Posts

Showing posts from February, 2016

என் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து

Image
அகரமுதல 12 1, மாசி 0 9, 2047 / பிப். 21, 2016 என் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து இலக்குவனார் திருவள்ளுவன்      21 பிப்பிரவரி 2016       கருத்திற்காக.. என்னைத் தாலாட்டிய மொழி எனதருமைத் தாய் மொழி என் இனிய தமிழ் மொழி எண்ணமெல்லாம் நிறைந்த மொழி என்னை நான் தொலைத்த போது என்னுள்ளே புதைந்த போது எண்ணெய் ஆக மிதந்து என் எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி இதயத்தின் நாளங்கள் முகாரி மீட்டினாலும் இனிமையான கல்யாணப் பண் பாடினாலும் இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய் இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில் முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும் முகவரி இழக்காது இலக்கிய உலகில் முத்தாக மிளிரச் செய்யும் இனிய மொழி மங்காப்புகழ்ச் சங்கப் புலவர்களும் அறநெறி தந்த ஆசான்களும் புரட்சி முழங்கிய கவிஞர்களும் கருத்தில் சிறந்த கவியரசர்களும் எப்போதும் அணைத்துக் கொண்ட மொழி எப்பொழுதும் கவிபாடிக் களித்த மொழி என்னுடல் கருகிச் சம்பலாகினாலும் என் சம்பலோடு பூத்து கமழ்ந்திருக்கும் தமிழ் மொழி -சக்தி சக்திதாசன்

பகுத்தறிவுக் களஞ்சியம் சிவகங்கை இராமச்சந்திரனார் – ப.சீவானந்தம்

Image
அகரமுதல 12 1, மாசி 0 9, 2047 / பிப். 21, 2016 பகுத்தறிவுக் களஞ்சியம் சிவகங்கை இராமச்சந்திரனார் – ப.சீவானந்தம் இலக்குவனார் திருவள்ளுவன்      21 பிப்பிரவரி 2016       கருத்திற்காக.. காலத்தை வென்ற பகுத்தறிவுக் களஞ்சியமே! சிவகங்கை தந்த இராமச்சந்திரப் புதையலே உனக்கு இன்று காணுகின்ற நினைவுநாள் நான்கு! கேடுதரும் பழைமையை நீக்கி விட மேடுபள்ளம் பாராது சுற்றிய செம்மலே! சமூகநீதி நிலைத்திடவும் சமதருமம் தழைத்திடவும் பொதுவுடைமை வளர்ந்திடவும் மனிதநேயம் மலர்ந்திடவும் இன உணர்வு வளரவும் வாழ்ந்தவரே! நீ பம்பரமாய்ச் சுழன்று, உன் உடல் நலத்தையும் பாராமல் மருதுபாண்டியரைத் தூக்கிலிட்ட திருப்பத்தூரில் மிசன் மருத்துவமனை சிகிச்சைப் பெறும்போது ஈரக் கண்களோடு அமர்ந்திருந்தேன்! நீ சாகும் தறுவாயில் சிந்திய  நெறிகள் உன் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன சுயமரியாதைச் சுடரொளிக்குச் சாவே இல்லை அந்தத் தீப்பந்தங்கள் வழித்தோன்றல் மூலம் தொடரும்! தோழர்சீவா தாமரை , 26.02.1937 கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார், பக்கம் 279

எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை! – பிரகாசம்

Image
அகரமுதல 12 1, மாசி 0 9, 2047 / பிப். 21, 2016 எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை! – பிரகாசம் இலக்குவனார் திருவள்ளுவன்      21 பிப்பிரவரி 2016       கருத்திற்காக.. எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை- எங்கள் தமிழ்மொழி போன்றொரு தாயு மில்லை தமிழ்மொழி போன்றொரு தந்தையு மமில்லை தமிழ்மொழி போன்றொரு அறிவொளியு மில்லை தமிழ்மொழி போன்றொரு இலக்கியமு மில்லை தமிழ்மொழி போன்றொரு வளமு மில்லை தமிழ்மொழி போன்றொரு முதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு புதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு வண்மை யில்லை தமிழ்மொழி யேநாளும் ஆளும் அச்சமில்லை தமிழ்மொழியை போற்றுவோம் தயக்கமு மில்லை. பிரகாசம் http://siragu.com/?p=19900