எண்ணும் எழுத்தும் எண்ணப்படா எழுத்தும்!
- Get link
- X
- Other Apps
எண்ணும் எழுத்தும் எண்ணப்படா எழுத்தும்!
அடிகளிலோ சீர்களிலோ எழுத்தை எண்ணும்பொழுது
உயிரில்லாத ஒற்றெழுத்தையும் ஆய்தவெழுத்தையும் எண்ணக்கூடாது என்பார்
தொல்காப்பியர். இதனை, செய்யுளியலில்,
""உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ
உயிர்திறம் இயக்கம் இன்மையான'' (தொல்.செய்.43)
என்று கூறியுள்ளார். ஏன் எண்ணக்கூடாது என்பதற்கு, அவை உயிர்போல்
இயங்காமையால்' என்பார். இவ்விடத்தில் தமிழறிஞர் அடிகளாசிரியர் கூறியுள்ள
செய்தி அறியத்தக்கதாகும்.
"உயிரில்லெழுத்தும் என்றதிலுள்ள எச்ச உம்மையால் குறுகிய உயிர்த்தாகிய
குற்றியலிகரமும், குற்றியலுகரமும் எண்ணப்படா வென்று கொள்க. எனவே,
எண்ணப்படுவன உயிர் உயிர்மெய்யுமாகி இரு மாத்திரையிற் குறையாதன என்று
கொள்ளப்படும்' என்று விளக்கவுரை கூறியுள்ளார் இளம்பூரணர். இக்கருத்தை,
குற்றுகரம் குற்றிகரம் என்றிரண்டும் ஆய்தமும்
ஒற்றும் எனவொரு நான்கொழிந்துக் } கற்றார்
உயிரும் உயிர்மெய்யும் ஓதினர் எண்ணிச்
செயிரகன்ற செய்யு ளடிக்கு.
(யாப்பருங்கல விருத்தி பழைய உரை,ப.113)
என்ற வெண்பா கூறுவதைக் காண்க. எனவே, செய்யுளுக்கு உயிர்த்திற இயக்கம்
வேண்டும் என்பது பெறப்பட்டது. மேலும், அடிகளாசிரியர் யாப்பருங்கல
விருத்தியுரை 36-ஆம் நூற்பா உரையைக்கொண்டு, "அடிக்கு எழுத்து எண்ணுமாறு
போலாது தொடைக்கு எல்லா எழுத்தும் கொள்ளப்படும் என்று வேறுபாடு கூறுவர்'
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment