Sunday, June 28, 2009

"பள்ளியும் பாயும் பசப்பு'கதிரவன் மேற்றிசையில் மறையும் அந்தி மாலைப்பொழுது. காதல் ததும்பும் விழிகளை உடைய மகளிர் துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே வரும் மாலைப்பொழுது. அப்போது தெருவில் ஒரு பூக்காரி கூடை நிறைய முல்லைப் பூக்களைச் சுமந்து செல்கிறாள். அவளைக் கூப்பிட்ட புதுமணப் பெண் ஒருத்தி, அந்த மலர்களை விலைக்கு வாங்குகிறாள். வாங்கிய மலர்களை வீட்டின் முற்றத்தில் கிடந்த சிறுகட்டிலின் மேல் உள்ள மெத்தையில் தூவுகிறாள். ஆனால் அவளது விழிகள் கண்ணீர் சிந்துகின்றன. "இன்றாவது வருவாரா?' என்று அவளது செவ்விதழ் முணுமுணுமுத்தன.வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள். மெல்ல மெல்ல அந்திப் பொழுது தேய்ந்து இருள் சூழத் தொடங்குகிறது. அம் மாலைப் பொழுதைக் கண்டு வருந்துகிறாள். ""மாலைப் பொழுதே! நீ, முற்காலத்தே வந்த மாலைப் பொழுதா? இல்லை, இல்லை மணந்த மகளிர் பிரிவுக் காலத்தில் அவர் உயிர் உண்ணுகின்ற எமனாக இருக்கிறாய் நீ'' என்று பழிக்கும் அவள், ""ஐயோ, பாவம், மயங்கிய மாலைப் பொழுதே, நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். நின் துணையும் எம் காதலரைப் போல் மிகக் கொடியவரோ என்னவோ? அதனால்தான் நீ ஒளி இழந்து கலங்கி நிற்கிறாய் போலும் என்னைப் போல்'' என்று கூறும் வள்ளுவரின் தலைவி போல, மாலைப்பொழுதைக் கண்டு வேதனையுறுகிறாள் அந்தப் புதுமணப்பெண்.அப்போது வானத்தில் தோன்றிய நட்சத்திரங்கள், அது இருளோடு நிகழ்த்தும் போராகத் தெரிகிறது அவளுக்கு. இருளுக்கும் ஒளிக்கும் இடையே வானில் நடந்து கொண்டிருந்த அந்தப் போரைக் கண்ட அந்தப் பெண்ணின் மனம், போருக்குச் சென்ற தனது கணவனை நினைக்கத் தூண்டியது. இன்னும் அவன் திரும்பி வராததால் ஏற்பட்ட வருத்தம் தான் அவளது விழிகள் நீரை வார்த்ததுக்குக் காரணம். இந்நிலையில், வானத்தில் நிகழும் போர் அவள் உள்ளத்தில் நடக்கும் போரை மேலும் சூடேறச் செய்து கொண்டிருந்தது.அதைக்கண்டு வெறுப்புற்ற அவள் முற்றத்திற்கு வந்தாள். அதுவும் திறந்த வெளி முற்றம் என்பதால் அங்கேயும் வானத்துக்காட்சி அவள் கண்முன் வந்து வாட்டியது. இதமான குளிர்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.""மழை ஓய்ந்த பின்னர், மனோரம்மியமாக இருந்தது அந்தக் காட்சி. காதல் பாடம் படிப்பவர்கள் காப்பியம் வடிக்கும் நேரமல்லவா அது?'' என்பார் கவிஞர் தெசிணி. அவர் கூறியுள்ளது போல காவியம் வடிக்கும் நேரமான ரம்மியமான மாலைப்பொழுதில் தலைவன் இல்லாமல் எப்படி?அவள் அந்த மஞ்சத்தைப் பார்த்தாள். அவள் நினைவு மீண்டும் தன் கணவனை நோக்கிப் பாய்ந்தது. சொல்லமுடியாத வார்த்தைகள் பல நேரங்களில் நினைவாகத் தானே கழிந்து மறைகின்றன. அதுபோல அவளது நினைவு, கடந்த நாள்களைப் பின்தொடர்ந்து சென்றது.அழகு எழில் கொஞ்சும் பருவப் பெண்ணாய் அவள் இருந்தபோது, அவளது அழகு கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தான் ஒரு காளை. அவளும்தான்; கண்களினாலேயே அவனைக் காய்ந்தாள். அவனது மாவீரமெல்லாம் அவள் பார்வையின் முன் மண்டியிட்டு மகிழ்ந்தது. மலரைப் போல காதல் மெல்ல மெல்ல மலர்ந்து, விரிந்து திருமணத்தில் முடிந்தது.போருக்குச் செல்ல வேண்டி, அவர்களுக்குள் பிரிவு நேர்ந்தது. புதுமணத் தம்பதி என்பதால், பிரிவைச் சொல்லத் தயங்கினான். என்றாலும் அரச கட்டளை என்பதால், போய்த் தீரவேண்டிய நிர்பந்தம். அவள் பிரிய மறுத்து கோபித்தாள். அவள் கோபத்தில் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு. அதனால் பிரிந்து சென்று போர்க்களம் புகுந்தான். குளிர்காலம் வந்ததும் வருகிறேன் என்று கூறிச் சென்றான். அவன் பிரிந்து சென்ற நாள் முதலாய் இப்படித்தான் அவள் வருந்திக் கிடக்கிறாள்."அம்மா!' என்ற குரல் கேட்டு பழைய நினைவிலிருந்து மீண்டு வாசலுக்கு விரைந்தாள். கன்றுடன் பசுவைக் கூட்டிக்கொண்டு ஓர் இடையன் தெருவில் சென்றுகொண்டிருந்தான். அவள் சோகத்தை மேலும் அதிகரிப்பது போல சென்றுகொண்டிருந்த அவனது கையில் "குருக்கத்தி' இலைகள் இருந்தன.இதைக்கண்டவுடன் அவளது அழுகை மேலும் பீரிட்டது. காரணம், அவளது உள்ளங்கவர் கணவன் வருகிறேன் என்று கூறிச்சென்ற காலம், அந்தக் குருக்கத்தி துளிக்கும் காலமான கார்காலம். குளிர்காலம் தொடங்கி இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் கணவன் வரவில்லை. சொன்ன நாளில் வரவில்லை என்பதை நினைத்து வருந்தியிருந்தவளுக்கு இடையனின் கையில் இருந்த குருக்கத்தி இலைகள் மேலும் வருத்தத்தை பெருக்கியது. அதைக் கண்ட நொடியில் இருந்து உணவு செல்லாமல், உறக்கம் கொள்ளாமல் தவித்தாள். இருந்தாலும் அம்மஞ்சத்தில் வந்து விழுந்தாள்.அவளது திருமேனியோ அவனது பிரிவால் காயாம்பூ நிறமாக மாறிவிட்டது. காரணம் அவளுக்கு ஏற்பட்ட பசலை நோய் (உடல் நிற வேறுபாடு). அவளது உடல் மீதெல்லாம் ஊர்ந்து சென்ற அப்பசலை, பஞ்சு மெத்தை முழுவதும் பரவுவதாக உணர்ந்தாள்.அவளது மனம் நினைக்கிறது, ""மேகம், குறிஞ்சிப்பறை போல முழங்குகிறது; காட்டிலும் குருக்கத்தி இலைகளை விரித்தன; என்னைப் பிரிவதுதான் வழி என்று சொல்லிச் சென்று விட்டாரே, என் வருத்தம் பாராமல் பிரிவையே நன்று என்று எண்ணிவிட்டாரே'' என்று நினைத்து அவன் மேல் ஊடல் கொள்கிறாள்.""ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின்'' (1330)என்பது வள்ளுவம். காமத்திற்கு இன்பம் ஊடுதல்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு மிக இன்பமாகும் என்பார் வள்ளுவர். ஆம்! பிரிவிற்குப் பிறகு இன்பம் மிகுதியும் தருவது ஊடல்தானே? இதுப் பொய்க் கோபமாக இருந்தாலும் நேரில் கண்டுவிட்டால் பரிதி கண்ட பனி போல உறுகிப்போய்விடும் இயல்பினது. தலைவி ஊடக் காரணமாக இருப்பது, தலைவன் அவளுக்குத் தந்து சென்ற தனிமை என்ற கோர விஷம். பின் ஊடாமல் எப்படி இருப்பாள்.இவ்வாறு அவனுடன் ஊடல் கொண்டதன் விளைவால் அவளது உடலில் பசலை நோய் படர்ந்து, அது படுக்கை முழுவதும் பரவியதாம். பாவம் தூக்கம் காணாத இரவுகள், கண் மூடாத விழிகள் அவனை மறந்துவிடு; அல்லால் எனக்கு உறக்கத்தைத் தந்துவிடு என்று புலம்பித் தவிக்கிறதாம். அவளது இந்த சொல்லொனாத் துயரத்தை அவளே கூறுகிறாள்.சங்க இலக்கியமான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, அகப்பொருளில் அமைந்த "கார்நாற்பது' என்னும் நூல் அந்தப் புதுமணப் பெண்ணின் மன பாரத்தை, அவள் மூலமாகவே தாங்கி வருகிறது. ""முருகியம்போல் வான முழங்கி யிரங்க குருகிலை பூத்தன கானம் பிரிவெண்ணி உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப் பள்ளியும் பாயும் பசப்பு'' (பா-27)என்கிறாள். ஒன்றிய காதலின்பம்-அன்பில் ஊறிய இருவருக்குமே இன்பத்தைத் தருவது. உடல் மட்டுமே பெறுவதைவிட, உள்ளமும் சேர்ந்து பெறுவதுதானே உண்மையான காதலின்பம். பிணக்குதலும், உணர்த்தலும், சேர்வதுமே அல்லவா காதலின் பயன்?ஆமாம்! ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தப் பிரிவுத் துன்பமும் பசலை நோயும் ஊடலும்? ஆண்களுக்குக் கிடையாதா? என்றால், ""கடல் போன்ற காமத்திலே துன்புற்ற போதிலும், பெண்கள் ஆண்களைப் போல மடலேறுவதில்லை'' என்று சங்க இலக்கியத்திலே குறிப்பிடப்பட்டுள்ளதே!அப்படிப்பட்ட பெண் பிறவியே பெருமை மிக்கது. எதையும் தாங்கும் பெண்மை, மனம் கவர் மணாளனின் பிரிவை மட்டும் தாங்கிக் கொள்ளாத மென்மை உடையதாக இருத்தலினால்தான் அவர்களுக்கு "பெண்மை' என்ற பெயராயிற்றோ?
இந்த வாரம் கலாரசிகன்


