Wednesday, January 16, 2019

வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்


முனைவர் கு.மோகன்ராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6)
முனைவர் வாணி அறிவாளன்
   திருக்குறள் ஆய்வு, திருக்குறளைப் பரப்புதல், திருக்குறளை வாழ்வியலாக்குதல் எனத் தம் வாழ்வினைத் திருக்குறள் சார்ந்த நற்பணிகளுக்காகவே ஒப்படைத்துக்கொண்டவர், திருக்குறள் மாமுனிவர் திரு.கு.மோகனராசு அவர்கள். அவர் தம் வாழ்க்கை வரலாற்றை 20 தொகுதிகளாக வெளியிடவேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை வாழ்க்கைச் சுவடுகள் என்ற பெயரில் வெளியிட்டுவருகிறார். அவர்தம் குழந்தைப் பருவ வாழ்க்கையை வாழ்க்கைச் சுவடுகள்–1: குழந்தைப் பருவம் என 2013இல் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக ‘வாழ்க்கைச் சுவடுகள் – பகுதி 6 எனும் இந்நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் தன்வரலாற்று நூலில், அன்னார் 01-08-1973  அன்று சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வுப்பகுதியில் ஆராய்ச்சித் துணைவராகச் சேர்ந்தது முதல் 31-12-1973 முடிய ஐந்து திங்களில் தான் ஆற்றிய பணிகள் பற்றிய வரலாற்றினைத் தொகுத்தளித்துள்ளார்.
       திருக்குறள் மாமுனிவரான பேரா.கு.மோகனராசு அவர்கள், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து, முனைவர் சாந்தி அம்மையாரைக் கலப்புத் திருமணம் புரிந்து, இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த அவருக்குச் சரியான பணி ஏதும் வாய்க்காத நிலையில், தொடக்கப் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்திப் பொருளீட்டிவந்தார். அவ்வறுமைச் சூழலில், இவர்மேல் அன்புகொண்டிருந்த சிறுவை மோகனசுந்தரனார், தம் திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுமாறு அழைப்புவிடுத்தார். அப்பணி, ஊதியமற்ற கல்வித்தொண்டுதான் என்றாலும், முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ச்சியுற்றார். இந்நிலையில், கந்தசாமி நாயுடு கல்லூரியில், தமிழ் விரிவுரையாளர் பணிக்கு வாய்ப்பிருப்பதை அறிந்து, சிறுவையார் பேரா.சஞ்சீவியின் பரிந்துரையின்வழி, பேரா. மோகனராசுவுக்கு அப்பணி கிடைக்க முயற்சி செய்தார். ஆனால் பணிநியமனம் இறுதியில் வேறு ஒருவருக்கு அளிக்கப்பெற்றது.
மீண்டும், பெங்களுர் மகாராணி அறிவியல்-கலையியல் கல்லூரியில், தமிழ் விரிவுரையாளர் பணி நேர்முகத்தேர்விற்காகப் பேராசிரியரால் அனுப்பிவைக்கப்படுகிறார். ஆனால் அக்காலச்சூழலில், தமிழர்-கன்னடியர் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தமையால் தம் குறிக்கோள் வாழ்வு கெட்டுவிடுமோ எனப் பயந்து அங்கு பணியாற்ற விரும்பாமல்  அக்கல்லூரி முதல்வர் மாநாயகர்(Major) நாகம்மாளிடம் தன் முடிவைக் கூறிவிட்டுச் சென்னை வருகிறார். அவர் தாயாரைத் தவிர உறவினர், நட்பினர் அனைவரும் வருத்தமடைந்தனர். முக்கியமாக அப்பணிக்கு ஏற்பாடு செய்திருந்த பேரா.ந.சஞ்சீவி பெரிதும் வருத்தமுற்றுக் கண்ணீர் விட்டாராம். வறுமை தொடர்ந்தது. அச்சமயத்தில் சென்னைப் பல்பலைக்கழகத்தில் இயங்கிவந்த திருக்குறள் ஆய்வு மையத்தில், முதன்மை விரிவுரையாளராக இருந்த முனைவர் க.த.திருநாவுக்கரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசியராகப் பணி அமர்த்தப் பெற்றமையால் மீண்டும் சிறுவையாரும், சஞ்சீவியாரும் அப்பணியில் இவரை அமர்த்தப் பெரும்முயற்சி எடுத்தனர். அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் இவர்தம் பண்புநலன்களையும், குறிக்கோளுடன் செயல்பட்டுவரும் வாழ்க்கை முறைகளையும் கூறி இவர் இல்லாமலே அறிமுகப்படுத்தினர். அவ்விரு சான்றோர்தம் விருப்பத்திற்கேற்றவாறு       1-8-1973  அன்று திருக்குறள் துறையில் ஆராய்ச்சித் துணைவராகப் பணியில் இணைந்தார். அப்போது அவருக்கு முதல் குழந்தை ‘பாவேந்தன்’ பிறந்திருந்த நேரம்.
  முதலில் துறை சார்ந்த அச்சுப்படித் திருத்தப் பணிகளைச் செம்மையாகச் செய்துள்ளார். பின்னர் சிறுவையார் பணியாற்றி வந்த கலைக்களஞ்சிய விரிவாக்கப் பணியில் இணைந்து தமிழியல் சார்ந்த கட்டுரைகளை அடைவு செய்துள்ளார். பணிஆணை இல்லாமல் பணிசெய்த 15 நாட்களுக்கான ஊதியத்தைப் (200உரூ) பேராசிரியர் தானே கொடுத்து மகிழ்ந்தாராம் 31.7.1973 அன்று சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களிடமிருந்து பணிஆணையைப் பெறுகிறார்.
   இந்திய விடுதலை வெள்ளிவிழாவைஒட்டி, பத்துநாள் கருத்தரங்கம் ஒன்று பேரா.ந.சஞ்சீவி அவர்களால் நடத்தப்பெற்றுள்ளது. கலைக்களஞ்சியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தமையால் பேரா.ந.சஞ்சீவி அவர்கள்தம் அறிவுரையின்படி, ‘கலைக்களஞ்சியத்தில் தமிழியல் சார்ந்த கட்டுரைகள்’, ‘கலைக் களஞ்சியத்தில் முனைவர் தெ.பொ.மீ. அவர்களின் இலக்கண, இலக்கிய, சமயக் கட்டுரைகள் (16)’ என்ற இரு ஆய்வுக்கட்டுரைகளை ஆயத்தம் செய்து வரைந்துள்ளார்.(12.8.1973, ஞாயிற்றுக்கிழமை அன்று, பேரா.கு.மோகனராசு அவர்களின் 25ஆவது பிறந்தநாள். மறுநாள், திங்கட்கிழமை, பேரா.ந.சஞ்சீவி அவர்களிடமிருந்து பிறந்தநாள் பரிசாக இரு விண்ணப்பங்கள், அவற்றுக்கான காசோலையுடன் வழங்கப்பெற்றன. ஒன்று, முனைவர் பட்டத்திற்கான விண்ணப்பம், மற்றொன்று,  மானுடவியல் பட்டப் படிப்புக்கான விண்ணப்பம். பேராசிரியர் தன்மீது கொண்டிக்கும் அன்பும் அக்கறையும் கண்டு வியந்து, அவர் மகிழுமாறு தன் மானுடவியல் பட்டயப் படிப்பை விடுமுறை எடுக்காது ஆர்வமுடன் கற்றுள்ளார்.
  இந்நிலையில் ஆசிரியர்–மாணவர் கருத்தரங்கில் வழங்க எண்ணியிருந்த ‘கலைக்களஞ்சியத்தில் தெ.பொ.மீ. கட்டுரைகள்’ கட்டுரையை, வெள்ளிவிழாக் கருத்தரங்கில் வழங்குமாறு பேரா.சஞ்சீவியால் பணிக்கப்படுகிறார். இவர் நடுவுநிலை பிறழாது தெ.பொ.மீயின் ஆய்வுக் கட்டுரைகளின் நிறைகளை மட்டுமின்றிக் குறைகளையும் சுட்டித் திறனாய்வாகக் கட்டுரையை எழுதி, பேராசிரியர் தந்த ஊக்கத்தால் கருத்தரங்கில் வழங்கிப் பாராட்டுகளையும் பெறுகிறார். அக்கருத்தரங்க அறிவிப்புப் பலகையில் சீர்திருத்த எழுத்தைப் பயன்படுத்தி எழுதி, அதற்கும் பாராட்டு பெறுகிறார். ‘கலைக்களஞ்சியத் தமிழியல் பொதுக்கட்டுரைகள்’ எனும் தலைப்பிலான ஆய்வுரையயை ஆசிரியர் – மாணவர் கருத்தரங்கில் வழங்கிப் பாராட்டு பெறுகிறார். அக்கட்டுரை, தமிழாய்வு (2) இதழில் (1973) வெளிவந்துள்ளது.
            ‘திருக்குறளும் பழந்தமிழ் நூல்களும்’ என்ற முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பைப் பேரா.சஞ்சீவி அவர்கள், ‘தொல்காப்பியமும் திருக்குறளும்’ – ஓர் ஒப்பாய்வு என மாற்றியமைக்கிறார். பேராசிரியர் சஞ்சீவி அவர்களைப் பேரா.கு.மோகனராசு அவர்கள், நடமாடும் அரிமா எனக் குறிப்பிட்டுள்ளார். தன் இல்லத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான (1-12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள்) வகுப்புகள், சிறுவையாரின் திருக்குறள் கல்லூரியில் முதுகலை வகுப்புகள், தன் பட்டப்படிப்பு, தம் ஆய்வுப் பணிகள், அடைவுப் பணிகள், நூல் மதிப்புரை, அச்சுப்பணித் திருத்தம் எனப் பல்வேறு பணிகளையும் திறம்பட ஆற்றிய ஐந்து திங்கள் காலத்தில் அவர்தம் தூக்கநேரம் வெறும் 3 மணிநேரங்கள்தான் 12 (அ) 1 மணிக்குத்  தூங்கி, விடியற்காலை 4.00 மணிக்கு விழித்துக்கொள்வாராம். இவ்வாறு விழிகளும் உடலும் அயராது பணியாற்றிய தன்மையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
காலம் என்னோடு போட்டியிட்டுத் தோற்றுவிட்டது என்றுதான் எண்ணிப்பார்க்கிறேன். நான் காலத்தைவிட விரைவாகப் பணியாற்றினேன் என்றுதான் எண்ணுகிறேன். அது இன்றும் மலைப்பாகத்தான் இருக்கிறது.
 இந்தக் காலப்பகுதியில் தூக்கத்தை நான் துறந்தேன் என்பதில்லை; தூக்கத்தை நான் தூங்கவைத்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்நூலின் இறுதிக் கட்டுரையில், தாம் விரும்பிய திருக்குறள் துறையிலேயே பணியாற்றி வாழ்வில் உயர வழிகாட்டிய சிறுவை மோகனசுந்தரனாரையும், பேரா.ந.சஞ்சீவியையும் மனம் நெகிழ்ந்து நன்றி பாராட்டியுள்ளார்.  மேலும் தமது குடும்பத்தாரின் உறுதுணையையும் போற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுரை: தன் வரலாறுகள் என்பன, தனி வரலாறுகள் அல்ல. அவை, பல சான்றோர்களின் வரலாறுகளையும் உள்ளடக்கியதே. அந்த வகையில், பேரா.கு.மோகனராசுவின் இத் தன் வரலாற்று நூலும், அவர்தம் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமின்றிச்
  • சிறுவை மோகனசுந்தரனார் என்னும் தமிழ்த் தொண்டர்தம் சான்றாண்மை
  • பேரா.ந.சஞ்சீவி அவர்களின் ‘கனிவான மென்மையான உள்ளம்; மற்றும் விடுமுறையிலும் பணியாற்றிய கடமை உள்ளம்; ஆய்வுப் பணிகளில் ஓய்வின்றிச் செயல்பட்ட தன்மை’ எனப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பின்பற்றவேண்டிய நன்னெறிகள்.
  • முன்னைச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மாண்பமை நெ.து.சுந்தரவடிவேலு ஐயா அவர்களின் ஆளுமை.
  • பேரா.மு.சண்முகம் பிள்ளை, தஞ்சைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, பேரா.க.த.திருநாவுக்கரசு எனத் தகைமையிற் சிறந்த சான்றோர்களை அறிமுகப்படுத்தியமை
  • சாந்தி மோகனராசு அம்மையார், பேரன்புடன் தம் கணவரின் வாழ்க்கையில் உற்ற துணையாக விளங்கியமை
எனப் பலதிறப்பட்ட சான்றோர்களின் நற்பண்புகளை விளக்கும் நூலான இவ்வாழ்க்கை வரலாற்று நூல், வாழ்வில் நன்னெறிகளுடனும் குறிக்கோள்களுடனும் முன்னேறத்துடிக்கும் இளைய தலைமுறையினர்க்குக் கிடைத்த ஓர் அரிய நன்னூல். இந்நூலைத் தமிழுலகம் வரவேற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை.


முனைவர் வாணி அறிவாளன்
உலகத்திருக்குறள் மையம் தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்த்திய திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாட்டில் ஆற்றிய உரை.
கட்டுரையாளர் அறிமுகம்:
உயர்ந்த குணநலன்களால் சிறப்புற்று விளங்குபவர்;
அரிய அழகிய இனிய எளிய தமிழ்ச்சொற்கள் தங்கு தடையின்றி அருவியின் நீர்வீழ்ச்சியென நம் இதயங்களில் நிரப்புகின்ற பேச்சாற்றல் உடையவராம் முனைவர் வாணி அறிவாளன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையில் துணைப் பேராசிரியர். – சுடர்மேரி

Tuesday, January 15, 2019

பொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ

பொங்கல் புத்தாண்டு வாழ்த்து
பூத்தது புத்தாண்டு
பொங்கல் திருநாளில்
போயிற்று ஓராண்டு                                        
பொன்னான வாழ்நாளில்
சென்ற ஓராண்டில்
செய்தோமா நற்பணிகள்
என்றே சிந்திப்போம்
ஏற்போம் தவறுகளை
இன்றிந்த புத்தாண்டில்
ஏற்றமுடன் நற்பணிகள்
சாதிக்கச் சிந்திப்போம்
சாதனைகள் செய்திடுவோம்
பொங்கல் திருநாளில்
அகமெனும் பானையில்
அன்பெனும் நீரூற்றி
அறிவெனும் அரிசியிட்டு
பாசமெனும் பாலூற்றி
நேசக் கரங்களினால்
நேர்மை நெருப்பேற்றி
தீந்தமிழ்த் தேனூற்றி
தித்திக்கும் பொங்கலிட்டு
ஒற்றுமை உணர்வுபொங்க
உற்ற உறவினராய்
நற்றமிழ்ப் பற்றோடு
பொங்கலோ பொங்கலெனப்
பொங்கலிட்டு வாழியவே!
முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ

ஊட்டல் விரும்புவரோ? -முனைவர் க.தமிழமல்லன்

ஊட்டல் விரும்புவரோ?

இடுப்பொடியத் துணிதுவைத்தால் இடைமுரிந்து போகுமென்றே
எளிதாகச் சலவைசெய்ய எந்திரங்கள் வாங்கிவிட்டார்!
அடுப்பருகில் நின்றுபுகை அணைக்காமல் ஆக்குதற்கும்
ஆவியினைப் பெற்றுவிட்டார்! அப்புகையைப் போக்குதற்கும் 
அடுப்பின்மேல் புகைபோக்கி அமைத்துவிட்டார், போதாவா?
அம்மியிலே அரைக்காமல் கலக்கிகளை வாங்கிவந்தார்! கடுப்பின்றிக் கைகால்கள் வலிக்காமல் மாவரைப்பார்! 
கண்ணான தாய்மார்கள் கசங்காத உடையோடு!
என்றாலும் கறிச்சோற்றை இளம்பெண்கள் ஆக்குங்கால், 
என்றேனும் மீக்குழம்பைச் செய்யுங்கால், உப்புகாரம், 
நன்றாகச் சேர்வதில்லை! நாவிற்கே ஏமாற்றம்! 
நாவினிக்க உணவகத்தின் சுவையென்றும் வாராது! 
மென்றுமென்று தின்றாலும் சுவைமேன்மை இல்லையடா ! 
மெல்லமெல்லக் கிழமைக்கோர் நாள்ஆக்கும் பணிவிடுத்தார்! மெல்லியர்கள் நெஞ்சினிலே உணவகத்தின் எண்ணமடா 
மேலென்றே உணவகத்தில் உண்டுவிடச் சென்றிடுவார்! 
உணவாக்கும் நற்பணியால் உளம்விரியும் மகளிர்க்கே! 
உலைவைத்துச் சோறாக்கி உள்ளன்பால் அளிக்குங்கால், 
மணக்கின்ற மீன்குழம்பும் மனங்கவரும் மிளகுநீரும் 
மாந்தர்தம் அன்புறவை மாண்பாக்கும் தாயுள்ளம் 
உணவளித்தே உண்பாரைப் பார்த்தின்பம் கொள்ளுதற்கே 
ஒப்பில்லை! குடும்பத்தை மேம்படுத்தும் பண்பதுவே! 
பணப்பெருக்கம் மனச்சுருக்கம் தந்தடா! சமைக்கின்ற 
பண்பழித்து விக்கியிடம் ஊபரிடம் ஊண்கேட்டார்!
வீட்டுக்கே ஊண்கட்டை ஊபர்வந்து கொடுக்கின்றார்!
விலைபற்றி நலம்பற்றிக் கவலையின்றி வாங்குகின்றார்! 
பாட்டுகேட்டுப் படம்பார்த்துப் பேச்சொலியில் கவிழ்ந்தமக்கள், 
பாழான உணவுகளை விக்கியிடம் வாங்கிடுவார் 
ஆட்டூன்கள் கோழிமீன்கள் வீட்டுக்குள் தருகின்றார், 
அளவின்றி ஊறுசெய்யும் பிறநாட்டார் கேடுகளை, 
நாற்றாக நட்டுவிட்ட பயிர்நஞ்சை என்செய்வோம்? 
ஊட்டிவிட்டுச் சொல்லுகின்ற ஊழியரை விழைவாரோ?
உணவாக்கும் சோம்பேறி உணச்சோம்பல் கொள்வாரோ?
-முனைவர் க.தமிழமல்லன்
  • முனைவர் க.தமிழமல்லன்

Sunday, January 13, 2019

கண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்

அகரமுதல

 
 கண்ணீர்ப் பொங்கல்!
துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும்
      துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார்
வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை
      
வரிப்புலியாய்ப் பாய்ந்தெதிர்த்து வாகை கொண்டார்
அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்;      அமைதியெனும் பெயராலே குண்டு வீசித்
தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்;      தோழமையே பகையானால் என்ன செய்வார்?
சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச்
      சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து
வெங்களத்தில் வரும்விடியல் எனநி னைந்து
      வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார்
தங்குலத்தோர் விழியிழந்தும் உயிரி ழந்தும்
      தையலர்தம் கற்பிழந்தும் தயங்கா ராகித்
தங்குறிக்கோள் வெற்றிபெறும் வேளை யிற்றான்
      தடையாகிப் பாரதமே நின்ற தம்மா!
இனப்பகையை எதிர்ப்பானாஅமைதி பேசி
      எழும்பகையை எதிர்ப்பானாஈழ நாட்டான்
தனித்துலகில் நிற்கின்றான்சிங்க ளத்தார்
      தாங்குபடை கைக்கொள்ளத் தமிழன் மட்டும்
முனைக்களத்தில் வெறுங்கைய னாக நிற்க
      
முயல்வதனால் அமைதியுண்டோதமிழி னத்தை
நினைக்குமுளம் பொங்குவதால் விழிகள் பொங்கி
      நிலைகலங்கித் துடிக்கின்றோம் பொங்கல் நாளில்.
-கவிஞர் முடியரசன் 29-12-1987