Wednesday, May 22, 2019

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 – பி.என்.(இ)டயசு

அகரமுதல


திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9

ஆனால்,
  1. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
         பெய்யெனப் பெய்யும் மழை                                           (குறள்.55)
என்னும் குறட்பாவிற்கு திருக்குறள் மக்கள் உரையில் (ஏறத்தாழ பதினாறு) பதிப்புகளில் பாவேந்தரை அடியொற்றி, “மனைவி பயன்மழை போன்றவள்” என்று உரை எழுதியவர், அண்மையில் வரும் பதிப்புகளில், “பத்தினி சொன்னால் மழை பெய்யும்” என்று அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதித் திருவள்ளுவரைத்  திடுக்கிட  வைப்பார். தீர்வுக்குத் தெய்வப் புலவரை நாடுகிறோம். குறளாசான் எழுத்தாணியால் காமத்துப் பாலில் 1192 -ஆம் குறட்பாவைக் காட்டுகிறார்:
     வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
     வீழ்வார் அளிக்கும் அளி                                                    (குறள்.1192)
 தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆண்-பெண் சமன்மையை நிறுவச்  சில இணைக் குறட்பாக்களை எழுதுவது வழக்கம். ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க’ (குறள். 691) என்று நெருப்பின் தன்மையைக் கூறியவர், ஒரு காதலனாகக் காதலியிடம் ஒரு புதுமைத் தீயைக் காண்கிறார்:
     நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
     தீயாண்டுப் பெற்றாள் இவள் 
                                              (குறள்.1104)
மனைவி சளைத்தவளா, என்ன? அவளும் அவள் நுகர்ந்ததைப் பதிவு செய்கிறாள்:
     தொடின்சுடின் அல்லது காமநோய் போல
     விடின்சுடல் ஆற்றுமோ தீ     
                                              (குறள்.1159)
இது போல் இன்பம் திருமாலுலகில் கிடைக்குமா என்று வியக்கிறான் அவன்:
     தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
     தாமரைக் கண்ணான் உலகு 
                                               (குறள்.1103)
அவளுடைய நுகர்வும் அது போல்தான் இருக்கிறது:
     புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு    
     நீரியைந் தன்னா ரகத்து                                                       (குறள்.1323)
இந்த இணைக்குறள்கள்போல்தான் குறட்பாக்கள் 55-உம் 1192-உம். குறள் 55-இல் மனைவி பயன்மழை. குறள்1192-இல் கணவன் பயன்மழை. திருவள்ளுவர் அறிவியல் அறிஞர் தான்!      
  1. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
   களைகட் டதனொடு நேர்                                                      (குறள்.550)
இக்குறளுக்கு நாமக்கல் கவிஞர் உரை மனங்கொள்ளத் தக்கது:
‘கொலை செய்யும் பாதகர்களை அரசன் அப்புறப்படுத்தி விடுவது, பயிர்களைப் பாதுகாக்க களையெடுப்பது போலாகும்.’
மனுவும் களை எடுத்தலைப் பற்றிக் கூறுவதாலும் கொலைத்தண்டனையை ஆதரிப்பதாலும் பல உரையாசிரியர்கள் திருவள்ளுவர் மரணத் தண்டனையை ஆதரிப்பதாக உரை எழுதுகின்றனர்.
ஏற்கெனவே திருவள்ளுவர், ஒறுத்தல் என்ற சொல்லைத் தண்டித்தல் என்ற பொருளில்  இங்கு எழுதியது போன்று 314-ஆம் குறளில் மூன்றாம் சீரில் கையாண்டுள்ளார். 550-ஆம் குறளையும் ஆற்றுநீர்ப் பொருள் கோள் முறையில் கொள்ளவேண்டும் என்பது குறளாசான் கருத்து.
     இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
     நன்னயஞ் செய்து விடல்                                                      (குறள்.314)
கொலைசெய்யும் பாதகர்களைத் தண்டிப்பது மீண்டும் கொலை செய்யாதிருக்க என்று பொருள்பட,
     தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
     ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து 
                                                 (குறள்.561)
என்று கூறுவதன் மூலம் திருவள்ளுவர் மரணத் தண்டனையை எதிர்க்கிறார் என அறியலாம்.
  1. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
       தொகுத்தார்க்கும் துய்த்த லரிது   
                                     (குறள்.377)
பெரும்பாலும் உரையாசிரியர்கள் ‘வகுத்தான்’ என்ற சொல்லுக்கு, தெய்வம், ஊழ்த் தெய்வம் என்றெல்லாம் உரை எழுதுகின்றனர். பேராசிரியர் முனைவர் மோகனராசு நழுவல் உத்தியைக் கையாள்கிறார்:
     “வரையறுக்கப் பட்ட வழிகளில் செல்லாமல், கோடிகோடியாகப் பொருள் சேர்த்தவரும் அதனைத் துய்க்க முடியாது.” மூலப் படைப்பாளியை (காரண கருத்தாவை) இருட்டடிப்பு செய்யும் இந்த உத்தியை ஆங்கிலத்தில்  ‘agent deletion’என்று கூறுவார்கள். தீர்வு காணத்  தெய்வப் புலவரை நாடுகிறோம்
     :இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
     வகுத்தலும் வல்ல தரசு                                                     (குறள்.385)
திருவள்ளுவரின் இந்தத் தீர்வு அடுத்து வரும் குறளுக்கும் தீர்வாக அமையும்.  
  1. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
      கெடுக உலகியற்றி யான். (குறள்.1062)
இந்தக் குறளுக்குப் பேராசிரியர் மோகனராசு தரும் உரையில் நழுவல் உத்தி இல்லை:
     ‘ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ்தல் வேண்டும் என்றிருந்தால், வாழ்க்கை நெறிமுறைகளை உண்டாக்கித் தருபவன் கெட்டலைவானாக.’
(தொடரும்)
பேராசிரியர் பி.என்.(இ)டயசுஆங்கிலத்துறை, (பணி நிறைவுஇலயோலா கல்லூரி,சென்னை-34
முகவரி: 261, ஐயாவு(நாயுடு) குடியிருப்புஅமைந்த கரைசென்னை-29.தொ.பே.எண்.23630891

Friday, May 10, 2019

தந்தை பெரியார் சிந்தனைகள்- 2. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

அகரமுதல


தந்தை பெரியார் சிந்தனைகள் – 2
(2) நான் நெருக்கமாகப் பழகினவரையில் என் அறிமுகம் இது: கல்லூரியில் படித்த காலத்தில் (1934-39) அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன்[குறிப்பு 2]குடியரசு, விடுதலை இதழ்களில் வந்த அவருடைய கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன்; நேரில் பேசினது இல்லை. துறையூரில் என் முயற்சியால் தொடங்கப்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் முதல் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் நெருங்கிப் பழகினேன்[குறிப்பு 3]. தேவாங்கர் தெருமக்கள் எல்லாம் சுயமரியாதைச் கட்சியினர்; அவர்களில் முக்கியமானவர் அரங்கசாமி(செட்டியார்); அவர் வீட்டில்தான் ஐயா அவர்கள் தங்குவதுண்டு. ஆண்டிற்கு ஆறு, ஏழு முறை ஐயா அவர்கள் கட்சி வேலையாகவும், திருமணம் முதலியவை நடத்தவும் வருவதுண்டு. பள்ளி தொடர்பாகவும், சொந்த வேலையாகவும், பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும் ஐயா அவர்களிடம் பெற்றதுண்டு. அவை காரணமாக நெருங்கிய பழக்கம்.
(க) ஏழை மாணாக்கர்கட்கு உதவும் வகையில்: என் வாழ்வில் இதனை முக்கிய நோக்கமாகக் கொண்டவன். இதைப்பற்றிப் பெரியார்:
(அ) ‘நீங்கள் உண்மையைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கின்றீர்கள். நெற்றியில் விபூதி குங்குமத்துடன் திகழ்கின்றீர்கள்! இந்தச் சைவக்குறிகளுடன் நல்லாடை அங்கவத்திரம் போட்டுக் கொண்டு திருவரங்கம் உயர்நிலைப் பள்ளி- ஈ.இரா. உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லுங்கள். அந்தந்த தலைமையாசிரியர்களிடம் ‘நான் புதியன்; இளைஞன். ஏழைமாணாக்கர்கட்கு எவ்வெவ்வகையில் எல்லாம் உதவலாம்’ என்று கூறி வேண்டுங்கள். அவர்கள் பார்ப்பன மாணாக்கர்களை மனத்தில் வைத்துக்கொண்டு உதவுவதைக் கூறுவார்கள். நீங்கள் அம் முறையை நம் மாணாக்கர்கட்கு உதவுவதற்குப் பயன்படுத்துங்கள்’ என்று கூறினார் இதில் நல்ல பயன்கிடைத்தது.
(ஆ) பிற்போக்கு இனத்தைச் சேர்ந்த மாணக்கர்களின் பெற்றோர் குறைந்த வருவாயைக் காட்டி வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்றுத் தம் பிள்ளைகட்கு அரைக்கட்டணச் சலுகைக்குக் கோரியிருந்தனர். அவர்கள் இரண்டாயிரத்திற்கு மேல் வருமான வரியும் ஐயாயிரத்திற்கு மேல் விற்பனை வரியும் கட்டுகின்றனர் என்பதை அறிவேன். இதனைப் பெரியாரிடம் தெரிவித்தபோது ‘இதில் தலைவிட்டு பொதுமக்கள் பகையைச் சம்பாதிக்க வேண்டா; சான்றிதழ்கள் இருந்தால் சலுகையை வழங்கிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறி திசைதிருப்பி உதவினார்.
(இ) மேல் வகுப்பு தொடங்குவதற்கு இசைவு பெறுவதற்காக கோவை சென்று மண்டலப் பள்ளித்தணிக்கையாளரைச் சந்தித்துத் திரும்பும்போது ஈரோட்டில் இறங்கி பெரியாரைச் சந்தித்து அவர் பேணுகையில் இருந்து வரும் ஈரோடு மகாசனப் பள்ளியின் நிருவாகக் குழு அமைப்பது பற்றிய விதிகளின் படி வாங்கச் சென்றேன். பெரியார் ஊரில் இல்லை. பள்ளித் தலைமையாசிரியர் பெருமாள் முதலியார். அவரைக் கேட்ட போது அவர் பள்ளிக்காரியப் பொறுப்பாளர் அலுவலகத்துக்கு ஆளை அனுப்பி படி வாங்கி வருமாறு பணிக்க அலுவலகப் பொறுப்பிலிருந்த ஒரு பார்ப்பனச் சிறுவன் காரியப் பொறுப்பாளர் இசைவின்றித் தரமுடியாது என்று மறுத்து விட்டார். துறையூருக்குத் திரும்பியதும் பெரியாரின் ஈரோட்டு முகவரிக்குக் கடிதம் எழுதினேன். ஒருவாரத்தில் விதிகளின் நகலைப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்து உதவினார். இங்ஙனம் எத்தனையோ முறைகளில் தந்தை பெரியாரின் உதவிகள் பெற்றுப் பள்ளி வளர்ச்சியில் பயன்பெற்றேன்.
(கா) மூன்று சுவையான நிகழ்ச்சிகள்: தந்தை பெரியாரை நினைக்கும் போது மூன்று சுவையான நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன.
(அ) ஒரு சமயம் பெரியார் வாழ்வில் நிகழ்ந்த ‘மிதியடி வரலாறு பற்றிக் கேட்டேன். ஒரு சமயம் அவர் திறந்த மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தபொழுது அவர்மீது அவருக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு மிதியடியை வீசினான். அஃது அவர் மடியின்மீது விழுந்தது. அவர் அதை எடுத்து நோக்கியபோது அது புதியதாக இருந்தது. வண்டியோட்டியிடம் ‘வண்டியைத் திருப்பு; மற்றொன்று சாலையில் கிடக்கும்; அதை எடுத்து வரலாம்! அது ஒருவருக்கும் பயன்படாது; இது நமக்கும் பயன்படாது. இரண்டும் நம் கைக்குக் கிட்டினால் நமது அலுவலகத்தில் யாராவது பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறி சாலையில் கிடந்த மிதியடியை எடுத்து வந்தார்.
தந்தை பெரியாரைப் பார்த்து ‘செருப்பு உங்கள்மீதுப் பட்டும் கோபம் வரவில்லையே ஏன்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘தம்பி, பொதுத்தொண்டில் இருப்பவர்கட்கு இது போன்றவை அடிக்கடி நிகழக்கூடியவை. படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப் பேசுவான்; அல்லது செய்தித்தாளில் மறுப்பு தெரிவிப்பான். இவன் படிக்காத முட்டாள். இவன் தன் எதிர்ப்பைச் செருப்புமூலம் காட்டினான். இதில் கோபப் படுவதற்கு என்ன இருக்கின்றது?’ என்று அமைதியாகக் கூறினார் ‘பெரியார், பெரியாரே’ என்பது என் அறியா மதிக்குத் தெளிவாயிற்று.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
தமிழ்ச்செம்மல் கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் சுப்பு(ரெட்டியார்)
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்,சென்னைப் பல்கலைக் கழகம்

[குறிப்பு 2. 1934-39 ஆண்டுகளில், அப்போது அவர்தாடி இல்லாதவராக இருந்ததாக நினைவு- அப்போது என் வயது 18; அவருக்கு வயது 55.
 3.  1944 முதல். அப்போது என் வயது 28; அவர் வயது 65. தாடியுடன் இருந்ததாக நினைவு.]

நல்ல நண்பர்கள் தேவை! – யாழ் பாவாணன்

அகரமுதல


நல்ல நண்பர்கள் தேவை!

நண்பர்கள் எம்மை நாடி வரலாம்.
நண்பர்களைத் தேடி நாம் போகலாம்.
“ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூட
ஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!” எனப்
பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்!
நண்பர்களை அணைக்கத் தான்
நானும் விரும்புகின்றேன்.
நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும்
நானும் ஒதுங்குகின்றேன்.
எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்
எச்சரிக்கையாகப் பழகுகின்றேன்.
நண்பர்களே வேண்டாமென
நானும் ஒதுங்கவில்லை – இத்தால்*
நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன்.
நண்பர்களால் வானுயரப் புகழீட்டிய
நண்பர்களால் தான் உணர்ந்தேன்
நண்பர்கள் எனக்குத் தேவை என்றே!
நண்பர்கள் இல்லையென்றால் – தனக்கு
உளநோய் தான் வந்திருக்குமென
நண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன்
நண்பர்கள் கூட நல்மருந்தென்றே!
என்னை நண்பர் ஆக்குங்கள்…
என்னை எதிரி ஆக்காதீர்கள்…
நான் எதிரியாவதை விட
நல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்!
நல்ல நண்பர்களால்
நானும் நீடூழி வாழலாமென்ற
தன்நலம் கருதியே அழைத்தேன்
நாளையாவது நல்ல நண்பர்களாக
நாமிருக்கலாமென்றே!

Monday, April 29, 2019

தந்தை பெரியார் சிந்தனைகள்- முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

அகரமுதல

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ 
பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்
சென்னைப் பல்கலைக் கழகம்
தந்தை பெரியார்சிந்தனைகள்
தலைவர் அவர்களே!
அறிஞர் பெருமக்களே!
மாணக்கச் செல்வங்களே!
முனைவர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். முனைவர் இரா. தாண்டவனிடமிருந்து அழைப்பு வந்ததும் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதுபற்றிச் சிந்தித்தேன். முடிவாக ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்பதுபற்றிப் பேசலாம் என உறுதி கொண்டேன். என் மாணாக்கர் வாழ்வில்- நான் அறிவியல் மாணாக்கன்- என் சிந்தனையைத் தூண்டியவர்கள் எனக்குக் கணிதம், அறிவியல் கற்பித்த பேராசிரியப் பெருமக்கள் (1934-1939) நன்முறையில் அமைந்தமையால் அறிவியலில் முதன் வகுப்பு – கல்லூரியில் முதல்நிலை – மாநிலத்தில் மூன்றாம் நிலையில்- தேர்ச்சியடைய முடிந்தது. ஆனால் பொதுவாழ்வில் என் சிந்தனையைத் தூண்டி அது வளரக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்தான் என்பதை இன்றளவும் நீள நினைந்து பார்க்கின்றேன். ஆகவே அவரே எனக்குப் பேச்சுத்தலைப்பாக அமைந்தார். 1934-39 இல் நான் புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்றபோது திருச்சி நகரமண்டப (town Hall) திடலில் நடைபெறும் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் பேசும் பேச்சுகள் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்தன; தவறாமல் அவர்தம் பேச்சுகளை உன்னிப்பாகக் கேட்டு வந்தேன். அவை யாவும் இளைஞர் மனத்தை ஈர்க்கக் கூடியனவாக அமைந்திருக்கும்.
இந்த அறக்கட்டளை நாயகராக இருக்கும் முனைவர் சி. அ. பெருமாள் அவர்களை 1975 முதல் அறிவேன். நான் திருப்பதியில் பணியாற்றியபோது இப்பெருமகனாரும் இவர்தம் கெழுதகை நண்பர் (மாநிலக் கல்லூரி முதல்வர்) திரு. சே.. இராமசந்திரன் அவர்களும் திருப்பதிக்கு வருவார்கள். என் இல்லத்திற்கருகில் குடியிருந்த (அரசியல் துறை பேராசிரியர்) முனைவர் கே. கமலநாதன் இல்லத்திற்கு வருவர். பேசி அளவளாவுவோம். அப்பொழுதே இருவரும் துணை வேந்தர்களாக உயர்வர் என என் மனம் எண்ணியதுண்டு. ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது; மூன்றாண்டு மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
நண்பர் முனைவர் சி. அ.பெருமாள் அவர்கட்கு அந்த வாய்ப்பு வரவில்லை; அஃது அவருக்கு இழப்பு ஒன்றுமில்லையாயினும், அவர்தம் சீரிய கல்விப் பணியைத் தமிழர்கள் இழந்தனர். முனைவர் பெருமாள்ஒரு பெரிய சிந்தனையாளர் என்பதற்கு அவர் கொணர்ந்த ‘மதிப்பியல் பேராசிரியர் திட்டம்’ ஒன்றே சிறந்த சான்றாக அமைகின்றது. இத்திட்டம் உண்மை உழைப்பாளர்கட்குத் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு தருகின்றது. அத்திட்டத்தில்தான் அடியேன் (தமிழ் இலக்கியத்துறையில்) ‘வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராகப்’ பணியாற்றுகிறேன். முனைவர் (பிஎச்டி) ஆய்வு மாணாக்கர் மூவருக்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்ற வாய்ப்பும் பல்கலைக்கழகம் தந்துள்ளது. ஆசிரியப் பெருமக்கள் இருவர் ஆய்ந்து வருகின்றனர். முனைவர் சி. அ.பெருமாளும் மதிப்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்; மாணாக்கர் உலகத்தில் சிறந்த செல்வாக்குடன் திகழ்கின்றார். 1983-இல், இவர் துணைவேந்தராக வந்திருந்தால் பல்கலைக்கழகம் பல்வேறு திசைகளில் முன்னேற்றம் கண்டு திகழ்ந்திருக்கும் என்பது என் கருத்து. இஃதுடன் இஃது நிற்க.
தந்தை பெரியார் சிந்தனைகளை மூன்று தலைப்புகளில் (1) கடவுள்,சமயம்பற்றிய சிந்தனைகள் (2) சமூகம்பற்றிய சிந்தனைகள் (3) மொழிபற்றியசிந்தனைகள் என்று மூன்று நாள் பேசத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்த அண்ணா வாழ்வியல் மையத் துறைத்தலைவர்பேராசிரியர்முனைவர் இராதாண்டவன்  அவர்கட்கு மிக்க நன்றி.
1. கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகள்
முதற்பொழிவாக இந்தத் தலைப்பில் பேசத் தொடங்குவதற்கு முன் தந்தை பெரியாரைப்பற்றி அறிமுகமாகச் சில கூறுவேன்.
(1) இலக்கண நூற்பாபோல் பாவேந்தர் பாரதிதாசனின் அறிமுகம் இது!
அவர்தாம் பெரியார் 
அன்பு மக்கள் கடலின் மீதில் 
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு 
வஞ்ச கர்க்கோர் கொடிய நெருப்பு 
மிக்க பண்பின் குடியி ருப்பு 
விடுத லைப்பெரும் படையினர் தொகுப்பு! 

தில்லி எலிக்கு வான்ப ருந்து 
தெற்குத் தினவின் படைம ருந்து 
கல்லா ருக்கும் கலைவி ருந்து 
கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து! 

சுரண்டு கின்ற வடக்க ருக்குச் 
சூள்அ றுக்கும் பனங்க ருக்கு ! 
மருண்டு வாழும் தமிழ ருக்கு 
வாழ வைக்கும் அருட்பெ ருக்கு ! 

தொண்டு செய்து பழுத்த பழம்; 
தூய தாடி மார்பில் விழும்; 
மண்டைச் சுரப்பை உலகு தொழும்; 
மனக் குகையில் சிறுத்தை எழும்! 

தமிழர் தவம் கொடுத்த நன்கொடை 
தன்மானம் பாயும் தலை மேடை.[குறிப்பு 1]
பாவின் சொல், சொற்றொடரின் பொருள் ‘பொரி மத்தாப்பு போல் சீறி எழுவதைக் கண்டு மகிழலாம்; அந்த ஒளியில் தந்தை பெரியாரின் உருவத்தை மானசீகமாகவும் காணலாம்.
(தொடரும்)
[குறிப்பு 1. பாரதிதாசன் கவிதைகள்]