Tuesday, May 26, 2015

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்


nannaal

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம்
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே
வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது போராட்ட மானால்
போரில் கலந்து வென்றிடுவோம்!
வாழ்க்கை என்பது விளையாட் டெனில்
ஆடி வாகை சூடிடுவோம்!
வாழ்க்கை என்பது பயண மாயின்
இனிதே இலக்கை அடைந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால்
பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது கணக்கு எனவே
கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்!
வாழ்க்கை என்பது வரலா றாகச்
செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்!
வாழ நாமும் பிறந்து விட்டோம்
வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!
எத்தனைத் தடைகள் வந்தாலும்
அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம்!
மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே
நல்ல வாழ்வை அடைந்திடுவோம்!
நாம் வாழ்வோம் பிறர் வாழ
நாமும் நலமாய் வாழ்ந்திடுவோம்!
நாம் உயர வீடு உயரும்
வீடு உயர நாடு உயரும்!
நாடு உயர உலகு உயரும்
உலக உயர்வில் நாம் மகிழ்வோம்!
எல்லா நாளும் நம் நாளே
என்றும் நமக்கு நன்னாளே!
- வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

போதை – மரு.பாலசுப்பிரமணியன்


adict
பாதையிலே கால் நடந்தால் ஊர் போய்ச் சேரும்
போதையிலே கால் நடந்தால் காடு போய் சேரும்
பிணியாலும் நோயாலும் மாண்டவர் சில கோடி
புகையாலும் மதுவாலும் மாண்டவர் பல கோடி
புகழின் பாதை கோபுரத்துக்கு வழி காட்டும்
மதுவின் போதை புதை குழிக்கு வழி காட்டும்
போதை என்பது நமக்கு நாமே வைக்கும் கொள்ளி நெருப்பு
சோம்பல் என்பது நமக்கு நாமே கட்டும் கல்லறை
நெஞ்சினிலே துயரம் வந்ததென்று போதையில் மயங்காதே
நெஞ்சினிலே துணிவு வந்த பின்னே பாதையில் தயங்காதே
பாதையில் தள்ளாடும் படகுகள்
ஒழுங்காக வீடு போய்ச் சேர்வதில்லை
போதையில் தள்ளாடும் தலைகள்
புகழுடன் காடு போய்ச் சேர்வதில்லை
தாயார் வெறுத்திடவும் ஊரார் ஒதுக்கிடவும் வீழ்த்திடுமே கள் போதை
மாதர் துரத்திடவும் மாந்தர் தூற்றிடவும் தாழ்த்திடுமே காமப் போதை
கலையில்லாது கல்லும் உளியும் இருந்தால் மட்டும் சிலைவராது
கவலைதீராது களியும் கள்ளும் உண்டால் மட்டும் துயர் மாறாது
கள் கொண்ட போதை மயக்கத்திலே காமம் தலைக்கேறும்
புகழ் கொண்ட போதை மயக்கத்திலே கருவம் தலைக்கேறும்
நல்ல பழக்கங்களைப் பழகுவது கடினம்
கெட்ட பழக்கங்களை விடுவது மிகக்கடினம்
- அருத்தமுள்ள இனியமனம் : மனநல மருத்துவர் பாலசுப்பிரமணியன்
balasubramaniyam_mananalamaruthuvar02
https://arthamullainiyamanam.wordpress.com/2014/07/08/mm217%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88/

இறைவனை எங்கும் கண்டிலனே – கவிமணி

kopuram
தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
எய்ப்பில் வைப்பா மவனைத் – தோழி
ஏழை நான் கண்டிலனே
சிற்பச் சிலைகள் கண்டேன் – நல்ல
சித்திர வேலை கண்டேன்
அற்புத மூர்த்தி யினைத் – தோழி
அங்கெங்குங் கண்டிலனே
பொன்னும் மணியுங் கண்டேன் – வாசம்
பொங்கு பூ மாலை கண்டேன்
என்னப்பன் எம்பி ரானைத் – தோழி
இன்னும் யான் கண்டிலனே
தூப மிடுதல் கண்டேன் – தீபம்
சுற்றி எடுத்தல் கண்டேன்
ஆபத்தில் காப்பவனைத் – தோழி
அங்கே நான் கண்டிலனே
தில்லைப் பதியுங் கண்டேன் – அங்கு
சிற்றம்பலமுங் கண்டேன்
கல்லைக் கனி செய்வோனைத் – தோழி
கண்களாற் கண்டிலனே
கண்ணுக் கினிய கண்டு – மனதைக்
காட்டில் அலைய விட்டுப்
பண்ணிடும் பூசை யாலே – தோழி
பயனொன் றில்லையடி.
உள்ளத்தி லுள்ளானடி – அது நீ
உணர வேண்டு மடி
உள்ளத்தில் காண்பாய் எனில் – கோவில்
உள்ளேயும் காண்பாயடி.
கோவில் முழுதுங் கண்டேன் – உயர்
கோபுரமேறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – தோழி
- கவிமணி தேசிக விநாயகம் (பிள்ளை)

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை

seethayanam_padakathai_attai_mun
பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வருக்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்தத் தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!
இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்தச் சிறப்பான   இயல்பும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை! புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்தச் சமயத்திலும் சிந்திக்கத்தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை!   அக்கிரமம் செய்த அரக்கர்கள் என்ற முத்திரையில் இராவணன் முதலானவரைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முதன்மை பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை. கிருட்டிண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருட்டிண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தருக்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!
உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து போர்க் களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருட்டிண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அருச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தருக்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருட்டிண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெறத் தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு”, “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்படமாக்கப்பட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராசகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார். தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வருக்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.
வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன?
இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராணக் கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பணயமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!
மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வருக்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ   பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.
இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வசிட்டர், விசுவாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வசிட்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலட்சுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல துறவகத்தில் தொடக்கக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று துறவகத்தில் சீதையின் புதல்வர் இலவா, குசா இருவருக்கும் தொடக்கக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, இலவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுதத் தொடங்கினாரா? அல்லது சீதை துறவகத்திற்கு வந்த பிறகு எழுதத் தொடங்கினாரா என்பதும் தெரியவில்லை. சீதை துறவகத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் தொடங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.
இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையைச் சற்று மாற்றி யுள்ளதாக இராசாசி கூறுகிறார். வால்மீகி, இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதாரத் தேவனாகக் கருத வில்லை என்றும் இராசாசி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின் அவதாரப் பணி முடிந்து விட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராசாசி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில் இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக் காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராசாசி கூறுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது! முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, மனிதனாகவே நல்லதும், கெட்டதும் செய்து வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கண்ணோட்டம் !
கர்ப்பிணி சீதை இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் துறவகத்தில் இரட்டையர் பிறந்து அவர்கள் இளைஞரான சமயத்தில் தந்தை இராமனை எதிர்பாராது சந்திக்கிறார்கள். முடிவில் பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன், வால்மீகி வலியுறுத்திய பிறகும், சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும், சீதை மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சீதையையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப் பட்டுள்ளது! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப் படுகிறார்கள்! விட்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!
பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை! தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக எனது சீதாயண நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதி நாடகத்தை எழுதினேன். காட்டில் தனித்து விடப்பட்ட சீதை, வால்மீகி துறவகத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது என் அழுத்தமான கருத்து!
அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் ஆழ்ந்த கருத்து. பின்னால் அவரது சீடர்களோ பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பன்மொழி பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சி களாகப் படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.
துறவகத்தில் இருந்த சீதை தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும், வால்மீகி இலவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய குருவாக இருந்ததாலும், இராமகதை நிகழ்வுகள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும், மெய்யான தாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச் சீதையை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதனை அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமனைப் பதினான்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார் படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதையைப்பற்றி வண்ணான் அவதூறு கூறியது, மனம் விண்டு சீதை இறுதியில் குன்றி லிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன.
கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் மாதருக்கு ஏற்பட்ட அந்தக் கோர முடிவுகள் இரண்டும் படிப்பவர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் அவலத் தன்மை படைத்தவை!
சீதாயண நாடகம் நமக்குப் போதிக்கும் முக்கிய பாடம் இதுதான் : இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்; அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர் புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில், இராம பிரானுக்குப் புதுக் கோயில் ஒன்றை எழுப்புவது வட நாட்டில் பெரிய மதப் போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் இந்தியர் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட நாட்டில் இராமன் எந்த இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் மெய்ப்பிக்க முடியாத போது, சிக்கலான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம பக்தர்கள் இராமனுக்குப் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான கேள்வி
தகவல்:
 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma
 3. Mahabharatha By: Rosetta William [2000]
 4. The Wonder that was India By: A.L. Basham [1959]
 5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]
 6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]
 7.   https://jayabarathan.wordpress.com/seethayanam/[நெஞ்சின் அலைகள்]​
 8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]
 9.   http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]
 10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]
 11.  http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]
 12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana  [[Ramayana By : Vivekananda]  [April 16, 2012]
 13.  http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison  [D S Mahadevan ]
 14.  http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/ [D S Mahadevan ]
 15.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/  [D S Mahadevan ]
 16.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/  [D S Mahadevan ]
*************
s.jayabharathan01
Jayabarathan [jayabarathans@gmail.com ] (April 30, 2014)  [R-3]
seethayanam_padakathai_attai_pin
ஆசிரியர் குறிப்பு : வால்மீகி இராமாயணத்தையும் அதைத்திரித்து எழுதிய கம்பர் இராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பல படைப்புகள் வந்துள்ளன. அறிஞர் பா.வே.மாணிக்கனாரின் “கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்”, நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் “தசரதன் குறையும் கைகேயி நிறையும்” என்பனபோன்ற நூல்கள், எம்.ஆர்.இராதாவின் கீமாயணம், மனோகரின் இலங்கேசுவரன் போன்ற நாடகங்கள், போல் பலவும் இராமரின் உண்மைப்பக்கத்தைக் காட்டுவனவாக உள்ளன.   இராமாயணத்தை வேறு கோணத்தில் எழுதியுள்ள பலரும் சீதையை ஒழுக்கமற்றவளாகக்காட்டுகின்றனர். அவ்வாறு காட்டுவது இராமனின் செயல்களைச் சரி என்றே காட்டும். மனத்தால் குற்றமிழைக்கவில்லை எனத் தவறாகக் கூறி   கௌதம முனிவராகிய கணவரால் கல்லாக மாறிய அகல்யையை இராமன் மீண்டும் மனிதப்பிறவியாக மாற்றுகிறான். சீதையிடம் இராமன் முரண்பட்டு நடந்துகொண்டு தண்டனை தருகிறான். இதனை விளக்கும் கட்டுரைகளும் வந்துள்ளன. ஆனால் சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ என்பது இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என நம்புவதுபோல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நாடகம் படிப்பதற்கும் நடிப்பதற்கும் ஏற்ற படைப்பாகும். வால்மீகி தெரிவித்துள்ள சீதையைப் பற்றிய வரிகள் சீதையைக் களங்கமுற்ற மனத்தினளாகக் காட்டும். எனினும் இராமனின் குறைகளை வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதால் அவற்றைக் குறிப்பது தேவையில்லாமல் போய்விட்டது போலும். இந்நாடகத்தைச் சித்திரக்கதையாகவும இவர் வெளியிட்டுள்ளமையால் சிறுவர்களும் படிப்பதற்கேற்றதாக அமைந்துள்ளது. வாய்ப்புள்ளவர்கள் இதனை மேடைநாடகமாக அரங்கேற்றலாம்.
நாடக ஆசிரியரின் பின்னுரையில் தெரிவித்த கருத்துகள் வழக்கமாகச்சிலர் தெரிவிக்கும் கருத்துகளாகும். எடுத்துக்காட்டாக இவர், கிருட்டிண பரமாத்மா என்பது இராவணனை அரக்கன் என்பது போன்றவற்றைக் கூறலாம். (ஆரியர்கள் தமிழர்களைத் தலைவர்கள் என்ற பொருளில் அசுரர் என்ற அழைத்ததே பின்னாள் அரக்கர் என மாற்றமுற்றது என்பார் தமிழ்க்கடல் மறைமலையடிகள்.)   வாலி என்றால் தூய்மையானவர் என்று பொருள். வாலையுடையவன் எனத் தவறாக எண்ணி ஆரியர் வாலுள்ள குரஙகுகளாக் காட்டியதை மறுத்து மனிதப் பிறவிகளாகவே காட்டியுள்ளமை பாராட்டிற்குரியது. ஆனால், இசையில்சிறந்த தென்னிலங்கை வேந்தனை அரக்கனாகக் குறிப்பிட்டுள்ளது தவறேயாகும். இது போன்ற கருத்துகளைக் கூறின், திசை மாறிப் போகும். எனவே, நல்ல படைப்பான சீதாயணத்தை   மேடையேற்றம் செய்யுமாறு நாடக அன்பர்களை வேண்டுகிறோம். நடுநிலையுணர்வுடன் சிறந்த நாடகத்தை ஆக்கித்தந்த அறிவியலறிஞர் சி.செயபாரதனை அகரமுதல இதழ் மனமுவந்து பாராட்டுகிறது. – ஆசிரியர்

Saturday, May 23, 2015

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

sparrows80 
(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி)

காட்சி – 25

அங்கம்    :    ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம்        :    மரக்கிளை
நிலைமை    :    (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை
                    ஆட்சியைக் கண்டு வியக்கின்றது)
பெண்  :    பெண்களுக்கென்ன நகையின்மேல்
இத்தனை ஆசை உள்ளது சொல்?
ஆண்  :    கண்ணே! பெண்ணுக்கு நகைதானே!
என்ன அதில்தான் உள்ளதுவோ?
பெண்  :    மேலைநாட்டுப் பெண்களுக்கு
இத்தனை விருப்பம் இதில் உண்டோ?
ஆண்  :    வேலை செய்யவே பொழுதில்லை!
நினைக்கவும் நேரம் அங்கேது!
பெண்  :    நமது நாட்டுமகளிரைத்
தவறாய் எண்ணமாட்டாரோ?
ஆண்  :    உமது எண்ணம் உயர்வென்று
எண்ணிடும் அறிவும் இங்கில்லையே!
பெண்  :    இதெல்லாம் உனக்குத் தெரிகிறதே!
எவரும் இதனை உரைத்தாரா?
ஆண்  :    இதென்ன? இன்னும் கேட்டுவிடு?
எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்!
பெண்  :    நகைகளைப் பெண்கள் விரும்புவதால்
எவருக்கு என்ன பேரிழப்பு?
பெண்  :    வகையாய்க் கேட்டாய்! ஓர் கேள்வி!
நீயும் பேடே அதனாலே!
அசடே! கொஞ்சம் கேட்டு விடு!
அழகாய் உனக்குச் சொல்கின்றேன்!
கசடே அல்ல நகையின் மேல்
பெண்கள் விருப்பம் வைப்பதிலே!
ஆசைக்கு அளவு உண்டல்லவா!
அதுவோ வெறியாய் வரலாமா?
தேவைக்கு மேலே பூட்டுவதால்
தேடிடும் நலன்தான் அதிலென்ன?
இருப்போர் சிலரோ பூட்டுவதால்
இல்லார் பலரோ குமுறுகிறார்!
வரும்போர் குடும்பத்தில் பெரும்பாலும்
எனக்கென்ன மாட்டினாய் என்பதுவே!
எத்தனை குடும்பம் பிரிகிறது?
          எத்தனை சிக்கல் விளைகிறது?
இத்தனை தொல்லை எதனாலே?
எல்லாம் இந்த நகையாலே!
பெண்  :    இருப்போர் பூட்டி மகிழ்கின்றார்!
இல்லார் வருந்தல் ஏன் என்றேன்?
ஆண்  :    வருதல் ஆசை இயற்கையே
அறிவும் கொஞ்சம் குறைவன்றோ?
பேடே! கொஞ்சம் கேட்டுவிடு!
தங்கத்தைச் செங்கல் கட்டிகளாய்
நாட்டில் பலரோ! கொள்ளையிட்டு
மறைத்தே வைக்கிறார் கழிவறையில்
நாடே இதனால் அழிகிறது!
பொருளாதாரம் குலைகிறது!
பேடே! இப்போது புரிகிறதா?
பிறர்வழி கேட்டதே இதுவெல்லாம்!
(காட்சி முடிவு)
- பாடும்
aa.ve.mullainilavazhagan


Tuesday, May 19, 2015

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 6

(சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி)
காட்சி ஆறு

முடிவை நோக்கிச் சீதை
இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.
நேரம்:  மாலை வேளை
பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதை, இலட்சுமணன், பரதன்,  சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, துறவகச் சீடர்கள். மலை  மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை  கட்டப்பட்டுள்ளது.
(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது,  இலவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)
இலவா, குசா: [தரையில்  கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள்  உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு  வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.
இராமன்: [கனிவுடன்] அருமைப்  பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத்  தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது  உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும்  அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!
இலவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை  ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா? இல்லையா ? ஆயுதமற்ற  எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ?  போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது!  எடுங்கள் உங்கள் வில்லை!
இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம்  இசைவுபெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம்  கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.
இலவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ?  எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?
[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். இலவா, குசா இருவரும் தலை  குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]
வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!
இலவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே  போடுகிறார்கள்)
இராமன்: (இராமனும் தன் மணிமுடியை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.)  வணக்கம் மகரிசி!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள்  அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள்  கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள்  அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால்,  தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும்  தவிர்த்திருப்பேன்!
இலவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா? எங்கள் அருமைத்  தந்தையா? … (இலவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா?  எங்களுடன் தொடக்கத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா? தான்  யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள்  பிதாவா?
இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத்  தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை  நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.
குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன்  எங்களுக்குக் கூறவில்லை? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக்  காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள் தானா? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள் தானா? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்!  [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத்  தயக்கமா?  வெட்கமா?  உங்கள் புதல்வர் நாங்கள் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா? அல்லது  வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]
வால்மீகி: மாமன்னா! துறவகத்தில் சீதைக்குப் பிறந்த இந்த இரட்டைச் சிறுவர்  உன்னருமைப் புத்திரர்! அதில் ஐயம் வேண்டா! [இலவா, குசா இருவரையும் பார்த்து]  பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!
இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என்  புதல்வர்களா ?
வால்மீகி:  ஆமாம்,  அதில் எந்த ஐயமும் வேண்டாம்.
இலவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடுஐயம் தீராத் தந்தை! ஐயம்! ஐயம்!! ஐயம்!!! ஐயக் குணம் இன்னும்  தந்தைக்குக் குறைய வில்லையே!
வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன்,  விட்ணு ஆகிய மூவர் சான்றாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே!  அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டுச் சென்ற கர்ப்பவதி சீதைக்கு என்  துறவகத்தில் தங்க இடமளித்தேன். சீதைக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள்.  இலவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது சோதிடத்தைக்  கணித்துக் கோள்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். அரசப்பண்புகள்படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை உரிமையில் பட்டமேறும்  இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!
[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன்  முன்வந்து வால்மீகி மகரிசியை வணங்குகிறார்கள். சீதை தனியாகத் தூரத்தில் நின்று  வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதையின் அருகில் நிற்கிறான்.]
மூவரும்: வணக்கம் மகரிசி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல்,  சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததன்  எதிர்பாராத பலன், சீதை அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன்  எங்கள் சந்திப்பு!
இலட்சுமணன்: மகரிசி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த விற்  பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச்  சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார்  ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும்  எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க  எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக்  கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள்  அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ  சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன்,  அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன்  பிதா. அதோ சீதையின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை  போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதையை இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதையின்  இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி  இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா  விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!
இலவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன்  அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன்  அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.
வால்மீகி: [இலவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து  விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.
இலவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை  அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து  இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக்  கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள்?   எங்கள் தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?
இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று  பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!
இலவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின்  கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன்,  இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)
வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதையைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம்  முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி  இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல  வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல  வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.
சீதை: மகரிசி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட  ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிசி! நான் பாலகருடன் பதியோடு வாழ  விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள்  ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள  வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிசி!  இதுவரை அவரது விழிகள் என்னை நோக்க வில்லையே !
வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு  அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள்  உன் மடிமீது விளையாட வேண்டியவர், இந்தக் காட்டுப் புழுதி மண்ணில் விளையாடிக்  கொண்டிருக்கலாமா? சீதையையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு  அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது!  நீங்கள் சேர்ந்து கொள்ள இறைவன் அடுத்தோர் வாய்ப்பை அளித்துள்ளான்.   அழைத்துச் செல் மூவரையும் மாமன்னரே !
இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய்  உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை  கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும்  எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும்?  இதுவரை கொடுத்த தண்டனை போதும்.  எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட  வேண்டும்.
சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி  யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.
பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை  கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.
இராமன்: [சீதையை நேராக நோக்காமல்] மகரிசி!  இம்முறை இலவா, குசா இருவரையும் நிச்சயம்  கூட்டிச் செல்ல முடிவு செய்கிறேன்.
இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவுள்ளம், கண்ணியம்,  கடமை எங்கே போயிற்று? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது  உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்த போது சனக  மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும்  அறத்துடன் நடப்போம்.
இலவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால்  அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப்  போவதில்லை. இதுவரை நாங்கள் தந்தையைக்  காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக்  காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது?  தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தச் சிக்கலும் இல்லை! பிறந்தது முதல்  என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை  வேண்டா! எங்கள் தாய் வாழும் துறவகக் குடிசையே போதும். தந்தை யின்றி  வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து  எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!
இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல  நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள்  வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!
இலவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர்  எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டீர்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள்  கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.
வால்மீகி: மாமன்னா! சீதையின் புனிதத்தில் இனியும் ஐயம் வேண்டாம். இதுவரை  சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி  இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை மெய்ப்பிக்கிறது..
இராமன்: மகரிசி! எனக்குச் சீதையின் புனிதத்தில் எள்ளளவு ஐயமும் இல்லை!  ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன்? அவரது  ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன்? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை  எனக்கு! சீதையை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான்  மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி  என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும்  அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா? காட்டு சீதையை  பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டின் அரசி ஆக்கிக்  கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா?   என்னை மீண்டும் அவமானம் செய்ய வேண்டுமா?
சீதை: [சீற்றத்துடன்] மகரிசி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ  தீண்டப் படாதவள் ஆகிவிட்டேன்!  அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை  விட, வனவாச துறவகத்தில் யாருமற்று வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா  நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய  மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று  அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று  நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல  எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத  சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள்  பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்!  (கோவென்று அழுகிறாள்)
இலவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை  விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாய்க்குப் பிறந்தவர்கள் நாங்கள்!  சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள்  பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி  விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு  குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா? அவ்விதம் உங்கள் காதில் பட்டால்  உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா? அன்னிய ஆடவன் தொட்டால் பெண்  தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும்  தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?
சீதை: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல்  மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர்  கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை!  நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல்,  அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில்  இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும்,  என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள்  சொல் படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே  காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி  மதித்ததே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது!  ஆனால் அவரது நெஞ்சில் யாருமில்லாத பாலை வனம்தான் உள்ளது.  ஊர் மக்களுக்கு ஏக  பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச்  சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும்  போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூசித்து வருவதுபோல் காட்டுவது  தர்மமா ? மகரிசி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட  அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக  அரண்மனையில் காட்சி தரக் கூடாது!
இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதையின் தங்கச் சிலையை  அகற்றி விடுகிறேன்.
வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?
சீதை: (அழுகையுடன்) மகரிசி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ  விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர்  விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத  பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர்  என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன்.  நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை  ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை!  அவர் சனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா? இல்லை, பந்தயப்  போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து வென்றபந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான்  முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு  மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு  அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் வலிமை  அவரது ஆற்றலுக்கு அறைகூவல்விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில்  போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான்  கண்டது என்ன? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப்  பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி  என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு  மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை  யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி!  கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும்  இடம்பெற முடியவில்லை இதுவரை!  ஒருவகையில் அது எனக்கு மகிழ்ச்சியே !
வால்மீகி: மாமன்னா! சீதையை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு  என்ன? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?
இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிசி!  மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப்  போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற  மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத்  துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த  வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள்  வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன்.  மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! ..  ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப்  பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில்  இருக்கிறதா? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை  ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா?  நாட்டுக்காக நான் சீதையைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு  தெரியவில்லை. ஆனால் இலவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிசி!
வால்மீகி: ஈசுவரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று நான் கனவு கூடக்  காண வில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு  விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட  அவமானத்தைவிடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதையைப்  பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதைக்குக் கொடுத்த தண்டனை,  பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில்  அதிகம்!
சீதை: வேண்டா மகரிசி!  பெயரை மாற்ற வேண்டா. என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம! அசோகவன  மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில்  என் கொடி பறக்க வேண்டா! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே  வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே  இருக்கட்டும்.
பரதன்: [கோபத்தில்] அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டீர்கள்!  அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிசி  வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே  பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்!  அன்னையிடமிருந்து பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்!  உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக்  கொள்கிறேன்.
இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும்  புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க  வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.
அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் அரசியாரைக் கைவிட்ட காரணம்  இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே  விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால்  தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத்  திரும்பப் போகிறேன்.
இலவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால்  உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும்  வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் நங்கள் தங்கிக் கொள்கிறோம்.
வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதையை மன்னர் புறக்கணிக்க  அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப்  போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன  இக்கட்டான கட்டத்திற்குச் சீதையின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள்  புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதையைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப்  பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று சொல்லி சீதையை அழைத்துச்  செல்லுங்கள்.
சீதை: [கண்ணீர் பொங்க] மகரிசி! என்னை வைத்துத் தொடங்கிய இப்போராட்டம்  என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்!  அப்போது எல்லாரது சிக்கல்களும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை  எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (இலதா, குசாவைப் பார்த்து) ….  அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு  வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை  வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து  விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது சிக்கல்களுக்கும் தீர்வு  காணும்…. நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!..  நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே  நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப்  பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது சிக்கலும் என்னால்தான்  தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … மீளாத உலகுக்கு !
[வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக்  குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க  ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதையின் தலை பாதாளப் பாறையில் அடிபட்டு  அவளது உயிர் பிரிகிறது].
இலவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக  வேண்டா. உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?
[அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். இராமன் கண்களில் நீர் பொங்கிச் சொட்டுகிறது]
வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான்  நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது துறவகத்துக்கு அருகிலா, உனது  ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈசுவரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம  கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை  சாய்கிறார்].
[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான்.  இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி  அழுகிறார்கள்]
இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப்  பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர்  துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய  உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்!  வாழப் பிறந்தவர் நீங்கள் சாக வேண்டுமா ?
பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும்  உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள்  நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை  வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தம பதி  என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு  மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் போகலாம்.
அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்துஅரசி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு  பயங்கர முடிவா? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர்  துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம்?
[சீதையின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன்,  அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].
வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி  சீதாதேவின் ஆதனுயிர்(ஆத்மா) அமைதியடைய நாங்கள் வேண்டுகிறோம். பேதைப்பெண்(அபலை) சீதையின்  துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.
[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் இலவா,  குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும் சீடர்களுடன் துறவகத்துக்கு மீள்கிறார்]
(நாடகம் முற்றிற்று)
s.jayabharathan01


[பின்னுரை அடுத்த இதழில் இடம் பெறும்.]