வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்
மெய்யறம்
மாணவரியல்
24. நன்றி யறிதல்
- நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி.
மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும்.
- உறவினர் முதலியோ ருதவுதல் கடனே.
உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும்.
- பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே.
பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை.
- உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல்.
துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும்.
- உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல்.
உதவியில் உயர்ந்தது பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவி ஆகும்.
- அறிதலெஞ் ஞான்று மதைநினைந் தொழுகல்.
நன்றி அறிதல் என்பது செய்த உதவியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்வது ஆகும்.
- உதவியோர் குடியெலா முயர்வுற வுள்ளல்.
நமக்கு உதவி செய்தவர் குடும்பத்துடன் உயர்வு பெற எண்ணுதல் நன்றி அறிதல் ஆகும்.
- உதவியோ ரறவுரை யுடனிறை வேற்றல்.
உதவி செய்தவர்களின் அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
- உதவியோர் மிகைசெயி னுடனதை மறத்தல்.
உதவி செய்தவர்கள் ஏதேனும் குற்றங்களைச் செய்தால் உடனடியாக அதை மறந்துவிடுதல் வேண்டும்.
240.அறிதற் களவுண் டுதவி சொலக்கெடும்.
உதவி பெற்றவர் உதவியைப் பற்றிப் பாராட்டிப் பேசலாம். ஆனால் உதவி செய்தவர் உதவியைப்பற்றிப் பேசுதல் கூடாது.
– வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment