Saturday, March 30, 2013

மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்

 
மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும் மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும் இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம் வினவினார்.
"நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று.
ஒரு நாள் இரவில் பாடம் சொல்லிய பின்பு தனது வீட்டுத் திண்ணையில் மாணவர் ஆரியங்காவலைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஆசிரியர் நித்திரை கொள்ளச் சென்றுவிட்டார். நிலவு நன்றாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. நடுஇரவு தாண்டி தற்செயலாகக் கண் விழித்த ஆசிரியர் வெளியே திண்ணையில் பார்வையைச் செலுத்தினார். அந்த நடுநிசியில் மாணவர் நித்திரை கொள்ளாது, படுக்கையில் சாய்வதும், சற்று நேரம் கழித்து எழுவதுமாக இருந்தார். எழுந்து அமர்ந்து ஒரு பாடலை மெதுவாகப் பாடினார்; பிறகு படுத்துக்கொண்டார்; மீண்டும் எழுந்து அமர்ந்து அப்பாடலைப் பாடினார். அப்பாடலின் நயம் தெரிந்த மகாவித்துவான் மாணவரது மனத்துயரத்தையும் அறிந்து கொண்டார்.
சில நாள் சென்ற பின்னர் மாணவரிடம் தாய், தந்தை, குடும்பம் முதலிய விவரங்களைக் கேட்டறிந்தார். மாணவரின் கூற்றிலிருந்து அவருக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது தெரிய வந்தது. மாணவர் அறியாத நிலையில், அவருடைய தந்தைக்கு ""தங்கள் மகன் மிகத்திறமையானவர்; முன்னுக்கு வரக்கூடியவர். அவருக்கு இங்கு உணவுப்பழக்கம் முதலியவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. தாங்கள் அவரது தாய், மனைவியுடன் இங்கு வாருங்கள்'' என்று கடிதம் எழுதி அனுப்பினார்.
சில நாள்கள் சென்றன. பிள்ளையவர்கள் கடிதத்தில் அழைத்தவாறு மாணவரது தந்தையார் தம் சுற்றத்தாருடன் மகாவித்துவானின் முகவரியைத் தேடி வந்தனர். இதைக் கண்ட மாணவர் தந்தையிடம், "நான் கடிதம் எதுவும் எழுதாத நிலையில் ஏன் வந்தீர்கள்'? என வெகுள, ஆசிரியர் மாணவரிடம், "தம்பி சினம் கொள்ள வேண்டாம், நான்தான் வரச்சொல்லி அழைத்தேன்' எனக் கையமர்த்தி ஏற்கெனவே அவர்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த வீட்டில் அவர்களைத் தங்கவைத்தார்.
மாணவரின் தந்தையிடம், ""நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்கள் மகனுக்கு மிக்க நன்மை உண்டாகும், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் தேவைகளை இங்கு இருக்கும்வரை நானே பார்த்துக் கொள்வேன்'' என்று கூறியதோடு, அந்த மாணவர் தமிழில் நல்ல பயிற்சிபெறும் வரை தனது கூற்றைச் செயல்படுத்தியும் காட்டினார். இவ்வாறு ஆசிரியரின் மனம் வருடிய } அந்த மாணவர் இயற்றிய நள்ளிரவுப் பாடல் இதுதான்!
""விடவாளை வென்ற விழியாளைப்
பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக
மாமொரு நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளையின்ப
வடிவையென் சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று
போயினிக் காண்பதுவே''

ஏப்ரல் 6 : "மகாவித்துவான்'
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்தநாள்.
 

எண்ணும் எழுத்தும் எண்ணப்படா எழுத்தும்!

எண்ணும் எழுத்தும் எண்ணப்படா எழுத்தும்!


 அடிகளிலோ சீர்களிலோ எழுத்தை எண்ணும்பொழுது உயிரில்லாத ஒற்றெழுத்தையும் ஆய்தவெழுத்தையும் எண்ணக்கூடாது என்பார் தொல்காப்பியர். இதனை, செய்யுளியலில்,
""உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ
உயிர்திறம் இயக்கம் இன்மையான'' (தொல்.செய்.43)

என்று கூறியுள்ளார். ஏன் எண்ணக்கூடாது என்பதற்கு, அவை உயிர்போல் இயங்காமையால்' என்பார். இவ்விடத்தில் தமிழறிஞர் அடிகளாசிரியர் கூறியுள்ள செய்தி அறியத்தக்கதாகும்.
"உயிரில்லெழுத்தும் என்றதிலுள்ள எச்ச உம்மையால் குறுகிய உயிர்த்தாகிய குற்றியலிகரமும், குற்றியலுகரமும் எண்ணப்படா வென்று கொள்க. எனவே, எண்ணப்படுவன உயிர் உயிர்மெய்யுமாகி இரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும்' என்று விளக்கவுரை கூறியுள்ளார் இளம்பூரணர். இக்கருத்தை,
குற்றுகரம் குற்றிகரம் என்றிரண்டும் ஆய்தமும்
ஒற்றும் எனவொரு நான்கொழிந்துக் } கற்றார்
உயிரும் உயிர்மெய்யும் ஓதினர் எண்ணிச்
செயிரகன்ற செய்யு ளடிக்கு.
(யாப்பருங்கல விருத்தி பழைய உரை,ப.113)
என்ற வெண்பா கூறுவதைக் காண்க. எனவே, செய்யுளுக்கு உயிர்த்திற இயக்கம் வேண்டும் என்பது பெறப்பட்டது. மேலும், அடிகளாசிரியர் யாப்பருங்கல விருத்தியுரை 36-ஆம் நூற்பா உரையைக்கொண்டு, "அடிக்கு எழுத்து எண்ணுமாறு போலாது தொடைக்கு எல்லா எழுத்தும் கொள்ளப்படும் என்று வேறுபாடு கூறுவர்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"வஞ்சி'யின் சொல்லாட்சி!

"வஞ்சி'யின் சொல்லாட்சி!
பைந்தமிழ்ப் பெயராகவும், வினையாகவும் ஒரு சொல்லே நின்று பொருள் தந்து சிறக்கும். இத்தகைய சொற்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏராளமாகப் பயின்றுவரும். ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பல பொருள் குறித்த ஒரு சொல்லும் "உரிச்சொல்' எனும் பெயரில் பயின்று வருவதும் தமிழின் சிறப்புக்கு மற்றுமோர் அடையாளமாகும். பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் பற்றி தொல்காப்பியமும், (தொல்.சொல்.160, தொல்.சொல்.198) நன்னூலும், (நன்.275, 322) குறிப்பிடுகின்றன.
"வஞ்சி' என்னும் சொல்லை ஒரு "வஞ்சி' தன் மனக்குமுறல் நிலையில் பெயராகவும், வினையாகவும் கையாளுகிறாள். அவள் ஒரு பருவ மங்கை. வாழ்க்கைத் துணைக்கு சிறந்த ஆடவனைத் தேடிப்பெறும் மனநிலையில் உள்ளாள். அவளது அழகையும், குடிப் பெருமையையும் அறிந்து, அருகமைந்த பேரூரிலிருந்து கட்டிளங்காளை ஒருவன் வருகிறான். இருவரும் கண்டனர்; காதல் கொண்டனர். களவு மணத்தால் அவள் நலனில் இன்புற்ற தலைவன் "குறித்த காலத்தில் மீண்டும் வந்து மணம் புரிந்து கொள்வதாகவும், உறுதிகூறிப் பிரிந்து செல்கிறான். குறித்த காலம் வந்தது; அவன் வரவில்லை. "கார்' வந்தும் அவன் "தேர்' வாராமையால், அவளது "ஏர்' குலைந்தது. உடல் நலிவுற்றாள்.
அருகிருந்த தோழி, காரணம் அறிந்தும் அறியாதாள்போல வினவுகிறாள். தோழிக்குத் தெரியாமலா தலைவி செயல்கள் அமையும்? அதுவரை மறைத்த உண்மையை இனிமேலும் மறைக்க இயலாது என எண்ணிய தலைவி, தோழியிடம் கூறி, தன்னை ஆறுதல்படுத்திக் கொள்கிறாள்.
""என் உள்ளம் கவர்ந்து சென்றவன் என்னை முதலில் கண்டபோது, "நான் வஞ்சிமா நகரில் பிறந்து வளர்ந்தவன்' என்றான். அந்நகர மக்கள் நற்குணம் நிறைந்தவர்கள் என்பதை நான் முன்னமே அறிந்திருந்ததால், அவ்வூரிலிருந்து வந்த இவன் நம்மை ஏமாற்றமாட்டான் என்று அவன் உரைத்தவற்றை உண்மை என நம்பி, அவனை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டேன். அவன் என்னைப் பிரியும்போது, "உன்னை ஏமாற்ற மாட்டேன்' என்று ஒருமுறைக்கு இருமுறை தன் ஊரின் பெயராலேயே உறுதிகூறிச் சென்றான். அப்போது இந்நிலை எனக்கு நேரும் என நான் எண்ணவில்லை. இருப்பினும் அவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றே என் உள்ளம் எண்ணுகிறது. என் உயிர்த் தோழியே! வஞ்சிநகர்த் தலைவனே இப்படி என்றால், மற்றவர்களை என்ன சொல்ல? என் துயரை என்னவென்று சொல்ல'' என அரற்றுகிறாள்.
களவு காலத்துத் தலைவன் - தலைவி உரையாடல் செய்தி, இங்கே தலைவி - தோழி உரையாடலாகிறது.
வஞ்சியான்(வஞ்சி நகரத்தான்) - இது தலைவன் கூற்று. வஞ்சியான் (வஞ்சிக்கமாட்டான்) - இது தலைவி கூற்று. வஞ்சியேன் (வஞ்சி நகரத்தான், வஞ்சிக்கமாட்டேன்) - இது தலைவன் கூற்று. வஞ்சி - தலைவி, தோழி, வஞ்சி நகரம், ஏமாற்று என்னும் நான்கு பொருளில் பெயராகவும், வினையாகவும் வந்தும், உடன்பாடு, எதிர்மறையாக வந்தும் சிறப்பான சொல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாய் நின்று இன்பம் தருகிறது.
யாப்பருங்கலக்காரிகை - ஒரு விகற்ப நேரிசை வெண்பா உதாரணம் - பாடல் இதோ:

""வஞ்சியான் என்றுதன் பேருரைத்தான், யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ''