Tuesday, November 29, 2016

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

தலைப்பு-மாணவர் ஆற்றுப்படை-சி.இலக்குவனார் ; thalaippu_maanavar-aatrupadai

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

1/6

“இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும்
தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய்
வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல்
வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்”
எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே                          …5
“அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச்
சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்;
பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்;
முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில்
ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்!                        …10
கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை;
உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்;
செல்வரை நாடின் சினந்து துரத்துவர்;
மேடையில் அழகாய் விரிவுரை ஆற்றிடும்
மாந்தரை வேண்டின் மதிப்பதும் செய்திலர்.                         …15
பிறர்க்கென வாழ்வதாய்ப் பேசிடும் அவர்கள்
கையை விரித்து மெய்ந்நடுக் குற்று
இல்லை என்றே ஏசிக் கடிந்தனர்.
இரக்க நினைந்தே எவரிடம் செல்லினும்
ஏச்சும் பேச்சும் இரக்க உரையும்                                   …20
பெற்றனே அன்றி உற்றிலேன் பிறவே!
அரசினர் உதவி அடையும் தகுதி
உண்டெனக் கெனினும் ஒருகல் லூரியில்
சேர்ந்த பின்னரே சிலபல திங்கள்
கழிந்திட வேண்டும்; காசும் அற்றயான்                             …25
என்செய இயலும்? எங்கு நோக்கினும்
சாதியும் மதமும் சார்ந்த கல்லூரிகள்
பொருள்மிக உடையோர் புகும்கல் லூரிகள்
என்செய் கோயான்! எனக்குறு இடமிலை
கற்கும் திறனும் கருத்தும் இருந்தும்                               …30
வீணே திரிந்து வெந்துயர் அடையும்
எனக்குறு களைகண் எங்கும் கண்டிலேன்!”

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

– பேராசிரியர் சி.இலக்குவனார்

ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்
தலைப்பு-ஊக்கமதுகைவிடேல், பா.உலகநாதன் ; thalaippu_uukkamadhu_kaividel_ulaganathan-myanma

ஊக்கமது கைவிடேல்!

எல்லைகள் வேண்டா!
உன்மன வெளியில்
நிற்பாய் நடப்பாய்
சிறகுகள் விரிப்பாய்!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!
எதுவரை முடியும்
அதுவரை ஓடு
அதையும் கடந்து
சில அடி தாண்டு!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!
இலக்குகள் நிருணயி
பாதைகள் வடிவமை
தடைகளைத் தகர்த்தெறி
பயணங்கள் தொடங்கு!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!
காரிருள் என்பது
கருக்கல் வரைக்கும்
விடியலில் ஒளியின்
கதவுகள் திறக்கும்
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!
காலங்கள் மாறும்
வருடங்கள் ஓடும் – உன்
கனவுகள் ஒருநாள்
நிச்சயம் நிறைவேறும்!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!
ஒளியாய் நீயே
இருளைக் கிழித்து
கதிராய் எழுந்து
வெளியே வருவாய்!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!
[15.10.2016, சனிக்கிழமை அன்று, தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் (மியான்மா), இனிய நந்தவனம் அறக்கட்டளை (தமிழ்நாடு) இணைந்து யாங்கோன் ஓர்ச்சிட்டு உணவகத்தில் நிகழ்த்திய இலக்கியப் பெருவிழாவில் பாடிய கவிதை வரிகள்]
இனிய தமிழுடன்
– பா.உலோகநாதன்
மாணவன்

தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம்
யாங்கோன், மியான்மா.
கவிதைத்தாள்,ஊக்கமது கவைிடேல், பா.உலகநாதன் ; uukkamadhukaivedel_loganathan

அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை
தலைப்பு-அறம்செய விரும்பு-ஞா.மணிமேகலை ; thalaippu_aramseya_virumbu_manimegalai_myanma

அறம் செய விரும்பு!

வாகை சூடி வரவேற்று, வந்த
விருந்தினர் மகிழ வகை செய்து
பணிவுடன் அன்பும் காட்டுந் திறம்
பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்!
ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம்
ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம்
கொல்லா நெறியும் வாய்மையும் அறம்
கோபம் வென்ற சாந்தம் அறம்!
தன்னல மில்லாத் தியாகம் அறம்
தாய், தந்தையரைப் பேணுதல் அறம்
பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம்.
பேதம் இல்லா சமுதாயமே அறம்!
அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம்
அறத்தின் சிறப்பே அன்ன சத்திரம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம்
அக்கினி மதுரைச் சிலம்பின் சீற்றம்!
இனியவை கூறி இடர்தீர்த்தல் அறம்
ஈதல் இசைபட வாழ்தல் அறம்
இல்வாழ்வை இயல்பொடு அமைத்தல் அறம்
எதிர்பார்ப் பில்லாக் கடமையே அறம்!
இம்மையும் மறுமையும் ஈடின்றி வாழ
இன்னாப் பிறப்பை இனியதாய் மாற்றும்
பேரின்பம் அளிக்கும் பெரும்புகழ் சேர்க்கு மறம்.
ஆதலால் மனமே! அறம் செய விரும்பு!
[15.10.2016, சனிக்கிழமை அன்று, தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் (மியான்மா), இனிய நந்தவனம் அறக்கட்டளை (தமிழ்நாடு) இணைந்து யாங்கோன் ஓர்ச்சிட்டு உணவகத்தில் நிகழ்த்திய இலக்கியப் பெருவிழாவில் பாடிய கவிதை வரிகள்]
– ஞா.மணிமேகலை
தமிழாசிரியை
தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம்
யாங்கோன், மியான்மா
கவிதைத்தாள்-அறம்செயவிரும்பு-ஞா.மணிமேகலை ; aramseya_virumbu_manonmani