Friday, September 30, 2016

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி

தலைப்பு-பொய்தீர்ஒழுக்கம்-தி.வே.விசயலட்சுமி ; thalaippu_neritrhandhaay_vahzi_thi.ve.visayalatchumi

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25


 1. நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக்
கல்லார் அடையார் களிப்பு.

 1. அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும்
பண்பும் குறளால் பெறு.

23.  வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர்.
உள்ளுவர் நல்வினை ஓர்ந்து.

24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர்.
துன்பம்  தவிர்த்துவாழ் வார்.

25. வையத்து வாழ்வாங்கு  வாழ்ந்திடக் கற்றிடுவோம்
தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து.
தி.வே.விசயலட்சுமி : thi.ve.visayalatchumi
தி.வே.விசயலட்சுமி  
பேசி – 98415 93517

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்

தலைப்பு-நட்பிற்குள் அடங்கிற்று, கருமலைத்தமிழாழன் ; thaliappu_methini_natpu_karumalaithamizhazhan

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5


இந்தியாவில்   மட்டுமன்றி  பிரான்சு  நாட்டில்
இயங்குகின்ற   பேரவைதான்   அசாம்  தன்னில்
சந்தமிகு   துவக்கவிழா   காணு   கின்றோம்
சார்ந்திருக்கும்   மேகாலய   மாநி  லத்தில்
நந்தமுடன்   நாளையங்கே   துவக்கு  கின்றோம்
நன்றாகப்   பேரவைதான்   வளர்வ   தாலே
சிந்தனைகள்   ஒன்றாகி   உலக  மெல்லாம்
சிறப்பாக   நட்புறவோ   ஓங்கும்  நன்றாய் !

வெற்றுரைகள்   அமர்ந்துபேசி   கலைவ  தன்று
வேதனைகள்  தீர்க்கின்ற   செயல்கள்  செய்து
நற்றொண்டாய்   கல்விகற்க   இயலா   ஏழை
நலிந்தோர்க்குக்   கற்கபணம்   அள்ளித்   தந்தும்
உற்றநோயைத்   தீர்க்கதொகை   அள்ளித்   தந்தும்
உயர்வான  தொண்டுதனை   நாளும்   செய்து
மற்றபல   சங்கங்கள்   போல   வன்றி
மனிதநேயச்   சங்கமிந்த   பேனா   சங்கம் !


காழ்ப்பில்லா   நட்பிந்த   பேனா  நட்பு
கருணையுள்ள  நட்பிந்த   பேனா   நட்பு
வீழ்ந்திட்ட   மனிதத்தை   நெஞ்சிற்   குள்ளே
விளைவிக்கும்   நட்பிந்த   பேனா  நட்பு
வாழ்த்துகளை   மறக்காமல்  பிறந்த  நாளில்
வழங்குகின்ற   நட்பிந்த  பேனா  நட்பு
சூழ்ந்திட்ட   அன்பாலே   இன்ப  துன்பில்
சுற்றமாகும்   நட்பிந்த   பேனா  நட்பு !

ஆண்களொடு   பெண்களினை   நட்பாய்  ஆக்கும்
அறிஞரொடு   பாமரரை  நட்பாய்  ஆக்கும்
காண்கின்ற   இளைஞரினை   முதியோ   ரோடு
கருத்துகளைப்   பகிர்ந்துகொளும்  நட்பாய்  ஆக்கும்
கூன்மனத்தை  நிமிரவைத்து   விசால   மாக்கி
கூடிவாழும்   எண்ணத்தை  நமக்க  ளிக்க
வான்வழியில்   வந்துநமின்  வீட்டிற்   குள்ளே
வளர்க்கின்ற  நட்புதமை   வாழ்த்து  வோமே !
 • பாவலர் கருமலைத்தமிழாழன்
 • இந்தியப்  பேனா  நண்பர்  பேரவை கவியரங்கம்
  இடம் தமிழ்ச் சங்கக் கட்டடம், கௌகாத்தி (அசாம்) 
  ஆவணி 05, 2047 / 21 -08 – 2016

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 

– 1.27. ஒழுக்க முடைமை


தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

27. ஒழுக்க முடைமை
 1. ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே.
ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும்.
 1. அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர்.
அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர்.
 1. அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல்.
பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும்.
 1. இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல்.
பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும்.
 1. நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்.
அவர்களது எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாக விளங்கும்.
 1. மறநெறி விலக்கி யறநெறி செல்லல்.
அவர்கள் தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள்.
 1. தானுற வேண்டுவ வேனோர்க் களித்தல்.
அவர்கள் தான் பெறவேண்டும் என்று எண்ணுவதை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
 1. தன்னுயிர் போல மன்னுயிர்ப் பேணல்.
அவர்கள் தன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பார்கள்.
269.பகைசெய் தவரொடு நகைசெய் தளாவல்.
அவர்கள் பகைவர்களோடும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து பழகுவார்கள்.
 1. உயிரெலா மெய்யென வோர்ந்தவை யோம்பல்.
எல்லா உயிர்களும் இறைவனே என்று உணர்ந்து எல்லா உயிர்களுக்கும் மதிப்பு அளிப்பார்கள்.

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum