Skip to main content

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா?

உழவர்களே!
நாட்டின்
அட்சயப் பாத்திரமான நீங்கள்
பிச்சைப் பாத்திரத்திடம்
கையேந்தலாமா?
தாய் வீடான 
தமிழகம் திரும்புங்கள்!
நீங்கள் இதுவரை வடித்த
கண்ணீரைக் கொண்டே
இருபோகச் சாகுபடியை
இங்கே முடித்திருக்கலாம்.
அழுகிய காயங்களிடம்
மருந்து கேட்காதீர்கள்!
வெளிச்சத்தின் புத்திரர்களே!
விழி ஈரம் துடைத்துத்
தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்!
அதிகாரப் பசியெடுத்த
ஆதிக்கக் கழுகுகளுக்கு
இதயம் இல்லை.
செவிகளும் கூடச்
சேர்ந்தாற்போல் செத்துவிட்டன
அவற்றின் கண்களும்
கல்லறைக்குப் போய்விட்டன
இறக்கத்தில் கிடக்கும்
அவற்றிடம்
இனியும்
இரக்கத்தை எதிர்பார்க்கலாமா?
தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்!
உங்கள் கண்ணீர் பார்த்து
வான தேவதை வரம் கொடுப்பாள்.
ஈர ஈரமாய்க் கரம்கொடுப்பாள்.
தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்!

 -ஆரூர் தமிழ்நாடன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்