Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்

     03 April 2024      அகரமுதல



(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் -தொடர்ச்சி)

பூங்கொடி

பூங்கொடி தெளிதல்

நல்லியற் பூங்கொடி நலங்குறைந் திருப்போள் 45
சேக்கையிற் சாய்ந்து சிந்தித் திருந்தனள்;
சிந்தனைத் திரையில் சென்றபன் னிகழ்ச்சிகள்
வந்து மறைந்தன; தந்தையின் நினைவும்
நொந்தஅவ் வுளத்தில் நுழைந்தது; ஐயகோ!
மொழிக்குறும் பகைமை முதுகிடப் பொருதனை! 50
இழுக்குறும் அடிமை இரிந்திட உழைத்தனை!
வழுக்களைந் தினத்தவர் வாழ்ந்திட மொழிந்தனை!
ஆயினும் அந்தோ அறிவிலார் கூடி,
நாயினும் கீழோர் நயவஞ் சகரால்
கொன்றனர் நின்னைக் கொடுமை! கொடுமை! 55
என்றெழும் உணர்ச்சி நெஞ்சினைக் கொன்றிடத்
துயரம் புனலாய்த் துணைவிழி வழியா
உயிரொடு வெளிவரல் ஒப்ப வழிந்தது;

பூங்கொடி தெளிதல்

 இத்துயர் கண்ட எழில்மதி முகிலுட்  
 புக்கது; பின்னர்ப் புத்தொளி வீசிச்  60
 சிரித்தது வானில்; சிந்தனை நெஞ்சினில்

விரித்துள கவலை விரைந்து கலைந்திட
அடுத்த தறிவொளி, விடுத்தனள் இடுக்கண்;
உடுக்கணம் இதனை உற்று நோக்கின;
முத்தக் கூத்தனை மூடிய கல்லறை 65
சித்தத் தெழுந்தது சிலிர்த்தனள் உடலம்;
நினைதுயர் நீங்க நெஞ்சகம் சிரித்தனள்;
முனைவொடு பணிசெய முயன்றனள் நங்கை;

பூங்கொடியின் புகழ்மணம்

நாடொறும் அறிவுரை நயந்துரைத் திருந்தனள்

 

வீடுகள் தோறும் விருந்துக் கழைத்தனர், 70
கேட்போர் பலராய்க் கிளைத்தனர் பல்கினர்,
வேட்போர் தொகையும் மிகவாய்த் திரண்டன,
ஒன்றே குலமெனும் உணர்வு விரிந்தது;
நன்றே செய்தனள் நம்முயர் தலைவி
என்றே தொழுதனர் இசைத்தனர் அவள்புகழ்; 75
உள்ளம் பொய்யா துழைப்பவர் எண்ணம்
எள்ளள வும்பிழை ஏலா தீண்டெனும்

கொள்கை நிலைத்திடச் செய்தனள் கொடியே. 78

 சேக்கை - படுக்கை, பொருதனை - போரிட்டாய், இரிந்திட - விலக, வழு - குற்றம், முகில் - மேகம்.
வேட்போர் - விரும்புவோர், கொடி - பூங்கொடி.

(தொடரும்)
 



















































கவிஞர்முடியரசன், பூங்கொடி    

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்