில், தொல்காப்பியர் காலம் கிறித்துவுக்குப் பிற்பட்டது என்பார் கூற்று, சான்றற்றது என விட்டுவிடத்தக்கதாகிறது. கிறித்துவுக்கு முற்பட்டது என்ற முடிவிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.க.வெள்ளை வாரணர் கி.மு. 5320மறைமலையடிகள் கி.மு. 3500கா.சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000ச.சோ.பாரதியார் கி.மு. 1000க.நெடுஞ்செழியன் கி.மு. 1400மா.கந்தசாமி கி.மு.1400கே.கே.பிள்ளை கி.மு. 400மு.வரதராசனார் கி.மு. 500ஞா.தேவநேயப் பாவாணர் கி.மு.700சி.இலக்குவனார் கி.மு.700இரா.இளங்குமரன் கி.மு.700தொல்காப்பியர் காலத்தின் ஆய்வில் கீழ் எல்லையாக கி.மு.7-ஆம் நூற்றாண்டைக் கொள்ளுதல் தகும்.தொல்காப்பியம் என்ற இலக்கிய வரலாற்று "உரைநடைத் தொல்காப்பிய' நூலில் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), க.வெள்ளை வாரணர், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது. சங்கப் பாடல்களுக்கு முற்பட்டது என்பதைப் பல சான்றுகளால் நிறுவியுள்ளார். சி.இலக்குவனார், தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் முற்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார். இவையும் இவை போன்ற செய்திகள் எளிதில் மறுக்கக்கூடியதே.பாணர், பொருநர் போன்றவர்களின் ஆற்றுப்படைப் பாடல்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஆனால், அவர்களின் பாடலுக்கு இலக்கிய வடிவம் தந்து, புலவர்கள் அவர்கள் பாடலைப்போல பாடியவையே பத்துப்பாட்டில் உள்ளன.தொல்காப்பியர் செய்யுள் வடிவமான பாவகைகளைக் கூறும் விளக்கம் அனைத்தும், அவர் தமக்கு முந்தியவற்றைக் கண்டு கூற முற்படுவதை உணர்த்துகின்றன. பிற்கால யாப்பிலக்கண நூல்களைப்போல வரையறைப்படுத்திக் கூறவில்லை. இலக்கணம் கூறும் முறை தொடக்க காலத்தைக் காட்டுகிறது.இதனால் முதற்கண் சங்கப் பாடல்களின் காலத்தை ஒரு முடிவு செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் கி.மு. 5, 4-ஆம் நூற்றாண்டுகள் என்பதை, நடுநிலையாளர் அனைவரும் ஒப்புவர் என்பது இயற்கையே.தொல்காப்பியர் காலம்:சங்கப் பாடல்களின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்பதை அதன் மேல் எல்லையாகக் கருதலாம். தொல்காப்பியம் அச் சங்கப் பாடல்களுக்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டிருக்க வேண்டும் என்பதும் முன்பே குறிக்கப்பட்டது.இங்கு காட்டப்பட்டுள்ள சான்றுகளின் படியும் சான்றோர் பலரது ஆய்வுகளின் படியும் உற்று நோக்கினால், தொல்காப்பியர் காலம் கி.மு.7-ஆம் நூற்றாண்டுக்கும்  8-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது எனல் பொருந்துவதாகும். அதனால் கி.மு. 31, திருவள்ளுவர் காலம் என முடிவு செய்யப்பட்டதுபோல கி.மு. 711 தொல்காப்பியர் காலம் என முடிவு செய்யலாம்.தொல்காப்பியர் காலம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. எனினும் திருவள்ளுவர் காலம் பற்றி ஒரு முடிவு செய்ததும் திருவள்ளுவர் திருவுருவம் பற்றிய கருத்துப் போலவும் தொல்காப்பியர் திருவுருவம் பற்றி (கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் போன்ற வடிவம்) ஒரு கருத்துடன் முடிவுசெய்தலும் திருவள்ளுவர் நாள் போல, தொல்காப்பியர் நாள் ஒன்றைக் குறிப்பது அச்சான்றோரை-தமிழ்ப் புலவோரில் முதற்குடி மகனெனப் போற்றத் தகுந்த பெருமையுடையவரை ஆண்டுதோறும் நினைந்து கொண்டாட வாய்ப்பாகும்.தொல்காப்பியர் நாள்:தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தில், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் முன்னிலையில், தொல்காப்பியர் தம் நூலை அரங்கேற்றினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதிலிருந்து, அரச அவையத்தில் (சங்கத்தில்) புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்ட மரபு மிகத் தொன்மைமிக்க காலத்திலிருந்து வழக்கிலிருந்தமை அறியப்படுகிறது. பாண்டிய நாட்டு மதுரையில் இம்மரபு தொடர்ந்து நடந்ததைக் கலித்தொகையால் அறிகிறோம்.கலித்தொகையில், பாலைக்கலியில், பாலை பாடிய பெருங்கடுங்கோ இதைக் குறிப்பிடுகிறார்.தலைவன் பிரிந்து சென்ற போது திரும்பி வருவதாகக் கூறிச் சென்றது இளவேனிற் காலமாகும். ஆனால், தலைவன் இளவேனிற் பருவம் வந்தும், கூறியபடி வந்திலன்; சிறிது காலம் தாழ்த்தது. "அப்பருவம் வந்ததும், தலைவரும் வருகிறார் பார் வருந்தாதே' எனத் தோழி கூறுவதாக இப்பாடல் உளது.தரவு என்ற முதற்பகுதியில் இளவேனில் வருணனை, பிறகு மூன்று தாழிசைகளில் இவ் இளவேனிற் பருவமல்லவா அவர் வருவதாகச் சொன்னது; அவரும் மறவாது வந்தனர் எனக் கூறும் ஆறுதலுரை எனப் பாட்டுப் பொருளமைப்பு உள்ளது. இதில் வரும் மூன்று தாழிசைகளும் கால (சித்திரை, வைகாசி) வருணனைகளாக உள்ளன.முதல் தாழிசை, வையையாறு பூத்துக்குலுங்கும் காலம்; இரண்டாம் தாழிசை, காதலர் காமன் விழாக் கொண்டாடும் காலம்; மூன்றாம் தாழிசை, புலவர்கள் புதிய நூல்களை அரங்கேற்றும் காலம். இங்கு மூன்றாம் தாழிசைதான் உற்று நோக்கத்தக்கது.""நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ?பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்கடரிழாய் நமக்கவர் வருதுமென்று உரைத்ததை(கலி:35)நிலன் நாவில் திரிதரூஉம் - உலகோர் நாவிலெல்லாம் பலவாறு புகழ்பாடும், நீண்ட மாட மாளிகைகளையுடைய இக் கூடல் மாநகரிலுள்ளார் புலவர்களின் நாவில் பிறந்த புதிய சொற்களை - நூல்களைக் கேட்டு இன்பம் நுகர்ந்து மகிழும் இளவேனிற் காலமல்லவா?புலன் நாவில் பிறந்த புதிய சொல் - புதிய புதிய நூல்களைப் புலவர்கள் புதிதாக இயற்றி வந்து, அவர்களே அவற்றை எடுத்துக் கூறி அரங்கேற்றுதல், புதிதுண்ணல் - அரசனும் மக்களும் அப்புதிய பனுவல்களைக் கேட்டு, நுகர்ந்து இன்புறுதல்,இவ்வாறு அரங்கேற்றம் இளவேனிலில் நடந்ததென்றால், இது நீண்ட நாள் மரபாக இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியர், பாண்டியன் அவையில் அரங்கேற்றிய நாளும் இதுவாகவே இருக்கும் எனக் கொள்ளலாம்.எனவே, கி.மு. 711, சித்திரை மாதம், முழுமதிநாள் (சித்ரா பெüர்ணமி) தொல்காப்பியர் தம் ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய நாளாக மட்டுமன்றி, அவரது பிறந்த நாளாகவும் கொண்டு, கொண்டாடுதல் பொருத்தமுடையதாகும்.
கருத்துக்கள்

