Saturday, February 10, 2018

தமிழ் வளர்கிறது! 19-21 : நாரா.நாச்சியப்பன்

 

தமிழ் வளர்கிறது! 19-21 : 


ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன்
அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால்
பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை
படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் !
ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர்
உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா?
ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை
எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ! (19)


அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும்
ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் !
திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத்
திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார் !
உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்றால்
ஒதுங்குகின்றார் ! நூற்பொருளில் திருத்தம் சொன்னால்
கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்றார் !
காண்பதெல்லாம் விந்தைகளே ! தமிழர் நாட்டில்! (20)

ஏனென்று கேட்பதற்கோர் ஆளு மின்றி
இருக்கின்ற காரணத்தால் தமிழர் நாட்டில்
தானென்று திரிகின்ற போக்குக் கொண்டார்
தலைகனத்துத் திரிகின்ற நிலைமை கண்டோம்.
பேனொன்று தலையேறி இருந்து விட்டால்
பெருமையுள்ள தாய்விடுமா என்று பார்த்தால்
யானென்றும் உயர்ந்தவனென் றெண்ணு கின்ற
அவர்நிலைமை யறிந்திடுவார் உண்மை காண்பார்!  (21)
(தொடரும்)
பாவலர் நாரா. நாச்சியப்பன்:
தமிழ் வளர்கிறது

Friday, February 9, 2018

அகல் விளக்கு – மு.வரதராசனார். 5.

அத்தியாயம் 2
  சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி – சந்திரனுடைய சிற்றப்பா – தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு மற்ற நாட்களைத் தம் சிற்றூரில் சலிப்போடு கழிப்பார். அப்போதும் நிலம் எப்படி தோப்பு எப்படி என்று கவனிக்காமல், ஓர் ஆலமரத்தடியில் தம் தோழர்களோடு புலிக்கோடு ஆடிக் கொண்டிருப்பார்; புலிக்கோடு மாறிச் சீட்டாட்டம் வந்தபோது, அவர் கையில் சிகரெட்டும் வந்து சேர்ந்தது. சாராயத்தோடு மேனாட்டுக் குடிவகைகளும் வந்து சேர்ந்தன. சந்திரனுடைய சின்னம்மா நல்லவர்; நல்லவராக இருந்து பயன் என்ன? பெண் என்றால் கணவன் சொன்னதைக் கேட்டு வாய் திறக்காமல் பணிந்து நடக்க வேண்டுமே தவிர, கணவன் சீரழியும் நிலையிலும் அன்பான இடித்துரையும் சொல்லக்கூடாது; தன் உரிமையை நிலைநாட்டித் தற்காப்பு முயற்சியும் செய்யக்கூடாது. உரிமையே இல்லாத பெண் கணவன் கெடும்போது தானும் சேர்ந்து கெடுவது தவிரவேறு வழி இல்லாதவளாக இருக்கிறாள். சந்திரனுடைய சின்னம்மா அப்படித்தான் குடும்பம் கெடுவதைப் பார்த்து, உள்ளம் நொந்து கொண்டிருந்தார். நீந்தத் தெரிந்தும்கைகால்களை மடக்கிக் கொண்டு கிணற்றில் மூழ்குவது போல் இருந்தது அவருடைய நிலைமை. கடைசியில் சிற்றப்பாவின் நிலங்கள் ஏலத்துக்கு வந்தபோது, சந்திரனுடைய தகப்பனாரே ஏலத்தில் எடுத்துக் கடன்காரனை அனுப்பிவிட்ட பிறகு தம்பியின் குடும்பத்துக்கென்று ஐந்து காணி நன்செய் நிலங்களை ஒதுக்கிவிட்டு, மற்றவற்றைத் தம் சொத்து ஆக்கிக் கொண்டார். அந்த ஐந்து காணி நிலங்களையும் தம்பியின் பொறுப்பில் விடாமல், தம்பி பெயரில் வைக்காமல், தம்பி மக்கள் இருவர்க்கும் பொதுவாக எழுதி வைத்தார். தம் பொறுப்பில் பயிரிட்டு விளைந்ததை அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார். அந்தச் செயலைப் பெருந்தன்மையானது என்று ஊரார் போற்றினார்கள். தம்பி மனைவியோ, அந்த உதவிக்காகத் தம் மூத்தவரைத் தெய்வம் போல் போற்றி அவர் கொடுத்ததைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
தம்பி கெட்டுப் போனதற்குக் காரணம் நகரத்துப் பழக்கமே என்பது சாமண்ணாவின் உறுதியான எண்ணம். அந்த எண்ணம் சந்திரனுடைய படிப்புக்கே இடையூறாக நிற்கும் போல் இருந்தது. அந்தச் சிற்றூரில் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பதற்கே பள்ளிக்கூடம் இருந்தது. சந்திரன் எட்டாவது படித்த ஆண்டில், வீட்டுக்கு வந்தவர்கள் பலர், அவனுடைய தந்தைக்கு மேற்படிப்பைப்பற்றி வற்புறுத்தினார்கள். “இந்தப் படிப்பே போதும், நமக்கு இந்தச் சிற்றூரில் வேண்டியது என்ன? கடிதம் எழுதவும் செய்தித்தாள் படிக்கவும் வரவு செலவுக் கணக்குப் போடவும் தெரிந்தால் போதும். பையன் எட்டாவது படித்து முடித்தால் அதுவே போதும், நல்ல அறிவோடு இருந்தால், இருக்கும் சொத்தை வைத்துக்கொண்டே சீமானாக வாழலாம். நான் நாலாவது வரையில்தான் படித்தேன். அந்தப் படிப்பை வைத்துக் கொண்டே நான் இந்தச் சிற்றூரிலும் பக்கத்து ஊர்களிலும் நல்ல மதிப்போடு வாழவில்லையா? இந்தப் படிப்புப் போதும்” என்று அவர் மறுமொழி கூறுவார். அவர்களோ, காலம் மாறிவிட்டது என்பதை வற்புறுத்தி, பக்கத்து நகரத்துக்கு அனுப்பிப் பத்தாவது வரையில் படிக்க வைக்க வேண்டும் என்றும், இந்தக் காலத்தில் அதற்குக் குறைவாகப் படித்த படிப்புக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்லி வற்புறுத்தினார்கள். நகரம் என்று சொல்லக் கேட்டதும், அவர்க்குத் தம் தம்பியின் சீர்கேடு நினைவுக்கு வரும். உடனே அவர்களைப் பார்த்து, “நீங்கள் சொல்கிறீர்கள், நானும் பார்த்திருக்கிறேன், பட்டணத்துப் பக்கம் போனால் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் திரும்புவதில்லை. அங்கே போய்ச் சில நாள் தங்கி வந்தால் போதும், திரைப்படம், உணவகம், கச்சேரி, ஆட்டக்காரிகள், குதிரைப் பந்தயம் இப்படிப் படிப்படியாகக் கெட்டுப்போய்க் கடைசியில் ஓட்டாண்டியாவதற்கு வழி தேடிக்கொள்கிறார்கள். அந்தப் பட்டணத்து வாழ்வும் வேண்டா; அதனால் வரும் படிப்பும் வேண்டா” என்று மறுத்துவிடுவார்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார்
அகல்விளக்கு

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5

இலம் என்றசை இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்” என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள்! அந்த திசைநோக்கி தடக்க வேண்டும்.
நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம். ”வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” என்று அன்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். இன்று குடம் நிறையக் கறக்கும் மாடுகளை நமது நாட்டில் பஞ்சாபில்தான் பார்க்க முடிகிறது அடுத்து குஜராத்தில்தான் பார்க்க முடிகிறது. நாடு முழுதும் அத்தகைய கால் நடைகள் வளர வேண்டும்.
அறிவியல், நாட்டுக்கு இன்றி அமையாதது. அறிவியலும், ஆன்மிகமும் முரண்பட்டதல்ல. ஆன்மிகமும் ஓர் அறிவியல்தான். அறிவியல் என்பது வளரும் உலகத்தை, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகத்தை, நமக்குப் பயன்படுத்திக் கொள்வது, வளர்ப்பது, வாழ்வது, என்பதுதான். நம்முடைய பொருளாதாரம் செழிப்பாக இருக்கவேண்டும். கடன் வாங்கிய காசு கையில் புரளலாம். ஆனால் சொந்தமாகாது. நம்முடைய நாட்டினுடைய சொந்த மூலாதார வளங்கள் பெருகி ஆக வேண்டும், நம்முடைய மூலதனம் பெருகவேண்டும், பன்னாட்டு மூலதனங்களைவிட, சொந்த மூலதனம்தான் தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!
எல்லோரும்தான் பிறக்கிறார்கள், எல்லோருக்கும் ஒரே ஒரு முறைதான் பிறப்பு. ஆதலால் மீண்டும் பிறக்கப் பேசவது நிச்சயமில்லை. ஆதலால், இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அந்த இலட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? நம்முடைய நாடு, நம்முடைய காலத்தில், நாடா வளத்தனவாக விளங்கவேண்டும். தாழ்விலாச் செல்வர் பலர் வாழவேண்டும், வளரவேண்டும். இந்த நாட்டை, இமயம் முதல் குமரி வரையில் ஒரு நாடாக ஆக்குவோம் கூட்டுவாழ்க்கை வாழ்வோம்! கூடிவாழ்தல் என்பது ஒரு பண்பாடாக இருக்கவேண்டும்.
னநாயக மரபுகளைக் கடைப்பிடிப்போம் என்பது எல்லாம், இத்தநாட்டு வாழ்க்கை நெறியில், முறையில், உயிர்ப்பிக்கவேண்டும். அன்பு நெறி இந்த நாட்டு நெறி; உலகத்தின் மிகப்பெரிய சமயமான புத்த மதத்தைக் கொடுத்தது இந்தியா-மறந்து விடாதீர்கள். போர்க் களத்தைவிட்டு விலகினான் அசோகன். உயர்ந்த அன்பு நெறியை இந்த நாடு ஒரு காலத்தில் போற்றியது. பாராட்டியது. இன்று இந்த நாட்டில் எங்குபார்த்தாலும் வன்முறைகள் கிளர்ச்சிகள் தீவிரவாதங்கள்! இவைகளை எதிர்த்துப் போராடி, அன்பும், அமைதியும், சமாதானமும், தழுவிய ஒரு சமூக அமைப்பை நோக்கி நாம் நடைபோட வேண்டும்.
எங்கே போகிறோம்? தெளிவாக முடிவுசெய்யுங்கள். எங்கே போகவேண்டும்? தெளிவாக முடிவுசெய்யுங்கள்.இதைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்க, தொடர்ந்து பேச, வானொலி இசைவு வழங்கியிருக்கிறது. நீங்களும் கூடவே வாருங்கள்! கூடவே சிந்தனை செய்யுங்கள். என்னுடைய பேச்சில் ஐயங்கள் இருந்தால் எழுதுங்கள் வினாக்கள் இருந்தால் தொடுங்கள்! விடைகள் வேண்டுமா? தரப்படும். ஆனாலும் ஒரு நாடு எதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறதோ, அந்தத் திசையில் அந்த நாடு நகரும் என்பதை மறந்து விடாதீர்கள்!
நாம் அனைவருமாக வானொலியின் மூலம் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்தைப் பற்றி, இந்த நாட்டி னுடைய எதிர்காலத்தைப்பற்றி பேசவேண்டும்! சிந்திக்க வேண்டும்! செல்ல வேண்டும் அப்போதுதான் நமது நாட்டை நல்ல திசைக்கு அழைத்துச் செல்லமுடியும். எங்கே போகவேண்டுமோ அங்கே போகமுடியும். அந்தத் தடம் அதோ தெரிகிறது! அந்தத் தடத்தைப் பிடிப்போம், தடம் மாறாமல் நடந்துபோவோம்! வருக! வருக!
(15-8-94 அன்று மதுரை வானொலியில் ஒலிபரப்பான உரை)
(தொடரும்)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்:
எங்கே போகிறோம்?