அரமும் மரமும் - குறள் விளக்கம்: முனைவர் மறைமலை இலக்குவனார்
அரமும் மரமும்
முனைவர் மறைமலை இலக்குவனார்
பதிவு செய்த நாள் : 19/11/2011
மக்கட்பண்பு இல்லா தவர் (997)”
என்னும் குறள் பண்புடைமை என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. மக்கட்பண்பு இல்லாதவர்கள் அரம் போன்ற கூரிய அறிவு பெற்றிருந்தாலும் மரத்துக்குச் சமமாகவே மதிக்கத்தக்கவர்கள் என்று இதற்குப் பொருள் கூறப்பட்டு வருகிறது. ஒப்புயர்வற்ற உரையாசிரியர் பரிமேலழகரும் இத்தகைய பொருளிலேயே உரை வகுத்துள்ளார். ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில்
“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்(216)”
என்னும் குறள் மூலம் ‘ஒப்புரவு என்னும் சிறந்த ஒழுக்கத்தையுடைய நேர்மையாளனிடம் செல்வம் சேருமாயின் அது பயன் தரும் மரம் உள்ளூரில் பழுத்ததற்குச் சமம் ‘என்று கூறும் வள்ளுவர் மரத்தை இங்ஙனம் தாழ்வாக மதிப்பிடுவாரா என்னும் வினா எழுகிறது.
அரம் போலும் கூர்மையான அறிவு இருந்தாலும் மக்கட்பண்பு இல்லாமல் போய்விடுமாயின் அந்த அறிவினால் பயன் இல்லை;
அந்தக் கூர்மையான அறிவு தீய செயல்களுக்கு வழிவகுத்துவிடலாம் என்பதே இக்குறள் தரும் பொருள். அஃது எவ்வாறெனில் அந்த அரத்திற்குக் கைப்படியாக அமையும் மரம் தனது இனமாகிய மரங்களை அறுத்தற்குப் பயன்பட்டுவிடுவதைப் போல எனலாம்.இக்குறளில் மரம் என்னும் சொல் உயிருடைய மரங்களைக் குறிக்கவில்லை.அரத்திற்குக் கைப்பிடியாக அமைந்து தன் இனத்திற்கே கெடுதி செய்யும் மரப்பகுதியையே குறிக்கிறது எனப் பொருள் கொண்டால் இக்குறள் உணர்த்தும் உண்மை தெளிவாகத் தெரிகிறது.
தன்னால் ஒரு செயலையும் செய்ய இயலாமல் அடுத்தவர் கையில் அகப்பட்டுக்கொண்டு தன் இனத்திற்கே கேடு விளைக்கும் இந்த மரத்தை மற்றொரு குறளிலும் எண்ணிப்பார்க்கிறார் வள்ளுவர்.
“உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.(600)”
என்னும் குறளும் ஊக்கம் என்னும் வலிமையில்லாதவர்கள் அடுத்தவர்கள் கையில் மாட்டிக்கொண்டு குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக்காம்புகளாகத் தீமை பயப்பர் என எச்சரிக்கிறார்.
இக்குறட்பாக்களில் மரம் என்னும் சொல் வழங்கும் இப்பொருளைத் தெளிந்து கொண்டால் திருவள்ளுவரின் உவமைநலன் விளங்குவதுடன் அவர் உணர்த்த வந்த அறிவுரையும் பசுமரத்தாணியாக நம் உள்ளத்தில் பதியும் அல்லவா?
“ மறைமலை இலக்குவனார்: Maraimalai Ilakkuvanar ” அவர்களின் முகநூலில் இருந்து
படிக்க: “மரம் பற்றி மேலும்”
Comments
Post a Comment