Friday, April 29, 2016

கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தலைப்பு-அரசியலை மாற்றுங்கள் : thalaippu_arasiyalaimaattrungal
உள்நோக்கம் கொண்டுசில ஊடகங்கள் செயலாற்றி,
முள்நீக்கும் பணிமறந்து மூடருக்குத் துதிபாடி,
பல்லாக்குத் தூக்குவதில் பரமசுகம் கண்டு,
கள்ளாட்டம் ஆடுகின்ற கயவர்களைத் தலைவரென்று,
சொல்லாற்றல் கொண்டுபேசித் தமிழர்களின் மனம்மாற்றி,
எல்லோர்க்கும் தெரியும்படி எளியனை ஏமாற்றும்!
நண்பர்களே!
கடைக்கோடித் தமிழனுக்கும் உண்மைகளைக் கொண்டுசெல்ல,
கற்றறிந்த தமிழர்களே, உடனெழுந்து வாருங்கள்!
இடைத்தரகர் போலின்றி இதயமொன்றி இப்பணியை,
இன்முகமாய்ச் செய்திடலாம் இளைஞர்களே வாருங்கள்!
உடைத்தெறிந்து ஊடகங்கள் செய்யுமிந்த மாயைகளை,
உயிர்சிலிர்த்துப் பாமரர்க்குப் புரியும்படி உரையுங்கள்!
இமைக்காமல் உறங்காமல் இருபொழுதும் எப்பொழுதும்,
நமைக்காக்கும் நல்லரசை அமைக்கும்வழி என்னவென்று,
சளைக்காமல் சிந்தித்துச் சகலருக்கும் சொல்லுங்கள்!
உழைக்காமல் உயிர்வளர்த்து திமிரெடுத்த திருடர்களை,
மழைக்காலக் காளானெனக் களைந்திடலாம் வாருங்கள்!
கற்றறிந்த தமிழர்களே கரம் கோர்த்து நில்லுங்கள்,
கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்!
கைகூப்பிக் கேட்கின்றேன் கூண்டை விட்டு வாருங்கள்!
சச்சிதானந்தன் தெய்வசிகாமணி :saccithanantham deivasikamani
  • சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

Thursday, April 28, 2016

தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! – கவிக்கோ ஞானச்செல்வன்

தலைப்பு-பாவேந்தர்பணிகள்வெல்க : thalaippu_paaventharpanikal_velga_gnanachelvan

தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க!

நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல
நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை
ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே
ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்!
பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப்
பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று
போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப்
புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்!
மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும்
மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன்றில் றில்லை!
சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம்
தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை!
மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ?
மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும்
செங்கரும்பும் நறும்பாலும் தேனும் பாகும்
செந்தமிழ்க்கு நிகராமோ என்ற மேலோர்!
தமிழியக்கம் எனும்கனலைத் தமிழர் நெஞ்சில்
தழைத்தெரியச் செய்ததனால் தமிழர் இன்று
தமிழ்வாழ்வு காணுதற்கு முயலு கின்றோம்!
தம்மானம் காக்கின்ற உணர்வு பெற்றோம்!
தமிழியக்கம் எனும்தீயால் தமிழ்ப்பற்று றில்லாத்
தருக்கர்தம் செருக்கெல்லாம் பொசுங்கக் கண்டோம்!
தமிழியக்கம் கண்டதொரு தமிழின் நல்ல
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! (1968)

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பி
thalaippu_chenthamizhser_ uruvaayinai_thamizhanambi

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை!
உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!
கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்’
‘புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்’ என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
“சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!
அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!”
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!
தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!
(விழுப்புரம் “பாவேந்தர் பேரவை”யின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)
தமிழநம்பி : thamizhanambi