Saturday, August 27, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 52. களவு கற்பின்றி அமையாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 52. களவு கற்பின்றி அமையாது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011


களவு வெளிப்பட்டுவிடின் கற்பு நிலையை எய்துதல் வேண்டும்.  அஃதாவது இருவர்க்கும் திருமணம் நிகழ்தல் வேண்டும்.  திருமணம் நிகழவில்லையேல் இருவரும் உயிர் வாழார். “கரணம் தப்பின் மரணம்” என்றால் மணச்சடங்கு; மணச்சடங்கு நிகழும் நிலை இல்லையேல் காதலர் இருவரும் உயிர் வாழார் என்பதாம்.  அதனாலேயே “கந்தருவம் கற்பின்றி அமையும்; களவு கற்பின்றி அமையாது” என நச்சினார்க்கினியர் கூறியதும் ஆகும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:172)


thamizh katamaikal 80: தமிழ்க்கடமைகள் 80. மொழிக்கெலாம் தலைமை தமிழே

தமிழ்க்கடமைகள் 80. தமிழனுக்கு யாவனுளன் ஈடு

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 26, 2011


தமிழன் உடற்குருதி சூடு!- தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? – தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!
- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
 
 

thamizh katamaikal 79: தமிழ்க்கடமைகள் 79. மொழிக்கெலாம் தலைமை தமிழே

தமிழ்க்கடமைகள் 79. மொழிக்கெலாம் தலைமை தமிழே

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ்
உலகம் ஊமையா உள்ள அக் காலையே
பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே
இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்
-          புலவர் குழந்தைFriday, August 26, 2011

thamizh katamaikal 78: தமிழ்க்கடமைகள் 78. தமிழ் நீடு வாழ்க

தமிழ்க்கடமைகள் 78. தமிழ் நீடு வாழ்க

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 24, 2011


காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
யாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடு வாழ்க
-          கவியோகி சுத்தானந்த பாரதியார்thamizh katamaikal 77: தமிழ்க்கடமைகள் 77. தமிழணங்கை வணங்குவோம்

தமிழ்க்கடமைகள் 77. தமிழணங்கை வணங்குவோம்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011


காதிலங்கு குண்டமாகக் குண்டலகே
சியுமிடையே கலையாச் சாத்தன்
ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை
யாவளையா பதியும் மார்பின்
மீதணிசிந் தாமணியாச் சிந்தாம
ணியுங்காலில் வியன்சி லம்பாத்
திதில்சிலப் பதிகார மும்புனைந்த
தமிழணங்கைச் சிந்தை செய்வோம்
-          சங்குப் புலவர்thamizh katamaikal 76: தமிழ்க்கடமைகள் 76. தமிழ்மொழிக்கு உயர் மொழி இல்லை

தமிழ்க்கடமைகள் 76. தமிழ்மொழிக்கு உயர் மொழி இல்லை

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 22, 2011


தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில்
வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே

- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்:
அறுவகை இலக்கணம்: 705ilakkuvanarin padaippumanikal 51 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 51. அன்று சாதி கிடையாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 51. அன்று சாதி கிடையாது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 24, 2011


” பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.”
பிறப்பு, ஓழுக்கம், ஆண்மை, வயது, வடிவம், காதல் உணர்ச்சி, நிறை, அருள், அறிவுடைமை, திரு எனும் பத்திலும்  இருவரும் ஒத்திருக்க வேண்டும்.  பிறப்பு என்பது நல்ல குடியில் பிறத்தலாகும்.  குடி வேறு சாதிவேறு.  அன்று சாதி கிடையாது.  ஒவ்வொரு குடிக்கு ஒவ்வொரு பண்பு இருக்கலாம்.  அக்குடிப் பிறப்பால் ஒழுக்கம் உருவாகும்.  ஆதலின் அதனை அடுத்துக் குடிமையையும் வைத்தார்.”ஒழுக்கமுடைமை குடிமை” என்பது வள்ளுவர் வாய்மொழி.  வள்ளுவர் காலத்திலும் ஓழுக்கம் உடைமையே நல்ல குடிப்பிறப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வத்துள்ளது.  ’ ஆண்மை ஆணுக்கு உரியதன்றோ? பெண்ணுக்கு எவ்வாறு பொருந்தும் எனக் கருதலாம்.  வலிமை இரு சாரார்க்கும் வேண்டியதொன்று.  உள்ள வலிமை, உடல் வலிமை சூழ்நிலைக்கு ஏற்பத் தம்மையும் பிறரையும் ஆளும் தன்மை இருந்தாலன்றி உலக வாழ்வுப் போரில் வெற்றிபெற இயலாது.  ஆகவே ஆண்மையிலும் இருசாராரும் ஒத்திருத்தல் வேண்டும்.  காதலின்பத்துக்கும் ஒத்த ஆண்மையினராய் இருத்தலே சிறப்புடைத்து.  அங்ஙனம் இன்மையால் திருமணங்களில் சில முறிவுக்குரித்தாகி இல்லற வாழ்வு துன்பக் களனாக மாறிவிடுகின்றது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:160)

ilakkuvanarin padaippumanikal 50 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 50. தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 50. தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011


காதல் திருமணமே நாகரிகத்தின் உச்சநிலையாகும்.  ஆதலின் தொல்காப்பியர் காலத் தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது என்று தெளியலாம்.  காதல் திருமணமே பெண் உரிமையை – ஏன் ஆண் உரிமையையும்-நிலைநாட்டக் கூடியது. ஆடை அணிகலன் முதலியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்கும் மன்பதை தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்க ஒருப்படாதது கொடுமையினும் கொடுமையன்றோ?
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:159)


ilakkuvanarin padaippumanikal 49 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 49. தமிழர் திருமணநெறி இன்ப நெறி

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

49. தமிழர் திருமணநெறி இன்ப நெறி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 22, 2011


வடவர்க்குத் திருமணம் என்பது புதல்வரைப் பெறுவதற்காகவே.  ஆண் பெண் சேர்க்கையால் புதல்வன் பிறத்தல் வேண்டும்.  ஆதலின் காதலை அடிப்படையாகக் கொள்ளவில்லை.  தமிழர்க்கு மணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாக நிகழவேண்டிய வாழ்வின் இன்பக்கூறுகளுள் ஒன்று. வாழ்வின் தலையாய இன்பம் அதுவே என்று கருதினர்.  ஆதலின் அதனை இன்பம் என்றே அழைத்தனர்.  தொல்காப்பியரும் இவ் வின்பத்துக்கு முதன்மை கொடுத்து, “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு” என்று கூறினார்.  திருமண இன்பம் தலையாய இன்பம்;  அது காதல் நெறியில்தான் அடையப் பெறல் வேண்டும் என்பதே தொல்காப்பியர்  துணிபு.  காதல் எவ்வாறு உண்டாகும்.  என்பதைப் பின்வரும் நூற்பாவால் கூறுகின்றார்.
“ஒன்றே வேறே என்று இருபால் வயின்
ஓன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோள் ஆயினும் கடிவரை இன்றே.”"
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:157)


Thursday, August 25, 2011

ilakkuvanarin padaippumanikal 48: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 48. அரிட்டாடில் காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கியக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 48. அரிட்டாடில் காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கியக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 20, 2011


இலக்கியம் உலகியலைத் தழுவியும் உலகியலொடு ஒத்த கற்பனை முறையிலும் இயற்றப்படல் வேண்டும் எனவும் சுட்டுகின்றார்.
மேனாட்டார் இயற்கையைத் தழுவி இயற்றலே இலக்கியம் என்பர்.  தொல்காப்பியரும் இயற்கையையும் உலகியலையும் தழுவியே இலக்கியம் இயற்றப்படல் வேண்டுமென்று பன்முறையாலும் விளக்குகின்றார்.  இவ்வாறு இயற்றப்படுதலை ’ புலன் நெறி வழக்கம் என அழைத்துள்ளார். புலமை நிரம்பிய புலவரால் பாடப்பட்டு வழங்கி வருவது ஆதலின் அப்பெயர் பெற்றது போலும்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்”

“என்மனார் புலவர்” என்பதனால் இப் புலன் நெறி வழக்கமாம் இலக்கியப் படைப்பு நெறி இவர்க்கு முன்புள்ள புலவர்களால் கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனத் தெரியலாம்.  ஆதலின், கிரேக்க நாட்டு அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் இலக்கிய நெறி முறைகள் வகுக்கப்படுப் பயிலப்பட்டுப் பாடப்பட்டு வந்தன என அறியலாம்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149-150)

ilakkuvanarin padaippumanikal 47: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 47. நங்கையர் நல்லற நெறியினர்


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 47. நங்கையர் நல்லற நெறியினர்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 19, 2011


இலக்கியத்திலும் நங்கையர் நாணிகவா நல்லற நெறியினராகவே கூறப்பட வேண்டியவர் என்பதே ஆசிரியர் தொல்காப்பியர் கொள்கையாம்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149)

ilakkuvanarin padaippumanikal 46: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 46. தொழில் முறையில் கட்டுப்பாடு கிடையாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 46. தொழில் முறையில் கட்டுப்பாடு கிடையாது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 18, 2011


பொருளீட்டும் பொருட்டும் யாவரும் எங்கும் செல்லலாம்.  இன்ன இடத்திற்கு இன்னார் தாம் செல்ல வேண்டும் என்ற வரையறையோ கட்டுப்பாடோ கிடையாது. தொழில் முறையில் இன்ன சாதிக்கு இன்ன தொழில் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது.  இக் கருத்துக்களை வற்புறுத்துவதே
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையால்
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே”


மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே”
எனும் நூற்பாக்கள்.  இவைகட்குப் பொருள் கூறிய இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமிழ் நூல் நெறி முறைக்கு மாறாக ஆரியர் நெறியினைத் தழுவிக் கொண்டுள்ளனர். ‘நால்வர்’ என்பதற்கு நான்குநில மக்களும் என்று பொருள் கொள்ளாது, நான்கு வருணத்தார் என்றும், மேலோர் என்பதற்கு ” மேன்மை யுற்றோர்” என்றும் பொருள் கொள்ளாது, இரு பிறப்பினராய மேல் வகுப்பு மூவர் என்றும், அவருள் சிறந்த பிராமணர் என்றும் பொருள் கொண்டு விட்டனர்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 145-146)

thamizh katamaikal 75: தமிழ்க்கடமைகள் 75.செந்தமிழே உலக மொழி

தமிழ்க்கடமைகள் 75. செந்தமிழே உலக மொழி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 20, 2011


சதுமறைஆ ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமோ?
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே!
வீறுடை கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்
கலைமகள்தன் பூர்வதிசை காணுங்கால் அவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்?
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே?
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தின் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ?
- பேராசிரியர் சுந்தரம் பிள்ளை: மனோன்மணியம்

thamizh katamaikal 74: தமிழ்க்கடமைகள் 74: தமிழின் பெருமை யாவரே கணித்தறிவார்

தமிழ்க்கடமைகள் 

74. தமிழின் பெருமை யாவரே கணித்தறிவார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 19, 2011


வடமொழியைப் பாணினிக்கு வகுத் தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில்
கடல்வரைப்பில் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்
-          சிவஞான முனிவர்

thamizh katamaikal 73: தமிழ்க்கடமைகள் 73. எங்கள் குலத் தெய்வம் தமிழ்

தமிழ்க்கடமைகள் 

73. எங்கள் குலத் தெய்வம் தமிழ்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 18, 2011


பங்கயத்துக் குமரிமுனைப் பாதம் சேர்த்தாள்
பசும்பொன்முடி வேங்கடத்தைப் புனைந்தாங்கார்த்தாள்
பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள்
புரமூன்றும் கடற்கன்னி பணியப் பார்த்தாள்
மங்கலம் சேர் மேலைமலைச் செங்கோ லுற்றாள்
எங்கள் குலத் தெய்வம் தாய்
- கவியோகி ச.து.சுத்தானந்த யோகியார்: தமிழ்க்குமரி

Tuesday, August 23, 2011

Ilakkuvanarin padaippu manikal 45: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 45: உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 45. உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 17, 2011


“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்றார்.  ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் ( அந்தணர், அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். “உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.  முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள்.  உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.  தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது.  அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர்.  தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திரு வள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும், அவர்க்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை – வேளாளரை – உயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன ; பொருந்தாதன என்று அறிதல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 144-145)

Ilakkuvanarin padaippu manikal 44: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 44: பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 44. பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 16, 2011


பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது.  நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும்.  அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக்கியம் இயற்றுதல் இயலும்.  கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்க ளே செம்மையுற இயற்றுதல் இயலும்.  தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய் ஆய்தொறும் ஆய்தொறும் அளப்பில் இன்பம் அளிக்கும் செந்தமிழ் இலக்கியங்களை இயற்றினர்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 142-143)

Ilakkuvanarin padaippu manikal: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 43. இன்னிசையில் தமிழர்கள் சிறந்திருந்தனர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 43. இன்னிசையில் தமிழர்கள் சிறந்திருந்தனர்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 15, 2011


கருப்பொருளில் யாழும் சேர்க்கப்பட்டுள்ளது. ‘யாழ்’ இன்னிசைக் கருவி ; இன்னிசையில் தமிழர்கள் நன்கு சிறந்திருந்தனர் என்பதற்கும் வாழ்வில் இன்னிசையும் தக்க இடம் பெறுதல் வேண்டும் என்று கொண்டிருந்தனர் என்பதற்கும் இது சான்றாகும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138-139)

thamizh kadamaikal 72 : தமிழ்க்கடமைகள் 72: தமிழ் எங்கள் உயிர்

தமிழ்க்கடமைகள் 

72. தமிழ் எங்கள் உயிர்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 17, 2011


தமிழுக்கும் அமுதென்று பேர்-
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
-          பாரதிதாசன்: பாரதிதாசன் கவிதைகள்: தொகுதி 1

thamizh kadamaikal 71 : தமிழ்க்கடமைகள் 71:சீரிளமைத் தமிழை வாழ்த்துவோம்

தமிழ்க்கடமைகள்

71.சீரிளமைத் தமிழை வாழ்த்துவோம்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 16, 2011
..

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணம் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினிமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதிரத் தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
- பேராசிரியர் சுந்தரம் பிள்ளை: மனோன்மணியம்

thamizh kadamaikal 70 : தமிழ்க்கடமைகள் 70. அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்

தமிழ்க்கடமைகள் 70. அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 15, 2011
...

மறைமுதல் கிளந்த வாயன்மதி
மகிழ் முடித்த வேணி
இறைவர்தம் பெயரை நாட்டி
இலக்கணம் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பில் பாடை
அனைத்தும் வென்று ஆரியத்தோடு
உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை
உள்நினைந்து ஏத்தல் செய்வாம்
- கருணைப் பிரகாசர்: திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து

Saturday, August 13, 2011

கணிதத்தின் கண்கள்! தமிழ் எண்கள்! -2

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம் தமிழ்ச்சொல்லே

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம் தமிழ்ச்சொல்லே

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13492   பதிவு செய்த நாள் : August 13, 2011சிலர் தெய்வம் வேறு ; கடவுள் வேறு என்பர்.  சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர்.  தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே.  தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும்.  உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம்.  மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே.  இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான்.  ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல்  ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138)

thamizh katamaikal 69: தமிழ்க்கடமைகள் 69. தெள்ளமுதின் மேலான முத்தமிழ்

தமிழ்க்கடமைகள்

69. தெள்ளமுதின் மேலான முத்தமிழ்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13495  பதிவு செய்த நாள் : August 13, 2011


தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியென முத்தமிழே- புத்திக்குள்
உண்ணப் படுந்தேனே
- தமிழ்விடு தூது: 69-70

Friday, August 12, 2011

Ilakkuvanarin padaippu manikal - clock pot: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 31. நாழிகை வட்டில்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 31. நாழிகை வட்டில்

http://www.natpu.in/?p=13439  பதிவு செய்த நாள் : August 12, 2011


நாழிகை வட்டிலால் நாழிகை யறிந்து நாட்கடனாற்றினர் என்பது பண்டைய இலக்கியங்களால் நன்கு அறியலாகும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137)

தமிழ்க்கடமைகள் 68. தமிழுக்கு இணையில்லை - தமிழ்விடுதூது

தமிழ்க்கடமைகள் 

68. தமிழுக்கு இணையில்லை

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13441   பதிவு செய்த நாள் : August 12, 2011


அரியா சனமுனக்கே யானா லுனக்குச்
சரியாரு முண்டோ தமிழே
- தமிழ்விடுதூது: 62

Thursday, August 11, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 30. பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

30. பன்னிரு மாதங்களும்        தமிழ்ப்பெயர்களே

 

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13339    பதிவு செய்த நாள் : August 11, 2011
..

கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம்.,  ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர்.  இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது.  இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம்.  இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது.  ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம்.  இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன.  பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே.  இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137)

thamizh kadamiakal 67: தமிழ்க்கடமைகள் 67. மூவுலகும் போய் வரும் முத்தமிழ்

தமிழ்க்கடமைகள்

67. மூவுலகும் போய் வரும் முத்தமிழ்

http://www.natpu.in/?p=13341   பதிவு செய்த நாள் : August 11, 2011


தேசம்ஐம்பத் தாறில் திசைச்சொற் பதினேழும்
மாசறநீ வைத்தகுறு மன்னியரோ- வீசு
குடகடலும் கீழ்கடலும் கோக்குமரி யாறும்
வடவரையு மெல்லை வகுத்தாய்- இடையிருந்த
முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனாடீறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ- அந்நாட்டுள்
வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே
ஐயநீ வாழு மரண்மனையோ – செய்யபுகழ்
மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ
- தமிழ்விடு தூது: 37-41

Wednesday, August 10, 2011

Ilakkuvanar padaippu manikal 29: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 29. காலப்பகுப்பைத் தொன்றுதொட்டே தமிழர்கள் அறிந்திருந்தனர்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

29.காலப்பகுப்பைத் தொன்றுதொட்டே தமிழர்கள் அறிந்திருந்தனர்.

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13234 பதிவு செய்த நாள் : August 10, 2011


நாழிகை, நாள், வாரம், திங்கள், பருவம், ஆண்டு முதலிய பிரிவுகளைத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தனர்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 136)

Thamizh kadamaigal 66: தமிழ்க்கடமைகள் 66. உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

தமிழ்க்கடமைகள் 

66. உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13233   பதிவு செய்த நாள் : August 10, 2011


பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே- விஞ்சுநிறம்
தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே- வீயா
தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய்
- தமிழ்விடு தூது: 17-19

Monday, August 1, 2011

கோவை ஞானி பேட்டிகோவை ஞானியின் [image: கோவை ஞானி - மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும்]இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட பார்வை 
இழப்பின் காரணமாக ஆசிரியப்பணியை விட்டவர். பார்வை இழப்புக்குப் பிறகு இன்றுவரை 
புதிய புதிய நூல்களைக் கற்று, அவை பற்றிய திறனாய்வுகளையும், விவாதங்களையும் எழுதி வருகிறார் ஞானி. இதழியலில் தீராத ஆர்வம் கொண்டு, எப்போதும் ஏதாவது ஒரு 
இதழை நடத்தி வருகிறார். இப்போது `தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறார். 
மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ் தேசியம் என ஞானியின் ஈடுபாடும் தனித்துவமானது. 1965 முதல் ஞானிக்கு மார்க்சிய ஈடுபாடு. எஸ்.என். நாகராஜனைத் தனது மார்க்சிய ஆசானாகக் கூறுகிறார் ஞானி. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், `நிகழ்’ இதழின் மூலமும் தமிழ் அறிவுச் சூழலில் பாதிப்பை உருவாக்கியவர். வறட்டுத்தனமான கட்சி மார்க்சியராக இல்லாது, ஆழ்ந்த
படிப்புணர்வின் மூலம் ஏற்பட்ட நுட்பம், அவரது வார்த்தைகளில் தெறிக்கிறது. 

இவரது மனைவி இந்திராணி அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன்கள்
பாரிவள்ளல், மாதவன் ஆகியோர். ஞானி கோவையில் வசித்து வருகிறார். 

தீராநதி : நீங்கள் படித்த சமயத்தில் திராவிட இயக்கம் பெருமளவுக்கு
வளர்ந்துகொண்டு இருந்திருக்கும். பெரியாரும், அண்ணாவும் மக்களை பெருமளவு
பாதித்தனர். திராவிட இயக்கத்தோடு உங்களுக்கு ஏன் ஈடுபாடு ஏற்படவில்லை? 

கோவை ஞானி : நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1955_58 கால அளவில் படித்தபோது
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்படாத அறிஞர் அண்ணா அவர்களை,
அப்பொழுது கல்லூரி விடுதி செயலராக இருந்த திரு. பழ.நெடுமாறன் அவர்களும்,
அவர்களைச் சார்ந்தவர்களும் துணைவேந்தரோடு போராடி பல்கலைக்கழகத்திற்கு வரச்
செய்தார்கள். அரசியல் கலவாத அண்ணா அவர்களின் பேச்சு எல்லோரையும் கவர்ந்ததில்
வியப்பில்லை. தமிழ் இலக்கிய மாணவனாகியஎனக்கு அறிஞர் அண்ணாவின் மேல்
இன்றளவுக்கும் ஈர்ப்புக் குறையவில்லை. சிதம்பரத்திற்கும், அண்ணாமலை நகருக்கும்
பெரியார் பலமுறை வந்திருந்தார். புராணம் முதலியவை குறித்த அவரது திறனாய்வை
யாரால் மறுக்கமுடியும். இளமை முதற்கொண்டே எனக்குள் கடவுளைத் தேடிக்
கொண்டிருந்தேன். தாகூர், விவேகானந்தர், அரவிந்தர் முதலியவர்களை விரிவாகக்
கற்றுக்கொண்டும் இருந்தேன். எல்லாமே பிரம்மம் என்பதனை தியானத்தின் மூலம்
எனக்குள்ளும் உணர்ந்தேன். வெற்றுச் சடங்குகள், வழிபாடுகள் முதலியவற்றில் எனக்கு
எப்பொழுதும் நாட்டமிருந்ததில்லை. இலக்கியம், திறனாய்வு, வரலாறு, மெய்யியல்,
உளவியல் என்று என் ஆர்வங்கள் மிக விரிவாக இருந்தன. பகுத்தறிவாதம் எனக்குப்
போதுமானதாக இருக்கவில்லை. நானே பிரம்மம் என்ற என் அனுபவம், சில
ஆண்டுகளுக்கிடையில் பிரபஞ்சம், வரலாறு, இயற்கை, சமுதாயம் ஆகிய அனைத்தையும்
தழுவியதாக மாறியது. இத்தகைய ஆழமான புரிதல் என்னை மார்க்சியத்திற்குக் கொண்டு
சேர்த்தது. கடவுளைக் கைவிட்டு மார்க்சை ஏற்றேன். 

தீராநதி : தமிழிலக்கிய மாணவராகிய உங்களுக்கு மார்க்சியத்தில் ஈடுபாடு
ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்துச் சொல்லுங்கள். 

கோவை ஞானி : என் இளமைக்காலம் உழவர்களும், நெசவாளர்களும் வாழ்ந்த கிராமத்தில்
கழிந்தது. இயற்கைச் சூழல் உழைப்புக்குத் தயங்காத உழவர்கள். கலையுணர்வுமிக்க
நெசவாளிகள் இந்த கிராமத்து ஏழை உழவர்கள், புன்செய் நிலம். இயற்கைக்கு
நெருக்கமான வாழ்வு. இவையனைத்தும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. இந்த உழைக்கும்
மக்களுக்கான வாழ்க்கை என்றைக்கும் உறுதிபட வேண்டும். இதை யாரும்
பறித்துக்கொள்ளக் கூடாது. 1947-க்கு முன்னர் விடுதலை உணர்வோடு கூடிய
நெசவாளர்கள் மத்தியில் நாங்கள் இருந்தோம். என் தந்தையார் வழியிலும் தேச உணர்வு,
விடுதலையுணர்வு என் நெஞ்சில் குடியேறிற்று. காந்தி, நேரு, நேதாஜி முதலியவர்கள்
மீது அளவுகடந்த மரியாதை இருந்தது. விடுதலைக்குப் பிறகு எல்லோருக்கும் நல்வாழ்வு
கிட்டும் என்று நம்பியிருந்தோம். எல்லாமே பொய்யாய் பழங்கனவாய்ப் போயின. 47, 48
காலத்தில் வறுமை நிலை எங்கள் அனைவரையும் கடுமையாகப் பாதித்து இருந்தது
என்பதையும் கூடுதலாகச் சொல்லவேண்டும். இது ஒருகாரணம். 

கோவையில் கல்வி கற்றேன். கோவையில் பணிபுரிந்தேன். தொழிற்பெருக்கம் மிகுந்த
நகரம் கோவை. தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்கள். இவர்களது மத்தியில் என்
வாழ்வு. கோவைப் பகுதியில் வாழும் ஒருவர் மார்க்சியத்தால் ஈர்க்கப்படாமலும்
இருக்கமுடியாது. தஞ்சை, திருச்சி பகுதி என்றால் பெரியாரியத்தால் ஈர்க்கப்படாமல்
இருக்கமுடியாது என்பது போல. கோவையில் பணிபுரிந்த காலத்தில்தான் புலவர். ஆதி,
எஸ்.வி.ஆர்., தோழர் எஸ்.என். நாகராசன் முதலியவர்கள் மூலம் மார்க்சியத்தை
ஆழமாகக் கற்கும் வாய்ப்பு நேர்ந்தது. நான் மார்க்சியத்தை ஏற்பதற்கு இவை
அடிப்படையான காரணங்கள். பூர்வீகச் சொத்து எங்களுக்கு இல்லை. ஏதாவது தொழில்
செய்துதான் பிழைத்தாக வேண்டும். சாதியில் நான் பிராமணனும் இல்லை. உழவர்கள்
தொழிலாளர்களோடு உறவு. இவர்களோடுதான் எங்களுக்கும் வாழ்வு. விடுதலைக்குப் பிறகு
எல்லா நம்பிக்கைகளும் பொய்யான நிலைமை. 68இல் கீழ்வெண்மணி. மார்க்சியம் மட்டுமே
எங்களுக்கு விடுதலை தரமுடியும். நேரு, காந்தி, குருஷேவ் முதலியவர்கள் மீது
எனக்கிருந்த நம்பிக்கையை எனக்குள்ளிருந்து கலைத்தவர் நாகராசன். சோவியத்
ஒன்றியத்தில் முதலாளியம்தான் நிலை நிறுத்தப்படுகிறது என்ற உண்மையை நிதானமாகவே
அறிந்துகொண்டேன். 68இல் `வசந்தத்தின் இடி முழக்கம்’ என்று சொல்லப்படுகிற நக்சல்
பாரி இயக்கம் எங்கள் எல்லோரையுமே ஈர்த்தது. மாவோ சிந்தனைக்கு நாங்கள்
வசப்பட்டோம். தொடர்ச்சியான படிப்பு. இயக்கத்தோடு குறைந்த அளவுக்கேனும் தொடர்பு.
இப்படித்தான் மார்க்சியம் என்னை வசப்படுத்திக்கொண்டது. சிறு வயது முதலே
கடவுளைக் காணவேண்டுமென்ற என் விடாப்பிடியான ஆர்வம் ஒரு கட்டத்தில் தியானத்தின்
மூலம் நானே பிரம்மம் என்று உணர்ந்து, பிறகு இத்தகைய உணர்வுக்கு என்ன ஆதாரம்
என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு, மார்க்சியத்திற்கு எனக்குள் இடம் கொடுத்து
விடக்கூடாது என்ற எனது முன்னைய இறுக்கம் எனக்குள் கலைந்து பிறகு மெல்ல மெல்ல
மார்க்சியத்திற்கு நான் வசப்பட்டேன். மார்க்சியம்தான் எனக்குள்ளிருந்த சமய
உணர்வுக்கான தெளிவையும் தந்தது. 

நான் முதல் தரமான தமிழிலக்கிய மாணவன். எனக்கு வாய்த்த பேராசிரியர்கள்
தகுதிமிக்கவர்கள். என் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வு கைலாசபதி முதலியவர்கள் மூலம்
என்னை மார்க்சியத்தோடு முழுமையாக இணைத்தது. மார்க்சியத்தின் மூலம் தமிழிலக்கிய
ஆய்வில் புதிய வெளிச்சங்களைப் பெற்றேன். தமிழிலக்கிய ஆய்வுக்கு மார்க்சியம்
இல்லாமல் முடியாது என்று உறுதியாக நான் நம்புகிறேன். 

தீராநதி : கண் பார்வையிழப்பு உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? இந்த இழப்பை எப்படித்
தாங்கிக் கொண்டீர்கள்? இழப்பிற்குப் பிறகும் இடைவிடாது படிப்பதும், எழுதுவதுமாக
இருக்கிறீர்கள். இது எப்படி உங்களுக்குச் சாத்தியமாகிறது? 

கோவை ஞானி : 1988-இல் நீரிழிவு நோய் காரணமாகப் பார்வையிழப்புத் தொடங்கியது.
லேசர் மருத்துவம் செய்துகொண்டபிறகும் பார்வையிழப்புத் தொடர்ந்தது. கோவையில்
மருத்துவர் இராமமூர்த்தி அவர்களிடம் உண்மையில் எனக்கு என்ன நேர்ந்தது என்று
கேட்டபோது, மிகுந்த அக்கறையோடு எனக்கு விளக்கம் தந்தார். பார்வையை மீண்டும் பெற
இயலாது என்ற நிலையில் ஒரு கணம் நான் திகைத்தேன். வேறு வழியில்லை. என்
மரியாதைக்குரிய தலைமை ஆசிரியரும் எனக்குப் பதிலாக என் ஊதியத்தில் ஒரு பகுதியைத்
தந்து இன்னொருவரைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கலாம் என்று கூறினார். என்
பணியை நானே செய்யவேண்டும். நான் ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். என் இடத்தில்
இன்னொருவர் அமர்ந்து முழுமையான ஊதியம் பெறட்டும் என்ற நிலையில் பணியிலிருந்து
விடுவிப்பை வேண்டினேன். கல்லூரியில் படித்த காலத்திலும் கோவையில் பணியாற்றிய
காலத்திலும் தமிழிலக்கிய திறனாய்விலும், மார்க்சியத்திலும் பெருமளவு என்னை
ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். நிறைய எழுதிக்கொண்டும் இருந்தேன். ஆசிரியப்
பணியில் அரைத்த மாவையே அரைப்பது எனக்குப் பெரும் சலிப்பாக இருந்தது. கண்
பார்வையிழப்பு எனக்கு ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதவியாளர்
ஒருவரை வைத்துக்கொண்டு நிறையப் படிக்கவும், எழுதவும் முடிகிறது. இதைத்தான்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓயாமல் செய்து வருகிறேன். என் சமூக ஈடுபாடும்,
தமிழிலக்கியக் கல்வியும் மார்க்சியமும் அற்புதமான நண்பர்களும் என் குடும்பச்
சூழலும், என் எழுத்துக்கும் படிப்புக்கும், நூல் வெளியீட்டிற்கும் இதழ்
பணிகளுக்கும் ஆதரவாக அமைந்தன. அமைகின்றன. கற்பதிலும், செரித்துக்கொள்வதிலும்
இளமைத்தொட்டே எனக்கு இருந்த ஈடுபாடு இன்றளவும் குறையவில்லை. 

தீராநதி : `புதிய தலைமுறை’ தொடங்கி இன்றுவரை ஏதாவது ஒரு இதழ் பணியில் உங்களை
ஈடுபடுத்திக்கொண்டு வருகிறீர்கள். அதுபற்றி நீங்கள் சுருக்கமாகச் சொல்லுங்கள். 

கோவை ஞானி : 1968-70 கால அளவில் எஸ்.என். நாகராசன், எஸ்.வி.ஆர்., புலவர் ஆதி
முதலியவர்களோடு நானும் இணைந்து `புதிய தலைமுறை’ என்ற கலை இலக்கியத் தத்துவ இதழை
நடத்தினோம். சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளிலிருந்து மாறுபட்டு மாவோவின்
சிந்தனையை தமிழகச் சூழலில் முதன்முதலில் உள்ளடக்கமாகக் கொண்டுவெளிவந்த இதழ்
இது. எங்கும் எதிலும் தமிழ் என்று எழுதினோம். பாரதிதாசனைப் பாராட்டினோம்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்த புதிய ஆய்வுகளை வெளியிட்டோம்.
அந்நியமாதலுக்கு அழுத்தம் தந்து படைப்புக்களை வெளியிட்டோம்.
மார்க்சியத்திற்குள் புதிய காற்றைக் கொண்டு வந்தது இந்த இதழ். 

சோவியத் இரஷ்யாவிலிருந்தும் மாவோவின் சீனத்திலிருந்தும் தமிழ்ச் சூழலுக்கு
அறிமுகமான மார்க்சியத்தோடு மேலை உலகில் அல்தூசர் முதலியவர் மூலம்
மார்க்சியத்திற்குள் வந்த புதிய பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளும் முறையிலும்,
தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் முறையிலும் 79-80களில் `பரிமாணம்’ என்ற
இதழை நடத்தினோம். இந்திய வரலாற்றின் தனித்தன்மைகள் தமிழ்ச்சூழலில் இலக்கியம்,
மெய்யியல் முதலியவை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டோம். ஸ்டாலின் பிரச்சனை
என்ற முறையில் உலக அளவில் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களை ஒரு தனி இதழாக
வெளியிட்டோம். மாவோவிற்குப் பிறகு சீனம் என்ற முறையில் இன்னொரு தனி இதழ்.
கோசாம்பி, கால்டுவெல், அல்தூசர், தாமோதரன் குறித்த கட்டுரைகளும் வெளியிட்டோம். 

இடையில் 70-72 வாக்கில் வானம்பாடி இயக்கத்தினுள் நான் இருந்தேன். தமிழில்
புதுக்கவிதையை மார்க்சிய உள்ளடக்கத்தோடு வளர்த்தெடுப்பது வானம்பாடி இயக்கத்தின்
நோக்கம். புலவர்களிடமிருந்து மக்களிடம் கவிதையைக் கொண்டு சேர்க்கும் ஒரு சனநாயக
இயக்கம் இது. உலகம் முதல்முறையாக தமிழ்க் கவிதைக்குள் இவ்வியக்கத்தின்
மூலம்தான் வந்தது என்று சொல்வதில் தவறில்லை. தி.மு.க.விற்கு எதிரான கவிதை
இயக்கமும் இது. கவிதை என்றால் என்ன என்று நாங்களும் கற்றுக்கொண்டிருந்தோம். 

1983-இல் `நிகழ்’ இதழைத் தோற்றுவித்தோம். 88-ல் கண்பார்வை இழந்த நிலையில்
`நிகழ்’ இதழை நண்பர்கள் ஒத்துழைப்போடு நானே பொறுப்பேற்று நடத்தினேன். 1996 வரை
32 இதழ்கள். தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் `நிகழ்கள்’ பங்களிப்பை யாரும் மறுக்க
இயலாது. சோவியத் ஒன்றியத்தில் சோஸலிசம் தகர்ந்த நிலையில், இனி
மார்க்சியத்திற்கு வாழ்வு இல்லை என்று பலரும் நம்பிய சூழலில் உண்மையில்
மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்குக் கிடைத்த
ஒரு மாபெரும் வாய்ப்பு என்ற முறையில் தோழர் எஸ்.என். நாகராசன் அவர்களின்
தூண்டுதலோடு `நிகழ்’ வகைவகையான கட்டுரைகளை வெளியிட்டது. `நிகழி’ன் சிறப்பான
கட்டுரைகளை `இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்’, `அறிவியல், அதிகாரம்,
ஆன்மிகம்’, `மார்க்சியம் தேடலும் திறனாய்வும்’, சில சிகரங்களும்
வழித்தடங்கலும்’, `நிகழ் மதிப்புரைகள் நூறு’ என்று 5 தொகுப்புகளில் நூல்களாக
நாங்கள் வெளியிட்டோம். நவீனத்துவம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம்,
பெரியாரியம் என்ற முறையில் தமிழகச் சூழலில் நடைபெற்ற பெரும் விவாதங்களை
உள்வாங்கி மார்க்சியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தோம். `நிறப்பிரிகை’யோடு
கடுமையான மோதல் ஏற்பட்ட சூழலில் இப்பொறுப்பை சரியாக நிறைவேற்றினோம்.
சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வுகள், மதிப்புரைகள் என ஏராளமாக வெளியிட்டோம்.
எத்தனையோ புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினோம். 

1998 முதல் இன்றுவரை தொடர்ந்து `தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறேன்.
தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நம் காலச்சூழலில் நேர்ந்திருக்கிற
நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றும் முறையில் சிறப்பான ஆய்வுகளைத் தொடர்ந்து
வெளியிடுகிறது தமிழ்நேயம். தமிழ்த் தேசியம் என்பது இதன் மையம். இயற்கை
வேளாண்மை, சூழலியம் குறித்த கட்டுரைகள். தமிழியல் ஆய்வுகள் - இதுவரை - இன்று
என்ற முறையில் கட்டுரைகள் தமிழனுக்கு உலகப் பார்வை தேவை என்ற முறையில்
திறனாய்வுகள் இப்படிப் பலவகையான கட்டுரைகள், `தமிழ் நாகரிகத்திற்கு என்ன
எதிர்காலம்’, `தமிழனுக்கு மெய்யியல் உண்டா’, `தமிழனுக்கு மெய்யியல் உண்டு’,
`தமிழின் ஆக்கம் -தடையும் விடையும்’, `எஸ்.பொ. படைப்பும் பார்வையும்’
ஜெயமோகனின் `கொற்றவை படைப்பும், பார்வையும்’, `அறிஞர் அண்ணா - பன்முகப்
பார்வை’, `தோழர் எஸ்.என். நாகராசன் வினாவும் - விடையும்’ இம்முறை இவ்வகையிலான
தலைப்புகளில் தனித்தனி சிறப்பிதழ்கள் இவற்றோடு 98 முதல் இன்றுவரை தேர்வு செய்த
பெண் எழுத்தாளர் சிறுகதை தொகுப்புகள் 13 வெளியிட்டோம். இவை சுருக்கமாக என் இதழ்
பணிகள். 

தீராநதி : க.நா.சு. முதல் சுந்தர ராமசாமிவரையிலான தமிழ் நவீன இலக்கியத்திற்கு
முக்கியமான பங்காற்றியவர்களை மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லையே. உங்களால்
மட்டும் எப்படி ஏற்க முடிந்தது? 

கோவை ஞானி : கலை இலக்கியங்களின் உள்ளடக்கம் வர்க்கப் போராட்டமாகத்தான்
இருக்கமுடியும். இத்தகைய அடிப்படையிலிருந்துதான் கலை இலக்கியப் படைப்புகள்
உருவாக வேண்டும். வர்க்கப் போராட்டத்தில் மார்க்சியக் கட்சிக்கு,
தொழிற்சங்கத்திற்கு கட்சித் தலைமைக்கு இடமில்லாமல் முடியாது. தலைவர்கள்
புனிதமானவர்கள். நிலவுடைமையாளர்களும், உரிமையாளர்களும் கொடுமைக்காரர்கள்,
அயோக்கியர்கள். உழைப்பாளிகள் புனிதமானவர்கள். இத்தகைய படிமங்களோடுதான்
இவர்களைப் படைக்கவேண்டும். நடுத்தர மக்கள் - படிப்பாளிகள் முதலாளியத்திற்கு
சேவகம் செய்பவர்கள் கலை இலக்கியத்தில் உருவத்திற்கு, கலை உணர்வுக்கு,
அழகியலுக்கு முதன்மை இல்லை. உள்ளடக்கமாகிய அரசியலுக்கே முதன்மை. இதுதான் கட்சி
மார்க்சியரின் திறனாய்வுப் பார்வையாக இருந்தது. இவ்வகையான பார்வை ஸ்டாலின்
காலத்தில் உருவான ஸ்தானோவியம் என்ற பார்வையின் தொடர்ச்சி. இதன் காரணமாகத்தான்
க.நா.சு. முதலியவர்களைக் கட்சி மார்க்சியர் சாடினர். க.நா.சு. முதலியவர்களுக்கு
மார்க்சியர் சொல்லுகிற வரலாறு மற்றும் பொருளியல் அடிப்படையிலான விஞ்ஞானக்
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற பார்வை இல்லை என்பது உண்மைதான். இலக்கியம்
என்பது அரசியல் ஆவணமாகத்தான் இருக்கவேண்டுமென்பது கட்டாயமில்லை. வர்க்கக்
கண்ணோட்டத்தை ஏங்கெல்ஸ் கூறுகிற மாதிரி தட்டில் வைத்துத்தான் வழங்கவேண்டும்
என்பதும் உண்மையில்லை. இத்தகைய பார்வைதான் மார்க்சுக்குள் அழுத்தமாக
இருந்திருக்குமென்றால் ஷேக்ஸ்பியரையும் பால்சாக்கையும் அவர் கொண்டாடியிருக்க
முடியாது. டால்ஸ்டாயை லெனின் கடிந்து ஒதுக்கியிருக்க வேண்டும். இத்தகைய
பார்வையில் கார்க்கி, மாயகோவ்ஸ்கி முதலியவர்களும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.
இவையெல்லாம், கட்சி மார்க்சியர் வழியே மார்க்சியத்திற்குள் வந்த திரிபுகள் /
விபத்துக்கள். க.நா.சு. முதலியவர்களுக்குள் சமூகம் பற்றிய அக்கறை இருந்தது
என்பதை மார்க்சியர் மறுக்கமுடியாது. அரசியலின் தேவைக்காக வளமான கலை
இலக்கியங்களைப் பலியிட முடியாது. கட்சி மார்க்சியரின் பார்வையில் வள்ளுவர்,
இளங்கோ முதலியவர்களும் திறனாய்வு என்ற முறையில் விமர்சனம் செய்யப்பட்டார்கள்.
மனித வாழ்வின் பலவிதமான பரிமாணங்களில் ஒன்று அரசியல். அரசியல் தேவைதான்
என்றபோதிலும் மனிதனின் அழகியல், அறிவியல் முதலியவற்றை இழக்க வேண்டியதில்லை.
ஆண்-பெண் உறவு பற்றி மார்க்சியருக்கு அக்கறை இல்லை. காமம் வெறுக்கத்தக்கது என்ற
முறையில்தான், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் முதலியவர்களும் சாடப்பட்டார்கள்.
க.நா.சு.வை சி.ஐ.ஏ. என்று  கைலாசபதி சாடினார். வாழ்வுக்கு அர்த்தம் தேடும்
இருத்தலியல் மார்க்சியத்திற்குத் தேவையில்லை. சமயம் எப்பொழுதுமே அபின்.
குழந்தைகள் பற்றி மார்க்சியருக்குப் பார்வையில்லை. இயந்திர நாகரிகம் வாழ்வை
நாசமாக்குவது பற்றி மார்க்சியருக்குப் பார்வையில்லை. க.நா.சு.வின் `பொய்த்தேவு’
நாவலை மார்க்சியர் பாராட்டியிருக்க வேண்டும். `இதய நாதம்’ நாவலை கைலாசபதியும்
பாராட்டினார். கட்சி மார்க்சியம், பொருளாதாரவாதமாக, தொழிற்சங்கவாதமாக,
அதிகாரமாக மாறிய சூழலில் இவர்களோடு க.நா.சு. முதலிய கலைஞர்கள் ஒத்துப்போக
முடியாது. மார்க்சிய அரசியலும் பெரியாரியத்தை, திராவிட இயக்கத்தைப்
புரிந்துகொள்ளாமல், முற்றாக மறுத்தது. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகள்,
படைப்பாளிகள் கட்சிக்கு அடிமையாக முடியாது. கட்சிக்கு இத்தகைய அடிமைகள்,
கூலிகள் தேவை. தமிழகச் சூழலில் கட்சி மார்க்சியர் என்பவர் மார்க்சியத்தின் ஆழ,
அகலங்கள் தெளிந்தவராகவும் இல்லை. ஜீவா, ஆர்.கே. கண்ணன், விஜயபாஸ்கரன்
முதலியவர்களை கட்சி மார்க்சியர்கள் ஒதுக்கவும் செய்தார்கள். மார்க்சியருக்கு
அக்காலத்தில் தமிழ் தேசியப் பார்வை இல்லை. தமிழிலக்கியத் திறனாய்வையும் இவர்கள்
வர்க்கப்போராட்டம் என்பதையே முதன்மையாக வைத்துப் பார்த்தார்கள். தமிழ் அழகியல்
தமிழறம் இவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருந்தது. சமயத்தை ஒதுக்கிவிட்டு
தமிழிலக்கியம் கற்கவும் முடியாது. கம்பர் கொஞ்சம் தப்பிப் பிழைத்தார்.
பாரதியும் தப்பித்தார். வரலாற்றில் கட்சி மார்க்சியர் இப்பொழுது
கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தம்மைத் திருத்திக்கொண்டிருக்கிறார்கள். 

தீராநதி : வானம்பாடி இயக்கத்திலும் இருந்துள்ளீர்கள் வானம்பாடிக் கவிஞர்களின்
போலியான புரட்சி முழக்கங்களும் கற்பனை வாதங்களும் இன்று பார்க்கும்போது உவப்பாக
இல்லை. வானம்பாடிக் கவிஞர்கள் மேத்தா, புவியரசு, சிற்பி ஆகியவர்கள்
புரட்சிக்காரர்களாக மாறவில்லையே? இதற்கான அரசியல் தத்துவக் காரணங்கள் ஏதும்
உண்டா? 

கோவை ஞானி : மரபுக் கவிதைகளுக்கு எதிராக சி.சு. செல்லப்பா,
க.நா.சு.முதலியவர்கள் புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். மரபுக்
கவிதைகள் சாரமற்று வெறும் எதுகை மோனையாக யாப்பாக மாறிய நிலையில்,
வானம்பாடிகளின் புதுக்கவிதை இயக்கம் செல்லப்பா முதலியவர்களுக்கு எதிர்வினை
தருவதாக இருந்தது. செல்லப்பா முதலியவர்களின் புதுக்கவிதை இயக்கம் அதிக அளவு
மனத்தின் குரலாக, படிமமாக, குறியீடாக, மார்க்சிய, திராவிட இயக்கங்களின்
எதிர்வினையாக இயங்கியது, பாரதியின் தொடர்ச்சியாகத் தங்களை இனம் கண்டுகொண்ட
வானம்பாடிகள் 1967-க்குப் பின் அரசியல் அதிகாரத்தில் நுழைந்து சீரழிந்த திராவிட
அரசியலுக்கு எதிர்நிலையாகவும் மார்க்சிய நோக்கில் உலகப் பார்வை மற்றும் சமூகப்
பார்வையை சாதி எதிர்ப்பு பெண்ணடிமைத்தன எதிர்ப்பு முதலியவற்றை உள்வாங்கிக்
கொண்ட கவிதை இயக்கமாகத் தோன்றியது. வானம்பாடிகளில் பலர் தமிழாசிரியர்களாக
இருந்தபோதிலும் யாப்பு மரபுகளைப் புறக்கணித்ததோடு படிம, குறியீடு முதலிய
உத்திகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்கள். சொன்னதையே திரும்பச் சொல்லுகிற
மரபு முறையைக் கைவிட்டார்கள். கட்சி மார்க்சியர் தொடக்கத்தில் வானம்பாடிகளை
மறுத்தார்கள். காரணம், கட்சி அதிகாரத்தை இவர்கள் ஏற்கவில்லை. காலங்காலமாகக்
கவிதையென்பது மனத்தின் குரலாக மட்டுமல்லாது சமுதாயத்தின் குரலாக, அறத்தின்
குரலாக, சில சமயம் போர்க்குரலாகவும் வெளிப்பட்டு இருப்பதைக் கவிதை வரலாறு
அறிந்தவர்கள் மறக்கமாட்டார்கள். வானம்பாடிகள் இயக்கம் வளர்ச்சி பெற்ற வேகம்
வியக்கத்தக்கதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர் கவிதை எழுதினார்கள். தமிழ்
மரபின் தொடர்ச்சியால்தான் வானம்பாடிக் கவிஞர்களை வைத்துப் பார்க்கமுடியும்.
வானம்பாடியின் 23 இதழ்களில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து வைத்து
உண்மையான தரத்தோடு கூடிய கவிதைகள் என ஒரு 100 கவிதைகளையாவது தெரிவு
செய்யமுடியும். வானம்பாடி இயக்கத்தினுள் முரண்பாடுகள் இருந்தன. கவிதை இயக்கமாக
இருப்பது மட்டுமே போதாது. இலக்கிய இயக்கமாக, திறனாய்வு இயக்கமாக மாறவேண்டும்.
மார்க்சியத்தில் மேலும் தெளிவு பெறவேண்டும். உறுதி பெறவேண்டும் என்ற
எதிர்க்குரல்கள் நாளடைவில் ஒதுக்கப்பட்டன. நெருக்கடி நிலைக்காலத்தில் வானம்பாடி
இயக்கம் `இந்திராவே இந்தியா’ என்று குரல் எழுப்பியதோடு, கலை இலக்கியப்
பெருமன்றத்தினுள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டது. மேத்தா முதலியவர்கள் பற்றி
தொடக்கம் முதலே விமர்சனம் இருந்தன. உணர்ச்சிகரமான முழக்கங்கள் கவிதையின் உயிராக
இருக்கமுடியாது. வானம்பாடிகள் நடுத்தர வர்க்கத்தினர். எதிர்காலத்தில் சமதர்ம
சமுதாயம் உருவாகும் என்பதில் உறுதிகொண்ட இவர்கள் கற்பனாவாதத்திற்குள்ளிருந்து
கவிதையாக்கம் செய்வதைத் தவிர்க்கமுடியாது. கவிதை இயக்கம் ஓய்ந்த பிறகும்
புவியரசு, சிற்பி முதலியவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். சிற்பியின் கிராமத்து
நதி, பாரதி கைதி எண். 2053, சூரிய நிழல் முதலிய அற்புதமான படைப்புக்களைப்
படைத்திருக்கிறார். தொடக்கம் முதலே புவியரசுவின் அற்புதமான கவிதைகளை யாரும்
மறுக்கமுடியாது. இருத்தலியல் நோக்கி பிரபஞ்ச சூழலில் மனித வாழ்வுக்கு என்ன
அர்த்தம் என்ற முறையில் புவி எழுதிய `மீறல்’ கவிதைகளை யாரும் மறுப்பதற்கில்லை.
இளமுருகு, கங்கைகொண்டான் ஆகியவர்களின் கவிதைகள் நேர்த்திமிக்கவை. ஞானி, ஜீவஒளி,
சி.ஆர். இரவீந்திரன், தமிழ்நாடன், தமிழன்பன் முதலியவர்கள் தமிழ்ச்சூழலில்
இன்றும் ஆற்றலோடு வகைவகையான படைப்புக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். வானம்பாடி
கவிஞர்களுக்குள் இருந்த புரட்சிகர உணர்வு, அவர்களை கட்சி சார்ந்த
புரட்சிக்காரர்களாக மாற்றியிருக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்.
தமிழ்க்கவிதையில் இவர்களில் சிலர் நிலைபெற்றிருக்கிறார்கள். வானம்பாடி இயக்கம்
வெறுக்கத்தக்கதாக நான் கருதவில்லை. 

தீராநதி : எஸ்.பொ.வின் சடங்கு, தீ முதலிய படைப்புகள் அவை எழுதப்பட்ட
காலத்திலிருந்து இன்றுவரை காமம் சார்ந்தவை என்றும், இதன் காரணமாகவே
மார்க்சியராக அவர் இருக்கமுடியாது என்றும் மார்க்சியர் சாடும்பொழுது அவரை
நீங்கள் இன்றும் கொண்டாடுகிறீர்களே? 

கோவை ஞானி : மனிதனின் வாழ்வியல் அனுபவத்திலிருந்து காமம் என்பதை விலக்கிப்
பார்க்கவே முடியாது. காமம் குறித்த சரியான அணுகுமுறை இல்லையென்றால்
என்னவெல்லாம் நேரும் என்பதற்கு ஜெயகாந்தனின் ரிஷிமூலம் முதலிய படைப்புகள் தக்க
சான்று. காமத்தை அழித்தால் மட்டுமே மனித விமோசனம் சாத்தியம் என்று மதவாதிகள்,
துறவிகளின் போலித்தனமான போதனைகள் நெடுங்காலமாக நம் மக்களைக் கடுமையாகப்
பாதித்து வந்துள்ளன. இயல்பான காம உணர்வைஅடக்குவதனால் மனித ஆளுமை சிதையத்தான்
செய்யும். காமத்தைப் பல வகைகளிலும் தூண்டி வளர்ப்பதை ஒரு பெரும் வணிகமாக
முதலாளியம் மாற்றியிருக்கிறது. தற்காலச் சூழலில் காமம் ஒரு வணிகப் பொருள்.
மார்க்சியருக்கு இது தெரியும். காமம் ஒரு பாவம் என்று சமயவாதி கருதுவது போலவே
காமம் குறித்துப் பேசவே கூடாது என்று பேசும் மார்க்சியனும் காமத்திற்கு
மறைமுகமாக இடங்கொடுத்து தன் இழிசெயல்களை மறைத்துக்கொள்வது பற்றி இங்கு
ஆதாரங்கள் தரவேண்டியதில்லை. 

எஸ்.பொ.வின் படைப்புகளில் யாழ்ப்பாணத்து நடுத்தர வேளாளர் குடும்பத்து
இளைஞர்களும், பெண்களும் திருமணத்திற்குப் பிறகும் வாய்ப்புக் கிடைக்காத சூழலில்
தவிப்பது முதலிய அனுபவங்களை விரிவாக எழுதுகிறார். போலித்தனமாக மார்க்சியன்
ஒதுக்குவதைப்போல எஸ்.பொ. ஒதுக்கவில்லை. அன்றியும் காமம் பற்றி மட்டுமே எஸ்.பொ.
காலமெல்லாம் எழுதிக்கொண்டும் இருக்கவில்லை. கைலாசபதி முதலியவர்களுக்கு முன்பே
மார்க்சிய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எஸ்.பொ. தொழிற்சங்கப்
பணியிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். எஸ்.பொ.வின் ஆற்றல்மிக்க
படைப்புத்திறனும் அவர் பெரிதும் கொண்டாடிய தமிழ்த்துவம், தமிழ் தேசியத்தோடு
கைலாசபதி முதலியோர்க்கு உடன்பாடில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது
தொழிற்சங்கமாக இருக்கமுடியாது என்பதும் எஸ்.பொ.வின் கருத்து.
வேண்டியவர்களுக்குப் பரிசு வழங்குவதும், பாராட்டுவதும் இவர்களின் தொழிற்சங்க
நியதி. எஸ்.பொ.வின் கனத்தை இவர்களின் நொய்மையான படகால் தாங்கமுடியவில்லை.
தமிழ்த்தேசியத்திற்கு எதிராக சிங்களத் தேசியத்தோடு ஒத்து உயர்பதவியில் தம்மை
அமர்த்திக்கொண்டவர்கள் இவர்கள். இவர்களை அசலான மார்க்சியர் என்று சொல்வதற்குக்
கொஞ்சம் முட்டாள் தனமும் தேவை. 

தீராநதி : புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளில் முக்கியமானவர்கள் கவிஞர் சேரன்,
அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்றவர்கள். ஆனால் நீங்கள் `வரலாற்றில் வாழ்தல்’
நூலுக்காக எஸ்.பொ.வையே பெரிதும் பாராட்டுகிறீர்கள். இதற்கு என்ன காரணம்? 

கோவை ஞானி : சேரன், முத்துலிங்கம், ஷோபாசக்தி முதலியவர்களைக்  குறைந்த
அளவுக்கேனும் நானும் படிக்கிறேன். புரிந்துகொள்கிறேன். இவர்கள் படைப்புக்களின்
தனித்தன்மை குறித்தும் எனக்கு மரியாதை உண்டு. சேரனின் கவித்துவச் செழுமையை
யாரால் மறுக்கமுடியும். முத்துலிங்கத்தின் வாழ்வியல் அனுபவ வளத்தை யாரால்
பாராட்டாமல் இருக்கமுடியும். ஷோபா சக்தியின் படைப்புத்திறன் வியக்கத்தக்கது.
நம் மனத்திற்குள் பெரும் தீயாய் சுழன்று அடித்துக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர்
அரசியல் குறித்து இவர்களின் நிலைப்பாடுகள் எத்தகையதாய் இருந்தபோதிலும் இதன்
காரணமாக இவர்கள் படைப்புத்திறனையோ தமிழிலக்கியத்திற்கு இவர்கள் பங்களிப்பையோ
நான் மறுக்கமாட்டேன். ஒரு வகையில் சரியாகச் சொன்னால் இவர்கள் இளைய தலைமுறையினர்
என்றால் நான் இவர்களுக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவன். எஸ்.பொ.வின்
தலைமுறையும், என் தலைமுறையும் ஒத்த தலைமுறை. எனக்குள் நான் பழசாகிவிடவில்லை.
இளைய தலைமுறையை இயன்றவரை புரிந்துகொள்கிறேன். கற்றுக்கொள்கிறேன். எஸ்.பொ.
அவர்களின் ஆளுமை இவர்கள் எவரையும்விட ஆழமானது. விரிவானது. செரிவானது.
எஸ்.பொ.வின் `வரலாற்றில் வாழ்தல்’ என்ற அவரது தன் வரலாறு, தமிழுக்கு நம்
காலத்தில் கிடைத்த மாபெரும் சொத்து. வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் தன்
கால வரலாற்றுச் சூழலில் இருந்து தனக்குள் கண்டு அற்புதமாக எஸ்.பொ. எழுதுகிறார்.
இலங்கை, இந்தியா மற்றும் உலக அளவிலான வரலாற்று இயக்கத்திற்குள் தன்னைக் கண்டு,
இதன் காரணமாகவே தனக்குள் மாபெரும் ஆளுமையைத் தாங்கி, தமிழுக்கு இன்னொரு
இதிகாசத்தைத் தந்திருப்பவர் எஸ்.பொ. என்னதான் அவரை விட்டு விலகிச் சென்றாலும்
சேரன் முதலியவர்கள்  எஸ்.பொ.வின் பிள்ளைகள். தமிழில் நோபல் பரிசுக்குத்
தகுதியான நூல் என்று ஒன்றைச் சட்டெனச் சொல்வதென்றால், `வரலாற்றில்
வாழ்த’லைத்தான் நான் சொல்வேன். இந்தப் பெருமைகள் ஒருபுறம் இருக்கட்டும்.
ஈழத்தமிழகம் சார்ந்த வரலாற்று நெருக்கடியை நம்மால் எப்படி செரித்துக்கொள்ள
முடியும்? 

தீராநதி : சாகித்திய அகாதெமியின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு
உள்ளாகியே வந்திருக்கின்றன. இப்போது மேலாண்மை பொன்னுச்சாமிக்கு பரிசு
வழங்கியிருப்பது பற்றி ஒரு திறனாய்வாளராய் என்ன நினைக்கிறீர்கள்? 

கோவை ஞானி : சாகித்திய அகாதெமியின் விருதுகள் தந்த வரலாற்றை இன்று திரும்பிப்
பார்க்கும்பொழுது நமக்கு உவப்பாக இல்லை. இரண்டாந்தர, மூன்றாந்தரப் படைப்புகள்
கூட, படைப்பாளிகள் கூட விருது பெற்றதை நாம் பார்த்திருக்கிறோம். தமிழில் தகுதி
வாய்ந்த எத்தனையோ படைப்பாளிகளுக்கு விருது தரப்படவில்லை. இதில் தொடர்பு
பெற்றவர்கள் தமிழுக்குக் கேடு செய்தவர்கள். படைப்பின் தரம் குறித்து தெரிவு
செய்யும் தகுதியற்றவர்கள். நடுவர் குழு என்பதை நாம் காய்வதற்கான நியாயங்கள் பல
உண்டு. மலையாளத்திலோ, கன்னடத்திலோ தகுதிக்குறைவான படைப்பாளிக்கு விருது
வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். தமிழனுக்கு நேர்மைத்திறம் இல்லை என்று
சொல்வதில் தவறில்லை. 

இப்போது மேலாண்மை பொன்னுச்சாமிக்கு விருது கிடைத்த கதையை இதற்குள்ளே நண்பர்கள்
சிலர் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நடுவர் குழுவுக்கு வந்த
படைப்புகளில் ஜெயமோகனின் `கொற்றவை’க்கு இணையான படைப்பு என்று எதையும்
சொல்லமுடியாது. `ஜெயமோகன் தமிழ்த் துரோகி. அவருக்கு விருது வழங்கக்கூடாது’
என்றாராம் ஒரு நடுவர். கொற்றவையைப் படிக்கவே முடியவில்லை’ என்றாராம்
இன்னொருவர். கொற்றவையை ஒதுக்கிவிட்டால், சி.ஆர். இரவீந்திரனின் நாவலுக்கு
விருது வழங்கப்பட்டிருக்கலாம். சிற்பிக்கு அவர் மிக நெருக்கமானவர். `வேண்டாம்’
என்றாராம் சிற்பி. சிற்பியின் கருத்தை நடுவர் குழு ஏற்க வேண்டியதில்லை.
அப்புறம் மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதை தொகுப்பிற்கு விருது
கிடைத்திருக்கிறது. பொன்னுச்சாமியின் `மின்சாரப் பூக்கள்’ தொகுப்பிலுள்ள
சிறுகதைகள் மிகச் சாதாரணமானவை. வேறு இந்திய மொழிகளில் இக்கதைகளின்
மொழிபெயர்ப்பு வெளிவரும்போது, தமிழுக்கு என்ன மரியாதை கிடைக்கும். விருது
பற்றிய விவாதத்தை வெளியில் சொல்வது நாகரிகம் இல்லை என்பார்கள் நாகரிகத்திற்கு
ணி அடிப்பவர்கள். 

தீராநதி : மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசனுக்கும், உங்களுக்குமான உறவு
பற்றிச் சொல்லுங்கள். மார்க்சியத்திற்கு அவரது பங்களிப்பாக நீங்கள் எவற்றைக்
கருதுகிறீர்கள்? 

கோவை ஞானி : தோழர் எஸ்.என். நாகராசனுக்கு இப்பொழுது வயது 82. ஈரோடு
மாவட்டத்தின் சத்தியமங்கலத்தில் தென்கலை வைணவர் குடும்பத்தில் பிறந்தவர்.
கல்லூரியில் உயிரியியல் கற்றவர். ஆய்வு செய்தவர். ஜே.பி. ஹால்டேன்
முதலியவர்களோடு நட்புக் கொண்டவர். உயிரியியல் கல்விதான் தன்னை
மார்க்சியத்திற்குக் கொண்டு சேர்த்தது என்பதை அவர் தெளிவாகச் சொல்லுகிறார்.
பிற்காலத்தில் தான் தென்கலை வைணவராகப் பிறந்ததால்தான் மார்க்சியனாக தனக்குள்
உரம் பெற வாய்த்தது என்பதை உணர்ந்துகொண்டார். 1844 மார்க்சின் கையேடுகளின்
மூலம் அந்நியமாதல் என்பதை ஆழமாகக் கற்றுப் புரிந்துகொண்டவர் நாகராசன்.
1960-க்குப் பிறகு அவர் மூலம்தான் அந்நியமாதல் தொடங்கி எவ்வளவோ, கற்றோம்.
இரஷியாவிலிருந்து வந்த மார்க்சிய நூல்களோடுதான் நாங்கள் உறவு கொண்டிருந்தோம்.
கட்சிக்காரர்கள் முதன்மைப்படுத்தும் சில நூல்களோடுதான் எங்களுக்கு உறவு
இருந்தது. எங்கள் மார்க்சிய அறிவைப் புரட்டிப் போட்டவர் நாகராசன். மார்க்சிய
நூலிலிருந்து எத்தனையோ புதிய வெளிச்சங்களை எங்களுக்கு அவர்
அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் மார்க்சிய அறிஞர் கார்டுவெல், ஜோசர்நீதாம்
ஜே.டி. பெர்னால்டு என்று பலரை அவர் வழியே நாங்கள் கற்றோம். டி.டி. கோசாம்பி
முதலிய பேரறிஞர்களையும் கற்றோம். இவர்களோடு அமெரிக்க மார்க்சியரும் சிலர்.
மார்க்சியக்கல்வி என்பது எங்களுக்கு அப்படி ஆழமாகப் பதிந்தது. நக்சல்பாரி
இயக்கம் பற்றியும் மாவோவின் மார்க்சியம் பற்றியும் நாகராசன் மூலம் எங்களுக்குக்
கூடுதலான தெளிவு ஏற்பட்டது. அறிவியல் சிக்கல்கள் வரலாறு, மெய்யியல், சமயம்
என்றெல்லாம் தேடித்தேடி நாங்கள் கற்றோம். எனக்கு மட்டுமல்லாமல், சத்தி, ஈரோடு,
கோவை, பெங்களூர் முதலிய பல்வேறு பகுதிகளில் பலருடைய மார்க்சிய ஈடுபாட்டிற்கு
நாகராசன்தான் காரணம். 

நாகராசன் கட்சியிலிருந்தபோதிலும் கட்சியோடு அவர் பல சமயங்களில்முரண்பட்டவராகவே
இருந்தார். இந்தியாவுக்கு ஒரு கட்சி கூடாது என்றார். தமிழ்த் தேசியம் தேவை
என்றார். திராவிட இயக்கம் குறித்து எதிரான பார்வை கூடாது என்றார். டாங்கே
கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார். மாவோ நெறியில் மார்க்சியத்தை மேலும்
வளர்த்தெடுத்தார். மேற்கத்திய மார்க்சியம், கீழை மார்க்சியம் என வேறுபடுத்தி
விளக்கினார். உற்பத்தி சக்திகளுக்கு அழுத்தம் தருவது மேலை மார்க்சியம்.
உற்பத்தி உறவுகளுக்கு அழுத்தம் தருவது கீழை மார்க்சியம். பகை முரண்பாட்டிற்கு
அழுத்தம் தருவது மேலை மார்க்சியம். நட்பு முரண்பாட்டிற்கு அழுத்தம் தருவது கீழை
மார்க்சியம். இப்படிப் பல விளக்கங்கள் தந்தார். பசுமைப் புரட்சியின் தீமை பற்றி
தொடக்கத்திலிருந்தே பேசினார். நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் புதிய
காலனியத்தின் உள்ளார்ந்த கூறுகள். இவை, இயற்கையை நாசமாக்கும். காலனியம், புதிய
காலனியம் என்ற பெயரில் திரும்பி வந்திருக்கிறது. 

சோவியத் தகர்வு தனக்கு வியப்பளிக்கவில்லை என்றார். காரணங்களை விளக்கினார்.
இப்படி நூறு வகைகளில் மார்க்சியம் குறித்துப் புதிய விளக்கங்களை நாகராசன்
தொடர்ச்சியாகத் தருகிறார். இனி ஆயுதப் புரட்சி சாத்தியமில்லை என்கிறார்.
காந்தியையும், மாவோவையும் இணைக்கவேண்டும் என்கிறார். உழவர்களும், பெண்களும்,
இசுலாமியர்களும் இணைவதன் மூலமே உலகப் புரட்சி சாத்தியம் என்கிறார். உலக அளவில்
நாகராசன் முன்பே அறிமுகம் ஆகியிருக்கவேண்டும். அந்த அளவுக்கு அவரது மார்க்சியம்
இன்றைய உலகுக்குத் தேவை. எனக்கு மட்டுமல்லாமல் எத்தனையோ பேருக்கு நாகராசன்தான்
மார்க்சிய ஆசான். 

தீராநதி : மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தமிழகத்தின் அறிவுத்தளத்தில் ஒரு
முக்கியமான ஆளுமை. மார்க்சியத்திற்கும் பிற துறைகளுக்கும் அவர் பங்களிப்பு என்ன
என்பது குறித்து அவருக்கு நெருக்கமான நண்பர் என்ற முறையில் உங்கள்
மதிப்பீடென்ன? 

கோவை ஞானி : கோவை வட்டாரத்தில் 1965-க்குப் பிறகு எஸ்.என். நாகராசன் அறிமுகமான
அதே காலத்தில்தான் எஸ்.வி.ஆர். எங்களுக்கு அறிமுகமானார். `புதிய தலைமுறை’
இதழ்மூலம் நாங்கள் இணைந்திருந்தோம். மார்க்சியம் என்று மட்டுமல்லாமல் தமிழில்
நவீன இலக்கியம் மேற்குலகின் ஆங்கிலம் வழியே சேர்ந்த இலக்கியம், வரலாறு. இதேபோல
இரஷிய இலக்கியம். சீன இலக்கியம் என்று கல்லூரி மாணவர்களைப் போல `விழுந்து
விழுந்து’ படித்தோம். இயக்கத்தோடும் இணைந்திருந்தோம். நாகராசன் மூலம் நாங்கள்
கற்றுக்கொண்ட அந்நியமாதல் குறித்து எஸ்.வி.ஆர். விரிவான நூல் ஒன்றை எழுதினார்.
எழுத்து வன்மை எஸ்.வி.ஆருக்கு இயல்பானது. திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து
வந்தவர் எனினும் மார்க்சியத்திற்கு அவர் முழுமையாக வசப்பட்டார். வியட்நாம்,
சேகுவேரா என்று ஆவேசமாக அவர் பேசுவார். கல்லூரிக் கல்வி அவருக்கு இல்லை எனினும்
அரசுப் பணியில் அவர் ஈடுபட்டிருந்ததன் விளைவாக ஆங்கிலத்தில் எழுத்து
வன்மையையும் பெற்றிருந்தார். சென்னையிலிருந்த க்ரியா, கசடதபற, பிரக்ஞை
நண்பர்களோடு அவர் ஆழமான உறவு கொண்டிருந்தார். அவர்களோடு விவாதித்தார்.
இருத்தலியல் குறித்து `கசடதபற’ நண்பர்கள் பெரும் ஈடுபாட்டோடு பேசியபொழுது
எஸ்.வி.ஆரும், நானும் இருத்தலியல் பற்றி 50-க்கும் மேற்பட்ட நூல்களைச்
சேகரித்து ஆழ்ந்து கற்றோம். இருத்தலியல் குறித்து மார்க்சிய நோக்கில் தெளிவு
பெற்ற நிலையில் அற்புதமான நூல் ஒன்றை (எக்ஸிஸ்டென்ஷியலிசம்) எழுதினார்.
சல்சனிட்சன் குறித்து பிரக்ஞையில் எழுதினார். எஸ்.வி.ஆரின் நட்பு வட்டாரம்
தமிழகத்திற்கு வெளியிலும் உலக அளவில் விரிவுடையது. 

ஆங்கிலம், தமிழ் என்று பலதுறை நூல்களை நண்பர்கள் மூலம் சேகரித்து விரிவாக அவர்
கற்பார். நாடகம் பற்றிய வெங்கட்சாமிநாதன் நூலுக்கு அவர் அக்காலத்திலேயே விரிவான
முன்னுரை எழுதினார். இதன்பிறகு அவர் சென்னைக்குக் குடியேறினார். அவரது
எழுத்துப்பணிகள், இயக்கப்பணிகள் விரிவு பெற்றன. புரட்சிகர மார்க்சிய
இயக்கத்தினரோடு அவர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். தருமபுரி, திருப்பத்தூர்
போன்ற ஊர்களில் என்கவுன்ட்டர் என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட
நிலையில் உச்சநீதி மன்றத்தில் அவர் வழக்குத் தாக்கல் செய்தார். கட்சியினரோடு,
இயக்கத்தவரோடு அவர் கொண்டிருந்த அனுபவங்கள் வெகு நுட்பமானவை மட்டுமல்ல;
கசப்பானவையும்தான். 

நாகராசன் ஓரிடத்தில் நிற்கமாட்டார். அலைவார். எஸ்.வி.ஆர். எந்த இடத்திலும்
நின்று எதனையும் எதிர்கொள்வார். செய்து முடிக்காமல் ஓயமாட்டார்.
ரஷ்யப்புரட்சி - முன்னும், பின்னும் ரஷ்ய இலக்கிய உலகில் என்னவெல்லாம் நடந்தன
என்பது பற்றி `ரஷ்யப் புரட்சி - இலக்கிய சாட்சியம்’ என்ற ஒரு அற்புதமான நூலை
எஸ்.வி.ஆர். எழுதினார். அவரது படிப்பறிவின் விரிவை அறிந்துகொள்ள இந்த ஒரு நூலே
போதும். மார்க்சியம் குறித்து ஜார்ஜ் தாமஸ் எழுதிய 3 நூல்களை எஸ்.வி.ஆர். மிகச்
சிறப்பாக மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் அவரது ஆழ்ந்த கவனத்திற்கு
ஈடுசொல்லமுடியாது. மொழியாக்கம் செய்யும் நூலில் இடம்பெறும் கோட்பாடுகள் பிற
நூலாசிரியர்கள் முதலியவை குறித்து விரிவான அடிக்குறிப்புகள் தராமல்
இருக்கமாட்டார். கட்சி மார்க்சியர் புறக்கணித்த மார்க்சிய பேரறிஞர்களில் ஒருவர்
கிராம்சி. கிராம்சியின் எழுத்துக்கள் சிக்கலானவை. ஒரு சவால் போலத்தான்
கிராம்சியைப் படித்து எழுதமுடியும். கிராம்சி குறித்து முழு நூலொன்றை
எஸ்.வி.ஆர். எழுதினார். இருத்தலியல் பற்றி நாங்கள் படித்த காலத்தில்
எங்களுக்குப் பெரும் தலைவலியாய் இருந்தவர் சார்த்தர். சார்த்தருடைய நூல்களோடு
போராடி, பின்னர் அவர் விரிவான நூலொன்றை எழுதினார். 

80-களில் அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலியவை குறித்து பெரும் விவாதங்கள்
நடந்தபோது அல்தூசர் பற்றியும், ஃப்ராங்பர்ட் மார்க்சியம் குறித்தும் நூல்
எழுதினார். ஸ்டாலின் காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர் மீது
எஸ்.வி.ஆருக்கு எப்பொழுதுமே அக்கறை அதிகம். (கட்சி மார்க்சியரால் இவரும்தான்
பாதிக்கப்பட்டவர்) அண்ணா அகம்தோவா கவிதைகள் நேர்த்தியானவை. அவரது கவிதைகளை
மொழிபெயர்த்தார். இன்னொரு சமயம் மாவோவின் கவிதைகள் மொழிபெயர்ப்பையும் செய்தார்.
எப்பொழுதெல்லாம் புரட்சியாளர்களின் கவிதைகள் கைக்குக் கிடைக்குமோ அப்பொழுது
எல்லாம் சேகரிப்பவர் எஸ்.வி.ஆர். 

தொடக்கம் முதலே எஸ்.வி.ஆருக்கு பெரியாரியத்தின் மேல் ஆழ்ந்த பற்று உண்டு.
பெரியாரை ஒதுக்கிவிட்டு இன்றைய தமிழ்ச் சமுதாயத்தைப் பார்க்கமுடியாது.
பெரியாரியம் குறித்தும் ஆய்வுகள் தொடர்ந்து வெளிவருகின்றன. வெளிநாட்டவரும்
செய்கின்றனர். பெரியாரின் வாழ்வும், பணியும் குறித்து எஸ்.வி.ஆரும்., கீதாவும்
இணைந்து வெளியிட்ட ஆய்வு நூல்கள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இதற்காக
அவர் ஏராளமான ஆதாரங்களைச் சேகரித்தார். ஆங்கிலத்திலும் அவர் எழுதினார்.
பெரியாரியம் குறித்த எஸ்.வி.ஆரின் ஆய்வுக்கு இணை சொல்லமுடியாது. எந்த ஒரு
சமயத்திலும் மார்க்சியத்திலிருந்து விலகி பெரியாரைப் பற்றியோ, இன்னொருவரையோ
இவர் எழுதவில்லை. பெரியாரியம் குறித்து எழுதிய அதே காலத்தில் தலித்தியம்
குறித்தும் நிறைய எழுதினார். பெரியாரியத்தை தலித்தியம் பற்றி எழுதும் சிலர்
குறைத்து எழுதியதை இவர் மறுத்தார். தலித்தியம் பற்றி எழுதும்போதே
மார்க்சியத்தைக் குறித்து எழுதுவதும் இவருக்கு முரண்பாடில்லை. இது குறித்தும்
அவர் எழுதினார். எஸ்.வி.ஆரை தமிழகத்தின் இன்னொரு சாமிநாத சர்மா என்று சொல்வது
போதாது. அவரை மதிப்பீடு செய்வதும் எனக்கு சாத்தியமில்லை. அவரது படிப்பறிவும்
உலக அளவிலான அரசியல் பற்றிய அறிவுத் தெளிவும், எனக்கில்லை. தொட்ட எது
குறித்தும்நூல்கள், இதழ்கள், இணையதளம் என்று தேடித் தேடி விரிவாக அவர்
இன்றைக்கும் எழுதி வருகிறார். அவரைத் தொடர்வதும் எனக்கு சாத்தியமில்லை. தன்
வரலாறு குறித்து அவரே எழுதி வைக்கவேண்டும். இது என் பேராசை. 

தீராநதி : தமிழ் இனப் படுகொலைக்கு சீனா இலங்கைக்குச் செய்துவரும் உதவியைப்
பற்றி இங்குள்ள மார்க்சியவாதிகள் வாயைத் திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு
உங்கள் பதில் என்ன? 

கோவை ஞானி : ஈழத்தில் நடைபெறுவது இனப்படுகொலைதான் என்பதை இப்பொழுது அனைவரும்
ஒப்புக்கொண்டுதான் பேசுகிறோம். இந்தப் படுகொலைக்கு சீனா மட்டும்தான் உதவி
செய்கிறது என்பதுமில்லை. இந்தியாவும்தான் உதவி செய்கிறது. சிங்கள அரசு செய்யும்
இந்தப் படுகொலையை இந்திய அரசுதான் ஊக்குவிக்கிறது. உதவி செய்கிறது. உலகமே
வேண்டாம் என்றாலும் சீக்கிரம் செய்து முடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது
இந்தியாதான் என்பதும் இப்பொழுது வெட்டவெளிச்சமாகி வருகிறது. சீனா ஏன் உதவி
செய்கிறது என்பது உங்கள் கேள்வி. சீனா ஒரு சோசலிச நாடாயிற்றே. எப்படி இதைச்
செய்யமுடியும் என்பது உங்கள் உணர்வு. திபெத் தன்னுரிமைக்காக நேரு காலம் முதலே
போராடி வருகிறது. நேருவும் வேறு வழியில்லாமல் திபெத்தின் மீது சீனாவுக்கு
இறையாண்மை உண்டு என்று ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சிக்கல்
இன்னும் கடுமையாக இருக்கும். திபெத் மக்களுக்கு ஒரு தேசிய இனம் என்ற முறையில்
இறையாண்மை உண்டு என்பது பற்றி இப்பொழுது நம்மால் பேசமுடியும். சச்சனியா மீது
ரஷ்யாவும்தான் கடுமையான போர் நடத்தியது என்பதையும் நாம் மறக்கவில்லை. சோசலிசம்
என்பதன் எச்சம் ஏதேனும் இவர்களிடம் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள
வேண்டும். அண்மையில் இலங்கையின் பொருளியலுக்குள் இந்திய முதலாளிகளின் ஊடுருவல்
மிகக் கடுமையாகஅதிகரித்துக்கொண்டு வருகிறது. சீனாவும் இதைச் செய்கிறது.
இலங்கைத் தீவில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து பொருளியல் அதிகாரம் தொடர்ந்து
பறிபோய்க்கொண்டு இருக்கிறது. விடுதலைப்புலிகள் மீது போர் என்று தொடங்கி
தமிழினத்தையே அழித்தாகவேண்டுமென்ற வெறி அவர்களைப் பிடித்தாட்டுகிறது. இதற்காக
அவர்கள் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தம் பொருளியல் அதிகாரத்தை
விட்டுக்கொடுக்கிறார்கள். இலங்கைத் தீவின் பொருளியல் அதிகாரம் இப்படி அந்நியர்
கைகளுக்குள் செல்லும் நிலையில் சிங்கள மக்களுக்கு என்ன மிஞ்சும்.
இராணுவம்தான்சிங்கள அரசியல்வாதிகளை இப்பொழுது ஆட்டி வைக்கிறது. இராணுவ வெறிக்கு
எல்லைகள் கிடையாது. கொலைவெறி இறுதியில் அவர்களை மனிதத் தரத்திலிருந்து கீழே
தள்ளும். தமிழனை ஒழித்துவிட்டு அப்புறம் அவர்கள் சிங்கள மக்கள் தங்களைத்
தாங்களே கொன்று தீர்ப்பார்கள். 

மேலும் ஒன்று, தென்கிழக்கு ஆசியப்பகுதியில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு
இந்தியா தானும் ஒரு வல்லரசு என்று  தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முறையில்
சிங்கள அரசுக்கு அவன் கேட்டும், கேட்காமலும் உதவி செய்கிறது. இந்தியாவைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக சீனா இலங்கைக்கு வருகிறது. இலங்கைத் தீவின்
துறைமுகங்கள் சிலவற்றை சீனா கட்டிக்கொண்டிருக்கிறது. எப்பொழுதாவது
இந்தியாவுக்கும், சீனாவுக்குமான போர் மூளும்போது என்னவெல்லாம் நேரும் என்று
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்தியாவின் மைய அரசு, இந்தியாவின்
அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த விதியை ஆதாரமாகக் கொண்டு இந்தப் போரை
நடத்துகிறது. குறைந்த அளவு பாராளுமன்றத்திற்காவது அரசு தன் நோக்கத்தைத்
தெளிவுபடுத்தியதா என்றெல்லாம் இங்குள்ள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பவில்லை.
கட்சி மார்க்சியரிடம் எந்தக் கேள்விக்குத்தான் விடை கிடைக்கும். 

தீராநதி : ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ  ஜக்கிவாசுதேவ், ரவிசங்கர்
மற்றும்நித்யானந்தர் முதலியவர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? 

கோவை ஞானி : `கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’, `நானும், கடவுளும்
நாற்பதாண்டுகளும்’ ஆகிய எனது நூல்களைப் படித்தவர்கள் ஓரளவுக்கேனும் என்
சிந்தனைப் போக்கை புரிந்துகொள்ளமுடியும். கடவுள் என்பதை ஜே.கே. முதலிய அனைவரும்
மறுத்துவிட்டு, கடவுள் தன்மை என்பது பற்றித்தான் பேசுகிறார்கள். இவர்களைப்
படிக்கும்பொழுது இன்னும் இவர்களுக்குள் மதம் என்பதன் எச்சம் இருக்கிறதோ என்று
நான் எண்ணிக் கொள்வேன். எனக்குள்ளும் இப்படி இருக்கக்கூடும். சமயம், கடவுள்
ஆகியவற்றை ஆழமாகவும், சரியாகவும் புரிந்துகொள்ள நான் பலஆண்டுகள்
செலவிட்டிருக்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு பேரியக்கம், இயற்கை, உலகம்,
உயிர்கள், தாவரங்கள், நீர், நிலம், காற்று முதலியவை மாபெரும் பிரபஞ்ச
இயக்கத்தின் பிரிக்கமுடியாத கூறுகள். இந்தப் பேரியக்கத்தினுள்தான் நாமும்
இருக்கிறோம். பிரபஞ்சம், இயற்கை முதலியவை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை.
மாறிக்கொண்டும், மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டும் இருப்பவை. இந்தப் பேரியக்கம்
நமக்குள்ளும் இருக்கிறது. நமக்குள்ளும் பேரியக்கம் என்ற படைப்பியக்கம்
இயங்குகிறது. படைப்பில்லாமல், இயக்கமில்லாமல் நாம் இல்லை. பிரபஞ்சம், இயற்கை,
வரலாறு முதலியவற்றை எந்த அளவுக்கு நாம் அனுமதிக்கிறோமோ, எந்த அளவுக்கு இவற்றின்
விரிவுக்கும், ஆக்கத்திற்கும் இடம் தருகிறோமோ, எந்த இடத்தில் எந்தக் கணத்தில்
தான் என்ற உணர்வு அற்றுப் போகிறதோ, அந்த அளவுக்கு பிரபஞ்சம் என்ற
பேரியக்கத்துடன் நாம் கரைந்து விடுகிறோம். தன்னலமற்றவர்களாக, தற்செருக்கு
அற்றவர்களாக மாறுகிறோம். நம் அறிவு, ஆற்றல் ஆகியவை இயற்கையிலிருந்து
சமூகத்திலிருந்து நாம் பெற்றவை. இவற்றுக்கு தனி மனிதன் என்ற முறையில் நாம்
உரிமை கொண்டாட முடியாது. பிரபஞ்சம் என்ற இதுவரை நான் விவரித்த இந்த
பேரியக்கத்திற்கு முன்னோர்கள் வைத்த பெயர் கடவுள். இமயமலையிலிருந்து ஒரு சிறு
கல்லைப் பெயர்த்து இது கடவுள் என்று சொல்வது மாதிரி, இது ஒரு வகையில்
 ...
download full message