Thursday, February 28, 2019

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்

அகரமுதல

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3

மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரைச் சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை.
மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் ‘இலெமூரியா’ என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது ‘இலெமூர்’ என்ற குரங்கின் பெயர்தான் என்பதை நோக்கும் போது பிற்காலத்தில் மனித இனத்தின் மூதாதையர் குரங்குதான் என்று  தார்வின் என்ற மேனாட்டு மாந்தவியல் அறிஞனின் கூற்று ஒத்துப் போவதை உணரலாம்.
 வனவியல் என்பது தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், நுண்ணுயிரியல். இயற்கையின் சூழலியல் சுற்றுப்புறவியல் எனப் பல்கிபெருகிய அனைத்தையும் உள்ளடக்கிய ‘பேரியல்’ என்பதே! இதை மனத்தில் நிறுத்தினால் அதில் உள்ளடங்கிய தாவரவியலையும் விலங்கியலையும் பறவையியலையும் சேர்ந்த ஒரு சில செய்திகளைக்  கீழ்வருமாறு நுகரலாம்.
தலைவி உயிருக்கும் தலைவன் உயிருக்கும் கூற்றுவனாக ஒரு மதங்கொண்ட யானை வந்தது என்றும் அதிலிருந்து விடுபடமுடியாமல் தவித்த நிகழ்வைத் தோழி உரைப்பதாகவும் வரும் செய்தியில் உள்ளீடாக மேற்கண்ட இருவரின் நிலையும் என்னவாகுமோ என்ற அச்சநிலை உச்சம் பெறுகிறது. இதனை

‘‘காரிப் பெயல் உருமின் பிளிறி சீர்த்தக
இரும்பிணர் தடக்கை இருநிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம்கொப்பு
மையம் வேழம் மடங்களி;ன் எதிர்தர
உய்வுஇடம் அறியேம்ஆகி ஓய்வென
திருந்துகோர் எவ்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற்பொருந்தி
சூர்வறு மஞ்ஞையின் நடுங்க. . . 
என்ற குறிஞ்சிப்பாட்டு உணர்த்தும் விதத்தில் மதம் கொண்ட வேழத்தின் பிளிறவையும் அது செய்யும் ஆர்ப்பாட்டமான செயல்களையும் ஓவியம் போல் காணலாம். யானையின் செயல்கள், அரிமாவின் பார்வை, மயிலின் சாயல் என்ற பன்முகத்தன்மையை தெள்ளிதின் உணரலாம். புனைவியல் காட்சி எனினும் நடப்பியல் நிகழ்வை நாம் அகப்பார்வையில் காணுமாறு வைத்துள்ளதை எண்ணி எண்ணி மகிழலாம்.
அதுபோலவே தலைவன் தலைவியைத் தேடிவரும் நிகழ்வில் எதிர்ப்படும் பகையின் வகைகளை கூறிடும்போது, இரவிலே தலைவன் வருகின்றான். நீர்நிலைகளில் நீந்திவரும் சூழலில் ஆங்கே முதலைகள் இருக்கின்றன. அதைத்தாண்டி வரும்போது விலங்குகளின் பகை என அடுத்தடுத்துப் பகைதனைச் சந்திக்கும் போது தலைவனுக்கு என்ன ஆகுமோ? ஏதேனும் உயிருக்கு இறுதி ஆகிடுமோ? என எண்ணித் தோழி உணர்த்தும் பாங்கு நமக்கு சேர்த்தே சொல்லியது போல உள்ளது. அதனை,
‘‘ . . . . . . கங்குல்
அளைசெரிப உழுவையும் ஆளியும் உளியமும்
புழற்கேட்டு ஆமான்புகல்வியும் களிறும்
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும் சூரும் இரைதேர் அரவமும்
ஒடுங்கு இரும் குட்டத்து அருஞ்சுழிவழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்களும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ்அடி முட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழுமலை விடரகம் உடைய. . . . “
என்று இயம்பிடும் போது நாமும் திகைக்கிறோம்.

உயிரினங்களில் சிற்றினமாக உள்ளவற்றின் பெருமையினைப் பேசவந்த புலவன் , ‘‘இடியோசை முரசு அதிர்வுடன் கேட்கிறது. யாழ் இசைக்கு வண்டின் ஓசை (ரீங்காரம்) உவமையாக கூறும் வழக்கம் எனினும் அழகுமிளிரும் வரிகளை யாழ்போல் ஆரவாரிக்கின்றது”  எனக் காட்சியாக்கியதையும் வண்டுகளில் ஆண் இனமும் பெண் இனமும் புணர்ச்சிவிரும்பி “இம்மென” இமிருவது போன்றதுதான் ‘யாழிசை’ என்னும் நுட்பத்தை நுணுக்கமாக கூறிடும் காட்சியையும்,

‘‘நைவளம் பழுநில பாலை வல்லோன்
கைகவர் நரம்பின் இம்மென இமிரும்
மாதர் வண்டொடு கரும்பு நயத்து இறுத்த
என்று கலித்தொகை இயம்புகிறது.
ஒரு மாலைப்பொழுது அந்தி மயங்கிய நேரம். அப்போது மான் கூட்டம் மரச்செறிவுப் பகுதியில் திரளப், பசுக்கூட்டம் பல்வகையில் திரள, அன்றில் பறவை தன் குரலில் கூவ, நாகப்பாம்பு தனது நாகமணியின் ஒளியை உமிழ, ஆம்பல்மலர் தனது அழகிய இதழ்களைக் கூம்பச்செய்திட, ஆம்பல் அம் தீம் குழல் மூலம் நல்லிசை மீட்ட, வனமனையில் உள்ள பெண்டிர்கள் விளக்கை ஏற்றிவைத்து ஒளிவெள்ளம் பாய்ச்சத், தீக்கடைக்கோல் கொண்டு தீ மூட்ட மேகங்கள் திரண்டு வந்து இடியென வல்லோசையுடன் கூடிய கானம்பாட, புள்ளினம் ஆர்ப்பரித்துக் குரலிசைக்க என்று மாலைக் காட்சியை ஒரு எழில்மிகு ஓவியம் போல் தீட்டியுள்ளது போல் விவரித்துள்ளதை,

‘‘மான் கணம் மரமுதல் தெவிட்ட ஆண்கணம்
கன்றுபயிர் குரலமன்று நிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்கு இரும்பெண்ணை அகமடல் அகவ
பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பல்அம் தீம்குழல் தெளிவிளிபயிற்ற
ஆம்பல் ஆடப் இதழ் கூம்புவிட வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண்தோள் பணவைமிசை ஞெகிழி பொத்த
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்பகானம்
கல்லென்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப

என்று கலித்தொகை கழறும் காட்சிப்படிமத்தில் நாம் சொக்கிப் போகிறோம். இதில் கூறப்பட்டுள்ள அனைத்து வரிகளிலும் இயற்கையின் சமன்பாடும் பேரழகம் தெள்ளிதின் ஒளிவிட்டாலும் ‘‘பாம்பு மணி உமிழ” எனும் வரியில் தற்கால அறிவியல் உண்மை அந்தகமாகி உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாகப்பாம்பு மணியை உமிழாது என்பதே உண்மையானது.

கானகத்தின் பேரினமான யானைகள் உள்நுழையும் அளவுக்கு உள்ள பெரிய மலையைப் பகுத்தாற்போல அழகும் எழிலும் பொருந்திய நிலையுடன் கூடிய கதவுகளை உடைய மிகப்பெரிய அரண்மனையின் நுழைவு வாசல் வழியாக உள் நுழைந்தால் மிக அழகிய முன்றில் காணப்படுகின்றது.
அம்முற்றத்தில் மயிர் நீப்பின் வாழாக் கவரிமானும் நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னமும் துள்ளித் திரிகின்றன என்ற காட்சியைப்படம் பிடித்துக்காட்டும் பாடலை,