மரியாதைக்குரிய ஐயா தமிழண்ணல் போன்றவர்கள் ஏன் இத்தனை வரலாற்று அவசரக் கோழிகளாக இருக்கின்றார்கள். தொல்காப்பியரின் காலத்தை நிறுவுவதற்கு ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று தெரியவில்லை. வரலாற்றில் கிறிஸ்துவின் காலம் போன்ற பலரின் காலங்கள் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டன, பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக. தமிழண்ணலாரின் அரசியல் என்னவோ? அவர் சொல்லியிருக்கிறார் இவர் சொல்லியிருக்கிறார் என்று அவர்கள் சொன்ன எதையுமே சொல்லாமல் படீரென்று தொல்காப்பியரின் காலத்தைத் தம் கட்டுரையில் பிரகடனம் செய்கிறார். இது தான் இவரது விஞ்ஞான பூர்வமான ஆய்வியல் நெறிமுறையா? ஆய்வு நெறிமுறைகள் பற்றியெல்லாம் புத்தகம் எழுதியவருக்கு ஆய்வின் அடிப்படை அறங்கள் கூட இல்லாமல் இவ்வாறு தம் போக்கிலுரைத்தல் சரியா? தமிழ்க்கத்தியை எடுத்துத் தமிழர் தலையில் குத்தினாலும் இரத்தம் வரத்தான் செய்யும். ஆய்வுரை போல ஆய்வுப் போலிகளும் இவ்வாறுதான் இருக்கும். தேவை சரியான முறையான காய்தல் உவத்தலில்லாத ஆய்வே ஒழிய தன் பெருமை மிக்க பறைசாற்றுதல்களல்ல. நமது வரலாறு பெருமை மிக்கது. தெர்ன்மையானது. ஆனால் அத்தகைய வரலாற்றின் சொந்தக்காரர்களாகிய நாம் அத்தகைய பெருமைகளை ஆய்வு
By ஸ்ரீரசா
8/13/2010 8:21:00 AM
தொல்காப்பியம், வேதங்களுக்கு முந்தைய நூலல்ல!


கோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய  ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டதாகத் தொல்காப்பியம் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் என்று தினமணி 25-6-2010 அன்று தெரிவித்திருந்தது. வேதத்துக்கு முந்தையது தொல்காப்பியம் என்ற முனைவர் நெடுஞ்செழியன் கருத்துக்குத் தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் ஆதரவாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.சிறப்புப் பாயிரம்:தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு:நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்துஅறம் கரை நாவின் நான்மறை முற்றியஅதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்துமயங்கா மரபின் எழுத்துமுறை காட்டிமல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்ததொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்பல்புகழ் நிறுத்தப் படிமையோனே""நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில், அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில், புலவர் கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டிக் "கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண  நூல் செய்திகளையும் கற்று தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக் கொண்டு, இந்நூலால் பல சிறப்புகளைப் பெற்ற தூயோன்'' என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் இந்த வரிகளுக்குத் தெளிவுரை எழுதியிருக்கிறார்.நான்மறை:சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர். அது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆகலின்'' என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு விசேட உரை எழுதியுள்ளார்.வியாசர் காலத்துக்கு முன்பே தைத்திரியம் ஆதியாகிய நான்கு வேதங்கள் இருந்தன என்பதும், அவற்றை இக்காலத்திற்கு ஏற்பத் தகுதியாக வியாசர் ரிக் ஆதியாகிய நான்மறைகளாக வகுத்தனர் என்பதும் நச்சினார்க்கினியரின் விசேட உரையாகப் பெறப்படுகின்றன.நான்கு வேதங்களையும் நன்கு அறிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனவே, வேதங்களுக்கு முந்தைய நூல் அன்று தொல்காப்பியம் என்பது தெளிவு.ஐந்திரம்:ஐந்திரம் என்பது சம்ஸ்கிருத மொழியில் எழுந்துள்ள இலக்கண நூல் என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார். ரிக், யஜுர், சாம, அதர்வனம் ஆகிய வேதங்களுக்கு மிகவும் பின்னரே ஐந்திரம் எழுதப்பட்டது என்பதை மொழியியல் அறிஞர்கள் அறிவார்கள். ஆக, சிறப்புப் பாயிரத்தின் ஐந்திரம் என்ற சொல்லும் முனைவர் நெடுஞ்செழியன் கூற்றுரைக்கு ஆதரவாக இல்லை.ஐந்திரம் என்ற சம்ஸ்கிருத இலக்கண நூல் செய்திகளையும் கற்றறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பையும் அருள் கூர்ந்து நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.அந்தணர் மறைத்தே:தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20-ஆம் சூத்திரம் வருமாறு:எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்துசொல்லிய பள்ளி எழுதரு வளியின்பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்துஅகத்து எழுவளி இசை அரில்தப நாடிஅளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துகளும் (பிறக்கும் முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால், மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும், உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால் பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன், எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து, (மேற்கூறிய எட்டு உறுப்புகளும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை, பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும். அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து, வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன''. தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார், இந்தச் சூத்திரத்திற்கு.வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார். அவர் இந்தச் சூத்திரத்தில் அகத்தெழு வளியிசை நன்று, புறத்திசை மெய்தெரி வளியிசை நன்று என உடம்பிலிருந்து காற்று வெளிப்பட்டு வருவதை இரண்டாக வகுத்தார்; அகத்தெழு வளியிசை அந்தணர் வேதங்களில் உள்ளது என்றார். அதாவது, உந்தியினின்றும், மூலாதாரத்தினின்றும் எழுவது யாதோ அது அந்தணர் மறைத்தே என்றார்.ஆறு செயல்கள்:தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் ""அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்'' என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது. ""ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்'' என்று இந்த வரிக்கு முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.ஓதல் - நான்கு வேதங்களையும் ஓதிக் கற்றல்.ஓதுவித்தல் - பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.வேட்டல் - யாகங்களைச் செய்தல்.வேட்பித்தல் - பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல். (யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).ஈதல் - தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல்; ஏற்றல் - பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.ஓத்து:தொல்காப்பியம்  பொருளதிகாரம் அகத்திணை இயல் 31-வது சூத்திரம் ""உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான'' என்பது ஆகும். வேதங்கள் உயர்ந்தோர்க்கு உரியவை என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பொருளதிகாரம் செய்யுளியலில் 169-வது சூத்திரம் வருமாறு:நேரின மணியை நிரல்பட வைத்தாங்குஓரினப் பொருளை ஒருவழி வைப்பதுஓத்து என மொழிப உயர்மொழிப்புலவர்""ஓர் இனத்தைச் சார்ந்த மணிகளுள், தரத்தால் ஒத்த மணிகளை வரிசைபெற அமைத்துக் கோத்தல் போல, ஓர் இயலைச் சார்ந்த பொருள்களை ஒருவழி அமைத்து வெளிப்படுத்துபவை வேதங்கள்'' என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இந்தச் சொல், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் எழுதப்பட்டவை அல்ல. அவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்துள்ளன. எனவே, அவை ஓத்து என்று குறிப்பிடப்படுகின்றன.கீழ்க்கணக்கு நூல்கள்:""அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே'' என்று "இனியவை நாற்பது' நூலின் 7-வது பாடல் தெரிவிக்கிறது.பார்ப்பனர்கள் வேதங்களை மறவாது இருத்தல் மிக இனிது என்பது பொருள். ""இன்னா ஓத்திலாப் பார்ப்பான் உரை'' என்று இன்னா நாற்பது நூலின் 21-வது பாடல் குறிப்பிடுகிறது. ""வேதங்களை ஓதாத பார்ப்பனன் சொல் பயனற்றது'' என்பது பொருள்.""கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும் ஆர்த்த முனையுற்றும் வேறிடத்தும் ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே; செல்லின் இழுக்கும் இழவும் தரும்'' - இது "ஏலாதி' என்ற நூலில் 62-வது பாடல்.இந்தப் பாடலிலும் ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கிறது.""மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்'' என்பது திருக்குறள். ""பார்ப்பனன் ஒருவன் தான் கற்ற வேதங்களை மறந்தான் ஆயினும், அவற்றை அவன் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் ஒழுக்கம் கெட்டால் இழிந்தவன் ஆகிவிடுவான்'' என்பது பொருள்.இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள் ஆகிய இவை அனைத்தும் சங்கம் மருவிய கால பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஆக, ஓத்து என்ற சொல் வேதங்களையே குறிக்கிறது என்பது தெளிவு.தொல்காப்பியம் வேதங்களுக்கு முந்தைய நூல் என்ற முனைவர் நெடுஞ்செழியனின் கூற்றுரை பிழையானது - ஏற்கத்தக்கது அன்று - என்று தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் உறுதியாகவே சுட்டுகின்றன.

Wednesday, August 4, 2010

அமீர் குஸ்ரு எனும் வரலாற்றுப் புலவன்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
"அவர் வரலாறு எழுதவில்லை, கவிதை எழுதியிருக்கிறார்" - இப்படி அமீர் குஸ்ரு பற்றிக் கூறியிருக்கிறார் தற்காலத்திய மேற்கத்திய வரலாற்றாளர் ஒருவர். இதைப் பாராட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் அவரது கவிதைகளில் வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது அல்லது வரலாற்றை அவர் கவித்துவமாக எழுதியிருக்கிறார்.
இன்றைய உத்தரப்பிரதேசத்தில் கி.பி.1253ல் பிறந்தவர் குஸ்ரு. தந்தையார் ஒரு ராணுவத் தளபதி. பெர்சிய மொழியில் கவிதைகளை எழுதித் தள்ளினார் குஸ்ரு. ஐந்து லட்சம் கவிதைகளை எழுதியதாகச் சொல்லப்படுகிறது.
இது உயர்வு நவிற்சி அணியாக இருந்தாலும் தற்போது கிடைத்தவற்றை வைத்துப் பார்த்தாலே பிரமாதமான கவித்துவ ஆற்றல் பெற்றிருந்தார் என்பது நிச்சயமாகிறது. "இந்தியக் கிளி" எனப்பட்ட இந்த மனிதர் அனேகமாக அனைத்துக் கவிதை உத்திகளையும் பரிசோதித்துப் பார்த்தவர். "சபாக்கி ஹிந்த்" என்று ஓர் இந்திய பாணியை பெர்சியத்திற்கு வழங்கியவர்.

தான் இந்தியாவில் பிறந்தவர் என்பதில் மனிதருக்கு ஏகப்பெருமை. "நான் இரண்டு காரணங்களுக்காக இந்தியாவைப் புகழ்கிறேன் என்று, இங்குதான் நான் பிறந்தேன்; இது நமது நாடு. சொந்த நாட்டை நேசிப்பது ஒரு முக்கியமான கடமை... அப்புறம் இந்தியா சொர்க்கத்தைப் போன்றது. இதன் சீதோஷ்ணநிலை குராசனை விடச் சிறப்பானது... பசுமை நிறைந்தது, ஆண்டு முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கும்... இங்குள்ள பிராமணர்கள் அரிஸ்டாட்டிலைப் போன்ற அறிவாளிகள்; பல்துறை விற்பன்னர்கள் இங்கு உண்டு" - இப்படி இந்தியாவைப் பிரமாதப்படுத்திப் பேசியிருக்கிறார் கவிஞர். முஸ்லிம்களுக்கு தேசபக்தி இருக்காது. மதபக்தி மட்டுமே இருக்கும் என்கிற அநியாயக் குற்றச்சாட்டுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே பதிலடி இருந்திருக்கிறது.

சமஸ்கிருதம் கற்று தனது மேதமையைக் காட்டியிருந்தார் அல்பெரூணி என்றால், அப்பொழுதுதான் எழுந்துவந்த இந்திமொழியில் அக்கறை செலுத்தியிருந்தார் அமீர்குஸ்ரு. அதை "ஹிந்தவி" என அழைத்தவர் அதிலும் கவிதைகள் எழுதினார். நமக்கு கிடைத்துள்ள "தாரிக்கி அலாய்" எனும் சரித்திர நூலில் நிறைய இந்தி வார்த்தைகள் உள்ளன. இதில் ஆச்சரியம் இல்லை. பெர்சிய - இந்தி அகராதி நூலை எழுதியவர் இவர். வடஇந்தியாவில் உருது மொழி வளர்வதற்கு இந்த நூலும் பயன்பட்டது. அவர் எந்த அளவுக்கு உள்ளூர் வாழ்வோடு ஒன்றிணைந்து போயிருந்தார் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.

இவருடைய காலத்தில் டில்லியில் சுல்தான்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மறுபுறம் இந்தியாவிற்குள் நுழைய முகலாயர்கள் முஸ்தீபு செய்து கொண்டிருந்தார்கள். ஒருமுறை குஸ்ருவை அவர்கள் கைதியாகப் பிடித்துவிட்டார்கள் என்று கூடச் சொல்லப்படுகிறது. "கிரானுஸ் சாதேன்" என்கிற அவரது நூலில் முகலாயர்கள் படையெடுக்கப்போகிறார்கள் என்கிற செய்தியைக் கேட்டவுடன் இங்கிருந்தவர்கள் எப்படித் துடித்தார்கள் என்பது மிகுந்த கவித்துவத்துடன் வருணிக்கப்பட்டுள்ளது-

"வில்லிலிருந்து புறப்பட்ட
அம்பின் முனை மண்ணில் குத்திய வேகத்தில்
தூதர்கள் வந்தார்கள்.
எல்லையத் தாண்டி முகலாயர்கள்
வந்துவிட்டார்கள் என்றார்கள்.
பாலைவன மணலின் அடர்த்தியாய்
நிறைந்திருக்கிறது அவர்களது படை,
கொப்பரையின் கொதிக்கும் நீராய்
துடிக்கிறது அவர்களது படை என்றார்கள்"

எதிரியே என்றாலும் உள்ள நிலைமையைச் சொன்னார்கள் தூதர்கள். வரும் பகை கடுமையானது என்றாலும் அதைக் கேட்ட டில்லி சுல்தான் மிரளவில்லை. அவன் துணிவோடும், ஆவேசத்தோடும் பேசினான். சிங்கமாய் கர்ஜித்தான்-

"நான் ராஜா
எதிரிகளின் கோட்டைகளை அழிப்பவன்.
ராஜாளியின் காட்டில் கால்வைக்க
ஆந்தைக்கு துணிவு வரலாமா?
மானைத் துரத்திக் கொண்டு நாய் ஓடலாம்,
சிங்கத்தை எதிர்கொள்ள அதால் முடியுமா?
ஹிந்த் ராஜாக்களிடமிருந்து
யானைகளாக, பணமாகக்
கப்பம் வசூலிப்பவன் நான்.
ஒரு சமயம் குஜராத்திற்கு ஏவியும்
ஒரு சமயம் தியோகளுக்கு ஏவியும்
எனது படைக்கு நான் வேலை தருகிறேன்
எனது வேகக் குதிரைகள் எல்லாம்
திலாங்கிலிந்து வந்தவை.
எனது மத யானைகள் எல்லாம்
வங்காளத்திலிருந்து வந்தவை.
மால்வாவிலும் சஜ்நகரிலும்
எனது செல்வம் பாதுகாக்கப்பட்டுள்ளது
எனது சொகுசு ஆடை
கிதாவிலிருந்து வந்தது.
சின் எல்லைகள் எனது இடுப்புக்
கச்சையில் இறுக்கப்பட்டுள்ளன.
பொதி போன்று துணி போட்டுள்ள இந்த
மோசடியான இனத்தவரின் முன்பு
நான் எனது தலைப்பாகையை அகற்றுவதா?
அவர்களது படையின் எலும்புகளை
எனது ஆடைக்கு குஞ்சலங்களாக மாட்டுவேன்"

இதுதான் கவிதையில் வரலாறு அல்லது வரலாற்றைக் கவிதையாகத் தருவது. இதைப் படித்துவிட்டுத்தான் வறட்சியான வரலாற்றாளர்கள் சிலர் மிரண்டு போனார்கள். துவக்கத்தில் சொன்னது போல குஸ்ரு கவிதை எழுதியிருக்கிறார் என்று அவரது கணக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், குஸ்ரு கவிஞர் மட்டுமல்லாது வரலாற்றாளரும் கூட என்பதை இத்தகைய எழுத்துக்களும் வேறு சில உரைநடை நூல்களும் உணர்த்திய வண்ணம் உள்ளன. அதிலே முக்கியமானது ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட "தாரிக்கி அலாய்". அதிலும் தமிழர்களுக்கு இது முக்கியமான சரித்திர ஆவணம்... ஏன் தெரியுமா?

இந்த நூல் 1296ல் அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்ததலிருந்து 1310ல் அவரது படை மாபாரைப் பிடித்தது வரையிலான செய்திகளைச் சொல்கிறது. மாபார் என்றால் தமிழ்நாடு. மதுரை வரை மாலிக்காபூர் வந்தான் அல்லவா, அது இதில் உள்ளது.

சிறிய நூல் என்றாலும் முழுக்க முழுக்க சரித்திர நூல். எழுதியவர் ஒரு கவிஞர். ஆகவே ஒரு சித்து விளையாட்டு நடத்தியிருக்கிறார். நூலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட துறைக்கான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, கட்டடக் கலைக்கான வார்த்தைகள் ஒரு பகுதிக்கும், கரங்களின் அமைப்பு மற்றும் சக்தியைக் குறிக்கும் வார்த்தைகள் இன்னொரு பகுதிக்கும், சதுரங்க விளையாட்டுக்கான வார்த்தைகள் வேறொரு பகுதிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன!

ராஜபுதன அரசாகிய ரன்தம்போரைப் பிடிக்க அலாவுதீன் கில்ஜி போனபோது அவனோடு சென்றார் குஸ்ரு. அந்தக் கோட்டையையும், அதைப் பிடிக்க நடந்த யுத்தத்தையும் வருணித்திருக்கிறார். முற்றுகை மூன்று மாத காலம் நீடித்தது. கோட்டைக்குள் உணவுத் தட்டுப்பாடு வந்தது. "ஒரு அரிசி மணிக்காக இரண்டு தங்க மணிகளை விலையாகக் கொடுத்தார்கள்" என்கிறார் குஸ்ரு. இனியும் கோட்டைக்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. எதிரிகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் ராஜபுத்திரர்கள். அப்போதுதான் அது நடந்தது.

"ஒருநாள் இரவு மலையின் உச்சியில் அந்த ராஜா தீயைப் பற்ற வைத்தார். பற்றியெரிந்த நெருப்பில் தனது பெண்களையும் குடும்பத்தாரையும் தூக்கிப் போட்டார். சில விசுவாசமிக்க வீரர்களோடு எதிரியைச் சந்திக்க வந்தார். விரக்தியில் அவர்கள் தங்களது வாழ்வைத் தத்தம் செய்தார்கள்" என்கிறார் குஸ்ரு. இது நடந்தது 1301ல்.

யுத்தத்தில் தோல்வியைச் சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தே அதைச் சந்திக்கப் போகிற ராஜ புதனத்து ராஜா அதற்கு முன்பாகத் தனது வீட்டுப் பெண்களைத் தீக்கிரையாக்கி விடுவார். இதற்குப் பெயர் "ஜவ்ஹர்". குஸ்ருவின் எழுத்தே பெர்சிய மொழியில் இதுபற்றி எழுதப்பட்ட முதல் வருணனை. 14ம் நூற்றாண்டு பிறந்திருந்த வேளையிலும் இந்து ராஜகுடும்பத்து மாதர்களின் நிலை இப்படியாகத்தான் இருந்தது.

பெண்களைச் சக உயிர்களாக மதிக்காமல், தமது உடைமையாகக் கருதிய ராஜா தனக்குப் பயன்படாத எதுவும் தனது எதிரிக்குப் பயன்படக்கூடாது எனும்படியாகவே செயல்பட்டார். யுத்தம் என்றால் பெண்களின் நிலை சொல்லத்தரமற்றதாகவே இருந்தது. இருதரப்பில் ஏதோவொரு தரப்பின் பெண்கள் யுத்தக் கைதிகளாக ஆவார்கள் அல்லது எதிரிகளால் கொலை செய்யப்படுவார்கள். ராஜபுதனத்து அரசர்களைப் பொறுத்தவரை மூன்றாவது மார்க்கம் ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். அதுதான் தம்வீட்டுப் பெண்களைத் தாங்களே எரித்துவிடுவது, தங்களது மரணத்திற்குப் பிறகு உடன்கட்டை ஏற வேண்டியவர்கள்தானே என்று, அதற்கு முன்பு அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு யுத்தத்திற்கு கிளம்பினார்கள். இதற்கு என்று சாஸ்திர சம்மதம் இருந்தது. இப்போதும் இதை மகாவீரச் செயல் எனப்போற்றுகிற வரலாற்றாளர்களும் இருக்கிறார்கள்.

மாபார் எனப்பட்ட தமிழ்நாட்டுக்கு மாலிக்காபூரை அனுப்பிய அலாவுதீன் கில்ஜியின் முடிவு குஸ்ருவுக்கு பெரும் வியப்பைத் தந்தது. "12 மாதங்கள் பயணம் செய்தால்தான் மாபாருக்குப் போக முடியும். அவ்வளவு தூரம் அது டில்லியிலிருந்து" என்று அதற்குரிய காரணத்தையும் தந்திருக்கிறார். மதுரையிலிருந்து டில்லிக்கு இப்பொழுது ரயிலில் 40 மணி நேரத்தில் போய்விடலாம். அன்றோ 12 மாதங்கள் பிடித்தது. அன்றும் இன்றும் தூரம் ஒன்றுதான். ஆனால் நேரம் மாறிப்போனது. இப்பொழுது டில்லி எவ்வளவோ கிட்டே! வெளியின் அளவு உண்மையில் காலத்தைக் கொண்டே தீர்மானமாகிறது. சகலமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கிறது. எப்படியோ 1310ல் டில்லியைவிட்டு மாலிக்காபூர் தலைமையில் மாபாரை நோக்கிப் படை புறப்பட்டது.

தமிழ்நாட்டிற்குள் நுழையும் முன் பாதி வழியில் நின்று அந்த நாட்டு நிலைமையை விசாரித்தான் மாலிக்காபூர் அவனுக்குத் தெரியவந்த செய்தி என்று குஸ்ரு கூறுகிறார்- இதுவரை சுமூகமாக இருந்த மாபாரின் ராஜாக்களாகிய மூத்தவன் வீரபாண்டியனும், இளையவன் சுந்தரபாண்டியனும் இப்போது மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட துவார சமுத்திரத்தின் ராஜா பல்லாளதேவன் அவர்களது ஊர்களைப் பிடிக்கவும், வியாபாரிகளைக் கொள்ளையடிக்கவும் முடிவு செய்து படை கொண்டு புறப்பட்டான். ஆனால் முகமதியப் படை வருவது தெரிந்ததும் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டான். "வடக்கே சுல்தான்களின் ஆட்சி வலுப்பட்டு வருவது தெரிந்தும் தெற்கே அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்டார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டைக் கைப்பற்றத் திட்டம் போட்டான் இன்னொரு இந்து மன்னன். மாலிக்காபூருக்கு இது வசதியாக இருந்தது.

மாலிக்காபூரின் படை வலிமையை அறிந்து கொண்ட பல்லாளதேவன், சமரசத்திற்கு ஆள் அனுப்பியதாகக் குஸ்ரு கூறுகிறார். "பிசாசு போன்ற குதிரைகள் வேண்டுமா, பிரம்மாண்டமான யானைகள் வேண்டுமா, தியோகிரில் கைப்பற்றப்பட்டது போன்ற அரிய பொருட்கள் வேண்டுமா, எல்லாம் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்" என்றானாம் அந்த ஆள். தளபதியோ முகமதியத்திற்கு மாற வேண்டும் அல்லது ஜிம்மியாக (முஸ்லிம்களின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டவனாக) இருக்க வேண்டும், அதற்குரிய வரியைக் கட்ட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று பதில் சொன்னான். இந்தப் பதிலைக் கேட்ட மன்னவன் சொன்னானாம் "இருப்பதை எல்லாம் கொடுத்து விடுகிறேன், எனது பூணூலை மட்டும் விட்டுவிடுங்கள்".

முடிவில் துவாரசமுத்திரத்தின் மன்னன் சகலத்தையும் மாலிக்காபூரிடம் கொடுத்துவிட்டு தனது மதத்தை மட்டும் காப்பாற்றிக் கொண்டான். "கைப்பற்றப்பட்ட யானைகளும் குதிரைகளும் தலைநகருக்கு அனுப்பப்பட்டன" என்று கதையை முடிக்கிறார் குஸ்ரு.

துவார சமுத்திரம் என்பது இன்றைய கர்நாடகம். அங்கிருந்து புறப்பட்ட மாலிக்காபூர் மதுரை வந்து சேர்ந்தான். வந்த போது நகரம் காலியாகக் கிடந்தது. ராஜா சுந்தரபாண்டியன் ராணிமார்களோடு ஓடி ஒளிந்து கொண்டான், குஸ்ரு எழுதுகிறார் - "தான் கைப்பற்றிய யானைகளின் வரிசையை மாலிக் பார்வையிட்ட போது அது மூன்று பரசங்குகளுக்கும் அதிக தூரமாக இருந்தது. அவற்றின் எண்ணிக்கை 512. மேலும், அரேபிய, சிரிய நாட்டுக் குதிரைகள் 5 ஆயிரம். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்று ஐநூறு மன் ஆபரணங்கள் சிக்கின". பெரும் கொள்ளையோடுதான் மாலிக்காபூர் திரும்பினான்.

1310ல் டில்லியை விட்டு கிளம்பிய மாலிக்காபூர் 1311ல் மதுரையைத் தாக்கினான். அங்கிருந்து புறப்பட்டு டில்லியைப் பத்திரமாக அடைந்தான். அவனுக்கு கோலாகல வரவேற்பு காத்திருந்தது. குஸ்ரு எழுதுகிறார் -  "தங்க அரண்மனைக்கு முன்பாக பொது தர்பார் நடத்தினார் சுல்தான் அலாவுதீன். பிரபுக்கள் அனைவரும் அவரவர் தகுதியின்படி வலதுபுறமும் இடதுபுறமும் நின்றார்கள். மாலிக் கைப் காபூர் ஹசார் தினாரி, அவரோடு சென்ற அதிகாரிகளோடு, சுல்தான் முன்பு தோன்றினார். கொண்டுவரப்பட்ட பெரும் செல்வம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சுல்தான் பெரும் மகிழ்ச்சி கொண்டார். வீரர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். தர்பார் கலைக்கப்பட்டது" பிறருடையதைத் தனி மனிதன் கைப்பற்றினால் அது கொள்ளை. அதையே ஒரு ராஜா செய்தால் அது படையெடுப்பு, வெற்றிப் பெருமிதம். நிலப்பிரபுத்துவ ஆட்சிக் காலம் இப்படியாகவே இருந்தது.

அலாவுதீன் கில்ஜி 1316ல் இறந்ததும் அவனது இதர பிள்ளைகளைச் சிறையிலடைத்துவிட்டு அல்லது குருடாக்கிவிட்டு ஒரு சிறு பிள்ளையை மட்டும் அரியமணையில் உட்கார வைத்து ஆட்சியை தான் நடத்தத் துவங்கினான் மாலிக்காபூர். விரைவிலேயே இவனும் அரண்மனைக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டான். அது தனிக்கதை. எனினும் குஸ்ரு தனது நூலை "மங்கலகரமாகவே" முடித்துவிட்டார் - அதாவது இவனுக்காக டில்லியில் தனி தர்பார் நடத்தப்பட்டதோடு!

புலவர்கள் பலரும் சில புரவலர்களை நம்பியிருந்தார்கள் என்பதைத் தமிழகம் அறியும். இந்த வரலாற்றுப் புலவனின் நிலையும் இதுதான். இவர் டில்லி சுல்தானை நம்பியிருந்தார். அலாவுதீன் கில்ஜியின் சில கொடூரங்களை குஸ்ரு கூறவில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு தற்கால வரலாற்றாளர் அஸ்கரி தரும் பதில் - "நமது கவிஞர்- வரலாற்றாளரின் அறிவுசார் நாணயம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கு முன்பு அன்று நிலவிய சர்வாதிகார, பழிவாங்கும் ஆட்சியாளர்களின் போக்கை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்".

இத்தகைய இக்கட்டான சூழலின் மத்தியில்தான் குஸ்ரு எழுதினார். எனினும் இவரது நண்பரும் அக்காலத்திய பிரபல வரலாற்றாளருமான ஜியாவுதீன் பரணீ இவரது எழுத்துக்களைப் பயன்படுத்தியதிலிருந்து, தனது கணிப்புகளை இவரது எழுத்துக்களை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தியதிலிருந்து குஸ்ரு வெளிப்படுத்திய வரலாற்று உணர்வு மெய்யானதே என்பதை நன்கு உணரலாம்.

ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொள்ளாமல் எழுதவேண்டியிருந்தது என்றாலும் குஸ்ருவுக்கென்று ஓர் ஆன்மிக குரு இருந்தார். அவர்தான் ஷேக் நிஜாமுதீன் அவுலியா. அந்தக் காலத்தில் டில்லியில் இவர் மிகப் பிரபலமானவர். சூபி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவரது வாக்கு பலித்துவிடும் என்று பாமரர்களால் நம்பப்பட்டது. இவரை மிரட்டிக் கொண்டிருந்தான் சுல்தான் கியாஜுதீன் துக்ளக். "வெளியூரிலிருந்து வந்ததும் முதல் வேலை உன்னை ஒழித்துக் கட்டுவதுதான்" என்று சொன்னான். அப்போது நிஜாமுதீன் சொன்ன வாக்கு: "சுல்தானுக்கு டில்லி வெகுதூரம்". உண்மையிலும் ஒரு படையெடுப்பை நடத்தி முடித்து டில்லி திரும்பும் வழியில் வரவேற்புக் கொட்டகை நொறுங்கி விழுந்து மாண்டு போனான் அந்த சுல்தான்! யதேச்சையாக நடந்தது என்று இப்போது வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள். அன்று அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிஜாமுதீன் மீது குஸ்ரு எந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தார் என்றால் 1,325ல் அவர் இறக்கவும், அதைக் கேள்விப்பட்ட குஸ்ரு மறுநாளே மாண்டுபோனாராம். இது உண்மையோ பொய்யோ நாமறியோம். ஆனால் டில்லியில் நிஜாமுதீன் அவுலியா புதைக்கப்பட்டுள்ள அதே வளாகத்தில்தான் அமீர் குஸ்ருவின் சமாதியும் உள்ளது. நிஜாமுதீன் என்று இப்போதும் அழைக்கப்படுகிறது அந்தப் பகுதி. டில்லி சென்றிருந்த போது குஸ்ருவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினேன். மதுரைப் படையெடுப்பை அவர் வருணித்திருந்தது இந்த மதுரைக்காரனின் நெஞ்சில் அப்போது படபடவென்று ஓடியது.

அந்த வளாகத்திற்குப் பக்கத்திலேயேதான் சக்கரவர்த்தி ஹூமாயூனின் பிரம்மாண்டமான கல்லறை உள்ளது. அங்கே யாரும் பக்திபூர்வமாகச் செல்வதில்லை. இங்கோ ஏகப்பட்ட கூட்டம். உள்ளே நுழைவதற்கு முன்பு வரிசையாகப் பூக்கடைகள். ஒரு கடையில் பூக்களை வாங்கிக் கொண்டு அங்கேயே செருப்பை  விட்டு விட்டு சமாதிகளை நோக்கிச்சென்றார்கள். என்னை அழைத்துப்போன உள்ளூர்க்காரர் பூக்களை வாங்கவில்லை, செருப்புகளை விட மட்டும் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்தார். திரும்பி வந்ததும் செருப்புகளை மாட்டிக் கொண்டே அதற்குக் காசு கொடுத்தார். கடைக்காரர் கடைசி வரை வாங்க மறுத்துவிட்டார். அவர் பூ வியாபாரியே தவிர செருப்புகளுக்கு வாடகை வசூலிப்பவர் அல்ல. எனது அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. காரணம் வரும்போது என்னை அவர் எச்சரித்துக் கொண்டே வந்தார். "இவர்கள் மோசமானவர்கள், பர்சைப் பத்திரமாக வைத்திருங்கள்". வேடிக்கை என்னவென்றால், டில்லியிலேயே இருந்தும் இதுவரை தான் இங்கு வந்ததில்லை என்றும் என்னிடம் சொல்லியிருந்தார். ஆனாலும் வேற்று மதத்தவர் என்றால் தப்பபிப்பிராயம்.

இத்தகைய மாச்சரியங்கள் என்று ஒழியுமோ? கற்பிதமான மனத்தடைகள் உடைபட நேற்றைய, இன்றைய மனிதர்களை மெய்யாலும் படித்துக் கொள்வது அவசியத்திலும் அவசியம்.

 - அருணன்
(செம்மலர் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)
Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

Comments (2)
  • chitra
    இது போல் நிறைய எழுதுங்கள் அருணன் சார். அப்படியாவது எம் மனத்தடைகள் உடையட்டும். சரித்திரம் தான் எத்தனை சுவாரசியமானது.
Dr. V. Pandian
// பெண்களைச் சக உயிர்களாக மதிக்காமல், தமது உடைமையாகக் கருதிய ராஜா தனக்குப் பயன்படாத எதுவும் தனது எதிரிக்குப் பயன்படக்கூடாது எனும்படியாகவே செயல்பட்டார். // இவை மிகவும் வக்கிரமான வரிகளாகத் தெரிகின்றன. தற்போது ஈழத்தில், சிங்களனிடம் மாட்டிக் கொண்டு, தமிழப் பெண்கள் படும் பாட்டைப் பார்த்த பிறகும், இவ்வளவு வக்கிரத்தோடு அக்கால மன்னர்களைக் கட்டுரையாளர் விமர்சிப்பது, கட்டுரையாளரின் மனம் "வௌ்ளையானதல்ல", அது சிவந்தது என்பதைத் தௌிவாகக் காட்டுகிறது. செம்மலர், "செம்மையான" மலரல்லவே! "சிவந்த" மலர்தானே! அதனால் தான் குஸ்ருவைக் காப்பாற்ற மட்டும் தவறவில்லை! கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்! // "நமது கவிஞர்- வரலாற்றாளரின் அறிவுசார் நாணயம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கு முன்பு அன்று நிலவிய சர்வாதிகார, பழிவாங்கும் ஆட்சியாளர்களின் போக்கை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்". // தமிழகத்தில் பல இடங்களில் "தீப்பாஞ்சாங் குளங்கள்" உள்ளது தெரியுமா? தமது மானத்தையும், மறியாதையையும் காக்க வேண்டி மொத்த ஊருமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வரலாறுகள் தமிழகத்திலும் நிறைய உண்டு!