சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை

seethayanam_padakathai_attai_mun
பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வருக்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்தத் தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!
இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்தச் சிறப்பான   இயல்பும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை! புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்தச் சமயத்திலும் சிந்திக்கத்தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை!   அக்கிரமம் செய்த அரக்கர்கள் என்ற முத்திரையில் இராவணன் முதலானவரைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முதன்மை பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை. கிருட்டிண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருட்டிண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தருக்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!
உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து போர்க் களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருட்டிண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அருச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தருக்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருட்டிண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெறத் தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு”, “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்படமாக்கப்பட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராசகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார். தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வருக்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.
வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன?
இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராணக் கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பணயமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!
மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வருக்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ   பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.
இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வசிட்டர், விசுவாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வசிட்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலட்சுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல துறவகத்தில் தொடக்கக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று துறவகத்தில் சீதையின் புதல்வர் இலவா, குசா இருவருக்கும் தொடக்கக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, இலவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுதத் தொடங்கினாரா? அல்லது சீதை துறவகத்திற்கு வந்த பிறகு எழுதத் தொடங்கினாரா என்பதும் தெரியவில்லை. சீதை துறவகத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் தொடங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.
இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையைச் சற்று மாற்றி யுள்ளதாக இராசாசி கூறுகிறார். வால்மீகி, இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதாரத் தேவனாகக் கருத வில்லை என்றும் இராசாசி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின் அவதாரப் பணி முடிந்து விட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராசாசி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில் இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக் காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராசாசி கூறுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது! முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, மனிதனாகவே நல்லதும், கெட்டதும் செய்து வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கண்ணோட்டம் !
கர்ப்பிணி சீதை இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் துறவகத்தில் இரட்டையர் பிறந்து அவர்கள் இளைஞரான சமயத்தில் தந்தை இராமனை எதிர்பாராது சந்திக்கிறார்கள். முடிவில் பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன், வால்மீகி வலியுறுத்திய பிறகும், சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும், சீதை மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சீதையையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப் பட்டுள்ளது! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப் படுகிறார்கள்! விட்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!
பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை! தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக எனது சீதாயண நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதி நாடகத்தை எழுதினேன். காட்டில் தனித்து விடப்பட்ட சீதை, வால்மீகி துறவகத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது என் அழுத்தமான கருத்து!
அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் ஆழ்ந்த கருத்து. பின்னால் அவரது சீடர்களோ பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பன்மொழி பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சி களாகப் படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.
துறவகத்தில் இருந்த சீதை தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும், வால்மீகி இலவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய குருவாக இருந்ததாலும், இராமகதை நிகழ்வுகள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும், மெய்யான தாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச் சீதையை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதனை அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமனைப் பதினான்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார் படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதையைப்பற்றி வண்ணான் அவதூறு கூறியது, மனம் விண்டு சீதை இறுதியில் குன்றி லிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன.
கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் மாதருக்கு ஏற்பட்ட அந்தக் கோர முடிவுகள் இரண்டும் படிப்பவர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் அவலத் தன்மை படைத்தவை!
சீதாயண நாடகம் நமக்குப் போதிக்கும் முக்கிய பாடம் இதுதான் : இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்; அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர் புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில், இராம பிரானுக்குப் புதுக் கோயில் ஒன்றை எழுப்புவது வட நாட்டில் பெரிய மதப் போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் இந்தியர் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட நாட்டில் இராமன் எந்த இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் மெய்ப்பிக்க முடியாத போது, சிக்கலான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம பக்தர்கள் இராமனுக்குப் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான கேள்வி
தகவல்:
  1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]
  2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma
  3. Mahabharatha By: Rosetta William [2000]
  4. The Wonder that was India By: A.L. Basham [1959]
  5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]
  6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]
  7.   https://jayabarathan.wordpress.com/seethayanam/[நெஞ்சின் அலைகள்]​
  8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]
  9.   http://en.wikipedia.org/wiki/Demolition_of_Babri_Masjid [1992] [Dated January 18, 2014]
  10. http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning [2002] [Dated [Dated January 26, 2014]
  11.  http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence [2002] [Dated January 27, 2014]
  12. http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_4/Lectures_and_Discourses/The_Ramayana  [[Ramayana By : Vivekananda]  [April 16, 2012]
  13.  http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison  [D S Mahadevan ]
  14.  http://www.tamilhindu.com/2014/03/கம்பனும்-வால்மீகியும்-இ/ [D S Mahadevan ]
  15.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-2/  [D S Mahadevan ]
  16.  http://www.tamilhindu.com/2014/04/கம்பனும்-வால்மீகியும்-இ-3/  [D S Mahadevan ]
*************
s.jayabharathan01
Jayabarathan [jayabarathans@gmail.com ] (April 30, 2014)  [R-3]
seethayanam_padakathai_attai_pin
ஆசிரியர் குறிப்பு : வால்மீகி இராமாயணத்தையும் அதைத்திரித்து எழுதிய கம்பர் இராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பல படைப்புகள் வந்துள்ளன. அறிஞர் பா.வே.மாணிக்கனாரின் “கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்”, நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் “தசரதன் குறையும் கைகேயி நிறையும்” என்பனபோன்ற நூல்கள், எம்.ஆர்.இராதாவின் கீமாயணம், மனோகரின் இலங்கேசுவரன் போன்ற நாடகங்கள், போல் பலவும் இராமரின் உண்மைப்பக்கத்தைக் காட்டுவனவாக உள்ளன.   இராமாயணத்தை வேறு கோணத்தில் எழுதியுள்ள பலரும் சீதையை ஒழுக்கமற்றவளாகக்காட்டுகின்றனர். அவ்வாறு காட்டுவது இராமனின் செயல்களைச் சரி என்றே காட்டும். மனத்தால் குற்றமிழைக்கவில்லை எனத் தவறாகக் கூறி   கௌதம முனிவராகிய கணவரால் கல்லாக மாறிய அகல்யையை இராமன் மீண்டும் மனிதப்பிறவியாக மாற்றுகிறான். சீதையிடம் இராமன் முரண்பட்டு நடந்துகொண்டு தண்டனை தருகிறான். இதனை விளக்கும் கட்டுரைகளும் வந்துள்ளன. ஆனால் சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ என்பது இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என நம்புவதுபோல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நாடகம் படிப்பதற்கும் நடிப்பதற்கும் ஏற்ற படைப்பாகும். வால்மீகி தெரிவித்துள்ள சீதையைப் பற்றிய வரிகள் சீதையைக் களங்கமுற்ற மனத்தினளாகக் காட்டும். எனினும் இராமனின் குறைகளை வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதால் அவற்றைக் குறிப்பது தேவையில்லாமல் போய்விட்டது போலும். இந்நாடகத்தைச் சித்திரக்கதையாகவும இவர் வெளியிட்டுள்ளமையால் சிறுவர்களும் படிப்பதற்கேற்றதாக அமைந்துள்ளது. வாய்ப்புள்ளவர்கள் இதனை மேடைநாடகமாக அரங்கேற்றலாம்.
நாடக ஆசிரியரின் பின்னுரையில் தெரிவித்த கருத்துகள் வழக்கமாகச்சிலர் தெரிவிக்கும் கருத்துகளாகும். எடுத்துக்காட்டாக இவர், கிருட்டிண பரமாத்மா என்பது இராவணனை அரக்கன் என்பது போன்றவற்றைக் கூறலாம். (ஆரியர்கள் தமிழர்களைத் தலைவர்கள் என்ற பொருளில் அசுரர் என்ற அழைத்ததே பின்னாள் அரக்கர் என மாற்றமுற்றது என்பார் தமிழ்க்கடல் மறைமலையடிகள்.)   வாலி என்றால் தூய்மையானவர் என்று பொருள். வாலையுடையவன் எனத் தவறாக எண்ணி ஆரியர் வாலுள்ள குரஙகுகளாக் காட்டியதை மறுத்து மனிதப் பிறவிகளாகவே காட்டியுள்ளமை பாராட்டிற்குரியது. ஆனால், இசையில்சிறந்த தென்னிலங்கை வேந்தனை அரக்கனாகக் குறிப்பிட்டுள்ளது தவறேயாகும். இது போன்ற கருத்துகளைக் கூறின், திசை மாறிப் போகும். எனவே, நல்ல படைப்பான சீதாயணத்தை   மேடையேற்றம் செய்யுமாறு நாடக அன்பர்களை வேண்டுகிறோம். நடுநிலையுணர்வுடன் சிறந்த நாடகத்தை ஆக்கித்தந்த அறிவியலறிஞர் சி.செயபாரதனை அகரமுதல இதழ் மனமுவந்து பாராட்டுகிறது. – ஆசிரியர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்