சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே ! – நாரா. நாச்சியப்பன்




சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே !


ஆதிமுதல் தாயே! அருந்தமிழே ! நல்வாழ்த்து !
சாதிவரு முன்னே தமிழ்நாட்டில் மக்கள்

பிறந்து சமத்துவமாய்ப் பேருலகில் வாழச்
சிறப்புடனே பெற்றெடுத்த செந்தமிழே நல்வாழ்த்து !

கண்ணகியைப் பெற்றெடுத்துக் கற்பின் திறங்காட்டி
மண்ணுலகைச் சீர்படுத்தும் மாணிக்கச் செந்தமிழே!

ஔவைமூ தாட்டி அறம்பாடக் கூழுட்டிச்
செவ்வை புறவளர்த்த செந்தமிழே நல்வாழ்த்து !

போரில் புறங்கொடுத்த புல்லன் மகனென்றால்
மார்பறுக்கத் தான்துணியும் மங்கையினைப் பெற்றவளே !

தாய்நாடு வாழத் தனதருமைச் சுற்றமெலாம்
போய் வீரப் போர்புரியப் போக்குந் திருமகளை

ஊட்டி வளர்த்தவளே ! ஓங்கு பெருமையினை
நாட்டிச் சிறப்படைந்த நற்றமிழே வாழ்த்து !

திருமறைசொல் வள்ளுவர்க்கும் தேர்ந்தகபி வர்க்கும்
பெருமையுறுந் தாயான பெண்ணணங்கே வாழ்த்து

முடிமன்னர் மூவருக்கும், முன்வாயில் வந்து
படிமிதித்த ஏழை பசிதீர்க்கும் வள்ளலர்க்கும்

நல்லன்னை யாகி நலம்புரியும் செந்தமிழே !
பல்லுலகும் போற்றும் பழந்தமிழே வாழ்த்து !

கனிபோலே நல்ல கனிரசத்தைப் போலே
இனிதான செந்தமிழே ! எங்கள் பெருந்தமிழே !

கற்கண்டு போலே கருப்பஞ்சாற் றைப்போலே
சொற்சுவையும், சொல்லின் பொருட்சுவையும் சொக்கும்

கவிச்சுவையும் சேர்ந்திருக்கும் கற்பனையைக் காட்டும்
சுவையமுதே தித்திக்கும் சொல்லோ வியமே !

அறப்புலவர் சான்றோர் அணிவகுத்து நின்று
புறங்காக்க வாழ்வடைந்து புல்லறி வாளர்களின்

சூழ்ச்சி தவிடாக்கித் தொன்றுமுதல் இன்றுவரை
வீழ்ச்சியின்றி வாழ்ந்து விளங்கும் பெருமாட்டி !

என்றும் இளமையினை ஏற்றுத் திகழுகின்ற தென்றமிழ்த் தாயே !
நற் றேன்பெருக்கே நல்வாழ்த்து !

பொய்யா நெறிகாட்டிப் புத்துலக வாழ்க்கையினைச்
செய்தாயே வாழ்க சிறந்து.
-பாவலர் நாரா. நாச்சியப்பன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்