Sunday, April 27, 2014

அருட்பா திருக்குறட்பா - வெ.அரங்கராசன்

அருட்பா திருக்குறட்பா

    
பேராசிரியர் வெ.அரங்கராசன்
arangarasan picமுன்னாள் தமிழ்த்துறை தலைவர்
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
கோவிற்பட்டி- 628 502.
கைப்பேசி: 98409 47998.

குறும்பா, பெரும்பா, அரும்பா…
அறம்பொருள் இன்பம், தரும்பா…
விரும்பா தவரும், விரும்பும்
நறும்பா, அருட்பா குறட்பா…
எறும்பா உழைத்திட அரிவினைத்
தரும்பா, பெரும்புகழ் பெரும்பா…
இரும்பா இருப்போர் தமையும்,
கரும்பாக் கரைக்கும், குறட்பா…
விருப்பா? வெறுப்பா? இரண்டையும்
அறுப்பா, எனச்சொலும் திருப்பா…
திறப்பா, படித்துப் பறப்பா…
நெறிப்பா, குறிப்பா இருப்பா…
அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும்
உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா…
கோலப்பா, கொண்டு பாரப்பா…
ஞாலப்பா, நாளும் ஓதப்பா…
முன்பா பின்பா ஒப்பா
நன்பா, இன்பா, மின்பா…
அன்பா அறிவிக்கும் மன்பா…
துன்பா? வன்பா? விடும்பா…
 கனிப்பா, தனிப்பா, குறள்போல்
இனிப்பா எப்பா? புனிதப்பா…
மனிதப்பா, அமுத மொழிப்பா…
மணிப்பா, ஆணிப்பா, பணிப்பா…
“கற்பா இருப்பா” எனும்பா…
பொற்பா, பொங்கும் சொற்பா…
நற்பா, நலப்பா, தலைப்பா…
இற்பா, இயற்பா, இசைப்பா…
தோணிப்பா, ஏற்றும் ஏணிப்பா…
இணைப்பா இல்லாத் துணைப்பா…
வினைப்பா, விரும்பி அணைப்பா…
“முனைப்பா இருப்பா” எனும்பா…
செழும்பா, மொழிந்திட உளந்தனில்
விழும்பா, கதிராய் எழும்பா…
பழம்பா, இன்றும் புதுப்பா…
தழும்பாக் கலைப்பா, விழுப்பா…
களிப்பா, அளிப்பா….நமதிரு
விழிப்பா, அனைவர்க்கும் வழிப்பா…
ஒளிப்பா, தப்பா? கழிப்பா,
பழிப்பா? ஒழிப்பா, எனும்பா…
விதைப்பா, மனத்தினில் விதைப்பா
கதைப்பா, குறட்பா தமிழ்ப்பா…
குதிப்பா, புரட்சிச் சிந்தைப்பா…
மதிப்பா இதனை மதிப்பா…
ஞானப்பா, இதுபோல் ஏதப்பா?
மானப்பா, முழுதும் தேனப்பா…
ஒப்பா ஒருபா எப்பா?
அப்பா, நம்திருக் குறட்பா…
நகைப்பா, அகப்பா, புறப்பா…
நயப்பா, வியப்பா இருக்குப்பா…
சுகப்பா, முகப்பா, யுகப்பா…
சிகரப்பா, வரம்தரும் தரப்பா…
ஒண்பா, தண்பா…..குறளெனும்
வெண்பா, நுண்பா, எண்பா…
பண்பா, மண்பா…..ஒளிதரும்
கண்பா, திண்பா, வண்பா…
நம்பா, உலகம் முழுதும்
“எம்பா” எனுமொரு செம்பா…
நோன்பா, பொருளில் வான்பா…
மாண்பா, தாங்கும் தூண்பா…
ஆக்கப்பா, மூச்சாய் ஆக்கப்பா…
ஊக்கப்பா, உளந்தனில் தேக்கப்பா…
நோக்கப்பா, மனித நோக்கப்பா…
தூக்கப்பா, மனத்தால் தூக்கப்பா…
படிப்பா, படிப்பா, குறட்பா…
படிக்கப் படிக்கப் படியும்பா…
உரைக்க உரைக்கப் புரியும்பா…
விரிக்க விரிக்க விரியும்பா…
இப்பா அப்பா எப்பாஎனப்
பாப்பா வாகச் செப்பாது,
முப்பால் முழுதும் படிப்பா…
தப்பா வாழ்வு தப்பாது… 

வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன்

வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன்

 B__NATARAsAN01
பொருளும் இன்பமும்
2. இங்ஙனம் இன்பத்திற்கு வித்தாகப் பொருளுக்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்குத் துணையிடம் வகுத்த முறையால் சில உண்மைகள் பெறப்படுகின்றன. அரசியல் உரிமை என்பதை விடப் பொருளாதார உரிமையே. தனி மனிதயின்பத்திற்கு வேண்டுவது. இதை குடிகட்காகச் சொல்லப்பெறும் ஒழிபியலில் விளக்க முயல்கிறார்.
‘‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’’ என்கிறார்.
அரச அமைப்பும் சிறப்பும்
3. மேலும் இன்பக் குறிக்கோளுக்குத் துணைக்காரணமாயமையும் அரசியல் உரிமைபற்றிப் பேசி என்ன பயன்? அது ஊழான் வருவதன்றோ? அதுபோலவே அரசியல் அமைப்புப் பற்றியும் முடியாட்சி, குடியாட்சி என்றெல்லாம் விரிப்பானேன்? எங்ஙனமாயினும் ஆட்சி நலன் ஒருவனிடம் செறிந்து படுவதே எல்லா அரசியல் அமைப்புகளுடையவும் இயல்பாக இருக்கிறது. அங்ஙனமாகவே, அமைப்பு எங்ஙனமாயினும், ஆட்சி நல்லாட்சியாக இருத்தல் வேண்டும். உருவமன்று கருத வேண்டுவது; உட்பொருளே சிறப்பாகும்.
அரசும் தெய்வமும்:
4. அரசியலமைப்பின் உருவம் எவ்வாறிருப்பினும் இருக்க; நல்லாட்சி ஒன்றே நாட்டமாயிருத்தல் வேண்டும் என்றதனால் அரசர்கள் கடவுளர்களென்றோ, அவர்கள் பிரதிநிதிகளென்றோ அல்லது அரசுரிமை தெய்வீக உரிமையென்றோ வள்ளுவர் கொண்டாரில்லை. ‘உலா பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறையென்றார்’ என்று கூறி, அதற்குச் சான்றாகத் ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’’ என்னும் என்ற திருவாய்மொழி அடிகளையும் பரிமேலழகர் மேற்கோள் செய்து கொள்கிறார். இது உரையாசிரியர் தமது காலத்து நிலவிய ஒரு கோட்பாட்டை வள்ளுவர் திருக்குறளில் வைத்துக் காண்கிறாரேயன்றி வள்ளுவர் கொண்டதாகக் கருதுவதற்கில்லை. பரிமேலழகர் இங்ஙனம் காண்பது புதுமையன்று, நூலிற் பரக்கக் காணலாம் உரையாசிரியர் எல்லோருமே தத்தம் கல்வி அறிவுக்கேற்றவாறே உரை காண்பதியல்பு. அதில் இழுக்கில்லை. பின்னே,
‘‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்’’.
என்ற குறள் அரசுரிமை தெய்வீக உரிமை என்ற கோட்பாட்டை நிறுவுகின்றதா என்ற கேள்வி பிறக்கின்றது.
இங்ஙனம் இறைவனுக்கும் அரசியல் தலைவனுக்கும் இருக்கும் தொழில் ஒற்றுமையையே ஆசிரியர் வள்ளுவர் சுட்டிப் போகின்றார். இவ்வாறு மீண்டும் வள்ளுவர் சொல்லியுள்ளார்.
‘‘தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்’’
இது வள்ளுவர் கையாளும் ஒருவகை உத்தியே. இறை என்பதற்கு நடுவு நிலைமை என்பது பண்புப் பொருளென்று பரிமேலழகரே
‘‘ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய் வஃதே முறை’’
என்ற குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் விரிக்கின்றார். நடுவு நிலைமை என்ற பண்பு அரசனுக்கு இருப்பதிலே அவன் கடவுளாகக் கருதப்படுவான் என்றே பொருள் கோடல் வேண்டுமல்லாது அரசனுக்குத் தெய்வீக உண்மையை வள்ளுவர் அளித்தாரென்று கொள்ளலாகாது. கொடுங்கோலன் அரசனாகான்; ஆறலைக்கும் கள்வனே, கொலைஞனே ஆவான் என்று கூறும் வள்ளுவரோ அவனுக்குத் தெய்வீக உரிமை அளிப்பவர்?
அறமும் ஊழும்:
5. வள்ளுவனார்க்குக் குறிக்கோள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அக்குறிக்கோளை எய்தும் நெறியும், இதில்தான் அர்த்தசாத்திரம் யாத்த சாணக்கியருக்கும் திருக்குறள் வகுத்த வள்ளுவருக்கும் காணப்படும் அடிப்படையான வேற்றுமை. அர்த்த சாத்திரம் எங்கும் அரசன் தான் ஆட்சி நலன் பெறுவதற்கும் பெற்ற திருவை நிலைக்கச் செய்தற்கு அறனி கந்த செயல்களையும் செய்வதும் அனுமதிக்கப்படுகின்றது. பரிந்து கூறப்படுகின்றது. அரசியல் அறிவுரைகள் அகத்தோடு இயைந்தனவாகவே இருக்கின்றன. அறந்தெரியாதவன் ஆட்சிக்கு வருவதுண்டே, அது எவ்வாறு என்றால் அது ஊழ்வயத்தால் நிகழ்வது. அந்த ஊழும் அறத்துக்கு முணரனதன்று முன்னே செய்த இருவினைப் பயனின் துய்க்காது  எஞ்சிய பகுதியே ஊழ். எனவே அதுவும் அறத்தின் வழி வந்ததேயாகும். அவ்வாறு அறமறியாதவன் ஆட்சித் தலைவனாக வந்திடினும் பின்னே அவன் அறவழியிலேயே நின்று ஆட்சி செய்தல் வேண்டும். அந்தவழி அறத்திற்குரிய கல்வி, கேள்விபோன்ற தகுதிகளையெல்லாம் தன்னதாக்கிக் கொள்ளல் வேண்டும். இதுவே வள்ளுவர் கருத்தாகும்.
பொய்யாமொழி: நல்லாட்சியின் உறுப்பு நலன்களை மட்டுமே கூறி அரசியல் அமைப்பின் உருவம் பற்றியோ, உரிமை பற்றியோ கூறாது விடுத்த அளவிலே வள்ளுவர் நூலுக்குக் காலமும் இடமும் கடந்த மதிப்புப் பிறக்கலாயிற்று. எப்பாலராரும் எக்காலத்தவரும் போற்றும் பெருமையுடையதாயிற்று. அடிப்படையான அழியா உண்மைகளைக் கூறவந்தார் வள்ளுவர்.
பொதுமொழி: வள்ளுவர் கையாளும் உத்தியால் அவர் நூல் அரசற்கேயன்றி அனைத்து மக்களுக்கும் என்றும் எங்கணும் பயன்படுவதாய் அமைந்துள்ளது. மாக்கிவலி, சாணக்கியர் போல்வார் தமது அறிவுரைகளை அரசன் ஒருவனுக்கே எடுத்தோதுவாராயினர். அவை ஏனைய மக்களுக்குச் சிறப்பாகப் பயன்படுவதாயில்லை. வள்ளுவரோ அரசற்கும், அமைச்சர்க்கும் ஆயத்தார்க்கும் சொல்வோர் போல் எல்லோருக்குமே வெவ்வேறு நிலையில் பயன்படுவகையில் சொல்லிப் போகின்ற முறை உணர்ந்து இன்புறுவதற்குரியதாக இருக்கின்றது. எல்லோருமே வெவ்வேறளவில், வெவ்வேறு நிலைகளில் ஆள்வோராகவும், ஆளப்படுவோராகவும் இருத்தலாலே வள்ளுவர் அரசியல் கருத்துக்கள் எத்தகைய ஆட்சிமுறையிலும் எல்லோருக்கும் பயன்தரும் பெருமையதாக அமைந்துள்ளது.

 

வள்ளுவர் குலவினம் – பாவாணர்

வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

thevaneya paavvanar01
  இவ்வுலகத்தினர் எல்லாரும் இருமைப் பயனும் எய்தி இன்புறுமாறு. எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றவாறு. வாழ்க்கைக்கு வழி வகுத்து அதில் நடந்தும் காட்டிய வள்ளுவர் தமிழ்ப் புலவருள் தலையாயார் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாம்.
  இத்தகைய தலைமை சான்ற வள்ளுவரை, வேண்டுமென்றே ஆரிய வழியினராகக் காட்ட வேண்டி, பிராமணத் தந்தைக்குப் பிறந்தவராகக் கூறுவது ஒருசார் புறத் தமிழர் மரபு. இனி, இதற்கு எதிராக அவரை உயர்த்திக் காட்டுதற் பொருட்டு உண்மைக்கு மாறாய் உயர்வாகக் கருதப் பெறுகின்ற ஒரு குலத்தினராகக் கூறுவது, ஒருசார் அகத்தமிழர் மரபு. பிறப்பால் சிறப்பில்லையென்றும் ஒழுக்கத்தால்தான் உயர்வு என்றும் கூறிய வள்ளுவரை, அவர் கொள்கைக்கு மாறாகப் பிறப்பால் இழிந்தவராகக் கருதுவது எத்துணைப் பேதமை!
  திருவள்ளுவர் தம் முதற் குறளில் ஆண்டுள்ள ‘ஆதி பகவன்’ என்னும் தொடரை, துரும்பைத் தூணாக்குவது போலும் பேனைப் பெருமாளாக்குவது போலும் மிகப் பெரிதாக்கி, அது அவரின் பெற்றோர் பெயரைக் குறிப்பதாகக் கொண்டு மயங்கி இடர்ப்படுகின்றனர். பல்வேறு சாரார் பகவன் என்பது பகுத்தளிப்பவன் அல்லது படியளப்பவன் என்று பொருள்படும்தென் சொல். பகவு,  முதனிலை; அன் ஈறு. பகு+உ = அல்லது அவு = பகவு எல்லாவுயிர்க்கும் படியளித்துக் காப்பவன் இறைவன். Lord என்னும் ஆங்கிலச் சொற்கும் இதுவே பொருள் Hlafora – Loal, Ward-Bread – Keeper. பகவன் என்னும் சொல் நாளடைவில் முனிவரையும் குறித்துப் பொருளிழிந்து விட்டதனால், முழு முதற் கடவுளைக் குறிக்க ஆதி என்னும் அடை வேண்டியதாயிற்று. ‘ஆதி’ வட சொல்லே அது போன்று வேறொரு சில வட சொற்களும் திருக்குறளில் உள. அதனால் அந்நூற்கு இழுக்கில்லை. ஒரு மர நாற்காலியில் இரண்டோர் இருப்பாணியிருப்பதால். அது இருப்பு நாற்காலியாகிவிடாது. அதுபோல் ஒரு சில வட சொலுண்மையால், திருக்குறளும்,  தன் தமிழ்மையை இழந்துவிடாது. ஆதி பகவான் என்பது முதற் கடவுளைக் குறிக்கும் தொடராயின், இடையில் வலிமிகல் வேண்டுமே என்று சிலர் வினவலாம். மூவகைப் புணர்ச்சித் திரிபுகளுள் ஒன்றான தோன்றல், பண்டை நாளில் ஏனையிரண்டு போல அத்துணைக் கட்டாயமாக விருந்ததாகத் தெரியவில்லை. இன்றும் இருவகை வழக்கிலும் வலி மிக வேண்டுமிடத்து மிகாமல் வழங்கும் சில தூய தமிழ்த் தொடர்களும் உள.
எடுத்துக் காட்டு: கார்காலம்
கோவூர் கிழார்
பேறு காலம்
நாடுகிழவோன்.
இவற்றுட் பின்னிரண்டும் இலக்கணப்படி நிலைமொழியீற்று வலியிரட்டித்து வலி மிக வேண்டும்.
இனி, அகர முதல எழுத்தெல்லாம் ஆங்குப்
பகவன் முதற்றேயுலகு.
என்று பாடமோதின், எவ்வகை இடர்ப்பாடுமில்லை. உவமை நிரம்புவதுடன் சொல்லும் தூய்மைப்படும்.
  ஆதிபகவன் என்பது திருவள்ளுவரின் பெற்றோரைக் குறிக்கும் தொடரென்று கொண்டாருள் முதல்வரான ஞானாமிர்த நூலார், வள்ளுவரை யாளிதத்த முனிவர்க்கு ஆதி என்னும் புலைச்சியிடம் பிறந்தவராகக் கூறுகின்றார். அவர் கருத்துப்படி, பகவன் என்பது முனிவரைக் குறிக்கும் பொதுப் பெயர், யாளிதத்தன் என்னும் இயற்பெயர் முற்றும் புதுப்படைப்பு, ஞானாமிர்த ஆசிரியர் காலம் இன்றைக்கு எழுநூறாண்டிற்கு முன் என்பர்.
கி.பி.18ஆம் நூற்றாண்டு போல் இயற்றப்பட்டதாகத் தெரிகின்ற கபில அகவல் என்னும் சிறு சுவடி, ஒரு வள்ளுவர் பிறப்பைப் பற்றிப் பின் வருமாறு வரைகின்றது.
‘‘பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதி என்னும் கருவூர்ப்புலைச்சிக்கும் புதல்வர் மூவரும் புதல்வியர் நால்வருமாக எழுவர் மக்கள் பிறந்தனர். அவருள் உப்பை ஊற்றுக் காட்டு வண்ணார் வீட்டிலும், உறுவை காவிரிப் பூம்பட்டணத்துக் கள்விலைஞர் வீட்டிலும் வள்ளுவர் மயிலைப் பறையர் வீட்டிலும், வள்ளி குறவர் வீட்டிலும் அதிகமான வஞ்சி அதிகன் வீட்டிலும், கபிலர் ஆரூர்ப் பிராமணர் வீட்டிலும், ஔவை பாணர் வீட்டிலும் வளர்ந்தனர்.
  இவ்வரைவில், வரலாற்றுத் தொடர்புள்ள கடைக் கழகக் காலப் புலவர் புலத்தியர் பேரும், ஒரு மன்னன் பெயரும், வரலாற்றுத் தொடர்பற்ற சில புனைபெயரும், குமரிக் கண்டத்துக் குறிஞ்சிப் பெண் தெய்வத்தின் பெயரும், கடுகளவும் பொருத்தமின்றிக் கலந்துள்ளன.
    இதுவன்றி:
‘மேல்வகை கீழ்வகை விளங்குவ தொழுக்கால்
ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பு.’’
‘‘பூசுரர்ப் புணர்ந்து புலைச்சிய ரீன்ற
பூசுர ராயினோர் பூசுர ரல்லரோ’’
‘‘சேற்றிற் பிறந்த செங்கழு நீர்ப்போல்’’
என்று முன்பின் முரண்பட்ட பொருட்டொடர்களும் இக்கபிலர் அகவலில் உள. இதனால், இவ்வகவல் ஆராய்ச்சிக் குதவும் சான்றாகாது.
இனி, திருவள்ளுவ வெண்பா மாலையில், நல்கூர் வேள்வியார் செய்யுளாக வந்துள்ள,
‘‘உப்பக்க நோக்கி உபகேசி தோண் மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப – இப்பக்கம்
மாதாநு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற் கூடற் கச்சு’’
என்னும் வெண்பாவைத் துணைக் கொண்டு, பண்டித கோவிந்தராச தாசர், (வள்ளுவர் குலத்தைச் சேர்ந்த) கச்சன் என்னும் தந்தையார்க்கும் உபதேசி என்னும் தாயார்க்கும் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறினர். இது வலிந்தும் நலிந்தும் கொண்ட பொருளாதலால், இதுவும் ஆராய்ச்சிக்குரியதன்று.
  இனி நாவலர் சோமசுந்தர பாரதியார்,
‘‘வள்ளுவன் சாக்கையெனும் பெயர் மன்னர்க்
குள்படு கருமத் தலைவர்கொன்றும்’’.
என்னும் பிங்கல நூற்பாவிலுள்ள ‘‘உள்படு கருமத் தலைவர் என்னும் தொடர்க்கு மாளிகை நாயகம் என்று பொருள் கொண்டு வள்ளுவரை ஒரு பாண்டிய வேந்தனின் மாளிகை நாயகமாயிருந்த உயர்குல வேளாளராகக் கொண்டார். உள்படு கருமத் தலைவர் என்பது அரசனொடு நெருங்கிய தொடர்புள்ள வினைத் தலைவர் என்று மட்டும் பொருள் படுமேயன்றி மாளிகை நாயகம் என்று பொருள்படாது. அரசுனுக்கு அகப்பணி செய்வார். அனைவரும் அரசனுக்கென்றே ஒதுக்கப்பெற்றவராவர். எத்துணை வருமானம் வரினும் அவர் பிறர் பணியை மேற்கொள்ளார்; மேற்கொள்ளவும் முடியாது. அவ்வப்போது அரசனது மன நிலையை அறிந்து,        அதற்கேற்றவாறு இன்பக் கூத்து நகைக்கூத்து மறக்கூத்து முதலியவற்றை அரசனுக்கும் அவனால் அழைக்கப்பெறும் உறவினர்க்கும் அதிகாரிகட்கும் நடித்துக்காட்டுபவன் சாக்கையன். அரசனுடைய கட்டளைகளை மட்டும் அன்றன்று யானைமேலேறிப் பறையறைந்து தலைநகரத்தார்க்கு அறிவிப்பவன் வள்ளுவன்.
சாக்கையன், வள்ளுவன் என்னும் இவ்விருவரும் அரசன் பணிகளையே செய்பவராதலின் உள்படு கருமத் தலைவர் எனப் பெற்றார்.
(தொடரும்)
குறள்நெறி : சித்திரை 19, தி.பி.1995 / 01.05.1964

Saturday, April 26, 2014

தமிழ் உணர்வு – காசி ஆனந்தன் poem by kasi ananthan

தமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

kasiananthan01
தமிழென் அன்னை! தமிழென் தந்தை!
தமிழென்றன் உடன் பிறப்பு!
தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!
தமிழென் நட்புடைத் தோழன்!
தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்!
தமிழென் மாமணித் தேசம்!
தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்!
தமிழே என்னுயிர் மூலம்!

பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

thamizhthaay01
இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி
                எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி
மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம்
                மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம்
நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள்
                நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள்
உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே,
                உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே.
– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்