Thursday, January 29, 2015

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்


aa.ve.mullainilavazhagan
காட்சி – 8
(நாடகக் காட்சி – 2)
அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில்
இடம்      :     அருண்மொழி இல்லம்
நிலைமை  :     (இல்லாளும் நானென இன்பம்
பொழிகின்ற பூங்குயில் கண்டு
தலைவனும் நானென அருணும்
நவின்றிடும் முறையே இங்கு)
அருண்    :     மலரே நீ வருவாய்!
தாள்கொஞ்சம் திறவாய்!
கள்வனோ அல்ல;                                                                                                                                                               கணவனே! வந்தேன்!
பூங்       :     இதோ நான் வந்தேன்!
இனிய நீர் சுமந்து!
பாதமோ கழுவி
பாங்காக வருவாய்!
அருண்    :     என் குரல் கேட்டும்
ஏன் இந்த மெளனம்?
           என்ன நீ! செய்தாய்?
                                இயல்பாகச் சொல்வாய்!
பூங்       :     அழைக்கும் உன் முறையோ
இசையாகக் கேட்க
தழைந்தே நான் நின்றேன்!
     வேறென்றும் இல்லை!
                       இல்லமோத் தூய்மை
           இருக்கவே செய்தேன்!
                        நல்பாய்போட்டு
            இலைபோடப்பாக்கி!
                          சிறிதே நீர் அமர்வாய்
            சினம்கொள்ள வேண்டா!
                          அறிவேனே! உன்னை
           இதோ நான் வருவேன்!
(சொன்னவள் சென்று
        பாயுடன் வந்தாள்
கனிவுடன் இலையில்
      தண்ணீரும் தெளித்தாள்
உணவுடன் அவன் முன்
       அமர்ந்தாள் நங்கை
பணிவுடன் இலையில்
       உணவினைப் படைத்து)
பூங்       :     சுவையுள்ள உணவை,
சுவைத்துநீர்! உண்பீர்!
துயில் கொண்டு எழுவீர்!
சுகம்காணக் கொஞ்சம்!
அருண்    :     தரையிலோர் பாதம்,
பதியநீ வைத்து,
                      பரிமாற அமுதாய்,
   அமர்ந்திடும்போது?
                      உண்ணவே எண்ணம்
   ஒருபோதும் இல்லை?
                      ஒன்றொன்றாய் சுவைத்துப்
   பார்க்கவேச் செய்தேன்!
                     குழம்பும் இனிப்பு! காரக்
  கூட்டும் இனிப்பு! குளிர்
                    குழலும் இனிப்பு! கடல்
        உப்பும் இனிப்பு!
                   மோரும் இனிப்பு! ஊறு
    காயும் இனிப்பு! இந்தச்
                  சோறு ம் இனிப்பு! மரக்
   கறியும் இனிப்பு!
    எல்லாமே இனிப்பாய்,
  இருக்கவே செய்தால்,
                  நலமாக உண்ண
  முடியுமா சொல்லேன்?
பூங்       :     பூவிலே உள்ள
  புதுத்தேனெடுத்து!
                    நாவிலே நன்றாய்,
தடவியா வந்தீர்?
    மாஞ்சுவைக் குழம்பும்,
     நல்வகைத் தயிரும்;
               தீஞ்சுவை கூட்டும்,
    பல்வகைக் கறியும்!
                திகட்டுமோ வென்று,
     தேன்மா வடுவும்!
              பகட்டென இன்றி,
 படைத்து நான்வைக்க!
         இனிப்பதாய் அனைத்தும்,
  என்னிடம் உரைத்தால்!
         என்னநான் செய்வேன்?
         என்பதை அறியேன்!
அருண்    :     மனதிலே தேனின்,
  கூடொன்றைக் கட்டி!
                              நனிதளிர்க் கரங்களை
அதிலே நீ இணைத்து
                    மணக்க நீ சமைக்க
பொருளையே தொட்டால்
இனிக்காமல் என்ன?
                   கசக்கவாச் செய்யும்?
                     என்பதை நானே!
இப்போதே அறிந்தேன்!
    கண்ணே நீ! இன்னும்
  அருகினில் வருவாய்!
பூங்       :     விடுங்கள்! ஐயோ!
அழகுள்ள செயலா?
அடுத்தவர் பார்த்தால்,
என்னதான் சொல்வார்?
அருண்    :     நினைப்பவர் நினைக்கட்டும்
  நீ என்ன சின்னஞ்சிறுசா?
                           நன்று நான் இன்று
படித்ததைக் கேளாய்!
பூங்       :     மலராகும் மொட்டு,
             பருவத்தின் வரையில்!
               சிலரோடு என்னை
பள்ளிக்கு அனுப்ப!
          சிறப்புள்ள வாழ்வே
            சிற்றூரின் வாழ்வாய்!
        கற்றோர்கள் எனக்குப்
பாடமாய்ச் சொல்ல!
என் எண்ண நினைவு,
  ஏக்கமே கொள்ளும்!
       மனமென்னும் திரையில்,
காட்சிகள் தோன்றும்!
இன்று நீர் படித்த,
  கவிதையைக் கேட்க!
   நனி என்பள்ளி,
  நினைவிற்கு வரவோ!
  உள்ளமோதுடியாய்,
   துடிப்பதை அறிவாய்!
   மெல்லவே கவிதைக்,
    கருத்தினைச் சொல்வாய்!
அருண்    :     கீறிய கொவ்வைப்
  பழம் போன்ற இதழில்
           ஊறிய தேனோ
  உருண்டோடும் முத்தாய்
       உன் மார்புக் கரையின்
  வாய்க்காலில் ஓட!
ஒன்றும் நான் அறியாப்
  பதரல்ல; சொல்வேன்
 செவ்வாழை சிரிக்க!
தென்னை வரவேற்க!
     சவ்வாது மணக்க!
  சண்பகம் உதிர!
      தென்றலும் வீச
   தேன்மலர் சிந்த!
   மன்றல் தோறும்
மணமே! மணமே!
        வாளைமீன் தென்னங்
   குலையினை முட்ட
    வாள்போல் இளநீர்
  அருகிலே உள்ள
    முற்றிய பலாவில்
  மூர்க்கமாய் பாய!
    குற்றமே இல்லாத்
  தேனங்கே வழியும்!
    வாழைப்பூச் சோற்போல்
  வகையாய் சொரிய!
  தாழையின் மடலோ
தாங்கியே நிற்க!
   வருவோர்க்குப் படைக்கும்,
  வாய்ப்பையே தேடி
    திருமகள் வாசலில்
நிற்பதாய்த் தோன்றும்!
    எருமைகள் கன்றின்
நினைவாலே மாலை
 தெருவெல்லாம் பாலைச்,
  சிந்தியே ஓடும்! முக்கனி எங்கும்,
  சிதறியே கிடக்கும்
    திக்கெங்கும் முத்துகள்,
     குவிந்தே கிடக்கும்!
பூங்       :     அப்பப்பா! என்ன?
அழகுதான் என்பேன்?
    எப்போது இதை நான்,
பார்ப்பதோ அறியேன்;
அருண்    :     கலைஎழில் வாழ்வாம்,
  சிற்றூரின் வாழ்வை
              நிலையான இலக்கியச்
சுவையாகச் சொல்லும்
   எண்ணற்ற நூல்கள்
  இங்குண்டே கண்ணே!
      கண்ணெனக் காத்தல்
கடமையும் அன்றோ?
பூங்       :     ஆமாம் அறிவேன்!
அறிவேனே நானும்!
      பூம்பொழில் போல,
  என்றுமே மணக்கும்!

(காட்சி முடிவு)
two-sparrows08
(பாடும்)


Sunday, January 25, 2015

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்

chinnachamy03

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்புபாவாணர்


பண் – (நாதநாமக்கிரியை)
தாளம் – முன்னை
ப.
            தீக்குளித்தே யிறந்தான் – சின்னச்சாமி
              தீக்குளித்தே யிறந்தான் – திடுக்கிடத்

து. ப.
            தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று
               தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு
(தீக்)

உ.1
            ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே
            அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில்
            வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின்
            வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத்
(தீக்)

2
            நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் மதமென்றும்
            நானிலத்தே மாந்தர் நல்குவர் உடல்வேக
            ஈடொன்று மில்லாமல் இனியதாய் மொழிக்கென்றே
            ஈந்துநல் வலவுடல் இளமையில் உயர்வாகத்
(தீக்)

3
            வெந்தெரி யுடலெல்லாம் விளம்பறு வேதனை
            விருவிருத் தேறினும் வீறுகொண் டேறென
            எந்தமிழ் வாழ்கவே இந்தியே ஒழிகென
            இறுதி வரைகூறி இதுவேநல் லாறெனத்
(தீக்)


4
            பைந்தமிழை முன்காட்டிப் பகைவ ரிடங்கொடுத்துப்
            பணங்கொழுக் குந்தலைமைப் பண்பற்றபே ராசான்மார்
            ஐந்தாம் வகுப்பே கற்றோன் அடைந்தபண் பாடுமின்றி
            அஃறிணை யாயிருத்தல் அறிவாரெல் லாருந்தான் பார்
(தீக்)

5
            எருமைபோல் உணர்வின்றி என்றும்கீழ் அடிமையாய்
            இருந்தேகும் தமிழாநீ இனியேனும் மடந்தீரப்
            பெருமைபேர் எழுதிக்கல் பெருஞ்சின்னச் சாமிக்குப்
            பிறைமாடக் கோயிற்கண் பெயராது நடவாராய்
(தீக்)
paavanar03
- ஞா. தேவநேயப் பாவாணர்,
இசைத்தமிழ்க் கலம்பகம் : பாடல் 195

இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்


paavanar04

தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்

 “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை
ப.
            இந்தியை ஏன்கற்க வேண்டும்
                என்அம்மா என்அப்பா நான்
(இந்தி)

உ.1
     என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா
        பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே
(இந்தி)

2
      அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும்
                வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத
(இந்தி)

3
     அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார்
              உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து
(இந்தி)

     வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில்             அறிவியற்கே நிறைவிலா அரியகாலம் பயனறவே
(இந்தி)

5
     ஆரியத்தால் செந்தமிழ் அடைந்ததுபல் கேடுகள்
          சீரியநல் எச்சமும் சிதையும்வகை மதியிலாது
(இந்தி)
 6
   இந்தி யில்லாப் பள்ளியே இந்தநாட்டில் இல்லையேல்         அந்த நாள் வரும்வரை அகத்திருந்தே கற்றிடுவேன்
(இந்தி)

7
    மானமும்தன் மானமும் மருவுதமிழ் மாணவர்
        தானையிலே சேர்ந்துநான் தண்டமிழைக் காத்திடுவேன்
(இந்தி)

- ஞா. தேவநேயப் பாவாணர் : இசைத்தமிழ்க் கலம்பகம் : பாடல் 203

Saturday, January 24, 2015

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் - கவிஞர் இன்குலாபு
தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார்- கவிஞர் இன்குலாபு


தமிழை இனிமை என்றனர் பாவலர்கள்

தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள்

தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் !

தமிழ் விழிப்புற்றது பாரதியால்

தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால்

தமிழ் போராடியது இலக்குவனாரால்

எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர்

எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர்

இருந்தும்

எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன !

எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின !

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

என்று

தொன்று தமிழருக்கு

நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்த

இந்தத் தொல்காப்பியருக்கு

சிறையும்  உறைவாளும்

மாசில் வீணையும் மாலை மதியமும் !

சில முகவரிகள் தவறாக அமைகின்றன

பறவைக்குக் கூண்டு

காவிரிக்குக் கருநாடகம்

தமிழ்நாட்டுக்கு இந்தியா !

ஆனால்

தமிழுக்கு வாய்த்த சரியான முகவரி

தியாகராசர் கல்லூரி

மதுரை.

ஒருபுறம்

ஆற்றுநீர் வற்றினாலும்

ஊற்றுநீர் வற்றாத

அழகிய வைகைஅந்த மணலுக்கடியில்

எப்பொழுதும் தமிழ் ஈரம் !

மறுபுறம்

பச்சை இலைகளுக்கு

நடுவில்

பளிங்குத் தாமரைப் பூப் போல

தெப்பக்குளமும்

மையமண்டபமும்

அதன்

பாசிபடிந்த படிகளில்

நிலவு

வழுக்கி விழும் !

நடுவில் காற்று,மிழாய் வீ,

உயிர்த்துக்கொண்டு

நிற்கும்

தியாகராசர் கல்லூரி

வைகை தாலாட்டும்

தமிழ் நாகரிகம் !

நாணல்களின் வெண்பஞ்சுப் பூக்களைத்

தலைக்குச் சூடும்

நாரைகள் !

நிலவுப்பாலில் நின்று குளிக்கும்

கீற்றுத் தென்னைகள்

கிளியோபாத்திராக்கள் !

கரையெல்லாம் பூக்கும்

கவிதைகள் !

எங்களை அடைகாத்த கூடுகள் !

புறநானூற்று வரிகளிலிருந்து

புரவிகள் பாயும் !

சிலம்புப் பரல்கள்

மிண்டும் தெரிக்கும் !

ஆண்டாள் பாசுரங்களுக்குக்

காதல் சுரக்கும் !

புரட்சிக் கவிஞன் நிலவைப் பாடுவான் !

வகுப்புகள் கவிதைகளின்

வாழ்ந்த அனுபவம் !

தமிழ் தன்னை இனிதாய்க் கேட்டது

எங்கள் வகுப்பறைகளின்

வாசலில் நின்று !

தமிழ் தன்னை அழகாக்கிக் கொண்டது

எங்கள் தோழமை வட்டத்தின்

கவிதைக் கண்ணாடிகளில் !

தமிழ் தன்னை விடுதலையாய் உணர்ந்தது

எங்கள் இலக்குவனாரின் சொல்லிலும் செயலிலும் !

எங்கள் பெருமை எதிலும் சிறந்தது

இலக்குவனாரின் மாணவர் என்பது !

அவர் நெஞ்சில் எரிந்த

விடுதலை நெருப்பின்

பொறிகளுள் ஒன்றைப்

பேனாவில் ஊற்றினேன் !

இன்னும் அணையாமல்

ஊறிக் கொண்டிருக்கிறது !

அந்த நடையின் திருப்பம் ஒன்றில்தான்

மனித நடையின் துணிவைக் கற்றேன் !

அந்தப் பார்வையின் கூர்மை ஒன்றில் தான்

கேள்விகள் தொடங்கும்

நியாயம் தெரிந்தேன் !

அந்த மனிதனின் சொற்கள் அனைத்திலும்

உரிமை வாழ்வின் பொருளை உணர்ந்தேன்!

இலக்குவனார்க்குச் செய்வது இதுதான்

தமிழ்

தமிழர்

தமிழ்நாடு

ஆட்சியில்

உரிமையில்

விடுதலையில் !


- புதியபார்வை நவம்பர் 16-30, 2014 பக்.38-39, தரவு : கேசவன்
 - அகரமுதல 63 நாள் தை11,2046 / சனவரி 25, 2015