Monday, December 31, 2018

தக்காரைப் போற்று! – மு.பொன்னவைக்கோ

அகரமுதல

தக்காரைப் போற்று!
தக்காரை நெஞ்சாரப்
            போற்ற வேண்டும் – ஆற்றல்
மிக்காரை அரியணையில்
            ஏற்ற வேண்டும்.
தமிழ் காக்கும் நல்லோரைக்
            காக்க வேண்டும் – அதுவே
தமிழ் வளர நாமாற்றும்
            சேவை யாகும்.
தமிழென்றும் தாழ்வின்றி
            தழைக்க வேண்டும் – அந்தத்
தமிழ்ச் சேவை செய்துஉயிர்
            வாழ வேண்டும்.
எக்காலும் இந்நோக்கில்
            மாற்றம் இன்றி – வாழ்வில்
ஏற்றமுடன் பணியாற்றும்
            ஆற்றல் வேண்டும்
என்றெம்மை ஈன்றவளை
            என்றும் போற்றி – தக்காரின்
ஈடில்லா அன்பிற்கு
            அடிமை யாவோம்!
முனைவர் பொறி. மு. பொன்னவைக்கோ

Wednesday, December 19, 2018

இனமானப் பேராசிரியர் வாழியவே!

அகரமுதல

இனமானப் பேராசிரியர் வாழியவே!


பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர்
அண்ணா  வழியில் அயரா உழைப்பினர்
கலைஞர்  போற்றிய புலமைச் சிறப்பினர்
திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி
அராவிடம் அனைய ஆரியம் கடிவோர்
உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று
மலையினும் திண்ணிய நிலையினர்
துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர்
வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித்
தூய்மை  துணிவு நேர்மை  துலங்கித்
தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும்
பேராசிரியப் பெருந்தகை வாழ்க!
உறவெலாம்  சிறக்க  கிளைஞர் தழைக்க
குடிவழி  ஓங்குக    உயர்வுடன்  பொலிக
நலமிகு வாழ்வும் நனிபொருள் வளமும்
கனவிலும் கருதாது கடமை ஆற்றிடும்
இனமானப் பேராசிரியர் இனிதே
ஊழி பல்லூழி ஒப்பிலா நலனுடன்
வாழிய வாழிய  வண்டமிழ் போலவே!
-மறைமலை இலக்குவனார்
விடுதலை 19.12.2018(பேரா.க.அன்பழகன் பிறந்த நாள்)


Tuesday, December 18, 2018

அகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா

அகரமுதல

 

அகநானூற்றில்  ஊர்கள் -7/7


வல்லம்
    மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும்.
                “……………..சோழர்
                வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை (அகநானூறு 336)
                “நெடுங்கதி நெல்லின் வல்லம்                                      (அகநானூறு  356)
நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன.
வாகை
      வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர் நடந்த இடம் நன்னனுடைய காவல் மரம் வாகையாகும். இது வாகை பறந்தலை என்று அழைக்கப்படுகிறது.
                “சூடா வாகை பறந்தலை, ஆடுபெற”                                              (அகநானூறு               125)
                “இடும்பொன் வாகைப்பெருந்துறைச் செலின்”   (அகநானூறு 199)
வாகையின் சிறப்பு இதனால் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியலூர்
                நன்னன் என்ற குறுகிய மன்னனின் ஊர். வயலைக் கொடி படர்ந்த வேலிகளையுடைய வியரினை,
                “…………………….நன்னன் வேண்மான்
                வயலை வேலி வியலூர் அன்ன நின்”                                         (அகநானூறு 97)
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.
விளங்கில்
      பாலை நிலத்தின் சிறப்பு மிக்க ஊர். வெப்பம் மிகுதியான ஊராக காணப்படும். வள்ளன்மை மிக்க கடலன் என்ற குறுநில மன்னனின் ஊர் விளங்கில் என்பதை,
                மாவன் கடலன் விளங்கில் அன்ன எம்                (அகநானூறு  81)
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரை
                வேளிர் என்ற மன்னனின் ஊர். வீரை என்பது பட்டினமாகும் இங்க உப்பு குவிய நிறைந்திருக்கும்.
                அடுபோர் வேளிர் வீரை முன்துரை                         (அகநானூறு 206)
என்று வீரையின் சிறப்பு அறியப்படுகிறது.
வெளியம்
        வானவரம்பனின் வெளியம் எனும் ஊர் மாண்நலம் மிக்க ஊராகும்.
                வானவரம்பன் வெளியத்து அன்ன நம்                              (அகநானூறு 359)
என்று வானவரம்பனின் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வேம்பி
    முசுண்டன் என்ற குறுநில மன்னனின் ஊர். பாணனுக்கு நாள்தோறும் உணவு கொடுக்கும் ஊர் என்பதனை,
                பல்வேல் முசுண்டை வேம்பி அன்ன என்           (அகநானூறு 249)
என்பது  புலப்படுத்துகிறது.
வேளூர்
       பலவகை நெல் வளங்களைக் கொண்டது. நல்ல மரங்கள் சூழ்ந்த பல நாட்கள் வடித்து எடுக்கப் பெற்ற கள்நிறைந்த சாடியை முகக்கும் கலம் உடைய ஊர் என்பது,
                பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்                      (அகநானூறு 166)
என்பதால் பெறப்படுகிறது.
மூதூர்
      மிகுதியான கள்ளினைப் பருகிக் களித்தாடும் மக்களையும் ஆரவாரத்தினையுடைய பழைமை வாய்ந்த ஊரினை,
                “…………………..மூதூர்
                 விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்             (அகநானூறு 122)
                விளை கொள் மூதூர் விறலி பின்னற                   (அகநானூறு 352)
விழாக்கள் நடைபெறவில்லையென்றாலும் தூங்காமல் இருக்கும் ஊராகத் திகழ்கிறது.
                “பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” என்று பதிற்றுப்பத்தும், “பழவிறல் நனந்தலை பழவிறல் மூதூர்” என்று சிலப்பதிகாரமும் மூதூரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.
நிறைவாக
  • அகநானூற்றின் ஊர் பெயர்களைப் பற்றியும் சிறப்பு பற்றியும் இவ்வாய்வுக்கட்டுரையில் அறிய முடிகிறது.
  • மூவேந்தர்களின் ஊர்களைப் பற்றியும், துறைமுகங்களான, உறந்தை, வஞ்சி, கொற்கை, முசிறி, புகார் ஊர்களைப் பற்றியும் அயல்நாடுகளோடு கொண்ட வணிகத்தையும் அறியமுடிகிறது.
  • தொண்டை நாட்டில் தேவாரம் புகழ்பெற்றுத் திகழ்கின்றது என்பதை அறிய முடிகிறது.
  • குறுநில மன்னர்கள் நிதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் போன்ற மன்னர்களைப் பாண்டிய நெடுஞ்செழியன் வெற்றி கொண்ட சிறப்பினை அறிய முடிகிறது.
  • அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் முருகனின் அழகும் மயிலின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது.
  • சீத்தலைச்சாத்தனாரின் பெயரினைக் கொண்டு சீத்தலை எனும் ஊரினை அகநானூற்றில் அறிய முடிகிறது.
  • நெல்வளம் மிக்க ஊராக வல்லம் திகழ்கின்றதை அறிய முடிகிறது.
பார்வை நூல்கள்
             அகநானூறு                 – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             குறுந்தொகை           – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             பரிபாடல்                      – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             மதுரைக்காஞ்சி      – என்.சி.பி.எசுச். வெளியீடு
             நற்றிணை                   – என்.சி.பி.எச்சு. வெளியீடு
             சிலப்பதிகாரம்       – நா.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
             தமிழக ஊரும் பேரும் – சிதம்பரனார். சாமி. தமிழறிஞர்

    – திஇராதா,

முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி.

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை

அகரமுதல

முனைவர் எல்.கைலாசம்

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை


 முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறிய  வரலாற்றுப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்துப் பேரரசையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளை அருமையாக குறிப்பிட்டுள்ளார்.
  இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த  ஐயமும் இல்லை.
 ‘திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’ என்ற கருத்தினைத் தெரிவித்தவர்கள் தேவநேயப் பாவாணரும் மற்ற மதிப்புக்குரிய தமிழறிஞர்களும். அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில் கொண்டு முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’யைத் தீட்டியுள்ளார்.
  மிகச் செழுமையுடனும், வலிமையுடனும் இருந்த பாண்டிய நாட்டிலிருந்து   இளைஞன் ஒருவன் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக இன்றைய பாக்கித்தானில் இருக்கும் மொகஞ்சோதராவிற்குச் செல்கிறான். பாண்டியநாட்டு அரசர் அவனுக்கு தாமிரபரணியிலிருது எடுக்கப்பட்ட ஈமத்தாழியில் இருந்த இறந்தவனைப்பற்றித் தெரிந்துகொண்டு வரச் சொல்கிறார். சிந்துநதிக்கரைக்குச் செல்லும் தீரனின் துணிவுகளைச் சொல்லும் புதினமே சிந்து இளவரசி.
 முனைவர் கைலாசத்துக்கு நான் அன்று குற்றவியலைச் சொல்லி கொடுத்ததன் முழுப்பலனை இன்று என்னால் உணர முடிகிறது. அவர் தனது ஒவ்வொரு வரலாற்றுப்ப்புதினத்திலும் ‘குற்றவியல்’அல்லது ‘பாதிக்கப்பட்டோரியலின்’நுணுக்கத்தைப் படிப்பவர் மனதில் பதியும்படி செய்கிறார்.
 இந்தப் புதினத்திலும் குற்றவியலின் அடிப்படையாக, கொள்கையான ‘குற்ற எண்ணம்இல்லாத செயல் குற்றமாகாது’ என்பதைச் சொல்லித் தருகிறார் சிறந்த புதினஆசிரியராக.
   ‘சிந்து இளவரசி’, முனைவர் கைலாசத்தின் பத்தாவது வரலாற்றுப் புதினம் என்று நினைக்கிறேன். அவரின் முதல் புதினமான ‘மலர்ச்சோலை மங்கை’யிலிருந்து சென்றவருடம் வெளியாகி மிகுந்த புகழ் பெற்ற அவரின் ‘இராசாளி’வரை அவரது எல்லாப்புதினங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.
  வரலாற்றுப் புதினத்தின் நட்சத்திர எழுத்தரசனான முனைவர் எல். கைலாசத்தின் ‘சிந்துஇளவரசி’ மிகப் பெரிய வெற்றி பெற அவர் வணங்கும் தெய்வமும், வாசகர்களும் துணை புரியட்டும்.
  

பேரா.முனைவர் மாதவ சோமசுந்தரம்
இயக்குநர், திட்டம்-மேம்பாட்டு மையம்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி