Tuesday, October 30, 2018

அகநானூற்றில் ஊர்கள் 1/7 – தி. இராதா

அகரமுதல

அகநானூற்றில்  ஊர்கள்  (1/7)

                                யாதும் ஊரே யாவரும் கேளிர்
           சங்கக் காலத்தின் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள். எந்த இலக்கியத்திற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் சங்க இலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கிய நூல்களில் பல ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சில பெயர்கள் இன்றும் வழக்கில் மக்களால் வழங்கி வருகின்றன. அகநானூறு அகநானூறு சார்ந்த பாடல்களில் அகவாழ்க்கை மட்டும் அல்லாமல் அப்பாடல்களில் சங்கக்கால மக்கள் வாழ்ந்த ஊர்கள், தலைவன், மன்னன், மன்னனின் நாடு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் பல இடம் பெற்றுள்ளன. அகநானூற்றில் 40க்கு மேற்பட்ட ஊர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஊர்கள் பற்றிய செய்திகளை இவ்வாய்வுக் கட்டுரை ஆராய்கிறது.
   மனிதர்கள் கூடிவாழ்ந்த சமூக நிலை ஊர்களின் தோற்றமாக திகழ்ந்தது. அவர்களது வாழ்க்கைக்கேற்ப சிற்றூர்களாகவும், பேரூர்களாகவும் தோன்றிப் பின் நகரங்கள், பெருநகரங்களாக உருவானது. மக்கள் தங்களை வேறுபடுத்திக் கொள்வதற்காக வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர். அவர்களின் செல்வச் செழிப்பிற்கேற்பவும், எண்ணிக்கைகளுக்கேற்பவும் குடியிருப்புகள் அமைத்துக் கொண்டனர். இவை வளர்ச்சியடைந்து நகரமாகத் திகழ்ந்தது. மனிதன் நாடோடி வாழ்க்கை முடிந்து பயிர்த்தொழில் தொடங்கிய போதுதான் குடியிருப்புகள் தோன்றியன. பின்னர் வேளாண்மையைத் தொடர்ந்த போது  சிற்றூர்கள் வளர்ந்தன. சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்றன. மக்கள் ஆற்றங்கரையில் வாழ்ந்த முற்காலத்தில் சிற்றூர்கள் கூட ஆற்றங்கரையிலேயே அமைந்தன அவை பின்னாளில் ஊராகவும் வளர்ச்சியடைந்தன.
அகநானூற்றில் ஊர்களின் பெயர்கள்
     அட்டவாயில், அரிமனவாயில், அலைவாய், அழுந்தூர், அழுந்தை, அழும்பில், ஆமூர், ஆலங்கானம் (தலையாலங்கானம்), ஆலமுற்றம், இடையாற்று, உறந்தை, ஊனூர், எருமையூர், ஒடுங்காடு, கருவூர், கழாஅர், குடவாயில், குமுழூர், கூடல்(மதுரை), கொற்கை, கோடி, சாய்ககானம், சிறுகுடி, பவத்திரி, பாரம் பாழி, புகார், புறந்தை, பொதினி, போஒர், மரந்தை, மருங்கூர்பட்டினம், மாங்காடு, முசிறி, மூதூர், வஞ்சி, வல்லம், வாகை, வியலூர், விளங்கில், வீரை, வெளியன், வேம்பி, வேளூர்.

அட்டவாயில் – விளக்கம்
   செல்வந்தர்களின் தேர்கள் அதிகமாக ஓடியதால் குழித்துகாணப்படும் கொடியாடும் தெருக்களைக் கொண்டது அட்டவாயில் என்ற ஊராகும். இவ்வூர் பெரிய வயல்களையும், கதிர்களையும் உடையதால் மருத நிலத்தை சார்ந்ததாக அமைகின்றது. இவ்வூர்
                “நெடுங்கொடி நுடங்கம் மட்ட வாயில்” (அகநானூறு 326)
என்ற பாடல் வரி மூலம் ‘மட்டவாயில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
அரிமணவாயில்
    புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமனம் என்று குறிப்பிடப்படும் ஊர் அரிமண வாயில் என்று அழைக்கப்பட்டுள்ளது. இது எவ்வி என்ற மன்னனுக்குரிய ஊராகும். இவ்வரசன் பகைவரை அரிமண வாயில் உறத்தூர் எனும் இடத்தில் போரிட்டு வெற்றிப்பெற்றான். மேலும் தன் படைவீரர்களுக்கு கற்குடன் பெருஞ்சோற்றினைப் அளித்து மகிழ்ச்சி அடைந்த ஊராகும் இதனை,
                “……….. எவ்வி ஏவல் மேவார்
                 ……………………………
                 அறிமண வாயில் உறந்தூர் ஆங்கண்”         (அகநானூறு 266)
என்னும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
அலைவாய் (திருச்செந்தூர்)
                திருச்சீரலைவாய் என்றும் இன்று திருச்செந்தூர் என்றும் அழைக்கப்படுகின்றது. மருத நிலத்தில் உழவர்கள் எழுப்பிய ஆரவாரத்துக்கு அஞ்சி, பயந்து பறந்து சென்ற மயில் தெய்வம் உறையும் மலையகம் வந்து தங்கும். அவ்வாறு வந்து சேரும் அழகிய மயில்களையும் பல வண்ணமிக்க மணிவிளக்குகளையும் உடைய ஊராகத் திகழ்வதனைத்,
                “திருமணி விளக்கின் அலைவாய்”                    (அகநானூறு 226)
என்ற பாடல் வரி உணர்த்துகிறது.
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றானது அலைவாய் ஆகும். முருகப்பெருமான் அசுரனின் சூரபத்மனை வெற்றி கொண்ட இடமாக இவ்வூர் திகழ்கிறது.

அழுந்தூர்
     கரிகால் வளவன் பெரும்புகழ் கொண்டவன். கள்வளம் மிக்க வெண்ணிவாயில் என்னும் இடத்தில் பகை மன்னர்களிடத்தில் வீரமுரசம் போர்களத்தில் வீழ்ந்துபடப் போரிட்டான். பதினொரு வேளிருடன் இருபெரும் வேந்தரும் போரில் நிலைகுலைய அவரது மிக்க வலிமையைக் கெடுத்து அவரை வென்ற நாளில் ஆரவாரம் செய்த ஊர் அழுந்தூர் என்பதனை,
     பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
      …………………………………..
      தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே” (அகநானூறு 246)
என்னும் வரிகளால் அறியமுடிகிறது.
  
  – திஇராதா,
முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி
(தொடரும்)

Sunday, October 28, 2018

காகம் பறந்தது – சந்தானம் சுதாகர்

அகரமுதல

காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர்


கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும்
உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும்
பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல்
இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம்
கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம்
என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும்
இன்று பறந்தது என்வரவு பார்த்தே!
சந்தானம் சுதாகர்

Thursday, October 25, 2018

காகம் பறந்தது – சந்தானம் சுதாகர்

அகரமுதல

காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர்


கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும்
உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும்
பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல்
இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம்
கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம்
என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும்
இன்று பறந்தது என்வரவு பார்த்தே!
சந்தானம் சுதாகர்

Tuesday, October 23, 2018

மாற்றம் விரைவில் உண்டாகும் – மு. பொன்னவைக்கோ

மாற்றம் விரைவில் உண்டாகும்


தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு
உரைத்தான் தெய்வம் ஒன்றென்று
யாதும் ஊரே என்றுரைத்தான்
யாவரும் கேளிர் என்றழைத்தான்
அறமே வாழ்வின் நெறியென்றான்
அருளே பொருளின் முதலென்றான்
அன்பின் வழியது உலகென்றான்
ஆசைப் பெருகின் அழிவென்றான்
ஒழுக்க வாழ்வே உயர்வென்றான்
அழுக்கா றின்றி வாழென்றான்
ஒன்று பட்டால் வாழ்வென்றான்
ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான்
பணிதல் யார்க்கும் நன்றென்றான்
பகையே வாழ்வின் இருளென்றான்
சினமே உயிர்க்குப் பகையென்றான்
சீற்றம் தவிர்ப்பது சிறப்பென்றான்
இன்சொல் யார்க்கும் அணியென்றான்
இன்னா செய்தல் பழியென்றான்
வாய்மை வாழ்வின் நெறியென்றான்
தூய்மை வாழ்வின் விளக்கென்றான்
அமிழ்தின் இனிய பண்பெல்லாம்
அணியாய்க் கொண்ட தமிழன்தான்
தன்னை இழந்து வாழ்கின்றான்
தமிழை மறந்து அழிகின்றான்
ஆங்கில மொழியின் தாக்கத்தால்
ஆன்ற பெருமை இழக்கின்றான்
கற்றோர் கொண்ட கலக்கத்தால்
கல்விச் சிக்கல் எழுந்திங்கே
ஆங்கில வழியில் கற்றால்தான்
அறிவைப் பெறலாம் என்றவர்கள்
உலகைப் புரிந்து கொள்ளாமல்
உளறி வைத்தனர் மக்களிடம்
ஓங்கிய தமிழ்வழி இல்லாமல்
ஆங்கில மொழிவழிக் கல்வியினால்
ஈங்குநம் குழந்தைகள் இழந்தார்கள்
இயல்பாய் படைக்கும் ஆற்றலினை
கருத்தறி வில்லாக் கல்வியினால்
காரிருள் சூழ்ந்தது இம்மண்ணில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கத் தாலே இம்மண்ணில்
படிக்கா தவரும் ஆங்கிலத்தின்
பிடிக்குள் ளானார் படிப்படியாய்.
ஆங்கில மொழியின் அடிமைகளாய்
ஆயினர்  தமிழர்  அதனாலே
வழக்குச் சொற்கள் பலயிழந்தோம்
வாழ்வின் நெறிகளும் மறந்துவிட்டோம்
தமிங்கில மக்களாய் வாழ்கின்றோம்
தமிழ்வழி மாறிச் செல்கின்றோம்.
இந்நிலை தடுத்து நிறுத்தோமேல்
எந்நிலை யாகும் இந்நாடு
மண்ணின் மக்கள் தமிழர்களாய்
மாறுவ தெப்போ திந்நாட்டில்.
தமிழைத் தமிழாய்ப் பேசும்நிலை
தழைப்ப தெப்போ திந்நாட்டில்
படிப்பில் பதவியில் உயர்ந்தவர்கள்
பழக்கம் மாறின் நிலைமாறும்
துறைகள் தோறும் தமிழாட்சி
தொடங்கின் நாட்டின் நிலைமாறும்
கல்வி மொழியும் தமிழாயின்
கடிதில் இம்மண் கதைமாறும்
கோயில் மொழியும் தமிழாயின்
குடிகள் மாறும் தமிழ்வழியில்
ஆயின் இவற்றைச் செய்வதற்கு
ஆரே யுள்ளார் இம்மண்ணில்
மக்கள் எழுச்சி பெறவேண்டும்
மண்ணில் மாற்றம் எழவேண்டும்
மக்கள் புரட்சி எழுமானால்
மாற்றம் விரைவில் உண்டாகும்

முனைவர்  பொறிஞர் மு. பொன்னவைக்கோ