புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம் – வெற்றிவேலன்
தமிழ் மகனே,
திரைகடல் ஓடித் திரவியம் காண இருண்ட
கண்டம் இலங்கை, பர்மர சென்றாய்; உழைத்தாய்; கல்லை உடைத்தாய்; பிற நாட்டின்
முன்னேற்றம் கருதி மாட்டினும் இழிவாய் முனைந்து உழைத்தாய்! ஈட்டியதென்ன?
இழி சொல் பகைமை காட்டி நின்றனர், உன் உழைப்பால் உயர்ந்தோர்! அயர்வைக்
கருதாது வியர்வை சிந்தி உயர்வைக் கருதி உழைத்தாய் பிறருக்கு! உன்றன்
நேர்மையை உணர்ந்த மற்றோர் குன்றா உழைப்பை உறிஞ்சி உயர்ந்தனர்; சாற்றைப்
பிழிந்து சக்கை எறிவது உலகின் இயற்கை; பாலைக் கறந்து, பின் பசுவைக்
கொல்லும் கயமை ஒப்ப முரடர் உன்னை விரட்டி அடித்தனர்; உழைத்ததன் பயனை நுகர
வாய்ப்பற்றாய்! குன்றா உழைப்பினை; குண்டடிபட்டாய்! இனவெறி மொழிவெறி
இவற்றால் செத்தாய்! பரக்க வேண்டிய தாய்நாடு உன்னைப் புறக்கணித்தது!
விரட்டப்பட்டோடி வந்தாய்! வரவேற்கவில்லை, உன் தாய்த்திரு நாடு! நற்றமிழ்
இனமே, நசிந்திடுகின்றாய்! ‘‘தமிழ்ச் சாதி தரணி மீது ராது பொய்த்தழி வெய்தலோ
முடிபு’’ எனக் குமுறி நின்றார் கவிஞர் பாரதியார்!
‘‘பாமரராய் விலங்குகளாய், இகழ்ச்சி
சொலப்பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?
சொல்வீர்! விழித்தெழுவீர்! செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி நீங்கள்
சிற்றடிமைப் படலாமோ? பொங்கி எழுங்கள்! புவியில் நம் இனத்தை மங்காப்
புகழுடன் இலங்கிடச் செய்வீர்’’.
என இடித்து உரை கூறிய இன் தமிழ்க் கவியின் சொல்லைக் கேட்டீரல்லீர்!
“வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! வெங்குருதிதனிற் கமழ்ந்து வீரஞ்
செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!’’ என முழங்கி நின்றார்!
திங்களொடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த நாம் ஆண்மைச் சிங்கத்தின்
கூட்டமென்று முழங்கினார், பழம்பெருமை வீழ்ந்தொழிந்த கிரேக்கத்தைக்
கிளர்ந்தெழுப்பிய கவி பைரன் போல! (Byron-The Isles of Greece)
‘தமிழியக்கம்’ கண்ட அவர் தகைமை பெரிது!
“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்-
தன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.’’
என்று அந்தப் புத்துணர்வாளர் புகன்ற மொழி
கேளாயோ? பாழ்பட்டு நின்ற இந்தப் பாரததேசந் தன்னை வாழ்விக்கப் பாடினார்
பாரதி! அவரது தலைமாணவர் பாரதிதாசனாரும் பாரத நாட்டில் தமிழரின் தாழ்வைப்
போக்குதலை நாட்டத்திற் கொண்டு, ‘‘பூட்டிய இருப்புக் கூண்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியே வா!’’ என உரிமை பெற்ற பாரதநாட்டில்
அருமைத் தமிழனுக்கு ஆணையிட்டார். கேட்டார்ப் பிணிக்குந்தகைய வாய்க்
கூறினார்;
‘‘வாழியநீ தமிழ்த்தாய்க்கு
வரும் பெருமை உன் பெருமை
வயிற்றுக் கூற்றக்
கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திரு நீ இளந்தமிழா,
குறை தவிர்க்க
ஆழிநிகர் படைசேர்ப்பாய்
பொருள் சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்குவிப்பாய்!
ஊழியஞ் செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சிகொண்டே’’.
என உரைத்து நின்றார். காண்பதென்னை?
உணர்ச்சியில்லை தமிழரிடை! ஆயிரம் ஆயிரம் சின்னச் சாமிகள் தீயிடைக்
குளிப்பினும் திருந்துவீரல்லீர்! பேயினும் கொடியதாய்ப் பணத்தாசை ஒன்றே
கொண்டீர்! வயிறே பெரிதென வளர்த்து நிற்கிறீர்! வண்டமிழ் வளர்க்கும்
வகையறியீர்! மெய்யுணர்வில்லையே! தமிழுக்குப் பகைவர் எவர் எனத் தேர்ந்திடும்
வகையறியீர்! அரசியலையும் மொழியையும் குழப்பிக் குழப்பி அரசியல்துறை எது
மொழித்துறை எது எனத் தேர்ந்திடும் அறிவிலீர்!
கப்பற்படை கொண்டு கடாரம் வென்றோர்
பர்மாவிலிருந்து திக்கற்றவர்களாகப் பாரதம் புகுதற்குக் கப்பல் வசதி
கேட்டார் மத்திய அரசினரிடம்! கிடைக்கப் பெற்றிலர்! ஒரு மொழி வைத்து உலகாண்ட
தமிழர் மும்மொழி கற்றாலன்றி வேலையில்லை! பிழைப்பில்லை! தன்னினம் உயரத்
தளராது உழைத்தவர் தான் வாழ்ந்தாற் போதுமென்றின்று நினைக்கிறார்! இன்பத்
தமிழ்க் கல்வி கற்றவர் யாவரும் வறுமைத் துன்பத்தில் ஆழ்கிறார்! ஆங்கிலக்
கல்விக்கே அரசினர் ஆதரவு!
இந்நிலை மாற்றிட, நன்னிலை எய்திட அயராது
உழைத்தல் வேண்டும்! தூங்கிப் பயனில்லை! வள்ளுவர் வான்குறள் ஐ.நா. அவையிலே
முழங்குதல் வேண்டும்! தெள்ளுதமிழ்க் காப்பியங்களை எல்லாத் தேயத்தவர்களும்
கற்று மகிழ வேண்டும்! அறிவியலின் உச்சாணிக் கிளையில் அமர்ந்திருக்கும்
உலகில் அறிவியல் இன்றிக் கல்வியில்லை! தமிழில் அறிவியற் கலைகள் வேண்டும்!
தமிழிசை உலகெலாம் ஒலிக்க வேண்டும்! கோயிலில் இறைவனைத் தூய தமிழில் வழிபட
வேண்டும்! கல்லூரிகளில் தமிழ்க் கல்வியையே கற்க, கற்பிக்க வேண்டும்!
தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராய்த் திகழ வேண்டும்!
தமிழ்ப் புலவர் ஒன்றுபடும் நன்னாள் வருதல் வேண்டும்! வையம் அறிமொழியதாகத்
திருமலிந்த தமிழ் மொழிதான் ஆகும் வகை நம் புலவர் சேர்ந்து தொண்டுபுரிய
வேண்டும் செல்வர்கள், தமிழறிஞர் கழகங்கள், தமிழ்ப் பள்ளி கல்லூரி, தமிழ்
ஏடு பலப்பலவும் நிறுவ வேண்டும்!
இதுவே புரட்சிக் கவிஞர் கண்ட ‘தமிழியக்கம்,’ இனியும் தூங்கி இழி நிலை எய்திட வேண்டாம்!
எது செய்க நாட்டுக்கே
எனத் துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,
புது நாளை உண்டாக்கித்
தமிழ் காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே!
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்!
- புரட்சிக் கவிஞர்
- குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
Comments
Post a Comment