பாரதியாரைத் திருவாவடுதுறை ஆதினம் ஏன் கௌரவிக்கவில்லை என்கிற கேள்விக்கு, நான் ரயிலில் சந்தித்த தமிழ்ப் பேராசிரியரின் விளக்கம் தவறு என்பது நண்பர் ராஜ்கண்ணனின் கருத்து. யாரோ எதையோ சொல்வதை எல்லாமா பதிவு செய்வது என்கிற அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாக எனக்குப் படுகிறது. தவறுகள் திருத்தப்படுவதுதானே முறை? அவரது கடிதம்~ ""திருவாவடுதுறை ஆதீனம் தமிழ் வளர்க்கும் பண்ணை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனினும் "சைவத்தின் மேற்சமயம் வேறில்லை' என்பதும் "சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை' என்பதும் அந்தத் திருமடத்தின் உயிர்நாடியான கொள்கைகள்.பாரதியாரோ கணபதி, முருகன், சிவன், சரஸ்வதி, லட்சுமி, கண்ணன், கோவிந்தன், முத்துமாரி என்று எல்லா கடவுளையும், ஏன், அல்லா, ஏசு கிறிஸ்து என்று பிற மதக் கடவுளர்களையும்கூட போற்றிப் பாடியிருக்கிறார். தம் கவிதையில் ஓரிடத்தில் அவர்,"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்!' என்று பாடுகிறார். கலாரசிகன் குறிப்பிடுவதுபோல பாரதியார் தன்னடக்கம் மிகுந்தவரல்லர். வெடிப்புற பேசுபவர்; ரௌத்ரம் பழகியவர். எட்டயபுரம் வெங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு ஓலைத்தூக்கு எழுதும்போதுகூட, "கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை யென்னால் கழிந்ததன்றே'என்று கூறிக்கொள்ளும் பாரதியார், தன்னை மதித்து கௌரவிக்க நினைப்பவர்களின் அழைப்பைப் புறக்கணித்திருப்பாரா?உ.வே.சா. பாரதியை தொடர்புகொண்டு திருவாவடுதுறை ஆதீனத்து விருப்பத்தைக் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கும் தகவலும் நம்பத் தகுந்ததாக இல்லை.பாரதி இறந்து சில ஆண்டுகளுக்குப் பின் பாரதி மகாகவியா இல்லையா என்கிற சர்ச்சை தமிழறிஞர்களிடையே உருவாயிற்று. அப்போது நடந்த காங்கிரஸ் இயக்க பொன்விழா கூட்டத்தில் பாரதியின் படத்திறப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உ.வே. சா.வும் கலந்துகொண்டார்.முதலில் பேசிய ராஜாஜி "நாங்கள் பாரதியை மகாகவி என்று ஒப்புக்கொள்கிறோம். அந்த முத்திரை மகாமகோபாத்யாய சுவாமிநாதய்யரிடமிருந்தும் வந்துவிட்டால் அதை யாரும் அசைக்க முடியாது' என்று கூற, அடுத்து பேசிய உ.வே.சா. பாரதியைப் பற்றி பொதுவாக புகழ்ந்துவிட்டு தன் உரையை முடித்துக் கொண்டாரே தவிர மகாகவி சர்ச்சை பற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பாரதிக்கும் இருந்த பொதுவான அம்சம் தமிழ்க்காதல் என்பதே. மற்றபடி சித்தாந்த ரீதியில் இருவரும் இருவேறு துருவங்கள்.ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த எத்தனையோ அறிஞர்கள் சந்திக்காமல் இருந்ததுண்டு. எனவே இதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பியதாகவும் சந்திக்க மறுத்ததாகவும் கூறும் வழிப்போக்கர்களின் வாக்குமூலங்கள் பதிவாவது இலக்கிய வரலாற்றில் குழப்பம் ஏற்படவே வழிவகுக்கும்''.நான் கட்சி மாறிவிட்டேன். ராஜ்கண்ணனின் வாதத்தை ஏற்கிறேன். எது சரி, எது தவறு என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.*******"நீங்கள் கவிஞர் கண்ணதாசன் ரசிகர்தானே' என்று என்னைக் கேட்டார் ஒருவர்."ஆம், சந்தேகமென்ன? என்றேன்."கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக உங்களைக் கவர்ந்த கவிஞர் யார்?'"கவிஞருக்கு எதிர்க்கடை விரித்த கவிஞர் வாலிதான், அதில் சந்தேகமென்ன?'"சரி, இன்றைய இளைய தலைமுறைக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்த கவிஞர் யார்?'"நா. காமராசன், மு. மேத்தா, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து தலைமுறையை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறையில் என்னைக் கவர்ந்தவர் என்னவோ கவிஞர் சாமி பழநியப்பனின் புதல்வர் கவிஞர் பழநி பாரதிதான். மற்றவர்களிடமிருந்து கவிஞர் பழநி பாரதி வேறுபடுவதன் காரணம் அவரது கவிதைகளில் காணப்படும் சமூகப் பிரக்ஞை'. அவரது படைப்புகளில் ஒன்றைச் சொல்லுங்களேன்'.""பிளாஸ்டிக் கவிதைகள் என்று ஓர் அருமையான கவிதையை அவரது "காதலின் பின்கதவு' தொகுப்பில் படித்தது இப்போதும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. "கூடல்' என்றொரு இணையதளம். அதில் புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் இவையெல்லாம் வெளியிடப்படுகின்றன. அதில் கவிஞர் பழநிபாரதி எழுதிய "பாசம்' என்கிற கவிதை காணப்படுகிறது. அதைப் படித்து விட்டுச் சொல்லுங்கள், எனது கணிப்பு சரிதானா என்று!'""எனக்கு இணையதளமெல்லாம் தெரியாது. ஆனால் கவிதையை ரசிக்கத் தெரியும். சொல்லுங்களேன் அந்தக் கவிதையை'' என்றார்.அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சேர்த்து, இதோ அந்தக் கவிதை~ ""கிளைக்கரம் நீட்டி மரம் உன்னை அன்போடு அழைக்கும் போது உன் அம்மாவை... ஈரக்காற்றெடுத்து மரம் சில்லென்று தழுவும்போது உன் மனைவியை... பூக்களைச் சிந்தி மரம் உன்னைக் குதூகலப்படுத்தும்போது உன் குழந்தையை... எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? இப்போது சொல்} உன் தாயை உன் மனைவியை உன் குழந்தையை ஒரே நேரத்தில் உன்னால் கொலை செய்ய இயலுமா?''

மா.உலகநாதன்
First Published : 28 Jun 2009 01:32:47 AM IST


Last Updated :

சங்க இலக்கியம் தமிழின், தமிழனின் தாய் இலக்கியம்; உலக இலக்கியங்களின் சிகரம்; உலகத்தாரின் வாழ்க்கை முறைகள் பற்றிப் பேசுவது. அதனால்தான் அது உலகப் பொது இலக்கியம் என்று கூறப்படுகிறது.

அம்பலும் அலரும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவை சங்க காலந்தொட்டே நிகழ்ந்து வந்திருக்கின்றன என்பதை பல இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அன்று நிகழ்ந்த ஊர்வம்பு பேசுதலை, "அம்பல்' என்றும் "அலர்' என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனர். அம்பல் என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய அம்பலும் அலரும் இன்று பேசப்படும் கிசுகிசுக்களைப் போலன்றி, நன்மையின் நிமித்தமாகவே பேசப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.

ஊர்வம்பு என்றாலே ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நாட்டம் உண்டு என்று சொல்வர். காலையில் ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியைச் சொன்னால் போதும், மதியத்துக்குள் அச்செய்தி ஊருக்குள் பரவிவிடும். இதை இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. நற்றிணையில் கபிலர் தமது குறிஞ்சித்திணைப் பாடலில்,

""தீ வாய்

அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்''

என்கிறார். ""வீட்டகத்துச் செய்திகளை அடுக்களைப் புகையைப் போல நுழைந்து காணும் ஆசையும், கூடியிருந்து முணுமுணுத்துப் பேசும் துணிவும் எப்படியோ பெண் சமுதாயத்துப் பிறவிக்குணம் போல அமைந்து வாய்க்குள் பேசும் வல்லமை வந்துவிடுகிறது'' என்பார் .சுப.மாணிக்கனார்.

நெய்தல் பாடிய உலோச்சனார்,

""சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

மருகின் பெண்டிர் அம்பல் தூற்றச்

சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப

அலந்தனன் வாழி! தோழி!'' என்கிறார்.

(நற்-149)

தெருவில் நடந்து செல்கிற தலைவியை, கடைக்கண்ணால் நோக்கி, மூக்கின் மேல் விரல் வைத்து ஜாடையாகவும், நேரிடையாகவும், காதோடு காதாகவும் கிசுகிசு பேசும் அந்தக் காட்சியை மிக அழகாக மேற்கண்ட பாடல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்பத்துப் பாலில், "அலர் அறிவுறுத்தல்' என்ற தலைப்பில் வரும் பத்துக் குறட்பாக்களும் ஊர் வம்பு பற்றியே பேசுகின்றன.

""ஊரவர் கெüவை எருவாக அன்னை சொல்

நீராக நீளுமின் நோய்''

(குறள்-1147)

காதல் வயப்பட்ட தலைவியின் காம நோயானது ஊரார் கூடிக் கூடிப் பேசும் வம்புகளால் எரு இடப்பட்ட பயிரைப் போலவும், மகளைப் பற்றி எழும் வதந்திகளால் மனம் வெதும்பி, தாய் கூறும் கடுஞ்சொற்கள் எல்லாம் அந்தப் பயிருக்கு நீராகவும் இப்படிக் காதலும் காமமும் மக்கள் பேசும் கிசுகிசுவால் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்கிறார் திருவள்ளுவர். இன்னொரு குறளில்,

""நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெüவையால்

காமம் நுதுப்பேம் எனல்''

(குறள்-1148)

தலைவன், தலைவி காதல் பற்றிய செய்தி தீ பரவியது போல, ஊர் முழுவதும் பேசப்படுகிறது. ஆயினும் தலைவி தன் காதலில் உறுதியாக இருக்கிறாள். யார் என்ன பேசினால் என்ன? எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றி அணைக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. பதிலாக இன்னும் என் காதல் தீவிரமடையும் என்று கூறுவதாக இக்குறள் அமைகிறது. ஆம். எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றினால் அது மேலும் கொழுந்துவிட்டு எரியும் அல்லவா?

இலக்கியங்கள் சொல்லுவதைப் போல, இன்றும் கூட கிராமங்களில் ஜாடை பேசுதல் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. அம்பலும் அலரும் பண்டைய காலந்தொட்டு பேசப்பட்டாலும் அவை காதலர்களின் உறவைக் கெடுக்காது, பெண்ணைப் பெற்றோருக்கும் ஊராருக்கும் இந்தக் காதல் செய்தியைப் பரப்பி, காதலர்களைத் திருமணம் காணச் செய்தது. இந்த நற்செயலைச் செய்யும் அம்பலும் அலரும் வாழ்க! வளர்க! என்று கூறலாம் தானே!

Saturday, June 20, 2009

நல்வழி
தினமணி


ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பர் - ஓவாமல் ஐயம்புகு வாரை யாரே விலக்குவார் மெய்அம் புவியதன் மேல். (பா-13)அழகிய இம்மண்ணுலகின் மீது உண்மையாக வாழ்கின்றவரை அழித்திட எவருமே இல்லை. அதைத் தவிர, இறக்கக் கூடியவரை இறவாமல் தடுத்து நிறுத்தக் கூடியவர் எவரும் இல்லை. ஓய்வின்றி பிச்சையெடுக்கச் செல்பவரை, பிச்சையெடுக்காமல் தடுப்பவரும் யாருமில்லை. எனவே, வினைப்பயனால் ஏற்படும் இன்ப, துன்பங்களை எவராலும் தடுக்க முடியாது.
இணையற்ற காவியத்தில் இலக்கணத் தம்பி!உலகில் உண்டான உறவுகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. எனினும், உருவான உதரம் ஒன்று என்ற ஒரே காரணத்துக்காக ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் சகோதரப் பாசம் வியக்கத்தக்கதன்றோ! அதனால்தானோ என்னவோ காலத்தை வென்ற ராமாயணத்தில் சகோதரப் பாசத்தைப் பிரதானமாகக் காட்டுகிறார் கம்பர்.யாவரோடும் அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என போதிக்க வந்த ராமன் பிறந்ததோ மூவரோடு. அவர்கள் நால்வரும் ஆனதோ இரண்டு ஜோடிகளாக. ராம-லட்சுமணனாகவும், பரத-சத்ருகனனாகவும் அவர்கள் சேர்ந்தே வளர்கின்றனர். திருமண விழா ஒன்றைக் காட்டும் பாடலில் கம்பர் பாடிய "பருந்தொடு நிழல் சென்(று) அன்ன' என்ற வரிகள் இங்கு ராம-லட்சுமணனின் பாசத்தை விளக்க பொருத்தமானதாகிறது.விழாவில் சங்கீதக் கச்சேரி நடைபெறுகிறது. பாட்டுக்கு இசையாமல் இசை அதன் பாட்டுக்குச் சென்றால் செவிகளுக்கு நாராசம். பாட்டும் இசையும் பக்குவமாக இசைந்தால் பருகும் செவிகளுக்கு இன்ப விருந்து. இங்கு பாட்டோடு இசை பாலில் சுவையென கலந்திருக்கிறது. பருந்து வானில் பறக்கிறது. அதன் நிழலோ தரையில். ஆனாலும், பருந்து செல்லும் திசையெல்லாம் அதன் நிழலும் எப்படிச் செல்லுமோ அவ்வண்ணம் பாட்டும் இசையும் இணைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் கம்பர்.அப்படித்தான் லட்சுமணனும். ராமனை விட்டுப் பிரியாமல் நிழலெனத் தொடர்கிறான். உண்ணும்போதும் உறங்கும்போதும்கூட பிரியாமல் பிரியத்துடன் இணையாய் இருக்கிறான். லட்சுமணன் நுனிமூக்கு "கோபம்' உள்ளவன். ராமனோ பூமிபோல பொறுமை "குணம்' உள்ளவன்; சாந்தமே வடிவானவன். பிறகு எவ்வாறு இருவருக்கும் ஒத்துப்போகிறது?அதில் வியப்பொன்றுமில்லை. ராமன் இருக்குமிடத்தில் லட்சுமணன் இருப்பான். லட்சுமணன் எங்கு இருப்பானோ அங்கு நிச்சயமாய் ராமன் இருப்பான். ஆக, "கோபம்' இருக்கும் இடத்தில் "குணம்' இருப்பது இயற்கைதானே!அன்பால் இணைந்திருப்போரைக் குறிக்க கவிஞர்கள் வழக்கமாக "கண்ணும் இமையும்போல' என்பர். இங்கே இருவரும் சகோதரர்கள். அவர்களை இரு இமைகள் என்கிறார் கம்பர். தாங்கொணா துயரம் தந்த தாடகையை வதம் செய்தாயிற்று. வேள்வி நடைபெறுகிறது. காவல் பணியை கார்வண்ணனும் அவனது தம்பி லட்சுமணனும் செய்கின்றனர். அதை கம்பர்,""மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்''என்கிறார்.இமைகள் இரண்டில் கீழ் இமை அப்படியே இருக்கும். மேல் இமையே அடிக்கடி வந்து கீழிமையைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லும். இங்கும் அப்படித்தான். வேள்வியை ஓரிடத்தில் நின்று காவல் காக்கிறான் லட்சுமணன். காரணம் அவன் இளையவன். மூத்தவனான ராமனோ வேள்வி நடைபெறும் இடத்தைச் சுற்றிவந்து காவல் காக்கிறான். அப்போது அவன் லட்சுமணனைப் பார்த்துச் செல்கிறான். இணையான சகோதரர்களை இமைகள் என இயம்பி சகோதரத்துவத்துக்கு புதிய உவமை படைக்கிறார் கம்பர். அண்ணன் என்பவன் அறிவைத் தருவதில் தந்தையாகவும், அன்பைத் தருவதில் அன்னையாகவும் விளங்க வேண்டும்.கூனியின் கூற்றால் மனம் மாறிய கைகேயி "ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினான் அரசன்' என, ராமனிடம் கூறுகிறாள். பழி தீர்க்க நினைத்த கூனியின் சொல்லுக்கு பலியான கைகேயி இட்ட உத்தரவை மறு நினைப்புமின்றி ஏற்ற ராமன் "அப்பொழுது அலர்ந்த செந்தாமரையின் வென்ற' மலர்முகத்துடன் வெளியேறுகிறான். அண்ணன் ராமனே தனக்கு அனைத்தும் என எண்ணி அவன்பால் அன்பு கொண்ட லட்சுமணன் சும்மாயிருப்பானா? காட்டுக்குச் செல்லும் ராமனின் காலடியைத் தொடர்கிறான். இக் காட்சி, தாய்ப்பசுவை வெளியேற்றினால் கன்றும் தானாகவே வெளியேறுமே அதைப்போல இருக்கிறதாம். இதை, "கன்றும் தாயும் போவன கண்டும் கழியீரே!' என பரதனின் வார்த்தைகளில் வடிக்கிறார் கம்பர்.பிறிதோரிடத்தில், ராமனுடனான தனது பாசத்தை லட்சுமணனின் சொற்களில் எடுத்துரைக்கிறார் கம்பர். வனம் செல்ல உத்தரவிடப்பட்ட ராமனுடன் தான் ஏன் செல்ல வேண்டும் என்பதற்கு தன்னை மீனாக்கி, ராமனை நீராக்கி உவமையால் உணர்த்துகிறான் லட்சுமணன்.""நீர்உள எனில் உள மீனும் நீலமும்பார்உள எனில் உள யாவும் பார்ப்புறின்நார்உள தனு உளாய் நானும் சீதையும்ஆர்உளர் எனில் உளேம் அருளுவாய்''மீனும், நீலம் எனப்படும் நீலோற்பல மலரும் உயிர்வாழ நீர் அவசியம். மீன்போல நானும், நீலம்போல சீதையும் உயிர்வாழ ராமனாகிய நீ(ர்) அவசியம். மீனும் நீலமும் நீரைப் பிரிந்தால் உயிர் வாழ்வது இயலுமோ? எங்களின் நிலைமையும் அவ்வாறே என்கிறான் லட்சுமணன்.நீரில் நீலம் ஓரிடத்தில் நிலையாக நிற்கும். பெண்மையான சீதையும் அப்படித்தான். ஆனால், மீனோ நீர் முழுவதும் சுற்றிவரும். அழகு நீலம் கொஞ்சும் நீரில் அழுக்கு சேரவிடாது மீன். அதுபோல "அண்ணனாகிய உனது புகழுக்கு எவ்விதக் களங்கமும் சேரவிடாமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு' என்பதை சூசகமாக குறிப்பிடுகிறான் சூர்ப்பனகையை மூளியாக்கிய முன்கோபக்காரன்.தம்பி என்பவனுக்கு அண்ணனிடம் அன்பும், அமரருள் உய்க்கும் அடக்கமும் மட்டுமன்றி, தமையன் புகழுக்கு தீமை நேராமல் காக்கும் கடமையும் உண்டு என்பதை லட்சுமணன் மூலமாக விளக்கி, தம்பிக்குப் புதிய இலக்கணமும் படைக்கிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.
புரட்சிப் புலவரும் ஆற்றுப்படையும்கடைச்சங்க காலத்து 473 புலவர்களுள், மிகச்சிறந்த புலவராக, தமிழ் மொழியின் பொருள் இலக்கணச் சிறப்பைக் காப்பதற்காக, இறையனார் யாத்த "கொங்கு தேர் வாழ்க்கை' (குறுந்தொகை) என்னும் பாடலில் பொருட்குற்றம் கண்டு, இறையனாரையே எதிர்த்து வாதம் செய்த மாபெரும் "புரட்சிப்புலவர்' மதுரை கணக்காயர் மகனார் நக்கீரர். நக்கீரர், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடையும், எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை (8), நற்றிணை(7), அகநானூறு(17), திருவள்ளுவமாலையில் முதல் பாடலும் இவர் இயற்றிய பாடல்களாகத் தெரியவருகிறது. மேலும் இவரது தனிப்பாடல்களும் உள்ளன. இவர் இயற்றியதாகக் கருதப்படும் "நாலடி நாற்பது' என்றொரு நூல் உண்டென்றும், அந்நூல் அவிநயர் யாப்புக்கு அங்கமாக உள்ள யாப்பிலக்கணநூல் என்றும் யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களால் அறிய முடிகிறது."கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர்' என்ற திருப்புகழ் அடிகளால் இவர் வடமொழியிலும் வல்லவர் என அறிகிறோம். மேலும் நக்கீரரால் பாடப்பெற்ற நூல்களாகக் கூறப்படும் நூல்கள்: பதினோராம் திருமுறையில் உள்ள கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார்எட்டு, போற்றித் திருக்கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்து சிற்றிலக்கியங்கள்.திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் பாடிய மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரரின் காலம் கடைச்சங்க காலமாகிய கி.பி. 2-ஆம் நூற்றாண்டு எனலாம். மேலும் இவர் புலவராக இருந்ததுடன் சிறந்த உரையாசிரியராகத் திகழ்ந்தார் என்பதற்கு இறையனார் களவியல் நூலுக்கு இவர் எழுதிய உரையே சான்றாகும். நெடுநல்வாடை பாடிய நக்கீரர் சங்க காலத்தவர் என்றும், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் அவருக்குப்பின் வந்தவர் என்று நிலவும் ஒரு கருத்து ஆய்வுக்குரியது.நக்கீரர் பற்றிய இரு கதைகள் சொல்லப்படுகின்றன. மதுரையில் நக்கீரர் ஒருமுறை பட்டிமண்டபத்தே வீற்றிருந்தபோது, அங்கு வந்த குயக்கொண்டான் என்பவன் வடமொழியே சிறந்தது, தமிழ்மொழி தாழ்ந்தது என்று கூறினான். அதுகேட்டு சினங்கொண்டு நக்கீரர்,""முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழிபரண கபிலரும் வாழி - அரணியஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்ஆனந்தம் சேர்க சுவ''என அவன் இறக்கும் வண்ணம் பாடினார். உடனே அவன் இறந்து போகிறான். இதைக் கண்ட மற்ற புலவர்கள், குயக்கொண்டானுக்காக இரங்கி நக்கீரரிடம் அவனுக்கு உயிர் தரும்படி வேண்ட, நக்கீரரும் இரக்கம் கொண்டு""ஆரியம் நன்று தமிழ் தீது என வுரைத்தகாரியத்தாற் காலக் கோட் பட்டானை - சீரியஅந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினாற்செந்தமிழே தீர்க்க சுவா''என்று பாட, உடனே அவன் உயிர் பெற்றெழுந்தான். இது நடந்த நிகழ்ச்சியா அல்லது பிற்காலப் புலவரின் புனை கதையா என்பது அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நக்கீரர் வடமொழியிலும் வல்லுநர் என்பதை அவர் இயற்றியதாகக் கூறப்படும் திருக்காளத்தி பூங்கோதை அம்மை மீது வடமொழித் தோத்திரம் ஒன்றும், வடமொழி நிகண்டு ஒன்றும் இருந்தன என்ற செய்தியிலிருந்தும் அறிய முடிகிறது. இவரது திருமுருகாற்றுப்படை எழுந்த சூழலைக் காண்போம்:சிவபெருமான் தருமி என்ற அந்தணப் புலவருக்கு உதவும் பொருட்டு "கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் அகப்பாடலைப் பாட, வந்திருப்பது இறையென்று அறிந்தும் நக்கீரர் அப்பாடலில் பொருட்குற்றம் என வாதிட்டார். இதனால் இறைவனின் சினத்துக்கு ஆளாகி நோயுற்றார். பின்பு அவ்விறைவனை வணங்கி வேண்ட, இறைவன் கயிலையைக் கண்டால் உனது நோய்தீரும் என்றார். எனவே நக்கீரர் கயிலையை நோக்கிச் செல்லும் போது திருப்பரங்குன்றத்தில் "கற்கிமுகி' என்ற பூதத்தால் குகையில் அடைக்கப்பட்டார். அப்போது திருமுருகாற்றுப்படையைப் பாடி தம்முடன் சிறையில் இருந்த 999 பேரையும் குகையிலிருந்து விடுவித்தார் எனவும் கதை ஒன்று வழங்கிவருகிறது.""சேயோன் மேய மைவரை உலகம்'' என்கிறது தொல்காப்பியம். பத்துப்பாட்டில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இதனைப் பாடியவர் நக்கீரர் என்பதை இப்பாடலின் இறுதியில் அமைந்துள்ள "குமரவேளை மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் பாடியது' என்பது புலப்படுத்தும். பாடலின் இறுதியில் முருகப்பெருமானின் பெருமையைக் கூறும் பத்து தனிப்பாடல்களும் உள்ளன. முருகனின் அருளைப் பெற்ற ஒருவர், அந்த அருளை நாடும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை. முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள அறுபடை வீடுகளின் சிறப்பைப் பற்றிக் கூறுவது. 317 அடிகளைக் கொண்ட இந்நூலே தமிழ் இலக்கியத்தின் முதல் முழு பக்திநூல் ஆகும்.மற்ற ஆற்றுப்படை நூல்கள் ஆற்றுப்படுத்தப் படுபவர்களது பெயரோடு சார்த்தி வழங்கப்படுகின்றன. ஆனால் திருமுருகாற்றுப்படை பாட்டுடைத் தலைவனின் பெயரோடு சார்த்தி வழங்கப்படுகிறது. இதைப் புலவராற்றுப்படை என்றும் கூறுவர். திருமுருகாற்றுப்படையில் தமிழ் நாட்டுப் பழங்குடி மக்கள் மேற்கொண்டு போற்றிய பழைய சங்ககால வழிபாட்டு முறைகளே விரித்து விளக்கப்பட்டுள்ளன. இதில் செறிவும், திட்பமும் வாய்ந்த சொல் நடை அமைந்திருக்கக் காணலாம். சங்ககால வாழ்க்கை முறைகள், கடவுளர்களைப் பற்றிய வரலாறு போன்ற பல்வேறு செய்திகளை அறிய நமக்குப் பெருந்துணை புரிகிறது திருமுருகாற்றுப்படை.இதன் சிறப்பறிந்து இதை சைவசமய நூலாகிய பன்னிரு திருமுறைகளில், பதினொன்றாம் திருமுறையில் சேர்த்துள்ளனர். மொத்தத்தில் திருமுருகாற்றுப்படை பழந்தமிழர் நாகரிகத்தை அறிய உதவுகின்ற வரலாற்றுக் காப்பியமாகும்.

Monday, June 8, 2009

நல்வழிஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. (பா-11) துன்பத்தை அதிகப்படுத்துகிற எனது வயிறே! ஒரு நாளுக்கு உணவை உண்ணாது இரு என்றால் இருக்க மாட்டாய். கிடைக்கும் போது, இரு நாளுக்குரிய உணவை ஏற்றுக்கொள் என்றால், ஏற்கமாட்டாய். ஒருநாளும் எனது துன்பத்தை அறியாமல் இருக்கின்ற உன்னோடு வாழ்வது பெரும்பாடாக இருக்கின்றது.
இந்த வாரம்: கலாரசிகன்
தினமணி


ரசனை உள்ளவர்கள்தான் கவிஞர்களாக முடியும். நல்ல கவிஞர்கள் நல்ல ஓவியர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், ஓவியத் திறமை பெற்ற கவிஞர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் கவிஞர் பெருமாள் ராசுவுக்குத் தனியிடம் நிச்சயமாக உண்டு. அவரது "பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பு ஓர் அற்புதமான படைப்பு என்பது மட்டுமல்ல, அரிய முயற்சியும் கூட. திருவேங்கடத்தில் தொடங்கி இந்தியாவிலுள்ள 150 திருத்தலங்களைச் சுற்றிவந்து 151-வதாகக் குமரிமுனை வரை உள்ள ஆலயங்களை அவர் தரிசித்தது மட்டுமன்றி, தனது தூரிகையில் தீட்டி மகிழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றியும் ஓர் அற்புதமான கவிதையும் எழுதி, பாண்டுரங்க தேவனுக்குப் பாமாலை சார்த்தி மகிழ்ந்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் கோயிலும் சரி, கேதார்நாத் ஜோதிர்லிங்கங்களும் சரி, கவிஞர் பெருமாள் ராசுவின் தூரிகையில் தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்கள், ஜோதிர்லிங்கம் என்று கவிஞரின் காலடி தீர்த்தாடனக் காவடி எடுத்திருக்கிறது. அவரது ஓவியத்தில் மயங்குவதா, கவிதைகளின் பக்தி ரசத்தில் மூழ்கித் திளைப்பதா என்று தெரியாமல் தத்தளிக்க வைத்திருக்கிறார் கவிஞர் பெருமாள் ராசு. இந்தப் பிரணவப் பிரவாகத்தில் காணும் புனிதக் கோயில்களும் பிற ஓவியங்களும் அப்பொழுதுக்கப்பொழுது வரைந்த அரிய அனுபவங்களே. நமது புனித மண்ணில் உள்ள ஆயிரமாயிரம் கோயில்களில் இதில் காண்பவை சிலவே. மேலும் உள்ளவற்றை தரிசிக்க இவை தூண்டலாம். இதில் காணும் எண்ணத் துகள்களும் அவற்றில் உள்ள 151 திருநாமங்களும் புதியன அல்ல. ஆனால் புதிய பரிமாணங்களில் உலகைக் காண உதவும். கவிஞர் பெருமாள் ராசுவின் மனது பேசியிருக்கிறது. அடடா! "இக்கவிதைகள் இறைவனை உணர உதவும் முகவரிகளே... இந்த முகவரிகளே இறைவன் அல்ல...' என்று அவர் கூறியிருப்பதை ஆமோதிப்பன அவர் கவித்துவமும் ஓவியத்திறமையும். பிரணவப் பிரவாகத்தில் முதல் கவிதை திருமலை திருப்பதியில் தொடங்குகிறது.""உலகாகி உலகத்தின் உயிராகி உணர்வாகி உயர்வாகி நின்ற உயர்வேபலவான பொருளாகிப் பகலாகி இரவாகி பண்பாகி நின்ற பண்பேகுலவுநல் குணமாகி அருளாகி அறிவாகி குருவாகி நின்ற குருவேநலமான உன்பாதக் கமலத்தில் எமைஏற்று அருள்பாண்டு ரங்க தேவா''*******பழைய புத்தகக் கடைகள் என்னைப் பொருத்தவரை அறிய பொக்கிஷங்கள். பெரிய பெரிய நூலகங்களில் நமது கண்களில் அகப்படாத பல புத்தகங்கள் பழைய பேப்பர் கடைகளில் எடைக்கு விலை பேசப்படும் அவலம் மனதை வேதனைப் படுத்துவது என்னவோ நிஜம். அதே நேரத்தில் ஏதோ ஒரு முட்டாள் அரிய பொக்கிஷத்தை அனாதையாகத் தூக்கி எறிய, அது நம்மிடம் கிடைத்துவிடுகிறதே என்கிற மகிழ்ச்சியும் நிஜம். இப்படித்தான் சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் ஒரு பழைய பேப்பர் கடையில் பொழுது போகாமல் அங்கிருந்த குப்பைகளிடையே ஏதாவது மாணிக்கம் கிடைக்காதா என்று சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தேன். தெருத்தெருவாக அலைந்து பழைய பேப்பர் வாங்கும் இளைஞன் அன்றைய குப்பையைக் கொண்டுவந்து கொட்டினான். அந்தப் பழைய பேப்பர்களுக்கு நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் "இலக்கிய மலர் 2007' என்னை காந்தமாக இழுத்தது. புத்தகம் தான் பழையது; அதில் இருக்கும் சில விஷயங்கள் இன்றைக்கும் புதியது. அம்பாசமுத்திரம் இரா.நவமணியும் மணப்பாறை ஆ.தமிழ்மணியும் "நாத்திகனும் வியக்கும் ஆத்திகம்' என்று தாயை வர்ணிக்கும் சென்னையைச் சேர்ந்த கவிஞர் சுராவும் தங்களது பங்களிப்பை இந்த மலருக்குத் தந்திருப்பது வியப்பை அதிகப்படுத்தியது. கோதையூர் மணியனை ஆசிரியராகக் கொண்டு செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிர்வாகக் குழுவினரின் உழைப்பும் ஆர்வமும் பக்கத்துக்கு பக்கம் பளிச்சிடுகிறது. ஆமாம், யார் இந்த கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் சூசன்? "செருப்பு' என்ற தலைப்பில் இந்த மலரில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். 2007-க்கான சிறந்த சிறுகதைக்கான பரிசை இலக்கியச் சிந்தனைக்காரர்கள் இந்தக் கதைக்கு அல்லவா கொடுத்திருக்க வேண்டும். மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தும் சூசனின் சிறுகதை எனது மனதை விட்டு அகல மறுக்கிறது. கோயில் வாசலில் உள்ள செருப்புக் கடையில் வேலை பார்ப்பவர்களின் மனநிலையும் அவர்களுக்கு இருக்கும் தொழில் ஆர்வமும், தனித்துவமும் திறமையும் எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும் என்கிற உண்மையை என்னமாய் படம் படித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் சூசன். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்ட வேண்டும் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட அற்புதமான சிறுகதை எழுத்தாளர்களை இருபது ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் கண்டு ஊக்குவித்த வார இதழ்கள் இப்போது சிறுகதைகளுக்கான இடத்தைச் சுருக்கிக் கொண்டுவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அவலம், நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புகள் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன. நல்லதொரு சிறுகதையைப் படித்த திருப்தி. சூசனுக்குப் பாராட்டுகள். பழைய பேப்பர் வாங்கும் இளைஞனுக்கு நன்றி!
தேற்றுவார் இல்லையே தோழி!
தினமணி


அழகான குளிர்காலத்து மாலைப்பொழுது. இல்லங்கள் தோறும் மைதீட்டிய கயல்விழியும், கனங்குழையும் கொண்ட பெண்டிர், மங்கல விளக்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த அருமையான மாலைப் பொழுதிலே ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் இரண்டு பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். இருவரில் ஒருத்தியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து அருவியென ஓடுகிறது. அவள் துக்கத்தால் துவண்டிருக்கிறாள். அவளுடைய நினைவு பின்னோக்கிச் சென்று கடந்த காலத்திற்குள் பிரவேசிக்கிறது. அவள் இளம் வயதினளாக இருந்தபோது அவளின் அழகு கண்டு மயங்கினான் ஒரு வாலிபன். அவளும் அவன் பார்வை பட்டதுமே மனம் சரிந்துபோனாள். இருவரும் காதல் கைவரப்பெற்றனர். அந்தப் பழக்கமே நாளுக்கு நாள் அவர்கள் இருவரையும் தனிமையில் சந்திக்கும் வழக்கமாயிற்று. நேரம் வாய்க்கும் போதெல்லாம் காதல் பயிரை வளர்ந்து வந்தனர். அவள் பருவப் பெண்ணானதன் காரணமாக அவளது பெற்றோர் அவளை வீட்டில் "காவல்' வைத்தனர். என்றாலும் அவர்களது சந்திப்புகள் தொடர்ந்தன. காதல் வயப்பட்டதன் காரணமாக தலைவியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்ட தாயார், அவளுக்கு கண்ணேறு (திருஷ்டி) கழித்தாள். தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த செவிலித்தாயோ அவளை அழைத்து பக்குவமாக அறிவுரை கூறினாள். அப்போதும் அவள் அவனைச் சந்திப்பதை நிறுத்தவில்லை. காதல் என்பது காட்டாற்று வெள்ளம் போல சீறிப்பாயும் தண்ணீர். அந்தத் தண்ணீருக்குத் தெரியுமா தான் சீறிப்பாயும் வழியில் எதிர்ப்படுவது யார் யார் என்று. காதல் இறைத்தன்மை வாய்ந்தது. தானாகவே உருவெடுக்கின்ற அதற்கு ஈடு இணையில்லாததோர் புதுச் சக்தி எங்கிருந்தோ பிறந்துவிடுகிறது. காதல் கொண்டோர் தம்மைப் பெற்றெடுத்தவர்களுக்குக்கூடப் பணிவதில்லை. அவ்வகையில் காதலே பெரிதென்று தலைமகனோடு தலைமகள் உடன்போக்கு சென்றுவிடுவாள். தலைவனோடு உடன்போக்கு வந்த பின்னர், கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வரும் வேளையில், உழைத்து பொருள் ஈட்டி அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தில் தன் மனம் கவர்ந்த அழகிக்கு புது அணி ஒன்று பூட்ட வேண்டும் என்ற ஆசை தலைவனுக்கு ஏற்படுகிறது. ஆனால் அவளைப் பிரிந்து செல்லவேண்டுமே என்ற தவிப்பு ஒரு பக்கம் பாடாய்ப்படுத்துகிறது. தோழியைத் தூதனுப்பி அவளைப் பிரியப் போவதற்கு சம்மதம் கேட்கிறான். அதன்பின் தானே சென்று பிரிவின் முக்கியத்துவத்தை அவளுக்கு எடுத்துக்கூறி விடைபெற்றும் சென்று விடுகிறான். ஆனால் இப்படிப் பிரிவது தலைவிக்கு முதல் அனுபவம். அதனால் அவனது பிரிவுத் துயரத்தைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள்; மனதாலும் உடலாலும் தளர்ந்து போகிறாள். எப்போதும் அவளது கண்கள் தலைவன் வரவுக்காக ஏங்கி, கண்ணீர் வடித்தபடி இருக்கின்றன. திடீரென தோழியின் குரல் கேட்டு பழைய நினைவிலிருந்து மீண்டு சுய நினைவுக்கு வருகிறாள் தலைவி. ""தலைவி! நீ இப்படி அழலாமா?'' என்று கேட்ட தோழி மீது தலைவிக்கு மிகுந்த கோபம் வருகிறது. அதைப் பொருட்படுத்தாமல் தோழி புத்திமதி கூறுகிறாள். ஒருவருக்கு ஒன்றை விளக்கிக் கூற வேண்டுமானால் பிறிதொன்றைக் காட்டி அறிவுறுத்துதல் என்பது உலக வழக்கு. இதைத் திருவள்ளுவர், ""உலகத்தோடு ஒட்ட ஒழுங்கல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்''(குறள்-140) என்கிறார். அவ்வகையில் தோழி, உலகைச் சுட்டிக்காட்டி அழும் தலைவிக்கு அறிவுறுத்துகிறாள். தலைவன் பிரிந்து சென்றதை எடுத்துக் கூறி ஆற்றுவிக்கிறாள். பிறகு, தலைவியை நோக்கி, ""நீ இவ்வாறு அழுவது கூடாது! உலகில் உள்ள சிறந்த மகளிரெல்லாரும் தங்கள் துணைவர் பிரிந்த காலத்தில் ஆற்றியிருப்பர்; இதுதான் மரபு. பிரிவை ஆற்றியிருப்பதுதான் மனைவிக்கு அழகு!'' என்று தோழி கூறியதுதான் தாமதம், தலைவன் பிரிவால் கலங்கியிருக்கும் தலைவிக்கு தோழி கூறும் புத்திமதி மேலும் சினமூட்டுகிறது. அதனால் கோபக்கனல் பொங்க தோழியைப் பார்த்து சீறுகிறாள். ""குளிர்ச்சியான மழைத்துளிகள் தூறுகின்றன. கனங்குழை கயல்விழி மாதர்கள் விளக்கேற்றுகின்றனர். இந்தத் துன்பமான மாலைப் பொழுதில், ""தலைவர் வந்தார்; விருந்து செய்து மகிழ்வாயாக!'' என்று சொல்லி என் கலங்கிய கண்ணீரைத் துடைப்பவர் யாரும் இல்லையே! அதற்கு மாறாக, தலைவரைப் பிரிந்த நீ உலக மாந்தர்களைப் போல ஆற்றியிருத்தலே அழகு'' என்று புத்தி சொல்ல வருகின்ற இரக்கமற்றவரே உள்ளனர். தலைவருடைய வரவு கூறி, விருந்து செய்யத் தூண்டுவாரை நான் பெறவில்லையே தோழி! அந்தோ! என்னைத் தேற்றுவார் இல்லையே தோழி!'' என்று மறைமுகமாக தனது தோழியைக் கடிந்துகொண்டு பழிக்கிறாள் தலைவி! வெளிநாட்டுக்குச் சென்ற காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல (நெடிதாகக்) கழியும் இதை,""ஒருநாள் எழுநாள்போல் செல்லும், சேண் சென்றார்வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு (குறள்-1270)'' என்கிறார் வள்ளுவர். மேலும், காதல்-காம இன்பம் கடல் போன்றது என்றால், அது பிரிவு காரணமாக வருத்தும்போது அப் பிரிவுத் துன்பம் கடலைவிடப் மிகமிகப் பெரியது என்பதை,""இன்பம் கடல்மற்றுக் காமம்; அஃதுஅடும்கால்துன்பம் அதனின் பெரிது''( குறள்-1166) என்கிறார். தலைவனின் பிரிவுத் துன்பம் உயிர்த் தோழியைக் கூட கடிந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இதைக் குறுந்தொகையில் பதிவு செய்திருக்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற புலவர். பாடல் வருமாறு:""தேற்றா மன்றே தோழி தண்ணெனத்தூற்றுந் துவலைந் துயர்கூர் காலை,கயலே ருண்கட் கனங்குழை மகளிர்கைபுனை யாக நெய்பெய்து மாட்டியசுடர்தூய ரெடுப்பும் புன்கண் மாலைஅரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்புமெய்ம்மலி யுவகையி னெழுதருகண்கலி முகுபனி யரக்கு வோரே''(குறு-398)மேற்கண்ட பாடல் வழி, தன்னைத் தேற்றுவார் இல்லையே தோழி என்று அரற்றுவது, உணர்ச்சியின் உச்சகட்ட நிலையாக உள்ளது. மேலும் மாலைப் பொழுதில் குலமகளிர் தங்களது இல்லங்களில் விளக்கேற்றும் மரபினையும் இப்பாடல் மூலம் அறியமுடிகிறது. இதனை, ""........ ....... மங்கையர்நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட (47-49)''என்று முல்லைப் பாடலிலும்,""மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்கோலங் கொடியிடையார் தாங்கொள்ள (4:19-20)'' என்று சிலப்பதிகாரமும்,""....... மகளிர்''கைபுனை யாக நெய்பெய்து மாட்டியசுடர்....... ........(398: 3-5)''என்று குறுந்தொகையும் இப்படி மாலைப்பொழுதில் மகளிர் விளக்கேற்றும் வழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன. வீடுகளில் விளக்கேற்றியதும் தம் காதலர்பால் நெஞ்சம் படர்கின்ற காரணத்தால், காதலியர்க்கு அந்திப்பொழுது துயர்கூரும் காலமாகக் காட்சி தருகிறதாம். தலைவனைப் பிரிந்த தலைவிக்கு, இனிய மாலைப்பொழுது துன்பப்பொழுதாகத் தோன்றுகிறது. அதனால்தான் ""புன்கண் மாலை'' எனத் தலைவி பழிப்பதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?.
தமிழிலக்கியத்தில்-"உயிரி நேயம்'
தினமணி


சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் தோன்றிய இலக்கிய மற்றும் நீதி நூல்கள் தமிழ் உலகிற்கு உணர்த்திய அறம் "உயிரி நேயம்' ஆகும். மனித நேயம் என்பது நாம் அறிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அது என்ன உயிரி நேயம்? மனிதர் மற்றொரு மனிதரிடம் காட்டும் அன்பு மற்றும் இரக்க உணர்வை மனிதநேயம் என்கிறோம். ஆனால், அதனினும் மேலாக மனிதரல்லாத பிற உயிரினங்கள் ஒன்று மற்றொன்றிடம் காட்டும் அன்பை அல்லது மனிதர் பிற உயிர்களிடம் காட்டுகிற அன்பை உயிரி நேய ஒழுக்கலாறாகத் தமிழ்ச் சமுதாயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்து வைத்துள்ளது. உயிரி நேயம், நம் முன்னோர்கள் உலகிற்கு அளித்துப் பின்னர் காலப்போக்கில் மறக்கப்பட்டு புதையுண்டு போன பண்பாட்டுப் புதையல் என்றால் அது மிகையன்று. அன்பு பாராட்டுதல், விட்டுக்கொடுத்தல் அருகிவர, எங்கும் எதிலும் சுயநலம், பொறுமையின்மை, தான் வாழப் பிறரை அழிக்கக் கிளம்பும் அரக்கத்தனம் எனத் தீமைகள் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளில், உயர்ந்த மனித நேயம் போதிக்கப்படவும், உன்னதமான உயிரி நேயம் சிந்திக்கப்படவும் வேண்டியுள்ளது. சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாறன் பொறையனார் என்ற புலவர், ஐந்திணை ஐம்பது என்ற நூலில் அற்புதமான பாடல் ஒன்றைத் தருகிறார். உலக இலக்கிய வரலாற்றில் காண முடியாத, உன்னதமான, நெஞ்சில் வைத்துப் போற்றக்கூடிய அரிய காட்சி சித்திரிப்பு இப்பாடல். நல்ல கோடை காலம், காட்டில் ஆணும் பெண்ணுமாக இரண்டு மான்கள், வெப்பம் தாங்கமாட்டாது நாவறட்சி காரணமாகத் தண்ணீர் தேடி அலைகின்றன. ஓரிடத்தில் வறண்டு போன சுனையில் சிறிதளவு நீர் இருப்பதைக் காண்கின்றன. ஆண் மான் பெண் மானைப் பார்த்து, ""நீ மெல்லினம், தாகம் தாங்க மாட்டாய், இந்த சிறிய நீரைப் பருகி உயிர்ப்பித்துக் கொள்!'' என்கிறது. பிணை மானோ, ""இல்லை இல்லை! நீ ஆண்; உயிர் வாழ வேண்டியவன், நீ பருகுவதே சாலச் சிறந்தது'' என்கிறது. மான்களிடையே வாக்குவாதம் தொடர்கிறதே ஒழிய நீரை அருந்தவில்லை. உடனே ஆண் மான் ஓர் உபாயம் சொல்கிறது. ""ஒன்று செய்வோம், இருவரும் ஒருசேர வாய் வைத்துப் பங்கிட்டுப் பருகுவோம்'' என்கிறது. அதற்குப் பெண் மானும் சம்மதிக்கிறது. ஆனால், என்ன ஆச்சரியம்? உறிஞ்சிக் குடித்தால் ஒரு நொடி கூட தங்காத நீர், இரண்டு மான்களும் வாய் வைத்தும் உள்ளது உள்ளபடி குறையாது இருந்தது. அங்கேதான் தமிழினம் சுட்டும் உயிரி நேயம் உவப்பத் தலைகூடுகிறது. பிணை மானை இணங்க வைக்கத் தானும் சுனை நீரைச் சேர்ந்து பருகுவதாகக் காட்டி கலைமான் நீரில் வாய் வைத்து உறிஞ்சுவது போல பாசாங்கு நாடகத்தை அரங்கேற்றி, பிணைமான் நீர் முழுவதும் பருகிக்கொள்ள இடம் கொடுக்கிறது. பிணை மானும் அதே பாசாங்கு நாடகத்தை அரங்கேற்றுவதன் மூலம் நீர் குறையாமல் உள்ளது. அன்பு, விட்டுக்கொடுத்தல், ஒத்து அறிதல் என்ற மனிதகுலம் காணமாட்டாத காதல் பெருவாழ்வை ஐந்தறிவே பெற்ற மான்களின் வாயிலாக மாறன் பொறையனார் உலகிற்கு வெளிப்படுத்திய விதம் அருமையிலும் அருமை அன்றோ! அப்பாடல் வருமாறு:"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்றெண்ணிப்பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமா தன்கள்ளத்தில் ஊச்சும் சுரமென்ப காதலர்உள்ளம் படர்ந்த நெறி'' இதில் "கலைமா தன் கள்ளத்தில் ஊச்சும்' என்ற சொற்றொடர் உலக இலக்கியங்கள் எட்ட முடியாத ஒப்புயர்வற்ற தமிழின் தரம் என்பதில் ஐயமில்லை. உறிஞ்சுவதாக நடிக்கும் அல்லது பாசாங்கு செய்யும் என்ற பொருளை உணர்த்தும் "ஊச்சும்' என்ற சொற்பிரயோகமே, இந்தப் பாடலை ஒரு தேர்ந்த கலைப் படைப்பாக ஆக்கியுள்ளது. சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் அடங்கிய கலித்தொகைப் பாடல் ஒன்றில், சேரமான் பெருங்கடுங்கோ என்ற புலவர், தலைவனின் பிரிவைத் தாங்கமாட்டாத தலைவியைத் தேற்ற, தோழியின் கூற்றாகக் "காட்டில் குட்டியானை கலக்கிய சிறிது நீரையும் பெண் யானைக்கு ஊட்டிய பின்பு மீதமிருப்பின் ஆண் யானை பருகும் அக்காட்சியை உன் தலைவன் காண்பான். உடனே உனது நினைவு வரும். ஆகவே அவன் உன்னை நாடி விரைவில் வருவான்; கவலையை விடு' என்பதாக,""துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு எனவும்உரைத்தனரே'' என்ற பாடல் மூலம் விலங்குகளிடம் உள்ள உயரிய உயிரி நேயம், தமிழ் இலக்கியத்தில் மேலும் பேசப்படுவதை அறியலாம். எது எப்படி இருப்பினும், கற்றதையும் பெற்றதையும் உரிய முறையில் வாழ்க்கையில் பயன்படுத்துகிற சமுதாயமே உலகின் உயரிய சமுதாயமாகப் போற்றப்படும் என்பது தெளிவு.