பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 5 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)
காட்சி – 5(நாடகக் காட்சி – 1)
அங்கம் : அருண் மொழி, பூங்குயில்
இடம் : அருண்மொழி இல்லம்
நிலைமை : (அருண் மொழி வருகைக்காகத்
திருமகள் காத்தே இருக்க
வருகின்றான் அருண்மொழி ஆங்கே!
பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!)
அருண் : கண்ணானக் கண்ணே!
ஏனிந்த வாட்டம்?
பெண்ணே! நான் நீங்கிச்
சென்ற நாள் ஒன்றே!
மனம் வேறு தவறு
செய்யாத போது
சினமென்னும் உறவைத்
துணை கொள்ளலாமோ?
பூங் : கண்ணான கண்ணா!
ஏனிந்த வாழ்வு?
உண்மை! நீர்! சென்ற
நாள் ஒன்று அறிவேன்!
மனமென்னும் கோயில்
தெய்வம் நீ! போக
வணங்குவது யாரை!
சொல்லுவாய்க் கொஞ்சம்?
அருண் : எங்கிருந்தாலென்ன?அறியாத பெண்ணா?
அங்கமே நீங்கும்!
மனமென்றும் நீங்கா!
பூங் : என்சொல்லைக் கேட்கும்
இதயமோ எனக்கில்லை
என்ன! நான் செய்வேன்?வழியொன்று சொல்வாய்?
அருண் : நனிக்கனியில் சொல்லும்
சுவையுள்ள பொருளும்
ஒன்றாகச் சேர்த்து
உரையாடும் போது
சொல்லவோர் வழியும்
இல்லையே கண்ணே!செல்வமே கோபம்
இன்னுமா! உனக்கு?
பூங் : வீசுந்தமிழ்க் காற்றாய்
வெயிற் கேற்ற நிழலாய்
பேசும் மொழி கண்ணா
பேசியது போதும்!
ஏங்கியது உள்ளம்
உன் மொழி கேட்க!
நீங்கியது வாட்டம்!
நெருங்கவே வெட்கம்!
அருண் : சிணுங்கியது போதும்!
புசிப்போமா கனியை!
கனியே நான் சென்ற
ஊர் பற்றிச் சொல்வேன்!
பூங் : உம் சொல்லே இன்ப
வெள்ளமாய் ஓட!
நமக்கென்ன! கனியும்
வேண்டுமா? அத்தான்!
அருண்: ஐயய்யோக் கண்ணே!
இது என்ன பெண்ணே!
பைங்கொடி உண்ண
நான் காண வேண்டும்
பூங் : நீர் உண்ணும் முன்னே
நான் உண்ணலாமா?
விருந்தோம்பல் அறியா
தமிழ்ப் பெண்ணும் உண்டா?
அருண் : உணராதார் சொன்ன
தமிழ்நூல்கள் இல்லை
பெண்மைக்குச் சான்று
நீதாண்டிக் கண்ணே!
(காட்சி முடிவு)
(பாடும்)
Comments
Post a Comment