இடைநின்று மீள்வரோ..?
- Get link
- X
- Other Apps
இடைநின்று மீள்வரோ..?
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்தும்' என்றும், "செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' அஃதெனச்
செப்பிய வள்ளுவனின் வாய்மொழியை மறந்ததாகத் தெரியவில்லை மறத்தமிழர். "வினையே
ஆடவர்க்கு உயிரே' என்றே விளங்கியிருந்தது அவர்தம் உள்ளம்.
""அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கிலை'' எனும் அன்றைய தமிழனோ காதலே
வாழ்வெனக் காவியக் கருத்துளே திளைத்தாலும், பொருள் தேடிச் சென்றாலும்
போர்க்களம் சென்றாலும் திசைமாறிச் செல்லாமல் இருந்திருக்கிறான் என்பதே
திண்ணம். கருமமே கண்ணாகவும் இருந்திருக்கிறான் அன்றைய தமிழன் - தலைவன்.
அன்பொடு மரீஇய அகனைந்திணையை நுதலிய பொருளாகக்கொண்ட குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவிக்கும் தோழிக்குமிடையே ஒரு தவிப்புரை.
விலங்குகள் ஒன்றோடொன்று தமக்குள் அன்பைப் பரிமாறிக்கொண்டாலும் அதைக்
கண்ணுறும் தலைவனுக்கு என் நினைவு வந்து, தான், சென்ற பணியை மறந்து என்னைத்
தேடிவந்துவிடுவாரோ என்று அஞ்சுகிறாள் தலைவி.
"இடைநின்று மீள்வ' ரெனக் கவன்ற தலைவிக்கு வினையை முடிக்காமல் (பொருள்
தேடிச்சென்ற) தலைவன் திரும்பமாட்டான். அவன் "நின்ற சொல்லன்' என்கிறாள்
தோழி. அவன் பொருள் தேடிச் சென்றவழியில் அப்படி என்ன காட்சியைக்
கண்டுவிட்டான் தலைவியின் நினைவு வர...?""பொத்துஇல் காழ அத்த யாஅத்துப்
பொரிஅரை முழுமுதல் உருவக் குத்தி
மறம் கெழு தடக்கையின் வாங்கி, உயங்குநடைச்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப்பு யானை கண்டனர் - தோழி!
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடந்தொறும்
காமெர் பொருட் பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே''
புரையற்ற யாமரத்து அடிமரப் பட்டைகளைத் தனது தந்தத்தால் பெயர்த்து பசியோடு நிற்கும் பெண் யானைகட்குத் தரும் ஆண் யானைகள் நிறைந்த வழியேதான் இந்தத் தலைவன் பொருள்தேடச் செல்கிறான். இவ்விலங்குகளின் அன்பு பரிமாற்றத்தில் தன்னை மறந்து சென்ற பணியை மறந்து எனது நினைவில் "இடை நின்று மீள்வரோ' என்று ஐயுறுகின்றாள் தலைவி. தலைவன் பொருளைத் தேடிச் சென்றுள்ளான். அவ்வினை முடித்தே திரும்புவன் என்று தேற்றுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment