Monday, February 17, 2014

சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன்

சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன்


ant erumbu01

சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது.  அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன.  அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது.

தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது.  தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது.  சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது.

வழியில் கிடந்த சிறு முள்ளை எடுத்தது.  அதில் கொசுவின் சிறிய இறகைப் பொறுத்தியது. சின்ன குடை கிடைத்தது.  தனது சிறிய முன்னங்கால்களால் அதைப் பிடித்துக் கொண்டது.  சிரித்துக் கொண்டே சிறு நடைபோட்டது சின்னா.

வழியில் சில சிறு செடிகளையும் சிறு பூச்சிகளையும் கண்டது.  அவர்களுக்கு வணக்கம் சொன்னது.  ‘தன் நண்பன் சிறு கரையான் வீடு எங்கே?’ எனக் கேட்டுக் கொண்டே சென்றது.

சிறிதுநேரம் ஆனது.  சிறு மழை நின்றது. சிறு காற்றடிக்கத் தொடங்கியது.  பிய்ந்து போனது சின்னாவின் சிறுகுடை.  சிறு முள் மட்டும் சின்னாவிடம் இருந்தது. அதை ஓரம் போட்டது.

சுற்றும் முற்றும் தன் சின்ன குடையைத் தேடியது. சிறிது தொலைவில் ஒரு சிறிய குடில்.  சிறு புல்லிதழில் அழகாய் இருந்தது.  சின்னா அருகே சென்றது.  சிறிய பேன் வெளியே Louse pean01வந்தது. சின்னாவை வணங்கியது. சின்னாவும் மறு வணக்கம் சொன்னது.

“நீ எப்படி இங்கே” சின்னா கேட்டது.

சிறுபேன் மறுமொழியாக, “நான் ஒரு சிறுமி தலையில் இருந்தேன். சிறுமியின் அப்பா அவளைத் தூக்கி வந்தார்.  சிறுமியின் தலையை விட்டு இறங்கினேன்.  அப்பாவின் தலைக்கு ஏறினேன். அவர் தலையோ முழு வழுக்கை.  வழுக்கி கீழே விழுந்து விட்டேன்”, என, தன் சின்ன கதையைக் கூறியது.

“இப்படியே இருந்தால் எப்படி?!” சிற்றெறும்பு சின்னா வருந்திக் கேட்டது.

‘குளிக்க வருவார்கள்.  தங்கள் சிறு உடைகளை, அந்த சிறிய பாறையில் வைப்பார்கள்..  அதன் வழியாக ஒரு எண்ணெய் இல்லாத் தலையில் ஏறிக் கொள்வேன்’, என்று, தன் திட்டத்தைச் சொன்னது சிறு பேன்.

சிரித்தது சின்னா. சின்னாவின் சிறிய கண்கள் குடிலின் கூரையைப் பார்த்தன.  “குடிலில் சிறு ஓட்டை இருந்தது. சிறுமழை பெய்தாலும், நீர் கசியும்.  இந்த சிற்றிறகு அந்த ஓட்டையை அடைத்து விட்டது” என மகிழ்வாய்ச் சொன்னது சிறுபேன்.

தனது சின்னக் குடையில் இருந்த சிற்றிறகு, அந்தச் சின்னப் பேனுக்குப் பயன்பட்டதை, எண்ணி மகிழ்ந்தது சின்னா.

புதிய நண்பரிடம் விடைபெற்று, தனது சிறிய நண்பரைக்காணப் புறப்பட்டது, சிற்றெறும்பு சின்னா.

வெற்றிச்செழியன்02 


நன்றி : அகரமுதல இணைய இதழ் 04.02.2045/16.02.2014

பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

pongal vaazhthu01
ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா!
மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா!
கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு
விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த
உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு
கழனி உழுபடைக் கருவிகள் காளை
உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி
வயலில் வீட்டில் நாட்டில் எங்கும்
புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள்
இத்தரை யெங்கும் இன்பமே எனினும்
வெற்பினை எறிந்து வீரம் விளைத்த
அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன்
இற்றை நாளிலும் இந்தியச் சிறையில்
இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்?
00000
ஆரிருள் கவிந்த அழகிய ஈழம்
போரில் சிதைந்து புழுதி படிந்திட
பொங்கல் பானையில் பொங்குமோ மகிழ்வு?
00000
முள்வேலி முகாமில் அழகிய ஈழம்
போரில் சிதைந்து புழுதி படிந்திட
பொங்கல் பானையில் பொங்குமோ மகிழ்வு?
00000
முள்வேலி முகாமில் மூன்றரை இலக்கம்
கள்ளமில் தமிழர் கலங்கும் வேளையில்
எள்மூக் களவும் இல்லையே இன்பம்?
00000
முள்ளி வாய்க்கால் முற்ற மதிலை
நள்ளிருள் விடியுமுன் நாசமாக்கிய
ஆரிய அரக்கி ஆளும் நிலத்தில்
சீரினை இழந்தபின் தீஞ்சுவைப் பொஙகலேன்?
00000
கண்ணீர்க் கடலில் கையறு நிலையில்
தண்டமிழ் மீனவர் தவிக்கும் போழ்தில்
காணும் பொங்கலும் கசக்குதே   வேம்பாய்!
00000
 கொள்ளை இலாபம் கூடி அடிக்க
வெள்ளையர் தொழிலக வாணிகம் கொழுக்க
கழனிவாழ் உழவரைக் கவலையில் ஆழ்த்தி
உழவை உள்ளூர் தொழில்களை அழிக்கும்
கொடுமை இந்தியம் கூத்திடும் நாட்டில்
வடித்த சருக்கரைப் பொங்கலும் புளிக்குதே!
00000
ஆயிர மாண்டாய் அடிமையாய் உழன்று
நாயினுங் கீழாய் நலிந்து கிடந்த
தாயினங் காக்க தமிழ்த்தோ ளுயர்த்தும்
கார்த்திகைப் பிறந்த காவிய நாயகன்
ஆர்த்தெழும் புலியாய் அடற்றகை மிளிர
போர்க்கள மாடிப் புகழ்தமிழ் ஈழம்
பார்மிசை விடுதலைப் பண்ணை இசைக்கையில்
பொங்குக பொங்கல் பொறுப்பீர் அதுவரை!
00000
சேரர் சோழர் பாண்டியர் வழியில்
வீரம் விளைத்து விதையாய் வீழ்ந்த
புலிகள் தாயகத் தாகம் தணிகையில்
பொலிக இன்பம் பொங்குக பொங்கல்!
00000
சீறியே பாயும் சேயிழை யோடு
ஏற்றினைத் தழுவும் இளையோர் வாலில்
கடும்பகை மோதிக் கரிகால் வளவன்
விடுதலைப் போரை வெல்லும் நாளே!
பொங்கல் திருநாள்! புத்துயிர் பெறும்நாள்!
பொங்கும் மகிழ்வால் பொங்கலைப் படைப்போம்!
செங்கள மாடிய செந்தமிழ்ப் புலிக்கே!நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

nammazhvarpadam01
 சேற்று வயலில் செம்மண் நிலத்தில்
ஆற்றில் காட்டில் அணையில் மலையில்
காற்றில் தோய்ந்து களமதில் காய்ந்து
மாற்றம் வேண்டி மனம்மிக ஒன்றி
ஊரினை நாட்டினை உழைக்கும் உழவரை
பாரினை பண்டைய வாழ்வினைக் காக்க
ஏரினைத் துவக்காய் எடுத்த பெரியோய்!
ஆளும் அரசுகள் செய்யும் அழிம்புகள்
நாளும் உழவரை நாச மாக்கிடும்
கேட்டினைத் தடுக்க கீழ்த்திசை வானில்
மூட்டிய நெருப்பாய் முகிழ்த்த கதிரே!
உடையில் உணர்வில் உரிமை மீட்பில்
தடைகள் தகர்த்திடும் தன்னல மறுப்பில்
நடையால் நானிலம் நிமிர்த்தும் உழைப்பில்
திண்மை நெஞ்சில் திறனில் நீயெம்
அண்ணல் காந்தி! ஆசான் பெரியார்!
சீரினை இழந்த செந்தமிழ் உழவரை
தேரினில் ஏற்ற தெருத்தொறும் நடந்து
நாட்டில் இயற்கை வேளாண் உழவை
நாட்டின உழைத்த நம்மாழ் வாரே!
தேட்டம் வேண்டித் தீதெலாம் புரியும்
கூட்டுக் கொள்ளை கொடுங்கோல் உலகில்
மக்கள் வாழ மாநிலம் செழிக்க
சக்கர மெனவே தரைமேல் சுழன்று
தன்னையே தந்த தனிப்பெருந் தலைவ!
உன்வழி ஒழுகும் உரமுடை இளையோர்
இன்னே எழுந்தனர் எழுவாய் நீயே!

நன்றி : அகரமுதல இணைய இதழ் 04.02.2045/16.02.2014

“இனிமைத் தமிழில்” மை!

“இனிமைத் தமிழில்” மை!

இனிமைத் தமிழில் இருக்கின்ற ” மை ” விகுதிக்
      கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன்
கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன்
     திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன்.
அண்மை யோடருமை அடிமை இம்மை
இனிமை இருமை இளமை இறைமை
இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை
ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை
ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை
     உடைமை உண்மை உம்மை உவமை
உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை
     ஊதுமை ஊடாமை ஊடுமை எண்மை
எளிமை எருமை எம்மை எழுமை
     எலாமை ஏவாமை ஏகுமை ஒருமை
ஒன்மை ஓதுமை ஓதாமை ஓடுமை
     ஓர்மை ஓடாமை கடமை கடுமை
கருமை கதிமை கருமை கயமை
     கண்மை காய்மை காயாமை காடாமை
கிழமை கீழ்மை கூடுமை கூடாமை
     கூர்மை கூறாமை கூகாமை கூவாமை
கொடுமை கொடாமை கெடுமை கெடாமை
கெழுமை கேண்மை கேளாமை கொண்மை
கொம்மை கோடுமை கோடாமை கோன்மை
கோராமை குறுமை குளுமை குரிமை
குடிமை குருமை கூர்மை கூடுமை
      கூடாமை சிறுமை சின்மை சீர்மை
சுடுமை சுடாமை சும்மை செம்மை
     செழுமை சேர்மை சேராமை சேய்மை
தகைமை தாய்மை திண்மை திருமை
     தீய்மை தீயாமை துணைமை தேய்மை
தேயாமை தூய்மை துவாமை தூவுமை0
      தொம்மை தொன்மை தோன்மை தோழமை
நறுமை நன்மை நீர்மை நீன்மை
      நீடுமை நீடாமை நீவுமை நீவாமை
நெடுமை நேர்மை நேராமை நேரிமை
     நோன்மை நோனாமை நோலாமை பசுமை
படிமை பன்மை பதுமை பகைமை
     பாலமை பாவுமை பாவாமை பான்மை
பிரமை புதுமை புன்மை புலமை
      பெருமை பெண்மை பெறாமை பெருமை
பொதுமை பொறுமை பொய்மை மகமை
     மடமை மறுமை மிடிமை முதுமை
மும்மை முகமை மெய்மை மென்மை
     மேன்மை மேவுமை மோதுமை மோதாமை
வன்மை வண்மை வலிமை வளமை
      வறுமை வராமை வாதுமை வாடாமை
வாளாமை வாழாமை வாய்மை வாலாமை
      வான்மை வெண்மை வெம்மை வெறுமை
எழுபத் தொன்பதுடன் தழுவும்நூறு சொற்கள்நான்
     உழுததில் கிடைத்தது; வழுவிய சொல்ஒன்று
தொழுது வணங்கும் தொல்தமிழில் தொல்லைமிகும்
     பழுதானதென நான்எண்ணும் பழுவான சொல்அது!
முப்பருவ காலத்திலும் தப்பாமல் இடம்பெறும்
     எப்போது காண்போம் முப்போதும் காக்கும்தாயை
 செப்பவழி காணாது செவ்விதழ் திறந்துமூடி
     எப்போது வருவாளென ஏங்கும்குழந்தைப் பருவத்துச்சொல்!
இளமை முறுக்குடன் வளமைக்காதலில் வீழ்ந்தார்
     தளர்ந்த மனத்துடன் தளராக்காதல் வளர்க்க
அரும்பு மலர்ந்து சுரும்பின்வரவு காணல்போல்
     இரும்பில் அரைபட்ட கரும்பானஇளமை பருவச்சொல்!
வாழும் வாழ்க்கையிலே பாழும்பிரிவு ஒன்று
     சூழும்நிலை காணும்போது வீழ்ந்தழும் நெஞ்சம்
கடலில்எழும் கதிரவன் மலைமறைவு காண்பதுபோல்
      உடலினுயிர் பிரிந்தபோது விடமாகும் முதுபருவச்சொல்!
கடுமை யானசொல் இடும்பை பலதரும்
     கொடுமையான சொல்லது விடுவிக்க முடியுமா?
இனிமைத் தமிழில் இப்படி ஒருசொல்லா?
     கனிவாகக் கூறுகிறேன்” தனிமை” யே அச்சொல்
- இளையவன்–செயா, மதுரை

Saturday, February 8, 2014

பழி வராமல் படி – பாவலர் வையவன்

பழி வராமல் படி – பாவலர் வையவன்

paavalar vaiyavan01
ஆய்ந்து படி
அன்னைத்தமிழ் ஆய்ந்து படி
அதனையும் ஆழ்ந்து படி
பார்மொழியாம் தமிழ் படி
பழகுதமிழ் நீ படி
யார்மொழியின் நூலெனினும்
பசுந்தமிழில் பாயும்படி
புதைபடும் தமிழ்மடி
பொலிவினைக் காணும்படி
புதுப்புது நூல்கள் படி
புரட்சிவர நீயும் படி
புகுந்திள நெஞ்சினிலே
புதுஒளி பாயும்படி
புனைந்துள நூலெதையும்
புரியும்படி தேடிப் படி
பகுத்திடும் நால்வருணம்
பாரினில் ஏன்இப்படி?
பகுத்தறி வாளர்களின்
பலவிதநூல் வாங்கிப் படி
கலைகளில் தமிழ் படி
கல்வியிலும் தமிழ் படி
அலைபடும் ஆலயத்தில்
ஆட்சியினில் தமிழைப் படி
திருமணம் தமிழ் படி
குடிபுக தமிழ் படி
நறுமண மானத்தமிழ்
மாண்புறவே தூக்கிப்பிடி
puthakambook01
மார்க்சுபெரி யாரைப் படி
மாவோஅம் பேத்கர் படி
மாவீரன் பகத்சிங் படி
மருதுதிப்பு வீரம் படி
பாவேந்தர் பாட்டுப் படி
பாவாணர் ஆய்வு படி
பாராண்ட தமிழுக்கொரு
பழிவராமல் தாங்கிப்பிடி
விழிகளில் தீப்பொறி
வெளிப்பட நீ படி
விழுந்தவர் எழுந்திடவே
விளங்கிவரும் நூலைப் படி
மொழிகளில் தாய்மொழி
முகிழ்ந்திட நீ படி
பழிசொலும் மூடர்களின்
பகைமுடிக்க வாளைப்பிடி!
( பாவேந்தரின் “நூலைப் படி-சங்கத்தமிழ் நூலைப் படி” என்ற மெட்டில் எழுதினேன்.)
நன்றி: முகநூல்

வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்


வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்

vaazhkai poraattam01
வாழ்க்கை என்பது போராட்டம்   -  எனில்
போரில் கலந்து வென்றிடுவோம்
vaazhkai poraattam03 vilaiyaattu game01
வாழ்க்கை என்பது விளையாட்டு -  ஆயின்
ஆடி வாகை சூடிடுவோம்
வாழ்க்கை என்பது பயணம்        -   ஆனால்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்
வாழ்க்கை என்பது கேளிக்கை  -     என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்
வாழ்க்கை என்பது கணக்கு       -  எனவே
போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம்
வாழ்க்கை என்பது வரலாறு          – அதனால்
செம்மைச் செயலைப் பதித்திடுவோம்
வாழநாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்.
- அகரமுதல இதழ் 12

மண் பறித்த மானம்! -இளையவன் செயா


மண் பறித்த மானம்! -இளையவன் செயா

joint rape03
விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக்
       கெடுதல் செய்வோரையும் கெடவைத்த
வீரமிகு  நேத்தாசியைப்பெற்று  வளர்த்த
      வங்கமண்  இன்று தொங்கிவிட்டதே !
மொழிஅது தாய்காத்த விழிஅந்த
       விழியை அழிப்பதற்கு விழையாதீர்
விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும்
       பிழையான விருதுஎனப் புறமொதுக்கி
joint rape01பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக்
      கழையாக  நினைத்தொடித்த  கவிஞர்
பிழையில்லா  இரவீ ந்திரநாத் தாகூர்
      பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் !
விடுதலை  வேட்கையால்  வீறுகொண்டு
      கெடுதலையே  செய்யும்   கேடர்களை
வெற்றிகொள்ள  வீரமுழக்கமிட்ட வீரர்கள்
      வற்றிப்  போகாதமண்   வங்கமண் !
இத்தாலி  மங்கைகுமுகாய  வித்துஆகஎண்ணி
      கொத்தாக  மக்களின்  கொடும்நோய்கண்டு
இத்துப்போன  உடம்பை  இதமாய்க்காத்து
     வித்தாகிய அன்னைதெரசா அரவணைத்தமண் !
இளமைப்  பருவம் இருபதைஎட்டிய
      பழங்குடி வளர்ந்த பருவப்பெண்joint rape04
குழுவே   பறித்தது குமரியின்கற்பை
     வழுவில்லாத் தீர்ப்பாம் வழங்கினார் !
பிர்பும் மாவட்டம் “காப்”சிற்றூரில்
      கற்பைச் சூறையாடிய கயவர்கள் !
பண்பாட்டை வளர்க்கநாட்டுப் பண்பாடிய
      திண்ணிய   உளம்கொண்ட தாகூரின்
சாந்தி  நிகேதனுக்குச்  சற்றுத்தொலைவில்
     சாந்தி  அடைந்துள்ளனர்  சரசத்தில் !
ஏந்திய  துன்பத்தை  ஏற்றமகள்
     தாங்கிய  குற்றம்  தான் என்ன ?
“ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள் எம்மை
      உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே
தீராத காதலினை நெஞ்சத்தோடு
      தீர்த்து விட்டாய் என்றாள்–பின்ஓடிவந்து
சீராளன் தாவினான்! வீழ்ந்தாள்! வீழ்ந்தான்!
    தேம்பிற்று   பெண்ணுலகு!  இருவர்  தீர்ந்தார்!
ஊரார்கள்   பார்த்திருந்தார்  கரையில்நின்றே
      உளம்துடித்தார்;  எனினும்அவர்  வாழ்கின்றார்!”
எழுதினர் கொடுமைப்பயிரை உழுதெடுத்து
     பழுதில்லாக்  காதலுக்கே கட்டுப்பாடா?
பாப்பாடினார் புரட்சிக்கவி படித்தும்joint rape02
   கூப்பாடு  போட்டேகற்பைக் கூடிப்பறித்தார் !
காளையினைக் கன்னி காண்பதுவும்
     கன்னியைக்  காளையவன் காதலிப்பதும்
இயற்கை  வகுத்திட்ட  இயல்பு அதனை
     செயற்கை நீதியால் சாகடித்தார் !
  ” மல்லிகையே மனமயக்கும் மருக்கொழுந்தே
       முல்லை முகிழ்த்த முழுமணமே
எல்லையிலா  அன்பே எடுத்தநறுஞ்சுளையே
       இல்லை  உனக்கீடென” அவர்கூற
“வானத்து உலாவரும் வட்டநிலாஒளி
      தானத்தில் வீழ்ந்ததால்  தளைவிடுத்த
அல்லி  மலரானேன்  நான்” என
     மெல்லஅவர் காதில் சொல்லிமகிழ்ந்து
 ”நானுமவரும் மனங்கலந்து நலம்பட்ட
     வேணவாக் காதலை விதைத்தது
பொல்லாத  குற்றமாம்! கல்லாத
      முள்ளான மனத்தார் முழங்கியதீர்ப்பு !
தண்டத்தொகை  முழுதும் தரவியலாதென
     தடிமனத்தார்  பலபேர் பிடித்துநான்
துடிக்கத்துடிக்க  இன்பம் துய்க்கலாமென்றே
     குடித்தீர்ப்பை வழங்கினானே குழுத்தலைவன் !
நான்குபேர்  கற்பழித்தாராம் நடுஇரவில்
   நாடேஅதிர்ந்தது!  சுழன்றது  நாவெல்லாம்
நாடாளும் நாயகர்க்கும் நாட்டில்உடற்க்
    கூடாளும் மக்களுக்கும் குலைபதறியது !
தலைநகராம் தில்லியிலே தான்அந்த
    விலைஇல்லா கற்பை  விலைப்படுத்தினர் !
குலைபதறத்தான்  செய்கிறது!- குறுஞ்சிறுவூரில்
     உலையிட்ட  அரிசிதன் நிலையழிவதைபோல
பன்னிருவர் பதைக்கப்பதைக்க கற்பழிக்க
    முன்னின்ற  தலைவரே  மொழிந்தாரே  !
சிற்றூரில்  வாழும்ஏழைச் சிறுகுடிமகள்தானே
     சீரழிந்தால்  என்னவெனச் சிந்திக்கமறந்தாரோ !
எச்சில்செயலை நாளிதழ்கள்  எடுத்துக்கூறியதை
     உச்சநீதிமன்ற  நீதியரசர் குச்சஉணர்வோடு
மிச்சமிருக்கும் மனிதநேயத்தை ஒச்சமாக்காது
    எச்சில்செயலை வழக்காக ஏற்றினாரே!-இலையெனில்
கண்மூடிப்  பழக்கமெலாம் மண்மூடாது
    பொன்னேஎன  காப்பதுபோல் பொல்லாதவர்
பெண்எனக்கு நேர்ந்தசெயலை இன்செயலென
     மண்ணுக்குள்  போட்டுமூடி மறைத்திருப்பாரே !
ஊரறிந்த பின்னேநான் உரக்கக்கேட்கிறேன்
    சீராக வளர்த்தஎம் செவ்வியகாதலை
கூரியவாளால் கூறுபடுத்திவிட்டு கூறுகிறார்
    சீரியதீர்ப்பாக,  சில்லரைகள் செய்தசெயலை !
எச்சிற்பண்டத்தை நாய்கள் எடுத்தசெயலை
    உச்சநீதி மன்றம் ஓடோடிவந்து
வழக்குத் தொடுத்துள்ளது சழக்கர்கள்மீது
     பழங்குடி மகளுக்கு வழங்கும்நீதி! –இடையில்
மாநிலஅரசோ காட்டுகிறது  நாநீளம்
      மாதுநல்லாளுக்கு வேலையும், மனையும்
தோதாகத்தந்து உள்ளம்  வேதுஅடக்குகிறது
     பாதகமில்லை பாவம் பழங்குடிமகளென்று !
வாய்நீளம் காட்டும் வஞ்சகரே
     மெய்யானஎன் ஆளனுக்குரிய மெய்தனையே
பொய்யாகத் தழுவிப் புரைசெயல்கண்ட
      உய்யும் மக்களே ஒரேகேள்வி ?
வழக்கு  — உசாவிப்பு  — வாகான  தீர்ப்பு
     வாழ்வதற்கு  வேலை,  வசிப்பதற்குவீடு
வழங்கி  விட்டோமென முழங்குகின்ற
     துலங்கும் அரசே இத்தூமகளின்கற்பைக்
கொள்ளையடித்த  கொடுமையினை  அகற்றி
      பிள்ளை அவனுடன் பெரிதும்சேர்த்திட
பொற்பின்  மகுடமாகப் போற்றுகின்றஎன்
     கற்பைவழங்க முடியுமா? சொற்கூறும் வாயோரே !”
                           இளையவன் – செயா, மதுரை
kandhaiya01 பெரியார்  ஆண்டு  135  தொ.  ஆ.  2878 தி. ஆ.  2045
                        சுறவம் (தை)  26;     08–02–2014

ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு


ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு

SingingChildren02
 “தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?”
“கொஞ்சம் பொறுங்கள் அம்மா!”
“என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா?  அப்பாவும் நானும், முன்பே  எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!”
 “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?”
(அப்பா, வந்துகொண்டே)
“சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!”
 “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!”
“என்ன வரவில்லையா? நீதானே பாட வேண்டும். நாங்கள் நீ, பாடிப் பரிசு வாங்குவதைப் பார்க்கத்தானே வருகிறோம்!”
“அப்பா! அங்கே  கூடப்படிப்பவர்கள்  எல்லாம் வருவார்கள்.”
 “வரத்தானே செய்வார்கள். அவர்கள் முன்னிலையில் பாடிப் பரிசு பெற்றால்தானே உனக்குப் பெருமை.”
“அவர்கள் என்னை, நொண்டி, நொண்டிக்கை என்றெல்லாம் கேலி செய்வார்களே!”
 “உன் இடக்கை வளைந்து உள்ளது. இதைவிடப் பெரிய ஊனம் இருந்தால்கூடக் கேலி பேசக்கூடாது. கால் ஊனமானவர்கள் இமயமலை ஏறவில்லையா? நாட்டியம் ஆடவில்லையா? ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுப் பரிசுகள் வாங்கவில்லையா? கை இல்லாதவர்கள் அருவினை ஆற்றிப் புகழ் பெறவில்லையா?”
pilot without hands02“ஆமாம்! நீங்கள்கூட பிறப்பிலேயே இரு கைகளும் இல்லாது பிறந்த  செகிகா கொக்சு என்னும்  25 அகவை நிறைந்த பெண்மணி  கால்களால் வானூர்தியை இயக்கும் பயிற்சி பெற்று அருவினை புரிந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.”
 “அவர், அமெரிக்காவைச்சேர்ந்த அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்தவர். நம் தமிழ்நாட்டிலேயே எண்ணற்றவர்கள் விடாமுயற்சியால் அருவினைகள் புரிந்து வருகின்றனர்.
 மின்சாரம் தாக்கியதால் இரண்டு கைகளையும் இழந்த அன்பு என்பவர், விளம்பரம் எழுதி வரையும் தொழிலைப் பிறர் மூலம் நடத்தி வருகிறார்.
 மின்சாரத் தாக்குதலால் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்த சனார்த்தனன் என்பவர் வாயால் ஓவியம் வரைந்து இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
 SingingChildren01
இயந்திரத்தில் சிக்கிக்கையிழந்த மணிகண்டன் என்பவர் நடைபாதைக் கடைமூலம் தொழில் நடத்திப் பிறருக்கு வழிகாட்டியாக உள்ளார்.
மணிகண்டன். இயந்திரத்தில் சிக்கியதால் கையை இழந்தவர் – கடைவீதியில் நடைபாதைக் கடை வைத்து விற்பனை செய்கிறார்.
கைகால்கள் இல்லாமல் பிறந்த கோவை கிருட்டிணமூர்த்தி என்பவர் பாடகராகத் திகழ்ந்து 1500இற்கு மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். இவர்,  தமிழக அரசின் கலைமாமணி விரும் பெற்றுள்ளார்.
இத்தகைய மாற்றுத்திறனாளர்கள் பலரைப்பற்றி, ‘சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்’ என்னும் நூல் எழுதியுள்ள கவிஞர் ஏகலைவன், நேர்ச்சியில்(விபத்தில்) கால் இழந்தாலும் மனம் தளராமல் கட்டுரையாளர், கவிஞர் எனச் சிறப்புற்றுப் பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்று வருபவர். இந்தப் புத்தகத்தை வாங்கித் தருகிறேன். படித்துப்பார். இப்படி ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளர்கள், தன்னம்பிக்கையை இழக்காமல் SingingChildren04வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். நீ கைகளால் இசைக்கருவி இசைக்க முயன்றாலும் வெற்றி பெறுவாய்! இப்பொழுது வாயால்தானே பாடப்போகிறாய்! ஏன், அஞ்சுகிறாய்?”
 “அப்பா! நீங்கள் இருவரும் ஊட்டிய தன்னம்பிக்கையால்தானே நன்றாகப் படிக்கின்றேன்; பாடுகிறேன். ஆனால், என்னைக்  கேலி செய்வதால் பொது இடங்களுக்குப் போகப் பிடிக்கவில்லை.”
 “அப்படியா? அதற்குக் காரணம் நீதான் என எண்ணிப் பார்த்திருக்கிறாயா?”
 “ நானா? நான் எப்படி காரணமாவேன்?”
“உன் நண்பர்கள், கணக்கு சொல்லிக்கொடு, தமிழ்ப்பாடம் சொல்லிக்கொடு, என்று வந்தால் சொல்லித்தருகிறாயா? விரட்டி அடிக்கிறாய் அல்லவா?”
 “ஆமாம்! என்னைக்கேலி பேசுவார்களாம்! ஆனால், என்னிடம் கற்றுக்கொண்டு நல்ல பெயர் வாங்குவார்களாம்! அது எப்படிச் சரியாகும்?”
 “நீ உன்னிடம் வருபவர்களிடம் உதவுபவனாக அன்புள்ளவனாகப் பண்புள்ளவனாக நண்பனாக நடந்துகொண்டால் உன்னை   நண்பனாகத்தானே பார்ப்பார்கள்! இல்லாவிட்டால் இப்படித்தானே கேலி செய்வார்கள்! நண்பன் என்ற முத்திரையைப் பெற வேண்டிய நீ, உன் போக்கால் கேலி முத்திரைக்கு ஆளாவதை எண்ணிப் பார்த்தாயா?”
 “ஆமாம் அப்பா! தவறு என் மேல்தான் உள்ளது. இனி நான்  எல்லார்க்கும் என்னால் முடிந்த அளவு உதவுகின்றேன். ஆனால், இன்றைக்குப் பரிசு கிடைக்காவிட்டால் கேலி செய்ய மாட்டார்களா?”
 “போட்டியில் பங்கேற்பது பரிசுக்காக என்று எண்ணக் கூடாது. திறமையை வெளிப்படுத்தி மகிழ ஒரு வாய்ப்பு என எண்ண  வேண்டும். அத்துடன் பரிசு கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி. போட்டியில் பங்கேற்கும் எல்லார்க்குமா பரிசு கிடைக்கும்.”
 “இல்லையே! நீங்கள் நடத்தும் போட்டிகளில் அனைவருக்கும் பங்கேற்புப் பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறீர்களே!”
 “இந்தப் போட்டியில் நீ பங்கேற்றதும் பரிசு வாங்காவி்ட்டாலும் வாங்கினாலும் நானும் அம்மாவும் உனக்குப் பரிசு தருகிறோம்.போதுமா?”
 “சரிங்கள் அப்பா! இதோ புறப்படுகிறேன்.“
“பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் – என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் – வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் – மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?
என்னும்  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதையைத் தானே பாட வேண்டும்.”
 “ஏங்க! இந்தமாதிரிப் பாடலுக்கெல்லாம் பரிசு தருவார்களா? வேறு பாடல் பாடச் சொல்வோமா?” என்றார் அதுவரை அமைதியாக அப்பா- மகன் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா!
 “படுகொலைகளுக்கு ஆளான ஈழத்தமிழர்களில் எஞ்சியவர்கள் மன நிலையை உணர்த்தும் வகையில் உருக்கமாக இவன் பாடினால் இவனுக்குத்தான் முதல் பரிசு.  பரிசு தராவிட்டால், அந்த அவையில இந்தப் பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ்வோம்!”
 * * * * * * * * * * * * * * *
  “என்ன சுடர் பரிசுக் கேடயத்தை வைத்துக்கொண்டு தூங்குகிறாயா?”
 “இல்லைங்க அப்பா! காலையில்  நீங்கள் சொன்னதை எல்லாம் எண்ணிப் பார்த்தேன். உங்கள் பேச்சைக்கேட்டு இங்கே வந்து பாடினதால்தானே பரிசு கிடைத்தது. இனி, என்னை யாரும் கேலி செய்யாத வகையில் என் திறமை யின் மூலமும் நட்பின் மூலமும் என்னை அடையாளம் காட்டுவேன்! என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவியாக இருப்பேன்!”
 அம்மாவும் அப்பாவும் ஒரு சேர,  “இப்பொழுதுதான் எங்களுக்கு மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கிறது”  என்றார்கள்.

SingingChildren05

- அகரமுதல இணைய இதழ்

Tuesday, February 4, 2014

அகரமுதல:சிறுகதை: நீதான் கண்ணே அழகு! – அன்பு akaramuthala: story by anbu

நீதான் கண்ணே அழகு! – அன்பு

 mother and girl02
அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை!
யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே!
போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே!
சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது?
எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது.
சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்!
அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா?
இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே!
உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது?
எலும்பு அமைப்பிற்கேற்ப  முகவடிவமும் மாறும்.
எனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லையே அம்மா! அப்புறம்
எப்படி என்னை அழகு என்று சொல்ல முடியும்?
நமக்குத் தாய்மொழி தமிழ்மொழி. அதுபோல் ஆங்கிலம் ஆங்கிலேயர்களுக்குத் தாய்மொழி!
மொழி அறிவிற்கும் அழகிற்கும் தொடர்பு இல்லையம்மா! உன்னாலும் எந்த மொழியிலும் தேர்ச்சி பெற முடியும். சிவந்த தோலும்  ஆங்கிலப் பேச்சும்தான் அழகு என நினைப்பது தவறம்மா!
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல் நீங்கள் என்னை அழகு எனக்கூறி அமைதிப்படுத்துகிறீர்கள் அம்மா! நிறமும் வடிவும்தானே அம்மா அழகு!
இல்லை கண்ணா! உண்மையிலேயே நீ அழகுதான்! எப்படி என்று சொல்லட்டுமா?
சொல்லுங்கள் அம்மா! அதையும் கேட்கிறேன்.!
நீ போன திங்கள் விளையாட்டுப்போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வரும் பொழுது என்ன செய்தாய்? உனக்கு அடுத்துவந்த பொன்மாரி கீழே விழுந்ததும் கண்டும் காணாமல் ஓடிப்போனாயா?
 எப்படி அம்மா அப்படி அவள்அடிபட்டதைப் பார்த்தும் ஓட முடியும்.
நீ முதலில்  வந்தால்தானே பரிசு! அப்படியிருக்க நீ ஓடும்பொழுது ஏன் நின்று உதவினாய்?
பரிசு வேண்டுமென்றால் அடுத்த போட்டிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், பொன்மாரி கீழே விழுந்ததும் முதலுதவி செய்யாமல் போய் அவளுக்கு ஏதும் தீங்கு நேர்ந்தது என்றால் பின்னர் அதைச் சரி செய்ய முடியாது அல்லவா அம்மா? நீங்களும் அப்பாவும்தானே பிறருக்கு எந்தச் சூழலிலும்உதவுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றீர்கள்!
அவ்வாறு நாங்கள் சொன்தை நீ கேட்டு நடந்தாய் அல்லவா? அப் பண்பு அழகு!
போட்டியில் பரிசு பெறும் வாய்ப்பு இருந்தும் ஓடுவதை நிறுத்திவிட்டு உன் தோழிக்கு உதவினாய் அல்லவா? அந்தப் பெருந்தன்மை அழகு!
உதவியதால் பரிசு கிடைக்காமல் போனது என்று எண்ணாமல், தோழிக்கு உரிய நேரத்தில உதவ முடிந்தது என மகிழ்கிறாய் அல்லவா? அந்த மகிழ்ச்சிச் செயல்  அழகு!
கல்வி யழகே அழகு என நீ படித்தபடி நன்கு படிக்கிறாய் அல்லவா? அந்தப் படிப்புணர்வு அழகு!
 உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று  தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார் அல்லவா? அதன்படி நீ மாற்றுத் திறனாளிகளுடன் நன்கு பேசி அவர்களுக்கு உதவி செய்கிறாய் அல்லவா? அத்தகைய நற்செயல்பாடுகள் அழகு!
இப்படி உன் செயல்கள் பற்றி எவ்வளவோ  சொல்லிக் கொண்டு போகலாம்.
எனவே, அக அழகு நிறைந்த நீ உண்மையிலேயே அழகானவள்! புற  அழகு பற்றி எண்ணாமல் உன் பண்புகளை மேலும் வளர்த்துக் கொள்! என்றைக்கும் நீ அழகாகவே விளங்குவாய்!
நன்றிங்கம்மா! நான்அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கிருந்தது. இனி அப்படி இருக்க மாட்டேன்! பிறரிடமும் உண்மையான அழகு எதுவென உணர்த்துவேன்!
அடச் செல்லமே! உண்மையிலேயே நீ எவ்வளவு பெரிய அழகியாக இருக்கிறாய் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது! குழந்தைகள் எப்படி இருந்தாலும் பெற்றோர்க்கு அழகுதான். என்றாலும் உன்னைப்போல் அக அழகு உள்ள குழந்தை ஊராருக்கும் அழகு என்பதில் எங்களுக்குப் பெருமை அம்மா!  வா! அப்பாவிடம் சென்று உன் தாழ்வு மனப்பான்மை நீங்கியதைச் சொல்வோம்! அவரும்  மகிழ்ச்சி அடைவார்!

Monday, February 3, 2014

நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன் : புதுவைத் தமிழ்நெஞ்சன் akaramuthala : muthukumaran by thamizh nenjan

நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்

- புதுவைத் தமிழ்நெஞ்சன்
Muthukumaran02
சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற
முத்துக்குமரா….! தீப்பந்தம்
ஆனாய் – நாடற்ற
ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே
நம்மினத்தை அழிக்கிறதே
வீணாய்!
இந்தீய அரசுன்னைப் படுகொலையும்
இம்மண்ணில் செய்தது தான்
உண்மை – குமரா..!
செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர
தீக்குளியல் செய்ததெல்லாம்
வன்மை!
யாரென்று நேற்றுவரை நானறியேன்
தமிழ்க்குமரா இம்மண்ணில்
உன்னை – உன்னை
யாரென்று அறியாதார் இன்றில்லை
என்பதுதான் நாமறிந்த
உண்மை!
ஈழத்தில் எரிகிறதே இந்தீயா
மூட்டிவிட்ட இனவெறியாம்
நெருப்பு – தமிழ்
ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை
அழித்தொழிக்க தமிழ்மறவா
விரும்பு!
சிங்களத்தின் கூலிப்படை ஆனபின்னர்
நாமெதற்குத் தரவேண்டும்
மதிப்பு – ஈழச்
செங்களத்தில் தமிழினமும் போராட
செங்குருதி சிந்துவதே
உயர்வு!
எரிந்தவனை எரித்துவிட்டு எரிதழலாய்
நாம்நிமிர்ந்து பகைமுடிப்போம்
தமிழா! – பகை
வெறியனைத்தும் வேரோடு பிடுங்கிடவே
வீறுகொண்டு விழித்திடடா
தமிழா!
இனவுணர்வை உன்நெஞ்சில் ஏற்றியிங்கே
எப்போதும் வாழ்ந்திடடா
தமிழா ! – தமிழ்
இனம்வாழ எரிந்துவிட்ட முத்துக்குமரனை
இனிவாழச் செய்திடுவோம்
தமிழா!
Muthukumaran01
நன்றி: தமிழ்நிலம் – கலை இலக்கிய இருதிங்கள் இதழ் 14-01-2009

தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்! - அண்ணல்தங்கோ ; akaramuthala: chinnachamy by annalthango

தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!

-  தமிழ்ப் புரவலர்  தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ
chinnasami03
அ)
நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர்
நேர்மைத் திறமுடையாய்! – தமிழர்
கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே
 குளித்த தமிழ் மறவா!
ஆ)
‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர்
அன்புமக்க ளாகார்!’’ என்றே
நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா!
நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்)
இ)
வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த
வாழ்வை நெருப்பில் இட்டாய்!
செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா!
திருக்குறட் கோமகனே!  (நெஞ்சத்)
உ)
பஞ்செனத் தீயில் இட்டாய் ! – உடலைப்
பைந்தமிழ் காத்திடவே!
அஞ்சாத் தமிழ் அரிமா! – சின்னப்பா!
ஆண்மகன் நீயே! அப்பா (நெஞ்சத்)
ஊ)
மஞ்சள் இழக்க வைத்தாய்! – உன்துணை
வாழ்வில் நெருப்பை வைத்தாய்!
பிஞ்சுமகள் செல்வி! – தமிழ்த்தாய்ப்
பெருமை அடைய வைத்தாய்! (நெஞ்சுத்)
எ)
பகைவர் உள்ளம் திருந்த – தமிழர்
பண்பை உணர்த்தி விட்டாய்!
நகைக்கத் தகும் மொழியாம் – இந்தியை
நாடே வெறுக்க வைத்தாய்! (நெஞ்சத்)
ஏ)
தகைமை மிகும் வள்ளுவர் – தமிழ்ச்
சான்றோர் சொல் சான்றாண்மை!
மிகும் அறப்போர் புரிந்தாய்! & வாழ்விலே
மேன்மக னாகி நின்றாய்! (நெஞ்சத்)
ஐ)
மொழி – இன – நில உரிமை! – இல்லாத
மொட்டை மர வாழ்க்கை!
பழியுடைத் தென்று கண்டாய்! & தமிழர்
பல்குழுத் தீமைகண்டாய்! (நெஞ்சத்)
ஒ)
‘‘அழிவேன்! தமிழர் ஒன்றி – வாழ்ந்திட
ஆக்க உணர் வளிப்பேன்!
மொழியின் உயர்ந்த தமிழ்! – ஓங்கநான்
மூழ்குவேன்! தீயின்!’’ என்றாய்! (நெஞ்சத்)
ஓ)
தலை கொடுத்தான்! குமணன்! – தமிழ்த்தாய்
தனிசசிறப் பெய்திடவே!
தலைவைத் தெரிந்து கொண்டே! & நந்தியும்
தண்டமிழ்த் தேனை யுண்டான்! (நெஞ்சத்)
ஔ)
நிலையில்லா யாக்கையினால் – சின்னப்பா!
நிலையான ஆக்கம் தந்தாய்!
மலைமேல் விளக்கௌனவே! – தமிழ்த்தாய்
வாழ ஒளி யளித்தாய்! (நெஞ்சத்)
குறள்நெறி: பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964: பக்கம் 12

அகரமுதல : கவிதை : செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி akaramuthala - chinnachamy

செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல்

chinnasami01
1.
செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி!
தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ!
வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக
விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ!
தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்!
தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்!
அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம்
யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே?
2.
தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித்
தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி
அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி
அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக்
கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி
குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக்
கொடுத்துமுதற் களப்பலியாய் கொண்டாய் வெற்றி!
குலவு தமிழ்க் காவலனே! சின்னச்சாமி!
3.
ஏடதிலே தமிழ்ப் பெருமை எழுதித் தீர்ப்பார்;
இணையில்லை தமிழிசைக்கே என்பர்; கூத்து;
நாடகங்கள்; திரைப்படங்கள்; மேடைப்பேச்சும்
நடத்திடுவார்; பொருள்சேர்ப்பார்; தமிழால் வாழ்வார்
நாடறிய இந்திக்கே ஓர்போர் ஆட்டம்
நடத்திடவே அரசதனை ஒடுக்கக் கண்டாய்
தேடரிய திருவிளக்கே சின்னச்சாமி!
தீக்குளித்தாய் செந்தமிழின் காதலாலே!
4.
அன்றொருநாள் செந்தமிழின் சுவையில் மூழ்கி
அறம்பாடி வைத்தநந்திக் கலம்ப கத்தைச்
சென்றிடுநும் முயிரிதனை கேட்டா லென்றே
செப்பவுமச் செய்திக்கு அஞ்சா னாகி
வென்றிடுமத் தண்டமிழ் நூல் கேட்டே நல்ல
வீரச்சா வேந்திநின்ற பல்லவன் தான்
இன்றைக்குந் தமிழ்காக்க வந்தான் போலும்
என்னம்மோ யார் கண்டார் சின்னச்சாமி!
5.
இன்றல்ல நேற்றல்ல பல்லாண்டாக
இனிய தமிழ் மொழியழிக்கப் பல்லாற்றாலும்
ஒன்றிவந்த வடமொழியால்; பிறர்பண் பாட்டால்;
உற்றதீ; அறியாமை; வெள்ளம் தன்னால்;
பொன்றாமல் மேன்மேலும் பொலிந்து வாழும்
பொருவில்லாப் பைந்தமிழை இனிக்கும் பேச்சை
இன்றுவந்த இந்திமொழி கெடுக்க எண்ணும்
எண்ணத்தை உயிரீந்து கெடுத்து விட்டாய்!
6. பிற்காலச் சோழர்களின் பெருவாழ் விற்கு
பெற்றமகட் கொடையாகக் கொடுத்து வந்த
முற்கால மறவர்களின் குலங்கள் வாழ்ந்த
மூதூராம் கீழப்பழுவூரில் தோன்றித்
தற்காலம் தமிழர்களின் பெருவாழ்விற்கே;
தமிழ்டமிழ்க்கே இடையூற்றை இந்தி செய்ய
முற்போர்க்கோ லங்கண்டாய் சின்னச் சாமி!
முத்தமிழ்க்கா வலனானாய் வாழ்க! மன்னா!
7.
உன்னரிய தாய்மொழியின் தியாகங் கண்டு
உளம் நெகிழ்ந்த நடிகரெம்சி இராமச் சந்திரன்
பன்னரிய செயலென்றையாயி ரத்தை
பண்புடனே சுப்ரமணியம் ஆயி ரத்தை
பொன்முடிப்பாய் அளித்துள்ளார்; மற்றுமுள்ளோர்
புகழ்கின்றார்; வியக்கின்றார்; போற்றுகின்றார்;
மன்னியநின் திருவுருவை சிலையாய் நாட்டி
மறவாமல் வணங்கிடுவோம் சின்னச்சாமி!
- குறள்நெறி: பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964: பக்கம் 12

அகரமுதல - கவிதை - உரிமை! : ஈரோடு இறைவன் akaramuthala : urimai

உரிமை ! – ஈரோடு இறைவன்

Erode iraiwan01
விலங்கு animal01
வாழ்கிறது
காட்டில்
விடுதலையோடு!

fish-meen01
மீன்
தண்ணீரில்
வாழ்கிறது
விடுதலையோடு !புழு
 மண்ணில் worm-puzhu01
வாழ்கிறது
விடுதலையோடு !

தமிழா
நீ
வாழ்கிறாயா
விடுதலையோடு !

அகரமுதல - கவிதை - கொரண்டிப்பூ :இளையவன் செயா


கொரண்டிப் பூ!

  இளையவன் – செயா  மதுரை
பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045
சுறவம் ( தை ) 16            29–01–2014
korandipoo
ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய்
ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே
வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித்
தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை
மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன்kandhaiya01
பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு
உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச்
சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே!
மல்லை   நகரின்  மாண்புறு  துறைஅன்று
சொல்ல  ரியபொருட்  களைச்சேர்த்  தனுப்பி
இல்லை  எமக்கீடென  எழிலுட  னிலங்கி
எல்லை  யிலாப்பெருமை   யினால்ஏற்றம்  பெற்றதே!
maamallapuram05கடல்  கடந்து  கலம்விட்ட  துறையின்று
மடல்    உதிர்ந்த   மலராக;    அழகு
உடல்   இளைத்த   உருவாகி    புகழுக்கு
இடர்ப்   பாடாயிருந்த  நிலையெண்ணியும்  வாழ்வில்
தொல்லையெனும் சுமையைத் தொகையாய்ச் சேர்த்திட்ட
கல்லொத்த   இதயத்தில்  கணநேரம்  நினைந்து
மல்லாந்து  படுத்தேன்   மணல்  வெளியில்
முள்ளாகிக்   குத்தியதே  முதுகில்   குறுமணல்!
கல்லெடுத்து   வந்தகவின்  மிகுவீர  மெலாம்அறிஞர்
சொல்லெடுத்  துப்பாராத  தால்மாறிற்றே – என்றும்மாறா
மல்லைக்    கடலின்   மாஅலை  யோசைமட்டும்
மெல்ல  என்செவியில்  மோதிற்றே!   அந்நேரம்
கலத்திற்கு  காட்டுகின்ற   கலங்கரை   விளக்கொளியில் maamallapuram04
உளத்திற்கு   ஊறுசெயும்   ஒருகாட்சி  கண்டேணுடல்
வளத்திற்கு   குறையிலா   வஞ்சி   யொருத்திசாவுக்
களத்திலே   வீழ்வதற்கு   கடுகி   வந்தாள்!
வந்தவள்   தானும்  வானோக்கி  – இம்மண்ணில்
தந்தவளைத்   “தாயே”யென   வாயா  லழைத்து
தந்த   வளைக்கையை   தானிறுக்கிக்  கட்டியவாறு
உந்திப்பா   யுந்தவளையென  உவரியிலே  கலந்திட்டாள்!
–இத்தனையும்
maamallapuram02நொடியில்   முடிந்திட்ட  நிகழ்ச்சிகண்டு  உலைக்கூட
அடிபட்ட  அனற்பிழம்  பாய்ஆன    நான்
துடித்திட்ட   நெஞ்சோ  டவள்துரை  பார்த்து
கடிதேகிக்   கரைசேர்த்  தேன்கடல்நீர்   கொண்டாளை!
சேர்த்தவளைச் செப்பனிட்டு  சிவந்தமுகம்  பார்த்திருந்தேன்
ஊர்த்தவளை  செய்கையினால்  உயிரிழக்கத்  துணிந்தாளோ;
வாய்த்தவனின்  கொடுமையால் வாரியேக  முனைந்தாளோ;
ஏய்த்தவனின் செயல்மறக்க  ஏகினாளோ  கடலுக்கு!
அறிந்தாக  வேண்டும்  அரிவைதெளிர்ச்சி  பெற்றாலென்றmaamallapuram01
எண்ண  அலைகள்  இதயத்தில்  எழும்போது
சுண்ண    நிறங்    கலந்தசுடர்    விழியாள்
கண்ணைத்  திறந்தாள்   கருங்குவளை   மலரனைய!
விண்ணைப் பார்த்தவிழி யாலென்னைப் பார்த்தாளப்பார்வை
“புன்னகையே  பெண்ணிற்கு  பூண்என்பதை  மறந்து
பொன்னையும்  பொருளையும்  போற்றுகின்ற  மண்ணில்
என்னை  யேன்கரை சேர்த்தீர்”  என்றதுவே!
சாவை   நாடுதற்குச்  சரியான காரணந்தான்
பாவையினை   நான்   கேட்டேன்    அவளும்
கோவைப்பழக்   கண்விழித்துப் “பூவையினை  சிலர்வெறும்
பூவாகக்   கருதுகின்ற   காரணத்தா  லென்றாள்!”
விளங்காத   சொல்கூறி   விழிநீரைச்  சிந்துகின்றாய்
இளங்காதல்  தோல்வி  தானுன்னைச்  சாவுக்
களங்   காணத்     தூண்டியதோ  வெனஎன்றன்
உளங்    கூறுகிற   தென்றேன்   சொன்னாள்!
“உப்புக்   கடலேகி   உயிர்துறக்க  வருவோர்மாட்டு
தப்புக்   கணக்கிட்டு    தாழ்நிலைகொண்ட  திவ்வுலகம்நீரும்
இப்புவியில்   வாழ்பவர்    தானே     வீணர்
செப்புகின்ற  மொழியில்  சிந்தை  குளிர்ந்திடுவீரே!
எந்தையும்  தாயும்  இருந்துமண  முடித்தபோது
வந்தவர்தம்   வாழ்த்துப்   பொருள்   மறந்து
பிந்தை    நிலையெல்லாம்  பெரிதும்  நினையாது
பதினாறும்  பெறாது   பாதியாய்   பெற்றிட்டார்!
maamallapuram05பெற்றிட்ட   பிள்ளைகளைப்  போற்றி    வளர்ப்பதற்கு
பெற்றிட்டார்  பெரும்  இன்னல்களைப்  பெற்றும்
வற்றிட்ட  செல்வத்தை  வளர்ப்பதற்   காசையுற்று
பெற்றியினை அழிக்கின்ற  பெருஞ்சூதைத் தேர்ந்தெடுத்தார்!
சூதினைத்  தேர்ந்தெடுத்  தார்தன்கணவர்  என்றசேதி
காதினை  அடைந்தபோது  கவன்றாள்  என்தாயும்
“வேண்டற்க   வென்றிடினும்   சூதினை   வென்றதூஉம்
தூண்டிற்பொன்  மீன்விழுங்கி  யற்று”  என்ற
மறை  நூலறிந்தும்   மயங்கிவீழ்ந்  தார்தந்தை
வரையள   வாய்பொருள்  வளர்க்க  எண்ணி
புரை   வாழ்விற்கு  இலக்கானார்; குடும்பமோ
உறைவதற்  குமுயிர்  தாங்குதற்கும்  வழியின்றி
விரைவாகச்  சென்றது  சாவொறக்கம்  தனைநோக்கி
மறைந்தது  போகவிருந்ததோ இருமலர்கள்  அதற்கும்
சிறந்த   தோர்வாழ்வு  சீராகயமைய  வேண்டுமென
குறையாத  ஆசையினைக்  குவித்திருந்தா  ளன்னை!
நிறைவான  செல்வத்  தாரொருவர் ஓர்நாளென்னை
பிறைவான  முகமுடைய பெண்னென  தன்மகனுக்கு
விரைவாக  மணமுடிக்க  வேண்டும்  என்றாராம்
தரமான  இடமிருந்து   தகுதி  சான்றோர்
பெண்பார்க்க வருகிறார்   களென்றசேதி  கேட்டநான்
புண்பட்ட  உடலில்பூ   நீர்தெளித்த  உணர்வடைந்தேன்!
பண்பட்ட  இடத்திலே  வாழப்போ   வதனைஎன்
கண்பட்ட  பேர்களிடம்   சொல்லிக்  களிப்புற்றேன்!
பெண்கொள்ள  வந்திருக்கும்  பெரியோர்  முன்பாக
மண்பார்த்து  நடந்துசென்று  வணங்கி  நின்றேன்
நின்ற  என்னை  நெடுநேரம்   பார்த்துவிட்டு
ஈன்றவளை  அருகழைத்து  இதமாகப்  பேசலுற்றார்!
மன்றல்  அமைக்கநாள்  பேசுகிறார்;  என்வாழ்வில்
தென்றலைத்   தீண்டுவோ  மெனநினைக்கும்  போதில்
சென்று  சேதியனுப்பு   கிறோமெனும்  சொற்கேட்டேன்
சென்றவரின்  சேதியினையும்  சின்னாளில்  பெற்றோமே!
வில்வளைத்துக்  கொல்லும்  விலங்கைப்  போல்
சொல்  புனைந்து  கொன்றுவிட்டார்  என்னை
தொல்பொருள்  ஆய்வு  செய்வார்  போல்என்
தோலின்   வெண்தழும்  பைப்பெரு நோயென்றே
விளம்பி   விட்டார்   மடலினிலே;  உடலில்
துலங்கிவிட்ட   தழும்போ  இம்மண்ணில்  நான்
இலங்கிய  நாள்தொட்டு   இருந்த தென்பதறியார்
கலங்கிய  கண்ணோ  டென்தாயும்  எனைப்பார்த்தாள்!
பெண்ணாக  எனைப்பெற்ற  பெருந்   தெய்வமே
பொன்னான  மணநாள்  வருமென்று  பூரித்தாய்
இந்நாளோ   இதயம்   புண்ணாகும்   சேதிகேட்டாய்
எந்நாக்கு  பெற்றார்  எடுத்தியம்பிய  சொல்லானாலும்
நுண்நோக்குத்  திறன்   பெறாக்   காலமம்மா!
காலத்தின்  கோலத்தினால்  கன்னியுன்  மகள்
கொடிப்   பூவல்ல  கொரண்டிப்  பூவெனக்கூறி
நொடிப்  பொழுதில்  என்முடிவை   நானே
முடி   வெடுத்து  முழங்குதிரை  தேடிவந்தேன்”!
சொல்லி  முடித்தாள்  என்னுடல்  சில்என்றுஆனது!
துள்ளி  எழுந்தேன்  துகிலெல்லாம்  நனைய
பள்ளி  கொண்ட   இடத்தின்   தடம்அழிய!
தடித்தஅலை  செய்தநிலை  உணர்ந்தேன் – ஆங்கே
கலையழகுக்  கன்னிக்கு  மாறாகக்  கடல்வெளியே!
கண்ட   தெல்லாம்   கனவென்றும்  இதுவரை
கடுமுறக்கம் கொண்டொ  மென்றும் கருதிக்கொண்டேன்!

