மொழி பெயர்ப்போம்! – அருணகிரி
மொழி பெயர்ப்போம்!
உலகப் புகழ் பெற்ற எண்ணற்ற நூல்கள்
மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளிவந்து உள்ளன. அதன் வழியாகப் புதிய
கருத்துகள் தமிழகத்தில் பரவி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த
நூற்றாண்டின் முற்பகுதியில் மாசுகோ முன்னேற்றப்பதிப்பகம் தொடர்ந்து
பதிப்பித்து வந்த நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் இந்தியாவிலும்
தமிழகத்திலும் பொது உடைமை இயக்கத்தின் கருத்துப் பரவலுக்குப் பெருமளவில்
உதவின. அத்துடன், அவற்றைப் படித்த வாசகர்களின் மனங்களில் இரசிய நாட்டின்
நில அமைப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், தொழிலாளர்கள் போராட்டங்களைப்
பற்றிய விவரங்களைப் பசுமரத்து ஆணி போலப் பதியச் செய்து விட்டன. அப்படி
உருவான பல எழுத்தாளர்களுடைய எழுத்துகளில் இன்றைக்கும் இரசிய இலக்கியத்தின்
தாக்கத்தை உணர முடிகின்றது.
உலக வரலாறு:
பண்டித சவகர்லால் நேரு, சிறையில்
இருந்தபோது தம் மகள் பிரியதர்சினி இந்திராவுக்கு எழுதிய மடல்களைத் தொகுத்து
உலக வரலாற்றின் காட்சிக் கூறுகள் / Glimpses of World History என்ற
தலைப்பில் வெளியிட்டு இருக்கின்றார். விடுதலைப் போராட்டத்தின்போது அவர்
13 ஆண்டுகள் சிறைவாசம் ஏற்றவர் என்பதை இன்றைக்கு அவரின்
கண்டனையாளர்கள்(விமர்சகர்கள்) பலரும் அறிய மாட்டார்கள். அந்த நாள்களில்
சிறையில் மின்சார வசதி கிடையாது. தேவையான புத்தகங்களும் கிடைக்கா.
மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில், இலண்டனில் தாம் படித்த புத்தகங்களில்
இருந்து தமது நினைவில் பதிந்த செய்திகளை மட்டுமே கடிதங்களாக எழுதித் தமது
மகளுக்கு அனுப்பி இருக்கின்றார். அதுவே பெரிய வரலாறாக ஆகி விட்டது.
உலகின் பல்வேறு மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றது.
‘உலகச் சரித்திரம்’ என்ற தலைப்பில், ஓ.வி. அளகேசன், தமிழில் மொழிபெயர்த்து
இருக்கின்றார். அவரும் விடுதலைப் போராட்டத்தின்போது தளைப்பட்டு, நான்கு
ஆண்டுகள் பெல்லாரி சிறையில் இருந்தபோதுதான், இந்த நூலை மொழிபெயர்த்து
இருக்கின்றார். பின்னாளில் அவர் தலைமையமைச்சர் இலால் பகதூர் சாத்திரி
தலைமையிலான இந்திய அரசில் தொடர்வண்டித் துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு
வகித்து இருக்கின்றார்.
அந்த நூலை மொழிபெயர்க்கும்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு பெரிய சிக்கல்
குறித்து அவர் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். இன்றைக்குத் தமிழில்
புதிதாக உரைநடை என்பது வளர்ச்சி பெற்று வருகின்றது. எனவே “இந்த
மொழிபெயர்ப்பு நூலை அந்த நடையில் எழுதுவதா? முந்தைய பழைய நடையில் எழுதுவதா?
என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது” என்கிறார். பின்னர் அவர் தமது நடையில்
அந்த நூலை மொழிபெயர்த்து இருக்கின்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழில்
புழக்கத்தில் இருந்த எண்ணற்ற வடமொழிச்சொற்கள் அந்த நூலில் இடம் பெற்று
இருக்கின்றன. அந்த நூலை இன்றைய தமிழ் நடையில் மாற்ற எழுத வேண்டிய தேவை இருக்கின்றது.
சீன வானில் சிவப்பு நட்சத்திரம் :
முதலாளித்துவ மேற்கு நாடுகளுக்கு பொதுஉடைமைக் கொள்கைகள் அச்சுறுத்தலாக
இருந்தன. அதனால் பொதுஉடைமையைப் பற்றிய தவறான கருத்துகளையே மேற்கு நாடுகளின்
ஊடகங்கள் காண்பித்து வந்தன. 1930களில் சீனாவின் செம்படை வீரர்களைச்
‘சிவப்புக் கொள்ளையர்கள்’ என்றே அமெரிக்கா, மேற்கு நாடுகளின் செய்தித்
தாள்கள் எழுதி வந்தன.
எனவே, சீனாவின் உண்மை நிலை என்ன என்பதை அறிய விழைந்த எட்கர் சுனோ
என்ற எழுத்தாளர், சீனாவுக்குச் சென்று செம்படை வீரர்களுடன் தங்கிப்
பயணித்தார். அங்கே தாம் திரட்டிய செய்திகளைத் தொகுத்து நூலாக எழுதி
வெளியிட்டார். சீனாவைப் பற்றி அதுவரையிலும் வெளிவராத பல செய்திகளை இந்த
நூல் உலகுக்கு வெளிக்கொண்டு வந்தது. அயல்நாடுகளுக்கு மட்டும் அல்லாமல்,
சீனாவின் சிற்றூர்ப்புறங்களைப் பற்றிய செய்திளை அந்த நாட்டின் நகர்ப்புற
மக்களுக்குக் கொண்டு சென்றதும் இந்த நூலே. ‘சீன வானில் சிவப்பு
நட்சத்திரம்’ என்ற தலைப்பில் இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வீ.பா.
கணேசன். அலைகள் வெளி யீட்டகம் வெளியிட்டுள்ளது. 848 பக்கங்கள், விலை
உரூ.300 (25, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 600 024:
044-24815474)
சீனப்பாடல்கள் தமிழில்:
எத்தனையோ இ.அ.ப. (I.F.S.) அதிகாரிகள்,
அயல்நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணி ஆற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் வேலை
பார்த்துச் சம்பளம் வாங்குவதோடு நின்று கொள்கிறார்கள். உண்மையில்,
அயல்நாடுகளில் வேலை பார்ப்போருக்குக் கிடைக்கின்ற ஓய்வு நேரம் அதிகம். அதை
அவர்கள் பயனுள்ள முறையில் செலவழிக்கலாம். 1996 ஆம்ஆண்டு இ.அ.ப. அதிகாரியான
சிரீதரன் மதுசூதனன் என்பவர், தற்போது தெ.ஆ.நா.ம.கூ. அமைப்பின் தெற்கு ஆசிய
இயக்குநராகத் (Director of SAARC) தில்லியில் பணிபுரிந்து வருகிறார்.
ஆங்காங்கு, ஃபிசி, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணி ஆற்றி
உள்ளார். பள்ளி, கல்லூரிக் கல்வியைச் சென்னையில் முடித்தவர்.
சீன மொழியைக் கற்பது எளிது அல்ல. இவர் சீனாவில் இருந்தபோது சீன
மொழியைக் கற்று, அந்த மொழியில் உள்ள பாடல்களை நேரடியாகத் தமிழுக்கு
மொழிபெயர்த்து இருக்கின்றார். அந்த வகையில் இதுதான் முதலாவது நூல்.
இன்றைக்குத் தமிழில் உள்ள பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் மூல
மொழியில் இருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை அல்ல.
ஆங்கிலத்துக்கு வந்து அங்கிருந்துதான் தமிழுக்கு வந்து சேர்ந்து
இருக்கின்றன.
‘வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’
என்னும் தலைப்பில் சீன இலக்கியத் தொகுப்பை இவர், பயணி என்ற புனைபெயரில்
மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். சி சிங்கு (Shi Jing / Shizh Ching)
என்பதைச் சீனச் சங்க இலக்கியம் என்கிறார் இவர். சி சிங்கு என்ற
காப்பியம்தான், சீன மொழியின் முதலாவது காப்பியம். கன்பூசியசு காலத்துக்கும்
முந்தையது. (கி.மு.551 முதல் 479). உண்மையில் இந்தப் புத்தகம்தான்
கன்பூசியசு தத்துவங்களுக்கு முன்னோடி நூல் ஆகும். இதில் 305 பாடல்கள்
உள்ளன. அவற்றுள், 35 குறும்பாடல்களைத் தேர்ந்து எடுத்து மொழிபெயர்த்து
உள்ளார் சிரீதரன். மொழிபெயரப்புகளைத் தன்னுடைய தனிப்பட்ட முயற்சி அல்ல
என்றும் தமிழறிந்த சீனர்கள் உதவியால் உருவாக்கப்பட்டது என்றும் இவர்
குறிப்பிடுகிறார்.
“பாடல்களின் தரத்தைத்தான் நான் முதன்மையாகக் கருதுகிறேன். எனவேதான்
தேர்ந்து எடுத்து மொழிபெயர்த்து உள்ளேன்” என்கிறார். ஆறு வரிகள் முதல் பல
பக்கங்கள் வரையிலுமான இந்தப் பாடல்கள் அனைத்தும், முகம் தெரியாத
புலவர்களால் பாடப்பெற்று உள்ளன. ஆனால் கன்பூசியசுதாம் இந்தப் பாடல்களைத்
தொகுத்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழில் உள்ள
ஐம்பெருங் காப்பியங்களைப் போன்றே, சீன மொழியிலும் ஐம்பெருங் காப்பியங்கள்
உள்ளனவாம். கவிதை ஆக்கத்திலும், கற்பனையிலும், இரண்டுமே பெருமளவில் ஒத்துப்
போகின்றன என்கிறார்.
அந்நாளைய சீன அரசியல், கலை பண்பாடு, சமூக
வாழ்க்கை குறித்து, இந்த நூலில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு வேறு புத்தகம்
இல்லை. இதற்கு முன்பு, ‘சீன மொழி : ஓர்அறிமுகம்’ என்ற நூலையும் எழுதி
வெளியிட்டு உள்ளார். அலுவலகப் பணியின் நிமித்தமாகச் சீனாவில் வசித்து
வருகின்ற இவர், பெய்சிங்கு பல்கலைக்கழகம், பெய்சிங்கு பொருளியல் மேலாண்மை
நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களிடம் சீன மொழியைக் கற்று உள்ளார். “சீன மொழியை எழுதுவது மிகவும் கடினம்; ஆனால், வாசிப்பது எளிது; பேசுவது அதைவிட எளிது; கேட்பது மிகமிக எளிது”
என்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ள இந்தநூலில்,
சீனமொழிச்சொற்களை எப்படி ஒலிப்பது, எழுதுவது என்பது பற்றித்
தமிழில்விளக்கங்கள்அளிக்கப்பட்டுஉள்ளன.
சீன மொழியில் திருக்குறள்
தைவான் நாட்டைச் சேர்ந்த சீன மொழிக்
கவிஞர் இயூ சி (Yu Hsi) திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.
இந்த நூல் 2010 ஆம் ஆண்டு திசம்பர் 2 ஆம் நாள், தைவான் நாட்டில் நடைபெற்ற
விழாவில் வெளியிடப்பட்டது. இவரது இயற்பெயர் அங்கு சிங்கு யூ (Hung ching
You). இது தொடர்பான செய்திகளை அப்துல் கலாம் தம்முடைய இணையத்தளத்தில் எழுதி
இருக்கின்றார். இணையத்தில் Thirukkural Translation in different
languages என்று தட்டச்சு செய்து தேடினால், பிற மொழிகளில் வெளியான
திருக்குறள் நூல்களின் அட்டைப் படங்களைப் பார்க்கலாம்.
சப்பானிய மொழியில் தமிழ் நூல்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலையைத் தமிழில் இருந்து நேரடியாக சப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர் சி இகாசக
என்பவர் ஆவார். சேலம் மாவட்டம் ஓமலூரில்வசிக்கும் முதுபெரும் சாதனையாளர்
சொ.மு. முத்து அவர்களின் உருவம் பதித்த அஞ்சல் தலையை சப்பான் அரசு
வெளியிட்டுச் சிறப்பித்து உள்ளது. இவர், தமிழ்இலக்கியங்களான திருக்குறள்,
வள்ளலார் குரல், பாரதியாரின் குயில் பாட்டு, மணிமேகலை, நாலடியார்,
பஞ்சதந்திரக் கதைகள் முதலியவற்றை, தனது சப்பான் நண்பர் சூசோமாட்சுனாகா
உதவியுடன் சப்பானிய மொழியில் மொழிபெயர்க்கச் செய்து புத்தகமாகவெளியிட உதவி
இருக்கிறார். இதற்காகத்தான் அஞ்சல் தலைச் சிறப்பு. இந்திய அஞ்சல்துறையும்
இவருக்குச் சென்னையில் பாராட்டு விழா நடத்தி உள்ளது.இவர் எழுதி உள்ள 125
கட்டுரைகள் பல ஏடுகளில் வெளிவந்து உள்ளன.
