Saturday, October 19, 2013

தாகூரின் காதலி (அன்றைய 'முதல் மரியாதை')

தாகூரின் காதலி

Comment   ·   print   ·   T+  
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சுனில் கங்கோபாத்தியாய் மறைந்தார். 'நவீன வங்காள மொழியின் புதிய சுரணையுணர்வை முன் வைத்தவர் என்று பாராட்டப்பட்டவர் சுனில். அவரது வாழ்க்கையும் படைப்புகளும் எப்போதும் சர்ச்சைகளின் மையப் புள்ளிகளாக இருந்தன. உயிருடன் இருந்தபோது இருந்த சர்ச்சைகள் அவரது இறப்பிலும் தொடர்ந்தன. தனது இறப்புக்குப் பின்னர் எந்தச் சடங்குகளும் கூடாது என்று முன்னர் அறிவித்திருந்தபடியே அவரது உடல் எரியூட்டப்பட்டது. வெளித் தோற்றத்தில் புதுமை விரும்பிகளும் அடிமனத்தில் மரபுக் காவலர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை வங்காளிகள் நடுவே அதுவும் சர்ச்சைக்கிடமானது.
சுனில் கங்கோபாத்தியாவைக் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருந்த நாவல் ' ரானு ஓ பானு'. கடவுளரை விமர்சனம் செய்யும் நாவலைப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருந்த வங்காளிகள் கடவுளை விட மிகுந்த பக்தியுடன் ஆராதனை செய்யும் தங்கள் மகா கவியைப் பற்றிய நாவலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள். நாவலின் மையப் பாத்திரம் மகா கவி ரவீந்திர நாத தாகூர். தலைப்பே தாகூர் பக்தர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகா கவியை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவலின் தலைப்பு ' பானு ஓ ரானு' என்றுதான் இருக்க வேண்டும். சுனில் கங்கோபாத்தியாய் வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்ணின் பெயரை முதலில் வைத்திருக்கிறார். இது குருதேவரை அவமதிப்பது என்று சீறினார்கள்.
ஆனால், ரானு என்பது ஒரு சாதாரணப் பெண்ணின் பெயர் அல்ல. தாகூருக்கிருந்த எண்ணிறந்த தோழிகளில் ஒருவரின் பெயர். பிற பெண்களின் அடையாளத்தையும் பூர்வ கதையையும் கவிஞரின் எழுத்துகளிலிருந்து ஊகிக்க முடியும். நிரூபிக்கவும் முடியும். ரானுவின் பெயரை ஊகிப்பது சிரமம். ரானு தனது பத்தாவது வயதில் அறுபது வயதான தாகூரை முதல் முதலாகச் சந்திக்கிறாள். கவிதை ஆர்வம் ததும்ப நடமாடும் அந்த வெகுளிச் சிறுமி அவரைக் கவர்கிறாள். அந்தச் சந்திப்புக்குச் சிறிது காலம் முன்பு காலமான தனது மகள் மாதுரிலதாவின் பிரதிபலிப்பாகவே ரானுவைக் காண்கிறார். தொடர்ந்து தனது அன்புக்குரியவர்கள் மறைந்து போனதாலும் விலகிப் போனதாலும் மனதுக்குள் காயங்களைத் தாங்கிக்கொண்டு தாகூர் வாழ்ந்த நாட்கள் அவை. பகிரங்கப்படுத்த முடியாத தனிமை உணர்வில் திணறிக்கொண்டிருந்தவரை அவளுடைய அண்மை ஆறுதல்படுத்துகிறது. அவளுடைய இலக்கிய ஆர்வம் வியப்படையச் செய்கிறது. அவள் தன்மீது கொண்டிருக்கும் மரியாதை பரவசமளிக்கிறது. சாந்தி நிகேதனில் தன்னுடன் வசிக்கும் ரானு சொந்த ஊரான பெனாரசுக்குத் திரும்பி எழுதும் கடிதங்கள் அவரைக் குதூகலப்படுத்துகின்றன.
தான் இழந்த இளமையை அவள் மூலம் திரும்ப அடைகிறார். சிறுமியாக அவளிடம் தோன்றிய வாஞ்சை அவள் பருவமடைந்த பின்னர் ஏதோ ஒரு கணத்தில் காதலாக மாறுகிறது. ரானுவுக்கும் அப்படியே. உலகம் போற்றும் மகா கவிஞன் தனது புன்னகையில் மெல்லிய ஒளியில் பிறர் கண்ணுக்குத் தென்படாத சுடர் விடுவதைப் புரிந்துகொள்கிறாள். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 'கவிஞனுக்கும் தேவதை'க்கும் இடையிலான நெருக்கம் நீள்கிறது. மிகப் பெரும் செல்வந்தரும் தாகூரின் புரவலருமான சர். பிரேன் முகர்ஜியின் மனைவியாகிறாள் ரானு. இருவரிடையே நிலவிய நெருக்கம் மறைகிறது. அந்த மறைவுடன் நாவல் முற்றுப் பெறுகிறது.
தனது நாடகமொன்றின் மையப் பாத்திரத்துக்குத் தாகூர் சூட்டிய பெயர் 'பானு சிம்மன்'. அந்தப் பெயரின் சுருக்கமான 'பானு'தான் தலைப்பில் தாகூரின் பெயராகக் குறிப்பிடப் படுகிறது.
சுனில் கங்கோபாத்யாயா தாகூரின் அறியப்படாத காதலைக் கண்டெடுத்திருப்பது கற்பனையிலிருந்தல்ல; உண்மையிலிருந்து. கையெழுத்துப் பிரதியாகத் திருமதி ரானு முகர்ஜி வைத்திருந்த தன் வரலாற்றிலிருந்துதான். அந்த வரலாற்றில் இரண்டு மனங்களின் காதல் மட்டுமல்ல; அவர்கள் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளும் பதிவாகியிருக்கின்றன. சுனில் கங்கோபாத்தியாய் நாவலின் கதையோட்டத்துக்குக் கொடுத்திருக்கும் அதே முக்கியத்துவத்தை உண்மை நிகழ்வுகளை இணைப்பதில் அளித்திருக்கிறார். உணர்ச்சிகரமான வாசிப்புக்குரிய நாவலைப் படித்து முடிக்கும்போது எல்லா உயிர்களின் துடிப்புகளையும் தன் வாயிலாக வெளிப்படுத்திய பெருங் கவிஞர் மாற்ற முடியாத தனிமையில் அமர்ந்திருப்பதையும் அவரைத் தழுவிக்கொள்ள வாசகனின் கை நீளுவதையும் பார்க்கலாம்.
'ரானு ஓ பானு' ( வங்க நாவல் ) 2004
சுனில் கங்கோபாத்யாயா
ஆங்கிலத்தில் : ஷீலா சென்குப்தா
வெளியீடு; ஸ்ருஷ்டி பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், நியூ டெல்லி

Sunday, October 13, 2013

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா - 2

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா - 2

ஓருவன் வயிறு முட்ட உண்கிறான்; உள்ளவற்றையெல்லாம் - வைத்தவற்றை எல்லாம் - பிறருக்கும் வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல் உண்கிறான். அவன் உண்டு போனபின் "அமுக்கு அமுக்கு' என்று அமுக்கிவிட்டான்! பானை, சட்டி எல்லாம் காலி! அவனுக்கென்ன, வயிறு அண்டா குண்டாவா? தாழிப்பானையா?' எனப் பொறுமுகின்றனர். மூக்கில் விரல் வைத்து நோக்குகின்றனர்! அம்மில் இருந்து வயிறு முட்ட உண்ணல் அமுக்குதலுக்கு ஆகிவிட்டது. "அமுக்கு அமுக்கு' என அமுக்கி விட்டான் என்று கூறுகின்றனர்.
அமுக்குதல் விரிந்தது; ஓடு, தகரக் கூரைகளுக்கும், தாள், தட்டை வைக்கோல் போர்களுக்கும் அமுக்கு வைத்தல், அமுக்குப் போடுதல் உண்டு! கரவானவனை "அமுக்கடிக்காரன்' என்பதும் மக்கள் வழக்கு.
சட்டையில் பொத்தல் இட்டு அதனைப் பொத்தி மூடப் "பொத்தான்' வைத்தல் தையல்கடை வேலை. பொத்தான் வகையுள் அமுக்குப் பொத்தான் என்பது ஒன்று. சட்டையைப் பொத்தல் இடாமல் சட்டைமேல் வைத்துத் தைத்து, அதன்மேல் அமுக்கி மூடுமாறு மூடு பகுதியை ஒரு பக்கத்தில் வைப்பது அமுக்குப் பொத்தான் எனப்படும். அமுக்கு என்பது ஏவல்! கால் கை முதலியவற்றில் எண்ணெய் தேய்த்தல், தலையில் எண்ணெய் தேய்த்தல், முதுகு தேய்த்தல் ஆகியவற்றில் அமுக்கித் தேய்த்தலும், அமுக்கித் தேய்க்க ஏவுதலும் மக்கள் வழக்கு!
சொன்ன சொல்லைக் கேளாமல் தட்டிக் கழிப்பாரையும், எதிரிட்டுப் பேசுவாரையும், ""உன்னை ஓர் அமுக்கு அமுக்கினால்தான் சரிப்பட்டு வருவாய்'' என்பார் உளர்.
இசையரங்கில் பாடத் தொடங்குவோர் "அம்' என்று தொடங்கி மெல்லென ஒலித்து மேல் மேல் செல்லல் வழக்கம். ""அம் எனும் முன் ஆயிரம் பாட்டுப் பாடுவேன்'' என்பது புலவர் தருக்கு மொழி. அவ்வளவு விரைந்து பாடவல்லாராம் அவர்.
குழந்தை தந்த "அம்' என்னும் ஒலி பொதுமக்களுக்கும், புலமையாளர்க்கும் மேலும் சுவையூட்டி வளர்ந்தமை வியப்பாகும்! அம்மா, அம்மை என்பன, எம் அம்மை, எம்மை (தன்மை);
நும் அம்மை, நும்மை (முன்னிலை);
அவன் அம்மை, தம் அம்மை, தம்மை (படர்க்கை) ஆயது! அம் ஆகிய மெல்லினம் (ம்) "அன்' ஆகியது.
அன்னை, அன்னா, அன்னாய், அன்னே என விரிந்தது. ""அன்னே உன்னை அல்லால் ஆரை நினைக்கேனே'', ""அடித்த போதும் அன்னா என்னும் குழவி போல'' எனப் புலமையாளர்களிடம் கிளர்ந்தது. அன்னை, அன்னா - இறைமைப் பொருள் தந்த வகை இது.
அம் ஆகிய மெல்லினம் "ஞ்' ஆகத் திரிந்தது! அஞ்ஞை, அஞ்ஞா, அஞ்ஞே என விரிந்தது. இவையும் அன்னை, என்னை, நின்னை, நுன்னை, தன்னை எனவும் அஞ்ஞை, எஞ்ஞை, நஞ்ஞை, நுஞ்ஞை எனவும் பெருகியது. "அஞ்ஞை நீ ஏங்கி அழல்' என்பது சிலம்பு. அஞ்ஞை மக்கள் வழக்கில் இன்றும் கேட்கலாம். "அம்' மேலும் விரிந்ததைக் காண்போம்.
தொடர்வோம்...

நற்றிணையில் நட்புநெறி!

நற்றிணையில் நட்புநெறி!

சங்க காலத்தில் கணவன் - மனைவிக்கிடையே விளங்கிய உயர்வான காதலும் நட்பு எனச் சிறப்பித்துச் சொல்லப்பட்டது.

""உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு'' (1122)

என வரும் இக்குறள் காதலை "நட்பு' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் காதலின் முதிர்ச்சியாக, காதலைவிட ஒருபடி உயர்ந்ததாக நட்பு விளங்குகிறது என்பதை அறியமுடிகிறது.
நற்றிணைப் பாடல் ஒன்று, ஒரு நம்பியும், ஒரு நங்கையும் நன்னலம் வாய்ந்த இந்த உன்னத உறவால் இணையும் உயர்வை உணர்த்துகிறது. ஒரு பெண் மீது ஓர் இளைஞன் காதல் கொள்கிறான். தன் காதலை அப்பெண்ணின் தோழியின் மூலம் சொல்ல முயற்சி செய்கிறான். தோழி அப்பெண்ணிடம் சொல்கிறாள்.
"ஒரு மலை உள்ளது. அம்மலை கண்ணபிரான் போன்று தோன்றுகிறது. அம்மலைக்குப் பக்கத்தில் அருவி வீழ்கிற; அது பலராமன் போன்று தோன்றுகிறது. அம்மலைக்கு உரிய தலைவன் உன்னை நேசிக்கிறான். அவன் உன் அன்பை வேண்டிப் பெரிதும் வருந்துகிறான். இது நான் நன்கறிந்த உண்மை. இதை நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், இன்னும் இதில் உனக்குத் தெளிவு ஏற்படவில்லை. அதனால், நீ ஒன்று செய்யலாம். இத் தலைவனின் அன்பை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பதைப் பற்றி நீ உன்னளவில் சிந்தித்துப் பார். உன்னுடைய பிற தோழியரிடமும் கலந்து விவாதித்துப்பார்.
ஒருவருடன் நட்பு கொள்ளவேண்டும் எனில், அவரைப் பற்றி அறிவால் ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்பே நட்பு கொள்ள வேண்டும். பெரியோர்கள் ஒருவரைப் பற்றி ஆராயாமல் நட்பு கொள்ள மாட்டார்கள். நட்பு கொண்டபின் அவருடைய பண்பு நலன்களை ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதில் நன்மையும் இல்லை' என்பது தோழியின் கூற்று.
ஒரு பெண், ஓர் இளைஞனைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, காதலனாக அல்லாமல் நண்பனாகத் தேர்ந்து கொள்வதே சிறப்பு. அதுவே பிரிதல் இல்லாத இல்லறத்தைத் தரும். இது ஒரு வாழ்வியல் உண்மை. இதையே இக்கூற்றில் தோழி உணர்த்துகிறாள். பாடல் இதுதான்:

""மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பதுஓர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே!''
(நற்.32)

நட்பு கொள்வதில் மூன்று நிலைகள் உள்ளன. பேசிப் பழகும் தோழமை; உள்ளத்தாலும் உடலாலும் இணையும் காதல்; உள்ளத்தாலும் உயிராலும் ஒன்றிவிடும் நட்பு. கணவன் - மனைவிக்கு இடையே இத்தகைய நட்பு வாய்க்குமானால் அதைவிட வேறென்ன வேண்டும்? இல்லறத் துணையைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய இளையோர் சமுதாயம் இதைக் கருத்தில் கொண்டால், இல்லறம் நல்லறமாக அமையும்!

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்
 உலகத்தில் உள்ள கண்டங்களும் அங்குள்ள மக்களும் குமரிக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்ததைக் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கூற்று மெய்ப்பிக்கிறது.
சீனாவில் கன்பூசியஸ் தொகுத்த 306 பாடல்களைக்கொண்ட "பழஞ்சீனக் கவித்தொகை' நூல்தான் முதல் நூலாகும். இத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் சங்க மரபைப் பின்பற்றி அமைந்துள்ளன. அவற்றில் இரு பாடல்களைக்
காண்போம்.

""எந்தன் தலைவன் பெரும்தீரன்
நாட்டின் படையில் ஒருவீரன்
எந்தன் தலைவன் வேலேந்தி
மன்னர் ரதத்தின் முன்தேரில்
தலைவன் கிழக்கே போனது முதலே
தலையும் புதரென ஆகிப்போனேன்.
கழுநீர் இல்லா நிலையா? இல்லை
வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை''
(பயணி, வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, ப.80)

இப்பழஞ்சீனக் கவிதை தனித்திருக்கும் மனைவியைப் பற்றியது. கணவன் போர்க்களம் சென்றுவிட்டதால், மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமலும், நீரில் அலசாமலும், பூச்சூடாமலும் தலை புதர்போல் காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறது. இதைப்போன்று வையாவிக் கோப்பெரும்பேகனைப் பிரிந்து தனித்திருந்த அவனுடைய மனைவி கண்ணகியின் நிலைமையை, புறநானூற்றுப் பாடல் (147) வழி அறிகிறோம். புறநூனூற்றுப் பாடலும் பழஞ்சீனக் கவிதையும் ஒத்த சூழலையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன.

""சென்றான் தலைவன் பணி நிமித்தம்
திரும்பும் நேரமோ தெரியவில்லையே
கோழிகள் கூட்டுக்கு மீள்கின்றன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆடுமாடுகள் இறங்கி வருகின்றன
அவன் நினைவைத் தவிர்க்க முடியுமோ?
...... ...... ...... ...... ...... ... ... ...
நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?''
(பயணி, வாரி.பா. ப.84)

இப்பாடல் நற்றிணை (69) சேகம்பூதனாரின் ""பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி'' எனும் தலைவி கூற்றுப் பாடலையொத்திருக்கிறது. காலையில் கதிரவன் தன் கதிரைப் பரப்பி, மாலையில் மறைகிறது. அப்பொழுது பறவைகள் தம் கூட்டை அடைகின்றன. காட்டில் ஆண் மான், பெண் மானைத் தழுவி நிற்கிறது. முல்லை மலர் பூத்துக் குலுங்குகிறது. காந்தள் புதரில் விளக்குப் போல் மலர்ந்திருக்கிறது. காளையும், பசுவும் ஒன்றோடு ஒன்று தழுவி, எழுந்த மணியோசை கோவலர் இசைக்கும் குழலோசையோடு இழைந்து குழைந்தது. இத்தகைய சூழல் நம் தலைவர் சென்ற ஊரிலும் ஏற்பட்டிருந்தால், தலைவன் கண்டிப்பாகத் திரும்பி வந்திருப்பார். ஆனால், மேற்குறிப்பிட்ட கார்கால நிகழ்வுகள் அங்கு ஏற்படவில்லை போலும் என்கிறாள் தலைவி.
சங்க இலக்கியக் கருத்துகள், பல பழஞ்சீனக் கவிதைகளில் இடம்பெற்றிருப்பது தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை மெய்ப்பிக்கிறது.

Wednesday, October 9, 2013

டோட்டோ பள்ளிக்குப் போனபோது

டோட்டோ பள்ளிக்குப் போனபோது...

தொகுப்பு: ஆதி வள்ளியப்பன்
தமிழ்இந்து Comment   ·   print   ·   T+  
டோட்டோ - சானை உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை, டோட்டோவின் கதையைக் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு அவளைப் பிடிக்கும். ஏனென்றால், உங்களைப் போல என்னைப் போல நிறைய குறும்புகளைச் செய்த சேட்டைக்காரக் குழந்தை அவள்.
சுட்டிப்பெண் டோட்டோ - சான் ஒரு பள்ளியிலிருந்து விலக்கப்பட்டு சமீபத்தில்தான் புதிய பள்ளியில் சேர்ந்திருந்தாள், ஆனால் அந்த புதிய பள்ளியிலிருந்தும் அவளை வெளியேறச் சொல்லிவிட்டார்கள். இது அவள் அம்மாவுக்கு வருத்தம் தந்தது. முதல் வகுப்பிலேயே அவள் பல முறை வெளியேற்றப்பட்டுவிட்டாள்.
ஒரு வாரத்துக்கு முன் டோட்டோவின் கிளாஸ் டீச்சர், டோட்டோவின் அம்மாவை அழைத்திருந்தார். டோட்டோவின் அம்மாவிடம் டீச்சர் சொன்ன முதல் வாக்கியமே, "உங்கள் மகள் மொத்த கிளாஸையும் கெடுக்கிறாள். தயவுசெய்து அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இனிமேல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று டீச்சர் பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னாள்.
டோட்டோவின் அம்மா இதைக் கேட்டு திடுக்கிட்டாள். மொத்த கிளாஸையே இடையூறு செய்யும் அளவுக்கு டோட்டோ அப்படி என்ன செய்தாள் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.
"தன் டெஸ்க்கை பல நூறு முறை அவள் திறந்து மூடுகிறாள். எதையாவது வைக்க வேண்டும், அல்லது எடுக்க வேண்டும் என்றால்தான் டெஸ்க் டிராவைத் திறக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். உங்கள் மகள் இதை நன்றாகப் பிடித்துக் கொண்டுவிட்டாள். அவளது நோட்டுப்புத்தகம், பென்சில் பாக்ஸ், பாடப்புத்தகம், அப்புறம் டெஸ்கில் வேறு என்ன இருக்கின்றனவோ, அவற்றை வெளியே எடுக்கிறாள். அல்லது எதையாவது உள்ளே வைக்கிறாள். ஒரு எழுத்தை எழுதி முடிப்பதற்குள் மேற்கண்ட பொருள்களை ஒவ்வொன்றாக உள்ளே வைத்துவிட்டு, அடுத்த எழுத்தை எழுவதற்கு மீண்டும் எல்லாவற்றையும் வெளியே எடுப்பாள். இவை எல்லாவற்றையும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் அவள் செய்வாள். இதெல்லாமே தலையைச் சுற்ற வைக்கும். ஆனால், இதற்காக அவளை நான் திட்ட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு முறை டெஸ்க் மேற்பகுதியை அவள் திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணம் இருக்கும்."
இதைச் சொன்னபோது அந்த டீச்சரின் கண் இமைகள் படபடவென இமைத்தன.
இதைக் கேட்டவுடன் டோட்டோவின் அம்மாவுக்கு, டோட்டோ ஏன் டெஸ்க் மேற்பகுதியை அடிக்கடி திறந்து மூடுகிறாள் என்பதற்கான காரணம் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. இந்த புதிய பள்ளியில் இருந்து டோட்டோ முதல் நாள் வீடு திரும்பியதும் எவ்வளவு குதூகலமாக இருந்தாள் தெரியுமா?
"இந்த ஸ்கூல் ரொம்ப நல்லாயிருக்கு. வீட்டில் உள்ள உன் மேஜை டிராயரை நீ இழுப்பியே, அதில் வெறும் டிராயர் மட்டும்தான் இருக்கு. ஆனா... ஸ்கூலில் உள்ள டெஸ்க்கின் மேல் பகுதியை அப்படியே தூக்கிவிடலாம்... அந்த டெஸ்க் ஒரு பெட்டி மாதிரி இருக்கும். அதில் எல்லா பொருளையும் வைத்துக்கொள்ள முடியும். அது எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா?" என்று டோட்டோ சொன்னது அவள் அம்மாவுக்கு ஞாபகம் வந்தது.
புதிய டெஸ்கின் மேல் பகுதியை டோட்டோ சந்தோஷமாகத் திறந்து மூடிய காட்சி அம்மாவின் மனதுக்குள் ஓடியது. டெஸ்கின் மேற்பகுதியைத் திறந்து மூடுவது அப்படியொன்றும் பெரிய குறும்புத்தனமாக அம்மாவுக்குத் தோன்றவில்லை. அப்படிச் செய்து பார்ப்பதில் உள்ள புதுமை சலித்துப் போனவுடன், இப்படிச் செய்வதை டோட்டோ விட்டுவிடலாம் என்றே அம்மாவுக்குத் தோன்றியது.
அதே நேரம், "இது மட்டும் என்றால்கூட, நான் இவ்வளவு பெரிசு படுத்தியிருக்க மாட்டேன். டெஸ்கை மூடித் திறக்கும் நேரம் போக, கிளாஸ் நடக்கும் மற்ற எல்லா நேரமும் டோட்டோ நின்றுகொண்டே இருப்பாள்," என்றாள் அந்த டீச்சர்.
"எழுந்து நிற்கிறாளா, எங்கே?" என்று அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். "ஜன்னலில்தான். அப்பொழுதுதானே தெருவில் இருக்கும் இசைக்கலைஞர்களைக் கூப்பிட முடியும்?" - அந்த டீச்சர் கிட்டத்தட்ட அலறினாள்.
அதன் பிறகு டீச்சர் சொன்ன கதை இதுதான்: கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு டெஸ்கின் மேல் பகுதியைத் திறந்து மூடிய பிறகு, டோட்டோ ஜன்னலருகே நின்று தெருவை வேடிக்கை பார்ப்பாள். சரி, டெஸ்கைத் திறந்து மூடி சத்தம் போடாதவரை நல்லது என்று நான் நினைக்கும்போது, வெளியே அலங்காரமாக ஆடை அணிந்து நடந்து செல்லும் தெரு இசைக்கலைஞர்களை டோட்டோ திடீரெனக் கத்திக் கூப்பிடுவாள்.
எங்களது கிளாஸ் தெருவுக்குப் பக்கத்தில் இருப்பதால், தெருவில் போகிறவர்களிடம் ஜன்னல் வழியே பேச முடியும். டோட்டோ கூப்பிட்டவுடன் இசைக்கலைஞர்கள் ஜன்னலுக்கு அருகே நின்றுவிடுவார்கள். "அதோ அவர்கள் வந்துவிட்டார்கள்," என்று டோட்டோ சப்தமாகக் கத்துவாள். உடனே, கிளாஸில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஜன்னலருகே குழுமிவிடுவார்கள்.
"எங்களுக்கு வாசித்துக் காட்டுங்கள்" என்று டோட்டோ சொன்னவுடன், ஒரு கச்சேரி நடக்கும். அது முடியும்வரை நான் கிளாஸ் எடுப்பதை நிறுத்திவிட்டு பேசாமல் நிற்பேன். அவர்கள் போன பின், எல்லாக் குழந்தைகளும் தங்கள் டெஸ்குக்குத் திரும்பிவிடுவார்கள்.
ஆனால், டோட்டோ மட்டும் ஜன்னல் அருகேயே நின்றுகொண்டு, "இன்னொரு இசைக்குழு இந்த வழியே வரலாம். அவர்களை நாம் கவனிக்கத் தவறிவிட்டால், அவமானம் இல்லையா?" என்று டோட்டோ பதில் சொல்லுவாள்.
"இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இது கிளாஸுக்கு எவ்வளவு பெரிய தொந்தரவு" என்று டீச்சர் உணர்ச்சி பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
"டோட்டோ வேறு என்ன செய்தாள்?" என்று அம்மா கேட்க,
"வேறு என்ன செய்யவில்லை?" என்று டீச்சர் உரக்கக் கத்தினாள். இப்படியாக டோட்டோ, அந்தப் பள்ளியில் இருந்தும் வெளியேற்றப்பட்டாள்.
இது போன்ற சம்பவங்கள் காரணமாக டோட்டோவுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவளுடைய அம்மா நினைத்தாள். அது மட்டுமில்லாமல், தனது சின்னக் குழந்தையைப் புரிந்துகொள்ளும் பள்ளியை டோட்டோவின் அம்மா தேடிக் கண்டுபிடித்தார். அந்தப் பள்ளிதான் டோமாயி. அந்தப் பள்ளியை நடத்தியவர் கோபயாஷி.
டோமாயி பள்ளியில் காலி ரயில் பெட்டிகள்தான் கிளாஸ் ரூம். கிளாஸ்ரூமே இவ்வளவு சுவாரசியமாக இருக்கும் அந்த ஸ்கூலில் பாடங்களோ, பரீட்சைகளோ, அடியோ, திட்டோ கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் எந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறதோ, அதை அவர்களுக்கு உரிய வேகத்தில் கற்றுத் தரும் பள்ளிதான் டோமாயி.
டோட்டோவின் உண்மைப் பெயர் டெட்சுகோ குரோயாநாகி. அவள் பெரியவள் ஆனவுடன் உலகப் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ணத் தூதராகவும் ஆனார். அதற்கு டோமாயி பள்ளியும், அதை நடத்திய கோபயாஷியும்தான் முக்கியக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தையும் "டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற பெயரில் அவர் புத்தகமாக எழுதியுள்ளார். அது வெளியான இரண்டு வருடத்தில் ஜப்பானிய மொழியில் 50 லட்சம் பிரதிகள் விற்றது. உலகப் புகழ்பெற்ற இந்தப் புத்தகம் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
டோட்டோ படித்த டோமாயி பள்ளியைப் போன்ற ஒரு ஸ்கூல் நமக்கும் இருந்தால், நிச்சயம் ஜாலியாக இருக்கும், இல்லையா?

Saturday, October 5, 2013

"சே''

"சே''

First Published : 06 October 2013 01:57 AM IST
தனியொரு எழுத்தும் தகுதியான பொருள் தரும் தன்மை தமிழுக்கே உரிய தனி அடையாளம்.
"சே' என்பது தனித்த ஓர் உயிர்மெய் எழுத்து. இந்த எழுத்தைச் "ச்சே' என உச்சரிக்கக்கூடாது. சேய்மை, சேவல், சேமிப்பு என்னும் சொற்களின் முதலெழுத்தை ஒலிப்பதைப்போல ஒலிக்க வேண்டும்.
"சே' எனும் ஓரெழுத்து மொழியானது, அழிஞ்சின் மரம், இடபராசி, உயர்வு, எருது, ஒலிக்குறிப்பு எனப் பல்வேறு பொருள் தருகிறது. இவற்றுள் "சே' என்னும் எழுத்துக்குரிய "எருது' உழவுத் தொழிலோடு தொடர்புடையது. உழவுத் தொழிலுக்கான அனைத்துப் பணிகளிலும் "எருது' முதன்மை பெற்றுள்ளது. உழவர்கள் தம் நிலங்களில் கலப்பைப் பூட்டி எருதின் துணையோடு ஏர் உழுவார்கள். உழும்போது கலப்பையின் கொழு, நிலத்தை நேரே கிழித்துக்கொண்டு செல்ல வேண்டும். சில வேளைகளில் எருதின் கவனக்குறைவால் அக்கம் பக்கம் கொழுமுனையின் போக்கு மாறும். அதைச் சரிசெய்யும் உழவன், எருதினைச் சரி செய்வான். எருதினை ஒழுங்குபடுத்த எருதுகளை நோக்கி ""சே'' ""சே'' ""சே'' என ஒலி கொடுப்பான். எருதுகள் புரிந்துகொள்ளும்; ஏர் நேர்படும். எனவேதான் எருதைக் குறிக்கும் "சே' என்னும் சொல்லை உழவன் ஒலிக்குறிப்பாக்கி மகிழ்கிறான்.
கருக்கொண்ட பசு கன்று ஈனும். பசு ஈன்றது ஆண் கன்றாக இருப்பின் "சே'ங்கன்று (சே+கன்று=சேங்கன்று) என்பார்கள். பெண் கன்றாக இருப்பின் "கெடேரி' என அழைப்பர். "சே' என்பது எருது; கன்று என்பது பசுவின் இளமைப் (தொல்) பெயர். சே - சேறு - சோறு என்று விரிந்தது தமிழ்மொழியின் வளர்ச்சி.

தமிழ்ப் புதையல்

தமிழ்ப் புதையல்

தமிழின் தொன்மை, வளம், சீர்மை, சிறப்பு எல்லாம் தோண்டத் தோண்ட, துருவி துருவி ஆராய ஆராயப் "புதையல் எடுத்ததுபோல' வெளிப்படுகின்றன.
அரசர்கள் செல்வர்களிடம் செல்வம் குவிந்தால் அவற்றை எங்கே சேமித்து வைப்பது? அதனைப் பூமிக்கு அடியில் புதைத்து வைத்தார்கள். பெரும்பாலும் ஆற்றோரங்களில் புதைத்து வைப்பதுண்டு. புதைத்த இடத்தில் அடையாளத்திற்காக, ஒரு மரத்தை நட்டு வளர்ப்பார்கள். பெருஞ் செல்வரிடம் ஒரு பொலிவு காணப்படுவது போல, "நிதி'யில் மேல் நிற்கும் மரம்கூடப் பொலிவுடன் விளங்குமாம். "உடைமை' ஒரு மெய்ப்பாடு என்றார் தொல்காப்பியர். அதற்கு உரை எழுதிய பேராசிரியர் ""அஃதாவது நிதிமேல் நின்ற மரம்போலச் செல்வமுடைமையான் வரும் மெய்ப்பாடு'' என விளக்கினார். ஒüவையார், ""பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்து''எனப் பாடுவதால் 14, 15-ஆம் நூற்றாண்டு வரை இப்பழக்கம் இருந்தது எனலாம்.
சேரமன்னன் ஒருவன் இவ்வாறு புதைத்துவைத்து, பிறகு அடையாளம் தெரியாமல் தவறிப்போய், நிலம் தின்னும்படி விடப்பட்டது என மாமூலனார் பாடுகிறார்.

""நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய நிறையக் குவைஇ அன்று அவண்
நிலம் தினத் துறந்து நிதியத்து அன்ன...''
(அகம்.127)

ஆம்பல் ஒன்று வாய் நிறைய - ஆம்பல் மலர்போலும் ஒரு கொள்களத்தில், எண்ணிலடங்காத செல்வத்தைப் புதைத்தமை தெரிகிறது. மாமூலனார் பிறிதொரு பாடலில் இப்பழக்கம் வடநாட்டிலும் இருந்ததைக் குறிப்பிடுகிறார். நந்தர்கள் பாடலிபுத்திர நகரை தலைநகராகக் கொண்டு, சுமார் 350 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்கள் கங்கையாற்றின் ஓரத்தே புதைத்துவைத்த செல்வத்தை, பெருவெள்ளம் வந்தபோது அடித்துக்கொண்டு போய்விட்டதாம்.

""பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ'' (அகம்.265)

மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பியன் கண்டியூரில் வி.சண்முகநாதன் வீட்டின் பின்புறம் தோண்டும்போது ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது. அதில் சிந்துவெளி எழுத்துகள் உள்ளன. ஐ.மகாதேவன் "முருகுஅன்' என்று படித்துக்காட்டி, அதன் காலம் கி.மு.2000-1500 ஆகலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். செல்வப் புதையலைவிட, தமிழ்ச் செல்வத்தை உணர்த்தும் இது பல மடங்கு சிறப்புடையதல்லவா?

அடைமொழி இல்லாத பாடல்

அடைமொழி இல்லாத பாடல்
சங்க இலக்கியங்கள் தொடங்கி, இக்கால இலக்கியங்கள் வரை ஒவ்வொரு பொருளையும், செயலையும் குறிக்கின்றபோது பெயர், வினைச் சொற்களுக்கு முன்னர் வினை, பயன், மெய், உரு எனும் உவம அடிப்படையில் "அடைமொழிகள்' கொடுத்துக் கூறுவது புலவர்களின் வழக்கம். இவ் அடைமொழிகள் உயர்விற்காகவோ, தாழ்விற்காவோ குறிக்கப்பெறலாம். இதன் மூலம் புலவர்கள் தாம் எண்ணிய கருத்தைப் பெறவைப்பதுடன், தம் புலமைத் திறத்தைக் காட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். பேச்சு வழக்கிலும் அடைமொழிகளின் பயன்பாட்டைக் காணலாம்.
இத்தகு சிறப்பு வாய்ந்த அடைமொழிகளைப் பயன்படுத்தாமலும் தம்மால் பாட இயலும் என்று கூறும் தமிழ்ப் புலவர்களும் நம்மில் உண்டு. நிலம், பொழுது, கரு, உரி என எல்லாப் பொருள்களையும் வருணித்துப் பாடிய பாடல் நூலான அகநானூற்றில், 400 பாடல்களில் 200 பாடல்கள் பாலைநில வருணனையாகும். மற்ற சங்க இலக்கியங்களும் வருணையில் இவ்வாறே! ஒன்றுமே இல்லாத பாலை நிலத்தையே புலவர்களால் வருணிக்க இயலுமென்றால், எல்லா வளங்களும் சிறப்புகளும் வாய்ந்த மற்ற நிலங்களை வருணிக்க எல்லை ஏது?
வருணனைக்கு அடிப்படையான "அடைமொழி'களே இல்லாமல் இயற்கையின் கொடையாகிய பறவைகளின் பெயர்கள் இருபதின் தொகுப்பை இடைக்காலப் புலவர் ஒருவர் வெண்பா யாப்பில் பாடியுள்ளார் என்பது வியப்பிலும் வியப்பன்றோ! அவர்தான் அழகிய சொக்கநாதப் பிள்ளை; இடம்பெற்ற தொகுப்பு - "தனிப்பாடல் திரட்டு'! இப்பாடலை "அடைமொழி இல்லாத பாடல்' என்று அடைமொழி கொடுத்தே கூறிவிடலாம் அல்லவா?
""சக்கரவா கங்,கிளி,யாந் தை,நாரை யன்னங்,க
ரிக்குருவி, கெüதாரி, காடை,யன்றில் - கொக்கு,
குயில்,கருடன், காக்கை,புறா, கோழி,யிரா சாளி,
மயில்,கழுகு கோட்டான்,வெü வால்''

காதல் நோய்க்கு மருந்து...

காதல் நோய்க்கு மருந்து...

First Published : 06 October 2013 01:51 AM ISTகாளமேகப் புலவர் ஒருமுறை வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் ஓர் ஆட்டை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். ஆட்டின் பரிதாபக் குரல் காளமேகத்தின் மனதை உலுக்கியது. ""பாவம் இந்த அப்பாவி ஆடு... விட்டுவிடம்மா'' என்றார்.
""ஆடு பாவம் என்று விட்டால், என் மகள் பாவத்தை யார் பார்ப்பது? ஆடு வெட்டி பூஜை செய்தால்தான் அவளது பித்து மாறும்'' என்றாள்.
""பித்துப் பிடித்திருக்கிறது என்கிறாயே, அப்படி என்னதான் செய்கிறாள்?''?
""சரியாகச் சாப்பிடுவதில்லை; தூங்குவதில்லை; எதையோ பறிகொடுத்தவள் போல் வெறித்தபடியே இருக்கிறாள். யார் பெயரையோ சொல்லிப் புலம்புகிறாள்'' என்றாள். காளமேகத்துக்குப் புரிந்துவிட்டது. அது காதல் நோய்தான் என்று! அவளுக்கு அறிவுரை கூறும் வகையில் ஒரு பாடலைப் பாடினார்.

""முந்நான்கில் ஒன்றுடையாள், முந்நான்கில் ஒன்றெடுத்து
முந்நான்கில் ஒன்றின்மேல் மோதினான் - முந்நான்கில்
ஒன்றெரிந்தால் ஆகுமோ? ஓ ஓ மடமயிலே!
அன்றனைந்தான் வரா விட்டால்''

முந்நான்கு என்றால் 12. இது மேஷம் (ஆடு), ரிஷபம் (காளை), மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளைக் குறிக்கும்.
"யாரோ ஒரு வாலிபர் (காளை-ரிஷபம்), காதல் அம்பு (வில் அம்பு-தனுசு) தொடுத்து, உன் மகளை (கன்னி) வசப்படுத்திவிட்டான். அதனால் வந்த காதல் நோய்க்கு ஆட்டை (மேஷம்-ஆடு) பலிகொடுத்தால் தீருமோ? முட்டாள் பெண்ணே! அவளுடைய காதலன் வந்தால்தான் இந்த நோய் தீரும். அதற்கு உரிய வழியைத் தேடு' என்பதே இப்பாடலின் பொருள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்றணைந்தான் என்றுதானே வரவேண்டும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை!
பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை.
குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி தாங்காக் குழந்தை, "அம்' "அம்' என்று பால் பருகுகின்றது. பால் பருகுங்கால் எழும் நுண்ணொலி "அம், அம்' என்று ஒலிப்பதை நாம் இன்றும் கேட்கலாம்!
"அம்மம்' பால் ஆயது; பால் தருபவர் "அம்மா' ஆனார்! "அம்' இயல்பாக வாய் மூடியவுடன் உண்டாகும் ஒலி. "மா' மூடிய வாயை அகலத் திறந்ததும் உண்டாகிய ஒலி. இரண்டையும் இணைக்க "அம்மா' என்னும் இயற்கைச் சொல் உண்டாகி விடுகின்றது.
ஆழ்வார்களுள் ஒருவர் பெரியாழ்வார்! அவர் கண்ணனை "அம்மம்' உண்ண அழைக்கிறார்.

""அரவணையாய்! ஆயர் ஏறே!
அம்மம் உண்ணத் துயிலெழாயே''
(நாலா.128)

அன்னை கண்ணனுக்கு ""இன்னமுது அன்றி, அம்மந் தாரேன்'' என்பதாகப் பத்துப்பாடல் பாடுகிறார் (233).
"அம் அம்' என்னும் ஒலிக்குறிப்பு பாலுக்கும், பாலூட்டும் தாய்க்கும் ஆகிய அளவில் நின்றதா? "அம்மு' எனவும் அதற்குப் பெயராயிற்று. அம், அம்மா என விளியாயது, "அம்மை' எனப் பெயராகியது. அம்மா என்பது அம்மோ, அம்மே, எம்மோ, எம்மே, எம்மோய் என்றும், அம்மம்மா, அம்மம்ம, அம்மம்மே, அம்மம்மோ, அம்மானாய், அம்மாடியோ என்றும் வேறு பலவாறும் விரிந்தது.
அம்மையைப் பெற்றவளை அம்மாத்தா, அம்மாயி, அம்மாச்சி என வழங்க உதவியது. அம்மை உடன்பிறந்தார் அம்மான், அம்மானார் எனப்பட்டார். அது பொருளால் விரிவுற்றதோ பெரிது. அடுத்துக் காணலாம்.
-தொடர்வோம்..