Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி

      01 May 2024      No Comment



(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி)

அடிகள் தம்மை, அறியார் கூடி 70
நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்;
வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும்
கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்;
தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ!

 என்ற மொழிப்பொருள் உணர்ந்தேன் ஐய!    75

பூங்கொடியின் உறுதிமொழி

 நின்றன் பெருமையும் நீணிலம் அறியும்;

எத்துயர் வரினும் எடுத்த பணியே
இலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோ
இலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்;
பேரா சிரியப் பெரியோய்! நின்போல் 80
யாரே செயல்செய வல்லார்? யானும்
நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன்,
என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே’
எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே;

குறளுரை தெளிதல்

 `மனமிக நல்லாய்! வாழிய பெரிதே!   85
 உலகப் பெருநூல் ஓதி உணர்ந்தனை!

கலகப் பொருளுடை கடிகதில் அம்ம!
புத்துரை பலப்பல காணுதி! யானும்
ஒத்த வகையால் உணர்ந்தநல் உரைசில
கூறுவென் கேண்மோ’ என்றுரை கூறத் 90
தேறினள் செல்வி தெளிபொருள் உணர்ந்தே

வீறுகொள் செம்மல் விடைகொண் டனரே. 92

+++

 வேத்தியலாளர் - அரசியலார், கண்டின் - கற்கண்டின், நீணிலம் - பேருலகம், இலக்கு - குறிக்கோள், விருது - பட்டம், கடிகதில் - நீக்குக, செம்மல் - சிறந்தோர்.

+++

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்