அகரமுதல - சிறார் இலக்கியம் - மூன்று உயர்ந்தவர்கள் - சிறுகதை akaramuthala-story

மூன்று உயர்ந்தவர்கள் – அன்பு

teacher-beating-student01
  தமிழய்யா பத்தாம் வகுப்பு  அ பிரிவைக் கடந்து செல்லும் பொழுது  கணக்கையா யாரையோ அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தார்.
  “என்னங்கய்யா, நல்லானையா அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அவன் நன்றாகப் படிப்பானே!”
  கணக்கையா அடிப்பதை நிறுத்திக் கொண்டு, “நன்றாகப் படித்து என்ன? நல்ல பண்பு இருக்க வேண்டுமல்லவா” என்றார்
  பெயருக்கேற்ற  நல்லவன்தான் அவன். “என்ன  நடந்தது” என்றார்.
  “போன வகுப்பு இவர்களுக்கு விளையாட்டு. யாருமில்லை. நான் மட்டும் பையை வைத்து விட்டுத் தலைமை ஆசிரியரைப் பார்த்து விட்டு வந்தேன். வரும் பொழுது பார்த்தால் என் கைப்பையில் இருந்து பணப் பையை எடுத்துக் கொண்டு இருக்கின்றான். கேட்டால், கீழே விழுந்து இருந்தது. எடுத்து உள்ளே வைத்தேன் என்கிறான். ஏதாவது பணத் தேவையா  உண்மையைச் சொல் தருகிறேன் என்றால்  மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்கிறான். பத்தாம் வகுப்பு தேறிய பின் மேல் படிப்பிற்கு உதவ விரும்பும் என்னிடமே பொய் சொல்கிறா னே என்றுதான் அடித்தேன்” என்றார்.
   “என்ன நல்லான்! எதற்கு நீ எடுத்தாய்.”
 ”ஐயா, உண்மையிலேயே நான் திருடவில்லை. பணப்பை யை உள்ளேதான் வைத்தேன்” என்றான்.
“பணம் எதுவும் திருடு போகவில்லை. அதற்குள் நான் வந்துவிட்டேன்” என்றார் கணக்கையா.
  “உங்களுக்குத்தான எதுவும் திருடு  போகவில்லையே! நல்லான் உண்மையைத்தான் சொல்லுவான். விட்டு விடுங்கள்” என்றார்.
 அதற்குள் நண்பகல் உணவிற்கான மணி அடித்து விட்டது. எனவே, வகுப்பை முடித்து விட்டு இருவரும் ஆசிரியர் அறைக்குத் திரும்பினர்.
 ”உண்மையைச் சொல்லும் பொழுது பொய் சொல்வதாகவும் குற்றம் செய்யாத பொழுது குற்றம் செய்ததாகவும் தண்டித்தால் மாணாக்கர்கள் தீய வழிக்குத்தான் செல்வார்கள். நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். யாருமறியாமல் கண்காணித்து இது போல் யார் குற்றம் இழைக்கிறார்கள் எனக் கண்டறிவோம்” எனத் தமிழய்யா கணக்கையாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
  அப்பொழுது பத்தாம் வகுப்பு ஆ பிரிவில் பயிலும் கணக்கையாவின் மகன் வேம்புலி வந்து நின்று அழுதான்.
  ஏன்  என்று கேட்பதற்குள்,  “அப்பா! நீங்கள் நல்லானை அடித்தீர்கள் அல்லவா?” என்று அழுது கொண்டே கேட்டான்.
   “ஆமாம்! என் பணப்பையை என் கைப்பையில் இருந்துஎடுத்ததைப் பார்த்தேன்; அடித்தேன்! நீ ஏன்அதற்கு அழுகிறாய்?”  என்றார்.
“நான் உண்மையைச் செ்ால்லுகிறேன்.  நீங்கள் என்னை அடிக்கக்கூடாது” என்றான்.
 ”சரி சரி சொல். யாராக இருந்தாலும் அடிக்கவில்லை” என்றார்.
  “நான்தான் எனக்கு ஐம்பது உரூபாய் தேவை என்பதால் உங்களைப் பார்க்க வந்தேன். அதற்குள்  நீங்கள்  கைப்பையை  வைத்து விட்டு வெளியே சென்று வி்ட்டீர்கள்.  உங்களிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பணப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.” அதைப்பார்த்த நல்லான், “அப்பாவிடம் சொல்லாமல் அப்பா பணப்பை யை அல்லது பணத்தை எடுப்பதும் திருட்டிற்கு ஒப்பானதுதான். யாராவது பார்த்தால் உன்னைத் திருடன் என்று எண்ணுயவார்கள். மேலும், பிறருக்கு இதுபோல் பணம் எடுக்கத்தோன்றும்” என்றான். “அவன் கூறியது சரி எனப்பட்டது. ஆனால், திரும்பிப் பணப்பையை வைக்க அச்சமாக இருந்தது.
 அவனையே மீண்டும் உங்கள் கைப்  பையில் வைக்குமாறு சொன்னேன். அவன் அவ்வாறு வைக்கும் பொழுதுதான் நீங்கள் பார்த்து விட்டு அவன் திருடுவதாக எண்ணி அடித்து விட்டீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா ” என்றான்.
  “நான்தான் நல்லானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்ற கணக்கையா, வகுப்பிற்குச் சென்றார். உடன் தமிழய்யாவும் வேம்புலியும் சென்றனர்.
  “மாணாக்கர்கள் உணவு உண்பதையும் பொருட்படுத்தாமல் கணக்கையா, என் மகன் என்னிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்த பணப்பையைத்தான் நல்லான் மீண்டும் என் பையில் வைத்திருக்கின்றான். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவன் மீது திருட்டுப் பட்டம் கட்டிய என்னை நல்லான் மன்னிக்க வேண்டும். அவன் மேல்படிப்புச் செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறனே்” என்றார். நல்லான், ஐயா, “என்னிடம் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் குற்றமற்றவன் என எல்லார் முன்னிலையிலும் சொன்னதே போதும் ” என்றான்.
அருகிலிருந்த தமிழய்யா, “நண்பனை விட்டுக்  கொடுக்காமல் தண்டனை வாங்கிய நல்லானும், தன்னால் நண்பன் அடிபட்டதைப் பொறுக்காமல்  உண்மையைக் கேட்காமலே சொன்ன வேம்புலியும்  தன்னிடம் படிக்கின்ற சிறுவன்தானே என எண்ணாமல் ஆசிரியராக இருந்தும் மன்னிப்பு கேட்டு அவனுக்கு உதவ வந்துள்ள கணக்கையாவும் மிக உயர்நதவர்கள். அவர்களால் இப் பள்ளியும் உயர்கின்றது” எனப் பாராட்டினார்.
மாணாக்கர்களும்  மேசையில் கை தட்டி ஒலி எழுப்பிப் பாராட்டில் பங்கேற்றனர்.