எல்லாம் தமிழிலே! – செ.சீனிநைனா முகமது
எல்லாம் தமிழிலே!
அன்னை என்னைக் கொஞ்சிக் கொஞ்சிஅன்பு பொழிந்தது தமிழிலே என்
சின்னச் சின்ன இதழ்கள் அன்று
சிந்திய மழலை தமிழிலே.
நிலவு காட்டி அமுதம் ஊட்டிக்
கதைகள் சொன்னது தமிழிலே அவள்
புலமை காட்டி என்னைத் தாலாட்டி
உறங்க வைத்தது தமிழிலே
பிள்ளை என்று தந்தை சொல்லிப்
பெருமை கொண்டது தமிழிலே நான்
பள்ளிசென்றே அகரம் எழுதப்
பழகிக் கொண்டது தமிழிலே.
பருவம் வந்து காதல் வந்து
பாட்டு வந்தது தமிழிலே அவள்
உருவம் பார்த்தே உருகும் போதில்
உவமை வந்தது தமிழிலே
கனவில் அந்தக் கன்னி சொன்ன
கரும்பு மொழிகள் தமிழிலேபுது
மனைவி என்ற உறவு வந்து
மஞ்சம் நடந்தது தமிழிலே.
என்னைப் போலப் பிள்ளை பிறந்தே
என்னை அழைத்தது தமிழிலேஅதன்
கன்னம் பார்த்துக் கண்கள் பார்த்துக்
கவிதை வந்தது தமிழிலே
எழுத்தில் கூட இனங்கள் மூன்றாய்
இருக்கக் கண்டது தமிழிலே அது
கழுத்தில் மூக்கில் நெஞ்சில் என்று
பிறக்கக் கண்டது தமிழிலே.
எழுத்தும் சொல்லும் இலக்க ணத்தில்
இருப்ப துண்டு மொழியிலேஇமு
ஒழுக்கம் என்ற பொருளும் தாங்கி
உயர்ந்து நின்றது தமிழிலே.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்றோ சொன்னது தமிழிலே இங்குத்
தீதும் நன்றும் யாரால் என்று
தெளிந்து சொன்னது தமிழிலே.
தொல்காப்பியத்தைத் துருவத் துருவத்
துலங்கும் அறிவு தமிழிலே அந்த
ஒல்காப் புகழில் உனக்கும் எனக்கும்
உரிமை வந்தது தமிழிலே.
வாழும் நெறியை ஏழு சீரில்
வழங்கும் குறள்கள் தமிழிலேஇடர்
சூழும் போதும் சுடரும் கற்பைப்
பாடும் சிலம்பு தமிழிலே.
மொழிகள் யாவும் தாயைத் தேடி
முடிவில்கண்டது தமிழிலே என்றும்
அழிவில் லாத இளமை வாழும்
அருமை கண்டது தமிழிலே.
கல்விகலைகள் யாவும் அன்றே
கரைகள் கண்டது தமிழிலே அந்தச்
செல்வம் எல்லாம் மறந்து தமிழர்
சிறப்ப துண்டோ புவியிலே.
எனக்கும் வாய்த்த இனிய நலங்கள்
இறைவன் தந்தது தமிழிலே அவை
உனக்கும் வாய்க்கும் உண்மை அன்பால்
உறவு கொண்டால் தமிழிலே.
இறையருள் கவிஞர் செ.சீனிநைனா முகமது, மலேசியா:
‘எல்லாம் தமிழிலே’
(‘உங்கள் குரல்’ தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்) பக்கம்.60)
Comments
Post a Comment