Saturday, December 16, 2017

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 – சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06

  தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு தமிழ்நாடாகவே இருந்தது.
இம் முப்பெரு நாடுகளும் பன்னிரண்டு நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன என்பதும், அப்பகுதிகளில் செந்தமிழே மொழியாக வழங்கியது என்பதும் தொல்காப்பிய நூற்பா ஒன்றால்*அறியலாகும். ஆட்சி முறையால் மூன்று நாடுகளாக இருந்தபோதிலும், மொழியாலும் பண்பாட்டாலும் தமிழகம் ஒரே நாடாகத்தான் கருதப்பட்டு வந்துள்ளது. முழு உரிமை வாய்ந்த தனி நாடாக இருந்தபோதிலும் உலகின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று பனம்பாரனார் கூறுவது காண்க.  புலவர்கள் நில இயற்கை வகையால் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் தமிழகத்தை நான்கு வகையாகப் பிரித்தனர்.  தமிழகத்தை நான்கு நிலமாகக்கொண்டு ஆராய்ந்த கண்ணோட்டத்துடன் உலகத்தையும் நோக்கினர்.  ஆதலின், உலகத்தை ‘நானிலம்’ என அழைத்தனர்.
காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும் மலைசார்ந்த இடத்தைக் குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம்என்றும், கடலும் கடல் சார்ந்த இடத்தை நெய்தல் என்றும் அழைத்தனர்.
பாலை நிலம் அன்று தோன்றப் பெறவில்லை போலும். அன்றியும் பாலை என்பது செயற்கையால் உண்டாகி, மீண்டும் மக்கள் உழைப்பால் மறையக் கூடிய இயல்பினது. ஆதலின், தமிழர், நிலைத்த பிரிவினுள் ஒன்றாக அதனைக் கருதிலர் என்று கொள்ளலாம்.
ஒரு நாடு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதனைச் சங்ககாலத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். ‘நாடு’ என்னும் சொல்லுக்கு ‘விரும்பு’, ‘தேடியடை’ என்னும் பொருள்கள் உள.  ஆதலின், மக்கள் விரும்புவதற்குரிய இடம்தேடிவந்து தங்குவதற்குரிய இடம் எதுவோ,  அதுவே நாடாகும்.  வளமற்ற வறண்ட வெற்றிடம் நாடாகும் தகுதியினையுடையது ஆகாது. அக்கால மெய்யுணர்வாளரும் அரசியல் அறிஞருமான வள்ளுவர் பெருமான் நாடு’ என்பது எவ்வாறு இருத்தல் வேண்டும் எனக்  கூறுவது எக்காலத்துக்கும் எல்லா நாடுகட்கும் மிகவும் பொருந்துவதாகும்.  அவர் கூறியுள்ளதாவது:
நாடு என்பது மக்களுக்கு வேண்டியனவற்றை யெல்லாம் தன்பால் பெற்றிருக்க வேண்டும்; அங்ஙனமின்றிப் பிற நாடுகளின் உதவியை என்றும் நாடிக் கொண்டிருக்கும் நாடு நாடாகாது.
அது, பெருஞ் செல்வமுடைமையால் பிறநாட்டு மக்களாலும் விரும்பத்தக்க சிறப்பினதாய் இருத்தல் வேண்டும்.
எவ்விதக் கேடுமின்றி நன்றாக விளையக் கூடியதாய் இருத்தல் வேண்டும்.
பிற நாட்டு மக்கள் புகலிடம் தேடி வந்த காலத்தில் அவர்களை ஏற்றுப் புரந்து அரசுக்கு வேண்டும் இறைப் பொருள் முழுவதையும் உளம் ஒத்துக் கொடுக்க வேண்டும்.
பகைவராலும் இயற்கையாலும் உண்டாகும் கேடுகள் அற்றும், கேடுகள் உண்டான போதும் செல்வம் குறையாத நிலையிலும் உள்ளதே சிறந்த நாடாகும்.
பெரிய நீர்நிலைகளும், மலைகளும், ஆறுகளும், உறுதிவாய்ந்த அரண்களும் நாட்டுக்கு இன்றியமையாத உறுப்புகளாகும்.
பிணி இன்மை, செல்வம், விளைபொருள்கள், இன்பம் நுகரும் வாய்ப்புகள், அச்சமின்றி வாழும் காவல் நிலை ஆகியவை நாட்டிற்கு அணிகளாகும்.
நாட்டு மக்களுக்கு வருத்தும் பசியும், நீங்காத பிணியும், அழிவை உண்டுபண்ணும் பகையும் இல்லாமல் வாழும் நாடே நாடாகும்.
நாட்டில் ஒன்றுக்கொன்று முரண்படும் பல குழுக்களும், நாட்டைக் கெடுக்கும் உட்பகையும், அரசுக்குத் தொல்லை தரும் கொல்வினைக் குறும்பரும் இருத்தல் கூடாது.
நாட்டில் என்றும் குறையாத விளைபொருள்களும், புதியன புனையத் தக்க அறிவியற் பெரியார்களும், நுகர்ச்சிப் பொருள்களில் குறைவற்ற செல்வர்களுமாக நிறைந்திருப்பதே நாடாகும்.
எல்லாவற்றாலும் சிறந்து, நல்லாட்சியை உடையதாகவும் நாடு இருத்தல் வேண்டும்.  இல்லையேல்  பயனற்றதாகும்.
இவ்வாறு திருவள்ளுவர் கூறியுள்ள குறிக்கோளுக்கு ஏற்ப நாட்டை அமைக்க மக்களும் மன்னரும் முயன்று உழைத்தனர்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
அடிக்குறிப்பு:
  • *செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் (தொல்.எச்சம்-4)

தமிழ் வளர்கிறது! 1-3 : நாரா.நாச்சியப்பன்


தமிழ் வளர்கிறது! 1-3


விடுதலைத் தமிழ ரென்று
 வீறுடன் பேசு கின்ற
முடிநிலை காண்ப தற்கு
 முழக்கடா சங்க மென்று
திடுமென வீர ரெல்லாம்
 திரண்டுவந் தெழுப்பு மோசை
கடிதினிற் கேட்டேன் இன்பக்
 களிப்பினில் துள்ளி வந்தேன்.
வடவரின் பிடியி னின்றும்
 வளர்தமிழ் நாட்டை மீட்கத்
திடமுடன் தொண்ட ரெல்லாம்
 திரண்டனர் என்ற போது
கடனெலாம் தீர்ந்தவன் போல்
 களிப்புடன் ஓடி வந்து
படையினில் சேர்ந்து கொண்டேன்;
 பாடினேன் தமிழ்வாழ் கென்றே.

தமிழரின் நாட்டை மீட்போம்
 தமிழ்நறு மொழியைக் காப்போம்
தமிழரின் கொடியை ஏற்றித்
 தமிழ்மகள் மானம் காப்போம்
தமிழரின் அரசு நாட்டித்
 தமிழர்பண் பாடு காப்போம்
தமிழரின் வீட்டி லெல்லாம்
 தமிழ்மணம் கமழச் செய்வோம்.

(தொடரும்)
பாவலர் நாரா. நாச்சியப்பன்

Friday, December 15, 2017

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.

 வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது

காதல் வாழ்க்கை

ங. களவியல் 

(வரிசை எண்கள் / எழுத்துகள்
‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)
தென்புலத்தார்
    “படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசையாதலின் தென் புலத்தார் என்றார்” என்பது பரிமேலழகர் கூறும் உரையாகும். உலகத்தை அயன் படைத்தான் என்பதும் அப்பொழுது படைக்கப்பட்டவர்  தென்புலத்தில் உளர் என்பதும் அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அவர்கள் ஏன் படைக்கப் பட்டார்கள்? அவர்களுடைய கடமை யாது? தென் திசையில் அவர்கள் யாண்டு வாழ்கின்றார்கள்? அவர்களை மக்கள் போற்ற வேண்டியது ஏன்? என்பன போன்ற கேள்விகட்கு விடை கூறுவார் இலர். ஆதலின் பரிமேலழகர் உரை இங்குப் பயனற்று விடுகிறது.
  தென் நாட்டார் என்பதே நேர் பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென் தமிழ் நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன் நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை  தென் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்Ùக வலியுறுத்தியுள்ளார் என்பதே சாலப் பொருத்தமாகும்.
     “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர் பெருமான் உளம் நொந்து நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார். உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப் பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப் பொதுமறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.
தெய்வம்
   ‘தெய்வம்’ என்பது தூய தமிழ்ச் சொல்லே. இச்சொல் தொல்காப்பியத்தில் கருப்பொருள்களில் ஒன்றாக முதன்மையிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
                தெய்வம் உணுவே மாமரம் புள்பறை
                செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
                அவ்வகை பிறவும் கருவென மொழி.
   உணவுக்கு முந்தியதாகத்  ‘தெய்வம்’ கூறப்பட்டுள்ளதிலிருந்து தெய்வ உணர்வு மாந்தர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது எனத் தமிழ் முன்னோர் கருதி வந்துள்ளனர் என்பது அறியற்பாலது.
    தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? ஒவ்வோர் உடலும் இறைவன் உறைவிடமாகும். ஆகவே, உயிர்கட்குச் செய்யும் தொண்டே கடவுள் தொண்டாகும். தன்னாட்டுப் பற்றுடைய மாந்தன் பிறவுயிர்களையும் போற்ற வேண்டும் என்பதனைக் கருதி அடுத்துத் தெய்வத்தை வைத்துள்ளார்.
விருந்து
   புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்து மிகவும் வேண்டப்பட்டதாகும். சிற்றுண்டி விடுதிகளும் பேருண்டி இல்லங்களும் இக் காலத்தில் உள்ளனபோல் அக் காலத்தில் இருந்திருக்க இயலாமையால் வெளியூர்களிலிருந்து வருவோர்க்குப் புகலிடம் வீடுகள்தாம். ஆகவே, விருந்தினரைப்புதிதாக வருவோரைப் புரக்க வேண்டுவதும்  இல்லறத்தான் கடமையாய் விட்டது.
  இக் காலத்திலும் வெளிநாடுகளில், ஏன் நம் நாட்டில் சில பகுதிகளிலும் அயலவரைத் தம் வீட்டில் தங்க வைத்து உணவு உறையுள் அளித்து ஓம்புகின்றனர். அவற்றிற்கெனக் கட்டணமும் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வயலவர் ‘கட்டணம் செலுத்தும் விருந்தினர் (Paying Guests) என்று அழைக்கப்படுகின்றனர்.
க்கல்
    செல்வ நிலையிலிருப்போர் செல்வமற்ற தம் சுற்றத்தாரை ஓம்புதல் மிகமிக வேண்டற்பாலது. இதனைச் ’சுற்றம் தழாஅல்’ என மீண்டும் (பொருட்பால் 53) தனியியலில் வள்ளுவர் பெருமான் வலியுறுத்துகின்றார்.
                சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
                 பெற்றத்தால் பெற்ற பயன் (திருக்குறள் 524)
என்பதூஉம் காண்க.
தான்
   தன்னை யோம்புதல் மிகமிக இன்றியமையாதது. தானின்றி உலகேது? தான் நன்கு வாழ்ந்தாலன்றோ எல்லாக் கடன்களையும் நன்கு ஆற்ற இயலும்! ஆகவே, தன்னையும் ஓம்புதல் அறநெறியின் பாற்பட்ட கடன்களுள் ஒன்Ùக வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர்அழியும் உடலை அழிய விடு‘ என உதட்டளவில் பிறர்க்கு உரைத்துஉள்ளத்தால் பற்றுவிடாது கரவு முறையில் தம் ஊன் பெருக்குவார் உள்ளீடு இது. ஆகவே, வள்ளுவர் பெருமான் வெளிப்படையாகவே “உன்னையும் போற்றிக் கொள்” என உலகறிய உரைக்கின்றார்.
                பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்  வாழ்க்கை     
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்  (திருக்குறள் 44)
      பழி அஞ்சி=குற்றங்களை அஞ்சி(பொருளை ஈட்டி), பாத்து ஊண்=பிறருடன் பகுத்து உண்ணும் உணவை, உடைத்தாயின்=பெற்றிருக்குமாயின், வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, வழி எஞ்சல்=அற்றுப் போதல்,எஞ்ஞான்றும்=எப்பொழுதும்,இல்=இல்லை.
   இல்லற வாழ்க்கை மக்களது நாகரிகப் பண்பாட்டின் முதிர்ச்சியாகும். உழைத்துப் பொருளீட்டி இல்லாதார்க்குப் பங்கிட்டு உண்ணுதலே இல்லறப்பண்பின் முதிர்ச்சியாகும். பிறர்க்கு அளித்து வாழாதார் இல்லறம், இல்லறமேயன்று.
(தொடரும்)
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

Wednesday, December 13, 2017

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 – கி.சிவா

(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்டஅரசியல் 1/4 – தொடர்ச்சி)
காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும்
இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 

தூதுப் பொருள்கள்
பொதுவாக, தூது இலக்கியங்களில் எல்லாப் பறவைகளையும் தூதுவிடும் மரபு என்பது இல்லை. “தூது நூல்களில் 35 பொருள்கள் தூதுப்பொருள்களாக அமைந்துள்ளன. அவற்றில், குயில், கூகை ஆகிய இனப்பொருள்களைத் தூது விடுத்தனவாக அமைந்த நூல்கள் இன்று இல்லை” என்று ந.வீ.செயராமன், ‘தூதிலக்கியங்கள்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997, ப.192). அன்னம், மயில், கிளி, மேகம், மைனா, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய அஃறிணைப் பொருள்கள் ஒன்பதையும் உயர்திணையில் தோழியையும் தூதாக அனுப்பலாம் என்று, கி.பி.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த பிரபந்தத் திரட்டில் (நூற்.30) எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதே கருத்தைப் புகழேந்திப் புலவரால்பாடப்பட்டதாகக் கருதப்படும் ‘இரத்தினச்சுருக்கமும் (நூற்.7) குறிப்பிட்டுள்ளது (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997,ப.191). இவ்வாறு தூதுவிடுக்கும் பறவையினங்களுள் காக்கை, வெளவால் போன்ற பறவைகளும் பிறவும் விடுபட்டுள்ளன. ஆனால், தெலுங்கில் கவிஞர் குர்ரம் யேசுவா, ‘கப்பிலம்’ என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்நூல் தமிழில் கவிஞர் தெசிணியால் வெளவால்விடு தூது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற்கால வளர்ச்சியாகக் காக்கையைத் தூதுவிடுத்துள்ளமைக்குக் காக்கைவிடுதூது  சான்றாகத் திகழ்கின்றது.
காக்கையின் சிறப்புகள்
  தமிழிலுள்ள ‘கா’வெனும் எழுத்தை உலகெலாம் பேசுகின்ற சிறப்புப் பெற்ற காக்கையே, (காக்கையும் தமிழ் பேசுகின்றபோது மனிதராகிய இராசகோபாலாச்சாரியார் தமிழுக்கு எதிராக இந்தியைத் திணிக்கின்றாரே எனும் அங்கதக்குறிப்பு இதன்வழி வெளிப்படுகின்றது) நீ மேன்மை பெற்ற கருமை நிறத்தைக்கொண்டு இருக்கின்றாய் (கருப்பு நிறம் அருவருப்பானது என்ற போலிப் பண்பாட்டுக் கருத்திற்கு எதிராக, இந்தக் கருத்தை முன்மொழிந்துள்ளார்). மாயனை நிறத்தாலும் முருகப்பெருமானை வள்ளல்தன்மையாலும் ஒத்திருக்கின்றாய். உணவு கிடைத்தபோதெல்லாம் உனது இனத்தைக் கூவியழைத்து அவற்றுக்கு இன்பமூட்டி, கிடைத்ததைச் சுற்றத்தோடு பகிர்ந்துண்கின்றாய். இதுவே எம் தமிழரின் ஒப்புரவு (உலக ஒழுக்கம்) என்று உலகிற்கு அறிவிக்கின்றாய்.
உலகில் முதலில் தோன்றியது தென்னாடு. அது தோன்றியநாளிலிருந்து இம்மக்கள் பேசும் மொழி தமிழ்மொழியே என்பதை எந்நாட்டினரும் ஏற்றுக்கொள்ளும்பொருட்டு, பசுவின் கன்றுகூட அம்மா என்றழைக்கும். அதைப் பார்த்துக்கூடத் தாய்மொழிமேல் பற்றுவராததமிழ்மக்களைக் கண்டு சினந்ததால் உன்னுடல் கருகிப்போயிற்றோ!(தற்குறிப்பேற்றம்). பாவிகளாகிய தீயவர்கள் தேனையொத்த செந்தமிழைச் சிதைப்பதற்கு விரையுமுன், அதைத் தடுத்துக் ‘காகா’ (காத்திடுவீர்! காத்திடுவீர்!) என்றே கூவியழைக்கின்றாய். உன்னைப் போன்று தாய்த்தமிழ்மீது பெருங்காதல் கொண்டவர்களை நான் இதுவரை கண்டதில்லை. அகத்திய முனிவர் குடத்திலே அடக்கிய நீரைக் கவிழ்த்துக்கொட்டி, காவிரியாக ஓடவிட்டுத் தமிழகத்து உயிர்களைக் கருணையால் காத்து அருமருந்திற்கொப்பானாய். தமிழ்மொழியைக் காக்கின்றமையால் இந்த மாநிலத்துக்கு அரசனானாய் (அண்டங்காக்கை). கருமை நிறம் என்பது கடவுள் அமைத்திட்ட நிறம். கடவுளுக்கும் அதுவே நிறம். உமையும் திருமாலும் கருமைநிறம் பெற்றதனால் பேரழகும் ஆண்மையும் வாய்க்கப்பெற்றனர். முகிலும் உன்னுடைய நிறத்தைக் காட்டி மழையைப் பெய்யும். இவற்றையெல்லாம் அறியாத மடமைபொருந்தியவர்கள், உனது ஒப்பற்ற கருமை நிறத்தை உணராமல் ‘கருங்காக்கை’ என்று இழிவாகக் கூறுவர்.
 உன்னுடைய ஒப்பற்ற கண்ணைப்பற்றி அறியாதவர்கள், உனக்கு ஒற்றைக்கண்தான்   (பெரியாழ்வார் திருமொழி 3.10.6) என்று கூறுவர். சனியின் உறவு நீயென்பர். சனியின் வேகத்தைக் குறைப்பதற்காகத்தான் தந்திரம் செய்து அவருக்கு நீ வாகனமானாய் என்பதை அறிபவர் யாவரோ? உறங்குகின்ற மக்களின் மயக்கத்தை அகற்ற, காலைப்பொழுதில் வந்து கரைகின்ற அருமணியைப்போன்ற காக்கையே! ஒரு துறவியைப்போல, உயிர் பிரிந்த உடல்களைத் தின்று, அவ்வுடலை உடையவர்க்கு மறுபிறவியளிக்கும் உன்பெருமையெல்லாம் சொல்லுதல் இயலா (1-31) என்று காக்கையையும் அதன் குணம் மற்றும் செயல்களையும் புகழ்ந்து புலவர் பாராட்டுகிறார்.
தேனேயுஞ் செந்தமிழைத் தீயவர்கள் தம்மொழியால்
வீணே சிதைக்க விரையுமுன் – ஆனாதிங்
காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிடுங் காக்கையே – மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைமைசேர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன் – … …         (12-14)

கருமைநிறந் தானுங் கடவுளமைத் திட்ட
பெருமை யடையாளப் பேரே – உருவார்ந்த
பார்வதியும் மாலும் பகர்கருமை பெற்றதனால்
பேரழகும் ஆண்மையும் பெற்றுயர்ந்தார் – தேரின்
கருமுகிலும் மற்றுன் கருணைநிறங் காட்டி
அரிதின் உலகம் அளிக்கும் – … …”           (20-22)
எனவரும் கண்ணிகள் மேற்குறிப்பிட்ட செய்திகளுக்கான சில கண்ணிகளாகும்.

(தொடரும்)
முனைவர் கி.சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம்,
மதுரை-09. மின்னஞ்சல்  : lakshmibharathiphd@gmail.com