கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை – தொடர்ச்சி)
பூங்கொடி
நாவலர் ஆறுதல் உரை
எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன்,
எனினும் பின்னர் என்னுரை விழைவோர் 25
நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்’
நாவலர் ஆறுதல் உரை
எனுமுரை கேட்ட இலக்கிய நாவலர்
`அன்னாய்! உலகில் அறிவொளி பரப்ப
முன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே;
தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் 30
எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்;
வெற்றி வெற்றி விளைவது கண்டோம்;
உற்றநின் துயரால் உளமது கலங்கேல்
ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே;
நாவலர் தலைமேற் கல்
நேற்றோர் அவையில் நிகழ்த்தினென் பேச்சு, 35
பொல்லாங் குடையார் புழுங்கினர் நெஞ்சம்
கல்லார் நல்வழி நில்லார் புல்லார்,
குழப்பம் விளைத்துக் கூட்டங் கலைத்தனர்,
விளங்கொளி அவித்தனர் வீணர், ஒருசிலர்
பாறைக் கல்லொடு பக்கம் வந்தனர், 40
வீரச் செயலென விழைந்தனர், தலைமிசை
ஓங்கினர், அவ்வுழி உற்றொரு தோழர்
தாங்கினர் அதனைத் தடுத்து நிறுத்தினர்,
தடுத்திரார் ஆயின் தலைதூள் ஆகும்,
உடலும் உயிரும் உலகுக் காக்கினென், 45
இடரினைக் கண்டு தொடைநடுக் குறுதல்
மடமை அன்றோ? மதியிலார்செயலது
,———
முன்னுவோர் - நினைப்போர், எல்லையில் - அளவில்லாத.
+++++
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment