Wednesday, April 26, 2017

தமிழியக்கக் கனல் மூட்டிய பாரதிதாசன்! – கவிக்கோ ஞானச்செல்வன்

தமிழியக்கக் கனல் மூட்டியவர்


நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல
நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை
ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே
ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்!
பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப்
பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று
போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப்
புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்!
மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும்
மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன் றில்லை!
சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம்
தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை!
மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ?
மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும்
செங்கரும்பும் நறும்பாலும் தேனும் பாகும்
செந்தமிழ்க்கு நிகராமோ என்ற மேலோர்!
தமிழியக்கம் எனும்கனலைத் தமிழர் நெஞ்சில்
தழைத்தெரியச் செய்ததனால் தமிழர் இன்று
தமிழ்வாழ்வு காணுதற்கு முயலு கின்றோம்!
தம்மானம் காக்கின்ற உணர்வு பெற்றோம்!
தமிழியக்கம் எனும்தீயால் தமிழ்ப்பற்று றில்லாத்
தருக்கர்தம் செருக்கெல்லாம் பொசுங்கக் கண்டோம்!
தமிழியக்கம் கண்டதொரு தமிழின் நல்ல
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க!
–  கவிக்கோ ஞானச்செல்வன்

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை

பெண்ணுரிமைச் சிந்தனை:
“ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார்.
பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:
  பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு  குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார்.
 பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா என்கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
 பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு
புலன் அற்ற பேதையாய்ப் பெண்ணைச் செய்தால்அந்
நிலம் விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே
சித்திரநிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற்
புத்திரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது?”
 எனப் பெரியாரின் சிந்தனைகளான பெண்ணுரிமையையும், பெண்ணுரிமை இல்லாமையினால் பெண்ணானவள் சமூகத்தில் எத்தகையதான இழிநிலைக்குச் செல்ல நேரிடும் என்பதனை தன் படைப்புப் பாத்திரமான வஞ்சிப் பெண்ணின் வழியாக வலியுறுத்துகின்றார்.
மக்களின் அறியாமைக்குக் காரணம்:
மக்களின் அறியாமைக்கான   முதன்மைக் காரணமாகப் பாவேந்தர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள்
சுருதிச் சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள்
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துக் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்”
என்று இதிகாச நூல்களையும் கடுமையாக சாடுகின்றார். மேலும்
 “சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்
சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப்
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக்
கற்கள் கடவுள்களாயக் காணப்படும் அங்கே
இந்த நிலையிற் சுதந்திரப் போரெங்கே?”
என்று கடவுள்களை வணங்குபவர்களையும் பூசுரர்களையும் சாடுகின்றார்.
ஏமாற்றுபவர்களின் இயல்பு:
  சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் ஒருவர் இராமாயணக் கதைகளைச் சொல்லி பிழைப்பவர்களையும், அக்கதைகளைக் கேட்டவர்கள் காசுகொடுப்பதனையும் நாயகன் உண்மையாகவே அனுமன் சஞ்சீவி மலையினைப் பெயர்த்துச் சென்று மீண்டும் திரும்பவைத்துவிட்டான் என அப்படியே அதனையும் நம்புகின்றான். அதனையும் பாவேந்தர் பின்வருமாறு கூறுகின்றார்.
மாமலையை அவ்வநுமர் தூக்கி வழிநடந்து
இலங்கையிலே வைத்தத! இராமன் எழுந்ததும்
இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது!
கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல்
கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்
தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட
அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி”
என்று நாயகன் தான் நம்பிய கதையை நாயகி இடத்தில் கூறுகின்றான். அதற்கு மறுமொழியாக நாயகி பின் வருமாறு மொழிகிறாள்;
மாளிகையினுள்ளே மனிதர் கூட்டத்தையும்
ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே
உட்கார்ந்திருப்பதையும் ஊர் மக்கள் செல்வதையும்
பட்டை நாமக்காரப் பாகவதன் உரூபாயைத்
தட்டிப் பார்க்கின்றதையும் சந்தோசம் கொள்வதையும்
கண்டார்கள்”
என்று பெண்ணின் வழியாக அந்நிகழ்வையும் எள்ளி நகையாடுகின்றார்.
  இவ்வாறு ஏமாறுபவர்கள் இருக்கின்ற காலம் முற்றிலும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் எனவும் எச்சரிக்கை செய்கின்றார். மேலும் நாயகியின் அறிவுத்திறத்தினாலே பின்வருமாறு கருத்துகளை வெளிக்கொணர்கிறார்.
வானளவும் அங்கங்கள் வானரங்கள்  இராமர்கள்
ஆனது செய்யும் அநுமர்கள் சாம்பவந்தர்
விசவரூபப் பெருமை மேலேறும் வன்மைகள்
உஃச் என்ற சத்தங்கள் அஃச் என்ற சத்தங்கள்
எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்
செவ்வைக் கிருபை செழுங் கருணை அங்சலிக்கை
முத்தி முழுச் சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்
இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்?
  என்று நாயகியின் மூலம் கேள்வியை எழுப்புவதன் மூலம் தான் படைத்த பெண்ணின் பகுத்தறிவுத் திறனையும் வெளிப்படுத்துகின்றார்.
மக்கள் செய்ய வேண்டிய கடமை:
தம் மக்கள் செய்ய வேண்டிய கடமையாக பெண்ணின் வழியினின்று தம் கருத்தைப் பாவேந்தர் பதிவுசெய்கின்றார்.
உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்
எள்ளை  அசைக்க இயலாது. மானிடர்கள்
ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத்
தேக்குமோ? சித்தம் சலியாத் திறன் வேண்டும்
முக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை
க்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி
நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே
புல்லறிவைப் போக்கிப் புதுநிலை தேடல் வேண்டும்.”
 இவ்வாறு பகுத்தறிவுக்கு ஒத்துவராத நூல்களால் எள்ளளவும் யாவர்க்கும் நன்மை இல்லை. இத்தகைய நூல்கள் கூறுகின்ற கதைகளால் மனிதர்கள் உண்டாக்குவதனை அழிக்க முடியுமா?, அழிக்க எண்ணுவதனை நிலைப்படுத்த முடியுமா?. தத்தம் புத்திகளில் சலித்திடாத திறனை வளாத்துக் கொள்ள வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் தன் சஞ்சீவி பருவதத்தின் நூலின் மூலமாக பெண்ணின் உரிமையானது எவ்வளவிற்கு ஒரு  குமுகத்திற்குத் தேவை என்பதனையும், பெண்கள் பகுத்தறிவு சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றார்.
இல. பிரகாசம்
பார்வை நூல்:
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் – பாவேந்தர் பாரதிதாசன்

சிறகு இதழ் சூன் 11, 2016

பாரதிதாசனின் தமிழ் உணர்வு

    பாரதிதாசனின் தமிழ் உணர்வு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம்.
தமிழ் மொழியில் ஈடுபாடு
தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார்.
காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்.
மங்கை ஒருத்தி தரும் சுகமும் தமிழ்மொழிக்கு ஈடாகாது என்று பேசியவர்.” உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்தார் பாவேந்தர்,
வீரத்தாயில் ‘மலையைப் பெயர்க்கும் தோள் உடையோராக வளருங்கள், கீழ்ச் செயல்கள் விடுங்கள், வீரத்தைப் போற்றுங்கள், வீரத்தில் உயருங்கள்’ என்று அனைத்துத் தமிழர்களுக்கும், குறிப்பாகப் பெண்ணினத்துக்கும் அறைகூவல் விடுப்பதைக் காணமுடிகிறது.
 தமிழர்களின் விழிப்புணர்ச்சி
வீரத்தாயில்
என் நாட்டை நான் ஆள ஏற்ற கலையுதவும்
தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்
என்று சுதர்மன் மூலமாகப் பேசுகிறார் கவிஞர். தொல்காப்பியம், திருக்குறளுக்கு மட்டும் விளக்கம் தருபவன் தமிழ் ஆசிரியன் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் சூழ்ச்சிகளுக்கு இடங்கொடாமல், தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் தமிழர்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துபவரே தமிழாசிரியர் என்று வீரத்தாயில் நிலை நிறுத்தியுள்ளார்.
இவ்வாறு, வீரத்தாய் காவியப் பண்பும் பாத்திரப் படைப்புகளும் தமிழே உருவானவர்களாகக் காணப்படுகின்றனர்.
 தமிழனின் வீரப் பரம்பரையம்
தமிழ்ப் பெண்களை வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் நினைவூட்டி, தமிழர்களின் வீரத்திற்குச் சான்றாகக் காணப்படுகின்ற புறநானூற்று வீரக்கதைகளை நினைவுபடுத்திடவும் வீரத்தாய் எனும் பெயரில் காவியம் படைத்தளித்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படுவெளியில்!
என்று இளைய உள்ளங்களுள் வீரத்தை ஊட்டியவர் பாரதிதாசன். தாம் படைத்த மூன்று காப்பியங்களிலும் வீரப்பெண்களைத் தலைமைப்படுத்தியே அமைத்துள்ளார்.
சஞ்சீவி பர்வதத்தின் சாரலில்‘ குப்பனின் மனைவி வஞ்சியும், ‘புரட்சிக்கவி‘யில் கவிஞனின் காதலி அமுதவல்லியும், ‘வீரத்தாயில்‘   விசயராணியும் வீரம் செறிந்த கதைமாந்தர்களாகக் காணப்படுகின்றனர்.
விசயராணியை அறிமுகம் செய்யும்போதே வீரமும் உறுதியும் அமைந்தவளாகக் காட்டுகிறார் கவிஞர். அதுபோலவே ‘வீரத்தமிழன்’ எனும் பாடலில் இராவணனை, மாசுபடுத்தி ஊறுபடுத்தப்பட்ட தமிழ் மறவர்களில் மூத்தவனாகக் காண்கிறார் பாரதிதாசன். தமிழனின் வீர மரபினை இராவணனைப் படைத்ததன் மூலம் போற்றிப் பெருமிதம் கொள்கிறார் கவிஞர்.
தமிழனின் வீரப் பரம்பரையத்தை நினைவுபடுத்த விரும்பியே வீரத்தாய் காவியத்தில் தன் மகனைத் தாயே வீரனாக்குகின்ற வகையில் படைக்கிறார். சுதர்மனை நோக்கி வீசிய சேனாபதியின் வாளினைத் தனது வாளினால் துண்டித்துவிடும் வீர மகளாக விசயராணி காணப்படுகிறாள்.
“பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே வீரம்
பெருக் கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே”
எனும் வரிகளைப் பிறநாட்டு வேந்தர்கள் மூலம் சுதர்மனின் வீரத்தைப் பேச வைக்கிறார் கவிஞர் பாரதிதாசன். அதுபோலவே,
ஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்
கோவித்த தாயின் எதிர் கொல் படைதான்
என் செய்யும்
என்றும் விசயராணியின் வீரத்தைப் புலப்படுத்துகிறார். கடைசியில் புரட்சிக்கவியில் வருவது போலவே ‘குடியரசு’ ஓங்க, வீரமகன் அரசியல் அறிவிப்பு செய்வதைக் காண முடிகிறது. இவ்வாறு தாயையும் மகனையும் வீரத்தின் விளைநிலமாக அமைத்துக், கொடியவர்களிடம் இருந்து நாட்டைக் காக்கும் வீரப் பெண்ணாகவும் அதே நேரத்தில், ஒழுக்கம் மிக்க வீரப்புதல்வனைப் பெறும் வீரத்தாயாகவும் படைத்துத் தமிழரின் வீர மரபினை நிலை நிறுத்தியுள்ளார் பாவேந்தன் பாரதிதாசன்.
தமிழ் இணையக் கல்விக்கழகம்