Sunday, October 28, 2012

படிக்காத மேதை' - "மஞ்சரி' தி.ச.இர.

"படிக்காத மேதை' -  "மஞ்சரி' தி.ஜ.ர.!

First Published : 14 October 2012 05:56 AM IST
தமிழில் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' போன்று ஓர் இதழை வெற்றிகரமாக சுமார் 25 ஆண்டுகாலம் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர் "தி.ஜ.ர.' என்றழைக்கப்படும் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். அவர் நடத்திய "மஞ்சரி' எனும் இதழின் பெயராலேயே "மஞ்சரி தி.ஜ.ர.' என்றழைப்பதும் சாலப்பொருத்தம்.
÷1901-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்தவர். ஒரத்தநாடு சத்திரத்தில் இருந்த பள்ளியில் நான்காம் வகுப்பு வரையே படித்தார். படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்தாலும் தந்தை அவரைப் படிக்க வைக்கவில்லை.
÷தி.ஜ.ர.வின் தந்தை "கர்ணம்' வேலை பார்த்து வந்ததால், தந்தையாருடன் ஊர் ஊராய்ச் சுற்றினார். இதனால் தமது படிப்பைத் தொடர முடியாத தி.ஜ.ர., தனக்குத் தானே ஆசிரியராக இருந்து படிக்கத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த அனைத்து நூல்களையும் படித்தார். விஞ்ஞானத்தில் குறிப்பாக, கணிதத்தில் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்வதற்காகவே ஆங்கிலம் படித்துப் பின்னாளில் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார்.
÷தொடக்கத்தில் சில காலம் நில அளவைக்கான பயிற்சி பெற்று கர்ணம் வேலை பார்த்தார். பின் தன் 14-ஆவது வயதில் சுந்தரவல்லி என்பவரைத் திருமணம் புரிந்தார். பிறகு மாமனார் ஊரில் சில மாதங்கள் திண்ணைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும், தஞ்சாவூரில் வக்கீல் குமாஸ்தாவாக, கும்பகோணத்தில் ஒரு மளிகைக் கடையில் சிற்றாளாக - இப்படிப் பல பணிகள் செய்துள்ளார்.
÷1916-ஆம் ஆண்டு தம் 15-ஆவது வயதில் திருவாரூர் அருகில் இருக்கும் "திருக்காராயல்' எனும் சிற்றூரில் இருந்த தம் சின்னம்மா இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது ஐந்து பாகங்கள் கொண்ட "ஐரோப்பிய யுத்த சரித்திரம்' என்னும் தமிழ் நூலைப் படித்தார். ""அந்த நூல்தான் எனக்குத் தலைமை ஆசான்'' என்று தி.ஜ.ர. குறிப்பிட்டுள்ளார். அதைப் படித்ததைத் தொடர்ந்து அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.
÷தி.ஜ.ர., எழுதிய முதல் கட்டுரை 1916-இல் "ஆனந்தபோதினி' என்னும் இதழில் வெளிவந்தது. அப்போது "ஸ்வராஜ்யா' இதழில் அவர் எழுதிய கவிதையும் வெளிவந்தது. தஞ்சாவூரிலிருந்து வெளிவந்த "சமரசபோதினி' என்னும் இதழில் தி.ஜ.ர., துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஊழியன், சுதந்திரச்சங்கு ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணிபுரிந்துள்ளார்.
÷அவரது முதல் சிறுகதைத் தொகுதி "சந்தனக் காவடி' என்னும் பெயரில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நொண்டிக்கிளி, காளி தரிசனம் போன்றவை வெளிவந்தன. தமிழில் கட்டுரை இலக்கியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் தி.ஜ.ர., முக்கியமானவர். அவருடைய கட்டுரைகளை பொழுதுபோக்கு, சமகாலச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு என்று மூன்று வகைகளில் உள்ளடக்கலாம். தி.ஜ.ர., தமது கட்டுரைகளைப் பேச்சு வழக்கில் கதை சொல்லும் விதத்தில் அமைத்தார். சொல் அலங்கார நடையை அவர் வலிந்து மேற்கொள்ளாதவர்.
÷1923-இல் சமரசபோதினியில் தொடங்கிய அவரின் இதழ்ப்பணி 1972-இல் மஞ்சரியிலிருந்து விலகும்வரை நீடித்தது. ஆசிரியர், துணை ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், உதவி ஆசிரியர், கூட்டாசிரியர் எனப் பல பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்துள்ளார்.
÷தி.ஜ.ர., சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். வங்க எழுத்தாளர் ஹரீந்திரபாத் சட்டோபாத்யாயாவின் நாடகங்கள், இராஜாஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகள், வெண்டல் வில்கி என்ற அமெரிக்க எழுத்தாளரின் "ஒரே உலகம்' என்னும் நூல், லெனின் சரித்திரக் கதைகள், ருஷ்ய எழுத்தாளர் ஷென்கோவின் நாவல், நேருவின் உரைகள், லூயி ஃபிஷர் எழுதிய காந்தி வாழ்க்கை, போன்ற பல மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளார்.
÷1940 முதல் 1946 வரை "சக்தி' இதழில் பணிசெய்தபோது தி.ஜ.ர., பாலன், நீலா எனும் புனைபெயர்களில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதினார். சிறுவர்களுக்காக அவர் எழுதிய சித்திர ராமாயணம் குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக அறிவியல் நூல்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கதைகள், பாடல்கள் போன்று பல படைத்து தி.ஜ.ர., குழந்தை இலக்கியத்துக்கும் அணி சேர்த்துள்ளார்.
÷தி.ஜ.ர.வின் சிறுகதைத் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. தமிழக அரசு குழந்தை இலக்கியம் வளர்த்தமைக்காக அவருக்குப் பரிசளித்தது. தி.ஜ.ர., இறுதி நாள்களில் பேசமுடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மறதி நோய்க்கும் ஆளானார். பின்னர், 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி காலமானார்.
÷இவர் படைத்தளித்த ராஜேந்திரன், ராஜாம்பாள், ஜெயரங்கன் போன்ற படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
÷"தி.ஜ.ர.வின் வாழ்க்கை, பலவிதமான குறைகள், அவதிகள், கஷ்டங்கள் நடுவில் சுறுசுறுப்பு, உற்சாகம், நம்பிக்கை, அறிவுத்தேடல் ஆகியவற்றைக் கொண்டது' என்று தன் இரங்கல் குறிப்பில் "கணையாழி' (நவம்பர் 1974) குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். "படிக்காத மேதை'யான தி.ஜ.ர., நம்மைப் படிக்கவைத்த படைப்புகள் ஏராளம்... ஏராளம்...!


கருத்துகள்(1)

>>இவர் படைத்தளித்த ராஜேந்திரன், ராஜாம்பாள், >>ஜெயரங்கன் போன்ற படைப்புகள் அரசுடைமை >>ஆக்கப்பட்டுள்ளன. தவறு! இவை துப்பறியும் நாவல்கள். ஜே.ஆர்.ரங்கராஜு எழுதியவை. தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தவறாக எழுதப் பட்டதைப் பார்த்து எழுதியிருக்கிறார்!

தமிழிலிருந்து உசுபெகிக்கு, உசுபெகியிலிருந்து தமிழுக்கு...

தமிழிலிருந்து உசுபெகிக்கு, உசுபெகியிலிருந்து தமிழுக்கு...

First Published : 24 October 2012 11:11 AM IST
உஸ்பெகிஸ்தான் பல்கலைக்கழக பேராசிரியரும், எழுத்தாளர் கு. சின்னப்பாரதியின் "பவளாயி' புதினத்தை உஸ்பெக்கில் மொழி பெயர்த்தவருமான லோலா மக்துபாஅண்மையில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இலக்கியம், இலக்கியம் தொடர்பாக கற்றுக்கொள்ள வருகை தந்தார். ஒரு மாணவியைப் போல அவர் காட்டும் ஆர்வம் நம்மை வியக்க வைத்தது. அவருடன் அவருடைய இலக்கியப் பணிகள் குறித்து கேட்டதிலிருந்து...
""நான் உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்டியூட் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் செளத் ஏசியன் ஸ்டடிஸ் பிரிவில் மூத்த ஆசிரியராக உள்ளேன். அங்கு இந்தி, உருது மொழிகளைக் கற்பித்து வருகிறேன். தற்போது தமிழும் கற்பிக்கிறேன். தமிழ் இலக்கியம், இலக்கணம் தொடர்பான பாடங்களைக் கற்பதில் ஆர்வம் இருந்தாலும், போதுமான பயிற்சி இல்லை. அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறேன்.
செளத் ஏசியன் ஸ்டடிஸ் துறையின் தலைவர் என்னுடைய உச்சரிப்பைக் கேட்டு நான் தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வமூட்டினார். இதையடுத்து தாஷ்கண்டுக்கு வந்த தமிழர் ராமலிங்கத்தின் உதவியோடு கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அவர் தமிழ் புத்தகங்களை வாசிக்கத் தந்தார்.
இந்தி மூலமாக தமிழில் எழுத்துகளையும், உச்சரிப்பையும் கற்றேன். முறையாக இலக்கணம் கற்றேன். அதற்கான தேர்விலும் வெற்றி பெற்றேன். கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் தொடர்பாகப் படித்து இளம்கலை பட்டம் பெற்றேன். தற்போது தமிழில் முனைவருக்குப் படித்து வருகிறேன். தமிழில் சரளமாகப் பேசும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
ஒரு மொழியை கற்றுக் கொள்ளும்போது ஏற்படும் ஆர்வம் அந்த மொழியின் பழமையையும், பாரம்பரியத்தையும் பொருத்து அமைகிறது. அந்த வகையில் சக்தி வாய்ந்த தமிழ் மொழியை பயில்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். உலகத்தின் எல்லா நாடுகளின் நகரங்களிலும் தமிழரைக் காணமுடியும். பிற நாட்டினர் கற்றுக்கொள்ளும் யோக்கியதை தமிழ் மொழிக்கு உண்டு.
தமிழில் புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தாலும், அதில் பேசும் பயிற்சி அவசியமாகிறது.
சோவியத் யூனியனில் உஸ்பெகிஸ்தான் ஓர் உறுப்பு நாடாக இருந்தபோது, ருஷ்ய மொழி அரசு மொழியாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உஸ்பெக் மொழி அரசு மொழியாக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோவியத் யூனியனில் இருக்கும்போதும், அதற்கு முன்னரும் உஸ்பெக் மொழியில் இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. பிற மொழி இலக்கியங்களும் மொழி பெயர்ப்புகள் செய்யப்படுகின்றன.
உஸ்பெகிஸ்தானில் கல்லூரிப் பருவத்தில் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள ஊக்கமளிக்கப்படுகிறது. குறிப்பாக உருது, அரபி போன்ற மொழிகளைத் தொடக்கத்திலேயே நான் கற்றதால், இந்தி கற்று கொள்வது எளிதாக இருந்தது. நான் குழந்தை பருவத்தில் அரபு மொழி பயின்றேன். உயர் கல்வியின் போது இந்தி மொழி கற்றேன். இது தவிர சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இங்குள்ள கல்வி முறைக்கும் உஸ்பெகிஸ்தானில் உள்ள கல்வி முறைக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. அங்கு கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் அரசிடம் உள்ளது. கல்லூரியில் இளநிலை நான்கு ஆண்டுகள் பயில வேண்டும். இங்கு மூன்று ஆண்டுகள்தான். முதுநிலை இங்கிருப்பதுபோல இரண்டு ஆண்டுகள்தான்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தவுடனே, அங்கிருந்த ஞானச் சூழல் என்னைத் தொற்றிக்கொண்டது. இங்கு மாணவர்கள் எப்போதுமே படித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பல்கலைக்கழக வளாகமே ஞானத்தின் இருப்பிடமாக உள்ளது.
இந்திய இலக்கியங்களில் குறிப்பாக நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றிலும், இந்தி சினிமாக்களிலும் முன்பெல்லாம் முடிவு சுபமாக இருக்கும். ஆனால் தற்போது அதுபோல் இல்லை. உஸ்பெக் இலக்கியங்களும் மாற்றம் கண்டு வருகின்றன.
நான் அறிந்துகொண்டது வரை, புரிந்துகொண்டது வரை இந்தி மொழியில் அரபு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் சொற்கள் அதிகம்  உள்ளன. உருது மொழியிலேயே அரபு, பாரசீக மொழிக் கலப்பே உள்ளது. ஆனால், தமிழ் மொழியில் குறைவான மொழிக் கலப்பே இருக்கிறது. பிற மொழிகளின் கலப்பை தமிழ் அனுமதிக்கவில்லை. தமிழ் மொழிக்கென எழுத்துரு, இலக்கணம், பழம்பெரும் இலக்கியங்கள் ஆகியவை இருப்பது காரணமாக இருக்கலாம். இதுபோன்ற தனிச் சிறப்பு வாய்ந்த மொழிகளாக உலகத்தில் சிலவற்றையே கூற முடியும். அதனால்தான் தமிழ் செம்மொழியாக உள்ளது.
நாட்டார் வழக்காற்றியல் எல்லா நாடுகளிலும் மக்களிடையே இன்னும் உயிர்ப்போடு உள்ளது. பழமொழிகளும், வாய்வழிக் கதைகளும் குறித்த ஆய்வுகள் தொடங்க வேண்டியது அவசியம்.
சமீபத்தில் மலைகள் சூழ்ந்த பசுமை எழில் நிறைந்த நாமக்கல்லில் நடைபெற்ற கு. சின்னப்பபாரதி விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். விழாவில் எனது உரையை கூர்ந்து  கவனித்தார்கள். நல்ல விருந்தோம்பலைப் பெற்றேன். மலைகள் சூழ்ந்த தூய்மையான காற்றும், அந்த நகரில் தங்கியிருந்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள். தமிழர்கள் உதவும் மனப்பான்மை கொண்ட மகான்கள். இந்த உணர்வை தமிழ்நாட்டு பயணத்தின் போது பெற்றேன். தமிழ் மொழி பயில தொடர்ந்து ஊக்கம் அளிப்பவர்களில் பேராசிரியர் பாலசுப்ரமணியமும், ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் நாச்சிமுத்துவும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுக்கு என்றும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்நிலையில் நான் உஸ்பெகி மொழியில் மொழிபெயர்த்த கு. சின்னப்ப
பாரதியின் "பவளாயி' நாவலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பவளாயி நாவல் முழுக்க காட்சிகள் அற்புதமாக வர்ணிக்கப்பட்டுள்ளன. பவளாயி கதாபாத்திரம் என்னை மிகவும் பாதித்தது.
அதைப் போல அகிலன் படைப்புகள் குறித்தும், சுப்ரமணிய பாரதி படைப்புகள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற படைப்புகளை எனது தமிழ் ஆய்வின் போது வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் படைப்பாளிகள் யார், அவர்களது  படைப்புகள் என்ன உள்ளிட்ட கேள்விகளோடு எனது தேடல் தொடங்கிவிட்டது.
மார்க்சிம் கார்கி போன்ற எழுத்தாளர்கள் உஸ்பெகிஸ்தானிலும் உண்டு. ஆனால், அவர்களின் படைப்புகள் பிற மொழிகளில் வெளியிடப்படாததால் அறியப்படாமல் உள்ளனர். உஸ்பெகி இலக்கியங்களை உலகறியச் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். உஸ்பெகி எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தியில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தி, உருது மொழிகளின் இலக்கியங்கள் உஸ்பெகிஸ்தானில் வாசிக்கக் கிடைக்கின்றன.
உஸ்பெகிஸ்தானின் விடுதலைக்குப் பிறகு இலக்கியத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. எங்கள் நாட்டு குடியரசுத் தலைவரும் இளைய தலைமுறையினரும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு திட்டமிடுகின்றனர். கல்வி வளர்ச்சி பெற்று வருகிறது. எங்கள் நாட்டிலுள்ள நூலகங்கள் அனைத்தும் அறிவுச் சேவையை ஆற்றி வருகின்றன. பிற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள செறிவான அறிவுசார்ந்த விஷயங்களை பயில ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இலக்கியப் படைப்புகள் நன்கு வளர்ச்சிப் பெறும் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. ஏனெனில் எங்கள் நாட்டில் நல்ல எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களின் எழுத்துகள் வலிமை வாய்ந்தவை.
தமிழர்களுக்குச் சொல்ல என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. தமிழ் மொழியில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு, உஸ்பெகி இலக்கியங்களைத் தமிழிலும், தமிழ் இலக்கியங்களை உஸ்பெகியிலும் மொழியாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளேன். இரு மொழிகளின் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்துவேன். நான் தேடிய பாதையை கண்டறிந்துவிட்டேன். இனி தொடர்ந்து பயணம் செய்வதுதான் என் திட்டம்'' என்றார்.

Monday, October 1, 2012

நின்று எரியும் விளக்குஇரா.சூடாமணி!

நின்று எரியும் விளக்கு ஆர்.சூடாமணி!

First Published : 23 September 2012 12:00 AM IST
எழுத்தே உயிர்மூச்சாகக் கொண்டிருந் தவர்; சமூக முன்னேற்றத்தைத் தம்
எழுத்தில் அடி நாதமாக வைத்திருந்தவர்; தன் எழுத்தின் பயன் சமூக சீர்திருத்தத்துக்கு சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர். அவர் விருப்பப்படி அவரின் மறைவுக்குப் பிறகு பல கோடி மதிப்புள்ள சொத்து இராமகிருஷ்ண மடத்துக்கே எழுதி வைக்கப்பட்டது. இத்தகு சிறப்பு மிகுந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி 1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராகவன், சென்னை மாநில தலைமைச் செயலராக இருந்தார். தாய் கனகவல்லி  சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். பின்னாள்களில் சூடாமணி தன்னை ஓர் ஓவியராக நிலைநிறுத்திக் கொள்ள அவருடைய தாயும் காரணமாக இருந்திருக்கிறார். சூடாமணியோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன்.
÷எல்லாக் குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்ந்த சூடாமணிக்கு, ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தார். ஆனாலும் அம்மை நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. இவரின் இயல்பான உடல் வளர்ச்சி தடைபட்டது. வளர்ச்சி குறைவான குழந்தையாகவே வளர்ந்தார். இதன் காரணமாக இவருடைய தந்தை இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. தன்னுடைய அருமை மகளுக்குப் பாடம் சொல்லித்தர ஆசிரியரை வீட்டுக்கே வரவைத்தார். கற்பதில் ஆர்வம் மிகுந்த சூடாமணி, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்று விளங்கினார். சூடாமணியின் வாசிப்புத்தளம் விரிவடைந்தது. புத்தகங்களுக்குத் தன்னை அடிமையாக்கிக்கொண்டார்.
÷சூடாமணி 1954 முதல் எழுதினாலும், இவரது முதல் சிறுகதை "காவேரி' என்னும் பெயரில் 1957-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியாகி பாராட்டைப் பெற்றது. இக்கதைக்காக இவருக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு வெளிவந்த "மனதுக்கு இனியவள்' என்னும் நாவல் இவரை அனைவரும் அறியும்படி செய்தது. இந்நாவல் சூடாமணியின் வாழ்க்கையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. தன் வரலாற்றுச் சாயல் கொண்டது. உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இந்நாவலுக்கு  சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது.
÷சூடாமணி, விவேகானந்தர் மீது அளவற்ற அன்பும் காந்தியத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவராக இருந்தார். எளிமையான வெண்மைநிற ஆடைகளை அணிவதையே விரும்பினார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். பெண் எழுத்தாளர் பலரை உருவாக்கிய கலைமகள் இதழ்தான் இவரையும் உருவாக்கியது. அதனால், "கலைமகள் எழுத்தாளர்' என்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழைத் தவிர ஆங்கிலத்திலும் "சூடாமணி ராகவன்' என்ற பெயரில் புனைகதைகளை எழுதியுள்ளார். இவருடைய நாவலொன்று "யாமினி' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சிரத்தையான எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்குமிடையே உள்ள இடைவெளியை நிரப்பியவர் சூடாமணி' என்று விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டவர். தமிழில் பெண்ணியமும் அதுசார்ந்த கோட்பாடுகளும் உருவாவதற்கு மறைமுகமாகக் களம் அமைத்துக் கொடுத்தவர் என்பதை அவரது படைப்புகளை வாசித்தவர்கள் நன்கறிவார்கள். ஆனாலும் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர்.
÷சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. மனிதனின் ஆழ்மனச் சிக்கலை உளவியல் பூர்வமாக ஆராய்பவை. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்ட சூடாமணி தன் எழுத்தின் வழியே அன்பை விதைத்தவர்;  உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தவர்; "உளவியல் எழுத்தாளர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
÷ஒளியின் முன், என்ன மாயமோ, பணம் பறித்த செல்வம், அவன் வடிவம், படிகள், உடன் பிறப்பு, அந்த நேரம், ஓர் இந்தியன் இறக்கிறான், உலகத்திடம் என்ன பயம், சூடாமணி கதைகள் போன்றவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இவை
தவிர, விடிவை நோக்கி, ஆழ்கடல், சோதனையின் முடிவு, வாழ்த்துவோம், உள்ளக்கடல், இரவுச்சுடர், முக்கோணம் போன்ற குறுநாவல்களும் புன்னகைப் பூங்கொத்து, நீயே என் உலகம், தீயினில் தூசு, தந்தை வடிவம், மானிட அம்சம், கண்ணம்மா என் சகோதரி போன்ற நாவல்களும் எழுதியுள்ளார். தற்போது "நாகலிங்க மரம்' என்ற பெயரில் இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு வெளியாகியுள்ளது.  புனைகதைகள் தவிர்த்து நாடகங்கள் எழுதுவதிலும் சூடாமணி ஈடுபாடு கொண்டிருந்தார். இருவர் கண்டனர், அருணோதயம், அருமை மகள் ஆகியவை நாடகத் தமிழுக்கு சூடாமணியின் பங்களிப்பு. இவரின் சிறுகதைகள் சின்னத்திரை வடிவம் பெற்றன. "காவலை மீறி' என்னும் குறுநாவல் பி. லெனின் இயக்கத்தில் தொலைக்காட்சியில் வெளியானதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்!
÷பரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இவருக்கு இலக்கியச் சிந்தனை பரிசை பலமுறை இவரது கதைகள் பெற்றுத்தந்தன. இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. மும்பை தமிழ்ச் சங்க விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சூடாமணிக்கு 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக் காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்புச் செய்தது. ÷இத் தொகையைக்கூட பல்வேறு சேவை அமைப்புகளுக்குப் பகிர்ந்தளித்து மனநிறைவடைந்தார் சூடாமணி. தவிர, 2001-இல் வெளியான "ஆர்.சூடாமணி கதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு வழங்கப்பட்டது.
÷2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி சூடாமணி காலமானார்.
÷அவர் தன் வாழ்நாளில் சேர்த்துவைத்த புத்தகங்கள் அனைத்தும் அவர் விருப்பப்படி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. விலை மதிப்பில்லாத இவருடைய ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கைம்மாறு கருதாமல் தன் சொத்துகளை சேவை இல்லங்களுக்குக் கொடுத்துச்சென்ற சூடாமணிக்கு அவரது எழுத்துகளைப் படிப்பதன் மூலம் நன்றி சொல்லலாம்!

புவியரசரும் கவியரசரும்

புவியரசரும் கவியரசரும்

தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு  தஞ்சாவூரிலேயே தங்கியிருந்து  கி.பி. 1676 முதல் 1855 வரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களுள் இரண்டாம் சரபோஜி முக்கியவானவர்.  இவர் 1798 முதல் 1832 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார்.  ஸ்வார்ட்ஸ் பாதிரியாருடன் மிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த இரண்டாம் துளஜா மன்னர் தனக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தினால் கி.பி. 1787-இல் சரபோஜியை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொண்டார்.
÷சரபோஜி அரசுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னமேயே ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இவ்வுலக வாழ்வை விட்டுச் சென்று விட்டார்.
÷சரபோஜி தன் ஆசிரியர் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடமிருந்து ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல மொழிகளைக் கற்றுக் கொண்டார்.  மராட்டி, தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சிறந்த கல்வியறிவு உடைய இவர் தமிழ், சம்ஸ்கிருதம், மராட்டி ஆகிய மொழிகளில் 19 நூல்கள் வரை இயற்றியிருக்கிறார்.
÷அரசியல் ஈடுபாடு அதிகம் இல்லாத காரணத்தினால் இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், மருத்துவம், சோதிடம், வான்நூற்கலை போன்ற பல்வேறு கலைகளில் ஆர்வம் காட்டி, அவற்றைக் கற்பதிலும் அக்கலைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதிலும் தம் வாழ்நாளைச் செலவிட்டிருக்கிறார்.
÷திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலியில் சைவ வேளாளர் மரபில் பிறந்த வேதநாயகர், ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அழைப்பின் பேரில் அவருடன் தஞ்சாவூருக்கு வந்தார். சரபோஜியும், வேதநாயகரும் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் இணைந்தே கல்வி கற்றனர்.  வேதநாயகர் பாதிரியாரின் இல்லத்திலேயே தங்கியிருந்து கல்வி கற்றார். இருவரில் வேதநாயகர் சரபோஜியைவிட மூன்று வயது மூத்தவர்.  அதனால், சரபோஜி வேதநாயகரை "அண்ணா' என்றே அன்புடன் அழைத்து வரலானார்.
÷சரபோஜி அரசுப் பொறுப்பை ஏற்றவுடன் தம் அவைக்களப் புலவர்களில் வேதநாயகருக்கும் வாய்ப்பளித்தார். அரசகவியாக, சமஸ்தான வித்துவானாக நியமித்தார். வேதநாயகருக்குக் குடியிருப்பதற்கு நிலமும் ஆண்டுதோறும் ஐம்பது வராகனும் அளித்தார். அரசகவியான பின் திங்கள்தோறும் ரூ.35 சம்பளமாகக் கொடுப்பதற்கு ஒழுங்கு செய்தார்.
÷நோவாவின் கப்பல் பாட்டை இயற்றி சரபோஜியின் முன்னிலையில், வேதநாயகர் பாட்டொன்று பாடி,
 மிக்க சரபோ சேந்திரன் மன்னவன் கேட்க (நோவாவின் பேழை)
சாத்திரக் கப்பற் றமிழரங் கேற்றித்
தஞ்சை அயினசு சரபோசேந்திரன் வாழ்க (நோவாவின் பேழை)
என்று பாடியதைக் கேட்ட மன்னர் மகிழ்ந்து 100 வராகன் பரிசிலாக அளித்தார். அதன்பின்னர் ஜே.சி. கோலேப்பையரின் அனுமதிப்படி பெத்லகேங் குறவஞ்சியை எழுதிய வேதநாயகர், சரபோஜி முன்னிலையில் அவையில் அரங்கேற்றினார். சரபோஜி 1832-இல் இயற்கை எய்தியபோது உள்ளமுருகி,
""அன்னையும் பிதாவோ மன்னவா நீயோ
அதிகமார் என்பதை அறியேன்...''
என்று பாடிய கையறுநிலைப் பாடலைக்
கேட்டு கூடியிருந்தோர் கண்கள் எல்லாம் குளமாயின.
÷புவியரசரும் கவியரசரும் தம் ஆசிரியர் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஆழ்ந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர். வேதநாயகர் தாம் பாடிய பல பனுவல்களில் தம் ஆசிரியரைப் பாராட்டிப் போற்றிக் கூறியுள்ளார். எலிசாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்து நாளடைவில் இடையறாது கிரியை செய்தது போலவே, பெரும் விசுவாசியான ஸ்வார்ட்ஸ் பாதிரியாருடைய ஐரோப்பியச் சால்வை வேதநாயகர் மேல் விழுந்தது. இதுவே பிற்காலத்தில் வேதநாயகர் பல பனுவல்களை இயற்றுவதற்கு ஏதுவாக இருந்தது.
÷நெல்லையிலிருந்து தஞ்சாவூருக்குக் கொண்டு வந்த சிறிய 11 வயதுச் செடியான வேதநாயகர் 91 வயது வரை ஆண்டவருக்கு மகிமையாகத் தஞ்சாவூரிலேயே வேரூன்றி உழைத்து, தம் பெயருக்குப் புகழைச் சூட்டுவிக்கும் கவியரசராகத் திகழ்வதற்கு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் பெரிதும் காரணமாயிருந்தார். ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றித் தமிழ் இலக்கிய உலகில் ஏற்றதோரிடத்தைப் பெற்றுள்ளார்.
÷சரபோஜி பன்மொழிப் புலவராகத் திகழ்ந்ததுடன் அமையாமல், சரசுவதி மகால் நூலகத்தை மிகச்சிறந்ததொரு நூல்நிலையமாக மாற்றியிருக்கிறார். மருத்துவத்தில் சிறந்த ஆர்வம் காட்டிய மன்னர் தஞ்சாவூரில் இந்திய மருந்தகம் ஒன்றையும் மேலைநாட்டு மருந்தகம் ஒன்றையும் அமைத்து அவற்றுக்குப் பல நல்கைகளையும் தந்துள்ளார்.
÷திருவையாற்றில் தமிழும் சம்ஸ்கிருதமும் இசையும் கற்பிக்கும் கல்லூரியை நிறுவியிருக்கிறார். தம் அவைக்களத்தில் பன்மொழிப் புலவர்களுக்கு ஆதரவு நல்கியிருக்கின்றார். இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் இருந்த மிகச்சிறந்த இசைவாணர்கள், அறிஞர்கள் முதலானோரை தஞ்சாவூருக்கு வரவழைத்து அவர்களுக்குப் பல சிறப்புகளைச் செய்திருக்கிறார்.
÷இவ்வாறு புவியரசராகிய சரபோஜியும் கவியரசராகிய வேதநாயகரும் பல அரும் பணிகளைத் தமிழுலகுக்கு ஆற்றியுள்ளனர்.