Saturday, December 31, 2016

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) பெரியாரைத் துணைக்கொளல்


 மெய்யறம்
இல்வாழ்வியல்

 1. பெரியாரைத் துணைக்கொளல்


 1. பெரியா ரரியன பெரியன செய்பவர்;
பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்;
 1. பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்;
மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்;
 1. இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்;
மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்;
394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்;
மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்;
 1. பின்னுறுந் தீங்கெலா முன்னறிந் தொழிப்பவர்.
மேலும் பின்னால் வரப்போகும் தீமைகளை முன்னரே அறிந்து அதை நீக்குபவர் ஆவார்.
 1. அவரது துணைகொள லரும்பெருங் காப்பு.
பெரியவர்களின் துணையைப் பெறுவது மிக அரிய உயர்ந்த பாதுகாப்பு ஆகும்.
 1. அவரை யறிந்துகொண் டநுதின மோம்புக.
அவரது பெருமைகளை அறிந்து அவரை எப்பொழுதும் போற்றி வாழுதல் வேண்டும்.
 1. அவர்க்குரி யனவெலா மன்பொடு வழங்குக.
அவருக்குத் தேவையானவற்றை அன்போடு வழங்குதல் வேண்டும்.
 1. அவரோ டெண்ணியே யனைத்துஞ் செய்க.
அவருடன் ஆலோசனை செய்தே அனைத்துச் செயல்களையும் செய்தல் வேண்டும்.
 1. அவருரை பிழையா தியாங்கணு மொழுகுக.
அவருடைய அறிவுரைகளின் வழியே எப்பொழுதும் நடத்தல் வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்

திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்

திருக்குறள் அறுசொல் உரை

03. காமத்துப் பால்

14. களவு இயல்

அதிகாரம் 110. குறிப்பு அறிதல்

பார்வை, செயல்களால், காதலியின்
ஆழ்மனக் குறிப்பினை அறிதல்
(01-10 தலைவன் சொல்லியவை)

 1. இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு
      நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து.
இவளிடம் இருபார்வைகள்; ஒன்று,
நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து.

 1. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்
      செம்பாகம் அன்று: பெரிது.
காதலியின் கள்ளப் பார்வை,
காதலில் பாதியைவிடப் பெரிது.

 1. நோக்கினாள்; நோக்கி, இறைஞ்சினாள்; அஃ(து),அவள்
      யாப்பினுள் அட்டிய நீர்.
பார்த்தாள்; தலைகுனிந்தாள்; காதல்
பாத்தியுள் பாய்ச்சியநீர் அவை.

 1. யான்நோக்கும் காலை, நிலன்நோக்கும்; நோக்காக்கால்,
      தான்நோக்கி மெல்ல நகும்.
நான்பார்த்தால், நிலம்பார்ப்பாள்; பார்க்காப்போது
என்னைப் பார்த்துச் சிரிப்பாள்.

 1. குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்
      சிறக்கணித்தாள் போல நகும்.
குறிப்போடு பார்க்காவிட்டாலும், ஒருகண்ணைச்
சுருக்கிப் பார்த்துச் சிரிப்பாள்.

 1. உறாஅ தவர்போல் சொலினும், செறாஅர்சொல்,
      ஒல்லை உணரப் படும்.
காதல் இல்லார்போல் சொல்லினும்,
காதலர்சொல், காதலைக் காட்டிவிடும்.

 1. செறாஅச் சிறுசொல்லும், செற்றார்போல் நோக்கும்,
      உறாஅர்போன்(று) உற்றார் குறிப்பு.   
பகைக்காத சொல்லும், பகைப்பார்வையும்,
உறவு உள்ளார்தம் குறிப்புக்கள்.

 1. அசையியற்(கு), உண்(டு)ஆண்(டு)ஓர் ஏஎர்;யான் நோக்கப்,
      பசையினள் மெல்ல நகும்.
நான்பார்க்கும் பொழுது, மெல்லச்
சிரிப்பாள்; அதுவும், அழகுதான்.

 1. ஏதிலார் போலப், பொதுநோக்கு நோக்குதல்,
      காதலார் கண்ணே உள.
அயலார்போல், பொதுவாகப் பார்த்துக்
கொள்ளுதல், காதலர்க்கு இயல்பே.

 1. கண்ணொடு கண்இணை நோக்(கு)ஒக்கின், வாய்ச்சொற்கள்,                                                
      என்ன பயனும் இல.
காதலர்தம் கண்களின் பார்வைகள்
ஒன்றினால், வாய்ச்சொற்கள் எதற்கு?

பேரா.வெ.அரங்கராசன்

Thursday, December 29, 2016

தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை

தண்டமிழ் வேலித் தமிழகம்புலவர் குழந்தை

 1. தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப
வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப்
பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த
தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.

 1. நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி
பனிமலை காறும் பகைசிறி தின்றி
இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து
தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.

 1. சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை
மாரி வழங்கும் வடதலை நாட்டை
ஆரிய ரென்னு மயலவர் தங்கள்
பேரறி யாத பெருமையி னாண்டாள்.

 1.   விந்த வடக்கு விளங்கி யிருந்த
நந்தமிழ் மக்கணன் னாகரி கத்தைச்
சிந்து வெளிப்புறந் தேறி யறிந்தார்
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே.

 1. சிந்துவி னொன்றோ திசையிசை மேய
அந்தநன் னாட்டி னகன்றதன் மேற்கில்
நந்திய வாணிக நாடிருப் பாக
வந்தனர் வாழ்ந்து மணித்தமிழ் மக்கள்.

புலவர் குழந்தை: இராவண காவியம்,
1. தமிழகக் காண்டம்: 2. தமிழகப் படலம்