இந்த வாரம் கலாரசிகன்

கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியோரில் முதல்வர் யார் என்று யாராவது என்னைக் கேட்டால், கிஞ்சித்தும் தயக்கமின்றி நான் பகரும் பெயர், "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. என்பதாகத்தான் இருக்கும். அவரது இதழியல் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, ஆன்மிகம், அரசியல், இலக்கியம் என்று எல்லா தளங்களிலும் பங்களிப்பு நிகழ்த்திய மகான் "மயிலை முனிவர்'. மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்த பெருமையும் திரு.வி.க.வையே சாரும்.  "முருகன் அல்லது அழகு' என்றொரு புத்தகம். காரைக்குடியிலிருந்து வெளிவந்த "குமரன்' என்கிற மாத இதழின் முதல் இதழில் திரு.வி.க. "முருகன்' என்கிற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் இருந்த பொருள் செறிவு அதை விரிவுபடுத்தி ஒரு புத்தகமாகக் கொணர வேண்டும் என்று நண்பர்களை வற்புறுத்தவைத்தது. அவர்களது கோரிக்கையை ஏற்று "முருகன்' என்னும் தலைப்பில் 1925-இல் ஒரு புத்தகம் வெளிக்கொணர்ந்தார் "தமிழ்த் தென்றல்'.  இரண்டாண்டுகளுக்குப் பிறகு இன்னும் பல கருத்துகளை "முருகன் அல்லது அழகு' என்னும் பெயரில் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. இந்தப் புத்தகம் பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. இந்தப் புத்தகத்தின் எட்டாவது பதிப்பு 1950-இல் வெளிவந்தபோது, திரு.வி.க.வுக்கு வயது முதிர்ச்சியால் பார்வை மங்கியிருந்ததாக அவரே குறிப்பிடுகிறார்.  ""இயற்கை அழகை முருகெனக் கொண்டு பழந்தமிழர் வழிபாடு நிகழ்த்தினர். இவ்வாறு முருகனை வழிபடுவோர் தொகை நாளைடைவில் அருகிவிட்டது. அதனால் பல கடவுளர் உணர்வு, பன்னெறி உணர்வு, போராட்டம், கட்சிகள், பிரிவுகள் முதலிய இழிவுகள் தோன்றலாயின. பழைய இயற்கை வழிபாடு மீண்டும் புத்துயிர் பெறின், இழிவுகள் தொலைதல் ஒருதலை. இயற்கை வழிபாடு மீண்டும் நாட்டில் உயிர்த்தெழல் வேண்டும் என்பது எனது வேணவா, அவ்வவா மேலீட்டான் யாக்கப்பட்ட நூல் இது'' என்று தனது நூன்முகத்தில் திரு.வி.க. குறிப்பிடுகிறார்.  உலகத்தின் நான்கு பக்கங்களிலும் வாழ்ந்துவரும் மக்கள் தங்கள் அறிவாற்றலுக்கு ஏற்றவாறு, தங்கள் தங்கள் மொழியில் கடவுளுக்கு பலதிறப் பெயர்கள் சூட்டி மகிழ்கிறார்கள் என்று குறிப்பிடும் திரு.வி.க., "முருகன்' என்பதற்கு அற்புதமான விளக்கம் தருகிறார்.  ""முருகையுடையவர் முருகன். முருகு என்பது பலபொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை: மனம், இளமை, கடவுட்டன்மை, அழகு என்பன. இந்த நான்கு பொருளடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழுமுதற்பொருளை அழைத்தது வியக்கத்தக்கது!'' என்று தனது "முருகன் அல்லது அழகு' புத்தகத்தை எழுதத்தொடங்குகிறார் மயிலை முனிவர்.  முருகு என்பது மிகத் தொன்மைவாய்ந்த ஒரு தமிழ்ச்சொல் என்பதை ஐயத்திற்கு இடமின்றி ஆணித்தரமாக நிறுவுகிறார் திரு.வி.க. ""முருக என்னும் முதல் நிலை, "அன்' என்னும் ஆண்பால் இறுதிநிலையேற்று "முருகன்' ஆயிற்று. ஆகவே, முருகினின்றும் முருகன் பிறந்தான் என்க. முருகுவுக்கும் முருகனுக்கும் பொருளில் வேற்றுமையுண்டோவெனில் இல்லையென்ப. இரண்டும் ஒரு பொருளையே குறிப்பன. முருகே முருகன்; முருகனே முருகு!'' என்று நிறுவுகிறார் அவர்.  ""இயற்கையில் உள்ள முருகை முதன்முதலில் கண்டவர் தமிழ் நாட்டார். முருகனுக்குரிய செவ்வாய்க் கோளுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. முருகனுண்மை கண்டு இயற்கை வாழ்வு செலுத்தி, நோன்பு காத்து, அழியாப் பேறுபெற்ற சித்தர்கள் வாழ்ந்த நாடு நமது தமிழ்நாடு'' என்று பதிவு செய்யும் திரு.வி.க., பல இடங்களில் தனது வாதத்துக்கு அருணகிரியாரைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.  "இயற்கையும் அழகும் என்றும் வாழ்க!' என்று தனது நூலை முடிக்கும் மயிலை முனிவரின் "முருகன் அல்லது அழகு' ஏதோ படித்து மகிழ்வதற்காக எழுதப்பட்டப் புத்தகமாக நான் கருதவில்லை. இது ஓர் ஆய்வு நூல். தமிழனின் இறையுணர்வு இயற்கையையும் அந்த இயற்கையின் அடித்தளமாக அமைந்த அழகையும் சார்ந்து உருவாகியிருப்பதை உணர்த்தும் நூல் இது.  இரண்டுமுறை படித்துவிட்டேன். இன்னும் ஒருமுறை படிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக, "நோன்பு' பற்றி திரு.வி.க. குறிப்பிட்டிருக்கும் பகுதிகளை!  ------------------------  யார் தந்தது? எப்படி என்னை இது வந்தடைந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. துவக்கம், கலை இலக்கிய இயக்கம், பந்தணை நல்லூரிலிருந்து கவிஞர் செ.ப. வீரத்திருக்குமரன் எழுதிய குட்டிக் கவிதைகளை இரணியன் என்பவர் "தொட்டியில் மரங்கள்' என்கிற பெயரில் கையடக்கப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு குறும்பாடலும் சவுக்கால் "பளார் பளார்' என்று தமிழனின் மனசாட்சியை விளாசித் தள்ளுகிறது.  இந்தப் புத்தகத்தில் இருக்கும் கவிதைகளை எழுதிய செ.ப. வீரத்திருக்குமரன் ஒரு பள்ளி ஆசிரியர் என்று தெரிகிறது. குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர். குழந்தைகளின் உள்ளக் குமுறலை உணர்ந்த ஆசிரியர். தமிழ்ச் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள ஆசிரியர். "ஐயா, தங்களை சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்' என்று எனது எழுத்தால் வணங்கத் தோன்றுகிறது. "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்' என்கிற பாரதியின் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபிக்கும் எழுத்து இவருடையது.  ""இந்த நூலைப் படித்த பிறகாவது, உங்கள் குழந்தைகளைத் தொட்டியில் நடாமல் மண்ணில் ஊன்றி, அகலக் கிளை பரப்பி உயர வளர்க்கும் முடிவை நீங்கள் எடுப்பீர்களேயானால், எங்கள் உழைப்புக்கும் இதற்கென நாங்கள் செலவு செய்த தொகைக்கும் பயன்கிட்டியதாக நம்புவோம்'' என்கிற தொகுப்பாளர் இரண்யனின் பதிவு விழிகளில் நீர்கோக்க வைத்தது.  நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சமுதாய சிந்தனை செத்துவிடவில்லை. பணபலத்தை எதிர்கொள்ள நல்ல சில உள்ளங்கள் தயாராகின்றன. நாம் நம்மைத் தொலைத்துவிடவில்லை.    ஆங்கிலத்தில் திட்டுகிறார்  ஆசிரியர்  வகுப்பறைச் சுவற்றில்  "இனிய உளவாக  இன்னாத கூறல்'    ஆங்கிலம் படித்தால்தான்  அறிவுவளரும் என்கிறீர்கள்  தமிழ் படித்த  கலாமை மட்டும்  தலைவர் என்கிறீர்கள்.    கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்  எங்களையும்  கொஞ்ச  நேரம் ஒதுக்குங்கள்.    எங்களுக்காக  குழந்தைகள் காப்பகம்  இன்று.  உங்களுக்காக  முதியோர் காப்பகம்  நாளை.
கருத்துக்கள்

வகுப்பறைச் சுவற்றில் - இந்தத் தவறு எந்த இடத்தில் நேர்ந்தது? மூல நூலிலா? எழுதுநர் தாளிலா? அச்சிலா? சுவரில் எனத் திருத்தக்கூடாதா? ஞானசேகரன் இது குறித்து இன்னும் ஒன்றும் சொல்லவில்லையா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
10/31/2010 4:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue