தலைப்பு - கல்விநிலை, ஞானச்செல்வன் - thalaippu_vilaipogumkalvi_gnanachelvan
என்ன வேண்டும்?
விண்கலத்தைத் திங்களுக்கே அனுப்பி னாலும்
வினயமுடன் பக்குவமும் வாழ்வில் வேண்டும்!
மண்கலந்து மக்கிப்போய் மடிந்த போதும்
மனிதத்தை நிலைநாட்டிச் செல்ல வேண்டும்!
கண்கலங்கி நிற்பார்மேல் கருணை இன்றேல்
கதிநமக்கும் இல்லையென்று நம்ப வேண்டும்!
எண்ணமெல்லாம் காமத்தில் மூழ்கிக் கெட்டால்
இடரெல்லாம் வருமென்றே அறியவேண்டும்!
கொலைகளவு கற்பழிப்பு தொலைய வேண்டும்
கொடுமைகளே இல்லாத உலகம் வேண்டும்!
மலைமலையாய்ப் பணம்குவித்து வைப்ப தாலே
மானமது கெட்டொழியும் உணர வேண்டும்!
விலைபோகும் கல்விநிலை மாற வேண்டும்!
வெறியூட்டும் மதுவிற்கா அரசு வேண்டும்!
கலைகளொடு கலந்தகளை பறித்தல் வேண்டும்
கடமையொடு கண்ணியமும் காக்க வேண்டும்!
செல்லும்வழி நேராக இருத்தல் வேண்டும்
சின்னபுத்தி கோணல்வழி ஒழிய வேண்டும்!
வல்லதோர் உயர்பிறவி பெற்ற பின்னை
வசைநல்கும் இழிசெயலைச் செய்யலாமா?
சொல்லும்சொல் நறுங்கனியாம் அன்பு வேண்டும்
சுரணையற்ற கருங்கல்லாய்க் கிடக்க லாமா?
நல்லதொரு பனிமலரின் மலர்ச்சி வேண்டும்
நயத்தக்க பண்பாட்டு நடைதான் வேண்டும்!
கவிக்கோ ஞானச்செல்வன்