கக. வழக்கில் வழுக்கள் – திருத்துறைக்கிழார்
இலக்குவனார் திருவள்ளுவன் 16 October 2025 No Comment ( க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கக. வழக்கில் வழுக்கள் எழுவாய் தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது. உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள் காலத்திற்குப் பின்னர், தமிழ்மொழி, பல இடர்ப்பாடுகட்கு உள்ளாயிற்று. தமிழ்நாடு, பல வகை அரசர்களின் படையெடுப்புகட்கு ஆளாயிற்று. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள், தம்மொழிகளையும் – மதங்களையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர். ஏன் – தம் நாட்டு மக்களையும் கொண்டு வந்து குடியேற்றி...