அல்லயன்சு பதிப்பகத்தார்
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதில்
பெரும்பங்கு வகித்தது அல்லயன்சு பதிப்பகம் ஆகும். வடுவூர் துரைசாமி
ஐயங்கார், கே.ஆர். இரங்கராசு, வை.மு.கோதைநாயகி போன்ற எழுத்தாளர்களின்
துப்பறியும் புதினங்களே சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருந்த காலத்தில்,
குப்புசுவாமி ஐயர், வங்க மொழியில் வெளிவந்த சமூகப் புதினங்கள் பலவற்றைத்
தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்.
த.நா. குமாரசாமி, கி.வா.சகந்நாதன், கா.சிரீ.சிரீ., த.நா. சேனாதிபதி,
தி.சானகிராமன், அ.கி. செயராமன், கு.ப. இராசகோபாலன் ஆகியோர் இந்தப்
பதிப்பகத்திற்காக நூல்களை மொழிபெயர்த்து உள்ளனர். பங்கிம் சந்திரரின் விச
விருட்சம், சரத்து சந்திரரின் புதினங்கள், வங்கத்துக் கதைத் திரட்டு,
தாகூர் வரிசை எனப் பல நூல்களைத் த.நா. குமாரசாமி மொழிபெயர்த்து
இருக்கின்றார். இவரதுதந்தையார் தண்டலம் நாராயண சாத்திரிகள் போசராசன்
சரித்திரம் என்ற நூலை மொழிபெயர்த்தார். அத்துடன் நேதாசி சுபாசு சந்திர போசு
எழுதிய இளைஞன் கனவு,புதுவழி ஆகிய இரண்டு நூல்களையும் இவர் மொழிபெயர்த்து
அல்லயன்சு பதிப்பகத்தார் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கின்றனர். மிகுந்த
வரவேற்பைப் பெற்றது. இவர் சிறுகதைகள், புதினங்களும் எழுதி உள்ளார். தமிழ்,
ஆங்கிலம், சமற்கிருதம், வங்காளி ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்று
இருந்தார்.
தாகூரின் இலாவண்யா, புலைச்சி (சண்டாளிகா)
தாகூரின் சாவா யாத்திரை, போசுட் மாசுடர், புயல், இரவீந்திரநாத்து தாகுர்
கடிதங்கள், காடும் கதிரும், வீடும் வெளியும், கோரா, சதுரங்கம், சப்பான்
யாத்திரை, இளமைப் பருவம், கவியும் மொழியும், கபீர் பாடல்கள், சித்ரா,
வளர்பிறை, இரு சகோதரிகள், தாகுரின் பிரசங்கங்கள், இராசரிசி, கல்லின் வேட்கை, மாலினி போன்ற பல நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
அவரது ‘சதுரங்கம்’ என்ற புதினத்தை
அசோகமித்ரா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கின்றார். இந்த மொழி
ஆக்கத்துக்கு, திரு கிருட்ண கிருபளானி என்பவர் உடன் இருந்து வரிக்கு வரி
தவறாமல் படித்து நெறியுரை வழங்கினார் என்றுஅசோகமித்ரா தமது நன்றி உரையில்
குறிப்பிடுகின்றார். அதை இராம. திருநாவுக்கரசுதமிழ் ஆக்கம் செய்து
இருக்கின்றார். அதே நூலை, சதுரங்கம் என்ற தலைப்பில், த.நா.
குமாரசாமி என்பவரும் மொழிபெயர்த்து இருக்கின்றார். சென்னை, மயிலாப்பூர், இராமகிருட்டிண மடம் சாலையில் உள்ள பொதுப் பதிப்பகத்தார் (General Publishers) என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. (முதல் பதிப்பு 2007) தாகூரின் விசுவபாரதி நிறுவனத்திடம் இருந்து சிறப்பு இசைவு பெற்று மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டு உள்ளனர்.
மொழிபெயர்ப்பாளர்கள் குமாரசாமி என்பவரும் மொழிபெயர்த்து இருக்கின்றார். சென்னை, மயிலாப்பூர், இராமகிருட்டிண மடம் சாலையில் உள்ள பொதுப் பதிப்பகத்தார் (General Publishers) என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. (முதல் பதிப்பு 2007) தாகூரின் விசுவபாரதி நிறுவனத்திடம் இருந்து சிறப்பு இசைவு பெற்று மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டு உள்ளனர்.
சாகித்ய அகடமி இந்திய மொழிகளுக்குள் மொழிபெயர்ப்புகளைச் செய்து வெளியிட்டு வருகின்றது. அப்படி இந்திய மொழிகளில் எழுதப்பட்டு உள்ள பல நூல்களைத்தமிழுக்கு மொழிபெயர்த்தவர்கள், சரசுவதி இராம்நாத்து, இளம்பாரதி, கிருட்டிணமூர்த்தி, சதாசிவம் ஆகியோர். பெரிய எழுத்தாளர்கள் எல்லாருமே சிறந்த மொழிபெயர்ப்பாளர்களாகவும் திகழ்ந்தார்கள்.
தி.ச.இரங்கநாதன்:
கலைமகள், கண்ணன், மஞ்சரி முதலான இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புக்
கட்டுரைகள் வெளியாகின. தமிழ் இதழ்களில் கலைமகள், மொழிபெயர்ப்புக்குச்
சிறப்பு இடம் கொடுத்தது. பெரியசாமி தூரன்: ஏராளமானஆங்கிலநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
இரா.கி. இரங்கராசன்: சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவரது ‘பட்டாம்பூச்சி’ என்ற மொழிபெயர்ப்புப் புதினம் பரபரப்பை ஏற்படுத்தியது. குமுதம் ஆசிரியர் மறைந்த எசு.ஏ.பி :ஒருசிறந்தமொழிபெயர்ப்பாளர். ‘காதலெனும் தீவினிலே’ என்பது அவரது மொழிபெயர்ப்புப் புதினம்
நூல்: பேராசிரியர் இலக்குவனார் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருக்கின்றார். மராட்டிய மொழியில் இருந்து தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தவர், கா.சிரீ.சிரீ.. இவருடைய மொழிபெயர்ப்புக்குத் தமிழகம்முழுவதும் ஏராளமான வாசகர்கள் உண்டு. அதேபோல வெ.சாமிநாத சருமா, இரகுநாதன் போன்றவர்களுடைய மொழிபெயர்ப்புகளும் புகழ் பெற்றவை.
பிற நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை, கலை, பண்பாடு, வரலாறு, அறிவியல்
தொழில்நுட்பங்கள், தத்துவச் செய்திகளை மொழி பெயர்ப்பாளர்கள்தாம்
தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அதன்வழியாக நாம் உலகத்தைத்
தெரிந்து கொள்கிறோம். அதுபோலத் தமிழில் உள்ள கருத்துக் கருவூலங்களைப்
பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டும்.
அமெரிக்காவின் இலாசு ஏஞ்செல்சு நகரில் வசிக்கின்ற வைதேகி எர்பர்ட்டு
சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துக் கொண்டு
இருக்கின்றார் என்கிற செய்தியை இணையத்தளங்களில் படித்தேன். அதுபோல,
கணினிவேலைவாய்ப்புகளின் வழியாக உலகம் முழுமையும் பரவிக் கொண்டு இருக்கின்ற
தமிழகத்து இளைய தலைமுறையினர் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். பலர்
செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக்கண்டுபிடித்து, தமிழகத்துக்கு வரச்செய்து, பாராட்ட வேண்டும்.
தமிழகத்து அமைப்புகள், உள்ளூர் எழுத்தாளர்களுக்குமட்டும், விருதுகளை
வழங்குவதோடு நின்றுவிடக் கூடாது; மொழிபெயர்ப் பாளர்களையும் பாராட்டிச்
சிறப்பிக்க வேண்டும். மொழிபெயர்ப்பு பெருகும்போதுதான் தமிழ் வளரும்.
அருணகிரி 9444 39 39 03
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணன் அருணகிரிக்கும் பதிவிட்ட இலக்குவனார் அவர்களுக்கும்
ReplyDelete