Saturday, January 30, 2016

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி)

attai_ezhilarasi
 1. துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய்
மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால்
இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ”
எனலும் அரசியும் இறும்பூ தெய்தி
தமையர் மறைவால் தாங்காத் துயரமும்
 1. நீதி வேண்டி நெருங்கிய மன்றில்
மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும்
கொண்ட அரசி கூற்றெனச் சினந்து
வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து
இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள்.
 1. தமையரும் தமரும் அமைவுடை யாட்களும்
யாருமின்றி யலங்கோ லமாக
இருக்கக் கண்டு இரங்கின ளாயினும்
தமையர் கொடுமையும் தாழ்ந்தோர் துயரைப்
போக்கு முணர்வும் புத்துயி ரளிக்க
 1. அமைவுடை வாணாள் அன்புடன் கழிக்க
ஆவன கருதி அன்றே விரைந்து
காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பிணிநடுக் குற்றோர் புகலிடம் அற்றோர்
ஆடை யின்றி வாடையின் மெலிந்தோர்
 1. உண்டி யின்றி ஒட்டிய வயிற்றினர்
குடிசை யின்றிக் குரங்கென வதிவோர்
வேலை யற்று வீணராய்த் திரிவோர்
முதலிய மக்களை இதமுடன் கூட்டி
“உலகை யியக்கும் ஒருபெரும் கடவுள்
550         பசியே என்பதைப் பகர்தலும் வேண்டா
அப்பசி வெல்லும் ஆற்றலும் அற்றோம்;
எம்முடைச் செல்வம் நும்முடைத்தாகச்
செய்து அன்புடன் சேர்ந்தே உழைப்போம்
உழைப்பின் பயனையும் ஒருங்கே துய்த்து 15
 1. எஞ்சிய பகுதியை எய்ப்பில் வைப்பாய்க்
கொண்டு வாழக் கூடுவீ ராக”
எனலும் யாவரும் இசைந்தனர் ஒருங்கே

(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18)Thursday, January 28, 2016

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 )
attai_ezhilarasi


நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து
                கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி
சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர்
“பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்”
 1. என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன்,
ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம்
பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர்
பொற்கா சுகளோ போற்றப் படுவன
ஆயிரம் என்றால் யார்மனந் திரியா?
 1. ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச்
சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ
“நன்று நன்று நல்குவீர் ” என்றனர்
வணிகரில் ஒருவனை வல்விலங் கவிழ்த்து
நிதியறை சென்றுநேர்ந்தவை பெற்றனர்
 1. பின்னர் அவர்கள் பேணிய பொருளில்
அவர்கட் குரியதை இவர்கள் அளித்து
“முடியாத் துயரால் மூவரும் மாய்ந்தோம்”
என்றபொய் நறுக்கும் இயல்புடன் பெற்று,
வணிகர் மூவரும் மாற்றுருவுடனே,
 1. அயல்நா டேக அண்மையி னின்ற
கப்பலிற் செல்லச் செப்பஞ் செய்து
மீண்டனர் மன்றம் மேவிய அறவனை
வணங்கி “ஐயா! வணிகர் மூவரும்
இடுக்கணுக் கஞ்சி இறந்தொழிந் தனரால்
515         என்பதை யறிந்தோம் இச்சிறு சீட்டால்
இறைவ அறிக” என்றே காட்டினர்
உள்ளம் பூரித் துடனே யவர்களை
வெளியே அனுப்பினன்; விரைந்து அரசியை
அடைந்து சீட்டை அன்புடன் காட்டி,14
 1. “அல்லவை செய்தார்க் கறமே கூற்றம்
என்பதற் கிலக்காய் இறந்து போயினர்.
நின் பொருள் விரும்பி நின்னைக் கெடுக்க
எண்ணிய மூத்தோர் நண்ணினர் கேட்டை;
கெடுவான் கேடு நினைப்பான் அன்றே;
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17)


Wednesday, January 27, 2016

ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்


ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

தலைப்பு-ஆரியப்படை வென்ற நாடு- வாணிதாசன் :thalaippu_aariyarpadaivendradhu_vanidasan

என்னுயிர் நாடு என்தமிழ் நாடு
என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு!
அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த
அழகிய நாடு! அறத்தமிழ் நாடு!
தன்னிக ரில்லாக் காவிரி நாடு!
தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு!
முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு!
மூத்து விளியா மறவரின் நாடு!
ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும்
அலைகடல் தாண்டி வழங்கிய நாடு!
வார்குழல் மாதர் கற்பணி பூண்டு
வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு!
ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு)
ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு!
கார்முகில் தவழும் கவின்மிகு நாடு!
கடும்புலிப் பொம்மன் கருவுற்ற நாடு!
பாரினில் தொன்மை வாய்ந்ததிந் நாடு!
பலபல துறையில் சிறந்ததிந் நாடு!
ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு!
ஆடலும் பாடலும் வளர்த்ததிந் நாடு!
சீரிய பண்பு நிறைந்ததிந் நாடு!
செந்தமிழ் மொழிவளன் செறிந்ததிந் நாடு!
ஓரடி வெம்பட உயிர்விட்ட நாடு!
ஒடுங்கியே பூனைபோல் இருப்பது கேடு!
காரியும் பாரியும் வழங்கிய நாடு!
கலம்பல செலுத்தி ஆண்டதிந் நாடு!
போர்ப்பறை கேட்டுப் பூரித்த நாடு!
புறமகம் தந்து பொலிந்ததிந் நாடு!
பாரதி தாசன் புரட்சிசெய் நாடு!
பகுத்தறி வற்றிங் கிருப்பது கேடு!
சேருவோம் தமிழர்கள் யாவரும் ஒன்றே!
தெருவெலாம் விடுதலை முழக்குவோம் இன்றே!
- வாணிதாசன்
கவிஞர் வாணிதாசன்vanidasan