தமிழிலிருந்து உசுபெகிக்கு, உசுபெகியிலிருந்து தமிழுக்கு...

தமிழிலிருந்து உசுபெகிக்கு, உசுபெகியிலிருந்து தமிழுக்கு...

First Published : 24 October 2012 11:11 AM IST
உஸ்பெகிஸ்தான் பல்கலைக்கழக பேராசிரியரும், எழுத்தாளர் கு. சின்னப்பாரதியின் "பவளாயி' புதினத்தை உஸ்பெக்கில் மொழி பெயர்த்தவருமான லோலா மக்துபாஅண்மையில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இலக்கியம், இலக்கியம் தொடர்பாக கற்றுக்கொள்ள வருகை தந்தார். ஒரு மாணவியைப் போல அவர் காட்டும் ஆர்வம் நம்மை வியக்க வைத்தது. அவருடன் அவருடைய இலக்கியப் பணிகள் குறித்து கேட்டதிலிருந்து...
""நான் உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்டியூட் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் செளத் ஏசியன் ஸ்டடிஸ் பிரிவில் மூத்த ஆசிரியராக உள்ளேன். அங்கு இந்தி, உருது மொழிகளைக் கற்பித்து வருகிறேன். தற்போது தமிழும் கற்பிக்கிறேன். தமிழ் இலக்கியம், இலக்கணம் தொடர்பான பாடங்களைக் கற்பதில் ஆர்வம் இருந்தாலும், போதுமான பயிற்சி இல்லை. அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறேன்.
செளத் ஏசியன் ஸ்டடிஸ் துறையின் தலைவர் என்னுடைய உச்சரிப்பைக் கேட்டு நான் தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வமூட்டினார். இதையடுத்து தாஷ்கண்டுக்கு வந்த தமிழர் ராமலிங்கத்தின் உதவியோடு கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அவர் தமிழ் புத்தகங்களை வாசிக்கத் தந்தார்.
இந்தி மூலமாக தமிழில் எழுத்துகளையும், உச்சரிப்பையும் கற்றேன். முறையாக இலக்கணம் கற்றேன். அதற்கான தேர்விலும் வெற்றி பெற்றேன். கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் தொடர்பாகப் படித்து இளம்கலை பட்டம் பெற்றேன். தற்போது தமிழில் முனைவருக்குப் படித்து வருகிறேன். தமிழில் சரளமாகப் பேசும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
ஒரு மொழியை கற்றுக் கொள்ளும்போது ஏற்படும் ஆர்வம் அந்த மொழியின் பழமையையும், பாரம்பரியத்தையும் பொருத்து அமைகிறது. அந்த வகையில் சக்தி வாய்ந்த தமிழ் மொழியை பயில்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். உலகத்தின் எல்லா நாடுகளின் நகரங்களிலும் தமிழரைக் காணமுடியும். பிற நாட்டினர் கற்றுக்கொள்ளும் யோக்கியதை தமிழ் மொழிக்கு உண்டு.
தமிழில் புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தாலும், அதில் பேசும் பயிற்சி அவசியமாகிறது.
சோவியத் யூனியனில் உஸ்பெகிஸ்தான் ஓர் உறுப்பு நாடாக இருந்தபோது, ருஷ்ய மொழி அரசு மொழியாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உஸ்பெக் மொழி அரசு மொழியாக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோவியத் யூனியனில் இருக்கும்போதும், அதற்கு முன்னரும் உஸ்பெக் மொழியில் இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. பிற மொழி இலக்கியங்களும் மொழி பெயர்ப்புகள் செய்யப்படுகின்றன.
உஸ்பெகிஸ்தானில் கல்லூரிப் பருவத்தில் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள ஊக்கமளிக்கப்படுகிறது. குறிப்பாக உருது, அரபி போன்ற மொழிகளைத் தொடக்கத்திலேயே நான் கற்றதால், இந்தி கற்று கொள்வது எளிதாக இருந்தது. நான் குழந்தை பருவத்தில் அரபு மொழி பயின்றேன். உயர் கல்வியின் போது இந்தி மொழி கற்றேன். இது தவிர சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இங்குள்ள கல்வி முறைக்கும் உஸ்பெகிஸ்தானில் உள்ள கல்வி முறைக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. அங்கு கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் அரசிடம் உள்ளது. கல்லூரியில் இளநிலை நான்கு ஆண்டுகள் பயில வேண்டும். இங்கு மூன்று ஆண்டுகள்தான். முதுநிலை இங்கிருப்பதுபோல இரண்டு ஆண்டுகள்தான்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தவுடனே, அங்கிருந்த ஞானச் சூழல் என்னைத் தொற்றிக்கொண்டது. இங்கு மாணவர்கள் எப்போதுமே படித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பல்கலைக்கழக வளாகமே ஞானத்தின் இருப்பிடமாக உள்ளது.
இந்திய இலக்கியங்களில் குறிப்பாக நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றிலும், இந்தி சினிமாக்களிலும் முன்பெல்லாம் முடிவு சுபமாக இருக்கும். ஆனால் தற்போது அதுபோல் இல்லை. உஸ்பெக் இலக்கியங்களும் மாற்றம் கண்டு வருகின்றன.
நான் அறிந்துகொண்டது வரை, புரிந்துகொண்டது வரை இந்தி மொழியில் அரபு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் சொற்கள் அதிகம்  உள்ளன. உருது மொழியிலேயே அரபு, பாரசீக மொழிக் கலப்பே உள்ளது. ஆனால், தமிழ் மொழியில் குறைவான மொழிக் கலப்பே இருக்கிறது. பிற மொழிகளின் கலப்பை தமிழ் அனுமதிக்கவில்லை. தமிழ் மொழிக்கென எழுத்துரு, இலக்கணம், பழம்பெரும் இலக்கியங்கள் ஆகியவை இருப்பது காரணமாக இருக்கலாம். இதுபோன்ற தனிச் சிறப்பு வாய்ந்த மொழிகளாக உலகத்தில் சிலவற்றையே கூற முடியும். அதனால்தான் தமிழ் செம்மொழியாக உள்ளது.
நாட்டார் வழக்காற்றியல் எல்லா நாடுகளிலும் மக்களிடையே இன்னும் உயிர்ப்போடு உள்ளது. பழமொழிகளும், வாய்வழிக் கதைகளும் குறித்த ஆய்வுகள் தொடங்க வேண்டியது அவசியம்.
சமீபத்தில் மலைகள் சூழ்ந்த பசுமை எழில் நிறைந்த நாமக்கல்லில் நடைபெற்ற கு. சின்னப்பபாரதி விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். விழாவில் எனது உரையை கூர்ந்து  கவனித்தார்கள். நல்ல விருந்தோம்பலைப் பெற்றேன். மலைகள் சூழ்ந்த தூய்மையான காற்றும், அந்த நகரில் தங்கியிருந்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள். தமிழர்கள் உதவும் மனப்பான்மை கொண்ட மகான்கள். இந்த உணர்வை தமிழ்நாட்டு பயணத்தின் போது பெற்றேன். தமிழ் மொழி பயில தொடர்ந்து ஊக்கம் அளிப்பவர்களில் பேராசிரியர் பாலசுப்ரமணியமும், ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் நாச்சிமுத்துவும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுக்கு என்றும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்நிலையில் நான் உஸ்பெகி மொழியில் மொழிபெயர்த்த கு. சின்னப்ப
பாரதியின் "பவளாயி' நாவலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பவளாயி நாவல் முழுக்க காட்சிகள் அற்புதமாக வர்ணிக்கப்பட்டுள்ளன. பவளாயி கதாபாத்திரம் என்னை மிகவும் பாதித்தது.
அதைப் போல அகிலன் படைப்புகள் குறித்தும், சுப்ரமணிய பாரதி படைப்புகள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற படைப்புகளை எனது தமிழ் ஆய்வின் போது வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் படைப்பாளிகள் யார், அவர்களது  படைப்புகள் என்ன உள்ளிட்ட கேள்விகளோடு எனது தேடல் தொடங்கிவிட்டது.
மார்க்சிம் கார்கி போன்ற எழுத்தாளர்கள் உஸ்பெகிஸ்தானிலும் உண்டு. ஆனால், அவர்களின் படைப்புகள் பிற மொழிகளில் வெளியிடப்படாததால் அறியப்படாமல் உள்ளனர். உஸ்பெகி இலக்கியங்களை உலகறியச் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். உஸ்பெகி எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தியில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தி, உருது மொழிகளின் இலக்கியங்கள் உஸ்பெகிஸ்தானில் வாசிக்கக் கிடைக்கின்றன.
உஸ்பெகிஸ்தானின் விடுதலைக்குப் பிறகு இலக்கியத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. எங்கள் நாட்டு குடியரசுத் தலைவரும் இளைய தலைமுறையினரும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு திட்டமிடுகின்றனர். கல்வி வளர்ச்சி பெற்று வருகிறது. எங்கள் நாட்டிலுள்ள நூலகங்கள் அனைத்தும் அறிவுச் சேவையை ஆற்றி வருகின்றன. பிற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள செறிவான அறிவுசார்ந்த விஷயங்களை பயில ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இலக்கியப் படைப்புகள் நன்கு வளர்ச்சிப் பெறும் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. ஏனெனில் எங்கள் நாட்டில் நல்ல எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களின் எழுத்துகள் வலிமை வாய்ந்தவை.
தமிழர்களுக்குச் சொல்ல என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. தமிழ் மொழியில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு, உஸ்பெகி இலக்கியங்களைத் தமிழிலும், தமிழ் இலக்கியங்களை உஸ்பெகியிலும் மொழியாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளேன். இரு மொழிகளின் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்துவேன். நான் தேடிய பாதையை கண்டறிந்துவிட்டேன். இனி தொடர்ந்து பயணம் செய்வதுதான் என் திட்டம்'' என்றார்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்