Sunday, April 14, 2013

சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி- முனைவர் ஆ.மணி

புதன், 13 சூலை, 2011

சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞராகிய சி. இலக்குவனார் அவர்கள் தொல்காப்பியத்தை மக்களிடயே உலவச் செய்யும் நோக்கத்துடன் தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற நூலை 1961இல் எழுதி வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1971இல் புதுக்கோட்டை வள்ளுவர் பதிப்பக வெளியீடாக வந்தது. தொல்காப்பியம் த்ழர்களும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்புவோரும் தறாது கற்றறிய வேண்டிய தனிப்பெரும்நூலாகும் என்ற பதிப்புரைக் கருத்து மெய்மையே. இந்நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகளில் பெரும்பேராசிரியர் தமிழண்ணலும் உதவியிருக்கின்றார் என்பது குறிக்கத்தகுந்த செய்தியாகும்.
தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூல் 1. படையல், 2. பதிப்புரை, 3. முன்னுரை, 4. எழுத்து, 5. சொல், 6. பொருள், 7. குறிப்பு அகராதி ஆகிய ஏழு கூறுகளைக் கொண்டது. திருக்குறட் கழகத்தின் பொறுப்பாளர் கோவிந்தசாமி என்பாருக்கு இந்நூல் அன்புப் படையல் ஆக்கப்பட்டுள்ளது. முன்னுரை 22 பக்கங்களில் தொல்காப்பியரின் காலத்தை ஆராய்ந்து, அவர்காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என முடிவுரைக்கின்றது.
தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல்தான் என்றாலும், அது பிறமொழிகளில் உள்ள இலக்கண நூல்களைப் போன்றதன்று; அது இலக்கிய ஆராய்ச்சி, உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியவற்றையும் தன்னகத்தே கோண்டு இலங்குகின்றது என்ற இலக்குவனாரின் கருத்து மனங்கொள்ளத்தக்கது.

     தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துக்களில் சில:
1.       ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44).
2.       இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துக்களின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45).
3.       மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துக்களின் பிறப்புப் பற்றிக் கூறும் கருத்துக்கள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65).
4.       தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்( scince of Litrature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக. (இலக்குவனார் 1971:274).
5.        எழுத்தாளராகவும் புலவராகவும் விரும்புவோர் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கியங்களையும் நன்கு கற்றல் வேண்டும். (இலக்குவனார் 1971:283).
எழுத்தாளராகவும் கவிஞராகவும் விரும்புவோர் தமிழறியாத நிலையே இன்றுள்ளது என்பதை நினைக்கும்பொழுது, அன்று அவர் கூறிய இன்று தமிழ்நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சிபுரிகின்றது என்ற கருத்து என்று மாறும் என்ற ஏக்கம் நம்முள் பிறக்கின்றது.
தமிழ் ஆய்வாளர்களும் தமிழறிய விரும்புவோரும் தெரிந்துகொள்ள வேண்டிய நூல் இது. கற்றுப் பயன்பெறுக.

1 கருத்து:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
அன்பு நண்பரே இன்று தங்களை வலைச்சரத்தில அறிமுகம் செய்துள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!







கணவன் மேல் உண்மையான அன்பில்லாதவளாகஇருக்கிற மனைவி, கணவன் எக்கேடு கெட்டாலும் நமக்கென்னவென்று பேசாமலிருப்பாள். நன்மாதோ, எந்தத் துன்பத்தைப் பொறுத்தாலும் கணவனுடைய தீயொழுக்கத்தை மட்டும் ஒருநாளும் பொறுக்கமாட்டாள்.
கணவனுடைய தீயொழுக்கத்தை வெளியிலும் சொல்லாமல், அவனையுஞ் சினவாமல், அல்லும் பகலும் ஓயாத வருத்தமும், துக்கமும், பொறாமையுங் கொண்டு தகுந்த உணவு உறக்கமில்லாமல், மனம் புண்ணாகி மடிவாளென்பது உறுதியே! ஓவியக்காரர் சுவரில் எழுதும் ஓவியங்களை வந்து பார்க்கும்படி ஒரு கணவன் தன் மனவியை அழைக்க, "அவள் ஆண் ஓவியமாயிருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் ஓவியமாயிருந்தால் நீர் பார்க்க உடன்பட மாட்டேனென்று' மறுமொழி சொன்னாள்.
""ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்;
பாவையர்தம் முருவெனில்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்''
(நீதி நூல், கணவர்-மனைவியர் இயல்பு, பாடல்-19)
ஓவியத்திற்கூடப் பெண் வடிவத்தை ஆடவர்கள் பார்க்கக் கூடாதென்கிற மனவுறுதியுள்ள கற்பரசிகள், தம்முடைய கணவர்கள் பிற மாதர்களைக் கூடிச் செய்யும் ஒழுங்கின்மைகளை எப்படிப் பொறுப்பார்கள்? ஆகையால், விலைமகளிர் முதலிய மாதர்களை ஆடவர்கள் கனவிலும் நினைக்காமலிருப்பது மிகவும் நன்மை. காமத்தை விலக்கஞ்செய்து சொந்த மாதர்களையே மேலாக மதிப்பவர்களே ஆடவர்களுள் சிறந்தவர்கள்! அவர்களே நல்லவர்கள்.
(மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பெண்கல்வி பெண் மானம்' நூலிலிருந்து...)

பேரிலக்கணம் கற்ற ஆசுகவி

பேரிலக்கணம் கற்ற ஆசுகவி








கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பேரிலக்கணங்களைக் கற்கப் பெரிதும் விரும்பினார். அதனைப் பெறத் தம் உடன் பிறப்புகளுடன் தென்னாடு நோக்கிப் பயணமாகி, திருநெல்வேலியை அடைந்தார். அங்கே தாமிரவருணி ஆற்றோரம் உள்ள சிந்துபூந்துறையில் அமைந்த, தருமபுர ஆதீனமடத்து வெள்ளியம்பலத் தம்பிரான் இலக்கண இலக்கியங்களில் மிக்க புலமை வாய்ந்தவர் என்பதைக் கேள்வியுற்றார். சுவாமிகளை அடுத்துத் தாம் இலக்கணம் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டார்.
தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாசருடைய இலக்கியப் பயிற்சியை அறிதல் பொருட்டு, "கு' என்பதை முதலெழுத்தாகக் கொண்டும், "ஊருடையான்' என்னும் சொல் இடையில் வருமாறும், மீண்டும் "கு' என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டு முடியுமாறும் ஒரு வெண்பா பாடுக'' என்றார். உடனே சிவப்பிரகாசர்,

""குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு''

என்னும் வெண்பாவைப் பாடியருளினார். இவ் வெண்பாவைப் பின் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.
குடக்கு ஓடுவான் எயிறு கொண்டாற்கு - மேற்றிசை நோக்கி ஓடும் சூரியனது பற்களை உடைத்தவருக்கு,
கேழல் முடக் கோடு முன்னம் அணிவாற்கு - பன்றியினது வளைவாகிய கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு,
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு - வடதிசையை நோக்கி ஓடுகின்ற தென்றலாகிய தேரினையுடைய மன்மதனது பகைவருக்கு,
தில்லை ஊர் - தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை - யானைத்தோல், புலித்தோல் ஆடைகளாகும்,
மேற்கொள்ளல் ஆன் - ஏறிச் செல்லுதல் காளைமாடாகும்,
என்னும் உலகு - என்று உலகத்தார் சொல்லுவர்.
வெண்பாவைக் கேட்ட தம்பிரான் சுவாமிகள் வியந்து பாராட்டி, சிவப்பிரகாசரைத் தழுவி அவருக்கும், அவர்தம் தம்பிகளாகிய வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவருக்கும், 15 நாள்களுக்குள் ஐந்து இலக்கணங்களையும் பாடம் சொல்லி முடித்தார் என்பது இலக்கிய வரலாறு கூறும் செய்தியாகும்.

இடைநின்று மீள்வரோ..?

இடைநின்று மீள்வரோ..?









பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்தும்' என்றும், "செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' அஃதெனச் செப்பிய வள்ளுவனின் வாய்மொழியை மறந்ததாகத் தெரியவில்லை மறத்தமிழர். "வினையே ஆடவர்க்கு உயிரே' என்றே விளங்கியிருந்தது அவர்தம் உள்ளம்.
""அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கிலை'' எனும் அன்றைய தமிழனோ காதலே வாழ்வெனக் காவியக் கருத்துளே திளைத்தாலும், பொருள் தேடிச் சென்றாலும் போர்க்களம் சென்றாலும் திசைமாறிச் செல்லாமல் இருந்திருக்கிறான் என்பதே திண்ணம். கருமமே கண்ணாகவும் இருந்திருக்கிறான் அன்றைய தமிழன் - தலைவன்.
அன்பொடு மரீஇய அகனைந்திணையை நுதலிய பொருளாகக்கொண்ட குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவிக்கும் தோழிக்குமிடையே ஒரு தவிப்புரை.
விலங்குகள் ஒன்றோடொன்று தமக்குள் அன்பைப் பரிமாறிக்கொண்டாலும் அதைக் கண்ணுறும் தலைவனுக்கு என் நினைவு வந்து, தான், சென்ற பணியை மறந்து என்னைத் தேடிவந்துவிடுவாரோ என்று அஞ்சுகிறாள் தலைவி.
"இடைநின்று மீள்வ' ரெனக் கவன்ற தலைவிக்கு வினையை முடிக்காமல் (பொருள் தேடிச்சென்ற) தலைவன் திரும்பமாட்டான். அவன் "நின்ற சொல்லன்' என்கிறாள் தோழி. அவன் பொருள் தேடிச் சென்றவழியில் அப்படி என்ன காட்சியைக் கண்டுவிட்டான் தலைவியின் நினைவு வர...?

""பொத்துஇல் காழ அத்த யாஅத்துப்
பொரிஅரை முழுமுதல் உருவக் குத்தி
மறம் கெழு தடக்கையின் வாங்கி, உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப்பு யானை கண்டனர் - தோழி!
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடந்தொறும்
காமெர் பொருட் பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே''

புரையற்ற யாமரத்து அடிமரப் பட்டைகளைத் தனது தந்தத்தால் பெயர்த்து பசியோடு நிற்கும் பெண் யானைகட்குத் தரும் ஆண் யானைகள் நிறைந்த வழியேதான் இந்தத் தலைவன் பொருள்தேடச் செல்கிறான். இவ்விலங்குகளின் அன்பு பரிமாற்றத்தில் தன்னை மறந்து சென்ற பணியை மறந்து எனது நினைவில் "இடை நின்று மீள்வரோ' என்று ஐயுறுகின்றாள் தலைவி. தலைவன் பொருளைத் தேடிச் சென்றுள்ளான். அவ்வினை முடித்தே திரும்புவன் என்று தேற்றுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

Saturday, April 6, 2013

நீ... எந்தச் சாதி?

நீ... எந்தச் சாதி?

First Published : 07 April 2013 12:38 AM IST
கவிமணி எழுதிய கவிதைகளுள் "நிந்தாஸ்துதி'யும் ஒன்று. பாட்டுடைத் தலைவனைக் குறைகூறுவது போல் பாராட்டும் பண்பே "நிந்தாஸ்துதி' எனப்படும். தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானை,
  ""தந்தை மலையாளி, தாய்மாமன் மாட்டிடையன்
    வந்த ஒரு மச்சானும் வாணியனே -  சந்தமும்
   விண் முகத்தை எட்டும் அயில் வேலேந்து
   பன்னிருகைச் சண்முகத்திற்கு சாதி யெதுதான்?''

என்கிறார். அதாவது, முருகனின் தந்தை சிவன் கயிலை மலையில் வசிப்பதால் அவர் மலையாளி. தாய் மாமன் விஷ்ணு மாடு மேய்த்த கண்ணன் ஆகையால் அவர் மாட்டிடையன். திருமாலின் மகன் பிரம்மன் ஆகையால் அவர் "மச்சான்' ஆகிறார். அவர் கலைவாணியின் கணவர் ஆதலால் வாணியன். ஆகவே, முருகா! உன்னை எந்தச் சாதியில் சேர்ப்பது? என்று கவிமணி நகைச்சுவை உணர்வுடன் வியந்து கேட்கிறார்.

பகுதி தகுதி விகுதி

பகுதி  தகுதி  விகுதி

First Published : 07 April 2013 12:31 AM IST
எதையுமே நேரடியாகச் சொல்லிவிட்டால் அதில் ஒரு சுவை இருக்காது. அதையே ஒரு புதிராகச் சொல்லும்போது சற்றே சிந்திக்கவும், சிந்தித்து விடையைக் கண்டுபிடிக்கும் போது மகிழ்ச்சியோடு அதை நினைவில் கொள்ளவும் முடிகிறது.
இராமலிங்க அடிகள், தனியொரு மனிதராய் தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் செய்த தொண்டு அளப்பரியது. அவர் அறுகம்புல் பற்றி எழுதியுள்ள ஒரு வெண்பா படித்து, சிந்திக்க இன்பம் தருகிறது.

""பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டி - தகவின்
அருச்சித்தால் முன்னாம்; அதுகடையாம்
       கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து''

பகுதி தகுதி விகுதி என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அருச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும்.
சிற்சபையானை எதைக்கொண்டு அருச்சித்தால், எது உண்டாகி, எது கிடைக்கும்? என்பதுதான் இப்பாடல் கூறவரும் கருத்து. பகுதி, தகுதி, விகுதி என்பதில்,
இகலில் இடையை இரட்டி: இடையில் உள்ள எழுத்து "கு' (பகுதி, தகுதி, விகுதி). இதைக் கூட்டினால் மூன்று "கு' வரும். இதை இரட்டித்தால் ஆறு "கு' - அறுகு வரும். (அறுகு-அறுகம்புல்).
அருச்சித்தால் முன் ஆம்: அறுகம்புல் கொண்டு அருச்சித்தால் முன் உள்ள எழுத்துகளான (ப, த, வி) - பதவி என்பது வரும். (பதவி - சிவபதம்).
அது கடை ஆம்: பதவி ஆகிய சிவபதம் என்னும் நிலை வந்தால், கடைசி எழுத்தினைக் கூட்ட (தி,தி,தி) மூன்று "தி' வரும். அதாவது முத்தி (மோட்சம்) கிடைக்கும். இவ்வாறு வள்ளலார் சொற்களை நயம்படக் கையாண்டுள்ளார்.