விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!
விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!
காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக்
கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக்
காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே
அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப்
பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும்
அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை
போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் – சின்ன மகள்.
கமலக் கரங்களால், தும்பைப் பூக்கக் கொட்டுகிறான், குறுநடைச் சிறுவன்!
பிள்ளைக் கனி!! ஆகா, அந்தத் தும்பைப் பூவின் நிறம்தான் எவ்வளவு
வெண்மையானது! அதையும் மிஞ்சும் அந்த உழவனின் உள்ளம் தான் எத்தகையது.
பாடுபடுகிறான் – தசைகள், அசையாத நேரமில்லை. அவனுக்கு, உழைப்புதான்!
உழைப்பிலே மலர்கிறது. செந்நெல்கதிர்கள்!! ஆனால், கதிர் கண்டதும், தனக்கு
வாழ்வளிக்கும் தாயை மறந்துவிடவில்லை பலன் பெற்றதும், பலன் தந்தோரை மறக்கும்
பதரல்லவே அவன். அதனால் மாதாவுக்கு மரியாதை செய்ய நினைக்கிறான்.
தன்னையும், தன்னைச் சார்ந்திருக்கும்
கோடானுகோடி உயிர் இராசிகளையும் உய்விக்கும் அன்னை வழங்கும் பரிசைக் கண்டு
பரவசமடையும் அவன், விழா கொண்டாடுகிறான். விளைச்சல் விழா வியர்வை பயன் தந்த
நாளைக் குறிக்க ஓர் விழா! பலன் கருதாது பரிசளிக்கும் பூமியன்னையின்
ஞாபகார்த்தமான விழா! ஏன், அவனுக்குப் பெருமிதம் வராது? பூமியிருக்கும் வரை
எனக்கேது கவலை? என்று பூரிப்போடு பார்க்கிறான். அந்தப் பூரிப்பிலே, உலகமே,
காட்சி தருகிறது. மனக் கண்ணில். நிமிர்ந்து பார்க்கிறான் தனது குப்பத்தில்
கோலமிடும் கோதையர் கும்பல், குடமெடுத்தேகும் குல மாதர்வரிசை மலர் ஆடி
மகிழும் மகளிர் – அவர்தம் மொழிநாடியேகும் வீரர்! பள்ளுப்பாட்டு! பரவச
கீதம்! அவனது அரும்பு மீசைகளிலே, அவன் இதயத்திலிருந்து ஓடும் இன்ப
மூச்சுகள் தாக்குகின்றன. வீரம் கொட்டும் விழிகளிலே கனிவு வழிகிறது.
முறுக்கேறிய உடம்பினிலே குதூகலம் ஏறு நடைபோடுகிறான் எமக்கு நிகர் யாரிங்கே?
என்பது தென்படுகிறது, அவன் தோற்றத்தில்.
இத்தகைய உழவனைக் கண்டார், உலகப் பெரியார்! உளம் மகிழ வரைந்தார்.
உழுதுண்டு வாழ்வாரே, வாழ் வார் – மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
என்று. வள்ளுவப் பெருந்தகை சித்தரித்த,
உழுதுண்டு வாழ்வாருடன், இன்றைய உழவரை நினைத்துப் பார்த்தால், நெஞ்சு
சிலிர்க்கும், ஏர்பிடித்தவனுக்கே பார் ஆளும் வேந்தன் அடைக்கலம் – என்றோர்.
நிலை, தமிழகத்தில் இருந்ததுண்டு. அந்தத் தமிழகமா – இன்று? இல்லை! இல்லை!!
மிடுக்கோடு பார்க்கும் உழவன் இல்லை! ஆளரசுக்கு அடி மைப்பட்டு கூனல்
முதுகாகிப்போன ஏழை இருக்கிறான். ஆனால், அந்த ஏழையிடம் பரம்பரைக் குணம்
மட்டும் மாறிப்போய் விடவில்லை! தமிழ்ப்பண்பு, காய்ந்து போகவில்லை!
தன்னையும் உலகையும் வாழ்விக்கும் தாயைப் போற்றத் தவறவில்லை; அவன் உடல்
கறுத்து விட்டது. ஆனால் உள்ளம் தும்பைப் பூவாகவே யிருக்கிறது. அவனால் உலகம்
வாழ்கிறது. வள்ளுவப் பெருந்தகை வருணிப்பதுபோல, அவனைத்தான்
அரசுக்கட்டிலேறியோர் உள்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்! அவன், பலன்
கருதாத பூமியன்னையின், புத்திரனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டிருக்கிறான்!
ஆனால் அவனால் பலன் பெறும் அரசோ, அவனை ஏமாளியென்று எண்ணிக்கொண்டிருக்கிறது!!
எனினும், அவன், தன்னுடைய நன்றி காட்டும் விழாவை நடத்தத் தவற வில்லை!
பொங்கலை-மறந்துவிட வில்லை.
கவ்விக்கொண்டிருக்கும் காரிருளில் ஓர்
ஒளிச்சிதர் – இன்றைய பொங்கல் நாள், தமிழகத்திலே ஒரு பொன்னாளாகவிருந்த காலம்
ஒன்று உண்டு. ஆனால் இன்று அந்தப் பொன், தூசுகளாலும் தூர்த்தர்களின்
கழுகுப் போக்காலும், ஒளியிழந்து கிடக்கிறது. பழைய மாட்சியும், பண்டைப்
பெருமையும் இல்லை யென்றாலும், சிதறிய வைரத்தின் சிறுதுளிபோல, நமது
சிந்தனையில் ஒளியிட்டுக் கொண்டிருக்கிறது.
அதனாற்றான், இந்த நாளை, இன்னும் தமிழகம்
மறக்கவில்லை. விளைச்சல் விழா! விளைச்சல் வேறெங்கோ, கொட்டிச்
செல்லப்பட்டாலும், நாம் கொண்டாடத் தவறாமலிருக்கும் விழா. இத்தகைய பண்பு
நம்மிடையே ஒளியிழந்திருந்த காலம்போய், இன்று ஓரளவாவது சுடர்விட்டு
ஒளிவிடுகிறது. தூசு போக்கவும், நல்லறிவு பரப்பவுமான நற்பணி வளர்ந்து
வருகிறது. இனப் பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று எனும் வகைகளில், இந்த
ஆனந்த நாளிலே, அரசு பீடத்திலமர்ந்தும் உழைப்பவன் வாழவழி செய்யாது,
உறுமுதலையும் உதை தருவதையும் ஆட்சிப் பாதையாகக் கொண்டிருக்கும்
ஆட்சியினருக்கும் ஒன்றை அறிவுறுத்த விரும்புகிறோம்.
அந்த அறிவுரையும், வள்ளுவர்
வழங்கியதுதான். அல்லற்பட்டு ஆற்றது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும்
படை, என்றார் அப்பெரி யார். அந்தப் படை வளர்ந்து வருகிறது. அதனை எண்ணிப்
பாரீர் என்று அரசினருக்கு அறிவுறுத்துகிறோம்.
புதுநிலை வளரவும், புதுவாழ்வு விரையவும்,
வள்ளுவர் கண்ட திரு அகத்தைப் பெறவும் இந்த இன்ப நாளில்,
உறுதியெடுத்துக்கொள்வோம். வாழ்க திராவிடம், வருக இன்பம்.
திராவிடநாடு 1982 / 1953
– பொங்கல் மலர்.
Comments
Post a Comment