தலைப்பு- வையகத்தமிழ் வணக்கம் - thalaippu_vaiyakathamizhvanakkam

வையகத் தமிழ் வாழ்த்து
 
பாரதக் கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம்
ஒரு தாய் மக்கள்
வாழ்த்துவம் உனையே !
வணங்குவம் உனையே !
தாரணி மீதில் உன்
வேர்களை விதைத்தாய்
வேர்கள் தழைத்து
விழுதுகள் பெருகின
ஈழத் தீவில்
இணைமொழி நீயே
சிங்கப் பூரினில்
துணைமொழி நீயே
மலேசிய நாட்டில்
தனிமொழி யானாய்
காசினி மீதில் தமிழர் பரப்பிய
காவியத் தமிழே !
வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே !
வணங்குவம் உனையே !
ஆத்திசூடி ஓளவையார்,
ஆண்டாள்,
வையகப் புலவர்
வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது
மாதவ மக்கள்.
கடல் கடந்து அலைபோல்
புலம்பெயர் தமிழர்,
ஆசியா, அரேபியா,
ஆஃப்பிரிகா, ஈரோப்பா,
அமெரிகா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர்,
சுதந்திர மாக.
யாதும் நாடே
யாவரும் கேளிர்
பாதுகாத் துனைப் பாரில்
பரப்புதல் எம்பணி
காசினி மீதில்
நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே !
வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே !
வணங்குவம் உனையே !