இன்பத் தமிழினிற் பாடு! – புலவர் பொதிகைச்செல்வன்
இன்பத் தமிழினிற் பாடு! – புலவர் பொதிகைச்செல்வன்
யாழெடு யாழெடு கண்ணே! – யாழில்
இங்கே இசைத்திடோர் பண்ணே!
ஊழிடு துன்பம் பறக்க – நெஞ்சில்
ஓங்கியே இன்பம் சிறக்க – (யாழெடு)
வேயின் குழலிசை யோடு – இள
வேனிற் குயிலெனப் பாடு!
நோயின் துயரெலாம் ஓட – உயர்
நோக்கமும் ஆக்கமும் கூட – (யாழெடு)
இன்பத் தமிழினிற் பாடு! – இனம்
ஏற்ற முறத்தினம் நாடு!
அன்னைத் தமிழ்த்திரு நாடு – நலம்
ஆர்ந்திடவே வழி தேடு! – (யாழெடு)
நற்றமிழ் கற்றுநீ தேய்வாய்! – பாரில்
நம்மினத் தாருடன் சேர்வாய்!
வெற்றிமேல் வெற்றியே கொள்வாய்! – மூ
வேந்தர் பெருமையை விள்வாய்! – (யாழெடு)
இன்பந் தருந்தமிழ்ப் பாட்டு! – அதற்(கு)
ஈடில்லை என்றுநீ காட்டு!
துன்பத் தெலுங்கிசை கேட்டு – நொந்த
தொல்லை தனைவிரைந் தோட்டு! – (யாழெடு)
வள்ளுவர் மாட்சியைப் பாடு! – குறள்
வாய்மை நெறிதனிற் கூறு!
தெள்ளுதமிழ்ப்புகழ் ஓங்கத் தடை
செய்யும் பகையெலாம் நீங்க – (யாழெடு)
செந்தமிழ்ப் பெண்மையின் மாட்சி – தனைச்
செப்பிட வேண்டுமுன் காட்சி!
விந்தைச் சிலம்பென்றன் கண்ணே – என்று
விள்ளுவாய் எந்தமிழ்ப் பெண்ணே – (யாழெடு)
புலவர் பொதிகைச்செல்வன்
தேனமுதம் : சித்திரை 2018 / மே 1997
Comments
Post a Comment