Saturday, October 30, 2010

இந்த வாரம் கலாரசிகன்

கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியோரில் முதல்வர் யார் என்று யாராவது என்னைக் கேட்டால், கிஞ்சித்தும் தயக்கமின்றி நான் பகரும் பெயர், "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. என்பதாகத்தான் இருக்கும். அவரது இதழியல் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, ஆன்மிகம், அரசியல், இலக்கியம் என்று எல்லா தளங்களிலும் பங்களிப்பு நிகழ்த்திய மகான் "மயிலை முனிவர்'. மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்த பெருமையும் திரு.வி.க.வையே சாரும்.  "முருகன் அல்லது அழகு' என்றொரு புத்தகம். காரைக்குடியிலிருந்து வெளிவந்த "குமரன்' என்கிற மாத இதழின் முதல் இதழில் திரு.வி.க. "முருகன்' என்கிற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் இருந்த பொருள் செறிவு அதை விரிவுபடுத்தி ஒரு புத்தகமாகக் கொணர வேண்டும் என்று நண்பர்களை வற்புறுத்தவைத்தது. அவர்களது கோரிக்கையை ஏற்று "முருகன்' என்னும் தலைப்பில் 1925-இல் ஒரு புத்தகம் வெளிக்கொணர்ந்தார் "தமிழ்த் தென்றல்'.  இரண்டாண்டுகளுக்குப் பிறகு இன்னும் பல கருத்துகளை "முருகன் அல்லது அழகு' என்னும் பெயரில் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. இந்தப் புத்தகம் பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. இந்தப் புத்தகத்தின் எட்டாவது பதிப்பு 1950-இல் வெளிவந்தபோது, திரு.வி.க.வுக்கு வயது முதிர்ச்சியால் பார்வை மங்கியிருந்ததாக அவரே குறிப்பிடுகிறார்.  ""இயற்கை அழகை முருகெனக் கொண்டு பழந்தமிழர் வழிபாடு நிகழ்த்தினர். இவ்வாறு முருகனை வழிபடுவோர் தொகை நாளைடைவில் அருகிவிட்டது. அதனால் பல கடவுளர் உணர்வு, பன்னெறி உணர்வு, போராட்டம், கட்சிகள், பிரிவுகள் முதலிய இழிவுகள் தோன்றலாயின. பழைய இயற்கை வழிபாடு மீண்டும் புத்துயிர் பெறின், இழிவுகள் தொலைதல் ஒருதலை. இயற்கை வழிபாடு மீண்டும் நாட்டில் உயிர்த்தெழல் வேண்டும் என்பது எனது வேணவா, அவ்வவா மேலீட்டான் யாக்கப்பட்ட நூல் இது'' என்று தனது நூன்முகத்தில் திரு.வி.க. குறிப்பிடுகிறார்.  உலகத்தின் நான்கு பக்கங்களிலும் வாழ்ந்துவரும் மக்கள் தங்கள் அறிவாற்றலுக்கு ஏற்றவாறு, தங்கள் தங்கள் மொழியில் கடவுளுக்கு பலதிறப் பெயர்கள் சூட்டி மகிழ்கிறார்கள் என்று குறிப்பிடும் திரு.வி.க., "முருகன்' என்பதற்கு அற்புதமான விளக்கம் தருகிறார்.  ""முருகையுடையவர் முருகன். முருகு என்பது பலபொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை: மனம், இளமை, கடவுட்டன்மை, அழகு என்பன. இந்த நான்கு பொருளடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழுமுதற்பொருளை அழைத்தது வியக்கத்தக்கது!'' என்று தனது "முருகன் அல்லது அழகு' புத்தகத்தை எழுதத்தொடங்குகிறார் மயிலை முனிவர்.  முருகு என்பது மிகத் தொன்மைவாய்ந்த ஒரு தமிழ்ச்சொல் என்பதை ஐயத்திற்கு இடமின்றி ஆணித்தரமாக நிறுவுகிறார் திரு.வி.க. ""முருக என்னும் முதல் நிலை, "அன்' என்னும் ஆண்பால் இறுதிநிலையேற்று "முருகன்' ஆயிற்று. ஆகவே, முருகினின்றும் முருகன் பிறந்தான் என்க. முருகுவுக்கும் முருகனுக்கும் பொருளில் வேற்றுமையுண்டோவெனில் இல்லையென்ப. இரண்டும் ஒரு பொருளையே குறிப்பன. முருகே முருகன்; முருகனே முருகு!'' என்று நிறுவுகிறார் அவர்.  ""இயற்கையில் உள்ள முருகை முதன்முதலில் கண்டவர் தமிழ் நாட்டார். முருகனுக்குரிய செவ்வாய்க் கோளுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. முருகனுண்மை கண்டு இயற்கை வாழ்வு செலுத்தி, நோன்பு காத்து, அழியாப் பேறுபெற்ற சித்தர்கள் வாழ்ந்த நாடு நமது தமிழ்நாடு'' என்று பதிவு செய்யும் திரு.வி.க., பல இடங்களில் தனது வாதத்துக்கு அருணகிரியாரைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.  "இயற்கையும் அழகும் என்றும் வாழ்க!' என்று தனது நூலை முடிக்கும் மயிலை முனிவரின் "முருகன் அல்லது அழகு' ஏதோ படித்து மகிழ்வதற்காக எழுதப்பட்டப் புத்தகமாக நான் கருதவில்லை. இது ஓர் ஆய்வு நூல். தமிழனின் இறையுணர்வு இயற்கையையும் அந்த இயற்கையின் அடித்தளமாக அமைந்த அழகையும் சார்ந்து உருவாகியிருப்பதை உணர்த்தும் நூல் இது.  இரண்டுமுறை படித்துவிட்டேன். இன்னும் ஒருமுறை படிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக, "நோன்பு' பற்றி திரு.வி.க. குறிப்பிட்டிருக்கும் பகுதிகளை!  ------------------------  யார் தந்தது? எப்படி என்னை இது வந்தடைந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. துவக்கம், கலை இலக்கிய இயக்கம், பந்தணை நல்லூரிலிருந்து கவிஞர் செ.ப. வீரத்திருக்குமரன் எழுதிய குட்டிக் கவிதைகளை இரணியன் என்பவர் "தொட்டியில் மரங்கள்' என்கிற பெயரில் கையடக்கப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு குறும்பாடலும் சவுக்கால் "பளார் பளார்' என்று தமிழனின் மனசாட்சியை விளாசித் தள்ளுகிறது.  இந்தப் புத்தகத்தில் இருக்கும் கவிதைகளை எழுதிய செ.ப. வீரத்திருக்குமரன் ஒரு பள்ளி ஆசிரியர் என்று தெரிகிறது. குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர். குழந்தைகளின் உள்ளக் குமுறலை உணர்ந்த ஆசிரியர். தமிழ்ச் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள ஆசிரியர். "ஐயா, தங்களை சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்' என்று எனது எழுத்தால் வணங்கத் தோன்றுகிறது. "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்' என்கிற பாரதியின் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபிக்கும் எழுத்து இவருடையது.  ""இந்த நூலைப் படித்த பிறகாவது, உங்கள் குழந்தைகளைத் தொட்டியில் நடாமல் மண்ணில் ஊன்றி, அகலக் கிளை பரப்பி உயர வளர்க்கும் முடிவை நீங்கள் எடுப்பீர்களேயானால், எங்கள் உழைப்புக்கும் இதற்கென நாங்கள் செலவு செய்த தொகைக்கும் பயன்கிட்டியதாக நம்புவோம்'' என்கிற தொகுப்பாளர் இரண்யனின் பதிவு விழிகளில் நீர்கோக்க வைத்தது.  நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சமுதாய சிந்தனை செத்துவிடவில்லை. பணபலத்தை எதிர்கொள்ள நல்ல சில உள்ளங்கள் தயாராகின்றன. நாம் நம்மைத் தொலைத்துவிடவில்லை.    ஆங்கிலத்தில் திட்டுகிறார்  ஆசிரியர்  வகுப்பறைச் சுவற்றில்  "இனிய உளவாக  இன்னாத கூறல்'    ஆங்கிலம் படித்தால்தான்  அறிவுவளரும் என்கிறீர்கள்  தமிழ் படித்த  கலாமை மட்டும்  தலைவர் என்கிறீர்கள்.    கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்  எங்களையும்  கொஞ்ச  நேரம் ஒதுக்குங்கள்.    எங்களுக்காக  குழந்தைகள் காப்பகம்  இன்று.  உங்களுக்காக  முதியோர் காப்பகம்  நாளை.
கருத்துக்கள்

வகுப்பறைச் சுவற்றில் - இந்தத் தவறு எந்த இடத்தில் நேர்ந்தது? மூல நூலிலா? எழுதுநர் தாளிலா? அச்சிலா? சுவரில் எனத் திருத்தக்கூடாதா? ஞானசேகரன் இது குறித்து இன்னும் ஒன்றும் சொல்லவில்லையா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
10/31/2010 4:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை!

முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை!

First Published : 31 Oct 2010 12:00:00 AM IST


1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி கல்யாண சுந்தரம் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அப்பொழுது நான் என்னுடைய அத்தையின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அத்தையின் கணவரான அணைக்காடு டேவிஸ் என்பவர்தான் (அந்தக் காலத்தில் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்)  கல்யாண சுந்தரத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர். எனவே அவரது பெயருக்கு தந்தி வந்தது. "கல்யாணப் பரிசு' படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியைத் தந்தது. தத்துவப் பாடலானாலும் தாலாட்டுப் பாடலானாலும் இயற்கையைப் பாடினாலும் காதலைப் பாடினாலும் நகைச்சுவைப் பாடலானாலும் நாட்டு நடப்பைப் பாடினாலும் அவருடைய கற்பனையில் தனி முத்திரை பதிந்திருக்கும். அவர் சிந்தனையில் ஊறிப் போன உயிரினும் மேலாகப் போற்றிய பொதுவுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடே அந்த முத்திரையாகும்.   ஆனால் தமிழறிஞர்கள் அவருடைய பாடல்களைச் சித்தர்களின் அடியொற்றி மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வழிவந்து கார்ல் மார்க்ஸ் தத்துவத்தில் நிலை கொண்டு மக்களின் இதயத்தைத் தமது பாட்டுத் திறத்தாலே கவர்ந்தவர் என்று கூறுவார்கள். ஜனசக்தி, தாமரை போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து பாடல்களை எழுதிவந்தார். கம்யூனிஸ்டு இலக்கிய மேதைகளான ஜீவா, கே.முத்தையா, மாயாண்டிபாரதி ஆகியோருடன் இவர் நெருங்கிப் பழகியவர். தன்னுடைய வாழ்நாளில் 17விதமான தொழில்கள் செய்தவர். 17ஆவது தொழில் தான் திரைப்படங்களில் பாடல்களை எழுதியது.தஞ்சை மாவட்டத்திலுள்ள செங்கபடுத்தான் காடு என்னும் சிறிய ஊரில் 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அருணாசலம் பிள்ளை. இவர் ஒரு சாதாரண விவசாயி, உன்னதமான உழைப்பாளி, பாடலாசிரியர்... நன்றாகப் பாடுவார், இவரது தாயாரின் பெயர் விசாலாட்சி. இவர்களுக்குக் கல்யாண சுந்தரம் கடைசி மகனாகப் பிறந்தவர்.இவரது தந்தை பாடும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தந்தைக்கு உதவி செய்வார். மகனை நன்றாகப் படிக்கவைக்க விரும்பினார். ஆனால் கல்யாண சுந்தரம் இரண்டாம் வகுப்பு வரைதான் படித்தார். கவிஞர் கல்யாணசுந்தரத்துக்குப் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் 1957-ஆம் ஆண்டு ஆவணி மாதம் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் கவுரம்மாள். பெயருக்கு ஏற்றபடி இன்று வரை இவருடைய கவுரவமும் கணவர் கல்யாணசுந்தரத்தின் கவுரவமும் குறைவுபடாமல் வாழ்ந்து வருகிறார்.   பாரதிதாசனை சந்தித்தது முதல் அவருடைய சீடரானார். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டார். அதன்பிறகு இவர் சென்னைக்கு வந்தார். 1948-ல் இவர் நாடகங்களில் நடித்தார். நாடகத்திற்கான பாடல்களை எழுதினார். புகழ் பெற்ற திரைப்பட நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸில் கல்யாணசுந்தரத்தை பாவேந்தர் அறிமுகப்படுத்தினார்.   1949-ல் கவிஞர் கல்யாணசுந்தரம் சக்தி நாடகசபாவின் "என் தங்கை', "கவியின் கனவு', "கண்ணின் மணிகள்' போன்ற நாடகங்களில் நடித்தார். இக்காலத்தில் சிறந்த கவிஞர்களாக விளங்கிய கொத்தமங்கலம் சுப்பு, எஸ்.டி.சுந்தரம் போன்றோர் கவிஞர் பட்டுக்கோட்டையை அவ்வப்போது அவர் வீடுதேடிப் போய் பாராட்டுவார்கள்.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படங்களில் கவிஞர் பொதுவுடைமைக் கருத்துக்களைப் பாடல்களில் எழுதினார். ஆனால் அதைக் கேட்டு ரசித்த மக்கள் அந்தக் கருத்துக்கள் அன்று அவர் சார்ந்த தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்துக்கள் என்று நினைத்து ரசித்தனர். காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் தம்பிக்கு என்று கடிதம் எழுதுவார். எனவே "தூங்காதே தம்பி தூங்காதே' என்ற பாடல் அண்ணாவின் தம்பி எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு சொல்வதாகவே மக்கள் நினைத்தனர்."சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா', "திருடாதே பாப்பா திருடாதே', "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்' போன்ற பாடல்களும் "இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே' போன்ற முரண் சுவையான பாடல்களும் புகழ் பெற்றன. முற்போக்குச் சிந்தனை, தன்னம்பிக்கை போன்ற கருத்துக்களில் பாடல்களை எழுதினாலும் காட்சிகளுக்கு ஏற்ப சில விரக்தியான பாடல்களும் எழுதியுள்ளார். "இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்- அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் என்று சுகத்தைப் பொதுவாக்குவது எப்படி' என்பது பற்றி எழுதியவர் பட்டுக் கோட்டையார். திரையுலகில் அவர் இருந்த 8 வருடங்களில் 205 பாடல்கள்தான் எழுதினார். அதில் பெரும்பான்மையான பாடல்கள் சாகா வரம் பெற்றவை. கவிஞர் 29 வயது வரைதான் வாழ்ந்தார். ஆனால் 51 வருடங்களாக மக்கள் மனங்களில் வாழுகிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவருடைய மனைவியும் சேர்ந்து வாழ்ந்தது 25 மாதங்கள்தான். அவருடைய மனைவி கவுரம்மாள் 51 வருடங்களாக கவிஞர் இல்லாமல் அவரது நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.பாவேந்தர் பாரதிதாசன் விருது கல்யாணசுந்தரம் இறந்த பிறகு 1981-ல் அவருக்குக் கொடுக்கப்பட்டது.அதிக காலம் வாழாத இவருடைய பாடல்கள் காலம் கடந்து நிற்கிறதே அதுதான் மரணத்துக்கு அவர் தரும் தண்டனை.(தொடரும்)

Sunday, October 17, 2010

பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன்

கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார். ""காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர்-காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்), பாரதிதாசன் (சுப்புரத்தினம்), சுரதா (சுப்புரத்தின தாசன்), கம்பதாசன் இவர்கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள்'' என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர் வ.ரா., புகழ் மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஒன்றே போதும்.""கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப்பட்டவை. அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று!'' என்று கம்பதாசனின் "முதல் முத்தம்' நூலுக்கு அளித்த முன்னுரையில் பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்.இயற்கையிலேயே கவியுள்ளத்துடன் பிறந்த கம்பதாசன், புதிய கோணத்தில் சிந்தித்து தமிழன்னைக்கு வாடாமலராக கவி மலர்களைச் சூட்டியவர். சென்ற நூற்றாண்டில் புகழ் பூத்த கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்தவர்கள், வழிகாட்டியாக மனத்தில் வரித்தவர்கள் மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். கம்பதாசன், பாரதி, பாரதிதாசன் பாதையில் பாட்டெழுதத் தொடங்கி, பிறகு தமக்கெனப் புதுப்பாதை அமைத்துக் கொண்டார். திண்டிவனம் அருகில் உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், சுப்பராயலு-கோகிலாம்பாள் தம்பதிக்கு 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர்  ஐவரும் பெண்கள். பெற்றோர் "ராஜப்பா' என்று செல்லமாக அழைத்தார்கள்.நடிப்புக் கலையிலே நாட்டம் ஏற்பட்டதால், ஆரம்பப் பள்ளிக்கு மேல் இவர் நாட்டம் கொள்ளவில்லை.  நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களுக்குப் பாட்டெழுதினார். கம்பதாசனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. நாடகங்களில் பாடுவார். பாடகராகவும் புகழ் பெற்றார். ஹார்மோனியமும் வாசிப்பார்.தொழிலாளர் தோழராகவும், சோஷலிஸ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவருமான கம்பதாசனுக்குத் திரைப்படம் கைகொடுத்தது. பழைய முறையைப் பின்பற்றி திரைப்படங்களில் பாடல்களை எழுதி வந்த காலத்தில், தமிழில் மறுமலர்ச்சிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சமதர்மக் கொள்கை கொண்ட கம்பதாசன், தாம் எழுதிய திரைப்படப் பாடல்களில் முற்போக்குக் கருத்துகளை எளிய நடையில் புகுத்தினார்.முக்தா சீனிவாசன் இயக்கிய "ஓடி விளையாடு பாப்பா' எனும் திரைப்படத்துக்கு கம்பதாசன் எழுதிய பாடல் ஒன்று, உயிரோட்டமுள்ள இலக்கியமாகத் திகழ்கிறது. திரைப்படப் பாடலாக இருந்தாலும், கவிதை நயம் மிக்க இலக்கிய அந்தஸ்தை அப்பாடல் பெற்றுவிட்டது.தமிழ் உணர்வுமிக்க அவருக்குப் போட்டிகள் நிறைந்த திரையுலகம் அதிக வாய்ப்பைத் தராவிட்டாலும், குரல் அசைவுப் படங்களுக்கு (டப்பிங்) அதிகம் எழுதியிருக்கிறார். அவற்றிலும் அவர், எளிய தமிழையே கையாண்டார்."வானரதம்' என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கப் பாடலில் எளிய தமிழைப் பயன்படுத்தினார். இந்தி மொழியின் நயம் தெரிந்து நேர்பொருளைத் தராமல், தமிழ் உருவில் தக்கபடி மாற்றியது பற்றிப் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.""இந்தியில் "என்னுடைய வணக்கத்தை எடுத்துப்போ! என் மதிப்பான வந்தனத்தைத் தூக்கிச் செல்' என்று மொழியாக்கம் செய்திருப்பார்கள். ஆனால், நான் அவ்வாறு செய்யவில்லை. இந்தியில் வணக்கம் பற்றிச் சொல்வதாகச் சொற்கள் அமைந்தாலும், விடை தரும்போது காதலை, கனிவாகச் சொல்வதுதான் சிறப்பு. உதட்டசைவுக்கும் இசை மெட்டுக்கும் எளிமையாகப் பொருந்தும் வகையில் "மேரா சலாம் லேஜா' என்பதை -"அன்பைக் கொண்டே செல்வாய்! அன்பைக் கொண்டே சொல்வாய்!'என்று அமைத்தேன்'' என்று பாடி உணர்த்தியதை, கம்பதாசனைப் பற்றி முழுமையாக அறிந்த பேராசிரியர் மின்னூர் சீனிவாசன் கூறியுள்ளார்.சோஷலிஸம், பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேச்சளவில் நிறுத்தி விடாமல் - கவிதையில் மட்டும் சேர்த்து விடாமல், தான் ஈட்டிய பொருளின் பெரும்பகுதியை சிரமம் என்று வருபவர்களுக்கு உடனே தந்து உதவுவார்.தொழிலாளி என்றால் மில் தொழிலாளி, மோட்டார் தொழிற்சாலை தொழிலாளி என்று மட்டும் அவர் கருதாமல், சமூகத்தில் அல்லல்பட்டு, வாழ்க்கையில் எப்போதும் கண்ணீர் விடும் பலதரப்பட்ட உழைப்பாளிகளைப் பற்றி அவர் கவிதைகள் எழுதியுள்ளார்.மனிதனை மனிதன் இழுக்கும் கொடிய வழக்கம் சுதந்திரம் பெற்ற பிறகு கூட நம் நாட்டில் இருந்தது. கை ரிக்ஷா இருந்த காலத்தில் வாழ்ந்தவர் கம்பதாசன்."மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?' என்று பாடினார் பாரதி. ஆனால், கை ரிக்ஷாக்காரர் துயர வாழ்க்கையைக் கவிதையாக வடித்துக் கண்ணீர் சிந்தியவர்; சிந்த வைத்தவர் கம்பதாசன். கம்பதாசன் கவிதையில் புதுமைக் கருத்துகள் பொங்கித் ததும்பும். பாட்டாளிகளின் பசித்துயரை - இதயக் குமுறலை கம்பதாசன் பல கவிதைகளில் பாடியுள்ளார். இவ்வுலகில் எல்லா பொருள்களுக்கும் இடம் உண்டு. ஆனால், பசி இளைப்பாற இடமுண்டோ? என்று கேள்விக்கணை வீசுகிறார் கவிஞர்.""பாம்பு இளைப்பாற புற்று,பருந்து இளைப்பாற கூடுகண் இளைப்பாற தூக்கம்கழுதை இளைப்பாற துறை...என்றுபறவைகளும் மற்ற விலங்கினங்களும்இளைப்பாறிட இடம் உண்டு - எங்களுக்கு...?''என்ற கவிதை இதுவரை எந்தக் கவிஞரும் சிந்திக்காதது. கம்பதாசனின் மனித நேயமிக்க பார்வையில் கொல்லர், செம்படவர், உழவர், படகோட்டி, மாடு மேய்ப்பவர்... இவ்வாறு பலவித உழைப்பாளிகளைப் பற்றிய கவிதைகளை எழுதியுள்ளார்.மற்ற கவிஞர்களைவிட, தன் கவிதை அதிகம் பேசப்பட வேண்டும் என்று நினைத்தாலும், மற்ற கவிஞர்களை மதிக்கும் பழக்கமுடையவர்.கம்பதாசனின் கவித்திறமையை அடையாளங்காட்டி "கனவு' என்ற கவிதை நூல் 1941-இல் வெளிவந்தது. விதியின் விழிப்பு, முதல் முத்தம், அருணோதயம், அவளும் நானும், பாட்டு முடியுமுன்னே, புதுக்குரல், தொழிலாளி என்ற தலைப்புகளில் கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.ஆதிகவி, சிற்பி என்ற நாடக நூல்களும், முத்துச் சிமிக்கி என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. திரைப்படப் பாடலாசிரியர் என்ற அளவில் மக்களிடையே புகழ்பெற்றுள்ள கவிஞர் கம்பதாசன் 347 கவிதைகள் எழுதியுள்ளார். "கம்பதாசனின் கவிதைத் திரட்டு' என்ற பெயரில் சிலோன் விஜயேந்திரன் ஒரு நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஏராளமான திரைப்படங்களுக்குப் பாடல்கள், டப்பிங் படங்களுக்கு உதட்டசைவு உரையாடல்கள் எழுதி வறுமையில்லாமல் பொருளீட்டிய கம்பதாசன், பெண்களைப் பற்றி மிக உயர்வாகப் பாடியிருக்கிறார்.அவ்வாறு பாடிய கவிஞரின் காதல், தோல்வியில் முடிந்தது. எந்தப் பெண் குலத்தைப் பற்றி உயர்வாகப் பாடினாரோ, அவரைக் காதலித்த அந்தப் பெண்குல மாதரசி, அவரை விட்டுச் சென்றுவிட்டார். அவர் இதயம் நொறுங்கியது. காச நோயும், ஈரல் நோயும் அவரை அணைத்துக் கொண்டன.உடல்நலக் குறைவு காரணமாக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிக்கனல் கம்பதாசன், 1973-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் இயற்கை எய்தினார். ""மின்னல் போலாடுமிந்த வாழ்க்கையே வானவில் போலுமே இளமை ஆனதே; ஆம்! துன்ப கதையுனதே''என்று 1953-ஆம் ஆண்டு எழுதிய பாடல், இவர் வாழ்க்கையிலும் நிஜமானது. கம்பதாசனின் வாழ்வும் துன்பக் கதையாக முடிந்தது.""கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே''""கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்'' என்ற திரைப்பட பாடல்கள் ஒலிக்கும் வரை கம்பதாசன் புகழும் நிலைத்து நிற்கும்.
"பாரதி பித்தர்' தொ.மு.சி. ரகுநாதன்

தொ.மு.சி. ரகுநாதன்' - எழுத்தும் பெயரும் அறியாதவர்கள் மிகக் குறைவே.1941-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம், அடிமைப்பட்டிருந்த பாரதம் முழுவதும் எதிரொலித்தது. ரகுநாதன் போன்ற இளம் ரத்தம் ஓடுபவர்கள் துடித்தெழுந்தார்கள். அவர் துடிப்புக்கு வழிகாட்டியாக, திருநெல்வேலியில் முத்தையா தொண்டைமான் என்ற தேசியவாதி, அந்நியர் ஆட்சியை அகற்றும் விடுதலைப் போராட்டங்களில் இளைஞர்களை ஈடுபடச் செய்தார்.ரகுநாதன், திருநெல்வேலி மாவட்டத்தில், 1923-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி முத்தையா தொண்டைமான் - முத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்புக் காலத்தில் பொழுதை வீணே கழிக்காமல் தந்தையாரின் நூலகத்திலிருந்த புத்தகங்களை, கள்ளச்சாவி போட்டுத் திறந்து எடுத்துப் படிக்கும் அளவுக்கு அவருக்கு ஆர்வம் இருந்தது."ஆண்டுக்கு ஆயிரம் புத்தகங்களையாவது படித்திருப்பேன்' என்று கூறும் ரகுநாதன், எல்லாவிதமான - தரமான நூல்களையும் படித்தார். ரகுநாதனின் மூத்த சகோதரர்தான் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். அரசுப் பணியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இ.ஆ.ப.வாக பெரும் பதவி வகித்தவர். பின்னாளில், டி.கே.சி.யின் வட்டத்தொட்டியில் கலந்துகொண்டு இலக்கியங்களைக் கற்றவர்.ரகுநாதன், கல்லூரியில் இன்டர் மீடியட் முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். கல்லூரிப் பேராசிரியர்கள் அவருக்கு ஆங்கில இலக்கியங்களைக் கற்பித்தார்கள். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தினார்கள்.ஆங்கிலப் பேராசிரியரான அ.சீனிவாச ராகவன், பாரதியிலும் கம்பரிலும் ரகுநாதனை ஈடுபாடு கொள்ளச் செய்தார். தனது "வெள்ளைப் பறவை' என்ற கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை தருமாறு மாணவர் ரகுநாதனைக் கேட்டார்.""என்னையா!'' என்று வியப்படைந்தார் ரகுநாதன்.""ஆம்! டி.கே.சி. இருந்தால் அவரிடம் கேட்டு வாங்கியிருப்பேன்'' என்ற அ.சீ.ரா.வின் புகழுரை ரகுநாதனை மெய்சிலிர்க்க வைத்தது. "முதல் வாசகர் குரல்' என்று தலைப்பிட்டு முன்னுரை எழுதித்தந்தார். அந்தக் கவிதைத் தொகுதிக்கு சாகித்ய அகாதெமி பரிசும் கிடைத்தது.இரண்டாவது உலகப் போரின்போது கம்யூனிஸ்டுகளின் போக்கு - கொள்கை மாறுதல் ரகுநாதனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தைப் பலப்படுத்த பெரிதும் உதவியவர்களுள் ரகுநாதன் முதன்மையானவர்.கனல் கக்கப் பேசும் ப.ஜீவானந்தத்தின் புயல் வேகப் பேச்சும், முத்தையா, அ.சீ.ரா., போன்றவர்களின் பேச்சும் ரகுநாதனுக்கு, பாரதி இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை ஏற்படச் செய்தது. பிற்காலத்தில், "பாரதி-காலமும் கருத்தும்' என்ற விரிவான சிறந்த நூலைப் படைத்து பல விருதுகள் பெற அடித்தளம் வகுத்தது.ரகுநாதனின் முதல் கதை "பிரசண்ட விகடனில்' வெளிவந்தது. மணிக்கொடி எழுத்தாளர்களுடைய எழுத்துகள் அவருடைய இலக்கியத் தாகத்தை வளர்த்தது. காண்டேகருடைய தாக்கம் தொ.மு.சி.க்கு மராட்டிய மொழியைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. காண்டேகருடைய "கருகிய மொட்டு' படித்ததன் விளைவாக, "செக்ஸ்' பற்றி நேரடியாக எழுதாமல், மறைமுகமாக ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணத்தினால், "முதல் இரவு' என்ற நாவலை எழுதினார். அப்போது ரகுநாதன் "சக்தி' இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார்."முதல் இரவு' வெளிவந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள், அதைப் படித்தவர்கள் முகம் சுளித்தார்கள். ஆனால், மறைமுகமாகப் படித்தவர்களால் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாயின. அரசு அந்த நூலின் மீது சீறிப் பாய்ந்தது. நான்காவது பதிப்பு வெளிவந்தபோது காவல்துறையினர் பதிப்பகத்துக்குள் நுழைந்து, அச்சிடப்பட்டிருந்த நூல்களை எரித்தனர். ரகுநாதனைக் கைது செய்து, பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.ரகுநாதன், 1948-ஆம் ஆண்டு ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஓர் ஆண் பிள்ளையும், மூன்று பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.1944-45-களில் "தினமணி' நாளிதழில் பணியாற்றினார். பிறகு "முல்லை' பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அந்தப் பத்திரிகையில் தன் பெயரிலும், புனைபெயரிலும் நிறைய எழுதினார். முல்லை பத்திரிகை 1947-ஆம் ஆண்டுடன் நின்றுவிட்டது. 1948-இல் "சக்தி'யில் சேர்ந்த பிறகு அவர் படைப்பில் புதுப்பொலிவு ஏற்பட்டது. கு.அழகிரிசாமியும் "சக்தி'யில் சேர்ந்தார். இருவரும் ஒன்று சேர்ந்து கதை எழுதினார்கள்; கவிதை எழுதினார்கள். இலக்கிய உலகில் "இரட்டையர்களாக' வலம்வந்தனர்.புதுமைப்பித்தனை தன் லட்சிய எழுத்தாளராக மதித்தார். புதுமைப்பித்தனை தமிழ்நாட்டு மக்கள் மறக்காமல் இருக்க சிறந்ததொரு பிரசார பீரங்கியாக இறுதிநாள் வரை திகழ்ந்தார்."திருச்சிற்றம்பலக் கவிராயர்' என்ற பெயரில் ரகுநாதன் எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதில் தமது கலைத்திறனின் தன்மையையும் தரத்தையும் முத்திரையிட்டிருக்கிறார்.தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையைப் பெற்றதுதான் "பஞ்சும் பசியும்' என்ற நாவல். செகோஸ்லேவிய நாட்டில் முதல் பதிப்பிலேயே ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனையாயின. சிறுகதை மன்னர், சிறந்த கவிஞர் என்று இதுவரை அறியப்பட்ட ரகுநாதன் சிறந்த நாவலாசிரியர் நிலைக்கு உயர்ந்தார்.ரகுநாதனின் சாதனைகளுள் தலைசிறந்தது 1982-ஆம் ஆண்டு வெளிவந்த "பாரதி-காலமும் கருத்தும்' என்ற பாரதி திறனாய்வு நூல். அந்த நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.சொந்தப் பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் "சாந்தி' என்ற மாத இதழைத் தொடங்கினார். இளம் எழுத்தாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட பத்திரிகை என்றாலும், உயர்ந்த நோக்கத்துடன் வெளிவந்த மாத இதழில் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளும் வெளிவந்தன. ஆனால், லட்சியப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட முடிவுதான் "சாந்தி'க்கும் ஏற்பட்டது.ரகுநாதன், "கலை இலக்கியப் பெருமன்றம்' என்ற அமைப்பை முதன்  முதலில் தொடங்கினார். அந்த அமைப்பு, தமிழ்நாட்டில் பெரும் சக்தியாக விளங்கிக்கொண்டிருந்தது. 1967-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுடன் கூட்டு வைத்ததனால், கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பதவியைத் துறந்தார்.பிறகு, "சோவியத் நாடு' அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். சோவியத் நாடு செய்தித்துறை ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். ரகுநாதன் மொழிபெயர்த்த லெனின் கவிதாஞ்சலிக்கு சோவியத் நாடு நேரு விருதும், பரிசும் கிடைத்தன.தனக்குப் பிறகு தான் சேர்த்த நூல்களுக்கு அழிவு வந்துவிடக் கூடாது என்று ரகுநாதன் எண்ணினார். எட்டயபுரம் இளசை மணியன் உதவியுடன், எட்டயபுரத்தில் நூலகம் ஒன்று பெரும் முயற்சியால் அமைந்தது. 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி ரகுநாதன் நூலகம், பாரதி ஆய்வு மையத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.சேற்றில் மலர்ந்த செந்தாமரை, க்ஷணப்பித்தம், சுதர்மம், ரகுநாதன் கதைகள், ரகுநாதன் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், காவியப் பரிசு, சிலை பேசிற்று, மருதுபாண்டியன், பஞ்சும் பசியும், புதுமைப்பித்தன் வரலாறு, புதுமைப்பித்தன் கதைகள், இளங்கோவடிகள் யார்?, பாரதியும் ஷெல்லியும், பாரதி - காலமும் கருத்தும், கங்கையும் காவிரியும், இலக்கிய விமர்சனம், சமுதாய விமர்சனம், முதலிய கவிதை, சிறுகதை, நாவல், வரலாற்று நூல் விமர்சனம் எனப் பல படைப்புகளுக்கு ரகுநாதன் சொந்தக்காரர்.உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ள "பாரதி பித்தர்' ரகுநாதன், 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி காலமானார்.அவர் மறையவில்லை; எட்டயபுரத்தில் அவர் நினைவாக உள்ள நூலகமும், பாரதியைப் பற்றிய "பாரதி-காலமும் கருத்தும்' ஆய்வு நூலும் உள்ளவரை அவரது புகழ் மறையாது.எட்டயபுரம் செல்பவர்கள், ரகுநாதன் உயிருக்குயிராக நேசித்து, அமைத்த நூலகத்தைப் பார்த்து வருவதுடன், அந்த நூலகம் சிறப்பாக நடைபெற புத்தகக் கொடையும், பொருள் உதவியும் செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
இவளைச் சொல்லிக் குற்றமில்லை


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற உயர்ந்த நோக்குடன் வாழ்வது தமிழர் மரபு. ஆனால், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த ஒரு தலைவன், தான் பெற்ற துன்பம் வேறு எவரும் பெறக்கூடாது என்ற எண்ணத்தில் கற்போர் மனதில் நிற்கும் வண்ணம் தன் கருத்தை வெளியிடும் பாங்கமைந்த பாடல் ஒன்றைப் பாடியுள்ளான். இத்தலைவன் நரபதி என்று எல்லோராலும் போற்றப்படும் நந்திவர்மனுக்குரிய மயிலாப்பூரில் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் வீதியில் வந்துகொண்டிருக்கிறான். எதிரே பேரழகி ஒருத்தி வரக்காண்கிறான். வள்ளுவர் காட்டும் தலைவன் வர்ணிப்பதுபோல,  முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்தோள் அவட்கு  அதாவது, அவள் மேனி மாந்தளிர் போன்றது. பற்கள் முத்துக்கள் போன்றவை. அவள் மேனியில் இயல்பாகவே வாடைமிக்க வாசனை உள்ளது. மை தீட்டிய கண்கள் நஞ்சூட்டிய வேல்கள் போன்றவை. தோள்கள் பளபளப்பிலும் மினுமினுப்பிலும் மூங்கிலைப் போன்றவை என்று சொல்லத்தக்க வகையில் அவள் வருகிறாள். அவளது பேரழகை இவன் உற்று நோக்குகிறான். பிற மங்கையர் அழகெல்லாம் தோற்கடிக்கின்ற அழகுள்ளவளாக இவள் இருப்பதால், வியப்பின் எல்லைக்கே செல்கிறான். கருமணல்போல விளங்கும் கூந்தல் அழகும், இளமை பொருந்திய மானைப்போன்ற பார்வையுடைய கண்களும் அவனை நிலைகொள்ளச் செய்தன. உறுப்புகளில் ஏனைய எல்லா உறுப்புகளிலும் தலைசிறந்தது கண். கண் இல்லையென்றால், ஒருவனுக்குக் காட்சி இன்பம் கிடைக்காது. கண்ணே காதலர்க்கு முதற்கண் கூடுவதற்கு உதவும் சிறந்த கருவி. ஆக, "இத் தலைவியின் கண்களைப் பூத்துநிற்கும் குவளை மலர் பார்த்தால் இவளுடைய கண்களுக்கு இணையாக நம்மால் இருக்க முடியவில்லையே என்று வெட்கப்பட்டு தலையைக் குனிந்துகொண்டு நிலத்தைப் பார்க்கும்' என்ற எண்ணம் இவனுக்குத் தோன்றுகிறது. அவளைப் பார்த்த பின்பு வேறு எதையும் காணமுடியாமல் நின்ற தலைவனுக்கு, திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. "ஓரளவு மனக்கட்டுப்பாடுடன் இருக்கும் எனக்கே இவள் அழகு திக்குமுக்காடச் செய்கிறதே...அறிவு திருந்தாத இளமைமிக்க பிற ஆடவர்கள் இவளைக் காண நேர்ந்தால் தன் மனதை மீட்க இயலாது, அதே எண்ணமாய் வேறு செயல்களில் கருத்தில்லாது வருந்தி நொந்துபோவார்களே! இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இந்நிலைக்கு யாரைக் குற்றம் சொல்வது? இயற்கை அழகுடன் இவள் பிறந்துவிட்டாள். இது இவள் செய்த குற்றமல்ல. இவள் அன்னையார் இவளை வீட்டிலே அடைத்து வைக்காமல் வெளியே வந்து உலவுமாறு அனுப்பிவிட்டார்களே..என்ன கொடுமை இது! இவளுக்குத்தான் விவரம் தெரியவில்லையென்றால், இவளைப் பெற்ற தந்தைக்கும் உடன்பிறந்த தமையன் மார்களுக்குமா தெரியவில்லை? அவர்களாவது இவளை வீட்டிலே பாதுகாக்கக் கூடாதா? இந்நாட்டு மன்னன் நந்திவர்மன் கோல்முறைக் கோடா கொற்றவன். அவனுடைய நாட்டிலா இக் கொடுமை நிகழ்வது. ஒருவேளை இவளைப் பெற்ற அன்னையர்க்கு இவ்வுலகில் வாழும் எம்போன்ற இளமை பொருந்திய ஆடவரிடத்து, காரணமில்லாத பகை ஏதேனும் உண்டோ? அதனால்தான் ஆடவர் உயிரை அழித்தொழிப்பது என்ற எண்ணத்துடன் அழகுக்கு அழகுசெய்து இவளை வீதியிலே உலவ விட்டார்களோ...?' என்று இத்தலைவன் எண்ணிப்பாடும் நந்திக்கலம்பகப் பாடல் இதுதான்.  அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப் புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால் நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில் உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ? (பா-73)
பொன்னியின் புதல்வர் எழுதிய சுந்தா

பொன்னியின் புதல்வர்' என்று பெயரிடப்பட்ட அமரர் "கல்கி'யின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று 1976-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த வரலாற்று நூலில் "இந்த வரலாறு தோன்றிய வரலாறு' என்று நூல் எழுதப்பட்ட வரலாற்றை, கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரன் ஐந்து பக்கங்களில் சிறந்த, பயனுள்ள தகவல் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ""தினமணி கதிரில், தம் புதுதில்லி வாசத்தின் அனுபவங்களை எழுதத் தொடங்கினார் ஒருவர். அதைப் படித்தவுடன் "அடடா! இவரன்றோ அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சரியான ஆசாமி என்று தோன்றியது'' என்று எழுதியுள்ளார் கி.ராஜேந்திரன். உடனே கி.ராஜேந்திரன் அவருக்குக் கடிதம் எழுதிக் கேட்டவுடன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தாராம் அவர். அவர்தான் எழுத்தாளர் - கவிஞர் சுந்தா. திருநெல்வேலி மாவட்ட மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. தமிழ் கண்ட தாமிரபரணி என்ற பொருனை, வ.உ.சி. போன்ற அஞ்சா நெஞ்ச சிங்கங்களைப் பெற்றது. ரசிகமணி டி.கே.சி., கு.அருணாசலக் கவுண்டர், பாஸ்கரத் தொண்டைமான், அ.சீ.ரா., ரா.பி.சேதுப்பிள்ளை, திருகூடசுந்தரம், பி.ஸ்ரீ முதலிய பல தமிழ் வளர்த்த பெரியார்களைப் பெற்றெடுத்ததும் திருநெல்வேலியே! சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ்ப் படைப்பாளர்கள் பலரை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அளித்ததும் திருநெல்வேலி சீமைதான். திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி, இராமசந்திர ஐயர் - ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். "மேலநத்தம் இராமசந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம்' என்பது சுந்தாவின் முழுப்பெயர். மே.ரா.மீ.சுந்தரம் என்ற பெயரில் நிறைய எழுதினார். தில்லியில் பணியாற்றியபோதுதான் "சுந்தா' என்ற பெயர் பிரபலமானது. தொடக்க காலத்தில் கிராம முன்சீப்பாக வேலைக்குச் சேர்ந்தார். பதிமூன்று ரூபாய்தான் சம்பளம். வேலை பார்க்கும்போதே புத்தகம் படிப்பதில் ஈடுபாடு கொண்டார் சுந்தா. திருநெல்வேலி சந்திப்பு - ரயில் நிலையப் புத்தகக் கடையில் அதிக நேரம் இருந்து படிப்பார். திருநெல்வேலியில் இருந்த காலத்தில், ரசிகமணி டி.கே.சி.யைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பத்திரிகைகளுக்குக் கவிதைகள் எழுதி அனுப்புவார். "கலைமகள்' நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்தது. புதிய புத்தகங்களை நிறையப் படித்து வந்த சுந்தா, எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டார். அகராதிகளைச் சேர்ந்து, புதிய புதிய சொற்களைப் படித்து, அதன் பொருளை அறிந்து மற்றவர்களிடம் அந்தச் சொற்களைப் பற்றிப் பேசி ஆராய்வதில் - விவாதிப்பதில் அவருக்கு உற்சாகம் அதிகம். ரசிகமணி டி.கே.சி. பரிந்துரையின் பேரில் திருச்சி வானொலி நிலையத்தில் சுந்தா பணியில் சேர்ந்தார். டி.கே.சி.யின் வட்டத்தொட்டியில் ஏற்பட்ட பழக்கத்தால் ராஜாஜி, மகராஜன், தொ.மு.சி. பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு சுந்தாவுக்கு ஏற்பட்டது. எழுதத் தொடங்கினார். எழுத்திலே இயற்கையாக அமைந்த நகைச்சுவை, இலக்கியக் கவிதைநடை பலரைக் கவர்ந்தது. ஆசிரியர் கல்கியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பிறகு, தில்லி வானொலிக்குச் செல்லும்படி நேர்ந்தது. தில்லியில் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில், தமிழ்ச் செய்தி தயாரிப்பதோடு செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். "செய்திகள் வாசிப்பது எம்.ஆர்.எம்.சுந்தரம்' என்ற குரலுடன் தொடங்குவதை அன்று கேட்டவர்கள் - அந்தக் குரல் இன்றும் காதில் ஒலித்துக்கொண்டிருப்பதை உணர்வர். திறமை காரணமாக செய்திப் பிரிவில் தலைவராகப் பதவி உயர்வு கிடைத்தது. தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றியதோடு தமிழில் புதிய சொல் வடிவங்களைத் தாமே உருவாக்கிப் படிப்பார். "அடிக்கல் நாட்டுதல்', "குழந்தைகள் காப்பகம்' என்று அவர் உருவாக்கிய பல சொற்கள் இன்றும் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்காக சுந்தா உருவாக்கிய சொற்றொடர்கள்தாம் "நாம் இருவர் நமக்கு இருவர்', "அதிகம் பெறாதீர், அவதியுறாதீர்' போன்றவை. பாரதம் சுதந்திரம் பெற்ற புதிதில் தில்லி வானொலி நிலையத்துக்கு உரையாற்ற மகாத்மா காந்தி வந்தார். படிகளில் ஓரமாக நின்று அதிகாரிகள் அவரை வரவேற்றார்கள். அவர்களுள் ஒருவர் சுந்தா. பாபுஜி படியில் வைத்த கால் சற்றே நழுவ, தடுமாறியபோது அருகிலிருந்த சுந்தா, சட்டென்று காந்திஜியின் கரத்தைப் பற்றி அவர் விழுந்துவிடாமல் தடுத்துப் பிடித்தாராம். அப்போது காந்திஜி, "சுக்கிரியா' (நல்லது செய்தாய்) என்று நன்றி தெரிவித்தாராம். ஆனால் பாதுகாவலர்கள், காந்திஜியைத் தொட்டது தவறு என்று சுந்தாவைக் குற்றம் கூறினார்களாம். புதுதில்லி தமிழர் வட்டாரத்தில் "சுந்தா' என்னும் மூன்றெழுத்துப் பெயர் மிகவும் பிரபலமானது. தில்லி தமிழ்ச்சங்கம் தொடங்கிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கு உதவியவர்களுள் சுந்தாவுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நாள்களில் தமிழ்ச் சங்கம் "சுடர்' என்ற அருமையான இலக்கிய இதழ் ஒன்றைத் தயாரித்தது. "சுடர்' தயாரிப்பதில் சுந்தாவின் பங்கு அதிகம். அமெச்சூர் நாடகங்களில் சுந்தா நடித்திருக்கிறார். பாட்டி வேஷம் போட்டிருக்கிறார். குறவன்-குறத்தி நடனம் என்று நகைச்சுவை நாடகங்களும் நடத்தியிருக்கிறார். சுந்தாவின் திறமையையும் ஆங்கிலப் புலமையையும் அறிந்த லண்டன் பி.பி.சி. நிறுவனத்தினர், தமிழோசை நிகழ்ச்சிகளைத் தயாரிக்க மூன்றாண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தனர். சுந்தா, தில்லி வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது, சைக்கிளில்தான் எங்கும் செல்வார். சைக்கிள் மீது அவருக்கு மிகவும் விருப்பம். லண்டன் பி.பி.சி.யில் பணியாற்றும் உத்தரவு வந்தவுடனேயே தனக்கு விருப்பமான சைக்கிளை விற்றுவிட்டார். ஆனால், தில்லி விமான நிலையம் வரையில் சைக்கிளிலேயே பயணித்து "விமான நிலையத்துக்கு வந்து சைக்கிளைப் பெற்றுச் செல்லுங்கள்' என்று விலைக்கு வாங்கியவரிடம் தெரிவித்து அதன்படியே செய்தாராம். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பதே சுந்தாவின் லட்சியம். பணம் சேர்ப்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. சம்பளத்தை வாங்கி பெட்டியில் வைத்து விடுவார். பெட்டிக்குப் பூட்டு கிடையாது. வீட்டுத் தேவைக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள வீட்டாருக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார். வானொலி நிலையப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, "தினமணி கதிரில்' ஆசிரியராக இருந்த பிரபல எழுத்தாளர் சாவி, தில்லி வாழ்க்கை அனுபவங்களை எழுத சுந்தாவை வற்புறுத்தினார். அதனால் சுந்தா, "தலைநகரில் ஒரு தலைமுறை' என்ற தொடரை எழுதினார். அந்தத் தொடர் கட்டுரை வாசகர் வரவேற்பைப் பெரிதும் பெற்றது. அந்தத் தொடர்தான், "கல்கி' ஆசிரியர் கி.ராஜேந்திரன், அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை சுந்தாவிடம் ஒப்படைக்கச் செய்தது. "பொன்னியின் புதல்வர்' என்ற மகத்தான நூல், அமரர் "கல்கி'யின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது. "கல்கி' வார இதழில் நான்கு ஆண்டுகள் எழுதினார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி மிக அதிகம். தான் மிகவும் போற்றிய - விரும்பிய எழுத்தாளர் கல்கியின் வரலாற்றை புதிய முறையில் எழுதினார். ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது வேறு பல செய்திகளைச் சேகரிக்க வேண்டியிருக்கிறது. அதில் விருப்பு வெறுப்பு ஏற்படக்கூடாது. கல்கியின் வாழ்க்கை வரலாற்றை 912 பக்கங்களில் எழுதியிருக்கிறார் சுந்தா. இந்த மாபெரும் படைப்பைத் தவிர, "இதய மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பும், "கருநீலக் கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் சிறு சிறு - ஒரு பக்க எழுத்துச் சித்திரங்களை தொடக்கக் காலத்தில் எழுதியிருக்கிறார். சுந்தா, மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். "பொன்னியின் புதல்வர்' என்ற மகத்தான வரலாற்றை எழுதிய பொருனைச் செல்வர் சுந்தா, 1995-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

Sunday, October 10, 2010

மறைமலையடிகளார் மாண்பு!

மறைமலையடிகளார் மாண்பு!
- மா.க ஈழவேந்தன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் - இலங்கை
நாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப்பேராளர்
னித்தமிழ் இயங்கங் கண்ட தந்தை மறைமலை அடிகள்... தமிழக மண்ணில் 15-07-1876; விண்ணில் - 15-09-1950.
     
15-09-1909ல் அறிஞர் அண்ணா தோன்றினார். 15-09-1950ல் மறைமலை அடிகள் மறைந்தார்.  இவ்விரு பெருமக்களின் தோற்றமும் மறைவும் செப்டம்பர் 15ல் நடைபெற்றுள்ளதால் இந்நாள் பெருமை பெற்ற நாளாக விளங்குகின்றது. எனவே மறைந்தமலை அடிகளைப்பற்றி இதே நாளில் பிறந்த அறிஞர் அண்ணா கூறுவதை முதலில் நினைத்துப்பார்த்து மகிழ்வு கூறுவோமாக:
அறிஞர் அண்ணா வாழ்த்தும் மறைமலை அடிகள்
"மறைமலைஅடிகளாரின் மாண்பினை எண்ணும்தோறும் வியக்கத்தக்க மாண்பினை அவரோடு நெருங்கிப்பழகிய பலரும் எடுத்துரைத்திருக்கின்றார்கள். நான் அவரோடு அதிகம் நெருங்கிப் பழகியவன் அல்ல. அவரோடு எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பெல்லாம் இந்நாட்டில் முதலில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் மறைமலையடிகளாரது புலமை, இந்தி எதிர்ப்புப் போராட்ட்த்தில் ஈடுபட்ட எங்களுக்கெல்லாம் பெரும் அரணாக அமைந்திருந்தது. இந்தி, தமிழகத்துக்குத் தேவைதானா? அது தமிழகத்துக்கு பொது மொழியாகத்தான் வேண்டுமா? அப்படி பொது மொழியானாற் தமிழுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பதை எல்லாம் மறைமலையடிகளார் ஏடுகளின் வாயிலாக எடுத்துக் காட்டி வந்தார்கள்.
இதைப்போல், அவர் மேற்கொண்டிருந்த பல்வேறு முயற்சிகள் இன்று காலத்தால் கனிந்து வருகின்றன. மறைமலையடிகளுக்குப் பெற்றோரிட்ட பெயர் சுவாமி வேதாசலம். அதனை அவர் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்ட போது, பலருக்கு ஐயப்பாடு. சிலர், இது என்ன, 'புதியதோர் புலி' என்று கேட்டனர்.
ஆனால். மறைமலையடிகளோ தமிழனுக்கு எனத் தனிமொழி உண்டு என்பதை நிலைநாட்டுவதில் மிக அக்கறை காட்டினார். இப்பண்பும் மொழியும் காப்பாற்றபடாவிடின் நாளாவட்டத்திற் தமிழர்கள் இப்பண்பையும் மொழியையும் மறந்து தங்களுக்கென உள்ள சீரிய தன்மையை இழந்துவிடுவர். உலகில் இன்றுள்ள வாழ்வு இழந்த இனத்தாரோடு தமிழரும் சேர்க்கப்பட்டு விடுவர். எனவே, தமிழர்கள் தங்கள் மொழியையும், பண்பையும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக மறைமலையடிகள், 'தனித்தமிழ் இயக்கம்' என்ற பெயராற் சீரியதோர் முயற்சியை மேற்கொண்டார்.
இந்த இயக்கத்தை அவர் தோற்றுவித்த போது, 'இது வெற்றி பெறுமா' என்று சிலரும், 'இது வேண்டப்படுவது தானா' என்று வேறுசிலரும், இதனால் 'தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் என்ன பயன்' என மற்றும் சிலரும் வினவத் தொடங்கினார்கள்.
ஆனால் இன்று, "யார் நடத்துகின்ற ஏடானாலும், அதிற் தனித்தமிழ் நடை கையாளப்படுவதை நாம் காணுகிறோம்."
மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளதற்கு அறிஞர் அண்ணா அளித்துள்ள இக்கூற்று, தலைசிறந்த சான்றாக அமைகிறது.
பாரதியும் மறைமலையடிகளும்!
பாட்டிற்கொரு புலவன் பாரதி, தன் பாட்டுத் திறத்தாற் பைந்தமிழை வாழ்வித்தமை நாம் மறுப்பதிற்கில்லை. அவருடைய நாட்டுப்பற்றும். அவர் கையாண்ட எளிய உணர்ச்சி மிக்க நடையும் காலத்தின் தேவையை நிறைவு செய்து தமிழ் மக்களைப் புதிய வழியில் இட்டுச் சென்றதை நம்மவர் ஏற்றேயாக வேண்டும். அதே வேளையில், தமிழ் மொழியிற் படிந்த எல்லை மீறிய பிறமொழி மாசினைக் களைந்து தமிழின் தூய்மையைப் பேணி, தமிழைத் தமிழாகவும், தமிழனைத் தமிழனாகவும் வாழ வைத்த பெருமை மறைமலை அடிகளாருக்கே உண்டு.
மொழியின் வாழ்வோடுதான் ஓர் இனத்தின் வாழ்வு இணைக்கப்படுகின்றது.
மொழி ஒரு இனத்தின் விழி மட்டுமல்ல, மொழி அதனின் உயிராகும். ஒரு மொழி அழிகின்றபோது, அம்மொழியைப் பேசுகின்ற இனமும் அழிகின்றது. ஒரு தேசிய இனத்தின் உயிர்நாடி அதன் மொழியாகும்.  புரட்சிக் கவிஞன் பாரதிதாசன், 'தமிழுக்கும் அமுது என்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று அழகுபட ஆணித்தரமாக தமிழுக்கும், தமிழ் இனத்துக்குமுள்ள பிரிக்க முடியாத பிணைப்பைப் பீறிட்டு எழும் உணர்ச்சியுடன் மொழிந்துள்ளார்.
மறைமலையடிகள் ஏற்படுத்திய தாக்கம்!
மேற்கூறிய கூற்றுக்கள் அனைத்தையும் நாம் நினைவிற் கொள்ளும் போதுதான் மறைமலையடிகளாரின் மாண்பினை நாம் உணரும் நிலை ஏற்படுகின்றது. தமிழன் தன் மொழி எது, தன் பண்பாடு எது, தன் நாகரிகம் எது? தன் நெறி எது? தனது வாழ்வியல் முறை எது? என்று உணராது தத்தளித்துத் தன்நிலை மறந்திருந்த வேளையிற் தமிழனுக்குத் தன் இன உணர்வை, மொழி உணர்வை ஊட்டியவர் மறைமலையடிகளார்.
இன்று ஆட்சி மன்றங்களிலும், தமிழ் மன்றங்களிலும் நல்ல தமிழ், தூய தமிழ் அரசோச்சுகின்றது.  அதற்கு அடிகோலிய பெருமை, தானே தனி இயக்கமாக விளங்கி எதிர்ப்புகள் அனைத்தையும் துணிவுடன் தாங்கிய மறைமலையடிகளார் ஆற்றிய பணியின் விளைவே என்பதனை அவரின் கொள்கையுடன் மாறுபடுவோர் கூட ஏற்றேயாக வேண்டும். இன்று நல்ல தமிழில் எழுதாவிட்டால், நல் அறிஞர்களின் மதிப்பினையோ வாழ்த்தினையோ பெற முடியாததோடு தமிழ்ப்பொதுமக்களும் வரவேற்க மாட்டார்கள் என்ற நிலையும் இன்று உருவாகியுள்ளது இவை எல்லாம் மறைமலையடிகளாரின் இயக்கம் ஏற்படுத்திய தாக்கமேயாகும்.
தமிழன் தன் மீது நம்பிக்கை கொள்ளின்!
தனி ஒரு மானிடனாக நின்று தன்னை எதிர்த்த எதிர்ப்புகளையெல்லாம் தூளாக்கி வெற்றி கண்டவர் மறைமலையடிகளார். தனியொரு மானிடரால் இவ்வெற்றியை ஈட்ட முடியுமெனிற் தமிழ் இனம் ஒருங்கிணைந்து, தன்னிலை உணர்ந்து, தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதி பூணில் எவரும் அதனைத்தடுக்க முடியாது. இன்று தமிழனை எதிர்நோக்கும் பெரும் அழிவுக்கு அடிப்படைக் காரணம் பிற நாட்டுப்படையெடுப்போ அல்லது பிற இனத்தின் ஆட்சியோ அல்ல. இவையனைத்திற்கும் மேலாகத் தமிழனுக்குத் தம்மீது நம்பிக்கையின்மையே இவ்வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
தமிழ் மன்றங்களில் இன்று தமிழ் தலைதூக்குவதற்கு யார் காரணம்?
இன்று தமிழ் மன்றங்களில் அக்கிராசர் அகற்றப்பட்டுள்ளார், அவைத் தலைவர் தலைமை தாங்குகின்றார். காரியதரிசியைக் காணவில்லை, செயலாளர் செம்மையோடு வீற்றிருக்கின்றார், பொக்கிஷாலர் புதைக்கப்பட்டுள்ளார், பொருளாளர் பொலிவோடு வீற்றிருக்கின்றார். போஷகர் போன இடம் தெரியாது, காப்பாளர் கனிவோடு வீற்றிருக்கின்றார், இவை மறைமலையடிகள் கண்ட தனித்தமிழ் இயக்கத்தின் வெற்றி என்பதனை யார் மறுக்க முடியும்?
கோயில்களில் தமிழ்...
தமிழன் கட்டிய கோயிலில் இன்று தமிழ் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

இன்று நாம் விரும்புகின்ற அளவுக்கு தமிழ் வழிபாடு தலைதூக்காவிடினும், தமிழ் வழிபாடு வேண்டும் என்ற இயக்கம் பல இடங்களில் வலியுறுத்தப்படுகின்றது. தமிழக க்கோவில்கள் சிலவற்றில் செந்தமிழ் வழிபாடு செம்மையுடன் நடைபெறுகின்றது.  கடவுளுக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்ட தமிழின் இன்று கடவுளுக்குத் தமிழ் தெரியும் என்பதை உணர்ந்து தமிழில் கடவுளை வழிபடத் தொடங்கி விட்டான்.
"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்", என்று அப்பர் ஏழாம் நூற்றாண்டில் எழுப்பிய குரல் காலங்கடந்த நிலையில் தமிழர் நெஞ்சில் நிலைத்த பாடலாக விளங்குகின்றது. 
திருஞான சம்பந்தர், தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் தன்னைத் தமிழ் ஞான சம்பந்தன் எனவும் தமிழ் ஞானவிரயன் என்று ஏறக்குறைய ஐம்பது இடங்களில் தன்னைப் பற்றி வலியுறுத்தியதோடு ஐநூறு இடங்களில் தமிழின் பெருமை பேசுகின்றார்.
'எங்கே தமிழின் நீர்மை பேசப்படுகின்றதோ அங்கு இறைவனைக் காண்கிறேன்' என்கின்றார். திருஞானசம்பந்தரிடம் மறைமலையடிகளுக்கு தனி ஈடுபாடு உண்டு என்பதனை தமிழ் தென்றல் தெரிவிக்க பல இடங்களில் சொல்லிச் சென்ற செய்தி எம் சிந்தையை இனிக்க வைக்கின்றது.
எட்டாம் நூற்றாண்டில் நம்பி ஆருரனுக்கு இறைவன் இட்ட கட்டளை அர்ச்சனைப்பாட்டேயாகும். எனவே நம்மை மண்ணில்,  'சொற்றமிழ் பாடுக' என்பதேயாகும். ஆண்டவன் தம்பிபிரான் தோழனுக்கு அன்று இட்ட ஆணை ஆண்டுகள் பல உருண்டோடிய நிலையில் அரைகுறையாக தமிழ் வழிபாடு ஓரளவு தயக்கத்தோடு நிறைவேற்றப்படுகின்றது.
கடவுள் இட்ட கட்டளையே காலம் தாழ்த்தி உணர்பவன் தான் தமிழன். நாயன்மார்க்கு நயம்பட நவின்ற கூற்றுக்கு செவிமடுக்காத நிலை நிலவிய போது ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வான் கலந்த மாணிக்க வாசகர் தன் தேன் கலந்த வாசகத்தில் "சொல்லிய பாட்டின் பொருள் உண்ர்ந்து சொல்லுக" என்று இடித்துரைப்பதையும் இங்கு நாம் நினைவுகொள்வோமாக.

இவற்றையெல்லாம் நினைவு கொண்டு போலும், "குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழி விழுமாறே" என்று திருமூலர் தன் திருமந்த்திரத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் கூறியதை நாம் நினைவு கொள்ள மறுக்கலாமா?
இவையனைத்தையும் செவி மடுத்த நிலையிலும் தமிழன் சிந்தனையில், விரும்பியமாற்றத்தைக் காணாத பாவேந்தன் பாரதி தாசன் கோயிற் படிக்கட்டின் கீழ் நின்று, 'தமிழ் மானத்தை வடிகட்டி, 'வடமொழியில் மந்திரம் என்று உகந்து போற்றும் தமிழனை 'மடையா" என்று ஆத்திரத்துக்கு உள்ளாகி பாவேந்தர் இடித்துரைத்துள்ள கூற்று நம் இதயத்தில் இடம்பெற வேண்டாமா?  எனவே தான் தோன்றியிருக்கும் தமிழ் ஈழத்தின் அரசவைக் கவிஞராக வீற்றிருக்கப் போகின்ற கவிஞர் காசியானந்தன் 'ஏ தமிழா! நீ செருப்பாக இருந்தது போதும் நீ நெருப்பாக மாறு' என்று கொதித்தெழுகிறார். சமயச்சான்றோரும் தமிழை வாழ்வித்த அறிஞர்களும் விடுத்த வேண்டுகோளையாவது நாம் நிறைவேற்ற முயல்வோமாக.
தமிழ் மணமக்களை தமிழில் வாழ்த்துவோம்; எம் அழுகுரலும் அருந்தமிழில் கேட்கட்டும்!
தமிழன் திருமணத்தில் பொருள் பொதிந்த முறையில் தமிழ் மணமக்களை தமிழில் வாழ்த்துவோமாக. எம் இறப்பு இல்லங்களிலும், எம் அழும் ஓசை அருந்தமிழில் கேட்கட்டும். சாகும் போதும் தமிழ் படித்து சாவோம். எம் சாம்பல் வேகும் போதும் தமிழ் மணந்து வேகட்டும். துயர் தோய்ந்த உள்ளத்தோடு நாம் விடுக்கின்ற வேண்டுகோளுக்கு தமிழினம் செவி மடுக்குமா?
மறந்தும் "டாடி", "மம்மி" என்ற சொற்கள் வாய்க்குள் புகாது தடுப்போம், அல்லாவிடில் தமிங்கிலம் தலைதூக்கிவிடும்.
நாம் பெற்ற குழந்தைகளை "அம்மா" என அழைக்க வைப்போம். எம் குழந்தைகளோடு பேசுகின்ற போது, "பேபி" என்றழைக்காது என் செல்லக்குழந்தையென்று செம்மாந்தழைப்போமாக. எங்கள் குழந்தைகளுக்கு நாம் சூட்டுகின்ற பெயர்கள், அன்பழகன், அறிவழகன், யாழினி, எழிலினி, என எங்கள் பிள்ளைகளின் பெயர்களில் தமிழ் மணம் கமழட்டும். சுரேஷ், நிரோஷன், டர்மினி, டக்‌ஷலா என்ற பெயர்களை தவிர்த்துக்கொள்வோம்.
எனவே ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக ஒவ்வொரு தமிழ் மாணவனும், மாணவியும் தன் மொழியிற் தனி ஆற்றலில் நம்பிக்கை வைத்துத் தனித்தியங்கவல்ல, அதனின் தன்மையில் உறுதிபூண்டு செயலாற்றின் வெற்றி நமதே. எம் அறிவின் பஞ்சத்தை எம் மொழியின் பஞ்சமாக ஆக்காது, காலத்தின் கருத்தோட்டத்திற்கேற்ப நம் மொழியைப் பல துறைகளிலும் வளமாக்க முயல்வது எமது தலையாய கடனாகும்.
ஆட்சியில் அமைதிகாண மொழியில் செம்மை வேண்டும்
மொழியிற் செம்மையிருப்பின் கருத்திற் தெளிவு பிறக்கும். கருத்துத் தெளிவோடு ஆட்சி அமையின் அவ்வாட்சியில் அமைதி நிலவும். எனவே செந்தமிழிற் செம்மை காண விழைந்த மறைமலையடிகளாரின் முயற்சி ஆட்சியிலும் அமைதி காண துணை நிற்கின்றதென்று எம்மனோர் துணிவு.
மறைமலையடிகளின் நூல்கள் ஆயிரம் மூளைகளை சிந்திக்கச் செய்யும்.
மறைமலையடிகளின் பணி, மொழியின் தூய்மை காப்பதோடு நிற்கவில்லை. அவர் பல்துறையிற் நூல்கள் பலவற்றை யாத்துள்ளதையும் நாம் நினைவு கொள்ள வேண்டும்.
அவரின் நூல்கள் ஆயிரம் மூளைகளைச் சிந்திக்கச் செய்யும் பத்து ஆயிரம் நாக்குகளைப்பேசச் செய்யும்; அத்தோடு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு ஆற்றல் மிக்க எழுத்தாளர்களை எழுதச் செய்யும். மறைமலையடிகளின் நூல்களை நுகர வேண்டிய முறையில் நுகர்வோர், இவ்வுண்மையை உணர்ந்தவர் ஆவர்.
மறைமலையடிகளாரின் மாண்பினை நாம் விரிக்கிற் பெருகும் எனவே விரிவு அஞ்சி நாம் சுருக்கிக்கூறின் மறைமலையடிகளார் மாண்பு வியக்கத்தக்கதே.
மறைமலையடிகளார் மறைந்த அறுபது ஆண்டை நினைவுகொள்வோம்!
*