பல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்

பல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்

தலைப்பு-பல்வரிநறைக்காய் - thalaippu_palvarinaraikaay

 

பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே!


பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம்
மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல்
களித்து ஆர்த்த கழிநெடு கங்குல்
மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை.
என்னென் கழறும் என்னறியும் தடம் கொல்.
இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும்
வெம்புலியன்ன ஊண் மறுக்கும்
கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும்
எனவாங்கு
தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌
நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ.
நன்மா தொன்மா நனிமா இலங்கை
நல்லியக்கோடன் யாழிய இசையின்
நலம் கெட செய்தனை எற்று எற்று
இவள் உள் உள் முரலும் இன்சிறைத்தும்பி
உயிர்விடும் காட்சி ஒக்குமோ ஓராய்.
இலஞ்சிக் கண்கள் ஈரம் சுரப்ப‌
சிறு புள்ளும் பெருகக்களிக்கும்
சீறிலைச் சிறு கான் வளைக்கும் குன்ற!
கடுகொள் மரப்பு நீங்கியே மீள்வாய்.
இருசீர்ப் பாணி கனைகுரல் விரிப்ப‌
படுமணி நடுங்க கதழ்பரி கலிமா
நெடுந்தேர் விரைபு ஆறு கடந்து ஏகி
மெல்லுடல் நைந்த‌ பீலிஇறையவள்
பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே.
[தலைவியின் பிரிவாற்றாமைத் துன்பம் கண்டு
தலைவன் மீண்டு தோழி வருமாறு பாடியது.]
விளக்கவுரை:
“வரிகள் மிக்க நறுமணக்காய் (சாதிக்காய்) தின்றாய் போலிருக்கிறது. அதனால் உன் தொண்டைவழியே வரும் அச்சொற்கள் இனிமையாய் இருந்தன. அந்த சொற்கூட்டங்களோடு நாம்  இருவரும் படுத்துக்  களித்த நீண்ட இரவுகள் மறந்தாயோ? மீண்டும் மீண்டும் நீ வராது நின்றதேன்? எதை நான் சொல்ல? இதன் காரணத்தின் வழி எனக்கு விளங்க வில்லையே! கொடிய புலி தனது இரையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே. அது போல்மன உறுதி கொண்டவள் நான். உண்ணப்போவதில்லை; காற்று உண்டு கூட  வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்”
என்று தலைவி கூறிக்கொண்டே போகத் தோழியும் சொல்லலுற்றாள்.
  “பல்துளைவழியே (நஞ்சு பாய்ச்சும்) பாம்பு கடித்தது போல் வலியுற்று துடிக்கிறாளோ? நல்ல பெரிய மற்றும் தொன்மை மிக்க பெரிய அந்த‌ இலங்கை (இப்போதைய திண்டிவனம்) நாட்டு “ந‌ல்லியக்கோடன்” யாழ் கொண்டு இசைத்து எல்லாரையும் மகிழ்விக்கும் அந்த நல்ல இயல்பை கெடுக்க வந்தவன் போல் இப்படி வராமல் இவளுக்குத் துன்பம் செய்வது ஏன்? ஏன்? இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள் கொண்ட தும்பி போன்றது. அந்த இதயம் நின்று உயிர் நீங்கும் காட்சி காணச் சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்! அங்கங்கே காணும் இடங்கள் எல்லாம் சுனைகள் மிகுந்து (இலஞ்சிக்கண்கள்) நீர் வழிய சின்னச் சின்னப்பறவைகள் கூட அதில் நனைந்து பெரு மகிழ்ச்சி கொள்ள சிற்றிலை மரங்களின் காடுகள் சூழும் குன்று நாட்டவனே! ஏதோ கடுமையான மறதி எனும் நச்சால் மறப்பு நோய் உற்றவனே! தெளிந்து எழுவாய்! உன் நெடுந்தேர் மணியின் நடுங்கும் ஒலி ‘கணீர் கணீர்’ என்று இரட்டைத் தாள அலைவுகளோடு (இரு சீர்ப்பாணி கனைகுரல் விரிப்ப) வர பல வழிகள் கடந்து இங்கு வருவாயாக! இந்த மெல்லிய உடலாள் முன்கையில் இன்னும் மெல்லிதாய் ‘மயிற்பீலியின் வளையல்கள்’கூடப் பிணியுற்றது.”
(“பீலி இறையவள் பிணி”) – அந்நோய் நீக்க விரைந்து நீ வருவாய்.

சங்கச் சாயலர் உருத்ரா இ.பரமசிவன்
53ruthra



அகரமுதல118, தை 17, 2047 / சனவரி 31, 2016

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்