‘‘திருநிலை பெற்ற தீதுநீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை

என்ற நெடுநல்வாடை காட்டும். இதில் கூறப்பட்டுள்ள இரண்டு விதமான நிகழ்வுகளாக உள்ள, அஃதாவது கவரிமானும் அன்னமும் துள்ளிவிளையாடும் நிகழ்வில் அறிவியல் உண்மை ஏதும் இல்லை என்று இன்றைய அறிவியல் சொல்லும். இதில் சொல்லப்படும் விலங்கான ‘கவரிமான்’ என்ற விலங்கு இம்மண்ணில் இல்லை. ‘கவரிமா’ என்ற விலங்குமட்டும் உண்டுகவரிமான்என்று எந்த வித மான் இனத்திலும் இல்லை என்பதே விலங்கியலாளர்கள் கூறும் ஆய்வுச்செய்தி. எல்லா உரையாசிரியர்களும் புனைவுடன் கூடிய செய்தியாகப் பதிவிட்டுள்ளதாக இலக்கிய உலகம்பற்றி அறிவியல் உலகம் சொல்கிறது. அதுபோலவே அன்னப்பறவையான தண்ணீரில் கலந்துள்ள பாலை பிரித்து உண்ணும் என்ற செய்தியிலும் அறிவியல் உண்மை இல்லை என்பதே பறவையியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும். இருப்பினும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வில் வந்து போகும் அன்னத்தையும் கவரிமானையும் இலக்கியச் சுவை கருதி மனத்தில் இன்பமுடன் அசைபோடலாம்.
(தொடரும்)
அரவரசன்வனச் சரக அலுவலர்(ப.நி.)தேவக்கோட்டை
– சிறகு, பிப்., 23.02.2019

Tuesday, February 26, 2019

பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ – முனைவர் பா. இரா. சுப்பிரமணியன்

அகரமுதல

பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ முனைவர் பா. இரா. சுப்பிரமணியன்

அணிந்துரை

முனைவர் அ.செந்தில்நாராயணன் சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்மொழித் துறையில் முனைவர்ப்பட்ட ஆய்வாளராக இருந்தபோதும், பின்னர் எங்கள் மொழி அறக்கட்டளையின் தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதித் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியபோதும் தமிழ் இலக்கண ஆய்வில் அவர் காட்டிய ஆரவாரம் இல்லாத ஆர்வத்தின் அழுத்தத்தை உணர்ந்திருக்கிறேன். அழுத்தம் இல்லாத ஆர்வம் நீர்க்குமிழிபோல் கண நேரத்தில் காணாமல்போய்விடக் கூடியது. செந்தில் நாராயணனின் நிலைத்த, அழுத்தமான ஆர்வத்தின் வெளிப்பாடாகத்தான் தொல்காப்பிய உரைகள் என்னும் இந்த நூலைக் காண்கிறேன்.
தொல்காப்பியத்திற்கு எழுந்த உரைகளுள் முதலாவது இளம்பூரணரின் உரை. தொல்காப்பியத்திற்கும் இளம்பூரணரின் உரைக்கும் குறைந்தது 1200 ஆண்டு கால இடைவெளி இருக்கிறது. இந்த நீண்ட கால இடைவெளியில் இலக்கண ஆர்வலர்களிடையே அல்லது சமணத் தமிழ்த் துறவிகளிடையே தொல்காப்பியப் பயிற்சி இருந்திருக்க வேண்டும். அந்தப் பயிற்சியில் மறுப்பும் மறுப்பிற்கு மறுப்பும் இருந்திருக்காது என்று தோன்றுகிறது. செந்தில் நாராயணன் இளம்பூரணர் உரையைப் பற்றி ஓரிடத்தில் “இளம்பூரணர் உரையில் எவ்வித மறுப்புகளும் இல்லை” (பக். 55) என்று குறிப்பிடுவது கவனத்தைக் கவர்கிறது.
தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் கிடைத்திருக்கும் உரைகளில் பரவி, விரவிக் கிடக்கும் இலக்கணச் செய்திகள் அருமையானவை. அவற்றை எல்லாம் ஒருசேரக் காணக்கூடிய அரிய வாய்ப்பினை செந்தில் நாராயணன் ஐந்து தலைப்புகளில் திரட்டித் தந்திருக்கிறார். அந்த ஐந்து தலைப்புகளுள் ‘சொற்பொருள் விவரிப்பு’ என்பதும், ‘சொற்பொருள் விவரிப்பு-உத்திகள்’ என்பதும் அகராதி உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், பொதுவாகச் சொற்பொருள் குறித்து ஆய்பவர்களுக்கும் சிந்தனையைக் கிளறும் பல தகவல்களைக் கொண்டுள்ளன. நூலின் இறுதியில் உரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்பொருள் விளக்கங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சிலவற்றை இங்குக் காட்ட விரும்புகிறேன்.
அந்தப் பட்டியலிலிருந்து ஒரு தொகுப்பாக உள்ள சொற்களுக்கு உரையாசிரியர்கள் பொருள் தரும் முறை அல்லது வரையறை செய்வது இன்றைய அகராதியியலாளர்கள் பின்பற்றப் பரிந்துரைக்கும் முறையாக உள்ளது.
      மாலை – இராப்பொழுதின் முற்கூறு
      யாமம் – இராப்பொழுதின் நடுக்கூறு
      வைகறை – இராப்பொழுதின் பிற்கூறு
      விடியல் – பகற்பொழுதின் முற்கூறு
இவை அனைத்தும் இளம்பூரணரின் பொருள் விளக்க முறை. முன் பகுதி, பின் பகுதி என்னும் இரண்டை அடிப்படையாக்கி, இரவிற்கு மூன்றும் பகலிற்கு ஒன்றுமாகப் பிரித்து ஒரு வகை-மாதிரியில் பொருள் தந்திருக்கும் முறை சுருக்கமானது, குழப்பத்தைத தவிர்ப்பது. இன்றைய அகராதிகளில் காணப்படும்
      ஞாயிறு – வாரத்தின் முதல் நாள்
      திங்கள் – வாரத்தின் இரண்டாவது நாள்
என வார நாட்களுக்கு எண்ணிட்டு விளக்கும் முறையை நாம் இளம்பூரணரிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கற்றுக்கொண்டிருக்க வேண்டிய வகை-மாதிரி அவரிடம் உள்ளது.
‘உணவு’ என்பதற்கு உரையாசிரியர் சேனாவரையர் தரும் விளக்கத்தைப் பார்க்கலாம்.
      உணவு – பசிப் பிணி தீர நுகரப்படும் பொருள்
பசியைப் பிணியாகக் கருதியிருக்கிறார், சேனாவரையர். பிணியை நோயாகக் கருதாமல் பசியால் ஏற்படும் வேதனை என எடுத்துக்கொண்டால், அந்த வேதனை தீர்வதற்காக உட்கொள்வது எல்லாம் உணவு என்பது சேனாவரையர் கருத்து.
‘கற்பு’ என்பதற்கு உரையாசிரியர் இருவர் விளக்கம் தந்துள்ளனர். நச்சினார்க்கினியர் இரண்டு இடங்களில் விளக்கியிருக்கிறார்.
      “கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கம்”
      “தன் கணவனைத் தன் தெய்வம் என்று உணர்வதொரு மேற்கோள்” (மேற்கோள் = உறுதி)
நச்சினார்க்கினியர் கணவன்–மனைவி என்னும் உறவு வட்டத்திற்குள் கணவனின் மேன்மையை நிலைநிறுத்துகிறார்.
ஆனால் முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர்
                  “மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்வு”
எனக் கணவன்–மனைவி, மேன்மை-பணிவு என்னும் வட்டங்களுக்குள் கற்பை வைக்கவில்லை. பெண்களின் மனதில் மாந்தரைக் காண்கையில் உண்டாகும் நிகழ்வு என ஓரு புதிய கோணத்தில் பார்க்கிறார். இளம்பூரணர் இவ்வாறு கூறியதன் காரணம் புலப்படவில்லை. எனவே மேலும் ஆய்விற்கு உரியது.
உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளும், அவர்களின் சமயச் சார்பும் அவர்கள் தரும் பொருள் விளக்கங்களில் ஒளிராமல் இல்லை. பொருளதிகாரத்தில் பேராசிரியர்
                  உயர்ந்தோர் – அந்தணரும் அவர் போலும் அறிவுடையோரும்
என விளக்கம் தந்திருப்பது அவர் காலத்தில் அந்தணரைக் குறித்த சமூக மதிப்பீடு.
இளம்பூரணர் பாங்கன் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கமும் சமூக மதிப்பீடு சார்ந்ததாகவே உள்ளது.
                  பாங்கன் – ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன்
அவரே பார்ப்பான் என்பதற்கு
                  பார்ப்பான் – உயர் குலத்தானாகிய தோழன்
என்று கூறுகிறார். யார் இழிகுலத்தானாகிய தோழன் என்று கருதப்பட்டனர் என்பதை பிற்சேர்க்கையில் உள்ள பட்டியலிலிருந்து அறிய முடியவில்லை.
உரையாசிரியர்கள் சில சொற்களுக்குத் தந்துள்ள பொருள் விளக்கம் சற்றே வியப்புத் தருவதாகவும் உள்ளது.
                  ஈ – ஒரு பறவையின் பெயர்
தெய்வச்சிலையார் ஈயைப் பறவையாகக் குறித்திருப்பது சற்றே வியப்பானது. சிறகுகள் உடையதாக இருந்தாலும் பறவைக்குச் சிறந்த உதாரணமாகக் காட்டக்கூடிய காகம், புறா போன்றவற்றிவலிருந்து ‘ஈ’ பெரிதும் விலகிச் சென்றிருப்பதால் பறவை இனத்தைச் சார்ந்ததாக நாம் அதைக் கொள்வதில்லை.
தொல்காப்பிய இலக்கணக் கருத்துகளை உரையாசிரியர்கள் எவ்வாறு விளக்கியுள்ளனர் என்பதை நூலாசிரியர் ஐந்து இயல்களில் விளக்கியுள்ளார்.
      “… உரையாசிரியர்கள் நேர்த்தியான சில வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவையாவும் இந்நூலின் மூன்றாம் இயலுள் விளக்கப்பட்டுள்ளன”
என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த இயல் இலக்கண ஆய்வாளர்களின் கவனத்திற்கு உரியதாகிறது.
இறுதியாக, செந்தில் நாராயணனின் தொல்காப்பிய உரைகள் என்னும் இந்நூல் பல ஆய்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் இட்டுச்செல்லக் கூடிய தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. பல விரிவுகளுக்கு வழிவகுப்பதே இந்த நூலின் பலம். பலத்தைப் படித்துப் பார்த்து உணரவேண்டும். செந்தில் நாராயணனின்  முதல் நூல் அவர்க்கு வெற்றி தந்திருக்கிறது.
நூலின் விற்பனையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இந்தக் ‘கனமான’ இலக்கண ஆய்வு நூலை வெளியிட முன்வந்த சந்தியா நடராசனும் பாராட்டுக்கு உரியவர்.
சென்னை 18.05.2016                                  பா. இரா. சுப்பிரமணியன்
இயக்குநர்
மொழி அறக்கட்டளை
எண்: 27, 3 ஆவது கிழக்குத் தெரு
திருவான்மியூர், சென்னை – 600 041.
தொடர்பு எண் 044 24424166
மின்னஞ்சல்: mozhitrust@yahoo.com 

Friday, February 1, 2019

பாடுவேன் இவரை! – பேரறிஞர் அண்ணா

அகரமுதல

பாடுவேன் இவரை!
எவரைப் பாடமாட்டேன்?
வாழ்வின் சுவை தன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு, உடல் பெருத்து
ஊழியர் புடை சூழ
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேர் ஏறும்
அரசகுமாரர் அருளாலய அதிபர்
தமைக் குறித்து அல்ல.
பாடுவேன் இவரை
குடிமகனாய் உள்ளோன்
ஊர்சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்
தாங்கொணாப் பாரந்தன்னைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக் கூடத்து உழல்வோன்
ஏரடிப்போன்
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும் கண் கொண்டோன்
குளிர் கொட்ட மழை வாட்ட
குமுறிக் கிடந்தோர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை
இஃதே என் காவியம் காண்
– பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் (02/02)

உதவிய உள்ளங்கள் – பேரரசி முத்துக்குமார்

அகரமுதல

உதவிய உள்ளங்கள்
 “மணியாகி விட்டது. நிகழ்ச்சி முடிவதற்குள் போகணும்பா…..சீக்கிரம் வண்டியை ஓட்டுங்கள்……இல்லை என்றால் இசையரசி ஆசிரியர் என்னைத்தான் திட்டுவார்கள்,” என்று தமிழரசன் கூறினான்.
     “இரு…இரு…இது என்ன ‘ஃபார்முலா 1’ வண்டியா? வேகமாக போவதற்கு?” என்றார் அவன் அப்பா அமுதன்.
     திரு. அமுதன் ஊர்தி, சாலையில் போய்க் கொண்டிருந்தது.
அப்போது….
யாரோ வயதான மூதாட்டி ஒருவர் அவர்களின் ஊர்தியின் முன் மயக்கமாகி ‘தொப்’ என்று விழுந்தார். இருவரும் பயந்து விட்டனர். வாகனத்தை விட்டு இறங்கி அந்த மூதாட்டியின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த நீரைத் தெளித்தனர்.அவர்களைப் பார்த்து மீண்டும் மயக்கமடைந்தார். அவர் மீது சிராய்ப்புக் காயங்கள். அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது…
     ‘நேரமாகுதே! பாட்டியைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. என்ன செய்யலாம்?’ என்று சற்று  எண்ணினான்  தமிழரசன். இரக்கம் அவன் மனத்தில் வழிந்தோடியது.
   உடனே, அந்த மூதாட்டியைத் தன் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தார் தமிழரசன் அப்பா. அந்த மூதாட்டியின் சட்டைப் பையில் உள்ள கைப்பேசியை எடுத்து அந்த மூதாட்டியின் கணவருக்குத் தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறினார்
    அதன் பிறகு, அவன் பள்ளிக்கு வந்தடைந்தான். அவன் அப்பா அவனைப் பள்ளியில் இறக்கி விட்டுச் சென்றார். பள்ளி நுழைவாயிலில் அவன் ஆசிரியை, திருமதி இசையரசி முறைத்துக் கொண்டே அவனுக்காகக் காத்திருந்தார்.
“என்னடா இவ்வளவு நேரம்?” என்று கேட்டார்.
       உண்மையைச் சொன்னால் ஊர் சுற்றிவிட்டு மழுப்புகிறாயா எனக் கேட்பாரே என அஞ்சி  “அது வந்து…அது வந்தும்மா….,” என்று சொற்களை மென்று விழுங்கினான். அவன் அகன்ற நெற்றியில் முத்து முத்தாய் வியர்வையின் ஆதிக்கம்….பயத்தால் கால்கள் பரதநாட்டியம் ஆடின.
         “காரணம் சொல்கிறாயா இல்லை அரை வேண்டுமா?” என்று கையை ஓங்கினார் ஆசிரியர்.
திடீரென்று….
  ‘கிரிங்…கிரிங்…கிரிங்…கிரிங்…’ என்று அவரின் கைப்பேசி அலறியது. எடுத்தார். எதிர் முனையில் அவர் அப்பா.
          “நான்தான் அப்பா பேசுகிறேன். இசையரசி உனக்கு ஒன்று தெரியுமா? உன் அம்மா சந்தையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் சாலையில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள்.”
          “என்னப்பா சொல்கிறீர்கள்? அம்மா இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்? நல்லா இருக்கிறார்கள்தானே?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்.
    “நல்ல வேளை நாம் கும்பிடும் தெய்வம் நம்மைக் கை விடவில்லை. யாரோ இருவர் அவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்து  எனக்குத் தகவல் கொடுத்தார்கள். பெயர் கேட்டபோது, தமிழரசன் அவரோட அப்பா  அமுதன் என்றார்கள்.” என்று கூறினார்.
    ஆசிரியைக்குக் கையும் ஓடவில்லை…காலும் ஓடவில்லை….உடனே, தமிழரசனை இறுகப் பற்றிக் கொண்டு “ எதுவும் தீர விசாரிக்காமல் உன்னை அடித்திருப்பேன். என்னை மன்னித்துவிடு தமிழரசன்.  நீயும் உன் அப்பாவும் காப்பாற்றியது என் அம்மாவைத்தான். மிக்க நன்றி. என்றார்.
     “பரவாயில்லை அம்மா…,” என்று கூறியவாறே நிகழ்சியில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் தமிழரசன்.        
  நாளை, பள்ளியில் இவனும் இவன் அப்பாவும் செய்த தொண்டினை எல்லாரிடமும் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியபடியே ஆசிரியையும் வீடு திரும்பினார்.
  • பேரரசி முத்துக்குமார்
  • மாரா அறிவியல் கல்லூரி, பாரிட்டு பேராக்கு (parit perak, malaysia)