Tuesday, December 13, 2011

Bharathidasan poem about Bharathy : பாரதியார் நாமம் வாழ்க!


பாரதியார் நாமம் வாழ்க!

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்
  புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்
தாளேந்திக்காத்த நறுந் தமிழ் மொழியைத்
  தாய்மொழியை உயிரை இந்த
நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?
  என அயலார் நகைக்கும் போதில்
தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்
  போல் நல்லின்பத்தை
விளைத்திடு தீந் தமிழிருந்தும் வேறு மொழியே
  வேண்டி வேண்டி நாளும்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
  கனிந்தபடி தோலுரித்துச்
சுளைத்தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை
  சுவையூட்டம் தந்து சந்த,
அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,
  நற்காதல் ஆழம் காட்டித்
தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்
  தமிழறியில் தறுக் குண்டாக்கிச்
சுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு
  விடுதலையை மறுத்திருக்கும்
துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப்
  பெண்மை தன்னில்
தக்கதொரு தாய்த்தன்மை, சமத்துவ நிலை காட்டி
  உயிர்த்தளிர்க்கும் காதல்
துய்க்கும் விதம் எழத்தளித்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க்!
 
பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும்
  பெரியாரின் துணையும் வேண்டும்
விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கே
  உறக்கமில்லை கட்டாயத்தால்
வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற்
  சுவைக் கவியால் மனத்தை அள்ளித்
தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
நிதி பெருக்கம் மனிதர்களும், நெடுந்தேச
  பக்தர்களும், தலைவர் தாமும்
கதி பெருக்க ஏடெழுதும் ஆசிரியர்
  என்பவரும் கவிதை யென்றால்
மிதி என்பார்! தமிழ்க்கவியைப் புதுவகையில்
  மேலெழுப்பிக் கவிகள் தம்மைத்
துதிபுரியும் வகை தந்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
பேசுகின்ற தமிழினிலே சுவைக் கவிதை
  தரவறியாப் பெரியோரெல்லாம்
பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம்
  வேண்டுவன பெறுதல் கண்டும்
ஏசிநின்றார். அவர் நாணத் தமிழ்க் கவிதை
  உலகினிலே எசமான் ஆன
தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங் கவிஞன்
  ஐரிஷ் மொழி வளரச் செய்தான்!
அயர்லாந்தில் அதன் பிறகே உணர்வு பெற
  லாயிற்வென்றறிஞர் சொல்வார்!
பெயர் பெற்ற கவிதைகளில் சுடர்க் கவிஞர் சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்
  இசைந்திருந்த ஷேக்ஸ்பியரும்,
சொல்லும் விக்டர் யூகோவும், டால்ஸ்டாயும்
  ரவீந்திரனும் சொந்த நாட்டில்
நல்லசெயல் செய்தார்கள்! நடைப் பிணங்கள்
  மத்தியிலே வறுமை என்னும்
தொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
வாழ்க எழிற் பாரதியார் திருநாமம்
  வையமிசை எந்த நாளும்
வாழ்க தமிழ்! தமிழ்க் கவிதை!
  தமிழ் நாட்டார் மகாவீரராக எங்கும்
வாழ்க அவர் வகுத்த நெறி வருங் கவிதா
  மண்டலமும் கவிஞர் தாமும்!
வாழ்க நனி சமத்துவ நல் லிதயமதி வாய்ந்த
  புகழ் நிலவு நன்றே.
 --- --- --- --- ---
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்த நம்
தாயகம் சமண் மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று தகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிறித்தவர் சூழ் இந்துக் களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவுபட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவான் வேண்டு மென்றேண்ணி
இராமலிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவுகின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ்வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர்யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ. சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னேன்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்.
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்!
எவ்வா றென்பதை எடுத்துரைக்கின்றேன்;
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்காதென்றும்
பொய்ம்மதம் பெரிதெனப் புளுகுவீர் என்றும்
கொந்தும்என் சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்,
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்,
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத்தனை நிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண்ணால் என் றறைக என்றும்,
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழுதித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்,
புதுச்சொல் புது நடை போற்றேல் என்றும்,
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்
அந்தப் படியே அவரும் ஒழுகினார்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்ட தின்பத்தமிழ்
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழுத்தே எழுந்தார் என அவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
"வில்லின யெடடா - கையில்
வில்லினை எடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய்திடடா"
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகரலானான்

"பாருக்குள்ளே நல்லநாடு - இந்தப் பாரதநாடு"
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றிப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மையானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்.

"தொன்று நிகழ்ந்த தனைத்து முனைந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்"
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்குகின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்

"முப்பதுகோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வென்றுடையாள் - அவள்
செப்பும் மொழி பதினெட்டுடையாள் - எனிற்
சிந்தனை யொன்றுடையாள்"
இந்நாட்டின் தெற்கெல்லை இயம்புவான்

"நீலத்திரைகடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய் குமரி யெல்லை"
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடுமாறு
மக்களுக்கவன் வழங்குதல் கேட்பீர்.

"இதந்தரு மனையினீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுந் திழிவுற்றாலும்
விதம்தரு கோடி இன்னல் விளைத்தெனையழித்திட்டாலும்
சதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே"
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்கள் -

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது றுதியாச்சு"
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே - என்றறைந்தார் அன்றோ?
பன்னீராயிரம் பாடிய கம்பனும்
இப்போது மக்கள்பால் இன் தமிழ் உணர்வை
எழுப்பியதுண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்
"தெந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" - என்றான்
சினம் பொங்கும் ஆடவன் செவ்விழிதன்னை
முனம் எங்கும் இல்லாது மொழியாலுரைத்தான்.

"வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கு
வெற்வு நொறுங்கிப் பொடி பொடியானது
வேலவா" என்று கோலம் புதுக்கினான்.
பெண் உதட்டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லியுள்ளான் சொல்லுகின்றேன்.
"அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும்"
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
"முனை முகத்து நிற்றேல்" முதியவள் சொல்லிது
"முனையிலே முகத்து நில்" - பாரதி முழக்கிது,
"மீதூண் விரும்பேல்" மாதுரைத் தாள் இது
"ஊண் மிக விரும்பு" - என உரைத்தான் பாரதி
மேலும் கேளீர் - 'கோல் கைக் கொண்டுவாழ்'
"குன்றென நிமிர்ந்து நில்" "நன்று கருது"
"நினைப்பது முடியும்" "நெற்றி சுருக்கிடேல்"
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சுகின்றான் பாரதிக் கவிஞன்!
அன்றென் கவிதையின் அழகையும் தெளிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுவதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே!

- பாரதிதாசன்

Tuesday, November 29, 2011

Ilakkuvanarin pataippumanikal 98: Tamilnadu is the birth place of humanbeing: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

98 உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே

பதிவு செய்த நாள் : 29/11/2011


உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன.
(பழந்தமிழ் பக்கம் 42)

0


Friday, November 25, 2011

Ilakkuvanarin pataippumanikal 97: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

97. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர்.
மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின் தாய் என்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும். தமிழே சிதைந்து ஒன்று பலவாய் வேறுபட்டனவாய் இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள மொழிகளில் வெளிப்படுகின்றன. யானை கண்ட குருடர்கள் போன்று இன்று மொழி நூலறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு உரிமையாக்கி உரைத்து மகிழ்கின்றனர். உண்மை நிலை வெளிப்படுவதாக.
(பழந்தமிழ்  பக்கம் 39)
0
சிம்புவின் “ஒச்தி” படம் பெயர் மாற்றப்படுமா

Thursday, November 24, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி


இலக்குவனாரின் படைப்பு மணிகள்

96. நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011
நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும். பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம். ஆனால் பாரத மொழிகளின் தாய் ஆரியமே; தமிழும் அதன் புதல்விகளுள் ஒன்றே என்று கருதிவிட்டனர். வடவாரியம், இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது. பழந்தமிழோ தனிக்குடும்பத்தைச் சார்ந்தது. மொழிக்குடும்பங்களை ஆராயின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி இயல்புகள் உள என்பதை அறியலாகும்.
(பழந்தமிழ்  பக்கம் 35)
0


Wednesday, November 23, 2011

Ilakkuvanarin pataippumanikal 95: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது.


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

95. தமிழ், தொன்மையும் வளமும் உடையது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011தமிழ், தொன்மையும் வளமும் உடையது. ஆங்கிலமே தோன்றப் பெறாத காலத்தில் அஃது உயர் தனிச் செம்மொழியாக விளங்கியது. ஆங்கிலேயரைப் போன்று தமிழர்களும் திரைகடல் ஓடியும் செல்வம் ஈட்டினர்; கடல் கடந்தும் நாடுகளை வென்றனர். ஆனால் ஆங்கிலேயரைப் போன்று தம் மொழியைப் பிறர்மீது சுமத்தவில்லை. சென்றனர்; வென்றனர்; திரும்பினர். தமிழரும் ஆங்கிலேயர் வழியை-பிறரை அடிமைப் படுத்தும் வழியை மேற்கொண்டிருப்பின் இன்று தமிழும் உலகப் பொது மொழியாக ஆகும் தகுதியைப் பெற்றிருக்கும்.
(பழந்தமிழ்  பக்கம் 35)
0

Tuesday, November 22, 2011

Ilakkuvanarin pataippumanikal 94: we ignore thamizh: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 94 ஆங்கிலத்தையே போற்றி வந்தோம்.


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

94 தமிழர்களாகிய நாம் நம் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்து 

ஆங்கிலத்தையே போற்றி வந்தோம்.

 இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/11/2011

தமிழர்களாகிய நாம் நம் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தையே போற்றி வந்தோம். ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது நமது முன்னேற்றங் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்துவிடுதல் கூடாது அன்றோ. நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து நமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்து விடலாமா? தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில் இருக்கின்றனர். ஆங்கிலம் தமிழுக்கடுத்துக் கற்க வேண்டிய மொழியேயன்றித் தமிழை விடுத்துக் கற்பதற்குரியதன்று. ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் கற்றல் வேண்டும். கல்வி நிலையங்களில் அவ்வாறு கற்பதற்குரிய வசதிகளைச் செய்தல் வேண்டும்.

Monday, November 21, 2011

Ilakkuvanarin pataippu manikal 93: Tahmizh family languages is correct: திராவிட மொழிகள் எனக் கூறற்க! தமிழ்க் குடும்ப மொழிகள் என்க!


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

93. உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம்.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 93

உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.
(பழந்தமிழ்  பக்கம் 30)

Sunday, November 20, 2011

Ilakkuvanarin pataippumanikal 92 : thamizh script system is the best system: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 92 தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்தது


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

92 ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்தது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருப்பத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துக்கள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துக்களினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும்.
(பழந்தமிழ்  பக்கம் 27)
0


Saturday, November 19, 2011

Ilakkuvanarin pataippu manikal 91 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 91 உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

91 உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011

உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே என்றும் தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர் ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுள்ளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகிறது.
(பழந்தமிழ்  பக்கம் 26)
0

அரமும் மரமும் - குறள் விளக்கம்: முனைவர் மறைமலை இலக்குவனார்


அரமும் மரமும்

முனைவர் மறைமலை இலக்குவனார்
பதிவு செய்த நாள் : 19/11/2011


“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் (997)”
என்னும் குறள் பண்புடைமை என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. மக்கட்பண்பு இல்லாதவர்கள் அரம் போன்ற கூரிய அறிவு பெற்றிருந்தாலும் மரத்துக்குச் சமமாகவே மதிக்கத்தக்கவர்கள் என்று இதற்குப் பொருள் கூறப்பட்டு வருகிறது. ஒப்புயர்வற்ற உரையாசிரியர் பரிமேலழகரும் இத்தகைய பொருளிலேயே உரை வகுத்துள்ளார். ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில்
“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்(216)”
என்னும் குறள் மூலம் ‘ஒப்புரவு என்னும் சிறந்த ஒழுக்கத்தையுடைய நேர்மையாளனிடம் செல்வம் சேருமாயின் அது பயன் தரும் மரம் உள்ளூரில் பழுத்ததற்குச் சமம் ‘என்று கூறும் வள்ளுவர் மரத்தை இங்ஙனம் தாழ்வாக மதிப்பிடுவாரா என்னும் வினா எழுகிறது.
அரம் போலும் கூர்மையான அறிவு இருந்தாலும் மக்கட்பண்பு இல்லாமல் போய்விடுமாயின் அந்த அறிவினால் பயன் இல்லை;
அந்தக் கூர்மையான அறிவு தீய செயல்களுக்கு வழிவகுத்துவிடலாம் என்பதே இக்குறள் தரும் பொருள். அஃது எவ்வாறெனில் அந்த அரத்திற்குக் கைப்படியாக அமையும் மரம் தனது இனமாகிய மரங்களை அறுத்தற்குப் பயன்பட்டுவிடுவதைப் போல எனலாம்.இக்குறளில் மரம் என்னும் சொல் உயிருடைய மரங்களைக் குறிக்கவில்லை.அரத்திற்குக் கைப்பிடியாக அமைந்து தன் இனத்திற்கே கெடுதி செய்யும் மரப்பகுதியையே குறிக்கிறது எனப் பொருள் கொண்டால் இக்குறள் உணர்த்தும் உண்மை தெளிவாகத் தெரிகிறது.
தன்னால் ஒரு செயலையும் செய்ய இயலாமல் அடுத்தவர் கையில் அகப்பட்டுக்கொண்டு தன் இனத்திற்கே கேடு விளைக்கும் இந்த மரத்தை மற்றொரு குறளிலும் எண்ணிப்பார்க்கிறார் வள்ளுவர்.
“உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.(600)”
என்னும் குறளும் ஊக்கம் என்னும் வலிமையில்லாதவர்கள் அடுத்தவர்கள் கையில் மாட்டிக்கொண்டு குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக்காம்புகளாகத் தீமை பயப்பர் என எச்சரிக்கிறார்.
இக்குறட்பாக்களில் மரம் என்னும் சொல் வழங்கும் இப்பொருளைத் தெளிந்து கொண்டால் திருவள்ளுவரின் உவமைநலன் விளங்குவதுடன் அவர் உணர்த்த வந்த அறிவுரையும் பசுமரத்தாணியாக நம் உள்ளத்தில் பதியும் அல்லவா?
“ மறைமலை இலக்குவனார்: Maraimalai Ilakkuvanar ” அவர்களின் முகநூலில் இருந்து
படிக்க: “மரம் பற்றி மேலும்”

Friday, November 18, 2011

Ilakkuvanarin pataippumanikal 90: Script of thamizhs: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 90. தமிழர்கள் எழுத்து முறை


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 90. தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் “தொல்காப்பியம்” தமிழ் எழுத்து துறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (objcet) சுட்டுவதின்று.
(பழந்தமிழ்:  பக்கம் 26)
0


 

Thursday, November 17, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 89. போற்றத் தகுந்த பேரறிஞர் ஈராசு


இலக்குவனாரின் படைப்பு மணிகள்

89. பேரறிஞர் கால்டுவல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார்.

பதிவு செய்த நாள் : 17/11/2011
பேரறிஞர் கால்டுவல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் ஈராசு ஆவார். அவர் தம்மைத் திராவிடர் என்றே அழைத்துக்கொண்டார். அவர் மறைந்த மாநகரங்களான ஆரப்பா மொகஞ்சதாரோ எனும் இரண்டைப் பற்றி நன்கு ஆராய்ந்து அங்கு வழங்கிய மொழி தமிழே என்று நிலைநாட்டியுள்ளனர். அவர் கூறியுள்ள ஆராய்ச்சி யுரைகள், “பழந்தமிழே இந்திய மொழிகளின் தாய்” என்பதை நிலைநாட்டத் துணைபுரிந்துள்ளன.
(பழந்தமிழ்  பக்கம் 15)
 

Wednesday, November 16, 2011

Ilakkuvanarin pataippumanikal 88: Pazhanthamizh: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 88. வேறுபாடு இதுதான்


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 88. வேற்று நாட்டவர்க்கும் நம் நாட்டவர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011


வேற்று நாட்டவர்க்கும் நம் நாட்டவர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான். வேற்று நாட்டவர் இங்கு வந்து நம் மொழியைக் கற்றாலும் தம் மொழியை மறப்பது கிடையாது. ஆனால் நம் நாட்டவரோ வேற்று மொழியைக் கற்கத் தொடங்கியதும் தம் தாய் மொழியை மறக்கத் தொடங்கி விடுகின்றனர். ’போப் எனும் ஆங்கிலேயர் இங்கு வந்தார்; தமிழைக் கற்றார்; புலமை பெற்றார். ஆனால் தம் மொழியாம் ஆங்கிலத்தை மறந்திலர். தமிழில் உள்ள சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதே காலத்தில் ஆங்கிலத்தைக் கற்ற நம் தமிழருள் எத்துணைபேர் ஆங்கிலத்துள் உள்ளனவற்றைத் தமிழில் பெயர்த்தனர்? யாருமிலரே! இந்நிலை மாறுதல் வேண்டும். வேற்று மொழியைக் கற்கும் நாம், நம் மொழியை மறவாது அதன் வளத்திற்கு வேற்று மொழியறிவைப் பயன்படுத்த வேண்டும். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” இரண்டும் செய்திடுவோம். அன்றியும் உள்ளுவதும் உரையாடுவதும் வேற்று மொழியிலேயே நிகழ்த்தினோம். ஆகவே நமக்கென ஒரு மொழியின்று என்று பிற நாட்டவர் எண்ணுமாறு நடந்துவிட்டோம்.
(பழந்தமிழ் பக்கம் 14)
0

Tuesday, November 15, 2011

Ilakkuvanarin pataippumanikal 87: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 87 முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ்.


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 87 உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ்.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 15/11/2011


உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே தமிழ் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.
மொழியே நம் விழி; மொழியின்றேல் நமக்கு வாழ்வு இன்று; வாழ்வில் வளமும் இன்பமும் பெறல் அரிது.

(பழந்தமிழ் பக்கம் 13)
0
 

Thursday, November 10, 2011

இல்வாழ்க்கை – [6-10] குறள் விளக்கம்

இல்வாழ்க்கை – [6-10] குறள் விளக்கம்

பேராசிரியர் சி.இலக்குவனார்
பதிவு செய்த நாள் : 10/11/2011


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?                                   (46)

அறத்து ஆற்றின்=அறவழியில், இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, ஆற்றின்=செலுத்தினால், (எல்லா இன்பங்களையும் எய்துதல் கூடும்.) புறத்து ஆற்றில்=அறத்திற்குப் புறம்பாகிய தீயநெறியில், போஓய்=சென்று, பெறுவது எவன்=அடைவது என்ன?

இல்லற வாழ்க்கையை அறநெறியில் செலுத்தினால் நல்லின்பங்களை நன்கே பெறலாம். சிலர் அங்ஙனமின்றி அறநெறியினின்றும் விலகி மறநெறியில் வாழத் தலைப் படுகின்றனர். இஃது, அறநெறியில் செல்வதினும் தீய நெறியில் செல்லுதலை எளிதாகக் கருதுவதனால் உண்டாகும் விளைவாகும். ஆனால், அறத்திற்குப் புறம்பான நெறியில் எதனையும் எய்திவிட முடியாது. எய்துவதுபோல் தோன்றினும் பின்னர் நிலைத்து நில்லாது துன்பத்திடையே கொண்டு செலுத்தும். ஆதலின், அறநெறியில் வாழ்வதே பயனுடைத்து என அறிதல் வேண்டும்.

புறத்தாறு=இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார் போஒய்ப் பெறுவது எவன் என்றார்- இங்ஙனம் பரிமேலழகர் கூறுகின்றார். அவர் கூற்றுப்படி துறவறத்தினும் இல்லறமே பயனுடைத்து என்பதாகும்.

பரிதியாரும், கவிராச பண்டிதரும் புறத்தாறு என்பதற்குப் பாவத்தின் வழி என்று பொருள் கூறுகின்றனர்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை                        (47)

இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, இயல்பினான்= அதற்குரிய இயல்பு முறைப்படி, வாழ்பவன் என்பான்= வாழ்கின்றவன் என்று சொல்லப் படுபவன், முயல்வாருள் எல்லாம்=இன்பங்களை அடைவதற்கு முயல்கின்றவர் அனைவருள்ளும், தலை= முதன்மை யாகக் கருதி மதிக்கப் படுபவன் ஆவான்.

இன்பங்களை அடைவதற்கு, இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்களைவிட இல்லற நெறியில் வாழ்கின்றவரே உயர்ந்தவர்- தமக்கும் பிறர்க்கும் பயன்படுகின்ற வகையில் இயற்கை யோடிசைந்து வாழ்ந்து இன்ப நலன்களைத் துய்ப்பவர் – என்பது அறியற்பாலது.

முயல்வார்=முற்றத் துறந்தவர் விட்டமையின் முயல்வார் என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை என்பர் பரிமேலழகர். மூன்றாம் நிலை என்பது மனைவியுடன் காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்யும் நிலையாகும். இது தமிழர் வாழ்வியல் நெறிக்குப் பொருந்தாது. தமிழர் நால்வகை நிலைகளை ஏற்றுக் கொண்டாரிலர். பிரமச்சரியம், கிரகத்தம், வானப்ரத்தம், சந்நியாசம் என்னும் நால்வகை நிலையும் வடவர்க்கே உரியன. ஆதலின், முயல்வார் என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை என்பது பொருந்தாது.

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து                         (48)

ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத,இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மையுடைத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது.

இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத் துறவுநிலை மேற்கொண்டுள்ளவர் பெரியவரா? என்ற கேள்வி எழுமேல், இல்லற நெறியில் வாழ்கின்றவரே பெரியவர் என்பது தெற்றென விளங்கும். இல்லற நெறியில் வாழ்கின்றவர் தாமும் அறநெறியில் ஒழுகிப் பிறரையும் அங்ஙனம் அறநெறியில் ஒழுகத் துணைபுரிகின்றார். உணவு, உறைவிடம் முதலியன பெறுவதற்கு இல்லறத்தாரின் துணை துறவறத்தார்க்கு வேண்டற்பாலது. இல்லறத்தாரின்றித் துறவறத்தார் வாழ இயலாது. ஆதலின், இல்லற வாழ்வே துறவற வாழ்வினும் பொறுப்பும் கடமையும் சிறப்பும் மிக்கதாகும்.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று                          (49)

அறன்=அறநெறி, எனப்பட்டதே=என்று சிறப்பித்துச் சொல்லப் பட்டதே, இல்வாழ்க்கை=இல்லற  வாழ்க்கை நெறியாகும், அஃதும்=அவ்வில்லற வாழ்க்கை நெறியும், பிறன் பழிப்பது இல்லாயின்=பிறனால் பழிக்கப்படுவது இல்லையானால், நன்று=மிகப் பெருமையுடையதாகும்.

வசையொழிய வாழ்வதே வாழ்க்கையாகும் என்பது வள்ளுவர் கருத்து (திருக்குறள் 240). ஆதலின் இல்லற வாழ்வு பிறனால் பழிக்கப்படாமலிருத்தல் வேண்டும் என்றார். நன்று என்பதன் பொருள் பெரிது என்பதாகும். நன்று பெரிதாகும் என்பது தொல்காப்பிய நூற்பா. ஆகவே, அறநெறி வாழ்வு எனப்படும் இல்லற வாழ்வு பிறனாலும் பழிக்கப்படாமல்  இருக்குமாயின் மிகப் பெரிதாகும் என வள்ளுவர் பெருமான் அறிவுறுத்துகின்றார் என்று கருதுதல் வேண்டும்.

அஃதும் என்பதனைத் துறவறத்தைச் சுட்டுவதாகப் பொருள் கொண்டு, துறவறம் பிறரால் பழிக்கப் படுவது இல்லையாயின் இல் வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று எனப் பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். சுட்டுச்சொல் ஒரு தொடரில் வரும் (தோன்றியும் தோன்றாமலும்) பெயரையே சுட்டி நிற்பது இயல்பு. ஆதலின் அஃதும் என்னும் சுட்டு அறன் என்பதனையே சுட்டுவதாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து. அஃதும் என்பதில் உள்ள உம்மை சிறப்பும்மையாகும். பட்டதே என்பதில் உள்ள , தேற்றப் பொருளில் வந்ததாகும்.

பரிமேலழகர் காலத்தில் துறவறம் மக்களால் போற்றப்பட்டு வந்திருத்தல் வேண்டும். துறவற நிலையினை மேற்கொண்டோர் பலர் கூடா ஒழுக்கம் உடையோராய் மக்களை வஞ்சித்து வாழ்ந்திருத்தல் வேண்டும். ஆதலின் இல்லறத்தினும் துறவறம் தாழ்வுடைத்து என்ற கருத்தினைப் பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளார் எனத் தெரிகின்றது.

துறவறம் மேற்கொள்வது இல்லறத்தார்க்குத் தொண்டு செய்யவே. ஆதலின், உண்மைத் துறவு நிலை உயர்ந்தோரால் போற்றத்தக்கதே. இல்லறத்துக்குத் துணையாய் உள்ள துறவறத்தை இல்லறத்தோடு ஒப்பிட்டுக் காணுதல் முறையன்று. துறவறத்தார் மேற்கொண்டுள்ள தொண்டின் மேன்மையால் இல்லறத்தாரால் நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்ததும் வருவதும் உலகம் அறிந்ததே. அதனால் இல்லறம் துறவறத்தினும் தாழ்வுடைத்து என்று கருதுதல் பொருந்தாது. துறவறத்தினும் இல்லறமே ஏற்றமுடைத்து என்ற பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளது பாராட்டத்தக்கது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                        (50)

வையத்துள்=உலகில், வாழ்வாங்கு=வாழும் நெறி முறைப்படி, வாழ்பவன்=வாழ்கின்றவன், வானுறையும்=  வானுலகில் வாழும், தெய்வத்துள்=கடவுளுடன் வைக்கப்படும்=ஒப்பிட்டு மதிக்கப் படுவான்.

மாந்தன் நிலையைவிட உயர்ந்த நிலை கடவுள் நிலையாகும். மாந்தன் நிலை குற்றம் செய்வதற்கு  இடம் உடையது. கடவுள் நிலை குற்றங்கட்கு அப்பாற்பட்டது. குற்றமற்ற நிலையே கடவுள் நிலையாகும்.

மக்கள் குற்றமற்றவர்களாக வாழவேண்டும். அப்பொழுதுதான் இவ்வுலகம் துன்பங்களினின்று விடுதலை பெற இயலும். கசடறக் கற்று, கற்ற வழியில் மக்கள் ஒழுகினால் குற்றங்களுக்கு இங்கு இடமில்லை. குற்றமற்று வாழ வேண்டுமென்பது, மக்கள் வாழ்க்கைக்கு இயலாது என்று சிலர் கருதிவிடுகின்றனர்; கடவுள் பிறப்பினர்க்குத்தான் குற்றமற்று வாழ முடியும் என்று கூறித் தம் குற்றங்களுக்கு அமைதி தேடுகின்றனர். வள்ளுவர் பெருமானுக்கு இக் கருத்து உடம்பாடன்று. மாந்தனும் கடவுளாகலாம். எப்பொழுது? உலகில் வாழும் அறநெறிப்படி வாழ்ந்தால். ஆகவே, ஒவ்வொருவரும் இல்லறம் ஏற்று வாழும் அறமுறைப்படி வாழுங்கள் அவ்வாறு வாழுகின்றவன் இவ்வுலகில் இருப்பவனே யாயினும் வானுலகில் உறைவதாகக் கூறப்படும் கடவுளாகவே கருதப்படுவான். இல்லற நெறியே  இனிய கடவுள் நிலைக்கு மக்களை இட்டுச் செல்லும்.
 

Saturday, November 5, 2011

Ilakkuvanarin pataippu manikal 86 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 86. தமிழக வரலாற்றின் முதற்பகுதியே தொல்காப்பியம்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

86. தமிழக வரலாற்றின் முதற்பகுதியே தொல்காப்பியம்

 

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 05/11/2011


தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது.  தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று  இருந்தது.  அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம்.  தொல்காப்பியத்தால் மொழி நிலை -  இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்.  இவ்வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால மொழியின் சிறப்பையும் இலக்கியவளச் சிறப்பையும் எடுத்துக்காட்டும்.  தொல்காப்பியர் கால மக்கள் வாழ்வு பற்றித் தனியாக ஒரு நூலில் ஆராய எண்ணியுள்சோம். தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன.  பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிவதற்கு இவையன்றிப் பிற சான்றுகளை நாம் பெற்றோம் இல்லை.  எனவே தமிழக வரலாற்றின் முதற்பகுதியே இந்நூல் எனக்கொள்ளுதல் தகும்.

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம் 285)
 

Friday, November 4, 2011

Ilakkuvanarin pataippu manikal 85 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 85. தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 85. தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/11/2011


தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார்.  அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை.  தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.  ஆதலின் ஆங்கிலம் அகன்றால்  அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும்.  பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284:285)


Thursday, November 3, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 84. தமிழைப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

84. தமிழைப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/11/2011


தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும்.  பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284)
 

Wednesday, November 2, 2011

Ilakkuvanarin pataippu manikal 83 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 83. தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

83. தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011


இன்று தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சி புரிகின்றது.  பிற நாட்டார் தலைவணங்கும் இலக்கியங்கள் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவே இல்லை.  பிற துறைகளில் உண்டாகும்.  வறுமையைப் பிற நாட்டினர் துணை கொண்டு போக்கிக்கொள்ள இயலும்.  ஆனால் இலக்கிய வறுமையைப் போக்கப் பிற நாட்டினர் துணை பயன்படாது.  இந்நாட்டில் உள்ளவர்களிடையே இனிய புலவர்கள் தோன்றுதல் வேண்டும்.  தோன்றும் புலவர்கள் தொல்காப்பியத்தைக் கற்று அதன் மரபினை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.  அறிந்து அகமும் புறமும் வண்ணமும் வனப்பும், நூலும் உரையும், ஆற்றுப்படையும் பாடாண் பாட்டும் மீண்டும் மலரச் செய்தலில் ஊக்கம் காட்டுதல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 283)


Tuesday, November 1, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 82. முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

82. முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 01/11/2011


இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர்களும் பெருகி வருகின்றனர்.  மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்றுகின்றனர்.  அவர்கள் தமிழிலக்கண மரபை அறியாமலும தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச் செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர்.   முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282)


Saturday, October 29, 2011

Ilakkuvanarin pataippu manikal 81: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 81. தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும்


இலக்குவனாரின் படைப்பு மணிகள் 81. தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும்

பதிவு செய்த நாள் : 29/10/2011
மக்களுக்குப் பயன்படும் முறையாலேயே மொழி வளர்கின்றது என்றாலும், அதன் வளமும் செழிப்பும் செறிவும் அதன் இலக்கியத்தினாலேயே பெற வேண்டியுள்ளது.  ஒரு மொழியின் வளர்ச்சிப்போக்கில் மாறுதலுற்றுப் பிரிந்து சிதைந்து மறைந்து போகாமல் இருப்பதற்குத் துணை செய்வது இலக்கியமே.  மொழியிலிருந்து தோன்றுவது இலக்கியம்; இலக்கியத்தால் வளம் பெறுவது மொழி. ஆதலின் தமிழின் வளத்தைப் பெருக்குவதற்குத் தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282)

Thursday, October 27, 2011

Ilakkuvanarin pataippu manikal 80 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 80. பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 80. பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/10/2011
கடலாலும் ஆரிய மொழியாலும், வழங்கிவரும் பரப்பளவில் தமிழ் சுருங்கிவிட்டது.  பரந்த நிலப்பரப்பில் வழங்கிவரும் மொழி காலப்போக்கில் கிளை மொழிகளாகப் பிரிந்து, கிளை மொழிகளாக உருவெடுத்து வேற்று மொழிகளாக வளர்ந்து விடுவது மொழி வரலாறு அறிவிக்கும் உண்மையேயாயினும், ஆரியம் இந் நிலை மாற்றங்களை விரைவுபடுத்தி விட்டது  என்பதனை மறுத்தல் இயலாது.  ஆரியம் தமிழ் வழங்கும் பரப்பளவினைச் சுருங்கச் செய்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை.  பயன்படுவகையிலும் சுருங்கச் செய்து விட்டது. ஆரியமே இந்நாட்டின் பண்பாட்டு உயர்மொழி யென்றும் கடவுள் மொழி என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு கல்வி, சமயம், கடவுள் வழிபாடு. சடங்கு முதலிய மக்கட்குப் பயன்படு துறைகளில் எல்லாம் ஆரியமே ஆட்சி பெற்றுவிட்டது; தமிழகத்தில் பல்லவர் காலத்தில் அரசியலிலும் முதன்மைபெற்று ஆட்சி மொழியாகி விட்டது.  தமிழ் வீட்டளவில் சுருங்கிய முறையில் பயன்படுத்தப் பட்டாலும் அத் தமிழ் ஆரியமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண்டு விளங்கியது.  அத் தமிழில் பேசுதலும் தம் உயர்நிலை சுட்டாது எனக் கருதினர். கலப்புத் தமிழைக் கண்டவர்கள் அதனை ஆரியத்தின் சிதைவு மொழி எனக் கருதினர்.  தமிழ்ப் புலவர்களும் அவ்வாறே கருதினர் எனின் தமிழ் மொழி நிலையை என்னென்பது?
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 280)

Wednesday, October 26, 2011

Ilakkuvanarin pataippumanikal 79 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 79. திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 79. 

திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/10/2011ஆதலின் இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழியாராய்ச்சியாளர்கள்.  தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர். திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது.  கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்  தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது.   திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 279)


Ilakkuvanar explanations about family life in Thirukkural: இல்வாழ்க்கை – [1-5] குறள் விளக்கம் : பேராசிரியர் சி.இலக்குவனார்

இல்வாழ்க்கை – [1-5] குறள் விளக்கம்

பேராசிரியர் சி.இலக்குவனார்
பதிவு செய்த நாள் : 26/10/2011


இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். இல்லாள் என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். இல்லான் என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக் குரியவர்கள் பெண்களே எனத் தமிழ் முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப் போற்றி வாழ்வியலில் அவ்வினத் தலைமையையும் ஏற்றுள்ளனர் என்றும் தெளியலாம். இல்லறம் செம்மை யுற்றால்தான் நாட்டில் நல்வாழ்வு உண்டாகும். பல இல்லறங்களால் அமைந்ததே நாடு. For, in as much as  every family is part of a state.(Aristotle: Politics: page 78) இல்லறங்கள் இன்றேல் நாடு ஏது? ஆட்சி எதற்கு?

இல்லறம், நாகரிகத்தின் உயர்நிலையைக் காட்டுவதாகும்; விலங்கு நிலையினின்றும் வேறு படுத்துவதாகும். நினைத்தவுடன் கூடி வெறுத்தவுடன் பிரிந்து போவது மாக்களுக்கு உரியதேயன்றி,  உயர்மக்களுக்கு உரியது ஆகாது. ஒருவனும் ஒருத்தியும் காதலால் பிணிப்புண்டு கடிமணம் புரிந்து கொண்டு இல்லறப் பொறுப்பேற்று இனிதே வாழத் தொடங்கிய காலம்தான் மாந்தர் உயர்நிலையும் பண்பாடும் உற்ற காலமாகும் இல்லறமல்லது நல்லறமில்லை என்று துணிந்துரைத்ததும் அதனாலேயே யன்றோ? வாழ்வியல் அறம் கூறப் புகுந்த வள்ளுவர் பெருமான் பாயிரத்தின் பின்னர் இல்வாழ்க்கை பற்றி எடுத்துரைத்ததும் இதன் ஏற்றத்தைப் புலப்படுத்தும்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)

இல்வாழ்வான் என்பான்=இல்லற நெறியில் பொருந்தி வீட்டிலிருந்து வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், இயல்புடைய மூவர்க்கும்=தத்தமக்குரிய இயல்புகளைப் பெற்றுள்ள மூவர்க்கும், நல்லாற்றின்=அவர்கள் மேற்கொண்டுள்ள கடமைகளை நிறைவேற்ற மேற்கொள்ளும் நல்வழிகளில், நின்ற=நிலைத்து நின்ற, துணை= துணைவனாவான்.

மூவர் யார்?

பிரமச்சரிய ஒழுக்கத்தான், வனத்தில் சென்று மனையாள் வழிபடத் தவம் செய்யும் ஒழுக்கத்தான், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தான் என்பர் பரிமேலழகர். இவ்வாறு பிரித்துக் காணுதல் தமிழ் மரபன்று. பிறர் மத மேற்கொண்டு கூறியதாகவே பரிமேலழகரும் கூறியுள்ளார். மாணவ நிலை, மனையாளோடு வாழும் நிலை என இரண்டே தமிழர் வாழ்வியல் முறைக்குரியனவாகும்.

தாய், தந்தை, உறவினர் என மூவர் என்பாருமுளர். இம்மூவரும்
குடும்பத்துக் குரியராதலின் இவர்க்குத் துணையாவான் என்பதில் சிறப்பின்று.

புலவர், பாடகர், நடன மாந்தர் என்பர் பரிதி. இவர்களும் இல்லற வாழ்வில் இருப்போர் ஆதலின், இவர்கட்கு இல்லற வாழ்வினரால் அளிக்கப்படும் துணை வேண்டற்பாலதன்று. இல்லற வாழ்வு இல்லாதோர்க்குத்தான் இல்லறத்தான் துணை வேண்டும்.

பேராசிரியர் சக்கரவர்த்தி என்பார் தம் சமண சமயக் கோட்பாட்டின்படி ஆசிரியரை அடுத்துப் பயிலும் மாணவர், தமக்கென வீடு இல்லாது உலகத்தை முற்றும் துறவாது துறவு நிலைக்கு ஆயத்தமாவோர், முற்றும் துறந்த மாமுனிவர் ஆய மூவர் என்பார்.

இல்லறத்தினை முற்றுந்துறந்து முனிவராக வாழும் நிலையும் தமிழர் நெறிக்கு ஒத்ததன்று. ஆகவே, இம்மூவருள் மாணவர்க்கு உதவுதல் ஏற்புடைத்தே. வறியராய் இருப்பினும் கற்றல் தவிர்க்க முடியாத ஒன்று. பிச்சை புகினும் கற்கை நன்றே என்றதூஉம் காண்க. இயல்புடைய மூவருள் மாணவர் ஒரு பிரிவினர். பின்னும் இருவர் யாவர்? பிறர்க்கென வாழும் தொண்டரும் பொருளீட்டி வாழ்தலில் கருத்துச் செலுத்தாது முக்காலத்தையும் அறிந்து உலகுக்கு நல்லன கூறி இன்புறும் அறிவரும் இல்லறத்தாரின் உதவிக்குரியராவார். ஆதலின் இயல்புடைய மூவராவார், மாணவர், தொண்டர், அறிவர் என்று கூறுதல் தகும்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை                            (42)

துறந்தார்க்கும்=வாழ்வின் துன்ப நிலைக்கஞ்சி வாழ்வினை வெறுத்து விட்டவர்க்கும், துவ்வா தவர்க்கும்=நுகர்தற்குரியனவற்றை நுகர இயலாத வறியவர்க்கும், இறந்தார்க்கும்=யாவற்றையும் கடந்தவர்க்கும், இல்வாழ்வான் என்பான்=இல்லற வாழ்க்கையினன் என்று கூறப்படுபவன், துணை=துணையாவான்.

உலக வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது; பொறுப்பு மிக்கது. ஆற்றலுக்கேற்ப உழைத்துத் தேவைக் கேற்பப் பெறக் கூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. நெறிமுறைகளைக் கடந்து பிறரை வஞ்சித்து ஏமாற்றிப் பொருள் ஈட்டுதலே இன்ப வாழ்வுக்குத் துணை செய்கின்றது. நேர்மை வழியில் செல்வோர் பொருள் முட்டுப்பாட்டுக்காளாகிக் குடும்பத்தை நடத்த முடியாமல் அல்லல்படுகின்றனர். இவ் வல்லலினின்றும் தப்புவதற்குத் தற்கொலை புரிவோரும் வீட்டை விட்டு வெளிக் கிளம்புவோரும் உளர். வீட்டை விட்டு வெளிக் கிளம்புவோர் இங்குத் துறந்தார் எனப்படுகின்றனர்.

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்தான்     என்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை (43)

தென் புலத்தார்=தென் நாட்டார், தெய்வம்=கடவுள், விருந்து=விருந்தினர், ஒக்கல்-சுற்றத்தார், தான்=தான், என்று ஆங்கு=என்று சொல்லப்படும் முறையில், ஐம்புலத்து=ஐந்து பகுதிகளிலும், ஆறு=அறநெறிப்படியே. ஓம்பல்=கடமையைக் காத்தல், தலை=முதன்மையாகும்.

தென்புலத்தார்

படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசையாதலின் தென் புலத்தார் என்றார் என்பது பரிமேலழகர் கூறும் உரையாகும். உலகத்தை அயன் படைத்தான் என்பதும் அப்பொழுது படைக்கப்பட்டவர்  தென்புலத்தில் உளர் என்பதும் அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அவர்கள் ஏன் படைக்கப் பட்டார்கள்? அவர்களுடைய கடமை யாது? தென் திசையில் அவர்கள் யாண்டு வாழ்கின்றார்கள்? அவர்களை மக்கள் போற்ற வேண்டியது ஏன்? என்பன போன்ற கேள்விகட்கு விடை கூறுவார் இலர். ஆதலின் பரிமேலழகர் உரை இங்குப் பயனற்று விடுகிறது.

தென் நாட்டார் என்பதே நேர் பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென் தமிழ் நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன் நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை – தென் தமிழ் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்றாக வலியுறுத்தியுள்ளார் என்பதே சாலப் பொருத்தமாகும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர், தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர் பெருமான் உளம் நொந்து நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார். உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப் பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப் பொதுமறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.

தெய்வம்

தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. இச்சொல் தொல்காப்பியத்தில் கருப்பொருள்களில் ஒன்றாக முதன்மையிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
அவ்வகை பிறவும் கருவென மொழிப
உணவுக்கு முந்தியதாகத் தெய்வம் கூறப்பட்டுள்ளதிலிருந்து தெய்வ உணர்வு மாந்தர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது எனத் தமிழ் முன்னோர் கருதி வந்துள்ளனர் என்பது அறியற்பாலது.

தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? ஒவ்வோர் உடலும் இறைவன் உறைவிடமாகும். ஆகவே, உயிர்கட்குச் செய்யும் தொண்டே கடவுள் தொண்டாகும். தன்னாட்டுப் பற்றுடைய மாந்தன் பிறவுயிர்களையும் போற்ற வேண்டும் என்பதனைக் கருதி அடுத்துத் தெய்வத்தை வைத்துள்ளார்.

விருந்து

புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்து மிகவும் வேண்டப்பட்டதாகும். சிற்றுண்டி விடுதிகளும் பேருண்டி இல்லங்களும் இக் காலத்தில் உள்ளனபோல் அக் காலத்தில் இருந்திருக்க இயலாமையால் வெளியூர்களிலிருந்து -வருவோர்க்குப் புகலிடம் வீடுகள்தாம். ஆகவே, விருந்தினரைப் – புதிதாக வருவோரைப் புரக்க வேண்டுவதும்  இல்லறத்தான் கடமையாய் விட்டது.

இக் காலத்திலும் வெளிநாடுகளில் – ஏன் நம் நாட்டில் சில பகுதிகளிலும் அயலவரைத் தம் வீட்டில் தங்க வைத்து உணவு உறையுள் அளித்து ஓம்புகின்றனர். அவற்றிற்கெனக் கட்டணமும் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வயலவர் கட்டணம் செலுத்தும் விருந்தினர் (Paying Guests) என்று அழைக்கப்படுகின்றனர்.

ஒக்கல்
செல்வ நிலையிலிருப்போர் செல்வமற்ற தம் சுற்றத்தாரை ஓம்புதல் மிகமிக வேண்டற்பாலது. இதனைச் சுற்றம் தழாஅல் என மீண்டும் (பொருட்பால் 53) தனியியலில் வள்ளுவர் பெருமான் வலியுறுத்துகின்றார்.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
என்பதூஉம் காண்க.

தான்

தன்னை யோம்புதல் மிகமிக இன்றியமையாதது. தானின்றி உலகேது? தான் நன்கு வாழ்ந்தாலன்றோ எல்லாக் கடன்களையும் நன்கு  ஆற்ற இயலும்! ஆகவே, தன்னையும் ஓம்புதல் அறநெறியின் பாற்பட்ட கடன்களுள் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். அழியும் உடலை அழிய விடு என உதட்டளவில் பிறர்க்கு உரைத்து, உள்ளத்தால் பற்றுவிடாது கரவு முறையில் தம் ஊன் பெருக்குவார் உள்ளீடு இது. ஆகவே, வள்ளுவர் பெருமான் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் கொள் என உலகறிய உரைக்கின்றார்.

பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல் (44)

பழி அஞ்சி=குற்றங்களை அஞ்சி (பொருளை ஈட்டி), பாத்து ஊண்=பிறருடன்பகுத்துஉண்ணும்உணவை,உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, வழி எஞ்சல்=அற்றுப் போதல்,எஞ்ஞான்றும்=எப்பொழுதும், இல்=இல்லை.

இல்லற வாழ்க்கை மக்களது நாகரிகப் பண்பாட்டின் முதிர்ச்சியாகும். உழைத்துப் பொருளீட்டி இல்லாதார்க்குப் பங்கிட்டு உண்ணுதலே இல்லறப்பண்பின் முதிர்ச்சியாகும். பிறர்க்கு அளித்து வாழாதார் இல்லறம், இல்லறமேயன்று.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)

இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும்,  உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்= இல்வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்= பயனுடைமையும், அது=அங்ஙனம்  பெற்றிருத்தலாகும்.

அன்பு

பரிமேலழகர், தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை அன்பு என்றார். இல்லறத் தலைவனும் தலைவியும் காதலால்  பிணைப்புண்டு வாழ்க்கையறத்தை மேற்கொண்டுள்ளவராதலின், இருவரும் ஒருவர் மாட்டொருவர் அன்பு கொண்டிருப்பராதலின் அவ் வன்பு இல்லறப் பண்பு எனல் ஆகாது. இங்கு அன்பு என்பது தொடர்பில்லார் மாட்டுக் காட்டும் பரிவைத்தான் குறிக்கும். அதன் சிறப்புக் கருதியே தனியாக அன்புடைமை என்னும் இயலில் விளக்கப்படுகின்றது.

அறம்

பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறம் என்றார் பரிமேலழகர். பிறர்க்குப் பகுத்துண்டல் இல்லறக் கடமைகளுள் ஒன்று. அதனை மட்டும் பயன் எனல் பொருந்தாது.

அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இல்லறக் கடமைகளாகக் கருதப்பட்டன. இல்லறக் கடமைகளாம் அவற்றை ஆற்றும் முறைகளும் அறவழிப்பட்டனவாக இருத்தல் வேண்டும். எங்ஙனமும் பொருளீட்டி மனைவியைப் போற்றி மக்களைப் புரந்து வாழ்தல் வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அறநெறியில் செல்லுதலே இல் வாழ்க்கையின் பயனாகும்.

ஆகவே, இல்லறத்தின் பண்பு அன்பு; இல்லறத்தின் பயன் அறநெறியில் வாழ்தல்.